Monday, 4 March 2019

கப்பலுக்கு புறப்பட்டேன்

 கப்பலுக்கு புறப்பட்டேன்

இம்முறை ஜனவரி பத்தாம் தியதிக்குமேல் கப்பலுக்கு செல்ல தயாராக இருந்தேன்.அழைப்பு வரவே இல்லை. யூயோ எனும் கப்பலில் ஜனுவரி இருபத்தைந்தாம் தியதி அல்லது  பிப்ரவரி இரண்டாம் தியதி செல்லவேண்டியிருக்கும் என மும்பை அலுவலகத்தில் உள்ள எனது மேலாளர் அனிதா தாக்கூர் சொல்லியிருந்தாள்.
 
 இருபத்திஎட்டாம் தியதி கொச்சி அலுவலக்கதை தொடர்பு கொண்டபோது தவகல் எதுவும் இல்லை .மூன்றாம் இனிஜினியர் ஒருவர் இரண்டாம் தியதி விமான சீட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொன்னார்.

   முப்பத்திஒன்றாம் தியதி காலை பத்து மணிக்கு முன் கொச்சியிலிருந்து தாமஸ் அழைத்தார் .நான்காம் தியதி திங்கள்கிழமை அதிகாலை உங்கள் விமானம் என .சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் விடுமுறையாதலால் வெள்ளிக்கிழமை வந்து விமானச்சீட்டு மற்றும் இதர ஆவணங்கள் பெற்றுச்செல்லுமாறு அழைத்தார். அமெரிக்காவின் மார்கஸ் ஹூக் எனுமிடத்திலிருந்து கப்பலில் ஏற வேண்டும் .

அப்போது ஷாலிமின் மிதிவண்டியை சரி செய்வதற்காக கடையில் கொடுத்துவிட்டு முடி வெட்டுவதற்காக பெண்கள் கல்லூரி சாலையிலுள்ள விஜயதா மண்டபத்தை ஒட்டிய சரவணனின் கடைக்கு சென்றுகொண்டிருந்தேன் .வீட்டிற்கு வந்த பின் வடசேரி சென்று  வத்தல் மிளகாய்,கொத்தமல்லி,பெருஞ்சீரகம்,மஞ்சள் வாங்கி வந்து வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்தேன் .நல்ல காற்று அடித்து கொண்டிருந்தது .வழக்கமாக எப்போதும் வத்தல் மிளாகாய் மொட்டை மாடி முழுவதும் சிதறி கிடக்கும் .நல்ல காற்று அடிக்கும் நாளில் என்னவாகுமோ .காற்றில் பறக்காதவாறு வெயில் படும்படியாக வைத்துவிட்டு வந்தேன்.

நீராடிவிட்டு  லுகர் தொழுகைக்கு வடசேரி பள்ளிவாசல் சென்று விட்டு ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஐயாவை சந்திக்க சென்றேன் .மதிய வேளை உணவுண்ண சொன்னார்.
  இந்த விடுமுறையில் இருமுறை சாப்பிட வருவதாக சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டதை சொன்னார்.வீட்டில் காலையிலேயே எனக்கான உணவை சுனிதா சமைத்துவிட்டு சென்றுவிடுவாள் .அதை சாப்பிடாமல் வெளியில் எங்காவது சாப்பிட்டால் அவள் திட்டி தீர்த்துவிடுவாள் அது நினைவுக்கு வந்ததும்  வேண்டாமென மறுத்துவிட்டேன் .இரண்டு முட்டையில் கீதா அம்மா ஆம்ப்ளேட் போட்டு தந்தார்கள்.சுமித்  மற்றும் ராதாகிருஷ்ணன் சாருடன் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டேன் .
 
     காயவைத்த ,வத்தல்மிளகாய் ,மசாலாக்களை பொடிக்க கொடுத்தேன் .மறுநாள் வெள்ளிக்கிழமை ஆதலால் ஜும்மா தொழுகைக்கு செல்லும் பொருட்டு அதிகாலை நான்கு இருபதுக்கு மங்களூர் செல்லும்  பரசுராம் வண்டியில் கொச்சி செல்ல முடிவுசெய்தேன் .

    அதிகாலை எழுந்து காலை உணவுக்கு கொஞ்சம் சிறு பயறு அவித்து,சூடு பாத்திரத்தில் கொஞ்சம் சுலைமானியும் போட்டு எடுத்துக்கொண்டேன்.காலை வேளைகளில் குளிர்ந்த நீரில் நீராடுவது ஒரு சுகம் .  நான்கு மணிக்கு சுனிதாவை எழுப்பி போய்வருகிறேன் என சொல்லிவிட்டு  இரு சக்கரவாகனத்தை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பொதுபெட்டியில் ஏறி படுத்துக்கொண்டேன்.இம்முறை ஆறுமணிக்கு முன்பாகவே வண்டி திருவனந்தபுரம் சென்றுவிட்டது .அருகிலிருந்த நடைமேடையில் கோழிக்கோடு செல்லும் ஜன் சதாப்தி நின்றுகொண்டிருந்தது.
இறங்கி அந்த வண்டியில் ஏறிக்கொண்டேன்.நான் அமர்ந்திருந்த இருக்கையிலேயே ஆள் வாராததால் ஐம்பதுருபாய் கட்டணம் பெற்றுகொண்டு இருக்கையை உறுதிசெய்து பயண சீட்டில் ரசீதுடன் எழுதித்தந்தார் டிக்கெட் பரிசோதகர் .காலையில் சாப்பிட பயறுடன் கருப்பட்டி கலந்து வைத்திருந்தேன் .எவர்சில்வர் பாத்திரம் எனது பையில் கவிழ்ந்து இருந்ததால் இனிப்பு மட்டும் நீராக வெளியேறிவிட்டது .
 
    ஒன்பதுமணிக்கு கொச்சி அலுவலகத்திலிருந்து தாமஸ் அழைத்தார். “எங்கே இருக்கிறாய்” என “நெருங்கிவிட்டேன் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கிருப்பேன்” என்றேன். “உனது பயண பைகள் உன்னுடன் இருக்கிறதா” என கேட்டார். “இல்லை” என்றேன் . இன்றிரவே உனக்கு விமானம் திருவனந்தபுரத்திலிருந்து விமான சீட்டு பதிவு செய்தால் இரவு ஒருமணிக்குள் உன்னால் செல்ல முடியுமா என கேட்டார்.
 
    பத்துமணிக்குள் அலுவலகம் சென்றுவிட்டேன் .விரைவாக அனைத்து ஆவண பணிகளையும்  முடித்து தந்தார்கள். விமான சீட்டு மட்டும் மின்னஞ்சலில் அனுப்புகிறோம் என்றார் தாமஸ் .

     அலுவலக உதவியாளர் சாஜு எல்லாம் பெட்டந்து மாறியெல்லோ வேகம் விடு என்ற பணி எல்லாம் கழிஞ்சு என கைகுலுக்கி அனுப்பி வைத்தார் .நண்பன் பீட்டரை அழைத்திருந்தேன் .ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தார் .அவரது ஹோண்டா ஆக்ட்டிவாவில் முதலில் ஜங்சன் ரயில் நிலையம் சென்றேன் இரண்டு மணிக்கு மேல்தான் ரயில் என்றார்கள்.கொச்சி மெட்ரோ ரயில் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது .அடுத்தமுறை வரும்போது இங்கிருந்தே மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியும் என நினைத்துகொண்டேன் .
 
