கப்பலுக்கு
புறப்படுதல்
குலேசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ
கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த காயல்பட்டினத்தை
சேர்ந்த முப்பத்தியிரண்டே வயதான சுரேசுக்கு
ஆறு யூனிட் இரத்தம் தேவைப்பட்ட தகவலறிந்து எனது மச்சான் சாகுல் ஞாயிறு இரவு “மாப்ளே
காலத்த போயிருவோமா” எனக்கேட்டார் .எனக்கும்,அவருக்கும்
பி பாசிட்டிவ் வகை ரத்தம்தான். ரத்தம் தேவையென மணவை இசுலாமிய மருத்துவ சேவை
அமைப்பின் வாட்ஸ் அப்பில் செய்தி வெளிட்டிருந்தார்கள் .
திங்கள்கிழமை காலை எட்டரை மணிக்கு
மேல் நான் நாகர்கோயிலிலிருந்து புறப்பட்டு அழகியமண்டபத்தில் எனது மச்சானுடன்
இணைந்து கொண்டேன் .அவர் மணவாளக்குறிச்சியிலிருந்து அவரது காரில் வந்தார்.காரில்
சென்றுகொண்டிருக்கும்போதே எனது மும்பை அலுவலகத்திருந்து அழைத்தார்கள் .நீண்ட
உரையாடலுக்கு பின் அவசரமாக நாளை கப்பலுக்கு போக வேண்டும் என்றார்கள் .கப்பல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா
செல்வதுவரை தான் உங்கள் பணி அமெரிக்காவிலிருந்து வீட்டிற்கு வந்து விடலாம்
.அதிகபட்சம் மூன்று வாரங்கள் ஆகும் என்றார்கள்.கடந்த பத்து தினங்களுக்கு முன்பும்
மும்பை அலுவலகம் என்னை தொடர்புகொண்டு பதினைந்தாம் தேதி கப்பலுக்கு போக முடியுமா?என
கேட்ட போது மறுத்திருந்தேன் .இப்போது வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டேன் .மறுநாள் காலை கொச்சி அலுவலகம் சென்று விமான சீட்டு
பெற்றுக்கொண்டு அங்கிருந்து பயணிக்க வேண்டும் .
மூகாம்பிகையில் ரத்ததானம்
கொடுத்துவிட்டு புறப்பட மணி பதினொன்று தாண்டியிருந்தது .திருவிதாங்கோடு
ஜாமத்திலிருந்து இரு இளைஞர்கள் சுரேசுக்கு ரத்தம் கொடுக்க வந்திருந்தனர் .சுரேசின்
உறவினர்கள் காயல்பட்டிணத்தில் உள்ள ஜமாத்தை தொடர்புகொண்ட போது அவர்கள் இந்த ரத்த
தேவை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.சுரேசுக்கு தேவையான ஆறு யூனிட் ரத்தம்
கிடைத்துவிட்டதாக சொன்னார்.
அழகியமண்டபத்தில் காரை
நிறுத்திவிட்டு ஒரு சர்பத்தும் ,செந்தொளுவன் பழமும் சாப்பிட்டுவிட்டு ,நான் எனது
இருசக்கரத்தில் நகேர்கோயில் நோக்கி புறப்பட்டேன் .மச்சான் மணவையை நோக்கிச்சென்றார்.
கொச்சி அலுவலகத்தை
தொடர்புகொண்டேன் “மறுநாள் காலை பயணப்பையுடன் வந்துவிடு” என்றார்கள் .வீடு வந்து
சேரும்போது கடிகாரம் ஒன்றை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.மகன்கள் இருவருக்கும்
அரையாண்டு தேர்வு தொடங்கிவிட்டதால் மதியமே வீட்டிற்கு வந்திருந்தனர் .சல்மான்
கடந்த சில நாட்களாக சர்க்கஸ் பார்க்க அழைத்து செல்ல சொல்லிக்கொண்டிருந்தான்.எனது
மூத்தமகன் ஸாலிம் 2.0 பார்க்கவேண்டுமென்றான். “நான் நாளை கப்பலுக்கு போகிறேன்” என்றேன்.இருவரும்
நம்பவில்லை.
அரையாண்டு தேர்வு விடுமுறையில்
இந்தியாவின் வணிக தலைநகருக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ரயிலில் பயணசீட்டுகள்
முன்பதிவு செயவைத்திருதோம்.எனவே மகன்கள் இருவரின் முகமும் வாடிப்போயவிட்டது மகன்கள்
இருவரையும் அழைத்துக்கொண்டு 2.0 படம் பார்த்தோம். மாலை வீட்டிற்கு வந்து நான் பயணத்திற்கு
ஆயாத்தமானேன் .தேவையான பொருட்கள் இருக்கிறதா என பார்த்தேன் .இல்லாததை வாங்க
வேண்டும் .அடுத்த சில தினங்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறிகள் வாங்கி வந்தேன்.
இரவு பயண பையை தயார் செய்துவிட்டு
தூங்க போனேன். காலை ஒன்பது மணிக்கு குஜராத் செல்லும் ரயிலில் செல்லவேண்டும்.மாமாவும்
,மாமியும் காலை ஏழரைக்கு வீட்டிற்கு வந்தார்கள் .நண்பர் ஸாம் எட்டரைக்கு வந்தார்
.இப்போதெல்லாம் அவர்தான் நான் கப்பல் செல்லும்போது ரயில் நிலையம் வந்து
அனுப்பிவைக்கிறார்.
பள்ளிவிளை ரயில் நிலையம்
வீட்டிலிருந்து ஐந்து நிமிடம்தான் ரயில் பத்து நிமிடம் தாமதமாக வந்தது.திருவனந்தபுரத்திலிருந்து
முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் எனது இருக்கை அருகில் அமர்ந்தார்கள்
ஒருசில போலிஸ்காரர்களும் நான்கைந்து கட்சி காரர்களும் மட்டுமே இருந்தனர் .கேரளாவில்
அரசியல்வாதிகள் வரும்போது அதிக ஆர்பாட்டம் இல்லை .மதிய உணவு சுனிதா கட்டி
தந்திருந்தாள்.இரண்டரை மணிக்கு எர்ணாகுளத்தில் இறங்கும்போது முதல்வர்
உம்மன்சாண்டியும் இறங்கினார் இப்போதும் அவருடன் வந்த நான்கு கட்சி காரர்கள்
மட்டுமே அமைதியாக நடந்து சென்று காரில் ஏறி சென்றார் .ரயில் பயணிகளுக்கு எந்த
இடையூறும் இல்லை .
மூன்று மணிக்கு அலுவலகம்
சென்றேன் .கப்பல் இப்ப்போது கொரியா செல்கிறது எனவே உனது பயணம் ஞாயிறன்றுதான்
திருவனந்தபுரத்திலிருந்து விமானசீட்டு தருகிறோம் சில ஆவணங்களில் கையெழுத்து போட்டுவிட்டு
வீட்டிற்கு செல்லலாம் என்றார் தாமஸ் .
அவசரமாக அனைத்து பணிகளையும்
முடித்து ரயில் நிலையம் வரும்போது நாலரைக்குமணிக்கு நாகர்கோயில் செல்லும் எரநாட் வண்டி நடை மேடையில்
வந்துகொண்டிருந்தது .பயணசீட்டு எடுத்து அவசரமாக ஏறிக்கொண்டேன் .ரயிலில் அருகில்
அமர்ந்திருந்த பிரான்ஸ் நாட்டு இளைஞன் அர்ஜுனுடன் கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிருந்தேன் .வட இந்தியா ,தென்இந்தியா சுற்றிபார்க்க வந்துள்ளான் .அவியல்
,புட்டு ,தேங்காய் போட்ட மீன் குழம்பு ,ஆப்பம் ஆகியவைகள் பிடித்த உணவுகள் என்றான்
.
வீடு வந்து சேரும்போது இரவு
மணி பதினொன்றரை ஆகியிருந்தது .முழுநாளும் ரயில் பயணத்தில் கழிந்தநாள் .மறுநாள்
மாலையில் அழைத்தேன் விமான சீட்டு வந்துவிட்டதா என
இல்லை என்றார்கள் .இன்று காலை ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் மறு நிமிடமே பதில் வந்தது கப்பலுக்கு போவது
ரத்தாகி விட்டது என .
ஷாகுல் ஹமீது ,13-dec-2018.