Wednesday, 4 December 2024

சாகசமே வாழ்க்கை ஆன கப்பல்காரன் - மதுபாலா

 


 சிறந்த இலக்கியங்கள் பெரும் மனஉளைச்சலையும் , உளவியல் கேள்விகளையும் எழும்பச் செய்யும்.உங்கள் நாட்குறிப்புக்களும் அவ்வண்ணமே எனக்கு. 

    உங்கள் பணி மிகவும் ஆபத்துக்கள்  நிறைந்த பணி என்று அறிந்திருந்த போதும் அதனை ஒரு அனுபவத் தொடராக நேரடிக் காட்சிகளாக எங்கள் முன் வைக்கும் போது மனம் அடையும் பதட்டத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. 

 ஒவ்வொரு பணியும் அதற்கே உண்டான சவால்களை கொண்டிருந்தாலும் உங்களது பணி .உங்கள் அன்றாடத்தையே சாகசம் நிறைந்த ஒரு வாழ்க்கையாக்கி உள்ளது. 

 இயந்திர அறையில்  கடும் வெப்பத்தில்  உங்களது உடைகள் வியர்வையில்  நனைய  பணி முடித்து தங்கும் அறைக்கு குளிக்கச் சென்றால் அங்கும் சுடுநீரில் குளியல். இதை வாசிக்கும் போது நிம்மதியான குளியல் கூட கப்பல்காரனுக்கு  கிடையாதா!  

 சில நேரங்களில் நன்னீர் சிக்கனம் காரணமாக அந்தக் குளியலுக்கும் பிரச்சினை....கடிகாரம் முன்னும் பின்னும் நகர தூக்கத்தில் பிரச்சினை.... கப்பல் கரையணைய தாமதித்தால் உணவுக்கும் தட்டுப்பாடு....இதுமட்டுமல்லாமல் இயற்கை சீற்றங்கள் வேறு... 

  

  கப்பலில் நுழையும் கணம் நூலேணியில்  ஏறுவதிலிருந்து  விடுமுறை உறுதியாகி கப்பல் கரையணைவது வரை எத்தனை ஆபத்துக்கள் நிறைந்த வாழ்க்கை ... என்னடா வாழ்க்கை இது ! என்று யோசிக்க வைக்காமல் இத்தனைக்கும் நடுவில் ஒரு கப்பல்காரன் தன் வாழ்க்கையை மிகுந்த ரசனையோடும், பல கற்பிதங்களோடும், உழைப்பின் மகத்துவத்தையும், உலக மக்களுக்கான கப்பல்காரனின் சேவையையும் உங்கள் நாட்குறிப்பின் மூலம் நான் அறிந்து கொண்டேன். 


என் வாழ்வில் ஒரே ஒரு முறை தூத்துக்குடி ஹார்பரில் சரக்கு கப்பலை பார்த்திருக்கிறேன். மற்றபடி திரைப்படத்திலும், தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். உங்கள் எழுத்தின் வழியாக டெக், ஆங்கர், இன்ஜின் அறைகள், பிரிட்ஜ்,ஜெனரேட்டர்கள், கம்ப்ரெஸ்ஸர்,டெர்மினல்,தங்கும் அறைகள், பங்கர், வால்வுகள்.சமையலறை, டேங்குகள், எண்ணைய் குழாய்கள், ட்ரில்லர்கள்,பல விதமான ராட்சத பைப்புகள், பியூரிபையர்கள், எனப் பல பல பாகங்களை விவரித்து அங்கு நடக்கும் பணிகளையும் , சரக்குகளை ஏற்றுவதும் , இறக்குவதுமான விவரணைகள் மூலம் கப்பல் எனும் பிரம்மாண்டம் காட்சியாகி வருவது ஏனோ எனக்கு மதுரை சித்திரை திருவிழாவில் நமது கைக்கு அடங்காத வடத்தை பற்றி இழுத்து வரும் தேர் நினைவில் எழுந்து வந்தது.  எதிர்காலத்தில் எனக்கு கப்பலில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் உங்கள் விவரணைகள் வழியாகவே பார்க்கிற மாதிரிதான் இருக்கும்.



 ஒவ்வொரு நாளும் கதிர் எழுகையின் அழகையும், கதிர் அணைதலின் அழகையும்  உங்கள் ரசனையோடு எங்களையும் ரசிக்க வைத்துவிட்டீர்கள். மனச் சோர்வு மிக்க பணியில் இது போன்று இயற்கையோடு ஒன்றி இருப்பது மிக முக்கியம். இத்தனை இடர்கள் மிகுந்த பணியாக இருப்பினும்  புது புது நிலவெளிகளையும், நகரங்களையும், வேற்று நாட்டு மக்களையும் பார்க்கும் போது கப்பல் காரன் அடையும் உற்சாகம் அவனுடைய அத்துனை மன அழுத்தத்தையும், மனச் சோர்வினையும் துடைத்து எறிந்து விடுமல்லவா...! 

  ஆனாலும் நீங்களோ உங்கள் சக ஊழியர்களோ மேன் ஹோல் வழியாக தொட்டியிலோ, சில இயந்திரங்களுக்கு உள்ளே சென்று பணிகளை செய்து வெளிவரும் வரை என் மனதை பதைபதைக்கச் செய்து விடுகிறீர்கள்...அந்த அளவிற்கு உங்கள் விவரணைகள் உயிரோட்டமாக உள்ளது.

        கப்பலில் நடக்கும் பார்ட்டிகள், விளையாட்டுக்கள் , சக ஊழியர்களுடான உரையாடல்கள் போன்றவற்றை உங்களுடைய மொழியில் கூறும் பொழுது நான் சில இடங்களில் கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்து மகிழ்ந்தேன். அதுவும் ஐடியா மணியுடனான  உரையாடல்கள் எல்லாம் அட்டகாசம். பின்பு  பார்ட்டி டான்ஸ் பற்றிய குறிப்புகளை கேட்கவே  வேண்டாம் உருண்டு உருண்டு சிரித்தேன்.....😂😂


         நீங்கள் என்னுடைய கட்டுரையை வாசித்து விட்டு சொன்ன ஒரு விஷயம் நம் உணர்வுகளை வாசகனுக்கு கடத்தும் விதத்தில் மொழி இருக்கனும்னு சொன்னீர்கள்.... அதை உணர்ந்த இடம் ஒன்று உங்கள் சக ஊழியர் ஒருவர் ஷாம் என நினைக்கிறேன், இயந்திர அறையின் அதீத வெப்பம் காரணமாக வாயுமிழ்ந்து மயங்கி விழும் போது உங்கள் கண்கள் கலங்கிய போது இங்கு என் கண்களும் கலங்கின.

   பிறகு மேன்ஹோல் வழியாக டேங்குகளில் இறங்கி  உட்பக்கம் பணி செய்யும் ஆட்கள் இருப்பது தெரியாமல் மூடிவிட்டதால் உயிரிழக்கும் இரண்டு பணியாளர்களின் சடலத்தை மீட்டெடுக்கும் நிகழ்வினை வாசித்து விட்டு மேலே வாசிக்க இயலாமல் அழுது கொண்டே இருந்தேன்.

   எனது அண்ணனின் நண்பர் ஒருவர் கப்பலில் இன்ஜினியராக வேலை பார்த்து சக ஊழியர்களால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நினைவு வந்தது. அவர் இறந்த சமயம் அவரது மனைவி மூன்று மாத கர்ப்பிணி. அந்த சம்பவமும் நினைவில் எழுந்து வந்து மனம் கனத்து போனது.


  கடல் கொள்ளையர்கள், புயல், கடல் சீற்றம் மற்றும்  சில எதிர்பாரா விபத்துக்கள் போன்ற சூழ்நிலைகளில் கப்பல் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் மனநிலை எப்படி இருக்கும் என யோசிக்க வைத்தது. 

  அதே போல் கடினமான சூழ்நிலைகளை கூட  சிறு புன்னகையுடன் கடந்து சென்று விடுகிற உங்கள் ஆளுமையும் வியக்க வைக்கிறது.  நிறைய இடங்களில் உங்கள் சுயமரியாதை கீழிறங்கா வண்ணம் ஒரு Strong person ஆகவும் உங்களைக் காண்கிறேன். 

   கப்பல் கடல் சீற்றத்தால் அலைக்கழிக்கப்படும் நிலையிலும் உங்கள் அனைவருக்கும் Chef மூன்று நேரமும் உணவிட்ட  ஒரு அன்னையாகவே என்னை நெகிழ வைத்து விட்டார். மேலும் உணவைப் பற்றிய குறிப்புகளில் நாவில் உமிழ்நீர் சுரப்பது தவிர்க்க இயலாத ஒன்று.

  உங்கள் கப்பல் பயணத்தில் சில நாட்கள் உங்கள் கூடவே பயணிக்கும் பறவைகள் பற்றிய விவரணைகளும் மனதிற்கினிய அனுபவமாக நெஞ்சில் நிறைந்தது. இயந்திரங்களுடான உங்கள் பணியில் ஆங்காங்கே உங்கள் ஊர் மற்றும் உறவுகள் பற்றிய நினைவுகைளயும், நிகழ்வுகளையும் விவரித்திருப்பது அழகு. கப்பல் நங்கூரமிட்டிருக்கும் இடத்தில் மீன் பிடித்து குழம்பு வைத்ததில் இருந்து உங்கள் நினைவு காந்தாரிவிளையில் வைக்கும் மீன் குழம்பிற்கு சென்று வந்தது ஒரு ருசியான அனுபவம்தான்.


விடுமுறை அறிவித்த பின்பும் கூட கப்பல்காரன் நிலத்தில் கால் பதியும் வரை உறுதியாகாத அந்த நாட்கள் கப்பல்காரனின் மன அவஸ்தையும், வேலையும் உண்டாகும் சலிப்பும் வாசிக்கும் எனக்குமே தொற்றிக் கொண்டது. உறவுகளைப் பிரிந்து உயிரையும் பணயம் வைத்து வாழும் இந்த வாழ்வு எதற்காக? சில நேரங்களில் வாழ்வின் பொருளிழந்து நிற்கும் சில வினாடிகளேனும்  நம்மைத் திகைக்க வைக்கின்றன!


7 முதல் 10 மாதம் தொடரும் உங்கள் பணி நாட்களில் கடலெனும் பாலை நடுவில் ஒரு சின்னத்தீவு போன்ற கப்பலில் 22 முதல் 25 நபர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளக் கூடிய வாழ்வுச் சூழலில் பெரிதாக சோர்வுக்கு இடம் அளிக்காமல் அன்றாடத்தில் ஐந்து நேரத் தொழுகை, நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு எனத் தொடர்வதும், ரமலான் நோன்பு, நிலத்தில் கால் பதிக்கும் வாய்ப்புள்ள போதெல்லாம் பள்ளிவாசல் செல்லுதல் மற்றும் மற்ற கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் பங்குபெறுதல் , பண்டிகைகளை கொண்டாடுதல் என கடினச் சூழலிலும்  எளிதான வாழ்க்கையாக வடிவமைத்துக் கொள்ளும் கப்பல்காரனின் வாழ்க்கையை முழுமையாக உணர வைத்த கட்டுரைத் தொடர்.

   ஒரு தொழில் முறை சார்ந்த கட்டுரையாக இருந்த போதும் அதையும் வாசகனுக்கு  நுட்பமாகவும், சுவராசியம் குறையாத அனுபவங்களாகவும் கொடுத்துள்ளமைக்கு நன்றியும் , வாழ்த்துக்களும்.

மதுபாலா

  அன்புள்ள மது பாலா,

     கப்பல் காரன் நாட்குறிப்புகள் எழுதிய பின்பு தான் எனக்கும் தெரிந்தது. கப்பல் பணியாளர்களின் வாழ்க்கை,பணி குறித்து வெகுஜன மக்களுக்கு மட்டுமல்ல  ,அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும்  எதுவுமே தெரியவில்லை என.

கடலை ஓர் நீர் பாலையாகவும், கப்பலை அதில் மிதக்கும் தீவாகவும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறது.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட அன்றாடத்தை சொல்லும்  விரிவான அந்த நாட்குறிப்புகளில்  சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன.

 அதை ஒரு நாவலாக எழுதி கடந்துவிட எண்ணுகிறேன்.

ஷாகுல் ஹமீது.

கப்பல் காரன் டைரி குறித்து கணேஷ் பெரியசாமி 

https://ganeshperiasamy.wordpress.com/2022/10/05/01-6/

கப்பல் காரன் டைரி வாசிக்க 

https://kappalkaran.wordpress.com/