Sunday, 22 September 2019

சொகுசு பேருந்தில் திருடர்கள்



     கடந்த ஞாயிறன்று சேலம் சென்றிருந்தேன்.நண்பன் ஜானகிராமனின் இளையவள் ஜமுனாவின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக.சனிக்கிழமை இரவு நாகர்கோவில் –கோவை ரயிலில் சென்று ஈரோட்டில் இறங்கி அங்கிருந்து பேருந்தில் காலை ஏழு மணிக்கு சேலம் சென்று சேர்ந்தேன்.உறவினர்  பாபு பேருந்து நிலையம் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
  
   ஞாயிறு இரவு எட்டு ஐம்பது மணிக்கு ஈரோட்டிலிருந்து நாகர்கோயில் செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன் .உறவினர் பாபு “திருமண வரவேற்பு நடக்கும் மண்டபம் இருக்கும் வனவாசி சேலத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவு,ஏழுமணிக்குதான் திருமண வரவேற்பு ஆகவே நீங்கள் இரவு ஈரோட்டிலிருந்து ரயிலை பிடிக்க இயலாது .இவ்வளவு தூரம் வந்துட்டு தலையை காட்டிட்டு போனது போல இருக்கும்”என்றார்.  எனவே ரயில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு இரவு பத்துமணி  பேருந்தில் பயணச்  சீட்டு முன்பதிவு செய்துதருகிறேன் என்றார் .
  
பாபுவுடன் 

பகவத் பவன் 


நண்பர் சரவணன் மற்றும் சகோதரி பிரேமா 







       காலை பத்து மணிக்குமேல் அவரது இருசக்கர வாகனத்தில்  புறப்பட்டு அயோத்தியாபட்டணம் அருகில் இருக்கும் பகவத் பவன் சென்று ,நண்பர்கள் ஜீவமணி ,சரவணன் ஆகியோர் குடும்பத்துடன் அங்கிருந்ததால் அவர்களையும் ,முந்தைய நாள் இரவு சென்னையிலிருந்து வந்திருந்த வாழும் ஞானி ஸ்ரீ பகவத் அவர்களையும் சந்தித்தேன் . மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது பகவத் பவன். அங்கேயே சுவையான மதிய உணவை பரிமாறினர் சகோதரிகள் அன்புக்கரசி ,பிரேமா,கீதா .

      மாலை மூன்று மணிக்கு ஜானகியின் வீட்டிற்கு சென்று சேர்ந்தேன்.ஐந்து மணிக்குமேல் ஜானகியின் குடும்பத்தினர்,உறவினர்கள் ஒன்றாக ஒரு வேனில் புறப்பட்டோம் வனவாசியில் உள்ள திருமண மண்டபத்திற்கு.வனவாசியை நெருங்குகையில் இடி மின்னலுடன் நல்ல மழை ஏழு மணிக்கு சற்று முன் தான் திருமண மண்டபத்தை சென்று சேர்ந்தோம் . மலை சூழ்ந்த பகுதி அது இருட்டிவிட்டதால் வனவாசியின் அழகை காண கிடைக்கவில்லை .இரவு பத்து மணி பேருந்தை பாபு உறுதி செய்திருந்ததால் எட்டு மணிக்கே புறப்பட எத்தனித்தேன்.ஜானகியின் தந்தை இங்கே தங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது நீங்கள் தங்கி செல்வதுபோல் வந்திருக்கலாம் என சொல்லிவிட்டு உணவு கூடத்திற்கு சென்று வந்தவர் சாப்பிட்டு செல்லுமாறு வேண்டினார் .கை நனைத்தல் எனும் சடங்குக்குபின்(வயதில் பெரியர்வர்கள் முதலில் சாப்பிடுவது) தான் சாப்பாடு பரிமாறும் வழக்கம் அங்கிருப்பதால் .என்னை அடுமனைக்கு அழைத்து சென்று உணவு பரிமாறினார் .
                                  
      மென்மழைத் தூறிக்கொண்டே இருந்த வேளையில்  .ஜானகி சேலம் பேருத்தில் ஏற்றிவிட்டார்.ஒன்பதரைக்குள் வந்துவிடுவேன் என பாபுவை அழைத்துச் சொன்னேன் .சற்று நேரத்திற்குப்பின் அவர் என்னை மீண்டும் அழைத்து பத்து மணி பேருந்து ஒசூர் அருகே பழுதாகி நின்றுவிட்டது என தகவல் வந்திருப்பதாக சொன்னார் .மதுரை சென்று அங்கிருந்து சென்றுவிடலாம் என முடிவு செய்தேன் .இரவு பாபுவின் வீட்டிற்குச்  சென்று உடல் கழுவி பயணத்திற்கு வசதியாக வேட்டி கட்டிக்கொண்டேன். பெனாசிர் தந்த சூடான  சுலைமானியை குடித்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றேன் .
  
            சேலம் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது அதில் ஏறிக்கொண்டேன் .நானூற்றி இருபத்தியைந்து ரூபாய் கட்டணம் என்றார் நடத்துனர் .வண்டி காலியாக இருந்தபோதும் ஓட்டுனர் பதினைந்துக்கு மேலே அமருங்கள் என்றார் . அக்காளுக்க மாப்ள அந்த முன் இருக்கைகளில் வருவானா இருக்கும் எனநினைத்துக்கொண்டேன். நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு செல்வதை கண்டு இறங்கி ஓடிச்சென்று அதில் ஏறினேன் பேருந்தினுள் சென்றபின் தான் தெரிந்தது ,அது படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டி பொருத்தப்பட்ட பேருந்து.இதுபோல் அரசு சொகுசு பேருந்து இருப்பதை இப்போதுதான் அறிகிறேன் .
                     
         நாகர்கோவிலுக்கு ஆயிரத்தி நாற்பத்தைந்து ரூபாய் கட்டணம்.கட்டணத்திற்கு தகுந்தவாறு அந்த பேருந்தும் இருக்கைகளும் சுத்தமாக இல்லை அதிக கட்டணம் பெற்றும் அரசு பேருந்துகள் மட்டும் ஏன் பராமரிக்க இயலவில்லையோ?  சே அந்த பஸ்ல போயிருந்தால் ஐநூறு ரூவால பெயிருக்கலாம் என ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது .ஓட்டுனரிடம் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டபின் சட்டைப்பையில் இருந்த  ஆயிரத்திஐநூறு ரூபாயை  பயணப்பையில் வைத்து விட்டு ,கைபேசியை தலைக்கு மேல் இருந்த மின் இணைப்பில் பொருத்திவிட்டு ,எனது போர்வையை விரித்து படுத்துக்கொண்டேன்.சொகுசுப்பேருந்து தந்த பாதுகாப்பு உணர்வால்,பயணப்பையை காலருகில் பொருட்கள் வைக்கும் கம்பியில் வைத்துவிட்டு தூங்க தயாரானேன்.பேருந்து காலியாக இருந்தது,என் அருகிலும் யாரும் இல்லை.படுத்த சிறிது நேரத்தில் ஆழ் துயிலுக்குச்  சென்றுவிட்டேன் .சிறுநீர் கழிக்க உந்துதல் வந்தபோதுதான் விழித்து நடத்துனரிடம் சொன்னேன் “இப்பதான் மாட்டுத்தவாணில பத்து நிமிஷம் நிறுத்தியிருந்தேன்” என்றார்.அப்போதுதான் கவனித்தேன் காலருகில் இருந்த  பையை காணவில்லை நான் படுத்திருந்த இருக்கை முழுவதும் தேடிவிட்டு நடத்துனரிடம் சொன்னேன். “பையை பத்திரமா வெக்காண்டாமா,அஞ்சு ஆளு மதுரைல இறங்கிச்சி”  என்றார். பேருந்து சிம்மக்கல் பழ சந்தையை தாண்டி வந்துகொண்டிருந்தது.
நான் படுத்திருந்த படுக்கை 
                      நான்  நடத்துனரிடம் புகார் அளிக்கவேண்டும் எனது ஓட்டுனர் உரிமம்,வாக்களர் அடையாள அட்டை,தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் வங்கி அட்டைகள்  அதில் இருந்தது என்றேன். “நான் என்ன வேணும்னாலும் செய்து தாரேன், கிட்ட வரக்கூடிய ஸ்டேஷன்ல நிறுத்தேன்” என சொல்லிவிட்டு, “நீங்கோ கொஞ்சம் கெவனமா இருக்காண்டாமா? ரூவா நறைய இருந்துதா?” எனவும் கேட்டார் . பெரியார் நிலையம் அருகில் வந்தபோது அவர் ஓட்டுனரிடம்  “டே இங்குன நிறுத்து,போலீஸ் ஸ்டேஷன் இங்க ஒன்னு உண்டு”  என்றார் .நானும் ,நடத்துனரும் வண்டியிலிருந்து இறங்கி சென்றபோது அதிகாலை மூன்றரை மணி அருகிலிருந்த  அனைத்து மகளிர் காவல் நிலையம் பூட்டியிருந்தது எதிரிலிருந்த பஞ்சர் கடையில் விழித்திருந்து மொபலை நோண்டிக்கொண்டிருந்த வாலிபனிடம் கேட்டு சி 2 குற்ற பிரிவு காவல் நிலையம் சென்றோம்.காவலர் ஒருவர் உள்ளே அமர்ந்து கைப்பேசியில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார் கதவு வெளிப்பக்கம் பூட்டியிருந்ததால் “சார் திறக்கலாமா” என அனுமதி கேட்டு உள்ளே சென்றோம். அந்த காவலர் இருக்கையை காட்டி அமரச்சொன்னார்.எங்களிடம் விபரங்களை கேட்டபின் போனில் யாரையோ அழைத்து அவரிடம் விபரங்களை சொல்லிவிட்டு காத்திருக்க சொன்னார் .சிறிது நேரத்தில் அவரது கைப்பேசி ஒலித்ததும் ,பேசிவிட்டு . “இன்ஸ்பெக்டர்,பஸ்சுக்க பக்கத்தில் நிற்கிறார் நீங்கள் அங்கே செல்லுங்கள்” என்றார்.இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரித்துவிட்டு பேருந்துனுள் ஏறி எல்லா இருக்கையிலும் பார்க்கச்சொன்னார்.பயணிகள் இருப்பதால் நான் பார்க்கவில்லை என்றேன் .அவரே தூங்கிகொண்டிருந்த அனைத்து பயணிகளையும் எழுப்பி எனது பை இருக்கிறதா என பார்க்க சொன்னார். பை பேருந்துனுள் இல்லை என்பது உறுதியானதும் கீழே இறங்கி எனது ஊர் பெயர்,முகவரி ஆகியவற்றை கேட்டபின். “அட்ரஸ் ,போன் நம்பர் கொடுத்துவிட்டு போறீங்களா இல்ல  கம்ப்ளைன்ட்  குடுக்கீறீர்களா?” எனக்கேட்டார் .
                    
இதில் தான் பையை வைத்திருந்தேன் 
  
              எனது ஓட்டுனர் உரிமம் அதிலிருந்ததால் புகார் அளித்து,ரசீது பெற விரும்புகிறேன் என்றேன் .அவருடன்  இருந்த காவலருடன் நாங்கள்  காவல் நிலையம் சென்றோம் ,இன்ஸ்பெக்டர் தனது பைக்கில் வந்தார் .அவரது அறைக்கு சென்று இருக்கையில் அமரசொல்லிவிட்டு ,ஒரு வெற்று காகிதத்தில் என்ன எழுதவேண்டும் என சொன்னார். “சார் நான் சொன்னதை கேட்டு கிட்டியளா?” என கேட்டுவிட்டு .நடத்துனரிடம் விசாரணையை தொடங்கினார்.தனது பாணியில் விசாரித்து அவரை குழப்பிவிட்டு ,என்னிடம் “ஸார் பை காணாமல் போனதை நீங்கள் பார்த்தது சிம்மக்கல் அருகில் இந்த புகாரை நான் பெற்றுகொள்ள முடியாது ,நீங்கள் சிம்மக்கல் காவல் நிலையத்தில்தான் புகார் கொடுக்க வேண்டும்” என்றார் .நான் புகார் எழுதுவதை நிறுத்திவிட்டு ,நீங்கள் வாங்கவில்லை என்றால் நான் போய் வருகிறேன் என்றேன். இல்ல ஸார் மேலதிகாரி என்னிடம் கேட்பார் நாங்கள் இங்கு இந்த புகாரை வாங்க கூடாது என்றதும்.எனது பை காணாமல் போன பின் ,நான் கண்ட முதல் ஸ்டேஷன் இது நீங்கள் புகாரை வாங்க மறுத்தால் நான் செல்கிறேன் என்றதும்.இன்ஸ்பெக்டர் வேறொருவருக்கு தொலைபேசியில் அழைத்து பேசிவிட்டு புகாரை பெற்றுகொண்டார் .
நாளை தான் ரசீது கிடைக்கும்,.நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.எனது நண்பன் முத்து தலைமை காவலராக மதுரையிலேயே இருக்கிறார் அவர் வந்து பெற்றுகொள்வார் என சொல்லிவிட்டு பேருந்துக்கு வந்து புறப்படுகையில் மணி ஐந்தை நெருங்கியிருந்தது.போர்வையும்,கைபேசியும் மட்டும் மிச்சம் .நாகர்கோயில் –ஈரோடு ரயிலில் பயணிக்கையில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் பையை தலைக்கு அடியில் வைத்திருந்தேன் .சொகுசுப்பேருந்தில் திருடர்கள் இருப்பார்கள் என நினைக்கவேயில்லை .பேருந்தின் ஓட்டுனர் ஆம்னி பேருந்துகளிலும் திருட்டுகள் நிறையவே நடக்கிறது என்றார் .
நான் எப்போதும் சொல்வதுண்டு “ கள்ளன் பெருசா ,காப்பான் பெருசா” கள்ளன் தான் பெருசு. ஆம்னி பேருந்துகளில் அடிக்கடி பயணம் செய்யும்  நண்பர்கள் சிலர் இப்படியும் நடக்குமா! ,இவ்வளவு நாள் இதில் உள்ள பாதுகாப்பை நம்பித்தான்அதிக கட்டணம் செலுத்தி விலையுர்ந்த பொருட்களுடன் பயணிக்கிறோம்  என்றனர் .

          மீண்டும் படுத்து தூங்கிவிட்டேன் ,நெல்லை வந்தபின் நடத்துனர் ,வாங்க டீ குடிக்கிலாம் என அழைத்தார்  மறுத்தேன் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று டீ வாங்கிகொடுத்தார்.இரண்டு குறுஞ்செய்தி வந்திருந்தது எனது இரண்டு வங்கி அட்டைகளையும் ,தானியங்கி இயந்திரத்தில் போட்டு பணமெடுக்க முயற்சித்துள்ளனர் பையை திருடியவர்கள் .
எட்டரை மணிக்கு வடசேரி பேருந்துநிலையத்தில் இறங்குகையில் பெரியவர் ஒருவர்,பஸ்சுக்கு பைசா வெச்சிருக்கியளா என கேட்டு ரூ நூறை நீட்டினார்,எல் ஐ சி கிட்ட தான் வீடு நடந்து போயிருவேன் நன்றி என சொல்லிவிட்டு .நடக்க ஆரம்பித்தேன் .சுனிதாவை போனில் அழைத்து   இப்பதான் வடசேரியில இறங்குனேன்,ஒரு அபத்தம் பற்றி போச்சி கேட்டியா ,என்னது என கேட்டாள் பேக்க களவாண்டுட்டுவானுவோ என்றேன்.சும்மா சொல்லாதீங்கோ,போனு எப்படி இருக்கு ,அத கள்ளன் எடுக்கல்ல என்றேன் கையில் போர்வையுடன் வீட்டிற்கு வந்ததும் “வேட்டிய உருவாம உட்டானே,வாச்சிய களத்தி பையில வெக்கலையோ அதனால அது தப்பிச்சி” என்றாள்
  
         மாலை மூன்றரை மணிக்கு போனில் ஒருவர் என்னை  அழைத்து ஸார் மணி பர்சு,பாப்பாக்க போட்டோ ,அஞ்சாறு கார்டு எல்லாம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு பக்கத்துல கிடக்குது .இதுல ஏதாவது உங்களுக்கு தேவையா ,தொலைத்து விட்டீர்களா?என கேட்டார் டிரைவிங் லைசன்சு இருக்கா என கேட்டேன் .இருக்கு ஸார் என்றார் .எனது எண் எப்படி கிடைத்தது ,ஒரு கார்டுல நம்பர் இருக்குது .அதனால் தான் அழைத்தேன் என்றார் .அனைத்தையும் தபாலில் அனுப்புமாறு வேண்டினேன். தந்து பெயர் பழனிவேல் ,சொந்த ஊர் விழுப்புரம் ,மதுரை டி வி எஸ் இல் பணி செய்கிறேன் என்றார்.எனது பையில் ஒரு ஜீன்ஸ் பாண்ட்,பெல்ட்,ஷூ ஒரு சட்டை ,பனியன்,ஜட்டி,கைத்துண்டு,பணம் ஆயிரத்திஐநூறு,மணி பர்ஸ் ஆகியவை இருந்தது .உடைகள் இருந்த பையையும் ,பர்சில் இருந்த பணம் ,வங்கி அட்டைகளையும் எடுத்துவிட்டு பர்ஸை மட்டும் வீசி எறிந்துள்ளனர் திருடர்கள்  .அடையாள அட்டை ஒன்றில் கைபேசி எண் இருந்ததால் பழனிவேல் என்னை தொடர்புகொள்ளவும் முடிந்தது .
  
         கடந்த புதன்கிழமை மதியம் எனது அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் பர்ஸ் தபாலில் வந்து சேர்ந்தது .நீண்ட நேரம் மழையில் கிடந்து ஊறி போயிருந்ததால் பர்ஸ் உபயோகிக்க முடியாததாகிவிட்டது .பழனிவேல் போன்றவர்கள்  இருப்பதால்தான் இந்த புவி இன்னும் சுழல்கிறது என நினைத்துகொண்டேன் .முகமறியா அந்த பழனிவேலுக்கு நன்றிகள் .வாழ்க வளமுடன் .
ஷாகுல் ஹமீது ,
21 sep 2019 .

No comments:

Post a Comment