Saturday, 5 November 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 20


                      சில விபத்துகள்
   முகாமில் சிலநேரங்களில் அதிகமான கண்டெய்னர் லாரிகள் வந்துவிடும் .சில கண்டெய்னர்களில் கோக் அல்லது பெப்ஸி மட்டுமே இருக்கும் .அந்த லாரிகளை உடனே காலி செய்து மறுநாளே அனுப்பவேண்டும் .அதிக எண்ணிக்கையில் அவற்றை இறக்கும்போது எங்களிடம் அவற்றை வைப்பதற்கு இடம் இல்லாமல் தற்காலிகமாக உணவு கூடத்தின் அருகில் சில நாட்கள் வைத்திருப்போம் .

    அமெரிக்கர்கள் பெரும்பாலும் கோக் ,பெப்ஸி அதிகம் குடிப்பவர்கள் .வெளியே இருப்பதால் ராணுவ வீரர்கள் சிலர் அவர்கள் குடியிருப்புக்கு செல்லும்போது யாரும் பார்க்காதபோது கையில் 24 டின்கள் அடங்கிய ஒரு கேசை சுலபமாக கையில் எடுத்து செல்வர் .

  ஒருநாள் முருகன் என்னிடம் சொன்னான் .பாய் இவிங்க ரொம்ப நல்லவங்க னு சொன்ன .அங்க பாரு அவனுக்கு ஒன்னு ,அவன் கேர்ள் பிரண்டுக்கு (அப்போது ஒரு ராணுவ வீரன் இரண்டு கேஸ் கோக் ஐ எடுத்து கொண்டிருந்தான் இருட்டில் )ஒன்னு .இரண்டும் போற போக்க பாரு கோக் குடுத்தே அவள வளசிருப்பான் போல .

    அதை தடுக்கு நாங்கள் பொருட்கள் வைக்கும் எட்டடி உயரமுள்ள கண்டெய்னர்களின் மேல் அவற்றை அடுக்கி வைத்தோம் யாரும் எளிதில் எடுக்க முடியாதபடி .

   ஒரு நாள் அவரசமாக தேவைப்பட்டபோது பீட்டரிடம் போர்க் லிப்ட் பிளேடில் ஏறிகொள் நான் தூக்குகிறேன் கண்டெய்னர் மேலிருந்து சில கோக் கேஸ்களை எடுக்க சொன்னேன் .அதெல்லாம் பாதுகாப்பற்றது என்னால் முடியாது என்றான் .

    நான் ஏறிகொண்டேன் போர்க்லிப்ட் ன் பிளேடில் மேலே  தூக்கியதும் கண்டெய்னரின் மேலிருந்து தேவையானதை எடுத்து போர்க்லிப்ட் ல்  அடுக்கிவிட்டு கிழே இறங்கும்போது கால்வைக்க கிடைத்த இடத்தில் நின்று கொண்டேன் .
   
     கீழிறங்கும் போது எனது இடது கால்,மேல்-கீழ் இயங்கும் இரு இரும்பு  பட்டைகளுக்கிடையில் மாட்டி கொண்டது .சேப்டி சூ (முன்பக்க இரும்பு தகடு பொருத்திய )அணிந்திருந்ததால் .வேகாமாக காலை இழுத்து வெளியே எடுத்துவிட்டேன் .பெரிய காயம் இல்லை .இருந்தாலும் கடுமையான வலி. உடனிருந்தவர்கள் உடன் அடுமனையின் குளிர் பெட்டிகளிருந்து ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுத்தனர் .

     எங்கள் முகாமில் உள்ள முதலுதவி மையத்துக்கு  சென்றபோது காப்டன் வெஸ்ட் என்னும் நானறிந்த வயதான பெண்மணி .ஹாய் ஷாகுல் எக்ஸ் ரே எடுக்கவேண்டும் இங்கு அந்த வசதி இல்லை ,ஈகிள் நெஸ்ட் என்னும் அருகில்(பதினாறு கிலோமீட்டர் ) உள்ள வேறு முகாமுக்கு செல்ல வேண்டும் என்றார் .
   
     நாளை காண்வாய் இல்லை .நாளை மறுநாள் காலை 9 மணிக்கு உன்னை அழைத்து செல்வார்கள் .வலி மாத்திரை இது தேவைபட்டால் எடுத்துகொள் என சில மாத்திரைகளை தந்து அனுப்பிவைத்தார் .

   இரவானதும்  நல்ல வலியில் தூக்கம் இல்லாமலும்,சரியாக நடக்கவும்  முடியவில்லை.தூங்காத இரவுகள் எப்போதும் நீண்டவையாகி விடுகின்றன.மறுநாள் பணிக்கும் செல்லவில்லை .அதற்கடுத்தநாள் காலையில் முதலுதவி மையம் அழைத்து சென்றனர் .
   
  காப்டன் வெஸ்ட் என்னிடம் ஒருவரை காட்டி இவர் உன்னுடன் இருப்பார் உனக்கு வேண்டியதை செய்து தருவார் காவ் அ சேப் ஜர்னி என கையசைத்து சென்றாள். ராணுவ மருத்துவ ஜீப்பில் என்னுடன் இரு ராணுவ நோயாளிகள் இருந்தார்கள் .இருவரும் ராணுவ வீரர்கள் .
 
    ஜீப்பில் ஏறி கதவு  மூடியதும் கும்மிருட்டு உள்ளே.இயந்திர சப்தம் மட்டும் சீரான ஓசையில் கேட்டுகொண்டிருந்தது .ஓட்டுனரின் தலைக்குபின் ஆறு அங்குல சதுர கண்ணாடி இருந்தது அதை சிறிது நேரத்திற்கு பின் திறந்ததும் கொஞ்சம் வெளிச்சம் வந்தபோதுதான் இருக்கிறோம் எனும் உணர்வு வந்தது ஒரு பெருமூச்சுடன் .வெளியில் எதையும் பார்க்கமுடியவில்லை.பயணங்களில் எப்போதும் வெளியே வேடிக்கை பார்க்கும் குணம் எனக்கு அந்த இருள் எனக்கு ஒரு ஒவ்வாமையையே தந்தது .அரண்மனைக்குள் வந்தபின் முதல் முறையாக வெளியே செல்கிறேன் .உடன் இருந்தவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
  
   ஈகிள் நெஸ்ட் முகாம் வாயிலில் சோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கபட்டோம் .என்னை அழைத்து சென்ற ராணுவ வீரன் அங்கிருந்த ஒரு செவிலி உடையணிந்த பெண்ணிடம் என்னை ஒப்படைத்தார் .இவள் உனக்கான அனைத்து உதவிகளையும் செய்து தருவாள் .அனைத்தும் முடித்ததும் இங்கேயே காத்திரு என சொல்லி சென்றுவிட்டார் .
 
  அந்த பெண் என் முந்தைய மருத்துவ வரலாறுகளையும்,மருந்து, ஊசிகளால் ஏதாவது ஒவ்வாமை உள்ளதா என கேட்டு குறித்து கொண்டாள்.பின்பு மருத்துவ அறைக்கு சென்றுவிட்டு சில நிமிடங்களுக்கு பின் வந்து என்னை உள்ளே அழைத்து சென்றாள் . உள்ளே சென்றதும் டிபானி எனும் பெயர்கொண்ட அந்த அழகான இளம் பெண் மருத்துவர் என்னை பெயர் சொல்லி அழைத்து முன்பே பழகியவரிடம் பேசுவதுபோல அன்பாக எப்படி அடிபட்டது என கேட்கும்போதே என் காலில் பாதி வலி குறைந்து விட்டது .
 
   ஒன்றும் பயப்படாதே எக்ஸ் ரே எடுத்து பாப்போம் என சொல்லிவிட்டு அருகிலிருந்த அறையில் எக்ஸ் எடுத்து விட்டு வெளியில் காத்திருக்க சொன்னாள்.
  
    நேரம் மதிய உணவு வேளையை நெருங்கியிருந்தது .அந்த செவிலி உடையணிந்த பெண் என்னிடம் சாப்பிடுகிறாயா என இரண்டு கைகளாலும் பர்கர் பன் கடிப்பதை போன்ற சைகை காட்டி கேட்டாள் ஆம் என்றேன். இரண்டு பர்கரும்,கொஞ்சம் சிக்கன் விங்க்ஸ் ம் , ஒரு தண்ணீர் பாட்டிலும், தந்தாள்.
   
 நம்ம ஆள்ட்ட சாப்ட்டச்சானு சைகையில் கேட்பது மிக எளிது .ஒரு கையால் சோறு தின்பது போல் காட்டினால் போதும் .நான் சாப்பிட்டபின் அங்கேயே அமர்ந்திருந்தேன் .நெடுநேரத்திற்கு பின் மீண்டும் மருத்துவர் டிபானியின் அழைப்பு .

   காலில் ஒரு சிறய கீறல் மட்டுமே உள்ளது விரைவில் குணமாகிவிடும்.ஒரு வாரம் ஓய்வு தேவை பணிக்கு செல்லவேண்டாம்,காலில் அணிய ஒரு மரக்கட்டை காலணி தருகிறேன் அணிந்துகொள் .விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என சொல்லி சிறிய பற்கள் வெளியே தெரியும்படி புன்னகையுடன் வழியனுப்பி வைத்தாள் .மிக்க நன்றி டாக்டர் டிபானி என விடைபெற்றேன் .
  
    எப்போதும் பரபரப்பாக இயங்கிய எனக்கு பணிக்கு செல்லாமல் குளிரூட்டிய அறையில் முடங்கி கிடப்பது என்பது பெரும் தண்டனையாக இருந்தது . லோகேஷ் மூன்று வேளையும் உணவு கொண்டு தருவான். பகலில் தூங்குவதால் ,உறக்கமற்ற இரவுகளாக கழிந்தது .
   
   ஐந்தாவது நாளே என்னால் இனி முடங்கி இருக்க இயலாது இயன்ற சிறு பணிகளை செய்கிறேன் என சென்றுவிட்டேன்.விரைவிலேயே குணமடைந்துவிட்டேன் .

  ஒருமுறை அடுமனையில் வேலைசெய்யும் சமையற்காரன் ஒருவன் கூர்மையான கத்தியை கையில் வைத்து விளையாட்டாய் சுற்றும்போது மோதிரவிரலின் கீழே சதை துண்டாகி ரத்தம் பீச்சியடித்தது .ரத்தத்தை பார்த்த மானேஜர் ஆலன் குக் எதோ விபரீதம் என நினைத்து ராணுவ ஹெலிகாப்டரை வரவழைத்து அவனை உடனே ஈகிள் நெஸ்ட் முகாமுக்கு அனுப்பிவைத்தார் .

    அவன் அங்கு ஒருநாள் தங்கி சிகிச்சை திரும்பி வந்தான் .விளையாட்டு வினையானது என சிரித்துக்கொண்டே சொன்னான் .எங்கூர்ல நாய் விளையாட்டு கூரையை பிய்க்கும் என சொல்வதுண்டு .

     பராமரிப்பு பணியில் இருந்த ஒருவன் சுடுநீர் கொதிகலனை பழுதுபார்க்க திறந்தபோது எதிர் பாராமல் கொதிக்கும் நீர் அவன் உடல் முழுதும் கொட்டிவிட்டது .தலைக்கு கீழே வெந்து போய்விட்டது .
  
 அவன் முதலில் என்னுடன் திக்ரித்ல் சிறிது காலம் பணிபுரிந்து வேறு முகாமுக்கு மாற்றலாகி சென்றிருந்தான் .ஆபத்தான நிலைமையில் இருந்த அவனை முதலுதவி சிகிட்சை அளித்து ,அவனது உயிர் காக்க எங்கள் நிறுவனம் ஒரு சிறிய தனி விமானத்தை வாடகைக்கு அமர்த்தி பாக்தாத்திலிருந்து ஜோர்டானின் அம்மான் நகரம் கொண்டு சென்றது .அங்கு கிடைத்த உயர் சிகிச்சையில் அவன் பிழைத்துகொண்டான் .
 தனி விமானம் என்பது மிக அதிக செலவு .அவன் வேறு நிறுவனத்தில் இருந்திருந்தால் ..............நினைத்தே பார்க்க முடியாது .

ஷாகுல் ஹமீது
05-11-2016

Sha260@yahoo.co.in

2 comments:

  1. ஷாகுல் இப்பொதான் முதல் முறையா நீங்க உங்களோட நேரடி வலியின் அனுபவத்தை சொல்லறீங்க இல்லையா? நல்லவேளையா முறிவொன்னும் இல்லாம காயத்தோட போயிருச்சு!!
    இருந்தாலும் நல்லாவே கவனிச்சுக்கறாங்க அங்கே. இந்தியாவில் செத்தாலும் கண்டுக்கமாட்டாங்க நிர்வாகத்தில் இருக்கறவங்க
    அதுவும் அந்த விரல் வெட்டிக்கிட்டவருக்கு ஹெலிகாப்டரா? எனக்கே அங்கே ஏதாச்சும் வேலை செஞ்சு அடிபட்டு (லேசாதான்) சிகிச்சை எடுத்துக்கனும்னு ஆசையாயிருச்சு.
    தூக்கமில்லா இரவுகள் நீண்ட இரவுகளாவதும், அடைந்த வண்டிக்குள் இருந்த இருள் தந்த ஒவ்வாமையும், குளிரூட்டப்பட்ட அறைக்குள் முடங்கிகிடக்க விருப்பமின்றி பணிக்கு செல்ல துவங்கியதும் வாசிக்கும் எங்களுக்கும் உணர முடிந்தது தம்பி. வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பதிவிடுங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பதிவிடுங்கள்

    ReplyDelete