Saturday, 18 May 2024

நீண்ட பயணம்


 

            கப்பலில் எப்போதும் நீண்ட பயணம்தான்.2008 ஆம் ஆண்டு நான் இருந்த ஐஜின் எனும் கப்பல் சிங்கபூரிலிருந்து- சிலியின் சாண்டியாகோவுக்கு கார்களை ஏற்றிக்கொண்டு 20knot வேகத்தில் (1knot=1.85km)இருபத்தியாறு நாட்கள் பயணித்து சிலியை அடைந்தது. அப்போது அதுதான் எனது நீண்ட பயணமாக இருந்தது.

  2013 இல் பிக்சஸ் லீடரில் ஜப்பானின் டோயோகாசியிலிருந்து பனாமா கால்வாயை கடந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்ல முப்பது நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது.

   2007 ஆம் ஆண்டு  ஸ்டேயிட்ஸ் வென்சர் எனும் கப்பலில் இருந்தபோது அதன் நீண்ட பயணம் மேற்கு மலேசியாவின் கோட்ட கினா பாலுவிலிருந்து தாய்லாந்தின் லாம் சா பானுக்கு முப்பத்தியாறு மணிநேரம். மலேசியா,சிங்கப்பூர்,இந்தோனேசியா,தாய்லாந்து மட்டுமே செல்லும் கப்பல் அது.ஏறக்குறைய தினமும் துறைமுகம் தான். அதிகாலை இரண்டு மணிக்கு கோட்ட கினா பாலு, காலை எட்டு மணிக்கு லௌபான் என இரு மலேசிய துறைமுகங்களுகப்பின் மதியம் இரண்டு மணிக்கு புருநேவின் மௌரா துறைமுகம். ஒரே நாளில் மூன்று துறைமுகம் என்பது கப்பல் காரனின் ரத்தத்தை உறிஞ்சிவிடும்.

  2016 ஆண்டு முதல் எல் பி ஜி கப்பலில் இணைந்தேன். முதல் இரண்டு ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளின் அபுதாபி,கத்தார்,சவூதி,குவைத் நாடுகளில் சரக்கை ஏற்றி கிழக்கு நாடுகளான ஜப்பான்,சீனாவில் இறக்கவேண்டும்.போய் வர ஒரு மாதம் ஆகும். உணவும்,எண்ணையும்,உதிரி பாகங்களும் ஏற்றி,தேவைபட்டால் பணியாள் மாற்றமும் செய்ய கப்பலை பன்னிரண்டு மணிநேரம் சிங்கையில் நிறுத்துவோம்.

   2019 ஆண்டுமுதல் அமெரிக்காவில் சரக்கை நிரப்பி ஆசியாவின் ஜப்பான்,சீனா,வியத்னாம் நாடுகளுக்கு வர 16knot வேகத்தில் ஒரு மாதம் வரை ஆகும். தென்னாப்பிரிக்காவை சுற்றி வருவதென்றால் நாற்பது நாட்களுக்கு மேலாகும்.

  சன்னிஜாய் நாட்குறிப்புகள் எழுதிய நாட்களில் சன்னிஜாய் இந்தியாவின் கல்கொத்தாவிலிருந்து  கொச்சி,சுயஸ் கால்வாய்,மத்தியதரைக்கடல் ஜிப்ரேல்டர் முனை தாண்டி அட்லாண்டிக் வழியாக அமெரிக்காவை அடைந்தபோதும் முப்பத்தி மூன்று நாட்களே ஆனது. மீண்டும் அவ்வழியாக இந்தோனேசியா என இருமுறை உலகை வட்டமடித்தோம். அது நீண்ட பயணமாக இருந்தாலும் சவ்வு முட்டாய் போல இழுவையில்லை.

 தற்போது இருக்கும் எல் என் ஜி அலையன்சில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி கொரியாவில் சரக்கை இறக்கிவிட்டு புறப்பட்டோம். சிங்கப்பூர் நோக்கி மிக குறைந்த வேகத்தில் செல்லுங்கள் என கப்பல் நிறுவனம் சொன்னது. இந்த கப்பலில் இஞ்சின் கிடையாது. 11,000kv ஜெனரேட்டர்கள் மூன்றும்,சிறிய ஜெனரேட்டர் ஒன்றும் உள்ளது.  அதிலிருந்து வரும் மின்சாரத்திலிருந்து மோட்டார் ஒன்றை சுற்ற வைத்து அது ப்ரோப்பல்லருடன் இணைக்கப்பட்டிருக்கும்.(ஆல்டேர்னட்டர்).

  இந்த ஜெனரேட்டர்கள் டீசலில் இயங்கும் அல்லது எல் என் ஜி வாயுவில் இயங்கும்.ஒரேயொரு ஜெனரெட்டரை இயக்கி மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டதால் கப்பல் ஐந்து நாட் வேகத்தில் சிங்கப்பூரை வந்தடைய பதினாறு நாட்களை எடுத்துகொண்டது. (ஒரு நாள் ஜெனரேட்டர் இயங்க 25 டன் டீசல் வேண்டும்) 

  சிங்கையில் ஒரு நாள் நிறுத்தி 2200டன் டீசல் நிரப்பி,உணவு,உதிரி பாகம் வாங்கி,பணியாள் மாற்றமும் நடைபெற்றது. அப்போதுதான் தகவல் வந்தது மிக மெதுவாக துபாயை நோக்கி செல்லுங்கள் மே மாதம் ஆறாம் தேதி அங்கு போய் சேர்ந்தால் போதுமென.கப்பல் நிற்கிறதா,நகர்கிறதா என தெரிவதேயில்லை. கடலம்மா சாந்தமாக இருந்ததால் காலியாக இருந்த இந்த பெருங்கலம் ஆடவே இல்லை. கப்பல் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு அதிர்வு இருந்துகொண்டே இருக்கும்  அவையேதும் இல்லாமல் மிக சாந்தமாக காளை வண்டி செல்வது போல் போய்கொண்டே இருந்தோம். இலங்கையை சுற்றி எங்களூரின் கன்னியாகுமரி, மணக்குடி,சொத்தவிளை முட்டம், என் கிராமமான மணவாளக்குறிச்சி,குளச்சல், தேங்காய்பட்டணம் கேரளா,மங்களூர்,மும்பை குஜராத் வழியாக அமீரகத்தின் தாஸ் தீவுக்கு மே மாதம் ஐந்தாம் தேதி வந்து சேர்ந்தோம். கப்பலின் கடிகாரமும் வாரம் ஒரு மணிநேரம் என ஐந்து வாரமாக பின்னோக்கி என்றதில் தெரியவேயில்லை.வழக்கமாக துபாயிலிருந்து கொரியா செல்ல பதினாறு நாட்கள் எடுத்துகொள்ளும் .

    என் வாழ்வில் இதுதான் மிக நீண்ட கப்பல் பயணம் நாற்பது நாட்கள்.

Das Island 


  நாஞ்சில் ஹமீது,

08-may-2024

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment