Thursday, 6 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 10


  விடுமுறை பயணம் தாயகத்திற்கு
      2003  ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் திக்ரித் வந்தோம் .ஆகஸ்ட் 6 ம் தியதி இங்கு முகாமின் உணவுக்கூடம் துவங்கியது .பக்குபா குண்டு வெடிப்பு எப்போதோ நினைவிலிருந்து அகன்று போயிருந்தது .புதிய பணியிலும் ,நண்பர்களுடனும் இயல்பாக ஒன்றிபோய் ,மகிழ்ச்சியான நாட்களாக போய்கொண்டிருந்த போது தான் செப்டம்பர் 13 ம் தியதி எங்கள் குடியிருப்பு கூடாரம் தீப்பற்றி ,பெரும் இழப்பையும் ,நினைவிலிருந்து அகலாத ஒரு நாளாகவும் செப்டம்பர் 13 மாறிவிட்டது .ஆம் எனக்கு பெரிய இழப்புதான் .
   அனைத்து சான்றிதழ்களும் ,உடமைகளும் இழந்த நாள் அது.அது பற்றி விரிவாக சதாமின் அரண்மனையில் என்னும் பதிவில் எழுதிவிட்டேன்.படிக்காதவர்கள் அந்த பதிவை பார்த்துகொளள்வும் .இந்த தொடர் எழுத காரணமான பதிவு அதுதான் .
    தீ விபத்து ஏற்பட்டபோது கூடாரம் முழுமையாக அணைந்த பின் சென்று பார்த்தேன்.மனம் அப்போதும் சான்றிதழ்கள் இருக்கும் என நம்பி கொண்டிருந்தது .எனது அலமாரியில் ஒரு இரும்பு கருவி மட்டும் கறுப்பாக மாறி எஞ்சியிருந்தது .அதை எடுத்துக்கொண்டேன் .ராணுவ வீரன் ஒருவர் அன்பளிப்பாக தந்தது .(அதை இப்போதும் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன் )
   மறுநாள் முதல் உடுக்க ஆடை இல்லை .பொருத்தமே இல்லாத அளவில் ஒரு கால்சட்டையும் ,பனியனும் தந்தார்கள் .கயிறால் அந்த பாண்டுக்கு மேல் கட்டிய பிறகுதான் அது இடுப்பில் நின்றது .
  உள்ளாடைகள் சில (ஜட்டி தான் ) வாங்கி தந்தார்கள் எல்லாம் அமெரிக்கர்களின்  அளவு சிறிய உடல்வாகு கொண்ட நம்மவர்களுக்கு பொருத்தமே இல்லாதது .தீ விபத்துக்கு பின் சில நாட்கள் அனேகருக்கு உடலிலும் மனதிலும் வலுவே இல்லை .
   கார்த்திக்கின் உடைமைகள் அவன் தங்கியிருந்த அந்த கட்டிடத்திற்குள் இருந்தது .செப்டம்பர் 13 அன்று காலைதான் அதை எடுப்பதற்கு சென்றோம் அது பூட்டியிருந்ததால் பின்னர் எடுக்கலாம் என வந்து விட்டோம் அதனால் அவனது ஆவணங்களும் ,உடைமைகளும் தப்பித்தது .
  கூடாரம் அமைக்கும் குழு வேறு முகாமுக்கு செல்லும் போது அவனையும்  அழைத்தது மிக அதிக ஊதியத்துடன் .நானும் ,லோகேஷும் இங்கு இருந்ததால் மறுத்துவிட்டான். தீ விபத்துக்கு பின் வேலைக்கு வாரதவர்கள் பலர் ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் .
   சில நாட்களுக்கு பின் அனைவரையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்தினர். நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் நூறு டாலர்கள் நஷ்ட ஈடு வழங்க இருப்பதாக சொன்னபோது ,ஜோக்கிம் கொதித்து எழுந்தான் .வேண்டாம் எங்களுக்கு, கம்பனிக்கு நான் தருகிறேன் நூறு டாலர் என்றான். மனிதவளதுறையின் பெண்மணி உங்களில் ஒருவன் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்டதுதான் விபத்து என குற்றம்சாட்டினாள். முடிவு ஏதும்  எட்டபடாமலேயே கூட்டம் முடிந்தது .
  பின்னர் சில நாட்களுக்கு பிறகு அறுநூறு டாலர்கள் நஷ்ட ஈடும்,ஒவ்வொருவருக்கும் ஒரு பயண பை வாங்க நாற்பது டாலரும்,கடவு சீட்டிற்கான செலவை(நூறு டாலர்) கம்பனியே ஏற்றுகொள்ளும் எனவும் தகவல் வந்தது .
   பாக்தாத்திலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் திக்ரித் வந்து பார்வையிட்டனர் .எங்களிடம் இருந்து புதிய கடவுசீட்டுக்கான விண்ணப்பத்தை பெற்றுகொண்டனர் .
    அன்று புகைப்படம் எடுப்பதற்காக ஒரு செப் ன் கோட்டை வாங்கி அணிந்திருந்தேன் .அந்த உடையில் என்னை பார்த்துவிட்டு .யு ஆர் செப் என்றார் டெர்ரி ஆண்டெர்சன்.நான் இல்லை என்றேன், பின்பு என்னை அழைத்து ஷாகுல் இன்று முதல் நீ உதவி சமையல்காரனாக பணிபுரிவாய் என பதவி உயர்வு அளித்து,அடுமனைக்கு கூட்டி சென்று தலைமை சமையற்காரர் கோம்ஸ் யிடம் விஷயத்தைசொல்லி பணி கொடுக்க சொன்னார்  .மூன்று நாட்கள் அடுமனையில் பிரெஞ்சு பிரைஸ் ,பொட்டடோ வெட்ஜ்ஸ் என எண்ணையில் பொரித்தெடுக்கும் பணி செய்தேன் .எல்லாம் உருளைக்கிழங்கின்  வடிவம் மாறியதால் வந்த பெயர்கள்தான் .
  நான்காம் நாள் காலை டெர்ரியிடம் சென்று நான் மீண்டும் ஸ்டோர்ஸ் லேயே வேலை செய்கிறேன் என்றேன் .என்னால் முடியவில்லை .ஸ்டோர்ஸ் ல் கொஞ்சம் கடின பணிதான் இருந்தாலும் எனக்கு 12 மணிநேர பூட்டிய அடுமனைக்குள் ,சமையல் பணியில் என் மனம் ஒன்றவில்லை .லோகேஷ் என்னை திட்டினான் பலர் உதவி சமையல்காரன் ஆக வேண்டுமென காத்திருக்கிறார்கள் சம்பளமும் ஐயாயிரம் அதிகம்.கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதே என்றான் .மனம் திருப்தியில்லாத(job satisfaction) ,மனம் ஒன்றாத எந்த  பணியையும் கோடி ரூபாய் தந்தாலும் செய்ய முடியாது என்று புரிந்துகொண்ட தருணம் அது .மகிழ்ச்சியாக வெளியேறினேன் .
     கடவு சீட்டு கையில் இருந்து  6 மாதம் ஆனவர்கள் விடுமுறையில் ஊருக்கு சென்று வந்தனர் ,கார்த்திக்கும் ஊருக்கு போய் வந்தான் .மீண்டும்
  கொஞ்ச நாட்களில் மனமும் உடலும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.புதிதாக வந்த அனைவரிடமும் கடவுசீட்டை கழுத்தில் அணியும் சிறிய பை ஒன்றை வாங்கி அதில் வைத்துகொள்ள அறிவுறுத்தபட்டனர்.
 விஜயகுமார் கடவுசீட்டை கழுத்தில் தொங்கவிட்டு அலைவதில் கஷ்டமாக இருக்கிறது என்றான் .இங்க பாரு நீ உயிரோட இருந்து பாஸ்போட் இல்லைனா ரொம்ப கஷ்டம் .நீ முடிவு செய் என தீ விபத்தில் அனைத்தையும் இழந்த ஒருவன் கோபத்துடன் சொன்னான் .
    புதிதாக கடவுசீட்டு கிடைத்தவர்களும் கழுத்திலேயே தொங்கவிட்டு கொண்டனர் ,குளிக்கும் நேரம் தவிர .
   திக்ரித் ல் முதல் முதலாக குண்டு வெடித்தது .அனைவரும் ஓடி பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் பதுங்கினோம் .பள்ளி வாசலின் முன்பு பெரிய வாகன நிறுத்துமிடம் .அதன் அருகில் இருந்த கழிப்பறைக்குள் ஒருவன் மாட்டிகொண்டான் .அவனது கால்களில் சிறிய காயம் ஏற்ப்பட்டது .
   அக்டோபர் மாதம் ரமலான் தொடங்கியது .அங்கிருந்த பள்ளிவாசலை எங்களை அழைத்துசென்று ரமலான் நோன்பு துவங்குவதற்கு முன் முழுமையாக சுத்தம் செய்தான் ஆந்திராவின் ரோஷன்.அவனும் ,வயதில் மூத்த கலீல் பாயும் தான் முப்பது நாட்களும் இரவில் சிறப்பு தொழுகையான தராவிஹ் தொழுகையை சிறப்பாக நடத்தினர் .நான் முப்பது நாட்களும் நோன்பிருந்தேன் .அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் நோன்பிருப்பவர்களை எழுப்புவது என் பணி .மாலையில் உணவு கூடத்திற்கு வெளியே வட்டமாக அமர்ந்து நோன்பு திறப்போம் ராணுவ வீரர்கள் சிலரும் எங்களுடன் வருவர் .
  முருகன்  கேட்டான் பாய் எப்படி தண்ணி குடிக்காமலே இப்படி இருக்க முடியிது .முருகா எல்லாம் பழக்கம் .இங்கேயே ரமலானை கொண்டாடினோம் .ரோஷன் தான் பெருநாள் தொழுகையை சிறப்பாக நடத்தினான் .சங்கர் எனக்கு பதினைந்து டாலரில் ஒரு டி சர்ட் வாங்கித்தந்தான் .எனக்கு அது கொஞ்சம் விலை அதிகம். (அப்போதும்,இப்போதும்)
   எனக்கும் ,லோகேசுக்கும் மற்ற சிலருக்கும் ஜனவரி மாதம் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் புதிய கடவுசீட்டு தரப்பட்டது .கிடைத்தவுடன் கையில் தூக்கி கொண்டு மகிழ்ச்சியில் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது என கூவி அடுமனைக்குள் ஓடி ஒரு வட்டமடித்தேன் .
  விரைவில் விடுமுறையில் ஊர்  செல்லும் மகிழ்ச்சி தான் .
  22 ம் தியதி திக்ரித் லிருந்து புறப்பட்டோம் பாக்தாத் ஐ நோக்கி .வேறு உடைகள் இல்லாதாதால் பணிக்கு அணியும் சீருடையில் ஒரு புதியதை அணிந்துகொண்டோம் .நான் புதிதாக ஒரு பயண பெட்டி வாங்கியிருந்தேன் .விஜயகுமார் 12 பனியன்களும்  பணமும் தந்தான் துறையூரில் அவனது விலாசத்தில் அனுப்பி வைக்க .வாரம் தோறும் நாற்பத்தைந்து டாலர்கள் கையில் தருவார்கள் .போர் முனை என்பதால் .இங்கு செலவே கிடையாது .மாதம் பதினைந்து டாலர்கள் தொலைபேசி அட்டைக்கு மட்டும் தவிர.
  மீதி பணத்தை கையில் வைப்பதும் ,பாதுகாப்பதும் கடினம் .எனவே ஊருக்கு செல்பவர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்புவார்கள் .பணத்தை அனுப்புகிறவர்களுக்கு அது வீட்டில் போய் கிடைக்கும் வரை நிம்மதியே இல்லாமல் அலைவார்கள் .கொண்டு போறவன் எடுத்து கிட்டா ,அவன் திரும்பி வராமலே போய்விடலாம் .
   என்னை நம்பி சிலர் பணம் தந்தனர் வீட்டில் கொடுக்க .மொத்தம் இரண்டாயிரம் டாலர்கள் என் கழுத்தில் தொங்கிகொண்டிருந்தது .
  புத்தாண்டுக்கு எங்களுக்கு கிடைத்த மிட்டாய்களும் ,கையில் கிடைத்த எதையெல்லாமோ பெட்டியில் போட்டு வைத்திருந்தேன் .லோகேசுக்கு எதுவும் இல்லை .கம்பளியின் பிளாஸ்டிக் உறை ஒரு பை போல இருக்கும் அதில் அவனுடைய,மிட்டாய்களும், சிலபொருட்களும் இருந்தன .மும்பையில் தான் அவன் ஒரு சிறு பை வாங்கி கொண்டான் .அன்று மாலையே பாக்தாத்தில் ஒரு விடுதியில் போய் சேர்ந்தோம் .
  மறுநாள் காலை அங்கிருந்து ஜோர்டானின் தலைநகரம் அம்மானுக்கு பயணம் .கழிப்பறை,குளிரூட்டி வசதியுடன் கூடிய பேருந்து .வேறு ,வேறு முகாம்களிலிருந்து வந்தவர்கள் என முப்பது பேர் .
  காலை உணவையும் ,மதிய உணவையும் பொட்டலமாக தந்தனர்.அதை திறந்ததும் லோகேஷ் இத எப்படி பாய் சாப்புடுது அவிச்ச கோளில உப்பும் ,மிளகு பொடியும் போட்டு  சப்புன்னு இருக்கு.
  குப்புஸ் ன்னு ஒரு ரொட்டி கொஞ்சம் தடிமனா இருக்கும் ஆனாலும் கையால பிச்சி சாப்பிடலாம் .நம்மூர்ல சப்பாத்தியே சில இடங்களில் போராடிதான் பிய்க்கனும் சாப்பிடும்போது வாயும் வலிக்கும் .கொஞ்சம் சோறு ,தண்ணீர் பாட்டில்கள் மட்டும் தேவைக்கு அதிகமாக.நாங்கள் முகாமிலிருந்து நான்கைந்து ஆப்பிள் பழங்களை கையில் எடுத்து வைத்திருந்தோம் . பயணத்தின்போது பேருந்து  ஜன்னலின் திரைசீலையை திறக்க கூடாது என்றனர் .
    மற்ற நாட்டவர்கள் அதிகம் பேர் அமெரிக்க ராணுவத்திற்கு உதவியாக பணிபுரிவாதால் எங்கள் பேருந்தின் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்றனர் .பேருந்து எங்கும் நிற்காது செல்லும், பாதுகாப்புக்கு பேருந்தின் முன்னால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களுடன் ஒரு ஜீப் சென்று கொண்டிருந்தது .
   முதலில் ஈராக்கின் எல்லை சோதனை சாவடி  அமெரிக்கர்கள் தான் அங்கிருந்தனர் அவர்களுக்கு உதவியாக  சில இராக்கிய வீரர்களும்.
  அதிகாலை புறப்பட்டு மாலை வரை  நீண்ட பயணத்திற்கு பின் அங்கு வந்து சேர்ந்ததும் அனைவரும் கீழே இறங்கி சோதனைகளை முடித்து கை கால்களை தளர்த்தி கொண்டோம் .
   பின் ஜோர்டன் நாட்டின் சோதனை சாவடி  நீண்ட வரிசையில் வாகனங்கள் .சாலை வழியாக ஒரு நாட்டின் எல்லையை கடப்பது மிக கடினம். நம் முன்னால் நிற்கும் அனைத்து வாகனங்களும் சென்று நம் முறை வருவது வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் .
   எல்லையை கடக்கும் அனைத்து பயணிகளின் பெயர்களும் கணிணியில் குடியுரிமை அதிகாரிகளால் சரி பார்த்த பின்னரே அனுமதிக்கபடுவர் .
  இப்படி நீண்ட பயணத்திற்கு பின் பெயர் இல்லாததால் திரும்பி பாக்தாத் சென்றவர்கள் உண்டு.
  நண்பன் சங்கர் அப்படி எல்லை வரை வந்து நீண்ட காத்திருப்புக்கு பின் திருப்பியனுப்பட்டான் .சொந்த காசு நாற்பத்தைந்து டாலர் செலவழித்து காரில் தனிமையில் பாக்தாத் விடுதிக்கு சென்று சேர்ந்ததை சொன்னபோது திகைப்பாக இருந்தது.
   அங்கு காத்திருக்கும்போது பஞ்சாபி ஒருவரை பார்த்தேன் .உலகில் மூன்று விசயங்கள் பொதுவானது ,தண்ணீர் ,காற்று ,ஹிந்துஸ்தானி. பாஜி கியா ஹால் ஹோ என்றேன் .இங்கு பஸ்ராவில் ஓ .என் .ஜி .சி யின் எண்ணை எடுக்கும் இடத்தில் பணிபுரிவதாக சொன்னார் .எங்கிருந்து வருகீறீர்கள் என கேட்டறிந்து கொண்டார் .
  இரவில் எல்லையை தாண்டி ஜோர்டன் நாட்டிற்குள் நுழைந்தோம் .நல்ல குளிர் பத்து மணியாகிவிட்டது   விடுதிக்கு செல்லும்போது .எனக்கும் லோகேசுக்கும் ஒரே அரை நட்சத்திர விடுதி அது .அங்கே இரவில் நல்ல உணவு கிடைத்தது .எங்களின் ஏஜென்ட் எங்களை சந்தித்து கடவுசீட்டுகளை பெற்றுகொண்டு காலையில் வருவதாக கிளம்பிசென்றார் .குளிருக்கு இதமாக கம்பளிக்குள் நுழைந்துததும் நல்ல நித்திரை .
ஷாகுல் ஹமீது

06-10-2013

2 comments:

 1. 12 மணி நேரம் ஒரே இடத்தில் இருப்பதை அதன் பொருட்டு கிடைக்கும் அதிக ஊதியத்தின் பொருட்டுக்கூட மறுத்ததை இப்பொது உங்களின் பதிவுகளைப்படித்தபின் புரிந்துக்கொள்ள முடிகிறது ஷாகுல். அப்படி அடைந்து கிடப்பவரா நீங்கள்?
  மகிழ்சியில் அடுமனைக்குள் வட்டமடித்து சுற்றிய உங்களை காணவே முடிந்தது என்னால்!!!
  குப்பூஸ் அபுதாபியில் சாப்பிட்டிருக்கிறேன். தங்கி இருக்கும் இடத்திலும் பணிச்சூழலிலும் பயணங்கலிலும் என எப்போதும் எங்கும் குண்டுவீச்சும் தாக்குதலுமாகவே இருந்தாலும் உங்களின் உற்சாகத்தை அவை ஏதும் செய்யமுடியவில்லை போலிருக்கிறது
  அடுத்த பதிவிற்காய் காத்திருக்கும்
  லோகமாதேவி

  ReplyDelete
 2. ஒரு நாட்டின் எல்லையை கடப்பது மிக கடினம்.

  ReplyDelete