Sunday, 4 May 2025

நெடும்பயணம்

  

                  

  பசிபிக் கடலில் உடன் பயணிக்கும் pelican

     கப்பலில் நெடும்பயணம் என எதைச்சொல்வது.கப்பல் காரன் பணியில் இணைந்து விடுமுறைக்கு செல்வதையா? கப்பல் பயணிக்கும் தூரத்தையா? அல்லது நாட்களையா?

    என் அறிவில் கப்பல் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு இலக்கை அடைய எத்தனை நாட்கள் ஆகிறதோ அதைத்தான் நெடும்பயணம் என சொல்வேன்.கப்பலின் வேகத்திற்கு தகுந்தவாறு பயண நாட்கள் வேறுபடும். சரக்கு கப்பல்களில் கண்டெய்னர் கப்பல்கள்தான் அதி வேகத்தில் செல்லும்.எங்கள் நிறுவனத்தில் இருந்த swisvic bridge எனும் கண்டெய்னர் கப்பலுக்கு கப்பல்காரர்கள் வைத்த பெயர் சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ்.

 அது சிங்கையிலிருந்து புறப்பட்டு பதினைந்து நாட்களில் கனடாவின் வான்கூவர் துறைமுகத்தை அடையும்.அதன் வேகம் மணிக்கு இருபத்தி நாட்டிக்கல் மைல். அதாவது ஒரு நாளில் அறுநூறு மைல்கல் (ஆயிரத்தி நூறு கிலோமீட்டர்)அத்தனை எடையுடன்  உந்தி தள்ளி செல்ல பெரும் விசை தேவை. ஒரு நாளில் இருநூறு டன்வரை எரிஎண்ணெயை குடித்து,எரித்து சக்தியாக மாற்றும் பதினோரு சிலிண்டர் கொண்ட ராட்சத இஞ்சின் அந்த கப்பலில் உண்டு.

   நாளில் இரு மணிநேரம் கப்பலின் கடிகாரத்தை மாற்றி சிங்கையிலிருந்து புறப்பட்ட பதினைந்து  நாளில் இரவு பகலாக கனடா நேரத்திற்கு மாற்றி,திரும்பி வருகையில் மீண்டும் சிங்கை நேரத்திற்கு கடிகாரம் மாறியிருக்கும். மனித அறிவின் வளர்ச்சி கப்பல் காரனின் உடல் ,மன ஆரோக்கியத்தை நலிவுறசெய்வதன்றி வேறென்ன.

  அரண்மனை போன்ற உல்லாச கப்பல்கள் பயணிகளை ஏற்றி செல்வதால் மணிக்கு முப்பத்தியைந்து நாட்ஸ் வேகத்தில் செல்லும். கார் கேரியர் எனப்படும் கார்களை ஏற்றும் கப்பல் இருபத்தி ஒரு நாட்ஸ் வேகத்தில் செல்பவை. 


  2008 ஆம் ஆண்டு நான் பணிபுரிந்த ஐஜின் எனும் கார் ஏற்றும் சிங்கையிலிருந்து சிலியின் சான் ஆண்டானியோ செல்ல இருப்பதி ஆறு நாட்களை எடுத்துக்கொண்டது.

2014 ஆம் ஆண்டு வேலை செய்த பிக்சஸ் லீடர் கப்பல் ஜப்பானின் டோயோகாசியிலிருந்து அமெரிக்காவின்  நீயூயார்க் செல்ல முப்பத்தி மூன்று தினங்களை எடுத்துகொள்ளும்.இடையில் பனாமா கால்வாயை தாண்டும் பொருட்டு நிறுத்தப்படும்.

பல்க் காரியர் (bulk carrier) வகை கப்பல்கள் மிக மெதுவாக செல்லும் ஏழு நாட்டிக்கல் மைல் வேகத்தில் . அமெரிக்காவிலிருந்து தென்னாபிரிக்காவை சுற்றி சைனா செல்ல நாற்ப்பதியைந்து நாட்களுக்கு மேலாகும். நான் சென்ற அதிக தூரம் சைனாவிலிருந்து தென்னாப்பிரிக்காவை சுற்றிகொண்டு பிரேசில் சென்றது தான்.

