Friday, 27 September 2024

விடுமுறையும் பயணசீட்டும்

 


                 ஏழுமாத பணிஒப்பந்தத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜிப்ரேல்டரில் வந்திறங்கி கப்பல் ஏற முடியாமல் போனதால். மீண்டும் 23 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து பணியில் இணைந்து ஏழு மாதங்கள் முடிந்துவிட்டது.

  இம்மாதம் முதல் வாரத்தில் சிங்கையிலிருந்து ஊருக்கு செல்கீறிர்களா? என கேப்டன் கேட்டபோது  ஊருக்கு செல்பவர்களில் நான்குபேர் தயாராகவில்லை. மாத இறுதியில் பணிஒப்பந்தம் முடிந்து செல்கிறோம் என விருப்பத்தை தெரிவித்தனர்.

   ஆப்ரிக்காவின் புன்டா ஐரோப்பாவை நோக்கி சென்ற கப்பல் திரும்பி மலேசியாவுக்கு வந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியதால். இப்போது ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

 ஆம் இருபதாம் தேதியே கோலாலம்பூர் அலுவலகம் இம்மாத இறுதியில் பணியாளர் மாற்றம் செய்யவிருப்பதை உறுதி செய்தது. மாற்று பணியாளர்கள் வரும் முப்பதாம் தேதி காலை கப்பலுக்கு வருவர். முதன்மை அதிகாரி மற்றும் இரண்டாம் இஞ்சினியர் ஒரு நாள் கப்பலில் இருந்துவிட்டு ஒன்றாம் தேதி இறங்குவார்கள்.

  நான,ரைமுண்டோ,பாட்டீல்(நாங்கள் மூவரும் ஒன்றாய் பணியில் இணைந்தோம்)ஜெர்ரி வரும் திங்கள்கிழமை மதியம் கப்பலில் இருந்து இறங்கி கோலாலம்பூரில் ஒரு நாள் தங்கி (01-10-2024)மறுநாள் மாலையில் விமானம்.

   ஜெர்ரி மணிலாவுக்கும் நாங்கள் மூவரும் மும்பைக்கும் பயணிப்போம். இங்கிருந்து திருவனந்தபுரம் நான்கு மணிக்கும் குறைவான நேரம் பறந்தால் போதும். கோலாலம்பூர்-மும்பைக்கு ஐந்தரைமணி நேரம். மும்பையில் இரவு பத்தரைக்கு இறங்கி மறுநாள் அதிகாலை ஐந்தே முக்காலுக்கு அடுத்த விமானம்.

   மாலையில் காப்டனை சந்திக்க பிரிட்ஜில் சென்றேன். இரண்டாம் அதிகாரி விகாஸ் உள்நாட்டு பயண சீட்டு முன்பதிவுக்கு போன் நம்பர் கேட்டிருந்தார். அப்போது தான் தெரியும் எனக்கு கோலாலம்பூர் – திருவனந்தபுரம் டிக்கெட் வரவில்லை என. விகாஸ் கணினியில் எனது பயண சீட்டை காட்டினார். இங்கருந்து நேரடி விமானம் இருப்பதை சொல்லி அதில் டிக்கெட் கேட்டு நேற்றே சொல்லியிருந்தேன்.

    “கேப்டன்ட்ட சொல்லி பாரு, ஆனா எதுவுமே புரியாது அந்த மனுஷனுக்கு”என்றான் விகாஸ்.

 கொரிய காப்டன் ஷின் பேசும் ஆங்கிலம் இங்கே யாருக்கும் புரியாது. நாம் சொல்ல வேண்டிய விசயத்தை,கை,கால்,கண்,வாயை உபயோகித்து சொன்னால் அவர் புரிந்து கொண்டாரா இல்லையா என்பதும் நமக்கு தெரியாது.

  காப்டன் வரும் வரை காத்திருந்து விசயத்தை சொன்னேன்.

“இப்படி தான் டிக்கெட் வந்திருக்கு”

“திரும்ப ஒரு மெயில் அனுப்பி டைரக்ட் பிளைட் புக் பண்ண சொல்லுங்க, நான் இரவு முழுவதும் பாம்பேல காத்து கிடைக்கணும்” என்றேன்.

 “நான் கோலாலம்பூர் அலுவலகத்துக்கும் மெசேஜ் அனுப்பிட்டேன்,டைரக்ட் பிளைட்ல டிக்கெட் இல்லையா இருக்கும் அதான் இப்படி வந்துருக்கு” என சொல்லிவிட்டார்.

   பேசி புரிய வைக்க முடியாது  என்பதை நான் புரிந்து கொண்டேன். 

  விமான சீட்டு பதிவு செய்யும் நிறுவனத்துக்கு காப்டன் கப்பல் பணியாளர் பெயர்,பதவி,செல்லும் ஊர் ஆகிய விபரங்களை அனுப்பினால் அங்கிருந்து இரண்டு அல்லது மூன்று விமான விபரங்களை அனுப்புவார். அதை காப்டன் அவர் விருப்பம்போல் அல்லது எங்களிடம் கேட்டுவிட்டு டிக்கெட்டை பதிவு செய்ய சொல்வார்.

   அதில் மாற்றங்கள் வேண்டுமெனில் செய்து கொள்ளலாம். இரண்டாம் அதிகாரி ஹபீசி “அவரு ஒரு மெயில் அனுப்பனும் உன் டிக்கெட்ட மாத்த சொல்லி,அங்கே இருந்து திரும்ப ஒரு பிளைட் டீட்டெயில் அனுப்பி கேப்பாங்க.இவரு அத திரும்ப கன்பார்ம் பண்ணனும்,இத செய்ய மடிச்சிதான் தான் முடியாதுன்னு சொல்றாரு” என்றார்.



  விகாசிடம் கிட்டேன். “ஆப்லோக் இன்கே சாத் கைசே காம் கர்த்தா ஹே”

  “பாய் பூச் மத்,ரொம்ப கஷ்டம்”என்றான்.

  வரும் புதன்கிழமை காலை பத்து மணிக்கு நாகர்கோவிலில் வீட்டில் இருப்பேன்.

  நாஞ்சில் ஹமீது,

27-09-2024


  

No comments:

Post a Comment