Sunday 10 March 2019

உறவுகளும் ,நட்புகளும்

உறவுகளும் ,நட்புகளும்

 “சொந்தகாராங்க நிறைய இருக்காங்க ஆனா நான் அங்க போறதில்ல,ஹோட்டல்ல ரூம் போட்டுருக்கேன்”
             இப்படி சிலர் சொல்வதை கேட்டிருப்போம் .

நான் எந்த ஊருக்கும் சென்றாலும் அந்த ஊரில் இருக்கும் உறவினர் அல்லது நண்பர்களை முன்பே தொடர்பு கொள்வேன். அப்போதே தெரியும் அவர்களை நம்பி தேடி செல்லலாமா என .
   இப்போதெல்லாம் நான் சென்னைக்கு சென்றால் தாம்பரத்திலிருக்கும் நண்பர் அசோக் வீட்டில் தங்கியே ஆக வேண்டிய கட்டாயம் .இருபது ஆண்டு நட்பு .ஒருமுறை இலவச சீட்டு ஒன்று கிடைத்தது சென்னையின் மூன்று நட்சத்திர விடுதியில் இரு இரவுகள் தங்குவதற்கு .ஆனாலும் அசோக்கின் வீட்டிற்கே சென்றேன் .அப்போது உணர்ந்தேன் நண்பனின் வீட்டில் கிடைத்த ,அன்பும் ,உபசரிப்பும்  நட்சதிரவிடுதியில் கண்டிப்பாக கிடைக்காது என .இப்போது மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது சென்னை பெருநகருக்கு சென்று .


அது போல் விமான நிலையத்திலும்,ரயில் நிலையத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி நான் காத்திருக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட என்னை சந்தித்து செல்லும் நட்புகளும் உறவுகளும் பல.
 
  பத்தாண்டுகளுக்கு முன் மும்பை- நாகேர்கோயில் பயணத்தில்  சேலம் அருகே செல்லும்போது நண்பன் சேலம் பாலாவை அழைத்தேன்.பாய் பார்த்து வருடங்கள் ஆகிவிட்டது ரயில் வரும் நேரத்தை சொல்லுங்கள் வருகிறேன் என்றார் .சேலம் சந்திப்பில் வண்டி நின்ற பத்து நிமிடத்திற்கு என்னை சந்தித்தார் .இரவுணவுக்கு கையில் தோசையும் கொண்டு வந்திருந்தார் .

   2010 ஆம் சிங்கப்பூரில் கப்பலிலிருந்து இறங்கினேன். இரவு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார் சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் மணிவண்ணன். லிட்டில் இந்தியாவில் உள்ள முஸ்தபாவில் பொருட்களை வாங்கிவிட்டு அவருடைய வீட்டிற்கு செல்லும்போது  அதிகாலை இரண்டு மணி .நண்பரின் மனைவி அப்போதும் எழுந்து காபி போட்டுதந்தார்கள். நான் கேட்டேன் ஒரு வீட்டுக்கு வாற நேரமா இது என .நண்பனின் மனைவி எப்போதும் நீங்கள் வருவதில்லை நாம் சந்தித்தே இரண்டாண்டுகள் ஆகிவிட்டது .உங்களை சந்தித்ததே மகிழ்ச்சிதான்  என .

   ஒரு முறை மனைவி குழந்தைகளுடன் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தை தவறவிட்டேன் .அங்கிருந்து நண்பர் மணியை அழைத்தேன் .அவர் சிங்கை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார் எங்களை அழைத்து செல்வதற்காக .நான் விமானத்தை தவற விட்டதை சொன்னவுடன் .ஷாகுல் கவலை வேண்டாம் அடுத்த விமானம் அல்லது பேருந்து ,ரயிலில் வந்துவிடுங்கள் என்றார் .

  இரவு பனிரெண்டுமணி விமானத்தை பிடித்து சிங்கையில் இறங்கும்போது மணி நள்ளிரவு ஒன்றை தாண்டியிருந்தது அப்போதும் நண்பர் மணி விமானநிலையத்தில் எங்களுக்காக காத்துகொண்டிருந்தார் .வீடு சென்று சேரும்போது மணி இரண்டை தாண்டியிருந்தது.மூன்று நாட்கள் அவர் வீட்டில் தங்கி ,உண்டு ,உறங்கி சிங்கப்பூரை சுற்றிப்பார்த்தோம்.

   மலேசியாவில் உறவினர் சையதலி அண்ணின் வீட்டில் எட்டு நாட்கள் தங்கியிருந்தோம் .அவர்களின் அன்பு மறக்க இயலாதது .
 
   மாகியில் என்னுடன் கப்பலில் பணிபுரிந்த நண்பரின் மனைவியும் ,மகளும் அழைத்திருந்தார்கள். நண்பர் அப்போது கப்பலில் இருந்தார் .நான் குடும்பத்துடன் மாகி ரயில் நிலையம் சென்று சேரும்போது இருட்டதொடங்கியிருந்தது,பெருமழை பெய்துகொண்டிருந்தது.நண்பரின் மகள் எங்களை அழைத்துச்செல்ல ரயில் நிலையம் வந்திருந்தார் அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தவர் .தாய்ப்பால் அருந்தும் இருமாத சிறு மகவை தன் அன்னையிடம்  ஒப்படைத்துவிட்டு வந்திருந்தார் அந்த பெருமழையில் .

    இரண்டாண்டுகளுக்கு முன் பாண்டி செல்லுமுன் தோழி ஒருவருக்கு அழைத்தேன் .கண்டிப்பாக வீட்டிற்குதான் வரவேண்டுமென்றார் .நான் அங்கு வந்து சேரும்போது அதிகாலை ஐந்து மணி அல்லது அதற்கு முன்பாக கூட இருக்கலாம் என்றேன் .இரவு ஒருமணி என்றாலும் பத்து நிமிடத்திற்கு முன் சொல்லுங்கள் நீங்கள் இறங்குமிடத்தில் நாங்கள் இருப்போம் என்றாள்.அங்கு செல்லும்போது காலை ஆறு மணி தோழி தன்னுடைய காரில் வந்திருந்தார் .கணவர் அதிகாலை தான் பணி முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கி கொண்டிருக்கிறார் .நீ ஓய்வெடுத்து விட்டு குளித்து தயாராகு என்றார். தூங்கி எழுந்து வந்த  நண்பர் அவரது பல்சர் பைக்கை என்னிடம் தந்துவிட்டு இங்கிருக்கும் இரு நாட்களும் இதை உபயோகித்து கொள்ளுங்கள் என்றார் .

 நண்பர்கள் ,உறவினர்களின் வீட்டுக்கு செல்லும்போதும் எனக்கு தயக்கம் ஏதும் இருக்காது .எங்காவது சென்று அங்கிருக்கும் நண்பர் அல்லது உறவினரை சந்திக்காமல் வந்துவிட்டால் .என்னை போனில் அழைக்கும்போது “என்னா நீ இப்போ நம்மள மறந்துட்டியே எங்க வீட்டுக்கு வராம போயிட்டியே” என கேட்பார்கள் .

   திருச்சி எனது இரண்டாவது ஊர் எனலாம். 1997 இல் பெல்லில் தொழில் பழகுனர் பயிற்சியில் ஓராண்டு அங்கிருந்தேன் .அப்போது உதவி செய்த நண்பர் குடும்பத்துடன் இப்போதும் தொடர்பிலிருக்கிறேன்.
 
   இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஜெகனின் நட்பும்,பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நண்பர் ஸாமும் இப்போது என குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டனர் .

 பால்ய நண்பர்கள் ராஜாவும் ,வேலுப்பிள்ளையையும் அமெரிக்காவில் அவர்கள் வசிக்கும் நகருக்கு அருகில் நான் சென்றபோது என்னை தேடி வந்து சந்தித்தனர் .பல ஆண்டுகளுக்குப்பின் நாங்கள் அப்போது சந்தித்தோம் மகிழ்ச்சியான தருணம் அது .


   நண்பர் கோலப்பன் தற்போது தொழில் காரணமாக சென்னையில் வசிக்கிறார்.நாகர்கோயில் வரும்போதெல்லாம் நான் ஊரில் இருந்தால் என்னை வீட்டிற்கு வந்து சந்திக்க தவறுவதில்லை .

     தெரியாத ஊரில் நண்பர் அல்லது உறவினர்ஒருவர் இருந்தால் நாமும் அவ்வூரில் ஊள்ளூர்வாசியாக ஆகிவிடுவோம்.நாம் சென்றிருக்கும் வேலை விசயமாக ஒரு இடத்திற்கு செல்லுமிடத்தில் அவர்களுக்கு தெரிந்தவர் ஒருவர்அங்கு இருப்பார்.அதனால் எளிதாக சில பணிகள் முடிந்துள்ளன.             

   நட்பையும்,உறவுகளையும் பேணுவதால் அவர்களின் நெருக்கமான அன்பு மட்டுமல்ல உதவிகளையும் தான் பெற்றுகொள்கிறோம் .
தொடரும் .........

No comments:

Post a Comment