அந்த பெரியவர்
====================
மணவையில்(மாணவாளக்குறிச்சி
) கடற்கரை சாலையில் பள்ளிவாசல் தாண்டியதும் காணவிளை செல்லும் சந்துக்கு எதிரில்
இருந்தது சோமன் அண்ணனின் வொர்க்ஷாப் . மீனவர்கள் கட்டுமரத்தை இயக்குவதற்குரிய லம்பார்தினி
டீசல் இயந்திரம் பழுதுபார்க்குமிடம் . முட்டம் ,கடியபட்டணம் ,அழிக்கால் போன்ற
ஊர்களிலிருந்து மீனவ நண்பர்கள் கொண்டுவரும் இயந்திரத்தை சரி செய்து கொடுத்தால்
.கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு பெரும் தொகையை கடன் சொல்லுவார்கள் , மேஸ்த்ரி சனிக்கிழமைக்கு வாறேன் , என
சொல்லிவிட்டு சென்றால் அவர்கள் மீண்டும் வருவது அடுத்த முறை இயந்திரம் பழுதடையும்
போது .
ஐ.டி.ஐ படிப்பு
முடித்ததும் அங்கு சோமன் அண்ணனிடம் பயிற்சிக்காக பணியில் சேர்ந்தேன் .சம்பளம்
கிடையாது ஆனால் செலவுக்கு ஏதாவது கிடைக்கும் .சில சமயம் காஸ் குப்பி எடுக்க
நாகர்கோவில் செல்வோம் ஒருமுறை இந்து கல்லூரி அருகில் உள்ள அனாதைமடம் வளாகத்தில்
நடந்த பாம்பே சர்கஸ்க்கும் சோமன் அண்ணன் மனைவி, குழந்தையுடன் அழைத்து சென்றார் .
அப்போதெல்லாம் கடற்கரை
கிராமங்களில் அடிக்கடி சண்டைகள் நடக்கும் .ஒருமுறை கடலில் கட்டுமரங்கள் தீ
வைக்கப்பட்டது என்று கேட்டதும் நாங்கள் நான்கைந்து பேர் பாபுஜி பள்ளிக்கூடம்
செல்லும் வழியாக ஓடி சின்னவிளை கடற்கரையை அடைந்தபோது ஆடு மேய்ச்சான் பாறைக்கு
அப்பால் ஒரு படகு கொழுந்துவிட்டு எரிவதை கண்டோம் .
சோமன் அண்ணனிடம் ஒரு லேம்பெர்ட்டா ஸ்கூட்டர் இருந்தது (1978
ம் ஆண்டு தயாரிப்பு )அதில் தான் உற்சாக பயணம் நாகர்கோயில்
,திங்கள்சந்தை என உதிரி பாகங்கள் வாங்க செல்வோம் .நான் பத்தாம் வகுப்பு
படிக்கும்போதே எங்கள் வீட்டில் பஜாஜ் ஸ்கூட்டர் இருந்ததால் நன்றாகவே ஸ்கூட்டர்
ஓட்ட பழகியிருந்தேன் .சோமன் அண்ணனின் லேம்பெர்ட்டாவில் பெட்ரோலுடன்
,மண்ணெண்ணெய்யும் 1:1 என்று கலந்து ஓட்டுவோம் .(அப்போது காற்றை மாசுபடுத்துகிறோம்
என தெரியவில்லை .)
கடியபட்டணம் கிறிஸ்துவ
கோயில் அருகில் ஒரு உதிரி பாகங்கள் வாங்கும் கடை இருந்தது .அங்கும் அடிக்கடி
சென்று வருவோம் .
ஒருமுறை முட்டம்
,கடியபட்டணம் கிராமங்களுக்கிடையே பயங்கர சண்டை போக்குவரத்து நிறுத்தபட்டிருந்தது
.மணவாளகுறிச்சியிலிருந்து கடியபட்டணம்
செல்லும் சாலையில் செங்குழி அருகில் சாலையை முழுவதுமாக துண்டித்திருந்தார்கள்
.வெளியாட்கள் எவரும் ஊருக்குள் வருவதை தவிர்க்க .
சண்டை முடிந்து சில
நாட்களுக்கு பிறகு கடியபட்டணதிலுள்ள கடையில் உதிரி பாகம் வாங்குவதற்காக சோமன்
அண்ணனின் லேம்பெர்ட்டாவில் புறப்பட்டேன் .வள்ளியாறு பாலம் தாண்டி கடியபட்டணம்
சாலையில் திரும்பியபோது ஒரு பெரியவர் கையசைத்ததும் வண்டியை நிறுத்தினேன் .எங்க
போறோம் என கேட்டார் ,கடியபட்டணம் என்றதும் ,நான் வரட்டா என கேட்டார் .
கும்பாரி பெறத்த ஏறுங்க என்றேன் .பின் இருக்கையில் ஏறிக்கொண்டார் . வண்டி மிதமான
வேகத்தில் சென்று கொண்டிருந்த போது செங்குழி பாலம் தாண்டியதும் சாலையில் ஒரு வளைவு
உள்ளது ,மிக அருகில் சென்றபோது தான் தெரிந்தது ,சாலை துண்டிக்கப்பட்டிருந்தது
.ஒன்றரை அடி அகலமும் ,ஒரு அடி ஆழமும் இருந்திருக்கும் .
என்னால் வண்டியை
கட்டுப்படுத்த இயலவில்லை மிக அருகில் சென்றதும் நான் வண்டியில் இருந்து கீழே
குதித்துவிட்டேன் .வண்டி சென்ற வேகத்தில் பள்ளத்தை தாண்டி சாலையின் மறுபுறம்
சென்று டாமர் என விழுந்தது .பின்னால் இருந்த பெரியவர் தூக்கிவீசப்பட்டு சாலையில்
பேச்சு ,மூச்சற்று குப்புற விழுந்து
கிடந்தார் .
சப்தம் கேட்டு அருகில்
இருந்த ஒரு வீட்டில் வெள்ளை அடிக்கும் (சுண்ணாம்பு பூசும் )வேலை செய்துகொண்டிருந்த
நாராயணன் மற்றும்இருவர் ஓடிவந்தனர் .
நாராயணன் என் வீட்டருகில்
வசிப்பவர் .மாப்ளே ரோடு தோண்டி போட்டுருக்கு தெரியாதா என கேட்டுகொண்டே ,பெரியவரின்
அருகில் சென்று அவரை லேசாக தட்டி எழுப்ப
முயன்றார் .
எனக்கு கை ,கால் உதற
ஆரம்பித்தது .பெரியவர் இறந்துவிட்டார் என்றே
நினைத்தேன் .எனக்கும் மூச்சு நின்று விடுவது போன்ற பயம் ஏற்பட்டது .
பின்பு நாராயணன் கொஞ்சம்
தண்ணீரை பெரியவரின் முகத்தில் தெளித்ததும் கொஞ்சம் அசைந்து பின்பு எழுந்து
உட்கார்ந்தார் .நாராயணன் என்னிடம் மாப்ளே வண்டிய பாரு என்றார் .
இருவருமாக வண்டியை தூக்கி
நிறுத்தினோம் .ஐந்தாறு முறை உதை வாங்கியபின் வண்டி உறுமலுடன் புகையை கக்கிகொண்டு
பயணத்திற்கு தாயாரகிவிட்டது .
பெரியவர் என்னருகில் வந்து
என்னய கோயிலுகிட்ட இறக்கியுடுங்க என்றார் .மீண்டும் என்னுடனா என மனதில்
எண்ணிக்கொண்டேன் .மாப்ளே பாத்து போ பெருச பத்திரமாக இறக்கிவிடு என்றார் நாராயணன் .
கிறிஸ்துவ கோயில் அருகில்
அவரை இறக்கிவிட்டேன் .உதிரி பாகங்கள் வாங்கிவிட்டு வரும் வழியில் வள்ளியாறு பாலம்
அருகில் உள்ள செங்குழி சைக்கிள் கடை மாமாவின் மகன் நடத்தும் இரு சக்கர
பழுதுபார்ப்பு நிலையத்தில் வண்டியை நிறுத்தி விஷயத்தை சொன்னேன் ,மாமா அங்கு
இருந்தார் .
அவர் வண்டியை பரிசோதித்து
விட்டு வண்டியில் போர்க் உடைந்துவிட்டது எப்படி இதை ஓட்டிக்கொண்டு வந்தாய் இறைவன்தான் உன்னை காப்பாற்றினான் என்றார்
.இப்படி இதை ஓட்டுவது பெரும் ஆபத்து இங்கேயே விட்டு விட்டு செல் என்றார் .
அங்கிருந்து நடந்தே
வொர்க்ஷாப் வந்து சோமன் அண்ணனிடம் விபரம் கூறினேன் ,உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என
கேட்டார் .மாலையில் வழக்கமாக வரும் மீனவ நண்பர்கள் 3 பேர் வந்தனர் .
கும்பாரி காலம்பற என்ன
நடந்தது .உம்ம கூட வண்டில வந்த ஆளு பழைய
அடிமுறை ஆசான் அதனால ஆளு தப்பிட்டது ,நீரு பிழச்சிரூ என்றனர் .ரோடு வெட்டி
போட்டிருக்குன்னு தெரியாமலா வண்டில போனோம் என கேட்டனர் .ஆம் என தலைய மட்டும்
அசைத்து பெருமூச்சு விட்டேன் .
பின்பு அந்த லேம்பெர்ட்டா ஸ்கூட்டர்க்கு போர்க்
கிடைக்காமல் எடைக்கு போட்டுவிட்டு ,ஷாபி வைத்திருந்த வேறு ஒரு லேம்பெர்ட்டா
வண்டியை வாங்கினார் சோமன் அண்ணன் . 7000 ருபாய் என நினைவு அது பெட்ரோலில் மட்டுமே
ஓடியது .
1995 ல்
நடந்தது .
02 ஆகஸ்ட் 2016
படங்கள் இல்லை .
Superbb💪🖑
ReplyDeleteSuperbb💪🖑
ReplyDelete