Wednesday, 2 November 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 19


                                                            ஓடிஸ்
                                
.
  ஓடிஸ்   அமெரிக்க ராணுவ வீரன் .  அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில் ஒரு இருபது பேரை கொண்ட குழுவில் ஒருவன் .

   தினமும் மாலையில் மட்டும் அவர்கள் குழுவுக்கு உணவு எடுத்து செல்ல வருவார் . .ஓடிசை போலவே பலரும் இதுபோல் தூரத்திலிருக்கும் குழுவுக்கு உணவு எடுத்து செல்வர் . உணவுகளை அடுமனையில் வாங்கிகொள்வார்கள்.எங்களிடம் வருவது அவர்களுக்கு வேண்டிய கோக் அல்லது பெப்சியை வாங்கி செல்ல .

   எங்களுடன் இருந்த விஜயகுமாருக்கும் ,ஒடிசுக்கும் ஒரு ஒப்பந்தம் .தினமும் தமிழில் சில வார்த்தைகள் சொல்லிகொடுப்பதும் ,ஒடிஸ் விஜயகுமாருக்கு ஸ்பானிஸ் சொல்லிகொடுக்கவேண்டும் என்பதே .  தினமும் பேசுவதால் நன்கு பழகியிருந்தோம் ஓடிசுடன்.
 
    சனிக்கிழமைகளில் அங்குள்ள மனமகிழ் மன்றத்தில் நடக்கும் சல்சா டான்சில்  ஆண்களும் ,பெண்களும் ஜோடியாக ஆடுவார்கள் .தனியாக சென்றாலும் ஜோடி கிடைத்துவிடும் .யாரும் யாருடனும் ஜோடி சேர்ந்தால் ஆடலாம் சிலர் சில சமயங்களில் ஜோடி கிடைக்காமல் தனியாக ஆட்டத்தை தொடங்குவர் பெரும்பாலும் ஆட தொடங்கிய சில நிமிடங்களில் ஜோடி சேர்ந்துவிடும்  .


   எங்களுடன் வேலைசெய்தவர்களில் ஏழெட்டுபேர் இரவு 9 மணிக்கு பின்  பணி முடித்தபின் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மனமகிழ் மன்றத்திற்கு வண்டியில் செல்வர்.அதில் விஜயகுமாரும் ஒருவன் .

     ஓரு சனிக்கிழமையில்  சல்சா ஆட்டம் பார்க்கபோய்விட்டு  வந்த மறுநாள் மாலையில் ஓட்டிஸ் வந்தபோது .விஜயகுமார் ஓட்டிசிடம் .நீ நேற்று ஆட்டிகொண்டிருந்ததை பார்த்தோம் .ஏன் தனியாக ஆடினாய் அவளுடன் சேர்ந்து ஆட வேண்டியதுதானே என அங்கே ஆடின ஒரு அழகான ஒருத்தியை குறித்து கேட்டான் .அவளுடன் ஜோடி சேர பலர் கனவுகளுடன் இருக்கிறார்கள் என .


    விஜயகுமார் சொன்ன அந்த வீராங்கனை பேரழகி .அவளின் பெயர் பலரின் நினைவிலிருந்து அகலாதது .குறிப்பிட்ட அந்த அழகிய பெண் மாலையில் உணவு கூடத்திற்கு  வரும்போது அவளை பார்ப்பதற்காகவே இளைஞர் கூட்டம் ஒன்று  உணவு கூடத்தின் வெளியே காத்து கிடப்பார்கள். புகைத்து கொண்டும் ,கை கடிகாரத்தில் மணியை பார்த்துக்கொண்டும் சுத்தி சுத்தி வருவர் .


    அவள் ஐந்தடிக்கு மேல் உயரம் ,நல்ல நிறமும் ,கொஞ்சம் தென்இந்திய முகச்சாயல் கொண்ட அழகுடையவள் ,இயல்பான புன்னகை  எப்போதும்  இதழ்களில் இருக்கும் இருபது அல்லது இருபத்திரண்டு வயதை கொண்ட அழகு மங்கை .
    

   ஓடிஸ் விஜயகுமாரிடம் சொன்னான் ஐ யாம் எ பாமிலி மேன் என . எனக்கு குடும்பம் இருக்கிறது .நான் மற்ற பெண்களுடன் இடுப்பில் அணைத்து ஒட்டி ,உரசி ஆட என்னால் முடியாது என்றான் .நாங்களெல்லாம் வாயடைத்து நின்றோம்.பெரும்பான்மையானவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டிருப்பதை நாங்களே கண்ணால் பார்த்துகொண்டிருக்கும் போது .கொஞ்சமும் சுய ஒழுக்கம் தவறாத ஒருவனும் இருக்கிறான் என்பதே எங்களனைவருக்கும் ஆச்சர்யம் .
  


   அடுத்த சில நாட்களில் ஓடிஸ் விடுமுறையில் ஊருக்கு செல்கிறேன் .ஒரு மாத விடுமுறை .பின்னர் நாம் சிந்திப்போம் என்றான் .நான் இங்கு வரும்போது என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.என் குழந்தையை முதன்முதலாக பார்க்க போகிறேன் என மகிழ்ச்சியுடன் எங்களிடம் விடைபெற்றான் .

  
     உடன் வந்த வேறு ஒருவரை காட்டி இவன் தான் நாளை முதல் வருவான் எங்கள் குழுவில் இருக்கிறார் .என்னை போலவே இவரையும் சிறப்பாக நடத்துங்கள் என வேண்டினான் ஓடிஸ்.  நான்,முருகன், விஜயகுமார் மனதார வாழ்த்தி வழியனுப்பி வைத்தோம். ஓட்டிஸ் சென்ற பின் விஜயகுமார் சிலரிடம் அமிகோ ,கெப்பாச என சில நாட்கள் சொல்லிகொண்டிருந்தான் .யாரும் அவனுக்கு ஸ்பானிஷ் சொல்லிதரவில்லை .ஆனால்  அவனிடம் சிலர் தமிழ் கற்றுகொண்டிருந்தனர்.


   சரியாக ஒருமாதத்தில் ஓடிஸ் திரும்பி வந்தான் .விடுமுறை முடிந்ததும் சரியாக போர்களத்திற்கு அனுப்பிவைத்துவிடுவார்கள்போல .அன்று மாலை ஓடிஸ் மிக உற்சாகமாகத்தான் இருந்தான் .விஜயகுமாரை கண்டதும் ஸ்பானிஷ் இல் இருவரும் உரையாட தொடங்கினர் .


   முருகன் பாய் ஒரு மாசம் இவங்க தொந்தரவு இல்லாம இருந்தது தொடங்கிட்டாய்ங்க இப்ப என சிரித்தான் .

   ஓடிஸ்  எங்கள் அனைவரிடமும் புன்னகையுடன் கைகுலுக்கி  நலம் விசாரித்தான்.விஜயகுமார் இப்போது நீ சொல் நண்பா என கேட்டான் .எப்படி இருக்கிறாய் என .

   ஒரு குட் நியூஸ் ஒரு பேட் நியூஸ் .முதலில் நான் நல்ல செய்தியை சொல்கிறேன்.எட்டு மாதங்களுக்கு பின் என் குழந்தையை நான் பார்த்தேன் சந்தோஷமான நாள் அது .

  குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பும் ,அவன் சென்ற சில நாட்களுக்கு பின் அவனை பார்த்ததும் குழந்தை தந்தையை அடையாளம் கண்டு கொண்டு சைகையால் அவனிடம் தூக்க சொன்னதையும் ,குழந்தையுடன் குழந்தையாகவே மாறி அவன்  விளையாடி மகிழ்ந்ததையும் சொல்லி சிரித்தான் .
 
  
   குழந்தையுடன் விளையாடி மகிழ்ந்ததை அவன் சொல்லும்போது அவனது உடல்மொழியும் ,முக பாவனையும் அவன் அனுபவித்ததை எங்கள் கண்முன்னே காட்சியாக்கியது .

   அடுத்து பேட் நியூஸ் என்றான் .என் மனைவி இப்போது என்னுடன் இல்லை.நான் செல்லும்போது அவள் அவளுடைய புது காதலுடன் வீட்டின் உள் அறையில் இருக்கிறாள் என்றான் .



  அதை கேட்ட எங்களுக்கு நம்பவே இயவில்லை .முருகன் என்ன பாய் இது கூறு கெட்ட கலாச்சாராமா  இருக்கு .இவன் அநியாத்துக்கு நல்லவனா இருக்கான் .எங்கூர்ல ன்னா அப்பவே வெட்டி போட்டுருவாய்ங்க .முருகா அவங்களுக்கு இது சாதாரணம் என்றேன் .

  ஆமா இங்க உள்ளதுல அந்த செண்டு கிழவி மட்டும் தான் இனி கல்யாணம் செய்ய பாக்கி என சொல்லி சிரித்தான் .

  தினமும் உணவு கூடத்தில் பணியிலிருக்கும் ஒரு வயதான தோற்றமுடைய பெண்மணி ,தூரத்தில் வரும் போதே முருகன் சொல்வான் செண்டு கிழவி வருகிறாள் என ,அவ்வளவு உயர்ந்த வாசனை திரவியத்தை எப்போதும் உபயோக்கிப்பாள் .

   எங்களால் ஓடிசுக்கு  ஆறுதலாக எதுவும் சொல்ல முடியவில்லை .அடுத்து வந்த நாட்களில் ஓடிஸ் இயல்பாக இருந்தான் .விஜயகுமாருடன் ஸ்பானிஷ் பேசி தமிழ் கற்றுகொண்டிருந்தான் .
  02-11-2016,
ஷாகுல் ஹமீது .

Sha260@yahoo.co.in

6 comments:

  1. தம்பி, ஆச்சர்யமாக இருப்பது ஒடிஸ் பற்றிய பதிவுதான் அவரின் மனைவியைப்பற்றியல்ல. ஏனெனில் அவர்களுக்கு இது போன்ற தனிமனித மற்றும் குடும்ப விழுமியங்கலெல்லாம் இல்லவே இல்லை. they need company thats all. ஆனால் மிகசாதாரணமாக கிடைத்திருக்கும் இன்னொருதியுடன் மனமகிழ்ந்து சிறிதுநேரம் இணைந்திருக்கும் சந்தர்ப்பத்தையும் கூட விட்டு விட்ட அவர் மனைவியை இன்னொருவனுடன் சேர்ந்து பார்த்துவிட்டு அவனுடனே விட்டு விட்டு வந்தபின்பும் தன் குழந்தையை குறித்த அந்த அன்பும் மகிழ்வுமாய் இருப்பதை காண்கையில் அவர் தமிழைமட்டுமல்ல கொஞ்சம் நம் தமிழ் கலாச்சாரத்தையுமே கற்றுக்கொண்டுவிட்டார் போல இருக்கிறது. இது நாள் வரையிலும் நான் ஆண்களில் இரண்டே இரண்டு வகையினர் தான் என எண்ணியிருந்தேன்
    சந்தர்ப்பம் கிடைத்து பயன்படுத்திக்கொண்டவர்கள் ஒரு வகை
    சந்தர்ப்பத்திற்காய் காத்துக்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை
    அப்படி இல்லை என்கிறார் ஒடிஸ்
    நனறி ஷாகுல் இந்த அருமையான பதிவிற்கு

    ReplyDelete
    Replies
    1. ஆம் அக்கா நான் நான் அங்கு பார்த்தவர்களில் ஓடிஸ் ஒரு சுயஒழுக்கம் உடையவராய் இருந்தார் .அதனாலேயே இந்த பதிவு .ஒடிஸ் என்றும் என் மனதில் நிற்கிறார்.
      ஷாகுல்

      Delete
  2. கடலலைமேல் உலாவிகொண்டிருக்கும் ஷாஹூலுக்கு இன்னும் ஈரம் மாறாத நினைவுகள் கொடுக்கும் சுட்டரிக்கும் பாலைவன நினைவுகள் கண்ணாடியில் பட்டு ஒளிரும் சூரிய ஒளிபோல் பளிச் என்று ஒளிர்ந்ததை கண்டேன்.... மாறி மாறி வரும் நுணுக்கமான உணர்வுகளை எழுதுவதும் ககலையே...

    கலைநயம் மிக்க படைபைப்புகள் பாராரட்டுக்குரியதே.....

    ஜெயமோகன் சைட்டில் இடம் பெற்றது மேலும் எழுத்தில் ஊக்க்மளிக்கும் ஒன்று...

    வளரட்டும் ....ஓய்வில்லா அலைகள்போல் தொடரட்டும் உஉங்கள் பணி...எழுத்திலும்..

    நன்றி
    தர்மா

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் அளிக்கும் தொடர் உற்சாகம் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது .
      மிக்க நன்றி
      ஷாகுல்

      Delete
    2. .நான் மற்ற பெண்களுடன் இடுப்பில் அணைத்து ஒட்டி ,உரசி ஆட என்னால் முடியாது என்றான்

      Delete