கப்பல் காரன் டைரி
முடி முறித்தல்
இரு வாரங்களுக்கு முன்
என்னுடன் பணிபுரியும் எர்ணாகுளம் கருணாகர பிள்ளை கோபகுமார் “ஷாஹுலே முடி
முறிக்காம் அறியாமோ” என கேட்டார். “ஆம் முறிக்காம் ஞாறாட்ச உச்சக்கி” என சொல்லி
வைத்தேன்.உணவு கூடத்தில் என் எதிரில் அமர்ந்திருந்த குஜாரத்தின் சோலங்கி திலிப்குமார் நதோட் என்னிடம்
, “உனக்கு முடி நிறைய வளர்ந்து விட்டது வெட்ட வேண்டும் என்றார்” அவரும் என்னிடம்
ஞாயிறு மதியம் சரியாக பனிரெண்டுமணி என்றார் .
பண்டு ஒசா வீட்டுக்கு
வந்து குழைந்தைகளுக்கும்,சின்ன புள்ளையளுக்கும் மொட்டையடிச்சி,முடி வெட்டிட்டு
போவாரு.நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
ஸ்டப் கட்டிங் புகழ்பெற்றிருந்தது .அப்போது வந்த ஒரு திரைப்படத்தின்
நாயகனின் சிகை அலங்காரம் அது .
மணாவாளக்குறிச்சியில் நான்கு சலூன்கள் இருந்தது.அதில் மோகன் சலூன்
புகழ் பெற்றது .கடந்த விடுமுறையில் இளைய மகன் ஷல்மானுக்கு முடி வெட்ட மோகன்
சலூனுக்கு போயிருந்தேன் .அவர் நண்பரும் கூட எனக்கு .அவர் ஒரே தொழிலில் ஐம்பது
ஆண்டுகளை நிறைவுசெய்ய போகிறார் இந்த
ஆண்டு.
கப்பல் பணியாளர்கள்
அனைவரும் கப்பலுக்கு செல்லும் முன் முடியை நல்லா ஒட்ட வெட்டிட்டு போனால் அடுத்த
இரண்டு ,மூன்று மாதத்திற்கு முடிபற்றிய கவலையில்லை .கப்பலில் ஒருவர் பிறருக்கு
முடி வெட்டி கொள்ளவேண்டியதுதான் .பிலிப்பினோ பணியாளர்கள் அனைவருமே நன்றாக முடி
வெட்டதெரிந்தவர்கள்.
இரண்டாயிரத்தி ஐந்தாம்
ஆண்டு எனது முதல் கப்பல் ஈராக்கின் உம்காசர் துறைமுகம் சென்றபோது.முடி வெட்டுபவர்
வந்திருந்தார்,பாகிஸ்தானை சேர்ந்த முதன்மை பொறியாளர் முடி வெட்டியபின் கூலியாக ஒரு
காலி எண்ணெய் பீப்பாயை கொடுத்தார்.அதை பெற்றுகொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார்
அவர்.அதை ஏழு அமெரிக்க டாலருக்கு விற்க
முடியும் அது அவருக்கு பெரும் தொகை .
இரண்டாயிரத்தி பத்தாம் ஆண்டு
நான் பணிபுரிந்த கப்பலில் எனது இரண்டாம் இஞ்சினியர் மங்களூர் முகம்மது சமீர்.
“ஷாகுல் முடிவெட்ட வேண்டும்” என்றார். “எனக்கு தெரியாது” என்றேன். “கொஞ்சம் சைடுல
மட்டும் வெட்டு” என அழைத்து சென்றார் .காதுகளுக்கு மேற்பகுதியிலும்,பின் மண்டையிலும்தான்
அவருக்கு முடி இருந்தது.நடுமண்டை கால்பந்து மைதானம் .
அவரது அறையில் மீசை வெட்டும்
கத்திரியால் முடி வெட்டிக்கொண்டிருக்கும் போது அவர் முன்பு அவரது முதன்மை
இஞ்சினியருக்கு முடி வெட்டியதை சொன்னார். “ நான் சீப் இஞ்சினியருக்கு முடி
வெட்டத்துல அவருக்க காதை வெட்டிட்டேன்
காதுல இருந்து ரத்தம் சொட்ட ,சொட்ட அவர் காதுல இயற் மப் போட்டுட்டு வெட்டுன்னு
சொன்னாரு”என்றார் .அப்போது எனது கைகள் உதற தொடங்கியது . “உங்களது காதை கைகளால்
பிடித்துக்கொள்ளுங்கள்” என்றேன் .
அதன் பின்
இருவருடங்களுக்குப்பின் என்னுடன் பணிபுரிந்த ஆந்திராவின் சிற்க்காகுளத்தை சேர்ந்த
முகி குருமூர்த்தி முடி வெட்டி கேட்டார். “தெரியாது” என்றேன். “நான் சொல்லி தருகிறேன்
அதுபோல் வெட்டு,இது ஒரு கலை,நீ காஸ் கட்டிங் செய்பவன் உன்னால் முடியும்.சீப்பை
கையில் பிடித்து முடியை மேல் வாக்காக கோதியபின் சீப்பின் மேலிருக்கும் முடியை
மட்டும் வெட்டு” என்றார்.அதன்பின் அதே கப்பலில் மூன்று வழுக்கு மண்டைக்கு
வெட்டியபின் என் கைதிருந்தியது. ஆனால் முடி வெட்ட நல்ல கத்திரிகோலும்,சீப்பும்
அவசியம் என்பதை தெரிந்து கொண்டேன்.சுனிதாவிடம் “முடி வெட்ட படிச்சாச்சு”என்றேன்.
“அப்ப ஊருக்கு வந்தாலும் வேற தொழில் கைவசம் இருக்குன்னு சொல்லுங்கோ” என சொல்லி
சிரித்தாள்..
இருவாரங்களுக்கு முன் நான்
கோபகுமாருக்கு முடி முறித்தேன். சோலங்கி எனக்கு நல்ல ஒட்ட வெட்டிவிட்டார் அடுத்த
இரு மாதங்களுக்கு பின் மீண்டும் வெட்டி தருகிறேன் என்றார்.என்னை நான் கண்ணாடியில்
பார்த்தபோது மந்த புத்தி காரர்களை போல இருந்தது. “கப்பல்ல யாரு பாக்க போறா சப்
சலேகா”என்றார் சோலங்கி பாய் .அவர் ஊருக்கு செல்லும் முன் பெரும்பாலானவர்களுக்கு
முடி வெட்டி தருவதாக சொன்னார் . ஒரு
போட்டோ எடுத்து சுனிதாவிற்கு அனுப்பினேன் “முடி முறிச்சு” என. “முறிச்சதை எங்கே
நட்டு வைத்தீர்கள்” என பதில் கேள்வி வந்தது .
கடந்த சனிக்கிழமை என்னுடன் பணிபுரியும் இனையம் தம்பி ஹெல்டன் “முடி
வெட்டி தா” என கேட்டான் .அடுத்த வாரம் ஊருக்கு செல்லவிருகிறார்.நீண்ட விமான
பயணத்தில் ஸ்டைலாக போக வேண்டுமென நினைக்கறார் போல.சனியும்,ஞாயிறு மதியமும் எனக்கு
பணி.ஞாயிறு பின் மாலையில் அவருக்கும் முடிவேட்டினேன் .அவருக்கு கொஞ்சம் தான்
முடியிருந்தது ஆனாலும் அந்த மண்டையில் முடி வெட்டுவது கொஞ்சம் கடினம் .
ஒருமுறை இலங்கையின் நான்காம் இஞ்சினியர் வாரன்கே என்பவருக்கு முடி
வெட்டியது மட்டும் நினைவிலிருந்து அகலவேயில்லை .ஆறு மாதங்களுக்கு மேல் முடிவெட்டாமல் கரடியின் தோற்றத்தில்
அலைந்துகொண்டிருந்தவரை காப்டன் கடிந்து கொண்டதால்.முடி வெட்டுமாறு வேண்டினார்
.தையல் கலைஞர்கள் உபயோகிக்கும் கத்தரி தான் நாங்கள் கப்பலில் பாக்கிங்ஸ்(JOINTS) வெட்ட
பயன்படுத்துவோம் .அந்த பெரிய கத்தரியால் செடியின் இலைகளை வெட்டுவது போல் வெட்டினேன்.வெட்டி
எறிந்த முடியை எடை பார்த்திருந்தால் ஒரு கிலோவுக்கு மேல் வந்திருக்குமோ எனும்
பிரமிப்பு .அவன் சாப்பிட்டது எல்லாம் அந்த முடிக்கே போய்ட்டோ என்னமோ .
ஆப்ரிக்காவில்
குடும்பத்துடன் வாழும் நண்பர் முடி வெட்டியிருப்பதை பார்த்து எங்கே வெட்டினாய்
எனக்கும் வெட்டவேண்டும் என சக நண்பர் கேட்டபோது .”நான் வெட்டுன ஆளுட்ட நீ வெட்ட
முடியாது ,எனக்க பொண்டாட்டியாக்கும் எனக்கு முடி வெட்டினது”என முன்பு நண்பர்
ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன்.வெளிநாட்டில் வாழும் பெண்களும் நன்றாக முடி வெட்டுவதில்
தேர்ந்துவிட்டார்கள் போல .
வெளிநாடுகளில்
பல பணியாளர் முகாம்களிலும் இப்படிதானிருக்கும் என நினைக்கிறேன் .முடி வெட்டுவது
வெளிநாடுகளில் பெரும் பொருட்செலவு வேறு .நான் மெக்ஸிகோவில் uni sex hair dressing எனும்
பெயர் பலகையை கண்டு உள் நுழைந்தேன். “கட்டணம் எவ்வளவு என” கேட்டேன். “சிங்கோ டாலர்”
என்றாள் அங்கிருந்த பெண்மணி .இருக்கையை காட்டி அமர சொல்லிவிட்டு உள் அறைக்கு
சென்றுவிட்டாள்.வேறு ஆள் வருவார்கள் என நினைத்து அமர்ந்திருந்தேன் .அந்த பெண்மணியே
கையில் கத்த்ரிகோல்,சீப்புடன் வந்து சில
சிகையலங்கார படங்களை காட்டி எப்படி வெட்ட வேண்டும் என கேட்டுவிட்டு அவளே முடி வெட்டத்தொடங்கினாள்.
கடந்த
பத்து வருடங்களாக நாகர்கோயில்,கல்லூரி சாலையில், விஜயதா மண்டபத்தின் அருகில்
இருக்கும் அன்பு சலூன் சரவணனிடம் தான் செல்கிறேன்.கடந்த பிப்ரவரியில் முடி வெட்ட
கட்டணம் எண்பது ரூபாய் .எனது மகன் ஷாலிமுக்கு மாதம்தோறும் முடி வெட்டி
கொள்ளவேண்டும்.அவனுக்கு சரவணன் கடைக்கு செல்ல பிடிக்காது .இப்போது நகரில் குளுகுளு
வசதி செய்யப்பட்ட பல சிகையலங்கார கடைகள் வந்து விட்டது .எந்த புதிய முடி வெட்டு
கடை திறந்தாலும் அங்கு ஒரு முறை அவனுக்கு போகவேண்டும் .அவனுக்கு முடி வெட்ட
கட்டணம் நூற்றியிருபது ரூபாய் க்கு மேல் .
முடி
வெட்டும் கடைகளில் காத்திருக்கும் நேரம் மிக சுவராசியம் மிகுந்தது .கையில்
தினதந்தியுடன் அரசியல்,பொருளாதார,விஞ்ஞான நிபுணர்களின் விவாதம் நடக்குமிடம்
அது.அடுத்த முறை நண்பர்கள் சலூன் கடைக்கு சென்றால் தேர்தல் முடிவுகளையும்,அடுத்த
பிரதமர் யார் என்பதையும் அறியமுடியும் .ஒட்டு எண்ணும் மே இருபத்திமூன்றாம் தேதி வரைகாத்திருக்க தேவையில்லை .
ஷாகுல் ஹமீது ,
30.april 2019
கடந்த ஆண்டு ஏப்ரிலில் எழுதியது.
இந்த கொரோனா காலத்தில் இளையவன் சல்மானுக்கு ஒருமுறை முடி வெட்டி கொடுத்தேன் .இன்று காலை மூத்தவன் ஸாலிம் மொட்டை அடித்து தர வேண்டினான் .
அண்ணா, அருமையாக இருந்தது.அமைதியான தனித்துவ நடை.ஆங்காங்கே பகடியும் நகைச்சுவையும் என சுவாரஸ்யமாக இருந்தது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநகைச்சுவை உணர்வு கலந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅருமை
ReplyDelete