  கடந்த ஒன்பது ஆண்டுகளாக LPG,LNG வகையை சார்ந்த காஸ் காரியர் கப்பல்களில் பணிபுரிகிறேன். இதன் அதிக பட்ச வேகம் பதினாறு நாட்ஸ்(knots) கல்கத்தாவின் ஹல்தியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஹூப்ளி ஆற்றில் புறப்பட்டு கன்னியாகுமரி,முட்டம்,மணவாளச்குறிச்சி (எனது கிராமம்),குளச்சல்,கொச்சி,சூயஸ் கால்வாய்,ஜிப்ரேல்டார் வழியாக அட்லாண்டிக் கடலில் புகுந்து ஹூஸ்டன் ஆற்றில் பயணித்து ஹூஸ்டனின் ப்ரீ போர்ட் துறைமுகத்தை அடைய முப்பத்தி மூன்று நாட்களுக்கு மேலாகியது.



      இம்முறை மார்ச் இருபத்தி இரண்டாம் தேதி சைனாவில் சரக்கு இறக்கியபின்  அமெரிக்காவின் ஹூஸ்டன் செல்ல உத்தரவிட்டது சரக்கு நிறுவனம். உத்தேசமாக ஏப்ரல் மாதம் இருபத்திஇரண்டாம் தேதி கப்பல் ஹூஸ்டன் துறைமுகத்தை அடையும் என யூகித்தோம்.மொத்தம் எட்டாயிரம் மைல்களுக்கு மேல் பயண தூரம். நாளுக்கு முப்பத்தி நான்கு டன் எரிஎண்ணெய் வேண்டும்.ஒரு மாத்திற்கு ஆயிரம் டன்கள்.

    ஒரு நாள் பயணித்து கொரியாவில் கப்பலை நிறுத்தி எண்ணெய் 1470 டன்  மற்றும் உணவுப்பொருட்கள் நிரப்பினோம். எண்ணெய் தரும் பங்கர் பார்ஜ் எங்கள் கப்பலுடன் அருகணையும்  முன் அதன் மூக்கு,எங்கள் வயிற்றில் முட்டிவிட்டது. இருபது மில்லிமீட்டர் தடிமன் கொண்ட இரும்பு பிளேட் உள்பக்கமாக சப்பி விட்டது. 

   அந்த இடம் எங்கள் கப்பலின் ஹோல்ட் ஸ்பேஸ் எனப்படும் கார்பன் மோனாக்சைடு நிரப்பி வைத்திருக்கும் தொட்டி. கப்பல் இடித்த உடன். போசன் ரேடியோவில் அலறினார் “பங்கர் பார்ஜ்   இடிச்சி கொஞ்சம் டென்ட் இருக்கு” என. 

 காப்டன், முதன்மை அதிகாரி உஷாராயினர். கிரேனில் பாஸ்கட் பொருத்தி முதன்மை அதிகாரி பார்ஜில் சென்று புகைப்படங்கள் எடுத்துவிட்டு வந்தார். எங்கள் நிறுவனத்திற்கும்,கப்பல் முதலாளிக்கும் மின்னஞ்சல்கள் செயற்கைகோள்கள் கொண்டு சேர்த்தது. எங்கள் குலாலம்பூர்  அலுவலகம் அந்த தொட்டியை உடனே ஆய்வு செய்ய சொல்லியது. அதிலிருந்த கார்பன் மோனாக்சைடு முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்த காற்று நிறைத்து. காற்றில் ஆக்சிஜனின் அளவை சோதித்து காப்டன்,முதன்மை அதிகாரி,முதன்மை அதிகாரி,போசன்,காடேட் என ஐவர் அந்த தொட்டிக்குள் செல்லும்போது இரவு பத்துமணி யாகியிருந்தது. 

   உள்பக்கம் எடுத்த படங்களை அனுப்பியபின் பதிலுக்காக காத்திருந்தோம்.ஓட்டையோ,விரிசலோ இல்லை என்பது உறுதியானது ஆரம்பகட்ட சோதனைகளில். அதிகாலை இரண்டு மணிவரை தொலைபேசியும்,மின்னஞ்சல் என காப்டன்,முதன்மை இஞ்சினியர் பிசியாக இருந்தனர்.இரவு ஒன்பது மணிக்கே எண்ணெய் நிறைத்தல் முடிந்து பங்கர் பார்ஜ் சென்றிருந்தது.

  காலை பன்னிரெண்டு மணிக்கு கப்பலை ஹூஸ்டன் நோக்கிய பயணத்தை தொடரசொல்லி தகவல் வந்ததும் காப்டன் இன்ஜினை அழைத்து தயாராகுமாறு சொன்னார். ஆங்கர் பார்ட்டி பார்வேர்டில் சென்று நங்கூரத்தை உருவி கப்பல் நகரத்தொடங்கியது பசிபிக் கடலை நோக்கி.இதனால்  மொத்த பயண நாளில் ஒரு நாள் அதிகரித்தது.

   பனாமா கால்வாயை சென்று சேர இருபத்தி மூன்று தினங்கள் கணக்கிடப்பட்டது. பயணப்பாதையில் புயல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டும்.வானிலை அறிக்கையின் எச்சரிக்கைகளை காப்டன் இரண்டாம் அதிகாரி மற்றும் முதன்மை அதிகாரியுடன் விவாதித்தபின் எங்கள் குலாலம்பூர் அலுவலக அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துசொன்னார்.

   ஏழு மீட்டருக்கு அலைகளும் எழுபது மைல் வேகத்த்தில் காற்றும் சூழ்ந்து கப்பலை அலைகழிக்கும். காலியாக இருக்கும் கப்பலை இவ்வழியாக கொண்டு செல்வதில் உள்ள சிரமத்தை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். அங்கு இருப்பவர்கள் அனுபவம் வாய்ந்த முன்னாள் காப்டன்களும்,இன்ஜினியர்களும்.

 அவர்கள் சரக்கு நிறுவனத்துக்கு சொல்லி பயண பாதையை கொஞ்சம் மாற்றினார்கள் இன்னும் இரு தினங்கள் அதிகரித்தது. பனாமா கால்வாய் வரை செல்வது இப்போது இருபத்தியைந்து நாட்கள் ஆனது. ஆனாலும் புயலின் தாக்கம் எங்களுக்கும் இருந்தது. இரு தினங்கள் டெக் பணியாளர்கள் குடியிருப்புக்குள்ளேயே பணி வழங்கினார் குட்டியிருப்பை விட்டு அவசிய தேவைக்காக வெளியே செல்ல நேர்ந்தால் ரேடியோவில் ப்ரிட்ஜில் சொல்லிவிட்டு செல்ல சொன்ன்னார்கள்.. இரவில் யாரும் வெளியே செல்ல அனுமதியே இல்லை. 

“ஷாகுல் கம்ப்ரசர் ரூமுக்கு ஒத்தைக்கி போவ கூடாது,கேஸ் இஞ்சினியர் அல்லது வேறு யாராவது கூட வந்தா மட்டும் போ” என முதன்மை அதிகாரி சொன்னார்.

Masked booby


 பசுபிக் கடலில் பயணிக்கையில் கடிகாரம் முன்னே சென்றுகொண்டே இருக்கும். அதனால் ஒரு நாளை பின்னோக்கி நகர்த்த வேண்டி வந்தது. முதன்மை அதிகாரியின் பிறந்தநாளன ஏப்ரல் நான்காம் தேதி. பின்னகர்தபட்டதில் இரு நான்காம் தேதி வந்ததால் மேலும்  ஒரு பயண  நாள் அதிகரித்தது.

கால்வாய் கேட்டுக்குள் கப்பலை நிறுத்தி நீரை வெளியேற்றும் போது 
பாதுகாப்புக்காக கப்பலை இழுத்து செல்ல tug boat 



   பதினேழாம் தேதி பனாமா கால்வாயை அடையவேண்டியது. இருபதாம் தேதி போனால் போதும் இருபத்தி ஒன்றாம் தேதிதான் கால்வாயை கடக்க புக்கிங் கிடைத்த செய்தியை சரக்கு நிறுவனம் காப்டனுக்கு சொல்லியது.



  இருபதாம் தேதி அதிகாலை பனாமாவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். இருபத்தியைந்து நாட்களுக்கு மேல் நில்லாமல் ஓடிய இஞ்சின் நிறுத்தபட்டது. அன்றே இடிபட்ட தொட்டியை சோதனை செய்ய சர்வேயர் வந்தார். லைப் போட்,நீரில் இறக்குதல்,பிளாஸ்டிக் மற்றும் வேறு குப்பைகளை கரைக்கு கொடுத்தல் என முழுநாளும் பணி. இருபத்தி ஒன்றாம் தேதி ஞாயிறு பனாமா கால்வாயை கடந்து அட்லாண்டிக் கடலில் இறங்கினோம்.

   இவ்வாறாக ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் நள்ளிரவில் தேதி ஹுஸ்டனுக்கு ஆறு மணிநேர பயணம் தூரம் இருக்கையில் கப்பல் நங்கூரம் பாய்ச்சி  நிறுத்தப்பட்டது. ஐந்து மணிநேரத்திற்குப்பின் இருபத்தி ஆறாம் தேதி அதிகாலை  நங்கூரம் உருவப்பட்டு    கொஞ்சம் தள்ளி நிறுத்தபட்டது. கப்பலின் எரி எண்ணெய் கையிருப்பு முன்னூற்றி ஐம்பது டன் மட்டுமே இருந்ததால். இங்கே ஆயிரத்தி நூறு மெட்ரிக் டன் எரி எண்ணையும் நூறு டன் டீசலும் நிரப்பனோம். சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு வந்த பங்கர் பார்ஜ் ஞாயிறு மதியத்திற்கு மேல் கிளம்பி சென்றது. கப்பலின் நங்கூரம் உருவப்பட்டு மீண்டும் பழைய இடத்தில் போய் நங்கூரம் பாய்ச்சி காத்திருந்தோம்  ஹூஸ்டன் துறைமுக அழைப்பிற்காக. 

  இருபத்தி ஆறாம் தேதி ரத்தானது. முப்பதாம் தேதி ஆனது,அதுவும் மாறி இருபத்தி ஒன்பதாம் தேதி துறையில் கரையணைவது உறுதியானது. நாங்கள் தயாரானோம். எட்டு மணிநேரத்திற்கு முன் அது தள்ளிப்போய் முப்பதாம் தேதி காலை எனும் புதிய தகவல் வந்தது.

 முப்பதாம் தேதி காலை ஏழு மணிக்கு அமெரிக்க நடுவயது பெண் பைலட் கப்பலுக்கு வந்து குறுகிய ஹூஸ்டன் ஆற்றுக்குள் கப்பலை எடுத்து சென்றார். பதினோரு மணிக்கு ஹூஸ்டன் துறைமுக பைலட் கப்பலுக்கு வந்து எண்டர்பிரைசஸ் டாக் நான்கில் முன்பும்,பின்பும் எட்டு கயிறுகள் வீதம் கப்பலை கட்டி நிறுத்த உதவினார். இவ்வாறக நாற்பது நாட்கள் பயண முடிவில் துறைமுகத்தை எட்டினோம். 

ஹூஸ்டனில் சரக்கு நிறைக்கும் போது 


  ஆம் கடந்த இருபது ஆண்டில் நான் பயணித்ததில் இதுவே நெடும்பயணம்.

02 may 2025,

நாஞ்சில் ஹமீது.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment