புயல் நடுவே பயணம் .
கடந்த பத்தொன்பதாம் தியதி நெதர்லாந்தின் தெனுசன் துறைமுகத்திலிருந்து
அமெரிக்காவின் பிலேடெல்பியா அருகிலிருக்கும் மார்க்ஸ் ஹூக்க்கு கப்பல் புறப்பட்டது
.சரக்குகளை இறக்கிவிட்டதால் இப்போது கப்பல் காலியாக இருக்கிறது .பத்து நாள் பயணம்
மார்கஸ் ஹூக் செல்ல.
புறப்பட்ட அன்றே இரவு
கப்பல் ஆடத்தொடங்கியது அருகில் எங்கோ புயல் இருப்பதாக நினைத்தோம். வழக்கமாக கடல் சீற்றம் இருக்கும்போது அதிக பட்சம் நான்கு
நாட்கள் இருக்கும். எப்போது முதல் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எப்போது கடல்
சாந்தமாகும் என்பதை வானிலை அறிக்கைகள் எங்களுக்கு சொல்லிவிடும் .
இம்முறை ஒன்றன் பின் ஒன்றாக
புயல்கள் வந்துகொண்டே இருந்தது .புயலின் திசையை கணித்து கப்பலின் பாதையையும்
மாற்றிகொண்டே இருந்தார்கள்.ரோல்லிங்குடன் பிச்சிங்கும் சேர்ந்ததால் கப்பல்
சுழற்றி, சுழற்றி அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டதால் கப்பல் ஊழியர் அனைவரும்
தூக்கம் இழந்தோம் அதிகபட்சம் ஒன்பது மீட்டருக்கு மேல் அலைகளும் ,பதினைந்து
டிகிரிவரை பக்கங்களில் சாய்ந்து கொண்டும் இருந்தது .
பெரும் அலைகளில் கப்பலின்
முன் பகுதி சாயும்போது பின்பகுதியின் ப்ரோப்பல்லர் தண்ணீருக்கு மேலே வந்ததால் அதிக வேகம் காரணாமாக
(engine trip due to over speed) கப்பல் வழியில் எட்டுமுறை நின்று போனது .இப்படி
கடல் சீற்றமாக இருக்கையில் இஞ்சின் நின்றுபோவது பேராபத்தை விளைவிக்கும் .
எட்டு நாட்களுக்கு பிறகு
என்ஜினில் ஒரு கோளாறு .கப்பலை நிறுத்திதான் சரி செய்யவேண்டும். கடல் கொஞ்சம்
சாந்தமாகட்டும் என காத்திருந்தோம் ஒருநாள் முழுவதும் .அவள் சாந்தமாகவேயில்லை.
கப்பலை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் .அனைத்தையும் இறுக்கமாக கட்டியே
வையுங்கள் என அறிவிப்பு பலகையில் பெரிய எழுத்துகளால் எழுதியிருந்தனர் .
மறுநாள் கிடைத்த வாய்ப்பில்
கப்பலை நிறுத்தி நாற்பது நிமிடங்களில் கோளாறை சரி செய்து மீண்டும் பயணத்தை
தொடர்ந்தோம் .கடும் காற்றும் மழையும்,குளிரும் .குளிர் காலங்களில் அட்லாண்டிக்
கடல் இப்படித்தானிருக்குமாம்.குடியிருப்பை விட்டு வெளியே செல்லவேயில்லை .சூரியனையும்
காணவில்லை. பெரும்பாலும் குடியிருப்பை விட்டு வெளியே செல்லாமல் கப்பலின் உள்ளேயே
பணிகள் வழங்கப்பட்டன .மூத்த சகோதரி மத போதகர் கரோலின் அவர்களுக்கு செய்தி
அனுப்பினேன் கடுமையான பயணமாக இருக்கிறது என .கடவுள் வழிநடத்துவார் .நான்
பிரார்த்திக்கிறேன் என்றார்கள் .
கப்பலின் அடுமனை
பணியாளர்கள் ஒரு கட்டாயத்திற்குட்பட்டவர்கள் .கப்பல் தலைகீழே கவிழ்ந்தாலும் மதியம்
பனிரெண்டு மணிக்கு எனக்கு சாப்பாடு தா என ஒருவன் வயிற்றை பிடித்தபடி வருவான் .இந்த
கடுமையான சூழலிலும் எல்லாவேளையும் உணவு தந்தார்கள் .கூர்மையான கத்தி,கொதிக்கும்
தண்ணீர்,பால் ,தெறிக்கும் எண்ணை, சூடான அடுப்பு
போன்றவற்றை தேர்ந்த சர்கஸ்காரனால் கூட கையாள இயலாது.இதிலும் கைத்தவறி
விழும் அதிகப்படியான ஊப்பு ,காரத்திற்கும் அவர்கள் பொறுபேற்க வேண்டும் .மொத்தம்
இருபத்தியொரு பேருக்கும் மூன்று வேளை உணவை தவறாமல் தந்தார்கள் .இதில் இரு உக்ரைன்
நாட்டை சார்ந்தவர்களுக்கு தனியுணவு. இரவுணவாக.ஒருநாள் மாசால தோசையும்
வேறொருநாள் ஆப்பமும் தந்தார்கள் .
கடந்த சனியன்று கடல் சாந்தமாயிற்று,ஞாயிறு
மாலை கிரிக்கெட் விளையாடினோம் .அன்றிரவே மீண்டும் அடுத்த புயல் என்றார்கள்
.அமெரிக்காவை சென்று சேரும் முன் இன்னும் இரண்டு புயல் என்றது வானிலை அறிக்கை
.ஒன்றாம் தியதி வந்து சேரவேண்டியது .இன்று அதிகாலை அதாவது ஆறாம் தியதி வந்து
சேர்ந்தோம் மார்க்ஸ் கூக்க்கு.
எங்களூரில் கடல் தொழிலுக்கு
செல்லும் எனது மீனவ நண்பர்கள் கடலை கடலம்மா என்பார்கள் .அவள் எப்போதும் தன்
பிள்ளைகளை கைவிடுவதில்லை .
ஷாகுல் ஹமீது ,
05 march 2019 .
உண்மை சம்பவ சிறுகதை மிகவும் அருமை. தொடர்க.
ReplyDelete