ஜிப்ரேல்டரில் இறங்கினேன்.
ஜிப்ரால்ட்டர் விமான நிலையம் |
பிரிட்ஷ் ஏர்வேஸ் விமானம் பத்தரை மணிநேர பயணத்திற்குபிறகு பத்திரமாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் இருமுறை நல்ல உணவு தந்தார்கள். ரைமுண்டோ உடன் இருந்ததால் நான்கரை மணிநேர காத்திருப்பு எளிதாக கடந்தது. லண்டன் விமான நிலையத்தில் பணிபுரிபவர்களும்,பயணிகளுமென இந்தியர்களால் நிரம்பியிருந்தது.
ஐந்து டெர்மினல்களை கொண்ட மிகப்பெரிய விமான நிலையம்.பேருந்துகளில் ஏற்றி சென்று காத்திருப்பு பகுதியில் விடுவார்கள். அடுத்த விமானம் புறப்படும் வாயில் மற்றும் டெர்மினலை திரையில் பார்த்துவிட்டு சரியான வாயிற் கதவுக்கு செல்ல ரயிலில் செல்லவும் நேரிடும்.இங்கே விமானத்தை தவறவிடுபவர்கள் அனேகம்பேர். ரைமுண்டோவிடம் சொன்னேன் “எவ்வளோ ஸ்மார்ட்டா இருந்தாலும் கொஞ்சம் கவனம் சிதறினால் அவ்ளோதான்.கொஞ்சம் பெப்பே பேன்னு வாறவன் இங்க தலகறங்கி நிப்பான்” என.
எங்களுடன் வர வேண்டிய மூன்றாம் நபர் பிரபுல் பாட்டிலை நாங்கள் லண்டன் வந்தபின்பும் காணவேயில்லை. இரு இந்தியர்களிடம் “ஸீ மேனா” எனக்கேட்டேன் “ஆம்” என்றனர். ஆனால் அவர்கள் பிரபுல் பாட்டில் இல்லை.
ஜிப்ரேல்டர் செல்லும் விமானத்தில் எனதருகில் வந்தமர்ந்தவரிடம் பெயர் என்ன என கேட்டபோது பிரபுல் பாட்டில் என்றார். மும்பை – லண்டன் விமானத்தில் எனக்கு அடுத்த வரிசையிலும்,ரைமுண்டோவிற்கு முன்னாலும் அமர்ந்திருந்தார்.
மூன்று மணிநேர பயணத்தில் ஜிப்றேல்டரில் இறங்கினோம். இரு பக்கமும் கடல் நடுவே விமான ஓடு தளம் மறுபுறம் ஸ்பெயின். விமானம் இறங்கும்போது மட்டும் இரும்பு கதவால் மூடப்படுகிறது ஓடுதளம்.பின்னர் இரும்பு கதவுகளை திறந்து பாதசாரிகள்,மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் ஓடுதளத்தில் வரையப்பட்ட இரு கோடுகளுக்குள் ஒரு புறமிருந்து,மறுபுறம் செல்ல இங்கே அனுமதிப்பது விந்தையாக இருந்தது.
நாங்கள் வந்திறங்கிய மதிய வேளையில் அந்த ஒரு விமானம் மட்டுமே வந்தது. ஜிப்ரேல்டர் விமான நிலையத்தில் மிக எளிதாக குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு வெளியே வந்தோம். வாயிலில் எங்கள் முகவர் பெயர்களை எழுதிய காகிதத்துடன் நின்றுகொண்டிருந்தார். வெளியில் டிரைவர் நிற்கிறார் உங்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்வார் என்றார்.
ஜிப்ரால்ட்டர் ராக் |
ஐந்தே நிமிடத்தில் ஹோட்டல் ஹாலிடே இன்னில் நுழைந்தோம்.காற்றில் லேசான குளிர் இருந்தது. வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு குளிருக்கான வெப்ப ஆடைகளை அணிந்துவிட்டு வெளியே வந்தேன். நல்ல பசி மதிய உணவு நேரம் மூன்று மணிக்கே முடிந்திருந்தது.ஆறரைக்கு டின்னர் தொடங்கும் என்றாள் பணிப்பெண்.
ஹோட்டலிலிருந்து வெளியே வந்ததும் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது.உள்ளே சென்று ஐந்து நிமிடம் அங்கிருந்த அமைதியை கவனித்துவிட்டு சாலையில் நடந்தேன்.நீண்ட தூரம் நடந்து துறைமுக பகுதியை அடைந்தேன்.
சாலையில் வாகனங்களும்,மனிதர்களும் குறைவாக இருந்தனர்.பழமையான கட்டிடங்களை அப்படியே பராமரிக்கிறார்கள்.நடந்து களைத்தபின் அறைக்கு திரும்பி வந்தேன்.எந்த ஊருக்கு போனாலும் அங்கே மீண்டுமொருமுறை வரும் வாய்ப்பு உறுதி கிடையாது அதனால் கிடைக்கும் நேரத்தில் முடிந்தவரை சுற்றிபார்க்க முயல்வேன்.
என்னுடன் வந்த ரைமுண்டோவும்,பாட்டிலும் இரவுணவுக்கு தயாராக இருந்தனர். கோழி குழம்பும் சாலடும்,ரொட்டியும் சோறும் சாப்பிட்டோம்.வேறொரு நிறுவனத்தை சார்ந்த சௌகான் அமர்ந்து மதுவருந்திகொண்டிருந்தார். இப்போதைக்கு தகவல் ஏதும் இல்லை நாளை காலை உங்கள் முகவர் கப்பலுக்கு செல்லும் நேரத்தை சொல்வதாக வரவேற்ப்பரையில் இருந்த பெண் சொன்னாள்.
இரு இரவுகள் சரியான தூக்கமில்லதாதல் அறைக்கு வந்து தொழுதுவிட்டு படுத்துவிட்டேன்.
02 பிப்ரவரி 24
நாஞ்சில் ஹமீது.
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment