Thursday, 12 September 2024

காத்திருக்கும் நாட்கள்.

     

 கப்பல் சைனாவின் shenzhen இல் சரக்கை இறக்கியபின். புதிதாக சரக்கு ஏற்ற உத்தரவு ஏதும் வரவில்லை. கடைசியாக சரக்கு தந்த நிறுவனம் நைஜீரியாவில் ஏற்பட்ட சிறு விபத்து மற்றும் நடுக்கடலில் கப்பல் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த கப்பல் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சைனாவில் கப்பலுக்கு வந்த மேனேஜர் சொன்னார்.

  இல்லையெனில் இப்போது மீண்டும் நைஜீரியாவை நோக்கி ஒரு நீண்ட பயணம் போயிருக்கும்.

   கப்பலில் இப்போது காஸ் இல்லாததால் இஞ்சின் டீசலில் இயக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு ஒரு ஜெனரேட்டருக்கு இருபத்திஐயாயிரம் லிட்டர் டீசல் தேவை. அதனால் கப்பல் முதலாளி ஒரு ஜெனரேட்டரை மட்டும் இயக்கி மெதுவாக சிங்கப்பூர் நோக்கி சென்று முப்பதாம் தேதி ஆயிரத்தி ஐநூறு டன்(ஒரு டன்=ஆயிரம் லிட்டர், படிப்பவர்கள் மண்டையை குடைய வேண்டாம் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர்.) டீசலை நிரப்ப சொன்னார்.இப்போது கப்பலில் ஜெனரேட்டர் ஓடும் செலவு கப்பல் முதலாளியினுடையது.சரக்கு ஏற்ற,இறக்க செல்லும்போது செலவாகும் எரிபொருள் சரக்கு நிறுவனத்தில் கணக்கில் சேரும்.  

   சைனாவில்(24 august) இருந்து கப்பல் புறப்பட்ட நான்கு தினங்களுக்குப்பின் செப்டெம்பர் நான்காம் தேதி தான் டீசல் தரும் சிறு கப்பல் வருகிறது. அதனால் கப்பலை எங்காவது நிறுத்தி வைத்துவிட்டு நான்காம் தேதி செல்லமாறு புது உத்தரவு வந்தது.

   சிங்கையிலிருந்து நூற்றி எழுபது மைல் தொலைவில் கொள்ளைகாரர்கள் இல்லாத இடமாக பார்த்து மலேசியா அருகில் கடந்த வியாழன் இரவு கப்பலை நிறுத்தினோம். ஒரு ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது.  நேற்று காலை முதல் கப்பல் நகர தொடங்கியது.

  நான் ரைமுண்டோ,இஞ்சின் பிட்டர் பாட்டில், முதன்மை அதிகாரி ஹோ,இரண்டாம் அதிகாரி ஹபீசி மற்றும் மோட்டார் மேன் ஜெர்ரிக்கு செப்டம்பரில் இறுதியில் பணி ஒப்பந்தம் முடிகிறது. காப்டன் அனைவரிடமும் கேட்டார் ஐந்தாம் தேதி சிங்கையிலிருந்து ஊருக்கு செல்கீறீர்களா?என  ரைமுண்டோ வை தவிர மற்றவர்கள் ஒப்பந்த காலம் முடிந்தபின் செல்கிறோம் என சொன்னதால் காப்டன் அப்படியே குலாலம்பூர்  அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்தார்.

   பழைய மெனுபடி நேற்று காலை போகா நேற்று காலை ஆனால் ரைமுண்டோ வடா செய்திருந்தார். நம்மூரில் சாயாவுடன் கடிக்கும்  போண்டாவை வட நாட்டுகாரர்கள் வடா என்பார்கள். ஒரு பன்னுக்கு நடுவில் இந்த வடா வைத்தால் வடா பாவ். அவர்களின் காலை நேர நாஸ்தா முடிந்தது.

   மதியமும் அயில மீனை வகுந்து மசாவை திணித்து ஓவனில் வைத்து வேகவைத்திருந்தார். நேற்று மதியம் சிறு குவளையில் ஒரு கரண்டி சாதமும் தயிரும்,பருப்பு குழம்பும்,காயும் போட்டு சாப்பிட்டேன்.இரவில் பெரிய குவளையில் சுடுநீர் ஊற்றி ஒரு கரண்டி சாதத்துடன் உப்பு போட்டு,வெங்காயம்,தக்காளியுடன் உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து சாப்பிட்டேன். மதியமுள்ள இரண்டு அயில மீனும்.  ஞாயிறு பிரியாணி  தந்த கோளாறு.

  எதிரில் அமர்ந்திருந்த போசன் ஜாவித் இக்கா கேட்டார். “வயிறு பிரஸ்னம் ஆணோ” என 

“ஒந்தும் பிரஸ்னம் இல்லா இந்நல பிரியாணி இத்திரி கூடிப்போய்”

  

   நாளை மதியம் ஒரு மணிக்கு கப்பல் நங்கூரம் பாய்ச்சியபின் டீசல் நிறைப்பதும்,உணவு பொருட்கள்,உதிரி பாகங்கள் ஏற்றுதல்,பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் அனைத்தையும் இறக்க வேண்டும்.

   இயந்திர அறையில் சேகரமாகும் கழிவு எண்ணைகளை எரிப்பதற்கு இந்த கப்பலில் இன்சிநிரேட்டார் இல்லை. அவை இயந்திர அறையில் உள்ள கழிவு தொட்டிகளில் நிரம்பிவிட்டது. அதையும் பெற்று செல்ல சிறு கப்பல் ஒன்று மாலையில் வரும்.

  நாளை மாலை முதல் வியாழன் காலை வரை அனைவருக்கும் கடும் பணி உண்டு. டெக்கிலும் இஞ்சினிலும் மதியத்திற்கு மேல் இன்று ஓய்வு விட்டார்கள். நாளை கிரேனை இயக்க வேண்டியிருப்பதால் இன்று சோதனை செய்யும்போது ஹைட்ராலிக் ஆயில் ஒழுகியதை கண்டு போசன் காஸ் இஞ்சினியரை அழைத்தார் அவர் என்னை அழைத்தார். ஆயில் ஹோஸ் பொருந்தும் கனெக்ஷன் ஒன்று துருவேறி ஓட்டை. அது பொருந்தியிருந்த போல்ட்டுகள் கழரவில்லை. பதினொன்றரை மணிக்கு மீட்டிங் இருந்தது.

  காஸ் இஞ்சினியர்  “பிட்டர் சாப் கானேக்கே பாத் சல்தேஹே,பிர் சுட்டி கரேகா” என்றார். எனக்கு தெரியும் இது சீக்கிரம் முடியாது என. உணவுக்குப்பின் ஓய்வேடுக்காமலே பணியை துவங்கினோம் ஓட்டையான கனெக்ஷன் புதிது கிடைக்கவில்லை. அதையே பிரேசிங் செய்து மாட்டி கிரனை இயக்கினோம். ஒழுகல் இல்லை என உறுதியானது. தலேர் சிங் “இந்த பிரேசிங் எத்தன மாசம் தாங்கும்”. “ஒன்னும் ஆகாது சில்வர் பிரேசிங்” என்றேன். மூன்றரைக்கு பணி முடிந்து வந்தேன். 

  எங்கள் நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட் நாளை கப்பலுக்கு வருகிறார். வருடத்தில் சில கப்பல்களுக்கு அவர் விஜயம் செய்ய வேண்டும். வேறு ஆய்வுகள் ஏதும் இல்லை.

  இங்கிருந்து மீண்டும் புறப்பட்டு கடந்த வாரம் நின்ற இடத்தில் போய் கப்பலை(drifiting) நிறுத்திவைத்திருப்போம். அடுத்த சரக்கு நிறைக்கும் உத்தரவு வரும் வரை ஒரு காத்திருப்பு.

   இன்று நல்ல வெயிலில் கிரேனின் மேலே அமர்ந்து பணி செய்ததால் நல்ல களைப்பு.நான்கு மணிமுதல் ஐந்துவரை தூங்கிவிட்டேன்.எழுந்து நீராடி தொழுகைக்குப்பின் உணவுக்கூடம் சென்றேன்.

இன்று இரவுணவில் போசனும்,சோம்ராஜும் கேட்ட பூரி செய்திருந்தார் ரைமுண்டோ.இரண்டு பூரி சாப்பிட்டேன்.

 ஏழு மணிக்கு மக்ரிப் நேரம். நாள் முடிந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவரின் நாவல் ஒன்று வாசிக்க தொடங்க வேண்டும்.

  நாளை மதியம் சிங்கையில் நங்கூரம் பாய்ச்சியபின் சென்றால் போதும். அதிகாலை வரை தொடர் பணியிருக்கும்.

  நாஞ்சில் ஹமீது,

03 sep 2024.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment