Monday, 27 March 2023

புகை(யை) விடுதல்

               


               “புள்ளா அக்கா இவனுக்க வாயில இருந்து பொக போனத கண்டேன்” என ரெவி மாமா கன்னத்தில் அறைந்து இழுத்துக்கொண்டு என் உம்மாவிடம் கூட்டிசென்றார்.


  “இவனும் உவைசும் கிட்ட,கிட்ட இருந்தானுவோ,யாருக்க வாயில இருந்து பொக போச்சின்னு தெரியல”என உடனே மாத்தி சொன்னார் ரெவி மாமா.


  “முளச்சி மூணு இல உடல அதுக்குள்ளே வீடி வலிக்கிதியா” என உம்மாவும் வீட்டுக்கு முன்னால் இருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு கம்பை ஒடித்து வலிக்கும்படி அடித்தாள்.


   அன்று என்னைவிட வயதில் மூத்த மாமா முறை உள்ள உவைஸ் அஞ்சு பூ பீடியை இழுத்துவிட்டு கடைசியாக எனக்கும் தந்தார் ஊதி பார் என.முறுக்கு பெத்தா எனப்படும் எனது வாப்பும்மா பீடி புகைப்பார் “லே மோனே கொஞ்சம் பத்தி தாலே”என பீடியை கையில் தரும்போதெல்லாம் வீட்டில் விறகடுப்பில் எரியும் தீயில் பீடியை பற்றவைத்துவிட்டு ஒரு இழுப்பு,இழுத்தபின்தான் கொடுப்பேன். உம்மாவோ,வாப்பவோ பார்த்துவிட்டால் “ஒழுங்கா பத்தல” என சொல்லி சமாளிப்பேன்.வீட்டுக்கு அருகில் மணல் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில்  புல்டோசர் மூலம் மணல் அள்ளுகையில் மணல் குன்றுகளின் மேலிருந்த பனைமரங்களின் ஈராமான வேர்களை பிய்த்து பீடியாக ஊதியிருக்கிறோம்.தேங்காய் சவுரியை வெள்ளை தாளில் மடித்து சிகரெட்டாக.


   பின்னர் எட்டாம் வகுப்பு படிக்கையில் தினமும் மாலை ஒரு கோல்ட் பிளேக் சிகரெட்டை இரண்டு பேராக ஊதுவோம்.பத்தாம் வகுப்பு  அதற்கு பின் மணவை விஜயா,இரணியல்  ஹவ்வா தியேட்டரில் படம் பார்க்கும்போது காஜா பீடி புகைப்பது ஒரு சடங்கு.


 


   அப்போதே பாபுஜி பள்ளியின் அருகில் இருந்த நூலகத்தில் பாக்யா வார இதழில் டாக்டர் கிரிஜா மாதவன் எழுதும் மருத்துவ குறிப்புகளை வாசிப்பேன். புகைப்பதால்,மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை  தெரிந்துகொண்டேன்.


 தினமும் ஒரு ஒரு சிகரெட் புகைப்பது வாடிக்கையாகி விட்டது வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்கு வருபவர்கள் கொண்டு வரும் ரோத்மேன்ஸ்,555 சிகெரெட்கள் அவர்களின் மருமகன்கள்,மச்சான்கள்,குட்டியாப்பாக்கள் மூலம் மாலை பள்ளி மைதானத்திலோ,கடற்கரையிலோ பாதியோ அபூர்வமாக முழுவதுமாகவோ கிடைக்கும்.


    நான் சிகரெட்டுக்கு அடிமை இல்லை என்னால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும். காலை,மாலை டீ குடித்தவுடன் அல்லது சாப்பிட்டவுடன் நான் புகைப்பதில்லை என பெருமை பேசி அலைந்தேன்.


  பத்தாம் வகுப்புக்குபின் புகைப்பதை நிறுத்தினேன்.இரண்டு மாதம் தாக்குபிடித்தது.பின்னர்  ஒருமுறை ஓராண்டு வரை புகைப்பதை நிறுத்தியிருந்தேன்.


  நண்பர்களுடன் சேரும்போது “மக்கா ஒரு பப் இழு”என்றால் மீண்டும் தொடரும். பின்னர் திருச்சியில் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சியின் போதும் மும்பை சென்றபோதும் புகைப்பது தொடர்ந்தது.


  ரமலான் மாதங்களில் நோன்பு திறந்து உணவுண்டதும், அந்தோனியார் கோயில் அருகிலுள்ள மணலில் அமர்ந்து ஒரு வில்ல்ஸ் பில்டர் புகைத்தால் தான் உடலுக்கு தெம்பே வரும்.


 ரமலானில் ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து சகர் உணவு உண்டபின் புகைக்க சிகரெட் கையில் இல்லை.அதிகாலை நான்கு நாற்பது  மணிக்கு உண்ணவும்,பருகவும் கடைசி நேரம்.சிகரெட் இல்லாமல் என்னால் முடியவேயில்லை.எனது கிராமத்தில் டீக்கடைகள் திறப்பது ஐந்து மணிக்குமேல் தான்.ரத்தமும்,உடல் செல்களும்,மூளையும் சிகரெட் வேண்டுமென்று கேட்டது.


   அந்த அவஸ்தையை தாங்க முடியவில்லை.பள்ளிவாசல் அருகிலிருந்த சுக்குகாப்பி பெத்தாவின் வீட்டுக்கு ஓடினேன்.கடையும் வீடும் ஒன்றாக இருக்கும். சகர் உண்டுவிட்டு படுத்திருந்தவர்களை எழுப்பி ஒரு வில்ல்ஸ் பில்டர் வாங்கி ஊதினேன்.ரத்தமும் மூளையும்,உடல் செல்களும் சாந்தமாயின.அப்போது உறுதியானது நான் சிகரெட்டுக்கு அடிமையாகிவிட்டேன் என.


 பள்ளி நாள்களில் நான் படித்து பிறருக்கு வகுப்பெடுத்த கட்டுரைகள் நினைவுக்கு வந்தது. சிகரெட்டில் நிகோடின்,டோபோக்கோ மட்டுமல்ல ஆயிரத்தி ஐநூறு பாய்சன்கள் உள்ளது. தேவையே இல்லாத போதையினால் மூளை சுறுசுறுப்படைந்து பழகிவிட்டதால் தான் மூளை சோர்வடையும்போது,நிகோடின்,டோபக்காவை கேட்கிறது.


 தினமும் பத்து சிகரெட் புகைப்பவர் ஓராண்டில் வீட்டிற்கு தேவையான சலவை இயந்திரம்,தொலைக்காட்சி பெட்டி இன்னபிற பொருட்கள் வாங்கும் தொகையை இழக்கின்றனர்.


   புகைப்பதை விட வேண்டுமென புத்தாண்டு தினத்தில் உறுதிமொழி எடுப்பபவர்கள் பலருக்கு  ரத்தமும்,உடல் செல்களும் மீண்டும் நிக்கோடின்,டோபோக்கோ மற்றும் இன்னபிற பாய்சன்களை கேட்கும்போது முடியாமல் மீண்டும் புகைப்பார்கள்.புகைப்பவரின் தலைமுடி மற்றும் உடலில் புகை நாற்றம் எப்போதும் இருக்கும்.நாவில் சுவையை உணரமுடியாமல் போகும்.


  புகைப்பதை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தபின் தான் ரத்ததிலிருந்தும்,உடலிலிருந்தும் முழுமையாக அதன் பாய்சன்ஸ்களும்,நாற்றமும் வெளியேறும்.


 புகைப்பதை நிறுத்தியபின் அதற்கு பதிலாக இளநீர் அருந்த வேண்டும்,காய்கறிகள் நிறைய சாப்பிடவேண்டும்,தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என மருத்துவ குறிப்புகள் சொல்கிறது. புகைக்கும் நண்பர்களின் அருகில் செல்லாமல் இருப்பதுதான் மிக முக்கியம்.


 2000 வது ஆண்டில் மும்பைக்கு ரயிலில் செல்லும்போது சக பயணியான அசோக் நான் புகைப்பதை பார்த்துவிட்டு. “நான் இப்பதான் தம் அடிக்கத நிறுத்தினேன்,நீங்க வலிக்கத பாத்து ரெம்ப டெம்ட் ஆகுது, நான் சாயா குடிகத்துல,ஒரு மடக்கு சாயாவும்,ஒரு பப் இழுப்பேன்”என்றார்.


 மும்பை சென்றபின் கட்டிங் சாயா சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைப்பேன்.மாட்டுங்க அறையில் இருக்கும்போது சீட்டு விளையாடுவோம் ஒரு சிகரெட்டை பற்றவைத்தால் ஒரு ரவுண்டு சுற்றி வரும்.அறை நண்பர்கள் சிலருக்கு காலை கழிப்பறையில் அமர்ந்தால் சிகரெட் வேண்டும். “டாய்லட்ல உட்காந்து தம் அடிக்க கூடாது” என ஒரு சண்டையே நடக்கும்.


  காலையில் நுரையீரல் தூசிகளை வெளியேற்ற முயற்சிக்கும் அப்போது புகைப்பதால் தான் இருமல் வருகிறது. டாய்லெட்டில் அமர்ந்து புகைப்பதால் மலம் மேலும் இறுகி மலம் வெளியேறுவதை இன்னும் சிரமமாக்குகிறீர்கள் என விவாதம் நடந்த நடந்த நாட்கள் உண்டு.


எனக்கு  மனதில் எண்ணமிருந்தது திருமணதிற்கு முன்பாக புகைப்பதை விட்டு விடவேண்டும் என. 2003 ஆம் ஆண்டு கடுமையான புட் பாய்சன் ஆகி முடியாமல் மும்பை  அறையில் படுத்திருந்தேன்.நாள் முழுவதும் என்னை காணாததால் இரவு ஏழு மணிக்கு மேல் நண்பர்கள் ஷாஜியும்,சிங்கும் வந்தனர்.


  “லே தயாளி எங்கல போன” லேசான காய்ச்சலுடன் எழுந்திருக்கவே முடியாமல் படுத்திருந்த என்னை மருத்தவரிடம் அழைத்து சென்றனர்.


மருத்துவர் முகுந்தன் என்னை பரிசோதித்து விட்டு “நேற்று என்ன சாப்பிட்டாய்”எனக்கேட்டார்.


“சிக்கன் ப்ரை”என்றேன்.


 “அதான் புட் பாய்சன் ஆயிருக்கு” என சொல்லிவிட்டு.மருந்துகள் தந்தார்  ஓய்வெடுத்து கொள்ளுங்கள் தயிர் ஊற்றி வெள்ளை சாதம் மட்டும் பசித்தால் கொஞ்சம் சாப்பிடுங்கள். சிக்கன் சாப்பிட கூடாது” என கண்டிப்புடன் சொன்னார்.


  மறுநாள் காலை அறையின் கீழே இருந்த ராணி ஸ்டோரின் அருகில் தள்ளுவண்டி செல்வி அக்காவிடம் ஆறு ரூபாய்க்கு இரண்டு ஆப்பமும்,சாம்பாரும் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஷாஜியின் அறைக்கு சென்று படுத்துக்கொண்டேன்.


 விடுமுறை நாளான அன்று ஆறுபேர் வட்டமாக அமர்ந்து ரம்மி விளையாடுகையில் ஒரு சிகெரெட் அந்த வட்டத்தில் சுற்றி,சுற்றி வந்தது.அந்த புகை என்னையும் இழுத்தது.கட்டுபடுத்தி கொண்டேன்.மூன்றாவது நாளும் புகைக்கவில்லை.2003 ஆண்டு ஏப்ரல் மாதமே குவைத் சென்று ஈராக் சென்றேன்.உடன் வந்த பலரும் புகைப்பவர்கள்.


 அங்கிருந்து ஈராக் சென்றபின் உயரதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆண்,பெண் பேதமில்லாமல் புகைகின்றனர்.பையிலிருந்து சிகரெட்டை வெளியே எடுத்ததும் நம்மிடம் நீட்டுவார்கள் “ஆர் யூ ஸ்மோக்”என.  திக்ரித் முகாமில் அழகிய பெண் ராணுவ வீராங்கனை ஒருத்தியுடன் உரையாடலின் இடையில் தங்க நிற பென்சன் ஹெட்ஜஸ் பாக்கெட்டை எடுத்து  சிகரெட்டை என்னிடம்  நீட்டினாள்.அவளிடம் நான் புகைப்பதில்லை என சொல்ல வெட்கமாயிருந்தது. நீட்டிய சிகரெட்டை வாயில் வைத்ததும் அவளே  லைட்டரால் பற்றவைத்தாள்.


அப்போது புகைப்பதை நிறுத்தி ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.புகையை நெஞ்சு கூட்டுக்குள் உள்ளிளுக்காமல் வாயில் எடுத்து  இருமுறை முறை ஊதினேன். என்னால் இயலவில்லை மிக விரும்பிய புகை இப்போது பிடிக்கவில்லை. அவளிடம் விடை பெற்று என்னுடன் பணிபுரிந்த கல்கத்தாவின் டோப்பசிடம் சிகரெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.  


பஸ்ஸிலோ,ரயிலிலோ சுற்றுபுறத்தில் எங்கோ யாரவது சிகரெட் பிடித்தால் உடனே அந்த புகை என் நாசியை எட்டி விடுகிறது.சிகரெட் புகை நெடி இப்போது ஒரு ஒவ்வாமையை தருகிறது.புகைப்பதை எப்படி நிறுத்தினாய் என கேட்பவர்களுக்கு ஒரே டிப்ஸ் தான்.கையில் இருக்கும் சிகரெட் பாக்கெட்டை என்னிடம் தந்துவிடு இப்போதே நீ நிறுத்தி விட்டாய் என்பேன். ஹி,ஹி நான் கொஞ்சம் கொஞ்சமாய் நிறுத்துவேன் என சொல்பவர்களால் ஆயுசுக்கும் முடியாது.


சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்ற விருப்பமும்,வைராக்கியமும் தான் தேவை. நடிகர் மோகன்லால் சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார் புகைப்பதை இன்று முதல் விட்டு விட்டேன் என.அப்படி பிறர் மத்தியில் அறிவிப்பதும் நல்ல பலனை தரும்.


இம்முறை நான் கொஞ்சம் வைராக்கியத்துடன் இருந்தேன் 2000 வது ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் தேதி அன்று முதல் நாட்களை எண்ண தொடங்கினேன். இன்று வரை 7308 நாட்கள் ஆகி விட்டது.


கப்பல் காரன்.


23-03-2023

Saturday, 25 March 2023

ரமலானில் ஒரு கெத்தெல் சாகிப்

 

                    .

    வடசேரி பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு வெளியே வரும்போது .

                      ஷமா ரெஸ்டாரன்ட் .

இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2023) ரமலானில் ஸகர் உணவு  (அதிகாலை 3.30 முதல் 4.30 வரை) வடசேரி எம் எஸ் ரோட்டில் அமைந்துள்ள ஷமா ரெஸ்டாரன்ட்டில் வழங்கப்படும்.

                      பார்சல் கிடையாது

கட்டணம் செலுத்தி உணவு உட்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு.விருப்ப கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.


    கீழ்க்கண்ட எண்ணில் முன்பதிவு செய்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம் என இரு மொபைல் எண்களுடன்   ஒரு நோட்டீஸ் தந்தார்கள். கடந்த  வருடமும்  இதுபோல் ஷமா ரெஸ்டாரன்ட் ஸகர் உணவு வழங்கும் செய்தி அறிந்து போய் பார்க்க வேண்டும் என எண்ணினேன்.

"அது இல்லாதவர்களுக்கான உணவு  நீங்க அதை சாப்பிடக்கூடாது " என சுனிதா தடுத்து விட்டாள்

இன்று அதிகாலை அங்கு சென்று உணவு உண்ண வேண்டும் என நினைத்தேன்.வழக்கம்போல் சுனிதா "நீங்க போவாண்டாம்" என்றாள்.  ஸகர் உணவுக்கு வருபவர்கள்  போனில் முன்பதிவு  செய்து உதவுங்கள் என குறிப்பிட்டிருந்ததால். அந்த எண்ணில் காலையில் அழைத்தேன். அழைப்பை ஏற்கவில்லை இரண்டாவது எண்ணில் அழைத்தபோது தற்போது உபயோகத்தில் இல்லை என வந்தது.பலமுறை விடாமல்  முயற்சித்த போது மாலையில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என குரல் கேட்டது.


"ஸகருக்கு ரெண்டு பேரு சாப்பிட வாறோம்" என்றேன்.

"வாங்கோ" என்றார்.

" கட எங்க இருக்கு"

" வடசேரி  திருநவேலி  ரோட்டுல"என பதில் கிடைத்தது.

இளைய மகன் சல்மானிடம் சொன்னேன்.

"ஷல்லு காலையிலே பெயிருவோம்" என.

                                    ஷமா ஷாகுல் ஹமீது 

அதிகாலை 4 மணிக்கு முன்பே ஷல்மானுடன் சென்று விட்டேன் ஷமா ரெஸ்டாரன்ட் நிறைந்து இருந்தது. முதலாளி ஷாகுல் ஹமீது கல்லாவில் அமர்ந்திருந்தார். ஐந்து நிமிட காத்திருப்புக்குப்பின் எங்களுக்கு இடம் கிடைத்தது. ஷமா  ஷாகுல் ஹமீதின் மகன்களும்,பேரன்களும் பம்பரம் போல் உணவு பரிமாறி கொண்டிருந்தனர்.

வெள்ளை சாதமும்,மீன் குழம்பும், பொரித்த மீனும்,ஒரு மோரிஸ்

பழமும் சாபிட்டோம்.

ரசமும், தயிரும் கூட வைத்திருந்தனர். தேவைபட்டோருக்கு சாயாவும் வழங்கினர்.

நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கல்லாவில் இருந்த ஷாகுல் ஹமீது  என்னை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்து கையசைத்தார்.

 பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் ரமலானில் ஸகர் உணவு வழங்குவதாக அறிந்தேன்.இவ்வாண்டு முதல் கட்டணம் செலுத்தி உணவு உண்ண விரும்புபவர்களுக்கு  விருப்ப கட்டணம் செலுத்தும் வகையில் ஒரு பெட்டியை கல்லாவில் வைத்திருந்தார்.

ஷல் மானிடம் 100₹ யை கொடுத்து பெட்டியில் போட சொன்னேன்.

ஷமா முதலாளி எனது பீர் முகம்மது மாமாவின் நண்பர் 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழைந்த்சுகளுடன் செருப்பு வாங்க வருவார்.

கடந்த 7 ஆண்டுகளாக வடசேரி பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்வதால் எப்போதும் அவரை பார்ப்பேன்.

என்னிடம் "டெய்லி வாங்கோ"என அழைத்தார்.

"பாக்க தான் வந்தேன், எப்டி  நடக்குன்னு"என சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

இளைஞர் இருவர் விருப்ப கட்டண பெட்டியில் பணம் போடுவதை பார்த்தேன்.

ஐந்தே காலுக்கு வடசேரி பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற போது ஷமா ரெஸ்டாரன்ட் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பள்ளிவாசலில் நிறைந்து இருந்தனர்.ஷமா ஷாகுல் ஹமீது அவர்களுக்கு ஐந்து மகன்கன் அனைவருக்கும் திருமணமாகி  குழைந்தைகள் இருக்கிறது.

 


 

வெளியூர்களிலிருந்து தங்கி வேலை செய்பவர்கள்,பள்ளிவாசல் இமாம்கள்,மோதினார்கள்.கடைகளில் வேலைபார்க்கும் பணியாளர்கள் மற்றும் சூழல் காரணாமாக சமைக்க இயலாதவர்கள் நிறையபேர் நோன்பு வைக்க இங்கே இலவசமாக உணவு வழங்கபடுகிறது.இன்முகத்தோடு குடும்ப உறுப்பினர்களே பரிமாறுகிறார்கள்.

  இந்த சேவையை வேண்டியவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.ரமலானில் செய்யப்படும் நன்மைகளுக்கு கூலியை அல்லாஹ் பல மடங்காக திருப்பி தருவான்.நாகர்கோவில் கெத்தெல் சாகிப்பான ஷமா ஷாகுல் ஹமீது மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு இம்மையிலும்,மறுமையிலும் அல்லாஹ் நன்மையே செய்வானாக.

ஆமீன்.

  ஷாகுல் ஹமீது,

25-march-2023.