Tuesday, 10 February 2026

எழுத்து - தியானம் கணேஷ் கடிதம்

 வணக்கம் அண்ணா.

     ‘தினமும் எழுதுங்கள். எழுதுவதும் ஒருவகை தியானம் போல’ என்று நீங்கள் நேற்று சொன்னது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கவே, எழுதலாம் என்று இரவு உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் போது தான் நீங்கள் சொன்னதின் உள்ளர்த்தம் புரிந்தது. 

    எழுத எழுத உள் மனதில் இருந்து எண்ணங்கள் எழும்பி வருகிறது. அந்த எண்ணங்களை கவனித்து அதை ஒருமுகப்படுத்தி எழுத்தில் கொண்டு வருவது கிட்டத்தட்ட தியானமே தான்! 

     ஆசிரியர் ஜெயமோகன் இம்முறை டாலஸ் வந்திருந்தபோது, கேள்வி பதில் நேரத்தின் போது ஒரு அன்பர் கேட்டார் - வெண்முரசு போன்ற பெரிய படைப்புகளாகட்டும், கோவிட் நேரத்து நான் ஸ்டாப் சிறுகதைகளாகட்டும், எது உங்களை எழுத வைக்கிறது என்று. அதற்கு அவர் பதிலளிக்கும் போது,  எழுத என்று உட்காரும் போது, கதாபாத்திரங்களாகட்டும், கதைக்களனாகட்டும், ஒரு கட்டத்திற்கு பிறகு அதுவே உங்களை ஆட்கொண்டு உங்களை எழுத வைக்கும் என்று. அது எவ்வளவு உண்மை!

      என் மும்பை நாட்களைப் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன். எழுத எழுத அடிமனதிலிருந்து ஏதேதோ எண்ணங்கள் - நான் மறக்க நினைத்த, மறந்து விட்டேன் என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்ட, கசப்பான என ஏதேதோ எண்ணங்கள் மேலெழுந்து வருகிறது. ஒருவேளை அதை எல்லாம் எழுத்தாக, சிறு கதையாகவோ, நாவலாக மாற்றினால் அந்த கசப்பை மாற்ற முடியும் என நினைக்கிறேன். 

சற்று முன்னர் தான் உங்களின் ‘அன்னம்’ சிறுகதை படித்தேன். அதில் வரும் அஹமது கதாபாத்திரம் கிட்டதட்ட மும்பையில் என் நாட்களைப் போலிருந்தது. 

அடுத்த முறை சந்திக்கும் போது இன்னும் விரிவாகப் பேச வேண்டும். 

அன்புடன்,

கணேஷ்,

டாலஸ்.

  


     கணேஷ் நலம் தானே டாலஸில் எதிர்பாராவிதமாக உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. மனம் மனதிலிருப்பது மூளைக்கு எட்டி எழுத்தாக மாறுவது தியானம் தான். ஆரம்பத்தில் மனதில் நிறைய இருக்கும் எழுத்தாக வராது. சிறிது நாட்கள் எழுதினாலே உங்கள் மொழி அமைந்து எழுத்து வந்துவிடும்.

     2003 – 2004 ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் இருந்தேன். 2016 இல் எனது பிளாக்கில் ஈராக் போர்முனை அனுபவங்கள் எழுதும்போது என்னிடம் எந்த குறிப்பும் கிடையாது. எல்லாம் மனதிலிருந்து கோர்வையாக எழுந்து வந்தது. அப்போது ஆசிரியர் ஜெயமோகனிடம் கேட்டேன். “சும்மா இருந்தால் நினைவு வராது எழுத என அமர்ந்துவிட்டால் தானே வரும்” என்றார்.

   எழுதுவதில் ஒரு நன்மை நீங்கள் சொன்ன கசப்புகளை கொட்டியவர்களை மன்னித்து நீங்கள் விடுதலை அடைய முடியும். எழுத எழுத ஒரு ‘ரிலாக்ஸ்’ ஐ உணர்வீர்கள்.நீண்ட காலம் சுமந்து அலைந்ததை இறக்கிவைத்துவிட்டு நீங்கள் இலகுவாக முடியும்.

    எனது பத்தாம் வகுப்பு பதிவை எழுதியபின்னர்தான் உணர்ந்தேன் எனது பத்தாம் வகுப்பு தோல்விக்கு காரணம் காதர் மற்றும் நாசர் என எண்ணிகொண்டிருந்தேன். அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டேன். முப்பத்திரண்டு ஆண்டுகளுகளாக அவர்களை சுமந்து அலைந்திருக்கிறேன்.

  அன்னம் கதையை வாசித்தபின் உங்கள் மும்பை வாழ்க்கையும் அப்படி இருந்ததாக சொன்னீர்கள்.இன்றும் மும்பையில் வேலைதேடும் இளைஞர்களில் நிச்சயமாக பல அஹமதுகள் இருப்பார்கள்.

 எழுதுங்கள் உங்கள் கதையை. வாழ்த்துக்கள்.

 கப்பலில் வேலை கிடைக்காமல் போனது பற்றி சொன்னீர்கள். அது நல்லது தானே.பொழுதணையும்போது வீட்டுக்கு வந்து மனைவி,மகனுடன் தினமும்  சேர்ந்து வாழும் கொடுப்பினை உங்களுக்கு கிடைத்துள்ளது.

நாஞ்சில் ஹமீது.


எனது பத்தாம் வகுப்பு 1

எனது பத்தாம் வகுப்பு 2

எனது பத்தாம் வகுப்பு 3

எனது பத்தாம் வகுப்பு 4 



No comments:

Post a Comment