     அங்கிருந்து  கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம் சென்றேன் குளிரூட்டி வசதியுடன் பேருந்து ஒன்று திருவனந்தபுரதிற்கு புறப்பட தாயராக இருந்தது .எப்போது அங்கு போய் சேருமென ஓட்டுனரிடம் கேட்டேன் .மாலை ஐந்தரைக்கு மேலாகும் என்றார் .அதில் செல்ல விரும்பாமல் .மீண்டும் டவுண் ரயில் நிலையம் வரும்போது மணி பதினொன்றரை தாண்டி விட்டது .பனிரெண்டரைக்கு திருவனந்தபுரம் செல்லும் ரயில் இருந்தது.அப்போது தான் நான் காலையில் புறப்பட்ட பரசுராம் வண்டி எர்னாகுளம் வந்து சேர்ந்தது.பீட்டர் விடை பெற்று சென்றான்.நாகர்கோவில் வரை பயணசீட்டு(நூறு ருபாய்) எடுத்துவிட்டு மீன்கறியும் சோறும் பார்சல் வாங்கி கொண்டேன் .

        ரயில் கொஞ்சம் தாமதமாக பனிரெண்டு ஐம்பதுக்கு வந்தது அதற்குள்  எனது விமான சீட்டு வந்திருந்தது  கத்தார் ஏர்வேஸ் இன் தளத்தில் சென்று எனது இருக்கைகளை உறுதி செய்துகொண்டேன் .அதிகாலை மூன்று நாற்பத்தியைந்துக்கு விமானம் .ஒன்றரைக்குள் போய் சேர்ந்தால் போதும். ரயிலில் அருகில் இருந்த நடுவயது பெண் இயல்பாக தன்னை அறிமுகம் செய்துகொண்டு எங்கு செல்கீறீர்கள்,என்ன பணி என சிறிது நேரம்  உரையாடிவிட்டு   யூ டீபில் படம் பார்க்க ஆரம்பித்தாள் நான் புனத்தில் குஞ்சப்துல்லாவின் மீஸான் கற்களில் மூழ்கினேன். அருகிலிருந்த மற்ற பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். நண்பர் சாமுக்கும்,சுனிதாவிற்கும் காலையிலிருந்து தகவல்களை சொல்லிகொண்டிருந்தேன் .

    ஆறுமணிக்கு திருவனந்தபுரம்,அங்கிருந்து அடுத்த பாசஞ்சர் ரயில் ஆறு இருபதுக்கு கிளம்பியது .எட்டேகாலுக்கு நாகர்கோவில் எனது சுசுகியை எடுத்துகொண்டு விரைந்தேன் .வழியில் ஆனந்தா ஸ்டோர்ஸில் தேவையான சில பொருட்களை வாங்கிகொண்டு. ராதாகிருஷ்ணன் சாரை போனில் அழைத்து வாழ்த்து பெற்று  போய்வருகிறேன் என்றேன் .
   
எனது உம்மா சனி, ஞாயிறு வீட்டிற்கு வருகிறேன் ,சனி காலை வந்து அழைத்து செல் என சொல்லியிருந்தாள்.நான் இன்றே புறப்படுகிறேன் என்றதும் உம்மாவும் ,சுனிதாவின் உம்மா,வாப்பாவும் வீட்டிற்கு வந்து விட்டார்கள் .
 
      ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்து பயண பைகளில் பொருட்களை அடுக்கிவிட்டு நீராடி,இஷா தொழுதுவிட்டு இரவுணவு சாப்பிட்டேன்.இம்முறை பனங்கற்கண்டு,காயதிருமேனி எண்ணெய்,கப்பலில் போடும் செருப்பு என பல பொருட்கள் வாங்க முடியாமல் ஆயிற்று .நண்பர் ஸாம் வீட்டிற்கு வந்தார். முன்பே அழைத்திருந்தார் காரை எடுக்க முடியவில்லை எப்படி செல்வது என .பைக்கிலேயே போய்விடலாம் என்றேன் .பத்தரைக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம் .
     
இப்போதெல்லாம் நான் கப்பலுக்கு போகும்போது எந்த நேரமாக இருந்தாலும் வழியனுப்ப அவர் தான் வருகிறார் .வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரள அரசின் பேருந்து புறப்படுமுன் எனது விமான பயணம்,கப்பல் பணி எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டி கண்களை மூடி  ஜெபித்தார் சகோதரர் ஸாம்.

       பதினொன்றுக்கு பேருந்து புறப்பட்டது ஜன்னலோர இருக்கை வீட்டை தாண்டித்தான் செல்லும் சுனிதாவை அழைத்தேன் .வீட்டிற்கு வெளியே வந்து கையசைத்து சென்றாள்.பனிரெண்டரைக்கு தம்பானூர் ,அங்கிருந்து கட்டணம் செலுத்தும் ஆட்டோவில் வானூர்தி நிலையம் .(பஸ் கட்டணம் அறுபத்தி நான்கு + கட்டண ஆட்டோ நூற்றி நாற்பத்திஒன்பது )


       ஒருமணிக்குள் விமான நிலைய வாயிலில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சுலைமானியை குடித்துகொண்டிந்ருதேன் .நண்பன் சேலம் ஜானகிராமன் உள்நாட்டு விமான நிலையத்தில் பணி புரிகிறான் .என்னை சந்திக்க வந்தான் .விமான நிலையத்திற்குள் குடியுரிமை பகுதியை தாண்டி அவனால் வரமுடியாது .இரண்டரை மணிவரை அங்கிருத்து பேசிகொண்டிருந்தோம் .குடியுரிமை அதிகாரி ஒருவர் என்னை அணுகி “எந்த விமானம்” என்றார். “தோஹா செல்லும் விமானம்” என்றேன் “நேரமாகிவிட்டது விரைந்து செல்லுங்கள் கூட்டம் வந்துவிடும்” என்றார் .பத்து நிமிடம் கழித்து ஜானகியிடம் விடைபெற்று குடியுரிமை சோதனைகளை முடித்துவிட்டு அங்கிருந்த தொழுகை அறையில் இரண்டு ரக்காத் பயண தொழுகை தொழுதுவிட்டு விமானம் ஏறினேன் .

      ஜானகிராமன் கண்காணிப்பு காமிராவில் பார்த்துவிட்டு சார் நீங்கள் செல்வதை நான் பார்த்துவிட்டேன் .ஹாப்பி ஜெர்னி என குறுஞ்செய்தி அனுப்பினான்.
 
     ஐந்தேகால் மணிநேர பயணம் காலை உணவு தந்தார்கள் .சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் தூங்க முயற்சி செய்தேன் .கண்விழித்து இருபத்தி நான்கு மணிநேரத்திற்கும் மேலாகியிருந்தது .கத்தாரின் தோஹா நகரில் இறங்கும்போது மணி ஆறு இருபது அங்கிருந்து அடுத்த விமானம் ஏழு ஐம்பதுக்கு விமான நிலையத்தில் கழிப்பறை சென்று,பல் தேய்த்து அமெரிக்காவின் பிலேடெல்பியா செல்லும் விமானத்தின் வாயிற்எண்ணை தேடி விரைந்து சென்றேன். இங்கிருக்கும் கழிப்பறைகளில் தண்ணீர் இருப்பது பெரும் நிம்மதி..மூன்றாம் இஞ்சினியர் அமித் எங்கிருக்கிறாய் என குறுஞ்செய்தி அனுப்பினார் நெருங்கிவிட்டேன் வருகிறேன் என்றேன் .அவரும் பத்திசாபும் மும்பையிருந்து ஒன்றாக பயணித்தவர்கள்,ஆலம் என ஒருவர் அவர்களுடன் பயணித்தார் அவர்கள் அவனை சந்திக்கவேயில்லை என்றனர் .கொச்சியிலிருந்து கோபகுமார் என ஒருவர் வந்திருக்க வேண்டும்,ஜூனியர் அமித் என ஒருவரும் மும்பையிலிருந்து வரவேண்டியவர் .

     தோகா-பிலேடேல்பியா பதினான்கரை மணிநேர பயணம் .கத்தார் ஏர்வேசின் நெடுந்தூர விமானங்கள் நன்றாக இருக்கும். பயணத்தில் இருவரிடம் கேட்டேன் “நீங்கள் கோபகுமாரா” என. “இல்லை” என்றனர். இம்முறை வெத்திலை பாக்கு போலில்லாமல் நல்ல உணவு கிடைத்தது .விமானம் புறப்பட்டவுடன் பிரஞ்சும்,(காலை உணவும் ,மதிய உணவும் சேர்ந்தது பிரன்ச்) பின்னர் சாண்ட்விட்சும் ,இறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இரவுணவும் தந்தார்கள் .பிலேதேல்பியாவில்இறங்கும்போது மதியம் இரண்டரைமணி யாகியிருந்தது .இரவு பகலாகி இருந்தது .வெப்பநிலை மைனஸ் நான்கு டிகிரியாக இருந்தது.குடியுரிமை அதிகாரி கப்பலில் உனக்கு என்ன பணி என்று ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.சாலையோரம் முழுவதும் பனிக்கட்டிகளாக நிறைந்து கிடந்தது. எங்களை அழைத்து செல்லும் ஓட்டுனர் ஒரு மணிநேரம் தாமதமாகவே வந்தார். அவரது போனில் அழைத்தோம் பதிலளிக்கவில்லை . உக்ரைனை சேர்ந்த மூன்றாம் அதிகாரியாக வந்த ஒருவர் எங்களுடன் வந்த மூன்றாம் இஞ்சினியர் அமித்தை அடையாளம் கண்டுகொண்டார் முன்பே ஒன்றாக பணியாற்றியவர்கள் யூயோ வா என கேட்டுவிட்டு எங்களுடன் இணைந்து கொண்டார் .

       பதினான்கு மணிநேரம் பயணம் செய்த  விமானத்தில் சந்திக்காத ஆலமும்,கோபகுமாரும் வந்து சேர்ந்தனர் .சேர்வ்லோட்டின் மிகப்பெரிய வண்டியை கொண்டு வந்திருந்தார் ஓட்டுனர் அனைவரின் பயணபைகளையும் ஏற்றிவிட்டு பனிக்கட்டிகள் நிறைந்து கிடந்த சாலையோரங்களை வியப்புடன் பார்த்தபடி மார்கஸ் கூக் துறைமுக அலுவலகத்தை அடைந்தோம் .எங்களது கடவு சீட்டுகளுடன் துறைமுக அதிகாரியை ஒவ்வொருவராக சந்திக்க சொன்னார்.அவரிடமிருந்த ஆவணத்துடன் எங்களது கடவுசீட்டை ஒப்பிட்டு பார்த்ததும் .போய் வாருங்கள் பாதுகாப்பாக பணி செய்யுங்கள் என வாழ்த்தி அனுப்பிவைத்தார் .
 
     எங்களது ஓட்டுனர் தானியங்கி கதவுகளை தன்னிடமிருந்த அட்டையை பயன்படுத்தி திறந்து கப்பல் நின்றுகொண்டிருந்த ஜெட்டி அருகே காரை நிறுந்தினார்.அங்கிருந்து பயண பைகளும்,காலனிகளும் மாவு போலிருந்த பனித்துகள்களில் புதைய எண்ணூறு மீட்டர் தூரம் கடுங்குளிரில் நடந்து ,பதினைந்து மீட்டர் உயரமுள்ள படிகளில் ஏறி யூயோ கப்பலில் பாதம் பதித்தேன் .அடுத்த ஏழு மாதங்கள் இங்கு தான் வாழ்க்கை .



கடந்த பெப்ருவரி ஒன்றாம் தியதி வீட்டிலிருந்து புறப்பட்டு மிக நீண்ட பயணத்துக்குப்பின் யூயோ கப்பலுக்கு வந்த பதிவு இது .
Shahul hameed
25 feb 2019.

No comments:

Post a Comment