Tuesday, 11 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 11

மீண்டும் ஈராக்கை நோக்கி 

      காலையில் 7 மணிவரை  ஜோர்டனின் விடுதியறையில் தூங்கியிருப்பேன் .இது மலை பிரதேசம் ஜனவரி மாத குளிர் ,பயண களைப்பு,தாய்நாடு செல்லும் உற்சாக மனநிலை காரணமாக இருக்கலாம் நல்ல நித்திரைக்கு .

   காலையில் சுடு நீரில் நீராடி விடுதியின் வரவேற்பறைக்கு வந்தேன் .இரு அழகிய இளம் மங்கைகள் குளிருக்கான ஆடைகளை அணிந்து உடலை இறுக்கி அமர்ந்து  எங்களுடன் வந்த ஒருவனுடன் உரையாடி கொண்டிருந்தார்கள் .இரண்டும் இளம் இந்திய முகம் .

   இங்க எப்படி டா மலையாளம் பேச்சு கேக்குதுன்னு பார்த்தேன்.மலையாளி பெண்கள் நர்ஸாக இங்கு வேலை செய்கிறார்களாம் .வேறு முகாமிலிருந்து எங்களுடன் வந்த ஆண் நர்ஸ்  ஒருவனின் கல்லூரி தோழிகளாம்.அவனை பார்பதற்க்காக வந்திருந்தனர் .புன்னகைத்து அறிமுகத்துடன் அவர்கள் உரையாடலுக்கு இடையூறு செய்யாமல் விலகி சென்றேன் .
 
   காலை உணவுக்கு பின் அம்மான் நகரின் வணிக வளாகங்களில் சுற்றி வந்தோம்.எல்லோரும் கொஞ்சம் ஷாப்பிங் செய்தார்கள் .நான் பெரிதாக எதையும் வாங்கவில்லை .

        இங்கிருந்து ஜெருசலம் மிக அருகில் தான் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது .மற்றவர்கள் இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருநாளில் அங்கு போய் வந்ததை சொன்னார்கள் .பின்பு எனக்கு இதுவரை அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

  (Dead sea  )டெட் சீ யும் இங்கு தான் இருக்கிறது .கடல் நீரில் அடர்த்தி அதிகம் .இயல்பாக மிதக்கலாம் .உயிரினங்கள் வாழ இயலாது   இந்த கடலில். அதையும் பார்க்க முடியவில்லை .இதெல்லாம் இங்கு முன்பே  இருப்பது தெரியாமல் போய்விட்டது .

  மதியம் விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூக்கம் . இருள்வதற்கு முன் எங்கள் ஏஜென்ட் வந்து எங்களுடைய கடவுசீட்டையும் ,விமான சீட்டையும் தந்தார் .எனக்கு மும்பை வரை தான்  விமானசீட்டு கிடைத்தது .

  நான் செல்லவேண்டியது திருவனந்தபுரத்திற்கு என்றேன் .எனக்கு டிக்கெட்  இப்படி தான் கிடைத்தது என்றார் ஏஜென்ட் .அனைவருக்கும் மும்பை வரையே விமான சீட்டு கிடைத்தது .
  மறுநாள் காலை தான் பயணம் ராயல் ஜோர்டன்  விமானத்தில் அபுதாபி வரையும் ,அங்கிருந்து மும்பைக்கு கல்ப் ஏர் விமானத்திலும் பயணம் உறுதியாயிற்று .

  இப்போது இரு இரவுகள் நட்சத்திர விடுதியில் தங்குவது கடினமாக இருந்தது .இரவு உணவுக்கு பின் குளிரில் மீண்டும் நல்ல தூக்கம் .
  

25ம் தியதி காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு அம்மான் விமான நிலையம் அடைந்தோம்  மதியத்திற்கு பின் தான் பயணம் .
அபுதாபியில் பின்பு  மீண்டும் நீண்ட காத்திருப்பு. என் இளைய சகோதரன் கை கடிகாரம் ஒன்று கேட்டிருந்தான் அதை வாங்கிகொண்டேன்.இங்கு நிறைய இந்திய முகங்கள் .குறிப்பாக புடவையில் நமது  தமிழ் அல்லது மலையாள சகோதரிகள்.

 புடவை கட்டிய பெண்களை கண்டபோது மனம் அடையும் உற்சாகம் சொந்த ஊருக்கு அருகில் வந்து விட்டோம் எனும் உணர்வு .  பத்து மாதங்களுக்கு பின் புடவையில் பெண்களை பார்ப்பதால் ஏற்படும் ஒரு உளகிளர்ச்சி.பிரான்சிஸ் என்னிடம் சொன்னான் தேக்கோ தும்காரா திதி ஜாரிகே னு .(உன் அக்கா போறான்னு ).கல்கத்தாவின் பிரான்சிஸ் நகைசுவையாக பேசிக்கொண்டே இருப்பான் .அதனால் அபுதாபியின் காத்திருப்பு சலிப்பில்லாமல் கடந்தது .

   அதிகாலை மும்பை விமானத்தில் அமர்ந்தோம் .எங்களுடன் வந்த இருவரை விமானம் புறப்படுவதற்கு  சில நிமிடங்கள் முன் நீங்கள் அடுத்த விமானத்தில் செல்வீர்கள் என அழைத்து சென்றனர் வேறு இருவரை அந்த இருக்கையில் பின்பு அமர செய்தனர் .என்ன காரணமோ 

.
  குடியரசு தினமான 26 ம் தியதி அன்று மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையத்தில்  இறங்கினோம் .எனது பயண பை வரவில்லை .மோசமான வானிலை காரணமாக அதிக எரிபொருள் நிரப்பியதால் உங்கள் பைகளை ஏற்ற முடியவில்லை .மாலையில் வரும் விமானத்தில் வருகிறது மாலை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றனர் .பயண பை வராத அனைவருக்கும் அருகில் உள்ள லீலா நட்சத்திர விடுதியில் அறை தருவதாக சொன்னார்கள் .நான் இரண்டு நாட்களாக விடுதியின் சுவற்றை பார்த்து அலுத்து போய்விட்டது என்றேன் .நீங்கள் சென்று விட்டு மாலையில் வாருங்கள் அதற்கான டாக்ஸி கட்டணத்தை நாங்களே தருகிறோம் என்றனர் .விமான நிறுவன ஊழியர்கள் .

   சுங்க அதிகாரி என்னிடம் இருந்த புகைப்பட கருவியை பார்த்துவிட்டு (உபயோகித்ததுதான் )இதற்க்கு ஐம்பது டாலர் தரவேண்டும் என்றான் .நீண்ட நேரம் விவாதம் அவனுடன் .பணம் தரமாட்டேன் என்றேன் .
   வேறு வழியின்றி இறுதியாக இருபது டாலர்கள் வயிதெரிச்சலுடன் .கொடுத்துவிட்டு வந்தேன் என்னிடம் எந்த பொருள்களும் இல்லாமலே .சுங்க அதிகாரி பணத்தை கையில் வாங்க மாட்டார் .போலிசை அழைத்து கழிப்பறை சென்று அவரிடம் கொடுத்தேன் .அதன் பின் இன்று வரை எப்போதும் பணம் கொடுத்ததில்லை .


  விமான நிலையத்திலேயே ரயிலுக்கு முன் பதிவு செய்துவிட்டு .அறைக்கு சென்றேன் .நண்பர் சிம்சன் லே மூவாயிரம் ரூவால பிளயின்ல போலாமே .நீ டிக்கெட்ட கேன்சல் பண்ணு நான் வாங்கி தாறேன் என்றார் .மறுநாள் காலை ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு எனது பயணசீட்டை உறுதிசெய்தார் .

   மாலையில் அவருடன் சென்று சாந்தாகுருஸ் இல் எனது விமான சீட்டை பெற்றுகொண்டு ,விமான நிலையம் சென்று எனது பையையும்  பெற்றுகொண்டு வந்தோம் .

  27 தியதி காலை எட்டு மணிக்கு பயணம் .ஐந்தரை மணிக்கு புறப்பட்டு பன்னாட்டு முனையம் சென்றோம் .அது திருவனந்தபுரம்,கோழிகோடு வழியாக துபை செல்லும் விமானம் .

  விமானம் புறப்பட்டதும் இட்லியும் ,வடையும் தந்தார்கள் .நீண்ட நாட்களுக்கு பிறகு  இட்லியை பார்கிறேன் .சாப்பிட்டால் பசி அதிகமாயிற்று .விமான பயணங்களில் அவர்கள்  தரும் உணவு பசி தீராது .நண்பன் ஒருவன் சொன்னான் லே மக்கா என்னத்த சாப்பாடு தாரானுவோ பிளேன்ல வெத்தல  ,பாக்கு போல இருக்கு என .

   பத்து மணிக்கெல்லாம் திருவனந்தபுரம்  விமான நிலையத்தில் தரை இறங்கியது விமானம்  .ஜன்னலோர இருக்கையில் இருந்ததால்  பச்சையாக அடர்ந்த தென்னை மரங்களும் ,கடற்கரையும் ,விமானம் தாழ்வாக பறக்கையில் ரம்மியமாக இருந்தது .முதல் முறையாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கிய அந்த இயற்கை காட்சி மனதிலிருந்து அகல மறுக்கிறது .

   அதனால் இப்போதும் உள்ளூர் பயணங்களில் குறிப்பாக திருவனந்தபுரம் செல்லும்போது  ஜன்னலோர இருக்கையை வாங்கி கொள்வேன் .அந்த பசுமையான காட்சியை காண்பதற்காகவே .

   இப்போதெல்லாம் நீண்ட பயணங்களில் ஜன்னல் இருக்கையோ ,நடு இருக்கையோ வாங்குவதில்லை .கால் களைத்தாலும் ,கழிப்பறை செல்ல வேண்டுமென்றாலும் நடை பாதையை ஒட்டிய இருக்கைதான் எனக்கு உகந்தது மற்ற பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் நான் விரும்பும்போது எழந்து கொள்ள முடியும் .

22 ம் தியதி தொடங்கிய பயணம் 27 ம் தியதி தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் .3 வார விடுமுறை .நான் எனது சான்றிதழ்களை        விண்ணப்பிக்கும் வேலையாக அலைந்தேன். ஒருமாதத்தில் மீண்டும் ராயல் கன்சல்டன்சியிலிருந்து அழைப்பு வந்தது .என் உம்மா எனக்காக தீவிராமாக பெண் பார்த்தார்கள் .இப்பமே பாத்து அச்சாரம் வெச்சிட்டா அடுத்த டிரிப்பு வரும்போது கல்யாணம் வெச்சிடலாம் ன்னு .
 ஒன்னும் அமையாததில் எனக்கு மகிழ்ச்சி .

   மீண்டும் மும்பை வந்தேன் லோகேசுக்கும்,எனக்கும் ஒரே தேதியில் பயணம் உறுதியாயிற்று மார்ச் 6 ம் தியதி என நினைக்கிறேன் .மீண்டும் பஹ்ரைன் வழியாக இந்தமுறை ஜோர்டனின் அம்மான் நகருக்கு பயணம்.


    இம்முறையும் முன்புபோல் பஹ்ரைன் விமான நிலையத்தில் 11 மணிநேர காத்திருப்பு .இருப்பதிலேயே கடினமானது விமான பயணம் தான் .வெளிநாட்டு பயணம் என்றால் மூன்று மணிநேரம் முன்னதாகவே செல்லவேண்டும் .பாதுகாப்பு சோதனைகள் ,குடியுரிமை சோதனைக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பு ,விமானம் தாமதமாகும் போது மீண்டும் காத்திருப்பு .நீண்ட பயணங்களில் சரியான ,உணவும் ,குடிநீரும் ,தூக்கமும் இன்றி பயணம் முடியும் போது சோர்ந்து போய் கைப்பையை கூட தூக்க உடலில் வலு இருக்காது .பெற்றோரும் ,நண்பர்களும் பெருமையாக சொல்லிகொள்ளலாம் அவன் வாறது அமெரிக்காலே இருந்தாக்கும் என .
  உள்ளூர் விமான பயணமும் குறைந்தது ஒன்றரை மணிநேரம் முன்பே சென்றே ஆகவேண்டும் .ரயில் பயணம் தான் வசதியானது .

   அடுத்த விமானம் ஏறி .இரவில் அம்மான் நகரை அடைந்தோம் .அதே நட்சத்திர விடுதி .குளித்து ,உணவுக்கு பின் .எங்களது ஒப்பந்த படிவங்கள் சரிபார்க்கப்பட்டு கையொப்பமிட்டு வாங்கிகொண்டனர் .இம்முறை 1 வருட பணி ஒப்பந்தம் .அனைவருக்கும் 3 நிமிட தொலைபேசியும் தந்தனர் .உம்மாவிற்கு அழைத்து பேசினேன் .

   காலை 7 மணிக்கு தயாராய் இருக்கும் படி சொன்னார்கள் .எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் உடன் வந்தனர் . இரவில் பாக்தாத் ஐ அடைந்தோம்.அதே விடுதி  இரவு தங்குவதற்கு .


   அப்போதுதான் தெரிந்தது பக்குபாவில் இரட்டை சம்பளம் கொடுக்கிறார்கள் என .பக்குபா குண்டுவெடிப்புக்கு பிறகு சில நாட்கள் தற்காலிகமாக மூடியிருந்த உணவு கூடம் பின்னர் திறக்கும்போது முதல் மாதம் இரட்டை சம்பளம் தருவதாக சொல்லி பணியாளர்களை கொண்டு வந்து உணவுகூடத்தை தொடங்கியுள்ளனர் .


   ஆனாலும் அங்கு தொடர்ந்து குண்டு வெடித்து கொண்டுதான் இருந்திருக்கிறது .இரண்டாம் மாதம் துவங்கும்போது கேம்ப் பாஸ் எனும் பதவியில் இருந்த ரானா அனைவரையும் ஒன்றிணைத்து தொடர்ந்து இரட்டை சம்பளம் தரவேண்டுமென வேலை நிறுத்தம் செய்துள்ளார் .வேறு வழியின்றி நிர்வாகம் தொடர்ந்து அங்கு வேலை செய்த அனைவருக்கும் இரட்டை சம்பளம் வழங்கியுள்ளது .பக்குபாவை உருவாக்கியதில் பணியாற்றிய எவரும் அதில் பயனடையவில்லை .
ஷாகுல் ஹமீது ,

11-10-2016

3 comments:

  1. விமான நிலையங்களில் நீண்ட காத்திருப்பு உண்மையிலேயே எரிச்சலானதுதான். இந்த நீண்ட பதிவு ( உங்களின் போர் பதிவுகளில் இதுதான் நெடியதா?) நானும் உடன் பயணித்த உணர்வைத்தந்தது ஷாகுல். நட்சத்திர விடுதியாயினும் அடுமனையாயினும் சரி உங்களுக்கு ஒரே இடத்தில் நிலையாக இருப்பது என்பது இயலாத காரியம் அல்லவா?
    உங்களின் எழுத்துக்களிலேயே விடுமுறையின் கொண்டாட்டமும், சொந்த நாடு திரும்பும் மகிழ்வும் துல்லியமாக வாசிப்பவர்களுக்கு தெரிகிறது.
    சில பதிவுகளாக வருகை தராமலிருந்த இளம் பெண்கள் இதோ வந்தே விட்டார்கள் ஜோர்டானின் விடுதி வரவேற்பறையில்.
    ஜெருசேலத்தையும் dead sea யையும் தவறவிட்டுவிட்டீர்கள். அதனால் என்னா shakul is on wheels always. இன்னொரு முறை செல்லுவீர்கள் கட்டாயமாக.
    விமான பயணத்தின் அத்தனை சாத்தியங்களையும் இயல்பாக அழகாக உண்மையாக விவரித்துவிட்டீர்கள். ஜன்னல் இருக்கையின் வசதிகளும் , ஓர இருக்கையின் வசதிகளும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். விமான நிலையத்தில் இப்படி காசு பார்ப்பவர்கள் நிஜ்ம் இன்றும் என்ரும் இருப்பார்கள்.
    உங்களின் மானுடம் மீதான காதலின் வெளிப்பாடேச் இந்த உலகம் சுற்றும் பயணம். எனெவேதான் பெண் அமையாததில் மகிழ்ச்சி என்று குரிப்பிட்டு இருக்கிறீர்கள் ஷாகுல்.
    பக்குபாவை கட்டமைத்தவ்ரகளுக்கு எந்த பலனும் இல்லை என்பது உண்மைதான் எனினும் வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு பிரிந்து எத்தனையோ இன்னல்களின் ஒரே தீர்வாக கிடைத்த இந்த வெளினாட்டு வேலை இருப்பதால், பக்கூபாவின் துவக்க கடின வேலைகளை செய்த உங்களால் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றது தம்பி
    அனுப்டன்
    லோகமாதேவி

    ReplyDelete
  2. அந்த கைக்கடிகாரம் பத்திரமாக இருக்கிறது

    ReplyDelete