ஓமான் தலைநகர்,மஸ்கட் வானூர்தி நிலையத்தின் வாயில் B5 ன் முன் அமர்ந்திருக்கிறேன் இன்னும் ஒரு மணி நேரமிருக்கிறது திருவனந்தபுரம் செல்லும் விமானம் ஏற.
கடந்த மே மாதம் ஆறாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு மும்பையில் இரு தினங்கள் விடுதியறை.அங்கிருந்து மே ஒன்பாதம் தேதி பனாமா நாட்டிற்கு பறந்து சென்று மூன்று தினங்கள் விடுதியில் தனிமை கப்பல் பனாமா கால்வாய்க்கு வருவது தாமதமானதால் ஐந்து நாட்களுக்குப்பின் பனாமாவின் கிறிஸ்டோபல் சென்று கப்பல் ஏறி ஆறு மாதங்கள் பூர்த்தியாக போகிறது.
நான் பனாமாவில் ஏறும்போது அமெரிக்காவின் ஹூஸ்டனில் ப்ரோப்பேன் எல் பி ஜி திரவத்தை நிறைத்துக்கொண்டு வந்தது.அதை ஜப்பானின் இரு துறைமுகங்களில் கொடுத்தபின் சோமாலிய கொள்ளையர்கள் நடமாட்டமுள்ள ஆபத்தான கல்ப் ஆப் ஏடன் பகுதியை கடந்து சவுதியின் யான்பூவில் ப்ரோப்பேன்,பீயுட்டேன் நிரப்பினோம்.அதை வியட்நாமின் வாங்க்தாவில் கொடுத்துவிட்டு மீண்டும் கல்ப் ஆப் ஏடன் சூயஸ் கால்வாயை கடந்து மத்தியதரை கடலுக்குள் நுழைந்து ஜிப்ரேல்டர் முனையை தாண்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் மீண்டும் ப்ரோப்பேனை நிரப்பினோம்.
அங்கிருந்து பனமா வழியாக ஒரு நீண்ட பயணம் செய்து முப்பத்தியைந்து நாட்களுக்குப்பின் பீதர் நாடான சைனாவின் நிங்போவின் இரு துறைமுகங்களில் சரக்கை இறக்கியபின் மீண்டும் சிங்கப்பூர்,கன்னியாகுமரி,சூயஸ் வழியாக அமெரிக்காவை நோக்கி பயணம் துவங்கியது.
எதிர்பாராமல் சூயசுக்கு ஏழு நாள்களுக்கு முன் என் விடுமுறை உறுதியானது அதிசயமாக இருந்தது.ஊருக்கு செல்கிறேன் எனும் மகிழ்ச்சி தொத்திகொண்டது. வழக்கமாக வரும் கனவுகள்,விடுமுறைக்கு முந்தைய சில தினங்கள் தொடரும் தூக்கமிழப்பும் அதை தொடர்ந்து வரும் முதுகுவலியும் இம்முறை இல்லவே இல்லை.
முதல் முறையாக காஸ் பிட்டராக பணியில் இணைந்து முதல் இரு மாதங்களுக்குள் பணியை கற்றுக்கொண்டு சிறப்பாகவே செய்தேன்.இம்முறை காப்டன்,முதன்மை இன்ஜினியர் உட்பட நல்ல பணியாளர்கள் அமைந்ததால் நாட்கள் சிறப்பாக சென்றது.இஞ்சின் பிட்டர் அளவுக்கு பணி இல்லை.
உடலுழைப்பு சார்ந்த் பணி மிக குறைவு.இஞ்சினில் இருக்கையில் உள்ளங்கைகளில் எதை போட்டு தேய்த்து கழுவினாலும் போகாத எரிஎண்ணையின் கரிய நிற அழுக்கும்,கூட்டல்,பெருக்கல் அடையாளங்களும் இருக்கும்.வீட்டிற்கு வந்து ஏழு முதல் எட்டு நாட்களுக்குப்பின் உள்ளங்கை தோலின் செல்கள் தன்னை புதுப்பித்துகொண்டு இயல்புக்கு வரும்.முழங்கையிலும்,கை மணிக்கட்டிலும் ஒரு மெல்லிய வலி இருந்துகொண்டே இருக்கும்.
இப்போது கைகள் சுத்தமாக இருக்கிறது.டெக்கில் காஸ் பிட்டாரகவே இனி நீடிப்பேன்.இத்தனை நாள் ஏன் காஸ் பிட்டருக்கு முயற்சிக்கவில்லை என என்னையே நானே கடிந்து கொண்டேன்.2006 ஆம் ஆண்டு முதல் இதே நிறுவனத்தில் இருக்கிறேன்.காஸ் பிட்டருக்கு வேறு நிறுவனங்களில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள்.எனவே விடுமுறைக்குப்பின் நான் முயற்சி செய்து வேறு நிறுவனத்துக்கு மாறிகொள்ளலாம் என இருக்கிறேன்.ஸாலிமின் கல்வி,வீடு கட்டுதல் போன்ற பெரிய செலவுகள் இருக்கிறது.
கடந்த இரண்டாம் தேதி சூயஸ் கால்வாயிலிருந்து கப்பலிலிருந்து இறங்கி நள்ளிரவு எகிப்து தலைநகர் கெய்ரோ விடுதியறையில் தங்கி மூன்றாம் தேதி பிரமிட் பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்குப்பின் பள்ளிவாசல் சென்று ஜும்மா தொழுகையும் நிறைவேற்றியபின். அன்றிரவு விமானம் ஏறினேன். கெய்ரோ-மஸ்கட் ஒமான் விமானத்தில் ஏறியபோது வாயிலில் நின்று வரவேற்ற விமான ஊழியரிடம் "இது எனது நூறாவது டேக் ஆப்" என்றேன்.
பத்திரமாக விமானம் தரையிறங்கியது எட்டு மணி நேர காத்திருப்பு இங்கே என்னுடன் வந்த ரஹீம் உள்ளாவவிற்கும் என்னைப்போல எட்டு மணிநேரம் காத்திருப்பு. மூன்றாம் முறையாக ஒமான் விமான நிலையத்துக்கு வருகிறேன். மிக அழகாக புதுப்பிதிருக்கிரார்கள் விமான நிலையத்தை.மும்பை,துபாய்,கத்தார் போல அதிக கூட்டமில்லை.
அதிகாலை இங்குள்ள பள்ளிவாசல் சென்று பஜர் தொழுகையை நிறைவேற்றி அங்கேயே சிறு தூக்கம் போட்டு எழுந்தேன்.
அடுத்த விமானத்துக்கு தயாராகிவிட்டேன். நான்கு மணி நேர பயணத்தில் திருவனந்தபுரம் சென்று சேர்வேன். விமானத்தில் ஏற சொல்லி ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார்கள்.
நாஞ்சில் ஹமீது,
04 –nov -2023.
வாங்க வாங்க
ReplyDelete