சன்னி கிரீன் கப்பலில் இருக்கும்போது பெரும்பாலும் தினமும் டைரி எழுதியிருக்கிறேன். மொத்தம் நூற்றி முப்பத்தியைந்து பக்கங்கள். அதில் சில பக்கங்களை வாசித்தேன்.
மேற்கு ஆப்ரிக்காவின், டோகோ நாட்டின் லோம் துறைமுக எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் கரையிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் நங்கூரமிட்டு நின்றபோது முதலில் கொஞ்சம் அச்சமாக இருந்தது. கப்பலின் பின்புறம் முழுவதும் முள்வேலி போடப்பட்டு குடியிருப்பை விட்டு வெளியே செல்பவர்கள் ஒரேயொரு கதவை மட்டும் பயன்படுத்த சொல்லி காப்டன் உத்தரவிட்டிருந்தார். அந்த கதவும் கப்பல் பணியாளர்கள் மட்டுமே திறக்கும் விதத்தில் ரகசிய குறியீடு கொண்டதாக இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கப்பல் இங்கே நிற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்திருப்பதை காப்டன் உறுதி செய்தார். முக்கியமாக “கதவுகள் திறந்தே இருந்தால் கொசுக்கள் குடியிருப்பில் வரும், அவை கடித்தால் மலேரியா நிச்சயம்” என்பதையும் சொன்னார்.
இங்கே நங்கூரம் பாய்ச்சும் முன் நடந்த மாதாந்திர கூட்டத்தில் பாதுகாப்பு முறைமைகளை மிகச்சரியாக அனைவரும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டனர். கடல் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக காப்டன் சொன்னார். இரவில் அதிகப்படியான கண்காணிப்பை திட்டமிட்டு இரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
நங்கூரம் பாய்ச்சிய நாள் சுற்றி நின்ற கப்பல்களை எண்ணிப்பார்த்தேன். உத்தேசமாக ஐம்பது கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்தது. இத்தனை கப்பல்கள் பாதுகாப்பற்ற இடத்தில் நிற்பது சாத்தியமில்லை என என் மனம் சொல்லியது. கப்பலில் மெல்லிய பதட்டமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகியது.
இரு தினங்களுக்குப்பின் இரவில் கப்பலின் மிக அருகில் இரு படகுகள் வந்துவிட்டன. நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காப்டன் மற்றும் முதன்மை அதிகாரியை, பணியில் இருந்த இரண்டாம் அதிகாரி ரோலாண்டோ எழுப்பியிருக்கிறார்.
இரவில் கப்பலை சுற்றி ஏராளமான மீன்பிடி படகுகள் மீன் பிடிக்கிறார்கள்.
காலையில் போசன் குழுவினரிடம் சொல்லி மீதமிருந்த முள் வேலியை கப்பலை சுற்றி போட்டார்கள்.
கப்பலை சுற்றி ஏராளமான மீன்பிடி படகுகள்மீன்பிடிப்பதை பார்க்கத் தொடங்கினோம். கூடவே திமிங்கலங்கள் நீரின் மேல் மட்டத்திற்கு வந்து மூச்சு விடுவது தினசரி காட்சிகள்.
கணவன், மனைவி, குழந்தை என குடும்பமாக கப்பலை சுற்றிவரும் திமிங்கலங்களை தினமும் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தார் முதன்மை இன்ஜினியர்.
கப்பலின் நீர் கையிருப்பு இருநூறு டன்கள் மட்டுமே இருந்தது. நீர் சிக்கனம் பற்றி விரிவாக விவாதிக்கபட்டதுடன் சலவை இயந்திர அறை மூடப்பட்டது. ஒரு நாளின் நன்னீர் தேவை பதிமூன்று டன்கள். உற்பத்தி இருபது டன்கள். நங்கூரம் பாய்ச்சி நிற்கையில் நன்னீர் இயந்திரம் இயங்காது. நீர் உற்பத்தி இல்லாமல் செலவு மட்டுமே. இருக்கும் நீர் அதிகபட்சமாக இருபது நாட்கள் தாக்கு பிடிக்கும். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சலவை இயந்திரம் திறப்பதாக முதன்மை அதிகாரி அறிவித்தார்.
ஒரு மாதத்திற்கு கப்பலில் கார்கோ ஆபரேசன் நடக்கவில்லை. பின்னர் ஒரு பெரிய கப்பல் அருகணைந்து 8600 மெட்ரிக் டன் ப்ரோப்பேன் (LPG) திரவத்தை எங்களுக்கு தந்தது.
பின்னர் ஒரு வாரத்திற்குப்பின் BP Jacky எனும் சிறு கப்பல் 2000 மெட்ரிக் டன் ப்ரோப்பேனை வாங்கி சென்றது. பின்னர் அதுவே நிரந்தர கஸ்டமர் ஆகிப்போனது.
![]() |
பீட்டர் |
எர்ணாகுளத்தை சார்ந்த பயிற்சி இன்ஜினியர் அனீஷ் மற்றும் கேஸ் இன்ஜினியர் பீட்டர் என்னிடம் மூச்சு பயிற்சியை கற்று கொண்டனர். அதிகாலை எழுந்து குளிப்பதை பழக்கமாக்கி "ஷாகுல் சேட்டா ராவிலே குளிச்சிட்டு பணிக்கு வரும்போ நல்ல வித்தியாசம் உண்டு. ஃபீலிங் வெரி ப்ரஸ்" என்றான்.
"நாள் முழுக்க பிரஷ் ஆ இருக்க ஒரு பயிற்சி இருக்கு" என்றேன்.
"அது இவிடே படிப்பிச்சு தருமோ"எனக்கேட்டார்.
மேலும்...
நாஞ்சில் ஹமீது,
04- 09- 2025