தடைபட்ட பயணம்
நேபாளிகள் பனிரெண்டுபேரின் படுகொலை,இன்னும் சிலரை பிணைய கைதிகளாகவும்
பிடித்துவைத்திருந்தனர் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதனால் இந்திய அரசாங்கம்
இந்தியர்கள் ஈராக்கில் பணிக்கு செல்ல தடை விதித்தது. அதை எங்கள் முகாமின்
அறிவிப்புபலகையில் ஓட்டியிருந்தனர். அதனால் விடுமுறையில் செல்லும் யாரும் திரும்பி
வர இயலாது என சொன்னார்கள் .
ஆனாலும் பல நிறுவனங்கள்
துபாய் வழியாகவும் ,ஜோர்டான் வழியாகவும் பணியாளர்களை இராக்கிற்குள் கொண்டு வந்து
கொண்டே இருந்தனர் .
நான் அங்கிருக்கும்போது என்
குடும்பத்தார் எனக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்தார்கள் .2004 ஆகஸ்ட்ல்
, அக்டோபர் மாதம் ரமலான் அதன் பிறகு திருமணம் என முடிவு செய்தார்கள் .
நான் அக்டோபர் மாதம் இந்தியா செல்ல வேண்டுமென
விண்ணப்பித்தேன்.அப்போது ரமலான் நோன்பு காலம் தொடங்கியிருந்தது. ரமலானில்
அதிக தாக்குதல்கள் இருக்காது என்றனர் .ஆனால் வழக்கத்தைவிட அதிக தாக்குதல்
நடந்துகொண்டிருந்தது .
எங்களுடன் இருந்த
அதிகாரிகளுக்கு ஏழு வாரம் வேலையும் மூன்று வார விடுமுறையும் .அவர்கள் அடிக்கடி ஊருக்கு
போய் வருவதுபோலிருக்கும். எங்களுக்கு ஆறுமாதங்களுக்கு பின் மூன்று வாரம் என இருந்தது .பின்பு
வருடத்திற்கு ஒருமுறை என்றாகியது .அப்போது தாக்குதல்கள் அதிகமாக இருந்தபடியால்
சிலருக்கு சரியான நேரத்தில் விடுமுறைக்கு செல்ல இயலவில்லை .சிலரை சிறப்பு
வாகனத்தில் அழைத்து சென்றார்கள் .
அப்போது பாக்தாத் விமான
நிலையம் ஒரு தனியார் நிறுவனத்தால் செயல்படதொடங்கியிருந்தது .பாக்தாத்வரை சாலை
பயணம் மிக கடினமாகி விட்ட நாட்கள் அது .
அக்டோபர் 25 ம் தியதி
இந்தியா செல்லும் ஆறு பேர்கொண்ட குழுவில் என் பெயரும் வந்தது .அதன் பின் இருந்த
பத்து நாட்கள் மகிழ்ச்சியாக சென்றது. அப்போது ரமலான் நோன்பு காலம் .தினமும் நோன்பு
வைக்கும் நண்பர்களை அதிகாலையில் சாப்பிட நான் எழுப்பி விடுவேன் .மூன்று மணிக்கு
எழுந்து இருட்டில் அந்த இளங்குளிரில் வேறு வேறு அறைகளில் இருக்கும் நண்பர்களின்
படுக்கையை கண்டுபிடித்து எழுப்புவேன் .
அறையில் ஆழ்ந்த
தூக்கத்திலிருக்கும் மற்றவர்களின் துயில் கலையாமல் அதை செய்யவேண்டும் .கலீல் பாயை லேசாக உடலில்
கைபட்டதா என உணர்வதற்குள் அவர் எழுந்து சலாம் சொல்வார் .ரோஷன்,அயுப் மற்றும் சிலரை சில
வினாடிகள் மெதுவாக தட்டினால் எழுந்துவிடுவர்.ஜின்னா பாஷா அவனை எழுப்புவது மிக கடினம் உடலில்
தட்டியும்,அடித்தும் படுக்கையிலிருந்து தூக்கி அவனை உட்கார வைத்தால் ஆம் இதோ
வருகிறேன் என்பான் .
கழிவறை சென்று ,கை கால்
கழுவி,ஆடை மாற்றி உணவு கூடத்திற்கு செல்லும்
போது அவனது அறையை பார்த்தால் மீண்டும் தூங்கிகொண்டிருப்பான்.மீண்டும் எழுப்பி
நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் வா என நாங்கள் சாப்பிட செல்வோம். இரவு பணியிலிருக்கும்
இஸ்லாமிய நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை அரிசி சாதமும் ,பருப்பும் செய்து எங்களுடன்
இணைந்து கொள்வர் .
மாலையில் நோன்பு திறக்கும் நேரம் நோன்பிருக்கும் சில
ராணுவ வீரர்களும் எங்களுடன் இணைந்து கொள்வர் .உள்ளூர் ஈராக்கி அவனுடைய வீட்டு பேரீச்சம்
மரத்தில் காய்த்த பேரீச்சம்பழமும் ,துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள்,தர்பூசணிபழம் ,ஆப்பிள்
அல்லது மாம்பழ பழசாறும் ஏதாவது ஒரு வகை கேக்கும் வைத்திருப்போம் .
13,14 மணிநேரம்
சொட்டு நீர் கூட அருந்தாமல் இருந்துவிட்டு நோன்பு திறந்ததும் எதுவும் சாப்பிடமுடியாது
.ஒரு பேரீச்சை,சில பழதுண்டுகள் ,ஒரு டம்ளர் பழச்சாறு ,அல்லது நீர் அருந்தினால்
வயிறு நிரம்பிவிடும் .உடல் மீண்டும் ,மீண்டும் தண்ணீரையே கேட்கும் .மாலை நேர தொழுகைக்குபின்
இரவில் எட்டு மணிக்குதான் இரவுணவு சாப்பிடுவோம் .
ரமலானில் ஒரு நாள் பகல்
பொழுதில் அமெரிக்க ராணுவ வீராங்கனை லிலானி யை உணவு கூடத்திற்கு வெளியே
சந்தித்தேன்.மதிய உணவு முடிந்து வெளியே உள்ள மரநிழலில் உள்ள சிமென்ட் நாற்காலியில்
அமர்ந்திருந்தாள்.கையில் சுவையான கோல்டு கோன் ஐஸ்கிரீம் இருந்தது. என்னை கண்டதும் ஐஸ்க்ரீம் ஐ
மறைத்துவிட்டு ஹாய் என்றாள்.ஹாய் லிலாணி நலமா என கேட்டேன்.மிக்க நலம் ஷாகுல்
உங்கள் நோன்பு காலம் தொடங்கிவிட்டது நீ நோன்பிருக்கிறாயா என கேட்டாள்.
ஆம் நீ ஏன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாய் நீ சாப்பிடு
என்றேன்.எங்கள் மூத்த அதிகாரிகள் ரமலான் துவங்கிய அன்றே எங்கள் அனைவரிடமும்
சொல்லியிருக்கிறார்கள் .இந்த ஒரு மாதம் இசுலாமியர்கள் பகலில் நோன்பிருப்பார்கள் .அதனால்
அவர்கள் முன்பு உண்பதையும், பருகுவதையும் நீங்கள் தவிர்க்கவேண்டுமென சொல்லிவிட்டு கையிலிருந்த
ஐஸ்க்ரீம் ஐ குப்பைதொட்டியில் போட்டுவிட்டு நான் பின்னர் வேறு ஐஸ்க்ரீம்
சாப்பிட்டு கொள்கிறேன் என்றாள்.
எவ்வளவு உயர்ந்த பண்பு அவர்களுடையது
என எண்ணி கொண்டேன். பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள் என ஆட்சியிலும் ,அதிகாரத்திலுமிருப்பவர்கள்
கீழ் பதவியிலிருப்பவர்களுக்கு சொல்லி தருகிறார்கள் .நான் பார்த்த பெரும்பான்மையினர்
இன,மத,மொழி வேறுபாடின்றி பழகுபவர்கள் .பிறரை தன்னைப்போலவே சமமாக கருதுபவர்கள் .
நீ எப்போது ஊருக்கு போகிறாய் என என்னுடன் நீண்ட நேரம்
உரையாடிவிட்டு நீ திருமணம் செய்யும்
பெண்ணுடன் பேசினாயா என கேட்டாள்.
பின்பு லிலானி தன் சட்டைப்பையிலிருந்து பத்து நிமிட மதிப்பு கொண்ட இரு தொலைபேசி
அட்டைகளை தந்து உன் பெண்ணிடம் பேசு என அழகிய பற்கள் தெரிய புன்னைகைத்தாள்.உங்கள்
ஊர் பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .நீ திருமணதிற்கு
முன் பெண்ணை சந்திக்க முடியுமா என கேட்டாள்.ஆம் நான் ஊர் சென்றதும் பார்ப்பேன்
என்றேன் .
லிலானி நான் முகாமிலிருந்த கடைசி மூன்று மாதங்கள் என்னுடன்
நல்ல நட்புடன் பழகியவள் .இந்திய கலாச்சாரத்தையும்,இந்தியா மீதும் பெரும் மதிப்பு
கொண்டிருந்தாள் .நம்மை பற்றியும் நம் நாட்டை பற்றியும் நிறைய அவர்கள்
படிக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன் .
லிலானி பதவி உயர்வு
கிடைத்து தோள்பட்டையில் நட்சத்திரம் பதிக்கும் (piping ceremony ) விழா மனமகிழ்
மன்றத்தில் நடந்தது .என்னை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தாள்.அன்று
பணி காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை .
அக்டோபர் மாதம் 24 ம் தியதி
காலையிலேயே முருகன் பாய் இன்னைக்கு கடைசிநாள் .கவனமா வேலைசெய் என்றான் . மறுநாள் ஊர் செல்கிறேன் என்ற உற்சாகம் காலையிலேயே
தொற்றிகொண்டது .தெரிந்த அனைவரிடமும் விடை பெற்றுகொண்டேன் .
கலீல் பாயும்
,கிருஷ்ணமூர்த்தியும் வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர் .துறையூர் விஜயகுமார் பணமும்
,மலிவு விலையில் வாங்கிய பனிரெண்டு பனியன்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்க தந்தான் .என்னிடம்
நான் உபயோகித்த பொருட்கள் மட்டுமே இருந்தன .அதனால் ஒரு பயண பையும் நண்பர்கள்
அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்க தந்த பொருட்களை ஒரு அட்டை பெட்டியிலும் கட்டி
கொண்டேன் .
மாலை பணி முடிந்து
என்னுடன் ஸ்டோர்ஸ் ல் வேலை செய்த அனைவரிடமும் நன்றி கூறி விடை பெற்றேன் .அடுமனையில்
உள்ள ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சந்தித்து போய் வருகிறேன் என்றபோது,அனைவரும்
என்னை வாழ்த்திவிட்டு காலையில் வண்டி புறப்படும் முன் சந்திக்கிறோம் என்றனர் .
வீட்டிற்கும் தொலைபேசியில் அழைத்து
சொன்னேன் .நாளை முகாமிலிருந்து புறப்பட்டு பாக்தாத் செல்வோம் .அங்கு சென்றபின்னர்
தான் விமான சீட்டு கிடைக்கும் .இந்தியா வந்து சேரும் நேரம் ,நாள் பின்னர்
தெரிவிப்பேன் என்றேன் .
அன்று இரவு உணவுக்குப்பின் நண்பர்களுடன்
வெகுநேரம் பேசிகொண்டிருந்துவிட்டு தாமதமாக தூங்க சென்றேன் .அதிகாலை மூன்று மணிக்கு
கடிகாரம் அழைப்புமணியை ஒலிக்கும் முன்பே எழுந்து நண்பர்களையும் எழுப்பிவிட்டு
நோன்பு வைப்பதற்காக சாப்பிட உணவு கூடத்திற்கு சென்றோம் .பணியிலிருந்த கதிர் பாய்
ஆம்பிளேட் போட்டு தரவா என கேட்டான் .இனி நாம் சந்திப்பது முடியுமா என
தெரியாது அதனால் உன்னை சந்தோஷபடுத்த இது
எனக்கு கடைசி வாய்ப்பு என்றான்.சிரித்துக்கொண்டே சரி என்றேன் .
உணவை தட்டில் எடுத்து
விட்டு உணவு கூடத்திற்கு உள்ளே சென்றமர்ந்தோம் .அப்போது அங்கு இரவு பணியில் இருந்த
அமெரிக்க பெண்மணி .இன்று சாலை போக்குவரத்து ,வான்வழி அனைத்தும் நிறுத்த அழைப்பு
விடுத்துள்ளனர் .அதனால் இன்று உங்கள் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றாள் .
அதிகாலையே அதிர்ச்சி தரும்
செய்தியாக இருந்தது அன்று .
ஷாகுல் ஹமீது ,
21-11-2016.
இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் தர துவங்கிவிட்டீர்களே ஷாகுல்? என்னவாயிற்று? எப்படி இந்தியா வந்தீர்கள்? திருமணம் குறிப்பிட தேதியில் நடந்ததா? எனறு ஏகப்பட்ட கேள்விகள் இபோது வாசிக்கும் எங்களிடம் அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறோம்.
ReplyDeleteரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர் முன்பாக ஐஸ்கிரீம் சாப்பிடாமல் குப்பைத்தொட்டியில் போட்ட அந்த அமெரிக்கப்பெண்ணின் உயர்வான பண்பை வியந்து கூறுகிறீர்கள். சாத்தான்கள் விலங்கிடப்படும் ரமலான் மாதத்தில் நோன்பாளி ,எல்லா ஜீவராசிகளுக்கும் மிக அடிப்படையான உண்ணும் இச்சையை, தான் தனித்திருகும் போதும் மிக மிக பசித்திருக்கும் போதும் கூட அடக்கி தவிர்த்து அல்லாவின் பெயரால் பசியின் துன்பத்தை உணர்ந்து பகிர்ந்தளிக்கும் மாண்பைப்பெற எத்தனை சுய அடக்கத்துடன் இருக்கிறார். அதுவல்லவா உயரிய பண்பு அந்த அமெரிக்கப்
பெண்ணுடையதைவிட?
உங்களின் பதிவுகளில் போரின் வலியையும் அவலத்தையும் மட்டுமல்லாது மானுடத்தின் பல்வேறு பரிமாணங்களையும் நாங்கள் தரிசிக்கிறோம். எனவே தொடர்ந்து பதிவிடுங்கள்.
அன்புடன்
லோகமாதேவி
பதில்கள் அடுத்த பதிவில் .
ReplyDeleteஅடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறோம்.
ReplyDelete