கப்பல் காரன் டைரி
உணவு
கப்பல் காரனுக்கு பசியை உணரும் வாய்ப்பேயில்லை.இந்தியர்கள்
அதிகம் இருக்கும் கப்பல்களில் காலையில் பால்,பழச்சாறு,அவித்த
முட்டை,ஆம்ப்லட்,புர்ஜி பிரட் ,ஓட்ஸ் ,சீரியல் வகைகள் என நீளும் .மதிய உணவாக
பாசுமதி அரிசி சோறு ,பருப்பு ,ஒரு காய் கூட்டு,சாலட்,இறைச்சி அல்லது மீன்,ஒரு
பழம்(ஆப்பிள் ,ஆரஞ்சு,தர்பூசனி ,திராட்சை ........)இரவுணவாக ஒரு சூப் ,சப்பாத்தி ,ஒரு கூட்டு ,ஒரு இறைச்சி
வகை ,ஒரு இனிப்பு(desert).காலை மாலை தேநீர் இடைவேளைகளில் பிஸ்கட்டுகளும்
கிடைக்கும் .எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் பிரியாணியும் ,மாலையில் அமெரிக்க
உணவான பிஸா,பர்கள் பிரெஞ்சு பிரஸ் என இருக்கும் .அவ்வப்போது வார இறுதி
சனிக்கிழமைகளில் நடக்கும் பார்ட்டிகளில் சிறப்பு உணவுகளும் (இறால்,ஸ்டேக் )கிடைக்கும்.
கடந்த ஜூன் மாதம் பத்தாம்
தேதி ஸ்பெயினில் இருந்து புறப்பட்டு பனிரெண்டுநாள் பயணத்திற்கு பின் அமெரிக்காவை
சென்றடைந்தோம் கடலம்மா சாந்தமாகவும்,பயணம் எளிதாகவும் இருந்தது .கப்பலின் கடிகாரம்
ஆறு மணிநேரம் பின்னோக்கி சென்றது.அங்கிருந்து இருபத்தி ஐந்து காலை புறப்பட்டோம்
ஐரோப்பாவை நோக்கி.ஒன்பது நாட்கள் பயணத்திற்கு பின் பாதுகாப்பாக இங்கு வந்து
சேர்ந்தோம் .மீண்டும் கப்பலின் கடிகாரம் ஆறு மணிநேரம் முன்னோக்கி சென்றுவிட்டது
.இருபத்தி ஐந்து நாட்களுக்குள் இருமுறை கடிகாரம் ஆறு மணி வீதம் முன்னேயும் பின்னேயும் சென்றதால் உடல் கடிகாரம்
கொஞ்சம் குழம்பி ,துயில்,உடல் கழிவுகள் வெளியேறுவதில் சமநிலை இழந்து நிற்கிறது .
இங்கு வந்து ஆறு
நாட்களாகியும் துறைமுக ஒப்புதல் இல்லாததால் கரையிலிருந்து நூறு கடல் மைல் (ஒரு
நாட்டிகல் மைல் = 1.85 மைல்) தொலைவில் கப்பல் மிதந்துகொண்டிருக்கிறது. இரண்டாம்
தியதி நள்ளிரவு கப்பலை நிறுத்தியதும் கப்பல் கடுமையாக ஆட தொடங்கியது .அப்போதே நானும்,ஆழ்
துயிலில் இருந்த பலரும் துயில் கலைந்துவிட்டதாக சொன்னார்கள் .
கடந்த மாதம் ஸ்பெயினில்
இருந்தபோது துறைமுக பாதுகாப்பு காரணங்களால் உணவு,உதிரி பொருட்கள் எதுவும் கப்பலுக்கு
கொண்டுவர அனுமதிக்கவில்லை.கப்பலுக்கு தேவையான எண்ணெய் நிரப்பும்போது உணவும் ,மற்ற
பொருட்களும் வரும் என்றார்கள் .எண்ணெய் நிரப்ப கப்பலை நிறுத்திய இடத்தில்
எங்களுக்கான உணவு மற்றும் உதிரி பாகங்கள் குறைந்த கால அவகாசத்தில் ஒருங்கு செய்ய
இயலவில்லை என கை விரித்தது உணவுதரும் நிறுவனம் .ஸ்பெயினில் இருந்து கப்பல்
புறப்படுவதற்கு இரு தினங்கள் முன்பு கப்பல் பணியாளர்கள் சிலர் துறைமுகம்
அருகிலிருந்த லாப்பி நாதா எனும் அழகிய நீண்ட
கடற்கரை உடைய சிற்றூருக்கு சென்று மிகவும் அத்தியாவசியமான தக்காளி,இஞ்சி
,பச்சைமிளகாய், வெங்காயம்,(சின்ன வெங்காயம் தென்னிந்தியா தவிர வேறெங்கும் சின்ன
வெங்காயம் கிடைக்கிறதா என தெரியவில்லை) வெள்ளரிக்காய் மற்றும் கொஞ்சம் ஆரஞ்ச்
பழங்கள் என வாங்கி வந்தனர் .பச்சை காய் கறிகள் குளிரூட்டியில் வைத்து
பாதுகாக்கபட்டால்,அதிகபட்சம் பதினைந்து
நாட்கள் தாக்குபிடிக்கும் .
அமெரிக்காவில் எங்களுக்கு
வேண்டிய அனைத்து பொருட்களும் கிடைப்பதாக இருந்தது .ஆனால் நங்கூரம் பாய்ச்சி
நிறுத்தி கப்பலுக்கான எரிபொருள் நிரப்பும்போது தான் பொருட்களை வரவழைக்க
முடியும்.இம்முறை எரிபொருள் நிரப்ப தேவைப்படவில்லை.நாங்கள் சென்றது தனியார்
துறைமுகம் .எரிவாயு நிரப்பும் துறைமுகப்பில் வேறதெற்கும் அனுமதி இல்லாததால்.தலைமை
சமையற்காரர் செங்கனூர் ஸ்ரீகுமார், மூன்றாம் அதிகாரி மும்பையின் ஸ்ரயாஸ் ஆப்தே,அவனது
மனைவி அம்ருதா,எர்னாகுளம் கோபகுமார்,உக்ரைனின் காடேட் விக்டர் ,பயிற்சி பொறியாளர்
பிரதீக்,வல்சாட் ஷ்யாம் தண்டேல் ஆகியோர் பிலேடெல்பியாவிலுள்ள உழவர் சந்தைக்கு
சென்று ,பச்சை காய்கறிகள் ,மற்றும் பழங்கள் வாங்கி வந்தனர். இதுவும் தனியாருக்கான
துறைமுகம்,அதிக ஆபத்து(LPG AND OILtanker terminal) மிகுந்த
சரக்கை கையாள்வதால்,எந்த வாகனமும் உள்ளே வர அனுமதியில்லை அவர்கள் வாங்கி வந்த
பொருட்களை வாகனம் நிறுத்தியிருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தோள்களில்
தூக்கி கப்பலுக்கு அருகில் கொண்டுவந்து
இருபது மீட்டர் உயரமிருந்த சாய்வு ஏணிபடிகளில் நாங்கள் பத்துபேர் வரிசையாக நின்று
கைகளில் மாற்றி ,மாற்றி கப்பலின் மேல்தளத்துக்குள் கொண்டு சேர்த்தபின் கைவண்டியில்
(strolly )அடுக்கி கப்பலின் அடுமனைக்கு
கீழ் இருக்கும் குளிர் அறைகளில் அடுக்கிவைத்தோம்
மீண்டும் அன்று மாலையில் கப்பல் காப்டன் தனது சகாக்களுடன்
சென்று பால் மற்றும் பிஸ்கட்டுகள் வாங்கி வந்தார். இப்போது தக்காளி உட்பட பச்சை
காய்கறிகள் அனேகமாக அனைத்தும் தீர்ந்துவிட்டது .வெங்காயமும் இன்னும் சில காய்கள்
மட்டுமே உள்ளன .மைனஸ் பதினெட்டு டிகிரியில் பதப்படுத்தப்பட்ட சில காய்களும்
உள்ளன.இங்கு வந்ததும் அத்தியாவசியமான உணவு
பொருட்கள் வாங்காலாம் என கப்பல் தலைவன் நினைத்திருந்தார் .ஆனால் நாங்கள் நினைத்தது
போல் நடக்கவில்லை .கப்பல் துறைமுகம் செல்வதில் தாமதமாகிறது .நேற்று வரை தகவல் இல்லை எப்போது நாங்கள் துறைமுகம் செல்வோம்
என .இங்கிருந்து இரு நாள் பயணத்திற்கு பின் வேறொரு துறைமுகம் சென்றபின்தான்
உணவுபொருட்கள் வரும் .நேற்று ஸ்ரீ குமாரிடம் கேட்டேன் “சேட்டா அரிசி இருக்கிறதா”என
கேட்டேன். கஞ்சி குடித்தாவது நாட்களை நகர்த்தலாம் . அவர் “
இறச்சியும் ,மீனும் உண்டு அரியும் ,கோதம்பும்
குறவா” என்றார் .
இப்போது கப்பலில்
இருபத்தியிரண்டு பணியாளர்களும்,மூன்றாம் அதிகாரியின் மனைவி அம்ருதா ஆப்தே உட்பட
இருபத்திமூன்று பேர் இருக்கிறோம் . தினமும் மதிய உணவிற்கு மூன்றரை கிலோ அரிசியும்,இரவுணவிற்கு
நான்கு கிலோ கோதுமை மாவும்,கோழி கறி குழம்பு அல்லது ஆட்டிறைச்சி குழம்பு என்றால்
ஐந்து கிலோவீதமும்,அதையே பொரித்தால் ஏழு
கிலோவும் ,மீன் என்றார் ஐந்து கிலோ,பருப்பு இரண்டு கிலோ அதற்கு தேவையான மசாலாக்கள்
,எண்ணெய் என நீளுகிறது.பாக்கெட்டுகளில் அடைத்த பால்,பழச்சாறு தினமும் ஏழு முதல்
எட்டு லிட்டர் வீதம் வேண்டும் .
தினமும் கடின
பணிக்குபின்னரும் முர்சாபூர் ஆலம் உடற்பயிற்சிக்கு கூடத்திற்கு செல்ல தவறுவதில்லை
.அவனுக்கு தினமும் குறைந்தது நான்கைந்து முட்டைகள் வேண்டும் காலையில். “தாதா முட்டை
தின்னாமல் எனேர்ஜியே இல்ல”என்றான் இன்று .
இன்று காலை உணவுகூடத்திற்கு
சென்றபோது செப் ஸ்ரீ குமார் பால்பொடியில்
ஒரு ‘மில்க் ஷேக்’ செய்து வைத்திருந்தார்.பணியாளர்கள் பிரட் சாப்பிட்டு
கொண்டிருந்தனர் ,விக்டர் பன்னை தண்ணீரில் நனைத்து தின்றுகொண்டிருந்தான்.நேற்று
மாலை ஸ்ரீ குமார் கொஞ்சம் பன் செய்திருந்தார் . இன்று இரவுணவாக பூரியும்,பட்டாணி
கூட்டும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது சோலங்கி என்னிடம் “எனது கப்பல் வாழ்க்கை
முடியபோகிறது முப்பதாண்டுகள் பணியில் இப்படி ஒரு நிலைமை வந்ததே இல்லை” .என்றார் .
செப் ஸ்ரீகுமார் எப்போதுமே அன்போடு
சமைத்து,பிறர் நிறைவாக சாப்பிடுவதை பார்த்து மகிழ்பவர் .கடமைக்காக ஒரு நாள் கூட
அவர் பணி செய்வதில்லை என்பதை நான் உண்ணும்போது உணர்வேன்.அவர் “சீக்கிரம்
இங்கிருந்த செல்லவேண்டும்” என்றார்.உணவு பொருட்கள் குறைந்துவருவதால் அவர் உளச்சோர்வடைந்துள்ளார்.அன்னமிட்ட
கை கவலைகொள்வது இயல்பே என எண்ணிக்கொண்டேன் .ஈராக் போர்முனையில் இருந்தபோது
போக்குவரத்து தடைபட்டு நாங்கள் உணவு வழங்க சிரமபட்ட நாட்களை நினைத்துகொண்டேன் .
இன்று மாலையில் வரும் வியாழன்
அன்று கப்பல் துறைமுகம் செல்லும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளதாக சொன்னார்கள்
.எப்போதுமே இரண்டு மாதத்துக்கான உணவை கையிருப்பு வைத்துகொள்ள வேண்டியது காப்டனின்
பொறுப்பு .கடந்த மே மாதம் பத்தாம் தேதிக்குப்பின் கப்பலுக்கு பொருட்கள் வருவதற்கான
அனைத்து வழிகளும் தடைபட்டதுதான் காரணம் எங்களது தற்போதைய பற்றாக்குறைக்கு.
ஷாகுல் ஹமீது ,
08 july 2019.
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment