Monday, 2 April 2018

நடை பயணம்

                    நீண்ட நடை அவ்வப்போது செல்வதுண்டு இன்று காலை நடையாக நான் தற்போது வசிக்கும் நாகர்கோவிலில் இருந்து எனது சொந்த ஊரான மணவாளக்குறிச்சிக்கு காலை தொழுகைக்கு பின் நடக்க தொடங்கினேன் .வெகு நாட்களாகவே  நான் பிறந்து வளர்ந்த ஊருக்கு கால் நடையாக செல்ல வேண்டுமென எண்ணியிருந்தேன் .நாகர்கோயில்–மணவாளக்குறிச்சி பதினாறு கிலோமீட்டர்கள்.


  முன்பு ஒருமுறை நாகர்கோயில் –கன்னியாகுமரி நடந்திருக்கிறேன் இருபது கிலோமீட்டர்கள்.பொற்றையடியில் இருக்கும் மருந்துவாழ் மலைக்கு ஓவ்வொரு விடுமுறையிலும் இருமுறையாவது ஏறி விடுவேன் .சதுரகிரி மலைக்கு ஏறி இறங்கியபின் மருந்துவாழ் மலை மிக சிறியதாக இருக்கிறது .

  1989  ஆம் ஆண்டு ஆண்டுதோறும் நடக்கும் தக்கலை பீர்முஹம்மது அப்பா தர்காவில் நடக்கும் ஞான புகழ்ச்சி விழாவிற்கு சென்றிருந்தோம் .இரவு முழுவதும் அங்கு இருந்துவிட்டு காலையில் வீட்டிற்கு செல்வது திட்டம் .அதிகாலை ஐந்துமணிக்கு கலைஞர் கருணாதியின் ஆட்சி கலைக்கப்பட்டது எனும் செய்தி கிடைத்தது .

 பேருந்துகள் ஓடவில்லை நானும் நண்பர்களும் தக்கலை- மனவளாக்குறிச்சிக்கு  நடக்க தொடங்கினோம்  பதிநான்கு கிலோமீட்டர் .மூன்றரை மணிநேரம் அதுதான் எனது முதல் நீண்ட நடை .

இப்போது சூரிய உதயம் மிகவும் தாமதமாகிவிட்டது  ஆறரைக்கு தான் கதிரவன் வெளிவருகிறான் .காலை நேர தொழுகை ஐந்து நாற்பதுக்கு .ஆறு மணிக்கு முன்பே வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.குளிரே இல்லை டிசம்பர் ,ஜனுவரியில் உலகின் பெரும்பகுதி கடும் குளிரில் அவதிப்படும் .ஞாயிறு ஆகையால் நகரம் இன்னும் விழித்திருக்கவில்லை .

  வில்லியம் மருத்துவமனையை ஒட்டிய ஹென்ரி சாலை வழியாக ஜோஷ்வா தெரு சாலை .ஹென்றி சாலையிலுள்ள ஆல்பா பள்ளியின் வெள்ளிவிழா அலங்கார வளைவு பெரும் பொருட்செலவில் கட்டி முடியும் நிலையில் இருந்தது.வில்லியம் மருத்துவமனை அருகில்  துவங்கும் ஹென்றி சாலை முடிவில் சாம் மருத்துவமனை இருக்கிறது.

 ஸ்காட் பள்ளியை ஒட்டிய சாலை மிக குறுகலானது ஓரல் காது கேளாதோர் பள்ளியை தாண்டினால் ஹாஸ்டல் மைதானம் .நடை பயிற்சி செய்பவர்கள் யாரும் இன்னும் மைதானத்திற்கு வரவில்லை .கிரிக்கெட் மட்டையுடன் சில மாணவர்கள் மைதானத்தின் வாயில் வழியாக நுழைந்து கொண்டிருந்தனர் .

   மைதானத்தை ஒட்டிய கிறிஸ்தவ கோயில் ஞாயிறு காலை பிரார்த்தனைக்கு தாயராகிகொண்டிருந்தது .ஆலயம் கிறிஸ்மஸ்,புத்தாண்டுக்கு போடபட்டிருந்த மின்விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது .இந்த சாலை தண்ணீர் தொட்டி சாலையில் முடியும் .இதன் முடிவிலும் ஓராண்டுக்கு முன் புதிதாக ஒரு மகப்பேறு மருத்துவமனை வந்துவிட்டது .ஓஹி புயல் தாக்கியபோது இந்த சாலை மரங்களும் ,மின் கம்பங்களும் விழுந்து முழுமையாக இருநாட்கள் துண்டிக்கபட்டு இருந்தது நினைவில் வந்து மறைந்தது .

  தண்ணீர் தொட்டி சாலையை தாண்டி டெரிக் சந்திப்புக்கு செல்லும் சாலையின் துவக்கத்தில் இருக்கும் கோழிகடை மின் விளக்குகளால் விழித்திருந்தது .இந்த சாலையிலும் ஒரு மருத்துவமனை இருக்கிறது .நண்பர் சாம் பிரின்சின் வீடும் இங்குதான் .டெரிக் சந்திப்பில் வந்து சேர்ந்தேன் .இது தான் பிராதன சாலையான  கே .பி ரோடு .

 மணவாளகுறிச்சி செல்ல ஆசாரிபள்ளம் சாலையை அடைந்தேன்.வசந்த் அன் கோ ,ஐரின் மருத்துவமனை தாண்டினால் பிஷப் வளாகம் .அதன் முன் குப்பை மலைபோல் குவிந்திருக்கிறது நாற்றம் வேறு .

 நேசமணிநகர் சி எஸ் ஐ ஆலயத்தில் ஞாயிறு பிரார்த்தனை தொடங்கியிருந்தது .ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து பேருந்துகள் வந்துகொண்டிருந்தன .ஓட்டை ,ஓடிசல்கள் தான் இப்போது அதிகம் .இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு நேசமணி பேருந்துகள் அழகாக இருக்கும் .

 இங்கு பணிமனையில் புதிய பேருந்துகளுக்கு உடல் வடிவமைக்கும்(body building ) மையம் ஒன்று தனியாருக்கு கொடுக்கபட்டிருந்தது .திருநெல்வேலிக்கும், மற்ற மாவட்ட பேருந்துகளையும் இங்கு உடல் வடிவமைத்து கொடுப்பார்கள் .அது காணாமல் போனதற்கு உழல் தான் காரணமோ என்னமோ?நான் அப்போதெல்லாம் பேருந்தை பார்த்தாலே சொல்வேன் இது நாகர்கோயிலில் வடிவமைக்கபட்டது என .

அனந்தன் பாலம் இடப்புறமாக சானல் கரையை ஒட்டி சென்றால் .கோணம் அகில இந்திய வானொலி நிலையம் சென்றுவிடலாம் .அனந்தன் பாலம் அருகில் இப்போது வங்கிகளும் ,ஏ டி எம் களும் ,நிறைய கடைகளும் வந்துவிட்டன.
ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி.பழைய காச நோய் மருத்துவமனை சிறுவனாக இருக்கும் போது இவ்வழியில் பேருந்தில் செல்லும்போது மிகவும் சுற்றிகொண்டு செல்கிறதுபோல் தோன்றும் .
மருத்துவகல்லூரி வளாகத்திற்குள் நுழைத்தேன் .நிறைய உயரமான தேக்கு  மரங்கள் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் .பிரதான வாயிலில் நுழைந்து பின்புறமுள்ள வாயில் வழியாக வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது.

 முன்பு காச நோய் மருத்துவமனையாக இருக்கும்போது .என் வீட்டருகில் உள்ள ராமகிருஷ்ணன் தாத்தா மகன் ஸ்ரீதரன் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் உள் புகுந்து வெளியேறினோம் .அப்போதும் அனுமதி இருந்ததா என தெரியவில்லை .
பின்புற வாயிலுக்கு வெளியேதான் தான் பரபரப்பாக காலை நேர இட்லி,ஆப்பம் என வியாபாரம் நடக்கிறது .வாயிலை ஒட்டியிருக்கும் கடையின் முன்பகுதி அழுக்கும் ,தூசியுமாக பாழடைந்த கடை போல இருக்கிறது .
இங்குதான் நோயாளிகளுக்கு உணவும் ,பானங்களும் தயாராகிறது .மருத்துவ கல்லூரி அருகிலேயே எப்படி இவ்வளவு சுத்தமில்லாமல் கடைகள் நடத்துகிறார்களோ .பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் போல .

ஆசாரிபள்ளம் காவல் நிலையமும் மரக்கடையும் தாண்டி சானல்கரை அருகிலும்,அதை ஒட்டிய தென்னந்தோப்பிலும்  பாலிதீன்
தண்ணீர் பாக்கெட்கள் குவிந்து கிடக்கிறது கண்ணுகெட்டிய தூரம் வரை .பின்புதான் தெரிந்தது  அரசு டாஸ்மார்க்
கடைதான் காரணம் என .மருத்துவ கல்லூரி அருகிலேயே சாரயக்கடை .

 அந்த தென்னம்தோப்பில் அனைத்து தென்னை மரங்களும் மொட்டையாக இருப்பதை முன்னரே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்த்திருக்கிறேன் .கடந்த ஆண்டு வறட்சியில்தண்ணீர் இல்லாமல் பட்டு போனதாக அறிந்தேன் .
பாம்பன்விளைக்கு முன்பு ஒரு பெரிய மருத்துவமனையும் புதிதாக வந்துள்ளது .மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் இங்குபகுதி நேரமாக பணி செய்ய ஏற்ற இடம் என ஒரு எண்ணம் வந்து மறைந்தது .
பின்பு தோப்பூர் சந்திப்பு  சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்துள்ளது .அதனால் இவ்வூருக்கு இப்பெயர் வந்திருக்கலாமோ?தோப்பூர் சந்திப்பிலிருந்து ராஜாக்கமங்கலம் ,எதிர் திசையில் இரணியல்-தக்கலை செல்லும் சாலைகள் உள்ளன.

அதன் பின் சாந்தபுரம் ,இங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் தொண்ணூறுகளில் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன் .காலையில் மாணவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர் .சாந்தபுரம் கிறுஸ்தவ ஆலயம் மிக பழமையானது பார்பதற்கு மிக பெரிதாக தெரிந்தது .
கொஞ்சம் மேலே அரசன்விளைக்கு முன்பு ஒரு இந்து கோயில் உள்ளது அதன் எதிரில் உள்ள வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் குழாயில் பித்தளை நல்லி இருந்தது  ஆச்சரியம்தான். அந்த வீட்டுக்காரர் நிச்சயம் எழுபது வயதுக்காரர் ஆக இருக்க வேண்டும் .அந்த தண்ணீர் குழாய்க்கும் அவரே காவல் அதனால் தான் பித்தளை நல்லி  அங்கு மட்டும் இருகிருக்கிறது . வழிநெடுகிலும் எங்கும் பொதுகுழாய்களில் பிளாஸ்டிக் நல்லி தான் பொருத்தபட்டிருந்தது.சில இடங்களில் நல்லியே எல்லாம் குடிகாரர்கள் வேலைதான்  .

அரசன் விளை சந்திப்புக்கு முன் ஒரு சாமில் அதன் எதிரில் கொட்டாரம் (அரண்மனை)போல் ஒரு பெரிய வீடு .இங்கு யோகிராம் சூரத் குமார் ஆஸ்ரமம் ஒன்று உள்ளது இந்த வழியாக செல்லும்போதெல்லாம் அங்கு ஒருமுறை செல்ல வேண்டும் என நினைப்பேன் பல ஆண்டுகளாக செல்லவேயில்லை .

இன்று உட்புறமாக அந்த பெயர் பலகை இருந்த அம்புக்குறியை நோக்கி நடந்தேன் .பிரதான சாலையிலிருந்து பத்தடி தாண்டியதும் எங்கும் பாலிதீன் தண்ணீர் உறைகள் நிறைந்து கிடக்கிறது .அருகில் எங்கோ டாஸ்மார்க் இருக்கிறது .
குழாயில் தண்ணீர் குடத்துடன் நின்ற இளம்பெண்ணிடம் ஆஸ்ரமம் எவ்வளவு தூரம் என விசாரித்தேன் ,நேர போங்க கிட்டதான் என்றாள்.

ஒரு தென்னம் தோப்புக்குள் இருக்கிறது ஆஸ்ரமம்.அடர் காட்டுக்குள் வந்துவிட்டதுபோல் சுற்றிலும் மரங்கள்.புதியதாக கட்டிடம் கட்டிகொண்டிருக்கிறார்கள் .ஒரு வயதானவர் யோகிராம் சூரத்குமார் ,யோகிராம் சூரத்குமார் ஜெயகுருராயா என உச்சரித்து கொண்டே தியான கூடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார் .

  என்னை கண்டதும் உள்ளே வாருங்கள் என அன்போடு அழைத்தார் .காலணியை கழற்றிவிட்டு உள் சென்று நாற்காலியில் அமர்ந்தேன்.தென்னை ஓலையால் முடைந்த மேற்கூரையும் ,பக்க சுவர்களும்  (நாங்கள் அதை செத்த பெரை என்போம் )தரை மணல் .அவரே பேசினார் .நீங்கள் முஸ்லிமா என கேட்டார் .சிரித்துக்கொண்டே ஆம் என்றேன் .ஊர் எங்கே , நாகர்கோயில் எனக்கு .அவரது பேச்சு மொழியில் அவர் கன்னியாகுமரிகாரர் இல்லை என்பதை உணர்ந்து எந்த ஊர் என கேட்டேன் .திருச்சிங்க நம்மளுக்கு என்றார் .

  வழியில் எங்கும் நிற்கவோ யாரிடமும் பேசவோ இல்லை அதுவரை .இன்று இங்கு திருவாசகம் வாச்சிப்பார்கள் இருந்துவிட்டு போங்க என வேண்டிக்கொண்டார் .
 இயற்கை உந்தியது கழிவறையை கேட்டு சிறுநீர் கழிக்க சென்றேன் .அங்கேயுள்ள அடுமனையில் ஒரு பாட்டி அன்று வருபவர்களுக்கு காலை உணவாக கஞ்சி தயாரித்துகொண்டிருந்தார்கள்.தேங்காய் போட்டு சுடு கஞ்சி சுவையானது .என்னிடம் எய்யா கஞ்சில போட ரெண்டு தேங்கா தொலிச்சி தாய்யா என கேட்டார் .

 அங்குன இருக்கு பாரு குத்தி என மண்ணில் நாட்டி வைத்திருந்த ஈட்டி போலிருக்கும் தேங்காய் தொலிக்கும் கருவியை காண்பித்தார் .நான் முதல் தேங்காயை தொலிக்கும் போதே பாட்டி அறிந்துவிட்டாள் அதில் தேங்காய் தொலித்து எனக்கு முன் அனுபவம் இல்லை என . ஆரம்பித்ததும் எய்யா கை பாத்துய்யா,எய்யா தெரியானுனா உட்டுரு வேற யாரவது இப்பம் வருவாவ அவியல்ள்ட்ட சொல்லி தொலிச்சிகிடுதேன். இல்லை நான் தொலிப்பேன் என நான்கு தேங்காயை தொலித்துவிட்டேன்.

அப்போது அங்கு வந்தவர் அதன் பொறுப்பாளர் என அவர் அந்த பெரியவரிடம் கேட்ட கேள்விகளில் தெரிந்து கொண்டேன் .என்னை காட்டி அவர் யார் என்ன செய்கிறார் என பெரியவரிடம் கேட்டார் .கஞ்சிக்கு தேங்காய் தொலிக்கிறார் நடந்தே நாகேர்கோயிலில் இருந்து மணவாளகுறிச்சிக்கு போறாராம் என சொன்னது என் காதில் விழுந்தது .
 இப்பம் கஞ்சி வெந்துவிடும் குடித்துவிட்டு போ என கேட்டுகொண்டார் பாட்டி.இல்லை பாட்டி வேறொரு நாள் வருகிறேன் என்றேன் . அங்கிருந்து புறப்படும்போது அந்த பெரியவர் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்கிகொண்டார் .

 முன்பு ஒருமுறை திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமம் சென்றபோது , யோகிராம் சூரத்குமார்  ஆஸ்ரமத்தில் மதிய உணவு சாப்பிட்டோம் .தினந்தோறும் பசியுடன் வரும் ஆயிரம்பேருக்கு மேல் அங்கு உணவு வழங்கப்படுகிறது அன்னதானம் தான் .
மீண்டும் பிராதன சாலையை வந்ததும் அரசன்விளை சந்திப்பு ஒரு சாலை இங்கிருந்தும் ராஜக்கமங்கலதிற்க்கும்,சரல் வழியாக குருந்தன்கோடுக்கும் செல்கிறது .சரல் செல்லும் சாலையில் ஒரு பெரிய ஆலமரம் எப்போதும் பார்கிறேன் இப்போதும் கண்டேன் .ஒகி சாய்க்கவில்லை .சரல் அருகில் சேனா பள்ளி உள்ளது .பள்ளி நாட்களில் சேனா பள்ளிக்கு திருநைனார்குறிச்சி வழியாக வாடகை மிதி வண்டியில் வருவோம் .மணிக்கூர் ஒரு ரூபாய் என நினைவு .சிறுவனாக இருந்தபோது பெருமாள்பிள்ளை சைக்கிள் கடையில் கால் வண்டியில் மணிக்கூர் முப்பது காசுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுகொண்டோம் .

 அரசன்விளை சாலையில் உள்ள கடைகளில் இருபதுக்கும் மேற்பட்ட வாழை குலைகளை தொங்க விட்டிருப்பார்கள் .பாளையங்கோட்டை ,ரசகதலி,எத்தன் ,செந்துளுவன் ,வெள்ளைதொளுவன்,பூங்கதலி,கற்பூரவல்லி ,பேயன் ,மட்டி,சிங்கன்,பச்சைபழம்................................ என .

அரசன் விளையை தாண்டி சாலையோரமாக விலையுயர்ந்த மது பாட்டில்களும் ,பீர் புட்டிகளும் கிடக்கிறது .கொஞ்சம் காலி நிலம் நீண்ட காலமாகவே இதில் எந்த பயிரும் இல்லை .எதிரில் உள்ள இடத்தில மருத்துவமனைகான இடம் என பலகை இருந்தது .ஒத்தையாக இருந்த கடையில் தேநீர் அருந்தலாம் என அமர்ந்தேன் .

ஒரு பெண்மணி கடையை நடத்துகிறார் .சட்டையில்லாமல் கையில் சிறு பொட்டலத்துடன் இருந்த பெரியவர் .எங்க இருந்து வாறீய என்றார் .நாரோல் மணவாளகுறிச்சிக்கு போறேன் .நடந்து போறீய ஏதும் வேண்டுதலா என அருகிலிருந்த நடு வயதுக்காரர் .வேண்டினால் ஒண்ணும் கிடைக்காது .செய்துதான் வேண்டியதை பெறவேண்டும் என்றேன் .

  சட்டை அணியா பெரியவர் உங்களுக்கு மனவளாகுறிச்சியா ,கன்னகுறிச்சியாக்கும் எனக்கு ,அங்க மூணு  சாயிப்புமாரு உண்டு இப்பம் மணவாளகுறிச்சில தாமசம் .நான் மணல் கம்பெனில வேலே செய்து ரிட்டைடு அங்க பண்டு கருமண்ணு செமந்து உள்ள போனேன் என்றார்  .சுல்தான் தெரியுமா என கேட்டேன்,ஆமா அவருக்க தம்பி யூசுப் ,அண்ணன் சேக்மீரான் எல்லாரும் அங்க தானே வேலே பாத்தாவே என்றார்  .

 நான் சுல்தானுக்க மொவன் என்றேன் .சாயிப்பு கம்பேனிக்க மின்ன கட போட்டிருந்தாரு ரிட்டேர்டு ஆனா பொறவு இப்பம் எப்படி இருக்காரு .இறந்துவிட்டார் இரண்டு மாதங்களுக்கு முன் என்றேன் .ஆறுதல் வார்த்தைகளுக்கு பின் . அம்மை இப்ப சொகமா இருக்கவாள ,நல்லா பாத்து கிடுங்கப்பா என்றார் .

  நான் செல்லும் வழியில் என்னுடன் அவரும் நடந்தார் வீட்டுக்காரி இறந்த பொறவு பத்து வருசமா நான் இங்க தான் இருக்கேன் மொவன் இங்க வீடு போட்டிருக்கான் .போலிசுல இருக்கான்  ராத்திரி வேலைக்கு போனான் இனிதான் வருவான் என என்னுடன் பேசிக்கொண்டே வந்தவர் .இதுதான் மொவனுக்கு வீடு போயிட்டுவா தம்பி என வாயிலை திறந்து உள் நுழைந்தார் தாத்தா என ஒரு குழந்தை கூப்பிட்டது .

 அடுத்து மாறச்சன் ஆஸ்பத்திரி .இன்னும் அதே பழைய ஒட்டு கட்டிடம் .மிக பழைய எம் பி பி எஸ் மருத்துவர் .முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றியுள்ள பகுதிகளில் தற்கொலை முயற்சி செய்து உயிருக்கு போராடுபவர்களை,மற்ற மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில்  டாக்டர் மாறச்சன் மட்டுமே சிகைட்சையளிபார் .இது போலீஸ் கேஸ் என பலரும் அப்போது தயங்குவார்கள் சிகிச்சைதர .என் உறவினர் ஒருவர் வயிறை தானே பிளேடால் கீறியபோது  உடனே வெள்ளிச்சந்தை மாறச்சனிடம் கொண்டுபோங்கள் என்றார்கள்.
 இருபத்தியேழு தையல்கள் இது நடந்து 29 ஆண்டுகள் ஆகிறது .இப்போதும் நலமாக இருக்கிறார் .

அருகில் ஒரு வீட்டின் முன் கண்ணீர் அஞ்சலி ஒரு பெண் நேற்று இறந்துவிட்டார் என இருந்தது .பிறப்பு 1976 என் வயதுதான் இறப்புக்கான வயது இது இல்லையே என்றது மனம் .  வெளிச்சந்தைக்கு சற்று முன் பன்றி இறைச்சியும் ,அருகிலேயே  மாட்டிறைச்சியும் விற்கிறார்கள் .

  வெள்ளிக்கிழமைகளில் இங்கு சந்தைகூடும்  அதனால் இவ்வூர் இப்பெயர் பெற்றது .இங்கிருந்து மணவிளை செல்லும் சாலையில் அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி உள்ளது .ஸ்ரீ ராம தியேட்டர் இங்கிருக்கிறது அதை தாண்டி ஒரு  கல்யாணமண்டபம் ஒரு குளம் அதில் அதில் அல்லியும் ,தாமரையும் கிடந்தது  .குளக்கரைக்கு எதிர்புறம் சாலையை ஒட்டி மலகுவியல் நாற்றம் மூக்கை பிடித்து கொண்டே நடந்தேன். வீடுகளில் கழிப்பறை இருந்தாலும் இன்னும் பலருக்கு குண்டியில் புல் உரசினால் தான் மத்தது வெளிய வரும் போல .
தூய்மை இந்தியா பேசுபவர்கள் காலையில் இங்கு நின்றால்தான் அது சாத்தியமாகும் போல .குளம் தாண்டி கடலைகடை காரர் வீடு .அவர் ஆசான் வேறு முறிவுகளுக்கு கட்டு போடுவார் .அவர் மகன் ஜெயராம்ராஜ் என நண்பர் தற்போது சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

  வழியில் இந்து கோயில்களும் ஆலமரங்களும் பனைமரங்களும் நிறைந்த சாலை வெள்ளமடி வரை .மணவை அன்பர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தவர் என்னை அடையாளம் கண்டு கையசைத்தார் .ஆம் ஊர் நெருங்கிவிட்டது .வெள்ளமடி சந்திப்பிலிருந்து ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோயில் செல்லும் சாலை ,ஈசன்தங்கு சாலை ,குளச்சல் சாலைகள் சந்திக்கின்றன .வெள்ளமடியில் சன் குழும பொறியியல் கல்லூரி உள்ளது .கேரள மாணவர்கள் அதிகம் பயில்கின்றனர் .

 பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் தோற்றத்தில் ஜோடியாக வந்தவர்கள் பைக்கை நிறுத்திவிட்டு நின்றிருந்தனர்.திருவனத்தபுரம் சொந்த ஊர் கன்னியாகுமரி சென்றுவிட்டு வருவதாக சொன்னார்கள் .

 டேக் ப்ளோர் கோ .கயிற்று கம்பனி என்பார்கள் .மிதியடிகள் இன்னும் பல கயிறு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் .எனக்கு பதினைந்து வயதிருக்கும் போது ஆயுத பூஜை நாட்களில் இங்கு நடக்கும் பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளை பார்க்க இரவுகளில் வந்துள்ளேன் .
இதன் அருகிலும் ஆலமரம் நிற்கிறது .அடுத்து கட்டைக்காடு அரசு பள்ளி அருகில் வரும்போது மணவையின் சுக்கூர் அண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் என்னை ஏறுமாறு சொன்னார் .இல்லை நடையாக்கும் என்றேன்  .இங்க தாமசத்துக்கு வந்தாச்சா என கேட்டார் .இல்லை என்றேன் அப்போ நாரோல் ல இருந்த நடையா என்றார் .பதிலாக சிரித்தேன் .

  அடுத்து அம்மாண்டிவிளை விளைகள் நிறைந்த ஊர் ஆதலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது என படித்திருக்கிறேன் .இந்த சந்திப்பில்லிருந்து இயக்குனர் பாரதிராஜா தமிழகதிற்கு அறிமுகபடுத்திய முட்டம் கடற்கரைக்கு செல்லலாம் .அங்கு கலங்கரை விளக்கமும் ,தற்போது ஜே பி ஆர் மீன்பிடி துறைமுகமும் உள்ளது .மிக அழகிய  கடற்கரைகளில் ஒன்று.பார்க்கவேண்டிய இடம் இது .ஆழி சூழ் உலகு நாவலை எழுதிய ஜோ டி குருஸ் இவ்வூரை சார்ந்தவர் .அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதி ராஜ காட்டிய முட்டம் ரயில் நிலையத்தை தேடி யாரும் இங்கு அலைய வேண்டாம் .
சாத்தன் விளைக்கு அருகில் மிமிக்ரி கலைஞர்,எனது நண்பர் என்னை கண்டார் ஓரிரு வார்த்தைகள் பேசினோம்.முன்பு மேடை நிகழ்சிகளை நடத்தியுள்ளார் .அம்மாண்டிவிளையில் புரோட்டா கடை நடத்துகிறார் .

சாத்தன்விளை கோயில் தாண்டி பெரிய இறக்கம் .இங்கிருந்து வாகனங்களில் சென்றால் மிக வேகமாக வயிறு குலுங்க செல்லும் .இந்த குத்தற ஏத்ததுல சைக்கிளிலில் கீழே இறங்காமல் போயிருக்கிறேன் .

மணி ஒன்பதே கால் .சுனிதா போனில் அழைத்தாள் என்னா சாரே போய் சேர்ந்தாச்சா என்றாள் இல்லை இப்பந்தான் மணவாளகுறிச்சி பாலம் என்றேன் .இன்னும் போய் சேரல்லையா .நீங்க ஒரு சரியான லூசு,நடக்காரம் இவுரு .வயறு கொத்துபா ஓதுமே இப்போ என்றாள்.ஆமா அஜி அக்காட்ட கேட்டேன் காப்பிக்கு என்னதுன்னு ,ஓறட்டியும் இறைச்சியும் நீ சீக்கிறம் வான்னு சொன்னா அங்க போய்தான் காப்பி குடிக்கணும் என்றேன்  .

   மணல்வாழும் குறிச்சி ,இங்குள்ள மணலில் யுரேனியம் ,தோரியம் ,கார்டனைட்,மோனோசைட்,ரூட்டைல் என தனிமங்கள் நிறைய கிடைக்கிறது .இந்திய மணல் அபூர்வ ஆலை இங்குள்ளது மத்திய அரசு நிறுவனம் .தோரியம் இந்தியாவில் அதிகமாக கிடைக்கும் கடற்கரை இது .

  நான் சிறுவனாக இருக்கும் போது நிறைய மணல் மேடுகளாக இருந்தது அனைத்தையும் எடுத்துவிட்டார்கள் இப்போது .1800 களில் ஜெர்மனியில் இந்திய கயிறுகளில் சில தனிமங்கள் ஒட்டி இருந்ததை கண்டு அது எங்கிருந்து வந்தது என ஒருவர் விசாரித்து மணவாளகுறிச்சிக்கு வந்துள்ளார்.இங்கு அவர் எதிர்பார்த்ததைவிட நிறைய தனிமங்கள் இருந்ததால் அது எப்படி வந்தது என ஆராய்ந்ததில்   வேளிமலையில் உருவாகி கடியபட்டிணம் கடலில் கலக்கும் வள்ளியாறு  கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சேர்த்தது என கண்டுகொண்டார் .இந்தியாவில் சிறந்த கிராமம் என இருமுறை மத்திய அரசு விருது பெற்ற கிராமம் இது .

    மணவை சந்திப்பில் நண்பர் சிங்குடன் பத்துநிமட உரையாடல் .பின்னர் எனது தெருவான காந்தரிவிளையில் எனது சகோதரி வீட்டிற்கு சென்றேன் .சாலமி (என் சகோதரி என்னை அப்டித்தான் அழைப்பாள்) நீ நடந்தா வாற அங்கேருந்து என்றாள் .

  மிக மெதுவாக நடக்க வேண்டும் ஆர்வ கோளாறில் ஒரே நாளில் அதிக தூரம் மிக வேகமாக நடந்தால் மறுநாள் படுத்துவிட வேண்டியாதுதான் உடலை அதிகம் வருத்த கூடாது என 2009 ஆண்டு நாகர்கோயில் –கன்னியாகுமரி நடக்கும்போது நண்பர் முத்துகுமார் சொன்னார்.

  பதினோரு மணிக்கு முன் பேருந்தில் ஏறி ஒரு மணிக்குள் வீடு வந்து சேர்ந்தேன் .
கடந்த ஜனவரி 21 ம் தியதி தான் நாகர்கோவில்-மணவாளகுறிச்சி நடை சென்ற அனுபவம் இது .
03 april 2018

ஷாகுல் ஹமீது .

10 comments:

 1. Very nicely written..i visualise My self walking in my village..keep writing such interesting things Shahul

  ReplyDelete
 2. மிக அருமை காக்கா!

  ReplyDelete
 3. அன்பின் ஷாகுல்

  பல்வேறு பணிச்சுமைகளின் காரணத்தால் உடன் வாசிக்கமுடியாமல் வெகுதாமதமாக ’நடைப்பயணம் ’வாசித்தேன். வாசித்துமுடித்ததும் கால் வலித்தது அத்தனை நேரமும் தூரமும் உங்களுடன் நானும் ‘’நாரோலிலிருந்து, மணவாளக்குறிச்சி’’ வரை நடந்த களைப்ப!!
  சைக்கில் கூட ஓட்டத்தெரியாததால் செல்வராணியின் இருசக்கர வாகனத்தில் இமயப்பயணமும், அதிகபட்சமாக வீட்டினுள்ளிருந்து வாசலுக்கு நடக்கவே ஆயாசப்படுபவளாதலால் உங்களின் நடைப்பயணமும் என்னை பிரமிக்க வைக்கின்றன
  வழக்கம்போலவே வழியெங்கிலும் இருப்பவற்றை நாங்களும் கண்டுகொண்டே உடன் வருவதுபோல அழகிய விவரிப்பும் காட்சிப்படுத்தலும்
  கடந்து சென்ற இடங்களையும் முன்னர் இப்படியான நீண்ட நடை சென்ற அனுபவங்களையும் சொல்லி இருக்கிறீர்கள், அது சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றது கோழிக்கடையின் மின் விளக்குகள் குளமெங்கும் ’’கிடக்கும்’’ அல்லியும் தாமரையும் குப்பைகள், ம்துக்கடைகள், காய்ந்த தென்னைகள், என்று அழகாக இயல்பாக செல்கிறது பயணம்.
  கஞ்சிக்கு தேங்காய் தொலிப்பது, இடையில் ரமண மகரிஷி ஆஸ்ரம் பற்றிய குறிப்பு வாழையின் வகைகள் என்று நீங்கள் எழுதியிருக்கும் இந்த்ப்பதிவு இன்னும் சில காலம் கழித்து பெரும் வரலாற்று ஆவணமாகிவிடும், ஒரு நகரின் சாலைவழிகள் அவற்றின் முந்தைய நிலை, பல வருடங்களுக்கு முன்பிருந்த மருத்துவர், தற்கொலை முயறசியில் ஈடுபடுபவர்களை அவர் காப்பாற்றுவது, மணிக்கு 1 ரூபய்ய்கு வாடகைசைக்கிள் கிடைத்தது, கயற்றில் ஒட்டியிருந்த துகள்களைத்தொடர்ந்து வந்து பின்னர் இப்போதைய தோரியம் ஆலை என என எத்தனை முக்கிய விஷயங்களுக்கு இப்பதிவு சாட்சியாக இருக்கும்?
  ’’குளத்தில் அல்லியும் தாம்ரையும் கிடந்தது’’ இந்த வரி மனசில் ஓடிக்கொண்டே இருந்தது, அல்லி இருந்தது, மலர்ந்திருந்தது, பூத்திருந்தது என் எப்படியும் எழுதியிருக்கலாம் ஆனால் இந்த ‘’கிடந்தது’’ அழகாக அமைந்துவிட்டது. எனக்கு லா சா ரா எழுதுக்களை நினைவூட்டியது இவ்வார்த்தைப்பிரயோகம்
  போர்முனை நினைவுகளில் இப்படித்தான் ‘’ ஆலிவ் மரத்தில் கட்டப்பட்ட இரண்டு ஆடுகள் ‘’ எனக்கு மனதில் பதிந்திருக்கின்றது.
  நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  ஒறட்டி, நல்லி – இவற்றின் பொருள் எனக்கு விளங்கலை

  ReplyDelete
 4. Nalli... thanner varum thirugu kuzhai...
  Oratti... adai seiyum athe mavil sudappadum oru kalai allathu iravu unavu... muluthaga theriavillai...

  ReplyDelete
  Replies
  1. ஒறட்டி
   ஊற வைத்த அரிசியை பொடித்து மாவாக்க வேண்டும் ,புட்டுக்கு பொடிப்பது போல ,இடியாப்பம் என்றால் இன்னும் மென்மையாக இருக்க வேண்டும் .
   பொடித்த மாவை பதமாக உருளியில் வறுத்து எடுக்க வேண்டும் .வறுத்த மாவை தேவையான அளவு,தண்ணீர்,துருவிய தேங்காய் ,உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து லட்டுகள் போன்ற அளவில் உருளைகள் பிடித்து கொள்ள வேண்டும் .
   உருளை மாவுகளை ஒறட்டி பலகைகளில் தட்டி எடுத்து தோசை கல்லில் சுட்டு எடுக்க வேண்டும் .இப்போது ஒறட்டி பிரசிங் வடசேரி ,கோட்டார் கடைகளில் கிடைக்கிறது .
   ஆட்டிறைச்சி ,மாட்டிறைச்சி ,முட்டை கறி அசைவ பிரியர்களுக்கு .
   உருளைக்கிழங்கு கறி,பாசி பருப்பு அல்லது மைசூர் பருப்பு குழம்பு பச்சை மிளகாய் ,பூண்டு சேர்த்தது ,கடலை கறியுடன் சேர்த்து சாப்பிட சுவையானது .காலை மற்றும் இரவுணவுக்கு ஏற்றது .
   வறுத்த மாவில் தண்ணீர் கவனமாக சேர்க்க வேண்டும் .
   சாப்பிட்டு விட்டு எழுதுங்கள் சகோதரி சுனிதா .

   Delete
 5. மாவை கொதிக்க வைத்து சுடான நீரில் பிசையவும்

  ReplyDelete
 6. அருமையான பயணம். உங்கள் மொழிநடையில் நானும் கூடவே வந்தது போல உணர்ந்தேன். தொடருங்கள்.

  ReplyDelete