Sunday, 3 September 2023

கப்பலின் உணவும் என் வயிறும் ..2

   


கப்பலில் புத்தாண்டு கொண்டாட்ட உணவு 

மும்பையில் இருக்கும்போதே நான் சாப்பிடும் அளவு குறைந்திருந்தது. எண்ணையில் பொரித்த வடை,பஜ்ஜி போன்றவற்றிலிருந்து சிறு விலக்கமுண்டு பீர்முகமது மாமா சொல்வார் “இப்பமே உளுந்த வட எல்லாம்  தின்னாம ஒதுக்குனியன்னா பொறவு தின்னவே முடியாது பாத்துக்கோ” என்பார்.

   2003 ஏப்ரல் மாதம் முதல் பயணம் குவைத் நாட்டிற்கு அமெரிக்க ராணுவத்துக்கு உணவு வழங்கும் கேட்டரிங் கம்பனியில் அடுமனையில் பாத்திரம் கழுவும் பணி முதல் ஒரு மாதம். வித,விதமான  உணவுகள். ஒவ்வொரு மெனுவும் ரயில் பெட்டிகள் போல நீளும் உணவு பதார்த்தங்கள்.அங்கு பணிபுரியும் எங்களுக்கும் அந்த உயர்தர உணவுகளை சாப்பிடுவதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

 அங்கிருந்து ஈராக்போர்முனையில் அதே ராணுவதிற்கானஉணவுக்கூடத்தில் பணி செய்ததால்.நிறைவான சுவையான உ

சிங்கப்பூர் விடுதியில் 

சுஷி ஜப்பானிய உணவு 

ணவு தேவைக்கும் அதிகமாக.ராணுவம் சாப்பிடும் அதே உணவு மட்டுமில்லாமல் ஸ்டோர் கீப்பராக பணி புரிந்ததால் புதிதாக வரும் உணவு பதார்த்தங்களையும், அரிய உணவு வகைகளையும் முதலில் அடுமனை பணியாளர்களிடம் சமைக்க சொல்லி சுவைப்பது நாங்கள்தான்.

  காலை உணவாக முட்டையின் வகைகள் ஆம்ப்லேட்,எக் ஸ்கிராம்பில்ட்,பாயில்ட் எக்,கோல்ட் மீட் எனும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்,சாசெஜஸ்,பேக்ட் பொட்டாட்டோ அல்லது ஸ்டீம் ரைஸ்,பான்கேக், பிரட்,மபின்ஸ்,டோனட்ஸ்,குரசன்ஸ் போன்ற  வகைகள்,ஓட்ஸ்,சீரியல்ஸ் வகைகள், பழ வகைகள்.

மதியமும் இரவும் ஹாட்டாக், ஹாம்பர்கர், இத்தாலியன்சாசேஜ், ஜாக்கெட்பொட்டாடோ, பீப்ஸ்டீவ், மக்ரோனிவித்மின்ஸ்பீப், ஸ்பெகட்டி, ‘டி’ போன் ஸ்டேக் (மாட்டிறைச்சியின் முதுகெலும்பு பகுதியில்  வெட்டியது)வினிகர், வோய்செய்ஸ்டர்சாஸ், ஹச்பி சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையில் பனிரெண்டுமணிநேரம் ஊற வைத்து குறைவான எண்ணையில் வேக வைத்தது,  உப்பும் மிளகுத்தூளும் கலந்து ஆவியில் வேகவைத்த கிங்கிராப் எனும் நீண்ட நண்டின் கால்கள், இறால், லாப்ஸ்டர், வெள்ளை சாதம், அலுமினியத்தாளில் பொதிந்து ஆவியில் வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்து உலர்த்திதூளாக்கப்பட்ட  உருளைக்கிழங்கில் தண்ணீரும்,வெண்ணையும்,,உப்பும் சேர்த்து வேகவைத்த மாஷ்பொட்டட்டோ ,உருளைக்கிழங்கை குச்சிகளாக வெட்டி எண்ணையில் பொரித்த பிரெஞ்ச்பிரைஸ்,முக்கோணவடிவில் வெட்டி எண்ணையில் பொரித்த பொட்டடோ வெட்ஜெஸ், சிக்கன் பார்பெக்யூ விங்க்ஸ்எனும் கோழியின் இறக்கைகள். தோலுரித்து முழுதாக ஆவியில் வேகவைத்த வான்கோழி, வெட்டியமீன் துண்டுகளில் உப்பு,  மிளகுத்தூள்தூவி ஆவியில் வேகவைத்து அதன் மேல் மெல்லிதாக வெட்டப்பட்ட எலுமிச்சை துண்டுகளுடன்  இருந்த கேட்பிஷ்,    துண்டுகளாக நறுக்கிய காரட், பீன்ஸ், காலிபிளவர், உதிர்த்த சோளம் சேர்த்து அவித்த மிக்ஸ்வெஜிடபிள்,மையோனஸ்தடவிய குண்டு ரொட்டிகளுக்கு இடையில் வெட்டியவெங்காயம்,வெள்ளரிக்காய்,லெட்டுஸ் வைத்த பர்கர்கள் .



 மெல்லியதாக நறுக்கிய போர்க் பேகான் எனும் பன்றியின் ஊன் துண்டுகள் கலந்த வெஜிடபிள்சூப்,டோமொட்டோசூப், ஆப்பிள், ஆரஞ்ச், பீச், மாங்கோ, பைனாப்பிள், ப்ளூபெரி போன்ற வகைகளில் பழச்சாறுகளும், மிக அதிக வெப்ப நிலையில் சூடாக்கப்பட்டு பின் குளிரவைத்து பாக்கெட்டுக்குள் அடைத்த பால் வகைகள். வட்டமாக பழவகைகளை அடுக்கிவைக்கபட்டிருந்த மேஜையில் வாழைப்பழம்,ஆப்பிள், ஆரஞ்ச், கிவிபழம், வெள்ளை மற்றும் கருப்பு திராட்சை, பேரிக்காய், சீமை பேரிக்காய், வெட்டியதர்பூசணிகள்,ஐஸ் க்ரீம் வகைகள்  இருந்தன.

   எனினும் அங்கே பணிபுரிந்த நூறு இந்தியர்களுக்கு சோறு,அரிதாக சப்பாத்தி ,பருப்பு,கோழிக்கறி அல்லது ஆட்டிறைச்சி கறி சமைக்கப்பட்டது.பெரும்பாலான இந்துமத சகோதரர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை.


  இவைகளில் ஹலலான உணவுகள் அனைத்தும் சுவைத்து பார்த்தேன்.எதை உண்டாலும் ஜீரணமாகும் வயிறு ஒரு வரம்தான்.தென்னிந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில்  பிறந்த எனக்கு என் முன்னோர்கள் கேட்டிராத,கண்டிராத உணவுகள் சாப்பிட கிடைத்ததும் நல்லூழ் தான்.

  சுனிதாவின் உம்மா எப்போதும் கேட்பது “மோனே கப்பல்ல சாப்பாடு எப்டி” என.கப்பலின் உணவு காப்டன் மற்றும் சமையல்காரர்,பணிபுரியும் நாட்டினரை பொறுத்து. நல்ல பொருட்கள் இருந்தாலும் நன்றாக சமைக்காத சமையல்காரர் அல்லது நல்ல சமையல் கலைஞனுக்கு தரமான பொருட்களை கொடுக்காத காப்டன் அமைந்தால் கப்பலின் சாப்பாடு கஷ்டம்தான்.நான் பெரும்பாலும் இந்திய பிலிப்பினோ பணியாளர்கள்,சமையல்காரர்கள் இருந்த கப்பல்களில் பணி புரிந்தேன்.

 முதல் கப்பலில் தான்சானியாவின் ஜும்மா சமையல்காரனாக இருந்தான். சமைக்கும் இறைச்சி,மீன் வகைகள் எதிலும் காரமோ உப்போ இருக்காது. காப்டனின் மனைவியும்,மூன்றாம் இஞ்சினியரும் இந்திய சுவையில் அவ்வப்போது சமைப்பார்கள்.

  தமிழ்நாட்டின் பாலாவும்,சுதாகரும் சாம்பார் உண்ணும் விருப்பத்தை சொன்னபோது துபாயில் கடைக்கு சென்று சாம்பார் மசாலா வாங்கி வந்து நான் செய்த சாம்பார் அனைவருக்கும் பிடித்துபோய் வாரத்தில் இரு தினங்கள் சாம்பார் இரவுணவில் நிரந்தரமானது.

   கப்பலில் உணவு விசயத்தில் காப்டன் அக்கரை கொண்டால் மட்டுமே நல்லுணவு அமையும்.நான் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் காப்டன்களே உணவுபொருட்களை வாங்கும் முறை இருந்தது.உணவு வழங்கும் நிறுவனத்திடம் பேரம் பேசி குறைந்தவிலைக்கு அதிக பொருட்களை வாங்கி அவர்கள் கொடுக்கும் தள்ளுபடி பணத்தில் இனிப்பு வகைகள் மற்றும் பரிசுபொருட்கள் வாங்கி தரும் காப்டன்கள் இருந்தார்கள்.

   லட்சங்களில் சம்பளம் வாங்கும் காப்டன்கள் சிலர் உணவுவழங்கும் நிறுவனத்திடம் அதிக தொகைக்கு ரசீது பெற்றுகொண்டு குறைந்த பொருட்களை மட்டுமே வாங்கிகொண்டு மீதி பணத்தை தன் சட்டைப்பையில் போட்டுகொண்டதால். கப்பலுக்கு உணவுபொருட்கள் வழங்க ஜெர்மனியை தாயகமாக கொண்ட நிறுவனத்திடம் ஒப்படைத்தது எங்கள் நிறுவனம். உலகெங்கும் உள்ள உணவு வழங்கும் உள்ளூர் நிறுவனத்தின் மூலம் கப்பலுக்கு உணவு பொருட்கள் வருவதால் ஐந்து டாலர் விலையில் கிடைக்கும் பொருள்கள் பலமடங்கு விளைவுயர்ந்து கப்பலுக்கு வந்து சேருகிறது.

2006 ஆம் ஆண்டு ஒருவருக்கு உணவுக்காக ஒரு நாளைக்கு வழங்கிய தொகை  6.75 அமெரிக்க டாலர். இப்போது  9.5 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.

  இரண்டாயிரத்தி பத்தாம் ஆண்டு கேரளாவின் பிரபீஸ்கிருஷ்ணா சமையல்கரனாக இருந்தார். சென்னை இன்சிடியூட் ஆப் ஹோட்டல் மேனஜ்மென்ட் இல் படித்தவர். பிரமாதமாக சமைப்பார். அப்போது ஆந்திராவின் ராஜுவின் மனைவி ஹய்மாவும் மகள் ஜோஷிகாவும் கப்பலுக்கு வந்திருந்தனர்.

 ஹய்மா ஒரு மாததுக்குப்பின் பின் சொன்னாள் “கப்பல்ல உள்ள சாப்பாட சாப்பிட்டு எப்படி உயிர் வாழுறீங்க” என. ஊறுகாயும்,வெள்ளை சாதமும் சாப்பிட்டு மூன்று மாதம் சமாளித்தாள். ஊருக்கு சென்றபின் என்னை அழைத்தாள் “ஹைதராபாத் வா என் கையால ஒருக்க நல்ல சாப்பாடு தாரேன்” என. 

  2006 ஆம் ஆண்டு தோல் வியாதியால் அவதிப்பட்டு கப்பலிலிருந்து இஸ்ரேலின் இலாத் துறைமுகப்பில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து ஜப்பான் செல்லும்முன் மீண்டும் எனது நோய் கூடியதால் அதற்கடுத்த ஒரு வாரத்தில் சிங்கப்பூரிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்.

  ஓராண்டு காலம் பணிக்கே செல்ல முடியவில்லை மருந்து எடுத்தபோது நோயின் தீவிரம் கொஞ்சம் குறையும் முழுமையாக குணமாகவில்லை.இறுதியாக ஒவ்வாமை என உறுதியானபோது எதனால் ஒவ்வாமை என கண்டுபிடிக்க ஒவ்வொரு உணவுகளாக சாப்பிடுவதை நிறுத்தினேன்.மீன்,முட்டை,இறைச்சி,கருவாடு,ஊறுகாய்,அப்பளம்,கத்திரிக்காய் என. ஒவ்வாவமை ஏற்பட்ட மறுநாள் முந்தைய நாள் சாப்பிட்டதை நிறுத்துவேன். அப்படி உருளைக்கிழங்கு,வாழைக்காய்,சாம்பார்,பால்,தயிர் என நிறுத்தி உப்பில்லாத கஞ்சிபோல் பத்திய சாப்பாடாக வந்து முடிந்தது. ஆயுர்வேதம் சொல்லும் வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்பதில் என் உடல் சூடு உடம்பு என்பது உறுதியானது.கோழியிறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

  பின்னர் உடல் பற்றிய அறிவும் வயிறுபற்றிய அறிவும் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது.அதன் பின் ஆறு வருடங்கள் மீன் தவிர வேறந்த இறைச்சியும் சாப்பிடாமல் பிசிடேரியனாக வாழ்ந்தேன்.உடல் சூடு காரணமாக ஆசன வாய் அருகில் மாதத்தில் ஒருமுறை அல்லது இருமுறை வரும் கொப்புளம் மறைந்தது. உபவாசம் எனும் உயர்மருத்துவம் எனும் நூலை என்னுடன் இமயமலை பயணத்தில் உடன் வந்த மருத்துவர் சுப்ரமணியம் தந்தார்.அதன் ஆசிரியர் அவரே. உபவாசம் இருப்பது நல்லது அதனால் வயிறு மற்றும் உள்ளுறுப்புகள் நல்ல ஓய்வெடுக்கும்.குறைவாக சாப்பிடுவதும் உபவாசம் தான் குறைவாக சாப்பிடுவதால் மூளை இளமையோடு இருக்கும்.இரவுணவை சீக்கிரம் சாப்பிட்டுவிட்ட்டால் மறுநாள் காலை வரை பன்னிரண்டு மணிநேரம் வரை வயிற்றுக்கு ஓய்வு கிடைக்கும்மென எழுதியிருந்தது.ஒவ்வொருமுறை நாம் உண்ணும்போது அதிகப்படியான சக்தி உணவை ஜீரணிக்க செலவாகிறது குறைவாக சாப்பிடும்போது குறைவான சக்தி செலவாகிறது. 

  வள்ளுவர் சொல்லுவதுதான் 

 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 

அற்றது போற்றி உணின்.

 சுனிதாவுடன் வாக்கு வாதம் முற்றி இருவருக்குள்ளும் பேச்சு நின்றுபோகும் சில நாட்கள் வீட்டில் சாப்பிடுவதே இல்லை.தண்ணீர்,கட்டன் சாயா,சில பிஸ்கட்கள் மட்டுமே வெளியிலும் சாப்பிடுவதே இல்லை அந்நாட்களில் உடல் அதிக புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ரமலானில் நோன்பிருக்கும்போதும் உடல் அதிக ஆற்றலோடு இருக்கும் பின் மாலையில்தான் லேசாக சோர்வாகும்.

  கப்பலில்  உணவு நேரம் வயிற்றுக்கு நல்லது.காலை ஏழு முப்பது,மதியம் பனிரெண்டு,மாலை ஆறு மணி இரவுணவுக்கான நேரம். இரவுணவை ஆறரை மணிக்கு உண்டுவிட்டால் காலை ஏழரை வரை திட உணவுகள் எதுவும் எதுவும் நான் உண்பதில்லை இயல்பாக ஒரு நோன்பு. பிலிப்பினோ பணியாளர்களுக்கு இரவுணவு நேரம் மாலை ஐந்துமணி ஆனால் இரவு ஒன்பது மணிக்கு நூடுல்சை வயிற்றுக்குள் திணித்து பெருஎப்பமிடுவார்கள். எனினும் ஞாயிறுகளில் காலை உணவுக்கு நான் பெரும்பாலும் செல்வதில்லை.சனி இரவின் ஸ்டேக் வயிற்றில் எஞ்சியிருக்கும்.

    கப்பலில் எல்லா ஞாயிறும் பிரியாணி போடுவார்கள்.மதியத்திற்கு பின் ஓய்வாக இருப்பதால் பிரியாணிக்குப்பின்  தூங்கி எழுந்தால் இரவில் பசிக்காது. சில நாட்கள் ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டால் போதுமானதாக இருக்கும். நல்லா நிமிர சாப்பிட்டபின்  ஏற்படும் சோர்வு படுத்து தூங்க சொல்லும்  குறைவாக சாப்பிட்டால் அரைமணிநேர ஓய்வுக்குப்பின் உடல் பணிக்கு தயாராக இருக்கும்.

  இப்போதெலாம் இரவுணவாக இரண்டு சப்பாதிக்குமேல் சாப்பிடமுடிவதில்லை. சப்பாத்திக்குள் மசக்கிய உருளைக்கிழங்கு வைத்து நெய் தடவி சுட்டெடுக்கும் ஆலு பரோட்டா ஒன்றுக்குமேல் சாப்பிட இயலாது.மதிய உணவில் சாலடும்,மீன் இருக்கும் நாட்களில் இரு துண்டு மீனும் சாப்பிட்டால் சோறு தேவைப்படாது.

 இப்போதெல்லாம் பணிக்கு வரும் இளைஞர்கள் மிக குறைவாக உணவுஉட்கொள்கிறார்கள். கேடட்,மற்றும் பயிற்சி இன்ஜினியர்களிடம் “கோளி தின்னது போல கொரிக்கீங்க,உன் வயசுல நானேல்லாம் பத்து புறோட்டா திம்பேன்” என்பேன்.

  குறைவாக சாப்பிடுவதால் உள்ள நன்மைகள் மிக நன்றாக அறிவுக்கு தெரிந்தாலும் பிடித்த உணவுகளை காணும்போது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறேன்.மட்டன் குழம்பு,இறால் போன்றவை.கோழிஇறைச்சி சமைக்கும் நாட்களில் எல்லாம் நான் சைவம்தான்.மாதத்தில் ஒரு ஞாயிறு தான் மட்டன் பிரியாணி. சிக்கன் பிரியாணி சமைக்கும் நாட்களில் எனக்கு வெஜ் பிரியாணி செய்து தருவார்கள் .

கப்பல் பிரியாணி 




  கடந்த  ஞாயிறில் இறால் பிரியாணி செய்திருந்தார்கள்.இறால் எனக்கு கொஞ்சமாகத்தான் சாப்பிடவேண்டும்.அதுவும் ஒரு வேளை.மதியம் நிறைய இறால்களுடன் சாப்பிட்டேன். ஞாயிறு இரவுகளில் செய்யப்படும் பர்கர்,பிட்சாகளை பெரும்பாலும் சாபிடுவதில்லை. இறாலை கண்டதால் ஒரு குவளையில் இரவுக்கும் எடுத்து வைத்திருந்தேன். அன்று மாலையில் எனக்காக வெஜ் பர்கர்கள் செய்து வைத்திருந்தார் மெஸ் மென் கலீல்.மதிய பிரியாணிக்குப்பின் ஒரு மணிநேரம் தூங்கியதால் பசியே இல்லை.மாலை ஏழு மணிக்கு சென்று ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வந்தேன்.

  இரவில் தூக்கம் அழுத்தும் வரை அமர்ந்திருப்பேன். பகலில்   தூங்கியதால் இரவு தூக்கம் வராது என தெரிந்தது.பத்துமணிக்குமேல் லேசாக பசிப்பது போல் இருந்தது.கட்டன் சாயா குடிக்கலாம் என உணவுகூடத்துக்கு போனேன். மதியம் குவளையில் எடுத்துவைத்திருந்த இறால் பிரியாணி என்னை கூப்பிட்டது.அறிவு சொல்லியது சாப்பிடாதே என.மனம் கேட்கவில்லை குவளையில் இருந்த பிரியாணியில் உள்ள இறால்கள் மட்டும் நன்றாக சுவைத்து சாப்பிட்டேன்.பத்துக்கு மேல் இருக்கும்.கட்டன் சாயாவுடன் அறைக்கு வந்து வாசித்தும் எழுதியும் இருந்தேன்.

இரவு இரண்டு மணிக்கு வயிற்றை கலக்கியது மூன்று முறை நீராக குழாயை திறந்தால் தண்ணீர் வருவது போல் பீய்ச்சியடித்தது.லேசான வயிற்று வலியும். இறால் வேலையை காட்டுகிறது என தெரிந்தது. அதிகாலை நான்கு மணிக்குதான் தூங்கினேன். உடலில் சூடு கூடிவிட்டது என எண்ணி ஆறரை மணிக்கு எழுந்து எனது மரச்செக்கு நல்லெண்ணெய் தேய்த்து அரைமணிநேரம் கடந்தபின் குளித்தேன்.


கப்பல் பார்ட்டி 


    காலையில் லேசான வயிற்றுவலி இருந்துகொண்டே இருந்தது.வயிற்றுபோக்கு இல்லை ஆனாலும் வயிற்றால் போவது போல் ஒரு உணர்வு இருந்துகொண்டே இருந்தது.பதினோரு மணிக்கு காய்ச்சல் போல இருந்தது.கீழே விழுந்துவிடுவேன் என நினைத்தேன்.பத்தி சாப் சொன்னார் நேற்று நான் ஒரேயொரு இறால் மட்டும்தான் சாப்பிட்டேன் எனக்கும் வயிறு சரியில்லை என்றார்.



சீனாவில் 


முதன்மை இஞ்சினியர் வயிறுசரியில்லாமல் பின்னர் காய்ச்சல் வந்து இரு தினங்களாகிறது என்றார்கள். ஜப்பானின் ஷோகே,மூன்றாம் இஞ்சினியர்,காடேட் இன்னும் சிலரும் சில நாட்களுக்கு முன் வயிறு சரியில்லாமல் இருந்ததாக சொன்னார்கள்.

  அன்று வேறொரு விசயமாக காப்டன் கப்பல் பணியாளர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தினார். கூட்ட முடிவில் முதன்மை இஞ்சினியர் வயிற்று பிரச்னையை எழுப்பினார்.காப்டன் எனக்கும் பிரச்னை இருந்தது.உணவில் போடும் மசாலாவை சரி செய் இல்லையெனில் அமெரிக்கா சென்றபின் அனைவரையும் மருத்துவமனை அனுப்ப வேண்டியிருக்கும். 

“எத்தனை பேருக்கு வயிறு பிரச்சனை வந்தது”என கேட்டபோது மூன்று ஜப்பானியர் உட்பட பதினைந்துபேர் கைஉயர்த்தியபோது சமையல்காரனின் முகம் சுருங்கிப்போனது.அன்று மதியம் ஒரு கரண்டி சோற்றில் தயிர்விட்டு,சாப்பிட்டேன்,இரவு ஒன்றரை கரண்டி சோற்றில் சுடுநீர் விட்டு கஞ்சி.

 இரண்டாவது நாளே வயிறு சரியாகியது.மூன்று தினங்கள் இரவில் கஞ்சியும்,மதியம் மிக குறைவாக தயிர்சோறும் சாப்பிட்டபின் வயிறு சரியானது.

 நாஞ்சில் ஹமீது .

29 aug 2023.

sunitashahul@gamil.com


சிங்கப்பூர் நண்பர் மணிவண்ணன் 

மீன் தலைக்கறி 

கத்தார் ஏர்வேஸ் உணவு நன்றாக இருக்கும்.

விமானத்தில் உணவுகள் 

மேலும் படங்கள் இணையம் கிடைக்கும்போது வலையேற்றம் செய்வேன்.

1 comment: