Sunday, 15 October 2023

கப்பல் காரனின் விடுமுறை

 

கடந்த ஆண்டு சிங்கை சாங்கி விமான நிலையம் 

        https://nanjilhameed.blogspot.com/2019/08/blog-post_15.html?m=0

https://nanjilhameed.blogspot.com/2019/08/blog-post.html?m=0

கப்பலுக்கு வந்து ஐந்து மாதங்கள் தாண்டிவிட்டது. எனது பணிஒப்பந்தம் ஏழு மாதம் டிசம்பர் ஏழாம் தேதி முடிவடையும். விடுமுறை குறித்து மிக விரிவாக முன்பே மூன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருப்பதை இந்த கட்டுரை எழுதும்முன் வாசித்து பார்த்தேன்.கப்பல் காரனின் விடுமுறையும் எவ்வளவு கடினமானது என சொல்கிறது அவை.

   எல்லா வருடமும் டிசம்பர் மாதம் எனக்கு மிக முக்கியமானது. நவம்பர் இறுதி ஷாலிம் பிறந்தநாள்,டிசம்பர் பன்னிரெண்டு எனது பிறந்தநாள்,டிசம்பர் பதினாறு சுனிதா என்னை கைபிடித்த நாள்,ஜனவரி இரண்டு சுனிதாவின் பிறந்த நாள் கூடவே விஷ்ணுபுரம் விழா டிசம்பரில் வருவதால் டிசம்பர்(“அவுரு ஊருக்கு வாறது விஷ்ணுபுரம் விழாக்கு கணக்கு பண்ணிதான்,பொண்டாட்டி புள்ளையள பாக்குதுன்ன சும்மா சொல்லுவாரு”இது சுனிதா)  மாதம் நான் நான் ஊரில் இருப்பது வெகுசிறப்பு. ஆகவே இம்முறையும் பணி ஒப்பந்தம் முடியும் தருவாயில் அதாவது டிசம்பர் முதல் வாரத்தில் கப்பல் ஏதாவது துறைமுகத்தில் இருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.

 செப்டெம்பர் மாத இறுதியில் நடந்த மாதந்திர கூட்டத்தில் காப்டன் நவம்பர்,டிசம்பர் மாதத்தில் பணி ஒப்பந்தம் முடியும் தருவாயில் உள்ளவர்களின் பெயர்களை ஒன்றாக இணைத்து ஊருக்கு அனுப்பும் பட்டியலை அலுவலகத்துக்கு பரிந்துரைப்பதாக சொன்னார். கப்பல் சைனாவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இம்முறை இங்கே காஸ் பிட்டராக இருக்கிறேன்.என்னுடன் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த காஸ் இஞ்சினியர் ஒருவரும் உள்ளார்.நாங்கள் இருவரும்தான் காஸ் பிளாண்டை பார்த்துக்கொள்கிறோம்.அவருக்கும் ஆறு மாத பணி ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடைகிறது.  

   சைனாவை நெருங்கும் முன் நடந்த கூட்டத்தில் காப்டன் சூயஸ் கால்வாயை கடக்கும்போது ஊருக்கு செல்லவிரும்புபவர்களின் விருப்பத்தை கேட்டார். பின்னர் அமெரிக்காவிலிருந்து ஊருக்கு செல்லும் விருப்ப பட்டியலில்  காஸ் இன்ஜினியரும்,நானும் கையுயர்த்தியபோது,காப்டன் காஸ் பிளாண்டில் உள்ள இருவரையும் ஒன்றாக அனுப்ப முடியாது என்றார். வரும் நவம்பர்மாதம் முதல் வாரத்தில் சூயஸ் கால்வாயிலிருந்து ஊருக்கு செல்லும் நால்வர் குழுவில் உன்னையும் இணைத்து விடவா என காஸ் இஞ்சினியரிடம் காப்டன் கேட்டபோது. இல்லை நான் அமெரிக்காவிலிருந்து போகிறேன் என்றார். காப்டன் என்னிடம் “தென் ஷாகுல்  கப்பல் அமெரிக்கா விட்டபின் ஏழு நாட்களுக்குப்பின் பனாமாவில் வாய்ப்பு கிடைச்சா இறங்கலாம்,இல்லேன்னா கப்பல் டிஸ்சார்ஜ் போர்ட் வர  நீ இருந்தாக வேண்டும்” என்றார்.

    இங்கிருந்து அமெரிக்க சென்று நவம்பர் மூன்றாவது வாரத்தில் சரக்கை நிறைத்தபின் அங்கிருந்து ஆசியாவிற்கு வர ஒரு மாததிற்கு மேலாகும்.அது டிசம்பர் மாதம் நான் ஊரில் இருக்கவேண்டுமென நினைப்பதை கனவாக ஆக்குவது. அது என்னால் இயலாது டிசம்பர் முதல் வாரம் நான் ஊரில் இருந்தே ஆக வேண்டும். 

  சைனாவை நெருங்கும்முன் சென் குப்தா என்னிடம் கேட்டான் “ஷாகுல் பாய்,அமெரிக்காலருந்து நீ வீட்டுக்கு போவேன்னு சொன்னா,இப்ப காஸ் இஞ்சினியரும் போறேன்னு சொல்லத்துல,நீ ஏன் வாய மூடிட்டு இருந்தா” 

  “தாதா  ஹூஸ்டன்ல இருந்து உன் கூட ஒண்ணா பிளைட்ல வருவேன் கத்தார் ஏர்வேய்ஸ் வயா தோஹா திருவந்த்ரம்  எழுதி வெச்சிக்கோ” என்றேன். மனதில் அமெரிக்காவிலிருந்து நான் போயே ஆக வேண்டும் எனும் எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.சீனாவில் சரக்கை இறக்கியபின் காப்டனிடம் பேச வேண்டுமென இருந்தேன்.

 காஸ் இஞ்சினியரிடம் பத்து நாட்களுக்கு முன் சொன்னேன். “நவம்பர்மாசம் அமெரிக்காலேருந்து நான் போயே ஆகணும், எனக்கு டிசம்பர் பதினஞ்சாம்  தேதி நாரோல் கோயம்புத்தூர் டிக்கெட் போட்டாச்சி,அங்க ரெண்டு நாள் விழா இருக்கு” என்றேன்.

“எனக்கும் பிறந்தநாள்,கிறிஸ்மஸ் எல்லாம் இருக்கு டிசம்பர்ல”.

“செரி கேப்டன்ட்ட  பேசுவோம்,அமெரிக்கா போன பொறவு இப்ப நீ இறங்க முடியாது இன்னும் ஒரு மாசம் இரின்னு சொன்னா என்னால இருக்க முடியாது,இப்பமே பேசி முதல்ல போறதா இருந்தா சூயஸ்ல பெயிருங்க”என்றேன்.

“இப்ப கேப்டன்ட்ட பேசண்டாம் பொறவு பாக்குலாம்” என்றார். 

ஒரு எண்ணத்தை வளர்த்து அதை உறுதியாக்கி யாருக்கும் பாதகமில்லாமல் நான் நினைத்ததை நிறைவேற்றும் வல்லமை எனக்குண்டு.

 சீனாவில் இரு துறைமுகங்களில் சரக்கை இறக்குதல் கப்பல் கரையணைதல்,நங்கூரம் பாய்ச்சுதல் விடுமுறையில் ஊருக்கு செல்பவர்கள் என பத்து நாட்களுக்கும் மேலாக அனைவருக்கும் ஓய்வின்றி பணி. காலில் அடிபட்டிருந்தாலும்,கடும் பணி,ஓய்வுக்கு மத்தியிலும் நவம்பர் இருபத்தி நான்காம் தேதி நான் ஹூஸ்டனிலிருந்து ஊருக்கு செல்லும் எண்ணத்தை வளர்ப்பதை விடவில்லை.

   நேற்று காலை காப்டனை சந்தித்து பேச வேண்டும் என்றேன். 

“சொல்லு ஷாகுல்”

  “டிசம்பர்ல நான் ஊர்ல இருந்தாகணும்,அமெரிக்கா போன பொறவு அடுத்த போர்ட்ன்னு சொன்னா என்னால இருக்க முடியாது”

 “நான் லிஸ்ட் அனுப்பிட்டேன்,அடுத்தது பனாமால சான்ஸ் உண்டு”

“கப்பல் சவுத் ஆப்ரிக்கா வழியா வந்தா” எனசொன்னபோது ஒரு மாததிற்கு மேல் வாய்ப்பே இல்லை என்பதை புரிந்துகொண்டு தலையசைத்தார்.

“நான் லெட்டர் தரனுமுன்னா சொல்லுங்க”

“எஸ் நீ தா நான் அனுப்பிரேன்”என்றார். 

பத்துமணிக்குள் கணினியில்  அலுவலக சாப்ட்வேரிலிருந்து விடுமுறை கடித்ததை நிரப்பி அச்சு நகல் எடுத்தேன், காஸ் இஞ்சினியர் “லெட்டர் குடுக்கீயளோ” 

“ஆமா எனக்கு போனுமில்லா” என்றேன்.

 முதன்மை இஞ்சினியரிடம் பன்னிரெண்டு மணிக்கு மேல் போய் லீவ் லெட்டரை  நீட்டினேன்.

கையில் வாங்கியவர் “எப்ப போறதுக்கு,நவம்பர் தேர்ட் வீக்கா, காண்ட்ராக்ட் எப்ப முடியும்”


“டிசம்பர் ஆறு,பொறவு நீங்க ரெண்டு பேரயும் ஒண்ணா அனுப்ப முடியாதுன்னா சொன்னா” என்றதும் 

அவர் உதடு பிரியாமல் புன்னகைத்து “நான் ரெண்டுபேரையும் ஒண்ணா உட மாட்டேன்”என்றார்.

நானும் சிரித்துவிட்டு அவர் கையெழுத்து போட்டு தந்த பேப்பரை வாங்கி வந்து ஒரு மணிக்கு பிரிட்ஜில் சென்றேன் காப்டன் அவரது மேஜைக்கு வரவில்லை,அவரது கணினியின் மௌசுக்கு கீழே வைத்துவிட்டு,இரண்டாம் அதிகாரியிடம் சொல்லி விட்டு பணிக்கு சென்றேன்.மீண்டும் இரண்டு மணிக்கு சென்ற போது காப்டன் அமர்ந்திருந்தார். 

2014 இல் ஜப்பான் டோய காஷி துறை முகம் 


“ஸார் சைன் ஆப் லெட்டர்’என்றேன்

“பாத்துட்டேன் ஷாகுல்” என்றார்.

மாலையில் காப்டனின் முத்திரையும்,கையொப்பமும் இட்ட எனது விடுமுறை கடிதத்தை காடட் அஞ்சுமன் கொண்டு வந்தான். “ஷாகுல் பாய் இது நீங்க கையெழுத்தே போடாமே குடுத்துரீக்கீங்க”

 வாங்கி பார்த்தேன் உடனே கையொப்பம் இட்டு கொடுத்தேன்.

நாஞ்சில் ஹமீது,

15-10-2023

  


No comments:

Post a Comment