ரமலானின் பத்தாவது நாளான நேற்று சனிக்கிழமையாக இருந்தது. சனிக்கிழமை மட்டும் செய்யும் வேலைகளை செய்தோம். (Saturday routine,alarm tests greasing etc)
கப்பல் பிரான்சிலிருந்து நைஜீரியாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. காலை எட்டே முக்காலுக்கு சூரிய உதயமும் அஸ்தமனம் இரவு எட்டரை மணிக்கும். கப்பலின் கடிகாரத்தை ஒரு மணிநேரம் பின்நோக்கி நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால் பிரான்ஸ் ,நைஜீரியாவின் கடிகார நேரம் ஒன்றாக இருப்பதால் கப்பலின் கடிகாரத்தை மாற்றவே இல்லை.
கடந்த மூன்று தினங்களாக அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து குளித்து ஆறேமுக்காலுக்கு காலை உணவு உண்டுதான் ஸகர் வைக்கிறேன். இரவு எட்டரை வரை காத்திருந்து சூரியன் அஸ்தமனம் ஆன பின்பு இப்தார் எனும் நோன்பு திறத்தல்.
கப்பலில் இரண்டாவது நாளாக நேற்றும் கஞ்சி வைத்து குடித்தேன். நேற்று காலையிலேயே எனது இளையவள் காதர்பீவி அழைத்தாள் “காக்கா நீ எங்க இருக்கா நோம்புன்னு பாக்காம போர் தொடங்கிட்டானுவோ” என பதறினாள்.நேற்றிரவு நண்பர் கவிஞர் ஆனந்த் குறுஞ்செய்தி அனுப்பியிருர்ந்தார். ஷாகுல் எங்கே இருக்கீங்க என.
இன்று அதிகாலையே திரைப்பட இயக்குனர் நண்பர் கே.பி வினோத் அழைத்தார். “எங்க இருக்குதிய இப்ப,கப்பல் போக்குவரத்து கஷ்டம் ஆச்சே போர் நட்க்கதுல்லா” என கேட்டார்.
இன்று எனது தாய் பீமாவை அழைத்தபோது “மோனே நீ எங்க இருக்கா,கத்தார்ல குண்டு வெடிடிக்குதாமே” என பதறினார்.
தோழி கவிதாவும்,சுபஸ்ரீயும் கவலையுடன் விசாரித்தனர். மும்பையில் வாழும் மாமி ஒருவர் “இந்த கப்பல் வேல என்னத்துக்கு,பொண்ணாட்டி,பிள்ளையளுக்க கிட்ட இல்லாம,ஆயிரத்தெட்டு வேல துனியாவுல இருக்கு,உங்களோட போட்டு இந்த வேல,உங்க மக்களுக்கு இந்த வேல வேண்டாம் மோனே” என்றார்.
போர் பதட்டம் உலகை சூழ்ந்து கொண்டது. எண்ணெய் கப்பல்கள் மற்றும் காஸ் கப்பல்கள் சரக்கு ஏற்றுவது இந்த மத்திய கிழக்கு நாடுகளான ஈரான்,குவைத்,கத்தார்,ஓமான்,சவூதி,அபுதாபியில் தான். யுஏஇயில் உள்ள புஜைரா கப்பல் போக்குவரத்தில் உலகில் மிக முக்கியமான மையம். சரக்கு கப்பல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
ஆம் உண்மையில் கடல் வழி வாணிபமும்,கப்பல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கும். இந்திய கடல்சார் ஆணையம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது ஈரான் மற்றும் வளைகுடா பகுதிகளிலுள்ள மாலுமிகளை உடனடியாக தொடர்புகொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர்.
அதே போல் விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளது. துபாய்,டோஹா அபுதாபி போன்ற விமான நிலையங்கள் சர்வதேச அளவில் உலகை இணைக்கும் விமானங்களின் இணைப்பு பாதை. இதனால் சர்வதேச பயணங்கள் ரத்தாகியுள்ளது.
நாகரீகத்தின் உச்சத்தில் மனித சமுதாயம் இருப்பதாக சொல்லிகொள்கிறோம். அறிவியல் வளர்ச்சியிலும் அதுதான்.வலுகட்டாயமாக ஒரு நாட்டின் மேல் போர் திணிக்கப்பட்டு மக்களை கொன்றழிப்பதுதான் நாகரீகமா?அணு ஆயுதங்களை வைத்திருப்பது வலுவற்ற நாடுகளை அச்சமூட்டதானா?
எளியவர்களின் இந்த கேள்விகளுக்கு விடையே இல்லை.உலக தலைவர்கள் சமாதனம் பேசி போரை முடிவுக்கு கொண்டுவந்து.மனித உயிர்கள் கொல்லப்படுவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.
நண்பர்கள் பலரும் தொடர்ந்து என்னைபற்றிய கவலையுடன் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்ட இருக்கிறார்கள். நான் ஐரோப்பா- மேற்கு ஆப்ரிக்கா பயணத்தில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறேன். இம்மாத இறுதிவரை இதே பகுதியில்தான் பயணம் இருக்கிறது.
சகோதரி மனோபாரதி எனக்காக வேண்டிகொண்டார். நண்பர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.
நாஞ்சில் ஹமீது,
01 march-2026.
sunitashahul@gmail.com


