Thursday 15 February 2024

 

ஷோர் லீவ் 3

  

      அடுத்தடுத்து ஒவ்வொருவராக நோய் தொற்றுவது ஒரு அச்சத்தை தந்து ஒரு பதட்டமான சூழல் உருவாவனது.என்னிடம் இருக்கும் கபசுர குடிநீரை தேடினேன் கிடைக்கவேயில்லை. கடந்த இரு கப்பல்களில் கொண்டு சென்றது இம்முறை வீட்டிலேயே விட்டு வந்துள்ளேன்.

   மதியம் கலீலை போனில் அழைத்தேன் “ஜனாப் எப்படி இருக்கா”

“காய்ச்சல் இருக்கு,உடம்பு வலி,தலைவலி இருக்கு”

“பேடிக்காத நான் சாயங்காலம் ஒரு காப்பி போட்டு தாரேன் குடி,மருந்து என்ன தந்தாங்க எனக்கேட்டேன்.

காய்ச்சலுக்கு மாத்திரை தந்தாங்க சோறும்,பருப்பும் தந்தத வேங்கி வெச்சிருக்கேன்,தின்னுட்டு மாத்திரை போடணும்”என்றான் கலீல்.

சுனிதாவிடம் போனில் பேசும்போது சொன்னேன் “மெஸ் மேனும் தனிமைபடுத்தலுக்கு போயாச்சி”.

“ஒரு ஆளுக்கு தொத்திட்டுன்னா,இனி ஒரு ரவுண்டு எல்லாருக்கும் வந்துட்டுதான் போவும்”எனச்சொன்னாள்.

  காலையில் கோம்ஸின் அறைக்கு வெளியே ஒரு அஞ்சால் அலுப்பு மருந்தை வைத்து விட்டு போனில் சொன்னேன் அதை எப்படி குடிக்கவேண்டுமென. அடுமனை பணியாளர் இருவரும் அறைக்குள் முடங்கி போயினர். அன்று மதிய உணவுக்கு போசன் பருப்புக்குழம்பு செய்திருந்தார்.பிகில் மீனை பொரித்தான்.

   சென்குப்தாவுக்கு சோதனையில் நெகடிவ் என வந்ததால் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து உணவுக்கூடத்துக்கு வந்தான்.

          முதன்மை அதிகாரி தலைமையில் ஆங்கர் பார்ட்டி நங்கூரத்தை உருவியபின். இஞ்சின் இயக்கப்பட்டு முன்னே நகர்ந்தது மாலை நான்கு மணிக்கு பனாமா கால்வாய் பைலட் மற்றும் பணியாளர்கள் மொத்தம் 21 பேர் வந்தனர்.

 

  பார்வர்ட் மற்றும் ஆப்ட் ஸ்டேஷனில் இரு குழுவாக பிரிந்து சென்றனர்.கப்பல் பணியாளர்கள் மதியத்திற்குப்பின் நல்ல ஓய்வில் இருந்துவிட்டு மாலை கால்வாயை கடக்கும் பொருட்டு அனைவரும் பணிக்கு வந்தனர். கப்பல் ஆறு மணிக்கு முதல் கேட்டுக்குள் நிறுத்தி,ஷட்டர்களை அடைத்தபின் தண்ணீரை நிரப்பி கப்பல் மேலே உயர்ந்தது இவ்வாறு இரண்டாவது,மூன்றாவது,நான்காவது கேட்டுகளில் நுழைந்து பனாமா கால்வாய்க்குள் இரவு ஒன்பது மணிக்கு கப்பல் நுழைந்தது. ஆப்ட் ஸ்டேஷனில் இரு கயிறுகளை கரையில் கொடுத்தோம். விஞ்சை இயக்குவது மட்டும் நாங்கள். ஒரு விஞ்சை பனாமா கால்வாய் மேற்பார்வையாளர் சொல்லும் சைகையை புரிந்துகொண்டு நான் இயக்கினேன். பணிக்கு வந்த சென்குப்தாவை மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லா ஓய்வு எடுத்துகொள்ள சொல்லி அனுப்பி வைத்தார்.

 

  சுக்கு,கொத்தமல்லி,நல்லமிளகு,ஜீரகம் சேர்த்து பொடித்து தந்திருந்தாள் சுனிதா. அந்த பொடியில் ஒரு கரண்டி எடுத்து நீரில் கொதிக்கவிட்டு,கொஞ்சம் வெல்லம் கலந்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தேன்.

     கோம்ஸ் இரவில் போனில் அழைத்தான் “உனட்ட ஏதாவது மருந்து இருக்கா”

“என் மருந்து மிஸ்ஸிங்,வீட்டுலேய வெச்சிட்டு வந்துட்டேன். காலத்த ஒரு பொடி தந்தேனே,அதுல ஒன்னு கூட தாறேன் குடி செரியாவும்” என்றேன்.

 அஞ்சால் அலுப்பு மருந்தை கொடுத்துவிட்டு சுடுநீரில் கலந்து குடிக்க சொன்னேன். “இத உள்ள குடிக்கணுமா?”எனக்கேட்டான்.

“நேத்து தந்தத என்ன செய்தா”

“நான் வாய் கொப்பளிச்சி துப்புனேன்”என்றான் கோம்ஸ்.

“அதுல தெளிவா இங்க்லீஷ்ல எழுதியிருந்ததே,நான் சொன்னேனே குடிக்கணும்னு”

   கிறுக்கன் ஒரு மருந்த வேஸ்ட் பண்ணிட்டான் என எண்ணிக்கொண்டேன். இரவில் ஒன்றரைமணிக்கு மேல் நங்கூரம் பாய்ச்சியபின் கப்பல் நிறுத்தபடுவதால் நாங்களனைவரும் பிஸி நாளைக்கி சாப்பாட பாத்துக்கோ,சோறு வடிச்சி,பருப்பு குழம்பு செய்தா போரும் என என்னிடம் சொல்லியிருந்தார் போசன்.

   கோம்சிடம் இருபத்தி ஏழு பேருக்கு அரிசி எவ்வளவு,என்ன மீன் எவ்வளவு எடுக்கவேண்டும்,காரட் கூட்டு வைக்க எவ்வளவு காரட் வேண்டும் எனும் அளவுகளை கேட்டு மீனை மாலையிலேயே குளிர் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்திருந்தேன்.

     சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கே போய் அடுமனையின் மின் அடுப்பின் சுவிட்களை ஆன் செய்துவிட்டு வந்தேன்(electric hot plates).அது சூடாக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு.மீண்டும் அடுமனை சென்று காலையுணவுக்கு வேண்டிய முப்பது வீதம் உள்ள இரு தட்டு முட்டைகள்,பழச்சாறு,பால்,பிரட் ஆகியவற்றை குளிர்பெட்டியிலிருந்து எடுத்து வந்தபின் பன்னிரண்டு முட்டைகளை தண்ணீரில்,உப்பு கலந்து பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைத்தேன்.நோயாளிகளுக்கு சுக்கு காப்பியை கொதிக்க வைத்தேன்.

    வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாயை வெட்டியபின்.கொஞ்சம்  சிறுபருப்பை ஊற போட்டேன். பெரிய காரட்டுகளில் பத்து எடுத்து கிரேட்ட்ரில் சிறிதாக நறுக்கி மூடி வைத்தேன். பேக்டு(baked fish fillet) பிஷ் பில்லட் செய்வதற்காக மீன்களை வெட்டியபின் தெரிந்தது குறைவாக இருக்கிறது என.மீண்டும் குளிர் பெட்டியிலிருந்து மீன்களை எடுத்து தண்ணீரில் போட்டேன்.நோயாளிகளுக்கு அவரது அறைகளில் சுக்கு காப்பியை கொடுத்தேன்.

   காலை ஏழு மணிக்கு ஜப்பானின் ஷிண்டோ மட்டும் வந்து மூன்று அவித்த முட்டைகளை எடுத்துச்சென்றார்.ரிச்சர்ட் ஏழரைக்கு வந்து தனக்கான முட்டை புர்ஜியை செய்து எடுத்துசென்றான்.எட்டு மணிக்கு பிறகுதான் ஓ எஸ் இர்பான்,மற்றும் பணியாளர்கள் வந்து தங்களுக்கு வேண்டிய முட்டை வகைகளை செய்து எடுத்துச்சென்றனர். கேஸ் இஞ்சினியரிடம் காஸ் பிளாண்டை பார்த்துக்கொள்ளுங்கள் இன்று நான் கிச்சனில் பிஸி எனச்சொன்னேன். சென் குப்தா அறைக்குள் இருந்த இருவருக்கும் காலை உணவாக அவித்த முட்டையும்,பிரட்டும் கொடுத்துவிட்டு வந்து பாத்திரங்களை கழுவி தருவதாக சொன்னான். இரவுணவுக்கு இரு முழு கோழிகளை உரிப்பதை பார்த்த சென் குப்தா “இத உனக்கு வெட்ட தெரியுமா” எனக்கேட்டான்.

   காடட் அஞ்சுமன் எனக்கு முட்டை ஆம்பளேட் போட்டுதந்தான். சீரியல்சுடன் சாப்பிட்டுவிட்டு பருப்பை கழுவி கொஞ்சம் உப்பும்,மஞ்சள்தூள் கலந்து வேக வைத்தேன்.அதில் கீறிய இரு பச்சை மிளகாய்,நறுக்கிய பூண்டுகளை போட்டேன்.

   ஊற வைத்திருந்த இருபத்தி ஏழு பேருக்கு தேவையான அரிசியை கழுவி, அடுப்பில் சூடாகியிருந்த தண்ணீரில் ‘பிஸ்மில்லாஹி ஹிர் ரஹ்மானிர்ரஹீம்” என சொல்லி போட்டு மிக கொஞ்சமாக உப்பும் கலந்து மூடி வைத்தேன்.

 


    பத்து மணிக்குமேல் போசனும்,நிதினும் வந்தனர். மீனை அவனில் நூற்றி எண்பது டிகிரி வெப்பத்தில் நாற்பத்தியைந்து நிமிடம் வைக்குமாறு கோம்ஸ் சொல்லியிருந்தார். மீன்களின் மேல் உப்பும்,மிளகுதூளும் தூவி,மெலிதாக வெட்டிய எலுமிச்சையை வைத்து ஓவனுக்குள் வைத்து மூடினேன் சரியாக இருபத்தியைந்து நிமிடத்தில் திறந்து பார்த்தேன் சரியான பதத்தில் இருந்ததால் வெளியே எடுத்து சில்வர் பாயிலால் மூடி வைத்தேன்.காடட் “காப்டன் எழுந்து விட்டார்,ரெண்டு முட்ட புர்ஜி மட்டும் கேட்டார்”என அதை செய்து பேப்பர் தட்டில் கொண்டு சென்றான்.

  போசன் பருப்பை தாளித்து இறக்கி சுவை பார்த்தபின் கவுண்டரில் வைத்து மூடினார்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான எண்ணையில் கடுகு வெடித்தபின்,காய்ந்த கறிவேப்பிலை,வத்தல் மிளகாய் போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பும் போட்டபின்,காரட்டை தட்டி  லேசா மஞ்சள்  தூவினேன்.ஐந்து நிமிடத்தில் வெந்து தயாரான காரட் கூட்டை உடனே வேறு பாத்திரத்தில் மாற்றி கவன்டரில் வைக்க சொன்னேன்.

 


  போசன் “ஒன்னரைக்கு ஆங்கர் எடுக்கணும் நாலு மணிக்கு ஸ்டேஷன்,டின்னருக்கு முட்டை புர்ஜி போட்டு,பன்னு வெய் போதும்,சீப் குக் செரியாயிட்டான்,நாளைக்கி வந்துருவான்” என்றார்.

பருப்புக்குழம்பு கொஞ்சம் காரமாகவும்,காரட் கூட்டு சுவையாக இருந்ததாகவும் சொன்னார்கள். அஞ்சுமன் “இந்த கேரட் பாஜி,சாப்பிட்டதே இல்ல,ருசிக்கு என்ன செய்தா” எனக்கேட்டான்.

 


“என் மனைவி இதுபோல செய்வா,சுவையூட்டி,கலர் பொடி ஒன்னும் சேக்கல்ல”என்றேன்.

“அச்சா ஹே”.

 

 அனைவரும் சாப்பிட்ட பின் சாதம் மட்டும் கொஞ்சம் மீதியிருந்தது.எனது புதிய சுவை அனைவருக்கும் பிடித்திருந்தது சமையல்காரர் கோம்சும் காரட் கூட்டு நல்லா இருந்தது என்றதால் ஒரு அகமகிழ்வு இருந்தது.ஒருமணிக்கு மேல் அறைக்கு வந்து தூங்கினேன் கப்பல் பனாமா கால்வாய்க்குள் நகர தொடங்கியிருந்தது. கப்பல் அதிர பெரும் ஓசை கேட்டு விழித்தேன் அறையின் கண்ணாடி ஜன்னலின் திரையை விலக்கியபோது பெருமழை அறைந்துகொண்டிருந்தது.மீண்டும்,மீண்டும் இடியோசை கப்பலுக்கு மிக அருகிலேயே கேட்டது.

 


  பின் மதியம் மூன்று மணிக்கு அடுமனைக்கு சென்றேன். முட்டை புர்ஜிக்கு நாற்பது முட்டைகள் வேண்டும் என சொல்லியிருந்தார் கோம்ஸ்.மதிய உணவு கொடுக்கும்போது நோயாளிகள் இருவரையும் பார்த்தேன். கோம்ஸ் நன்றாக தேறியிருந்தான்,கலீல் தலை வரை கம்பளியால் மூடி நல்ல காய்ச்சலும் நிற்கவோ அமரவோ இயலவில்லை” என்றான்.

“ஜனாப் காலத்த போட்டு தந்த காப்பி ஒன்னு தருவியா” எனக்கேட்டான்.

இருவருக்கும் சுக்கு காப்பியை அடுப்பில் வைத்தபோது மூன்றாம் இஞ்சினியர் அடுமனைக்கு வந்தார். “ஷாகுல் என்ன செய்ய போறா” எனக்கேட்டுவிட்டு. “பன்னு யாரும் தின்ன மாட்டாங்க,சிக்கன் நீ சம்ச்சிட்டியா”

“இல்ல வெட்டி,உப்பும்,மஞ்சயும் விரவி வெச்சிருக்கேன்”என்றேன்.

“மல்லி இல இருக்கா,கிரீன் சிக்கன் செய்து தாரேன்,கொஞ்சம் ரைஸ் போடு” என்றார்.

“சிக்கன் தின்னாத்த ஆளுக்கு கொஞ்சம் பருப்பு செய்திருவோம்”எனச்சொல்லி பருப்பை ஊற வைத்தேன். காலையில் மைனஸ் பதினெட்டு டிகரியில் இருந்து எடுத்து வைத்த பன்கள் இருந்த அட்டை பெட்டியை பழங்கள்,காய்கள் வைக்கும் குளிர் பெட்டிக்குள் தள்ளினேன்.

   மூன்றாம் இன்ஜினியரின் கிரீன் சிக்கனும்,வெள்ளை சாதமும்,பருப்பும் இரவுணவாக இருந்தது.கப்பல் பனாமா கால்வாயின் மறு எல்லையான பல்போவாவின் கேட்களை அடைந்து முதல் கேட்டுக்குள் நுழைந்து

 


தண்ணீரை வெளியேற்றி கப்பலை கீழே இறக்கிகொண்டிருந்தார்கள்.கப்பல் பணியாளர்கள் அனைவரும் மும்மூரமான பணியில் இருந்ததால் நேரம் கிடைத்தவர்கள் பலர் சாப்பிட்டார்கள், சிலர் சாப்பிடவே இல்லை.

காப்டன் மதியமும் சாப்பிட வரவில்லை. பிரிட்ஜ் விங்கில் நின்று பனாமா பைலட்டின் உத்தரவுகளை பெற்று கப்பலுக்கு வழங்கிகொண்டிருந்த காப்டனை போய் பார்த்தேன். “சாப்பிடவே இல்ல இன்னைக்கு” எனக்கேட்ட என்னை சைகையால் தூரத்திலயே நிப்பட்டினார். குறைவான ஓய்வுக்குப்பின் தொடர்ந்து பணிகள் செய்து சோர்ந்திருந்த கண்களுடன் மழை சட்டை அணிந்து நின்றுகொண்டிருந்தார்.முதல் முறையாக அவர் பனாமா கால்வாயை கடக்கிறார் பத்திரமாக கப்பலை கொண்டு சேர்க்கும் பதட்டம் அப்பிய முகம்.

  “நான் சாப்பிடுவேன் பொறவு”

“மத்தியானமும் சாப்பிடல நீங்க”

“நான் டீ பிஸ்கட் சாப்பிட்டேன்”.என்றார்.

 

   நான் கீழிறங்கி வந்தேன். கிரீன் சிக்கனில் சில துண்டுகளும்,கொஞ்சம் சாதமும் மட்டுமே மீதியிருந்தது. இன்னும் சாப்பிடாதவர்கள் இருந்தார்கள். மதிய உணவின் மீதமிருந்த சாதத்தை கொட்டாமல் வைத்திருந்தேன்.

    அதில் பாதியை எடுத்து ஜீரகம்,தக்கோலம்,பட்டை,கிராம்பு,ஏலக்காயை  எண்ணையில் கிளறி ,வெங்காயம்,உப்பு போட்டு வதக்கி,மை போல அரைத்த இஞ்சி,பூண்டை சேர்த்து மஞ்சள்,மல்லி,மிளகாய்,பெருஞ்சீரக தூள் போட்டு அதில் சாதத்தை சேர்த்து பிரைடு ரைஸ் ஆக மாற்றினேன்.



     இரவு ஒன்பது மணிக்கு கேட்களை கடந்து கப்பல் பசுபிக் கடலில் நுழைந்தது. 2008 ஆண்டு பணிபுரிந்த கப்பலில் இந்த பல்போவா துறைமுகத்திற்கு நிறைய முறை வந்திருக்கிறேன்.விளக்குகளின் வெளிச்சத்தில் துறைமுகத்தில் கட்டபட்டிருந்த கப்பல்களிலிருந்து கிரேன்கள் மூலம் சரக்கு பெட்டகங்களை இறக்கும் காட்சி ஆயிரம் பாய் கொண்ட பெருநாவாயிலிருந்து சரக்கு இறக்குவது என்ற வெண்முரசின் வரிகள் மனதில் ஓடின.  தலைக்கு மேலுள்ள பாலத்தை கடக்கையில் பழைய நினைவுகளை மனம் அசை போட்டுகொண்டிருந்தது. மிக மகிழ்ச்சியான நாட்களாக அவை இருந்தது.முதன் முறை பனாமாவை கடக்கும் ஷோகே யுடன் அதை பேசிக்கொண்டிருந்தேன்.

 


 

    பனாமாவில் கப்பலுக்கு வேண்டிய பெயிண்ட்கள் வந்தது.அவற்றை போசன் குழுவினர் கிரேன் மூலம் தூக்கி கப்பலுக்குள் கொண்டுவந்தனர். பனாமா ஏஜென்ட் கொண்டுவந்த ரசீதுகளில் காப்டனுக்கு பதிலாக முதன்மை அதிகாரி முத்திரை பதித்து கையொப்பமிட்டு அனுப்பினார்.

   காப்டனுக்கும்,முதன்மை அதிகாரிக்கும் சாப்பாடு இருக்கிறதா என பார்த்தேன். இரவில் செய்திருந்த பிரைடு ரைசும் தீர்ந்து போயிருந்தது.

   அஞ்சுமனிடம் கேட்டேன் “ரிசிப்ட்ல சிக்னேச்சர் வாங்க எதுக்கு சீப் ஆபிசர தேடா? காப்டன்ட்ட வேங்கி குடுக்க வேண்டியது தானே”

 “காலைலிருந்து கேப்டனுக்கு உடம்பு செரியில்ல,நிக்கவே முடியல,எப்படியோ பனாமா தாண்டியாச்சி, கொஞ்சம் மின்ன அவரு ரூமுக்குள்ள போயிட்டாரு யாரையும் கிட்ட வர உடல்ல”

  “அவருக்கும் கொரோனாவா”எனக்கேட்டேன்.“யாருக்கு  தெரியும்” என்றான் அஞ்சுமன்.

நாஞ்சில் ஹமீது,

09-september 2023

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment