Saturday, 8 June 2019

கப்பல் காரன் டைரி . பல்வலி


                                                                                                                      
                                                                                                                                            
                                          பல்வலி 
 நண்பர்கள்  பலரும் ஷாகுல் கடல் பயண அனுபவங்களை எழுது படிக்க ஆர்வமாய் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் .நெருக்கிய இரண்டு அல்லது மூவரை தவிர வேறு யாருக்கும் சில தினசரி குறிப்புகளை அனுப்பியதில்லை .
  
     கடந்த மார்ச் ஐந்தாம் தியதி எழுதிய புயல்களின் நடுவே பதிவை படித்த அனைத்து நண்பர்களும் அலறிவிட்டனர் என்னாட வாழ்க்கை இது என .அதன் பின்பு நான் எழுதி வைத்திருக்கும் சில பெரும் விபத்துகள் குறித்த பதிவு,சில நாட்குறிப்புகளையும்  பின் சென்று பார்த்தேன் .திகில் நிறைந்ததும்,மனதுக்கு சங்கடம் தருபவையாகவும்  இருக்கிறது .பின்னர் ஒவ்வொன்றாக பதிவேற்றம் செய்யலாம் என எண்ணினேன் .அதனாலேயே  இன்றைய நாட்குறிப்பு நண்பர்களின் பார்வைக்கு .
  
          பிலேடெல்பியாவிலிருந்து கடந்த எட்டாம் தியதி புறப்பட்டோம் நெதர்லாந்து நோக்கி .பதினோரு நாள் பயணம்.கடல் சாந்தமாக இருந்தது.புறப்பட்ட அன்றே கப்பலின் கடிகாரம் ஒரு மணி நேரம் முன்னே சென்றுவிட்டது.இன்று வரை ஐந்து நாட்களில் கடிகாரம் ஐந்து மணிநேரம் முன்னே சென்றுவிட்டது .இரவை பகலாகவும், பகலை இரவாகவும் மாற்றி வைத்துவிட்டனர் .எதற்குதான் இந்த அவசரமோ.இன்று காலை எட்டுமணிக்கு மேல்தான் உதயம் ஆயிற்று .கதிரவன் அணைவதும் எட்டே முக்காலுக்கு மேல் .
  
     நேற்று மாலை லேசாக பல் வலி தொடங்கியது .பல் வலி என சொல்ல முடியாது .கீழ் தாடையின் கடைசி கடவாய்பல்லுக்கு(ஞானப்பல் என பல் மருத்துவர் சொன்னார்) மேலே ஈறு வளர்ந்து மூடியுள்ளது. அதன் இடையில் சென்ற உணவால் இன்பெக்ஷன் ஆகிவிட்டது .மாலையில் சுடு நீரில் உப்பு போட்டு சில முறை வாய் கொப்பளித்தேன்.கப்பலில் இருக்கும் நண்பர் தாம்சன் பல்லில் தடவ ஜெல் ஒன்றை தந்தார்.தமிழகத்தை சார்ந்த தோழி ஒருவர் பல் மருத்துவர் .விசயத்தை சொன்னேன்.அந்த ஜெல் ஈறு பிரச்னைக்கானது .ஷாகுல் சுடுநீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள் .நெறி கெட்டினால் முறிவு மருந்து எடுத்துகொள்ளுங்கள் என்றார் .
   
இரவில் தூங்க தொடங்கிய இரண்டு மணிநேரத்துக்கு பின் வலி தொடங்கியது .வலியுடன் போராடிக்கொண்டே துயில முயற்சித்தேன் ஒரு பலனும் இல்லை .காலையில் வாயை திறக்கவே இயலவில்லை கடும் வலி மருத்துவர் சொன்னது போலவே நெறிகெட்டிவிட்டது.காலை உணவேதும் சாப்பிடாமலேயே பணிக்கு சென்றேன் .சில முக்கிய பணிகள் இன்று என்னால் நிற்கவே இயலவில்லை.தாடையுடன் ,தலையும் சேர்ந்து வலித்தது.காய்ச்சலுக்கு முந்தைய நிலை ,உடலில் சிறு நடுக்கம் வேறு .
           .என்னருகில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிகல் ஆபிசரை பார்த்தேன்.அவரின் மனதின் வலி முகத்தில் தெரிந்ததால் பார்வையை விலக்கிகொண்டேன் .நேற்று முன்தினம் இரவு அவரின் தந்தை இறந்த செய்தி வந்திருந்தது.பிறந்தால் இறந்தே ஆக வேண்டும் தான் ஆனாலும் தனது தந்தையின் இறந்த செய்தி கேட்டபின்பும் அந்த  சோகத்துடன் நாட்களை கடத்துவது பெருங்கொடுமை.தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள இயலாது .கப்பல் இதே வேகத்தில் எந்த தடையும் இன்றி சென்றால் பதினேழாம் தியதி நெதர்லாந்தின் தனுசன் துறைமுகத்தை சென்று சேரும் .பதினெட்டாம் தியதி புறப்பட்டு அவர் பத்தொன்பதாம் தியதி வீடு சென்று சேர்ந்தாலும் இறுதியாக தந்தையின் முகத்தை காணவும் இயலாது .

     காலை பத்து மணி தேநீர் இடைவேளையில் நிலேஷ் சைகையால் கேட்டான் என்ன ஆச்சு பேச்சை காணோம் என.பத்து மணி வரை பேசவே இல்லை சைகையால் தான் உரையாடிக்கொண்டிருந்தேன்.அதிகமாக பேசுவதால் இயற்கையே இப்படி ஒரு வலியை தந்து பேச்சை குறை என உணர்த்துகிறதோ .ஆனால் வலியை விட பேசாமல் இருப்பது எனக்கு மிக கஷ்டமாக இருந்தது.மதிய உணவையும் விட்டு விடலாம் என நினைத்தேன் நல்ல பசி,தினமும் சாப்பிட்டே பழகிவிட்டோம் .வெள்ளை சாதத்தை கரண்டியால் பிசைந்து கொஞ்சம் மீன் குழம்பு ஊற்றி சாப்பிட முயற்சித்தேன் முடியவில்லை .
  
     இன்று மாலையும், கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னே நகர்த்திவிட்டார்கள் ஐந்து நாளில் ஐந்து மணிநேரம் முன்னே சென்றுவிட்டது .உடல் கடிகாரம் மாற இன்னும் நாட்களாகும் .இரவுணவுக்கு சென்றபோது செப் ஸ்ரீகுமார் “சூடா பூரி எடுக்கட்டே’ என்றார்.மற்றவர்களுக்கும் சுட சுட எண்ணையில் பொரித்து கொண்டிருந்தார் .சிரித்துவிட்டு “பல்லு வேதனை இந்நு எனிக்கி வேண்டா  சேட்டா” என்றேன் . வெள்ளை சாதம் ஒரு குவளையில் எடுத்தேன் பார்த்துகொண்டிருந்த நண்பர் தாம்சன் “மிக்சியில போட்டு அடிங்க இதெல்லாம் கரண்டியில கடைய முடியுமா? என்றார்.மிக்சியில் மசிய அடித்த சாதத்துடன் மீன் குழம்பு ஊற்றி கஞ்சியாக குடித்தேன் .பல்லிலும்,தாடையிலும் படாமல் எளிதாக வழுவி குடலுக்குள் சென்றது.
  
       காய்ச்சலுக்கு சுனிதா தந்துவிட்ட சுக்குகாப்பி பொடியில் ,கருப்பட்டி சேர்த்து இரவு இருமுறை குடிக்க பிளாஸ்கில் எடுத்துக்கொண்டேன்.உள் தாடையில் விளக்கு அடித்து கண்ணாடியில் பார்த்தேன் ஞானப்பல்லின் ஈறுகள் வீங்கி,புண்ணாக இருக்கிறது .இன்னும் சில நாட்கள் ஆகலாம் சரியாக .வேறு வழியில்லை தாங்கிகொள்ள வேண்டியதுதான் .இப்போதும் எலக்ட்ரிக்கல் ஆபிசரை நினைத்தேன் .அவரது அக வலிக்கு முன் என் உடல் வலி ஒன்றுமேயில்லை.

12 –march -2019 ,
Shhaul hameed

No comments:

Post a Comment