.
கடந்த திங்கள்கிழமை (09-09-2024) மலேசியாவின் லிங்கியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். கொரியாவில் ஞாயிறு முதல் புதன் வரை தேங்க்ஸ் கிவிங்க் விடுமுறை. கப்பலில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து திங்கள்கிழமை மாலையில் ஒரு சிறு கூடுகை.
சில எளிய உணவுகளும் மூன்று பாட்டில் வைன் மட்டும் வைத்திருந்தார் காப்டன் ஷின். குடிப்பிரியர்கள் மூணு பாட்டில் வைன் எந்த மூலக்கி ஆச்சி என வேதனை பட்டனர். பீர் வைக்கவில்லை எனும் ஏமாற்றம். என்னை போல் குடிக்காதவர்களுக்கு எந்த சிரமமும் இல்லை.
எனக்கு செவ்வாய்க்கிழமை சிம் கார்டு கிடைத்தது. மாலையில் இருபதாம் தேதி மற்றும் இருபத்தி ஐந்தாம் தேதி கரைக்கு செல்ல படகு ஒருங்கு செய்திருப்பதை காப்டன் சொன்னார். இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் ஐம்பது சதவீத பணியாளர்கள் கப்பலில் இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.
கப்பலிலிருந்து கரைக்கு செல்ல படகு அங்கிருந்து மலாக்கா செல்லும் போக்குவரத்து கம்பனி கணக்கில். கப்பலில் எப்போதுமே எதுவும் நடக்கலாம். கல் கோன் தேக்கா என ஹிந்ந்தியில் சொல்லாவர்கள் நாளைய தினத்தை கண்டது யார். அதனால் முதல் குழுவில் இருபதாம் தேதி கரைக்கு செல்ல பெயர் பதிந்து கொண்டேன். காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கரை மணிவரை. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு கரையில் தங்க அனுமதியில்லை. பிப்ரவரி இருபதியைந்தாம் தேதி கப்பலில் ஏறினேன். அதன் பின் இதுவரை நிலத்தில் கால் படவில்லை. இருநூற்றி எட்டு நாட்களுக்குபிறகு வரும் வெள்ளிக்கிழமை என் பாதம் நிலத்தில் பதியும் வாய்ப்பு பிரகாசமாகியது.
கரை செல்வது வெள்ளிக்கிழமை கிடைத்தால் ஜிம்மா தொழ வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன் அதுபோல் வெள்ளிக்கிழமை ஷோர் லீவ் அமைந்தது. இங்கே கோலாலம்பூரில் சையதலி அண்ணன் இருக்கிறார். கடந்த ஜனவரியில் அவரது மகள் சாய்மா திருமணம் நடந்தபோது கலந்துகொள்ள இயலவில்லை. ஜூலையில் மகனின் திருமணம் அப்போது கப்பலில் இருந்தேன்.
அங்கே அவர்கள் இல்லம் செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன் மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் போக இரண்டு மணிநேர பேருந்து பயணம். போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இன்னும் தாமதம் ஆகும். மதியம் ஜும்மா தொழுகை.
ஆறு மணி நேரத்தில் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் நேற்று ஹமீமா மைனியிடம் போன் பண்ணி வீட்டுக்கு வரவில்லை என சொன்னேன். 2007 இல் கப்பல் மலேசியாவின் போர்ட் கெலாங்க் வந்தபோதும், 2013 இல் குடும்பத்தோடும் அவர்கள் இல்லம் சென்றுள்ளேன். இப்போது சந்தித்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது.
எனது பத்தாம் வகுப்பு கட்டுரையில் இறுதி தேர்வில் தோல்வியடைந்ததோடு அந்த தொடரை நிறுத்தியிருந்தேன். அதன் பின்பான என் வாழ்வின் மாற்றத்திற்கு சையதலி அண்ணனே காரணம். எனது பத்தாம் வகுப்பு இரண்டாம் பாகம் எழுதும்போது சையதலி அண்ணனை பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
இன்று மாலை இரவுணவுக்கு சென்றபோது எங்கள் விடுமுறை உறுதியான செய்திகிடைத்தது இம்மாத இறுதியில் நான்,பாட்டீல்,ரைமுண்டோ,ஜெர்ரி,இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ்,முதன்மை அதிகாரி ஹோ ஆகியோரின் மாற்று பணியாளர்களுக்கான பெயர்கள் வந்தது. தேதி குறிப்பிடாமல் இம்மாத இறுதியில் கப்பலிலிருந்து இறக்கவிட கோலாலம்பூர் அலுவலகம் உத்தேசித்துள்ளது.
விடுமுறை செய்தி கப்பல் காரனுக்கு எப்போதுமே மிகுந்த உற்சாகத்தை தரும். பிலிப்பினோ மோட்டர்மேன் ஜெர்ரிக்கு ஒன்பதரை மாதங்கள் ஆகிறது. ரைமுண்டோ,நான்,பாட்டீல் ஒன்றாக கப்பல் ஏறினோம் வரும் இருபத்தி மூன்றாம் தேதி ஏழு மாத பணிஒப்பந்தம் முடியும்.
கப்பலிலிருந்து விடுமுறைக்கு செல்லும் முன் கரைக்கு போய் வருவதும் நல்ல வாய்ப்பு. மலாக்கா வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளம். பள்ளிவாசல்,இந்து கோயில்,சர்ச் 1511 கட்டப்பட்ட கோட்டை,மலாக்கா ஆறு இப்படி பலதையும் பார்க்கவும் பின்னர் விரிவாக ஒரு கட்டுரையும் எழுதலாம்.
நாஞ்சில் ஹமீது,
18 september 2024.
No comments:
Post a Comment