Sunday, 29 September 2024

கடைசி பிரியாணி

   


       சன்னி கிரீன் எனும் கப்பலில் 2017 இல் பணியில் இணைந்தபோது கப்பல் சிங்கப்பூர் கெப்பல் ட்ரை டாக்கில் இருந்தது. நான் காலையில் சென்றேன். நான் விடுவித்த பிட்டர் மாலையில் கிளம்பிச்சென்றார். காலியான இருந்த ஒரு அறையை தந்தார்கள்.

   பத்து நாட்கள் ட்ரைடாக்கில் கடும் பணியாக இருந்தது. கப்பல் சிங்கைவிட்டபின் ஒரு நாள் பிட்டருக்கான அறையைப் போய் பார்த்தேன். உபரி அறையில் நெடுநாட்கள் இருக்க இயலாது. அவரவர்க்கான அறைக்கு போயாக வேண்டும்.

    கப்பலில் இணைந்த முதல் நாள் அறையில் தூங்குவது கடினம். ஊருக்கு செல்பவர் அறையை சுத்தபடுத்தமால் போயிருப்பார். கப்பல் ட்ரைடாக்கில் இருந்ததால் அந்த அறையும் சுத்தமின்றி இருந்தது. நான் சுத்த படுத்த துவங்கினேன். ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகியும் குப்பையும் அழுக்கும் வந்துகொண்டே இருந்ததால்  மனதில் வெறுப்பு தட்டி அந்த அறைக்கு நான் போகமாட்டேன் இப்போது இருக்கும் அறையிலேயே இருக்கிறேன் என இரண்டாம் இஞ்சினியரிடம் சொல்லி எனது தொலைபேசி எண்ணை மாற்றிகொள்ளுங்கள் என்றேன்.

  “ஸ்பெயர் கேபின்ல நீ இருக்க முடியாது,மாறித்தான் ஆக வேண்டும்” என்றார்.  

“என்னால முடியாது கேபின கீளீன் பண்ணித்தர சொல்லுங்க” என்றேன்.

மோட்டார் மேன் ராவ் “கெயா பிட்டர் சூத்தியா கந்தா ஆத்மி த்தா” என்றார்.

 மறு வருடம் வேறொரு கப்பலுக்கு போனபோது அறை,குளியல் அறை அனைத்தும் படு சுத்தம். இரண்டாம் இஞ்சினியர் அபிசேக் பானர்ஜியிடம் “ரூம் படு கிளீன்”என்றேன்.

“ரெண்டு மூணு நாளா அவன் கேபின கிளீன் பண்ணிட்டு இருந்தான் என்றார்.”அபிஷேக் பானர்ஜிதான் சன்னி கிரீனிலும் இரண்டாம் இஞ்சிரியராக இருந்தார். இம்முறை நான் விடுவித்தவர் கேரளாவின் தினேஷ் அவரை முன்பே அறிவேன்.

  போனில் அவருக்கு நன்றி சொன்னேன். தினேஷ் “ஷாகுலே  ஞான் கப்பல் கேறிய ஆத்தியத்த திவசம் முறில உறங்காம் பற்றுல்லா,அது கொண்டு ஞான் என்ற ரீலீர்வர்க்கு கேபின் விற்த்தியாயிட்டு கொடுக்கணும் மென்னு”..............என்றார்.

இயந்திர அறை காலை கூட்டம் 


    இன்று ஞாயிறு காலையில்இயந்திர அறைக்கு கூட்டத்திற்கு சென்ற வந்தபின். பார்வர்ட் விஞ்சில் ப்ரேக் டெஸ்ட் செய்த ஹைட்ராலிக் ஜாக் மற்றும் கருவிகளை கொண்டு வந்து ஸ்டோரில் வைத்ததோடு பணி முடிந்தது. இன்று தூங்கி எழுந்ததும் குளிக்கவில்லை. 



  அறைக்கு வந்து சுத்தம் செய்ய தொடங்கினேன். அறையிலேயே  ஐவேளை தொழுகையையும் நிறைவேற்றுவதால் எனது அறை எப்போதும் சுத்தமாகவே இருக்கும். வேக்கும் க்ளீனரால் தூசிகளை உறுஞ்சி,மேஜைகளை துடைத்து,தேவையற்ற அனைத்தையும் அகற்றினேன்.

 குளியலறையை வாரம் தோறும் கழுகி விடுவேன்.கடந்த வாரம் அதன் திரைசீலையை மாற்றியிருந்தேன். கழிப்பறையும் இரு தினங்களுக்கு முன் சுத்தம் செய்திருந்தாலும் இன்றும் கழுவி சுத்தம் செய்தபின் எண்ணெய் தேய்த்து குளித்து வெளியே வந்தபோது(சுனிதா காய்ச்சி தந்த தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய் காலி) போசன் அழைத்தார்.



“சாயா உண்டு” என.சாயாக்கு சென்றபோது பாட்டீல் “டாக்குமென்ட் வாங்க விகாஸ் கூப்பிட்டான்” என்றான்.

 பிரிட்ஜில் சென்று அனைத்து சான்றிதழையும் சரி பார்த்து வாங்கி கப்பல் பதிவு செய்யபட்டிருக்கும் மார்ஷல் புத்தகத்தில் கையெழுத்து போட்ட்டேன். “ஸீமேன்,எல்லோ பீவர் நாளைக்கு தருவேன்.பாஸ்போர்ட் ஏஜென்டிடம் இருக்கு”.

  அறைக்கு வந்து லூகா தொழுதுவிட்டு சுனிதாவிடம் பேசினேன். பாக்கிங் பற்றி சொன்னபோது “கொண்டு போனத வாரி பெட்டிக்குள்ள போட வேண்டியது தானே, கொண்டு போற புக்கு தானே நிறைய இப்ப” என்றாள்.

 பாக்கிங் இப்போது பெரிய சோர்வை தருகிறது. லக்கேஜ் இல்லாமல் டாக்குமென்ட் மட்டும் ஒரு பையில் கொண்டு செல்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். கப்பல் காரனுக்கு எதையுமே வாங்க இயலாது. அதுதான் பிரச்னை கப்பலில் இருக்கும் ஆறு முதல் எட்டு மாதத்திற்கான அனைத்தையும் கொண்டு வந்தாக வேண்டும். 

  ஒவொரு முறையும் நினைக்கிறேன் மிகக்குறைவான பொருட்களுடன் ஒரேயொரு பெட்டியுடன் பயணிக்க வேண்டும் என. புத்தகங்கள் மட்டும் பத்து கிலோவுக்கு மேல் வந்து விடுகிறது.

  சன்னி ஜாய் கப்பலில் இருந்த செல்வின் ஊருக்கு செல்லும்போது அவனது பயணப்பை பதினேழு கிலோ மட்டுமே இருந்தது. அது போல் முயற்சிக்கிறேன் இயலவில்லை.

  துணிகள் அனைத்தையும் துவைத்து இரு தினங்களுக்கு முன்பே பெட்டியில் அடுக்கினேன். இன்று சேவிங் செட்,கத்தரிக்கோல்,ஹேர் ட்ரிம்மர் என அனைத்தயும் போட்டு எடை பார்த்தேன். இருபத்தி ஏழு கிலோ இருந்தது. மலேசியன் ஏற்லைன்ஸில் ஒரு பெட்டி இருபத்தி மூன்று கிலோவுக்கு மேல் கூடாது என்றிருந்ததை இணையத்தில் பார்த்தேன். 



 அதிலிருந்து இரு புத்தகங்கள் மற்றும் குளிருக்கு அணியும் ஜாக்கெட்டை வெளியே எடுத்தேன். ஒரு பெட்டி தயார். இரண்டாவது பெட்டியில் மீதமுள்ள பொருட்களை போட்டு எடை பார்த்தபோது பத்து கிலோவுக்கும் குறைவாக இருந்தது. எனக்கு நாற்பது கிலோ வரை கொண்டு செல்லும் மரைன் டிக்கெட் தருவார்கள். இரண்டாவது பெட்டியில் வைக்க வேண்டியவற்றை நாளை காலைதான்  செய்ய முடியும்.

செஃப் ரைமுண்டோ 


   இன்று ரைமுண்டோ சிக்கன் பிரியாணி சமைத்திருந்தார். கவனமாக அளவாக சாப்பிட்டேன். சோம்ராஜிடம் “இவரோட பிரியாணி எப்பவுமே டாப்” என்றேன். 



 “அவருக்கு எல்லாமே நல்லா சமைக்க முடியும்” என்றார்.

போசன் “உங்களுக்கு கடைசி பிரியாணி,நாளைக்கு லஞ்சு முடிச்சி இறங்கிரலாம்”

 விடுமுறை உறுதியான பதிவை படித்த கப்பல் காரன் டைரியின் வாசகியும் மூத்த சகோதரியுமான பிரிஸ்பேன் டெய்சி “ஷாகுல் இன்னும் ரெண்டு பிரியாணி தான் இருக்கு” என சொன்னார். 

 கப்பலில் விடுமுறையை  கணக்கிடும்போது இன்னும் எத்தனை பிரியாணி பாக்கி என்பது தான் பேச்சாக இருக்கும். மாலையில் விகாஸ் அழைத்து கணக்கை முடிந்து கையொப்பமும் வாங்கினார். கொஞ்சம் பணம் கையில் தந்து,மீதியை வங்கியிலும் அனுப்புவார்கள்.

    


  மாற்று பணியாளர்களில் ஒருவரான சந்தோஷ் மும்பை விமான நிலையத்துக்கு சென்றுவிட்டதை உறுதி செய்தார். நாளை காலைபதினோரு மணிக்குள் அவர்கள் கப்பலுக்கு வந்துவிடுவார்கள். நாங்கள் மூன்று மணிக்கு கப்பலில் இருந்து இறங்குவோம்.

நாஞ்சில் ஹமீது,

29-10-2024

No comments:

Post a Comment