கப்பல் காரன் டைரி - நூல் வாங்க
விக்னேஷ் ஹரிஹரன் சன்னி ஜாய் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய உரை
கடல், கப்பல், வணிகம் போன்ற சொற்களைப் படித்தவுடன் நம் வாசிப்பின் படிநிலைக்கு ஏற்ப சாண்டில்யனோ, ஜோ டி குரூஸோ, சங்கப் பாடல்களோ நினைவு வருவது இயல்பு. பொதுவில் கடல் தமிழ்ப் புனைவின் செல்லம். காரணம், கடல் பற்றி நம்மிடம் இருக்கும் கற்பனைகளுக்கு இணையாக அனுபவங்கள் இல்லை. மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம் என்பதாலோ என்னவோ நாம் பெரும்பாலும் கடற்கரையிலேயே நின்றுவிட்டோம்.
தமிழில் நிலவும் ஏனைய துறைசார் தரமான புத்தகங்களுக்கான பற்றாக்குறைக்கு நிகராகவோ கூடுதலாகவோதான் கடல், கப்பல்துறை சார்ந்த புத்தகங்களுக்கான பற்றாக்குறையும் நிலவுகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் அந்த துறையும் அது சார்ந்த வாழ்க்கையும் அடைந்திருக்கும் மாற்றங்கள் ஜோ டி குரூஸின் கட்டுரைகள் போன்ற மிகக் குறைவான அபுனைவுகளிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக கப்பல், மாலுமி வாழ்க்கை போன்றவை எனக்குத் தெரிந்து விரிவாகப் பதிவு செய்யப்படவில்லை. இணையத்தின் பரவலாக்கமும் பிளாக் எழுத்துக்களும் வரத் தொடங்கிய பிறகுதான் இந்தத் துறை மிக மெல்ல கவனம் பெறத் தொடங்கியது. இந்த அடிப்படையிலேயே ஷாகுல் ஹமீதின் கப்பல்காரன் நாட்குறிப்புகள் என்ற இணையப் பக்கம் முக்கியத்துவம் பெற்றது. தன் கடலோடி வாழ்வில் பல கப்பல்களில் இயந்திரக் கைவினைஞராகப் பணியாற்றிய ஷாகுல் ஹமீத் தன் அனுபவங்களைத் தொடர்ந்து பதிவேற்றத் தொடங்கியபோது அந்த வலைப்பக்கம் பரவலான கவனம் பெற்றது.
கப்பல்காரன் நாட்குறிப்புகளின் ஒரு பகுதியான “சன்னி ஜாய் நாட்குறிப்புகள்” கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகான அவரது முதல் கப்பல் பணி அனுபவங்கள். கப்பல்காரன் நாட்குறிப்புகளில் மிகப் பரவலாக வாசிக்கப்பட்ட பகுதிகளுள் ஒன்று சன்னி ஜாய் நாட்குறிப்புகள். தன்னளவிலேயே கடும் பணியும், ஆபத்துகளும், அசாத்தியமான அனுபவங்களும் நிறைந்த கப்பல் வாழ்வில் நோய் தொற்றுக் காலப் பதட்டம், அது உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, அவை கப்பல்துறையையும் அது சார்ந்த மனிதர்களையும் பாதித்த விதம், போன்ற விஷயங்கள் உருவாக்கிய தாக்கத்தைப் பதிவு செய்கிறது சன்னி ஜாய் நாட்குறிப்புகள்.
கப்பல் வாழ்வின் நுட்பமான விவரணைகள், தகவல்களின் வழியே நாம் இதுவரை அறியாத யதார்த்த கப்பல் வாழ்வின் அனுபவங்கள் இந்த நூலில் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றின் புதுமைக்கும் சிறப்புக்குமான முக்கியக் காரணம், அவை ஒரு கப்பல் நிர்வாகியின் அனுபவங்களாக இல்லாமல் சராசரி கப்பல் ஊழியரின் அனுபவங்களாக இருப்பதே. அதன் விளைவாக இந்த அனுபவங்களில் உருவாகும் நுட்பம் தனித்துவமானது.
மேலும் இந்த அனுபவங்கள் எந்த பாவனைகளும் இல்லாத கள்ளமற்ற குரலில் எழுதப்பட்டிருக்கின்றன. கொரோனா பாதித்துவிட்டதாக பயப்படும் ஃபிலிபைன்ஸ் நாட்டுக்காரனான கப்பாவுக்குக் கபசுரக் குடிநீர் கொடுக்க விரையும் ஷாகுல் ஹமீதில் வெளிப்படும் அதே கள்ளமற்ற தன்மைதான் சீனப் பெண்களின் சமூக நிலையை இந்தியப் பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசும் இடத்திலும் வெளிப்படுகிறது. தன் யதார்த்த குரலையும் கள்ளமற்ற தன்மையையும் இந்த நாட்குறிப்புகளில் அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஷாகுல் ஹமீத். வாசகர்களை அசத்தும் நோக்கமின்றி அவர்களையும் தன் சக பயணிகளாகவே கருதி அண்மையிலிருந்து உரையாடுகிறார்.
கப்பாவுக்குக் கொரோனா, சீனப் பெண்ணின் இந்தியா பற்றிய மனப்பதிவு, சீனத் துறைமுக அனுபவங்கள், போன்ற இடங்கள் இந்த நாட்குறிப்புகளில் முக்கியமானவை. இத்தகைய நூதன அனுபவங்களுக்கு நிகராகவே கப்பல் பணியின் அன்றாடச் சிக்கல்களும், சந்தோஷங்களும், யந்திர அறையின் வெப்பமும், கப்பலின் அதிகார அடுக்கும், பன்மைத்துவமும், நட்பும், கப்பல் பணியில் எப்போதும் சமீபித்து இருக்கும் மரணத்தின் சாத்தியங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
ஆனால் இவை அத்தனைக்குப் பிறகும் ஷாகுல் ஒரு கதிரெழுகையை ரசிக்கத் தவறுவதில்லை. அதுவே இந்த “சன்னி ஜாய்” நாட்குறிப்புகளின் முதன்மைச் சிறப்பு. அதுவே நான் அறிந்த ஷாகுல் அண்ணாவின் குணம்.
விக்னேஷ் ஹரிஹரன்,
இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர்.






No comments:
Post a Comment