Friday, 17 April 2020

பக்கரு -சிறுகதை

பக்கரு –சிறுகதை

  அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர்.பக்கரின் வீட்டுக்காரி வியாத்தகண்ணு பக்கருடைய  கழுத்து, ,நெற்றியில்  கை வைத்து  பார்த்துவிட்டு  “தீ போல கொதிக்குது நீங்கோ இன்னைக்கு கடைக்கி போவாண்டாம்”என்றாள் பக்கரிடம்.

  “ராத்திரியே நல்ல காய்ச்சலாத்தான் இருந்துது.கடையிலயிருந்து வரும்போது ஒரு அஞ்சால் அலுப்பு மருந்த கட்டன் சாயால கலந்து குடிச்சிட்டுத்தான் வந்து படுத்தேன்.காலத்த செரி ஆவுண்ணும் நினேச்சன்.நீ போய் தண்ணி போட்டு கொண்டுவா” என வியாத்தகண்ணுவிடம் சொல்லிவிட்டு இடப்புறமாக சரிந்து கையை ஊன்றி மெதுவாக எழுந்து பாயில் அமர்ந்தார் பக்கர்.வியாத்தகண்ணு சுக்கும்,மிளகும்,கொத்தமல்லியும்,ஜீரகமும் சேர்த்து இடித்து சுக்குகாப்பிக்கு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ,துண்டு கருப்பட்டியை போட்டு அடுப்பை பத்தவைத்தாள்.
    
  
    உம்மா,வாப்பா வைத்த பெயர்  அபூபக்கரா இருந்தாலும்,அவரை அனைவரும் அழைப்பது பக்கரு என்றுதான் .ரேஷன்கார்டுக்கு பேரு எழுதும்போதுதான் தன் பெயர் அபூபக்கர் என அவருக்கே நினைவுக்கு வரும் .
  
   பக்கரு பதினெட்டு வருடமாக வேலை செய்வது நாகர்கோயிலில்   மணிக்கூண்டு அருகில் உள்ள அசன் மொதலாளி நடத்தும் அம்ஸா சைவ,அசைவ ஹோட்டலில் .அம்ஸா ஹோட்டல் என்று சொன்னால் மாவட்டத்திலும் ,அருகில் உள்ள கேரளாவிலும்  தெரியாதவர்கள் கிடையாது . "நல்ல பேரு கேட்ட ஹோட்டலாக்கும் நாக்குக்கு ருசியான கோழி பிரியாணி,ஆட்டிறைச்சி பிரியாணி இல்லானக்க நல்ல புரோட்டாவும்,மாட்டிறைச்சியும்,எறச்சி சால்னா ஊத்தி,முட்டையும் போட்டு கொத்துன கொத்துப்புரோட்டா தின்னனும்னாக்க அம்ஸா ஹோட்டலுக்குதான் போனும்னு" சுவை அறிந்தவர்கள் சொல்வதுண்டு.
  

    பக்கரு பிறந்தஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகிலுள்ள துலுக்கப்பட்டி. தனது திருமணத்திற்கு பிறகு வருமானம் போதாமால் இவ்வூருக்கு வந்தார் .வடசேரி ஓட்டு பெரைத்தெருவில் வசித்தபோது பக்கத்துவீட்டு பாத்திமுத்துவின் வீட்டுகாரர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பக்கரை அம்ஸா ஹோட்டலில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
 பக்கர் எண்பத்தைந்தில் அம்ஸா ஹோட்டலில் பணிக்கு சேரும்போது தின சம்பளம் பனிரெண்டு ரூபாய், வெளியூர் ஆட்கள் சாப்பிட வந்தால் ஐம்பது பைசா,ஒரு ரூபாய் என  கைமடக்கு கிடைத்தால்  ஒரு ஐஞ்சு முதல்  ஏழு ரூபாய் கிடைக்கும்.ஒன்னும் கிடைக்காத  நாட்களும் நிறைய  உண்டு. அப்போது  பெரிய முதலாளி அன்வர் கடையில்  இருந்தார் அவர் மாத சம்பளம் தரும்போது கணக்கு பாக்காமல் புள்ள,குட்டிகாரன்னு ஐஞ்சி ரூபாய் கூட அதிகமாக தருவார்
  
    அன்வர் முதலாளி எண்பத்தேழில் மரித்தபின்   அவருடைய  மச்சினன் அசன் முதலாளி தான் கடையை நடத்துகிறார்.இவுரு கொஞ்சம் முசுடு ,எல்லாவற்றுக்கும்  கணக்கு பார்ப்பார் .வாயில் வந்தது போல பணியாளர்களை திட்டுவதால், யாரும் இங்கே அதிக நாட்கள் பணியில் தாக்கு பிடிப்பதில்லை .பக்கரும் இன்னும் சிலரும் மட்டும் குடும்ப சூழல் கருதி எதையும் காதில் வாங்குவதில்லை.

    அம்ஸா ஹோட்டலின் அசைவ பிரிவில் தற்போது பக்கர் கவனிக்கும் நான்கு மேசைகளும் அவர் பணிக்கு சேர்ந்தபுதிதில் இப்ராகிம் தான் இருந்தார். 'இப்ராகிம் கஸ்டமர்ட்ட  ரெண்டு சிக்கன் பிரை,ஒரு பிளேட் மட்டன  குடுத்துட்டு  ஒரு முட்டைகறிக்கு மட்டும் பில் போட்டு கைமடக்கு வாங்கத்துல ரஹீம் பிடிச்சு போட்டாரு,அதனால முதலாளி இப்ராகிம நிருத்திடாரூ"  என ராமச்சந்திரன் சொன்னார். பொறவு அங்க நின்னது ஐயப்பன் ,அவன் கோயிலு கொடைக்கு முதலாளிட்ட ஆயிரம் ரூவா வாங்கிட்டு போனவன் திரும்பி வரல .அப்போதுதான் அசன் முதலாளி பக்கரை அழைத்து  “நீ அந்த பேமிலி முறிக்க கிட்ட உள்ள மேசைல நில்லுடே”என்றார்.
  
     அன்று பக்கர்,மனைவி வியாத்தகண்ணுவிடம் “இன்னேலேருந்து எனக்க டேபிளு மாத்தமாக்கும் என்னமும் சில்லற படியறும் அதுல”என முகத்தை கோணலாக்கி சிரித்தார்.பக்கர் இருப்பாதாலேயே அம்ஸா ஹோட்டலுக்கு பல நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு.அம்ஸா ஹோட்டல் பரபரப்பாக இயங்கும் மதிய வேளைகளில் பக்கர் மூன்று ப்ளேட் பிரியாணி,இரண்டு சிறிய ப்ளேட் சிக்கனை வலது கையிலும்,இடக்கையில் ஒரு பிளேட்டுமாக கொண்டு செல்வதை வாடிக்கையாளர்கள் கண்கள் விரிய பார்ப்பதுண்டு.
   
        நெய்யூர் ஆஸ்பத்திரி டாக்டர் கீயுபட் நாகர்கோயிலுக்கு வந்தால் அம்ஸாவில்  ஒரு பிரியாணி தின்னுட்டுத்தான் செல்வார்  .அன்று சனிக்கிழமை டாக்டர் கீயுபட் வந்திருந்தார் .
“என்ன பக்கரே சொகமா இருக்கீரா”
“டாக்டர் வரணும் நல்லா இருக்கேன் ,நீங்கோ சொகந்தானா? ஒருவாரமா கை முட்டுல லேசா வலி”என்றார் பக்கர் 
 “அடி என்னமும் பட்டுதா ஓய்” என சட்டைபைலிருந்து கண் கண்ணாடியை எடுத்து போட்டுவிட்டு பக்கரின் கையில் அழுத்தி பார்த்தார் டாக்டர் கியூபட் .
 “ ரெத்தகெட்டு இருக்குவோய்,இதுக்கெல்லாம்  இங்க்லீஷ் மருந்து வேண்டாம்,கோபால் ஆசான்ட்ட சொல்லி ஆலம் பால் தைலம் வாங்கி ஒருவாரம் போடும் அடுத்த வாரம் நான் வரத்துல பாக்குலாம்” என்றார்.
   


        "இன்னைக்கி பிரியாணி மாஸ்டர் மாத்தமாக்கும் சுலைமான் பாய் மொவளுக்கு கல்யாணம்ன்னு கடையநல்லூருக்கு போயிட்டாரு, சுபைராக்கும் இன்னைக்கி மாஸ்டரு , நெய்சோறும் கறியும் சாப்புடுங்கோ நல்லா இருக்கும் ,இல்லன்னா உங்களுக்கு பிடிச்ச பொரிச்ச நெய்மீன் இருக்கு,காலத்த சூசை கன்னியாமரியிலருந்து கொண்டு வரத்துல துடிச்சிட்டு இருந்தது”.என்றார் பக்கர். “சரி நீரு சொன்ன பொறவு நான் பிரியாணி தின்னபுடாது,பொரிச்ச மீனும் நெச்சோறும் தாரும்” என்றார் டாக்டர் .  நிரந்தர வாடிக்கையாளர்களின் நாவின் ருசி அறிந்தவர் பக்கர் .

   வியாத்தகண்ணு தந்த ஆவி பறக்கும் சுக்குகாப்பிய கையில வாங்கி ஒரு மடக்கு ஊறிஞ்சி குடிச்ச  பக்கரு மூணு  வருசத்துக்கு முந்தைய நினைவில் மூழ்கினார்.  ஒருநாள் சாயங்ககாலம்  “மொலாளி பயல இஞ்சினியரிங் காலேஜில சேக்கணும் ஒரு முப்பதாயிரம் ரூவா கடனா வேணும் காலேஜி பீசடைக்க” எனக்கேட்டார் அபூபக்கர் . “பக்கரே உனக்க தகுதிக்கு போல ஆசைப்படு ,இஞ்சினியருக்கு படிக்க வைக்க உனக்கு முடியுமா டே,வேற என்னத்தையாவது சின்னதா படிக்க வை”என்றார் அசன் முதலாளி பக்கரிடம்.
  
மகனுக்கு பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண் அவன் இஞ்ஜினியர்தான் படிப்பேன்னு சொன்னான்.முதலாளி ரூவா இல்லைன்னு சொன்னதால வியாத்தக்கண்ணுக்க ஒரு மாலையையும்,கையில கிடந்த இரண்டு சின்ன காப்பையும் வித்து வெச்சிருந்தேன்.மொவன் அவனுக்கு பிரண்டுக்க கூட இராமநாதபுரம் செய்யது அம்மாள் காலேஜில் இடம் இருக்குன்னு போயிட்டு மறுநாள் போண் பண்ணினான்.  உச்ச* நேரம் போன் வந்தத அசன் முதலாளி மூணு மாணிக்க மேலதான் பக்கரிடம் சொன்னாரு “ஒய் பக்கரு மொவன் போன் பண்ணினான் நாளைக்கு காலைல காலேஜில பீஸ் கெட்டினால் இடம் கிடைக்குமாம்,இல்லேன்னா அந்த இடத்த வேறு யாருக்காவது கொடுத்துரு வாங்களாம்” என சொல்லி நிரறுத்திகொண்டார் .
    
        அசன் மொதலாளி பைசா தரமாட்டுருன்னு தெரியும் .அப்பத்தான் வில்லுக்குறி விஜயா பைனான்ஸ்,ஓறும* வந்தது. அப்போது மணி ஐந்தாகி இருந்தது. சின்ன பயல கூப்பிட்டு “மக்களே ஒனக்கு பிரண்டு பிரான்சிஸ்க்க ஸ்கூட்டர் வாங்கிட்டு வா,வாப்பா கேட்டுதுன்னுசொல்லு” என ,கையில் முப்பது ரூபாயை  பெட்ரோல் போட கொடுத்து அனுப்பினார் .வில்லுக்குறி விஜயா பைனான்ஸ்க்கு போய் சேரும்போது மணி ஆறாகி விட்டது.விஜயன் வெளியே நின்றுகொண்டு இருந்தார் .பணிப்பெண் கதவை பூட்டிக்கொண்டு இருந்தாள்.பக்கரை கண்டதும் “ஓய் பக்கர் சாயிப் வாரும் ,என்ன விஷயம்” என கேட்டார் விஜயன் .பக்கர் அவரது காதில் ரகசியம்  பேசுவது போல “ஒரு அர்ஜெண்டு முப்பதாயிரம் ரூவா வேணும் ,பயல காலேஜில சேக்கணும்” என்றார் பக்கர்.இரியும் என அங்கிருந்த மர பெஞ்சை காட்டிவிட்டு,பணிப்பெண்னிடம் அலுவலக கதவை திறக்க சொல்லிவிட்டு ,அருகிலிருந்த அவரது வீட்டிலிருந்து பணம் எடுத்து வர சொன்னார் விஜயன் .
   
    சில ஆவணங்களில் கையொப்பம் வாங்கிகொண்டு,சாட்சி யாக பக்கரின் இளைய மகனிடமே கையொப்பம் பெற்றுகொண்டார். அன்றிரவே இளையமகன் பணத்துடன் ராமநாதபுரத்திற்கு சென்றான் .  பயல காலேஜில சேத்து மூணு வருஷம் ஓடி போச்சி .இன்னும் ஒரு வருசத்த படிப்புதான் அதுவர கடிச்சி ,புடிச்சி எப்படியாவது ஓட்டணும் என யோசித்த வாறே சுக்கு காப்பி குடித்த எவர்சில்வர் கப்பை கீழே வைத்துவிட்டு மீண்டும் பாயில் படுத்துக்கொண்டார் பக்கர் .
 பக்கரின் வாழ்க்கை ஓய்வு,தூக்கத்திற்கு வீடும்,வேலைக்கு கடையும் என்பதாக குறுகிபோயிருந்தது.எதையும் வாங்க வேண்டும்,எங்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதில் எழுவதே .கடையில் சாப்பிட வருபவர்களை திருப்தியாக சாப்பிட கொடுத்து அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்.
   
       கண்களை மூடியதும்  மனதில் எண்ணங்கள் ஓடின .இன்னைக்கி கடைக்கி போவல்லன்னா தனது எடம் போயிரும் .நான் நிக்க மேசையில் ராமச்சந்திரன் வருவான்.நாளேலேருந்து என்னை சைவ சாப்பாட்டு சைடுக்கு போடுவாரு சூப்றேசரு .அங்க கைமடக்கு ஒரு எளவும் கிடைக்காது .எவனாவது வெளியூர் காரன் எப்பாவாவது ஒரு இரண்டு ரூவா தந்தா உண்டு .எனக்க டேபிள்ல்ல மூணு பேரு புரோட்டாவும் ,ஒரு சில்லி சிக்கனும் ,மட்டன் ரோஸ்டும், பீப் பிரையும்  வாங்குனா இருநூறு  ரூவா பில்லு வரும் கண்ணை மூடிகிட்டு பத்து ரூவா கைமடக்கும் கிடைக்கும்.


  மாச சம்பளத்துல பயலுக்கு அனுப்பி குடுத்துட்டு ,கைமடக்கு கிடைக்க பைசாலதான் வீட்டு பாடு கழியுது.பைனான்ஸ்ல வாங்குன ரூவா வட்டி தெவஞ்சி நிக்கிது என எண்ணியவாறே பக்கர் வியாத்தகண்ணிடம் “நீ அந்த சட்டையை எடு காய்ச்சலுன்னு பாத்த ஒக்காது கேட்டியா நான் கடைக்கி போறேன்” என்றார். வியாத்தகண்ணு பக்கரை தடுக்கவில்லை ,அவர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடக்க இயலாமல் செல்வதை வாசலில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.

முற்றும் .
ஷாகுல் ஹமீது.

1 comment:

  1. அருமையான மொழி நடை.. வாழ்த்துகள்

    ReplyDelete