Friday 10 December 2021

ஈராக் போர்முமுனை அனுபவங்கள் கடிதம் 2

 அன்புள்ள ஷாகுல் அண்ணா,

 

வரலாறு முழுவதும் மாபெரும் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் எளிய மனிதர்கள் இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். வெல்லக்கட்டிகளை தூக்கிச் செல்லும் எறும்புகள் போன்ற மனிதர்கள். எதேச்சையாக ஒரு நிமிடம் அந்த காட்சியை பார்ப்பவர்களுக்கு வெல்லக்கட்டிகள் தானே மிதந்து செல்வதாகவே தோன்றலாம். ஆனால் உற்று நோக்கினால் அதன் அடியில் அந்த வெல்லக்கட்டியின் நூற்றில் ஒரு பங்கு எடை கொண்ட எறும்புகளின் பெருந்திரள் ஒன்று அந்த வெல்லக்கட்டியை நகர்த்திச் சென்றுகொண்டிருப்பதை காணலாம். அந்த எறும்புகள் இல்லையேல் அந்த வெல்லக்கட்டிகள் நகர்வதில்லை. அதுபோல் வரலாறு அதனுள் இயங்கும் சாமானியர்களால் இயக்கப்படுவது. நீர்வழிப்படூஉம் புனைபோல் மனிதர்கள் ஊழின் ஒழுக்கில் அடித்துச் செல்லப்படும்போதும் அவர்கள் அந்த அடித்துச் செல்லும் நீரின் விசைகளின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறார்கள். ஒரே சமயத்தில் அடித்துச் செல்லப்படும் இலைகளாகவும் அடித்துச் செல்லும் நீரின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறார்கள். வரலாற்றின் அத்தனை பெருநிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். ஆனால் அந்த பெருந்திரளின் குரல்கள் மிகக்குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒரு காலத்தில் எந்த குரல்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவேண்டும் என்பதையும் அந்த காலத்தின் மாய ஒழுக்கே முடிவுசெய்கிறது. அந்த பிரதிநிதிகளை அடுத்து வரும் காலங்கள் மாற்றியும் மறுத்தும் புதிய பிரதிநிதிகளை உருவாக்குவதும் உண்டு. ஆனால் எத்தனை பிரதிநிதிகள் வந்தபோதும் மறைந்தபோதும் அந்த வரலாற்றின் பின் மெளனமாக செயல்படும் பெருந்திரள் இருக்கும். அதன் குறைவான சொற்கள் முழுமையாக வெளிப்படும் களமாக வரலாறு முழுவதும் நாட்குறிப்புகளும் பயணக்குறிப்புகளுமே இருந்து வருகின்றன.



 

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்வை பதிவு செய்யும் முக்கிய வரலாற்று ஆவணங்களாக நாட்குறிப்புகளும் பயணக்குறிப்புகளும் இருந்தன. ஆனந்தரங்கன் முதல் ஆன்னே ஃப்ராங்க் வரை மார்க்கோ போலோ முதல் ஃபா ஹியான் வரை இதைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் குறிப்புகள் வழியாகவே நாம் அந்த காலகட்டத்தின் அதிகாரப்பூர்வ வரலாற்றை மீறிய சித்திரங்களை அடைகிறோம். அவை அந்த காலத்தின் வரலாற்றில் மெளனமாக பெரும் பங்காற்றிய மனிதத்திரளின் வாழ்வு. அவை தரும் வரலாற்றின் சித்திரம் அதிகாரப்பூர்வ பெருஞ்சித்திரத்துக்கு  (macroscopic picture) எதிராக அமைதியான அன்றாட வாழ்வின் நுண்சித்திரங்களை (microscopic view) முன்வைப்பவை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்தித்தாள்களும் பிறகு வானொலி தொலைகாட்சி போன்ற ஊடகங்களும் குறிப்புகளின் இடத்தை எடுத்துக்கொண்டன. அவை ஒரு நூற்றாண்டில் பெருவணிகங்களாகவும் நுகர்வுக் கலாச்சாரத்தின் மையங்களாகவும் வளர்ந்தபொழுது ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் ஊடகமாக இணையம் உருவெடுத்தது. ஊடகங்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இணையம் அதன் இயல்பிலேயே கட்டற்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத் தன்மையையும் கொண்டிருந்தது. பல்வேறு சமூக ஊடக முயற்சிகளுக்குப் பின் 2000த்தின் முற்பகுதியில் Blogger பெரும் வரவேற்பை பெற்றது. Blog தளங்கள் செய்தி ஊடகங்களின் செய்தி வடிவங்களுக்கு எதிராக நாட்குறிப்பின் வடிவத்தையே கொண்டிருந்தது. 2010களில் Blogகள்வணிகமயமாக்கப்படுவதற்கு முன் எழுதப்பட்ட சில Blogகள் இன்றும் இணையத்தில் உள்ளன. அவற்றை பார்க்கும்பொழுது ஏற்படும் முதல் உணர்வு அவற்றின் இயல்பான தன்மையும் (candidness) கட்டற்ற தன்மையும்தான். வரலாற்றின் பாரமின்றி அன்றாடத்தின் இயல்பை ரசிக்கக்கூடிய பதிவுகள் அவை. இன்றைய Facebook, Instagram இணையத்தில் அப்படிப்பட்ட பதிவுகள் சகஜமாக புழங்கக்கூடிய சூழல் இருந்தது என்பதை கற்பனை செய்து பார்ப்பதே கடினமான செயல்தான்.

 

அத்தகைய Blogகளின் தன்மையிலேயே ஈராக் போர்முனைக்கு குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் பின் இருந்த சொல்லப்படாத குரல்களின் பதிவாக இந்த குறிப்புகள் வெளிப்படுகின்றன. ஈராக் போர் பற்றிய ஆயிரக்கணக்கான செய்திகளும், புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் சார்பு நோக்குடனோ  அல்லது ஆய்வு நோக்குடனோதான் எழுதப்பட்டிருக்கின்றன. இணையத்தின் கட்டற்ற வெளிகளில் எழுதப்பட்ட இந்த குறிப்புகள் ஈராக் போரையோ அதன் தார்மீக கேள்விகளையோ மதிப்பிட முற்படுவதில்லை. போரில் எந்த தரப்பிற்கும் சார்பாகவும் எதிராகவும் வாதாடவில்லை. அவற்றின் நிலைப்பாட்டிற்கேற்ப மாற்றப்படவும் இல்லை. மாறாக இந்த குறிப்புகள் போர்முனையின் காட்சிகளை ஒரு சாதாரண புலம்பெயர் பணியாளரின் பார்வையில் ஆவணப்படுத்துகிறது. போரின் இரு தரப்போடும் எந்த விதமான சார்பும் அற்ற ஒரு இந்திய புலம்பெயர் பணியாளரின் குறிப்புகளாக இவை இருப்பதனால் இவை இயல்பான புறவயத்தன்மையோடே போரை அணுகுகின்றன. சதாம் ஹுசைனின் கைதையும், அமெரிக்க படையெடுப்பின் தார்மீக அநீதியையும் ஒரே அளவிலேயே இவை ஆவணப்படுத்துகின்றன. மாறாக அமெரிக்க ராணுவத்தின் உணவுப் பழக்கங்களையும், போர் முனையில் வாழும் இந்தியர்களின் இன்ப துன்பங்களையும், போர் இல்லாமல் இருந்திருந்தால் உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய ஈராக்கின் சிதைந்த ஏழிலையுமே இவை பிரதானப்படுத்துகின்றன. போரின் நாடகீயத் தருணங்களையும், தார்மீக சிக்கல்களையும் விடுத்து அதன் எதார்த்தங்களை நோக்கியே இந்த குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

 

இந்த குறிப்புகளின் சிறப்பம்சம் அதன் தன்முனைப்பற்ற தன்மையே. போர்முனைக்குச் செல்ல காரணமாக இருந்த பசியும் வேலையில்லா திண்டாட்டமும் எந்த விதத்திலும் பிரதானப் படுத்தப்படாமல் அவற்றின் பொதுத்தன்மையிலேயே விவரிக்கப்படுகின்றன. மும்பையில் அது ஒரு சகஜமான நிலை என்ற அளவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாளர்களாக ஈராக் செல்ல காரணமாக இருந்த அந்த பொதுப்பசி மட்டுமே பிரதானப்படுத்தப்படுகிறது. தன வயிற்றை தனியாகப் பிரித்து அதன் பசிக்கான தனிக்குமுறல்கள் என்ற அளவில் ஒரு வரிகூட எழுதப்படவில்லை. அதற்கு மாறாக ஈராக்கின் பெரிய பணியாளர் திரளின் மத்தியிலும் ஆவணங்கள் தீ விபத்தில் அழியும்பொழுது நீங்கள் அழும் காட்சியிலும், திருமணம் நெருங்கும்பொழுதும் நாடு திரும்ப இயலாமல் அவதிப்படுவதன் சித்தரிப்புகளிலும் வெளிப்படுவது புலம்பெயர் பணியாளர்களின் கைவிடப்பட்ட தனிமையே. போர் முனையின் சரி தவறுகளை தொகுத்து அதன் வழியே அந்த போரையோ அதன் சூழல்களையோ நீங்கள் மதிப்பிட்டு உங்களை முன்னிறுத்த முயலவில்லை. மாறாக அவை அந்த தருணங்களில் ஆவணப்படுத்தப்படுகிறது. அவற்றின் மதிப்பீடுகளை வாசகரின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறீர்கள். போர்முனையின் அன்றாட காட்சிகளை விவரித்தாலும் வரலாறு அக்காட்சிகள் பின்னணியில் ஒரு மௌனசாட்சியாக எப்போதும் இருக்கிறது. சதாம் ஹுசைனின் கைதையும் அவர் தூக்கிலிடப்பட்டதையும் ஈராக்கின் ஷியா பிரிவினரும் குர்திஷ் பிரிவினரும் கொண்டாடினார்கள் என்ற வரியையும் அமெரிக்கா ஈராக்கின் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொண்டதன் பின்னணியை பற்றிய சிறு பகுதிகளையும் ஈராக் போருக்கு பிந்தைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு வாசிக்கையில் ஏற்படும் உணர்வு அசாத்தியமானது.

 

இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த குறிப்புகளில் வெளிப்படும் நேர்மறைத்தன்மையும் ஆர்வமும் வாசிக்கும் எவரையும் தொற்றிக்கொள்ளக்கூடியவை. ஒரு திருமண வயது இளைஞனாக நீங்கள் போர்முனையில் சந்தித்த அனுபவங்கள், அமெரிக்க கலாச்சாரத்தின் சமூக குடும்ப கட்டமைப்புகளைப் பற்றிய புரிதல்கள், போர்முனையில் மனிதர்கள் அடையும் மாற்றங்கள் போன்றவற்றை திரும்பிப்பார்க்கும் உங்கள் குறிப்புகளில் எந்த விதமான எதிர்மறைச் சிந்தனைகளும் இல்லை. அதன் காரணமாகவே ஒரு வரலாற்று பெருநிகழ்வின் பெருஞ்சித்திரங்களையும் அதன் அரசியல்களையும் விடுத்து அந்த வாழ்வின் நுண்சித்திரங்களை நோக்கி இந்த கட்டுரைகள் விரிகின்றன. போர்முனை அனுபவங்களானபோதும் இவை மானுடத்தின் மீது பெரும் நம்பிக்கையுடனே எழுதப்பட்டுள்ளன. முனைப்புடையவர்களுக்கு இந்த உலகம் விசாலமாக திறந்து கிடக்கும் ஒரு பெரும் வாய்ப்புதான் என்ற நம்பிக்கையை பல்வேறு தருணங்களில் இவை உணர்த்துகின்றன.

 

நான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறேன் அண்ணா. ஈராக் போர் முடிந்து இரண்டு தசாப்தங்கள் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இந்த குறிப்புகளின் பயன் என்ன என்று யோசித்தால் மீண்டும் பயணக்குறிப்புகளின் அவசியத்திற்கும் தொடக்க கால Blogகளின் தன்மைக்குமே சொல்லவேண்டியிருக்கிறது. இந்த குறிப்புகள் இணையத்தில் சொற்களும் அனுபவங்களும் சந்தைப்படுத்தப்படுவதற்கு முன் எழுதப்பட்டவை. சமூக ஊடகங்களில் தன்னை பின் தொடரும் நண்பர்களின் கவனத்தைக் கோறவும் சந்தையின் கவனத்தைக் கோறவும் வடிவமைக்கப்படாதவை. இவை ஒரு அசாதாரணச் சூழலில் வாழ்ந்த சாதாரண மனிதர்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அன்றாடங்களை ஆவணப்படுத்துபவை. இவை இன்றைய அரசியல் விஞ்ஞானிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயனளிக்காமல் போகலாம். ஒரு சராசரி வாசகனின் ஆர்வத்தை தூண்டும் திடுக்கிடும் நாடாகிய தருணங்கள் இவற்றில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவை வரலாற்றின் மௌன சாட்சிகளின் குறிப்புகள். மெல்ல நகர்ந்து செல்லும் வெல்லக்கட்டியின் அடியில் அதை தூக்கிச்செல்லும் எறும்புகளின் குறிப்புகள் இவை.     

 

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்       

No comments:

Post a Comment