ஈராக் போர்முனை
அனுபவங்கள் 12
விடுமுறையில் தாயகத்திற்கு
பயணம்
கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்தோம். சிலர் நெடுநாட்கள் உற்சாகமின்றி இருந்தனர். அவர்கள் மீண்டு இயல்புநிலைக்கு வர ஒரு மாதமானது.
தீ விபத்து ஏற்பட்டபோது கூடாரம் முழுமையாக அணைந்த பின் சென்று பார்த்தேன். மனம் அப்போதும் சான்றிதழ்கள் இருக்கும் எனநம்பிக் கொண்டிருந்தது. எனது தகர அலமாரியில், ஒரு இரும்புக் கருவி மட்டும் கறுப்பாக மாறி எஞ்சியிருந்தது. அதைஎடுத்துக்கொண்டேன். ராணுவ வீரன் ஒருவர் அன்பளிப்பாக தந்தது(அதை இப்போதும் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன் ).
மறுநாள் முதல் உடுக்க ஆடை இல்லை. பொருத்தமே இல்லாத அளவில் ஒரு கால்சட்டையும், பனியனும் தந்தார்கள். கயிறால்அந்த கால்சட்டைக்கு மேல் கட்டிய பிறகுதான் அது இடுப்பில் நின்றது . உள்ளாடைகள் சில (ஜட்டி தான்) வாங்கித் தந்தார்கள். எல்லாம் அமெரிக்கர்களின் அளவு. சிறிய உடல்வாகு கொண்டநம்மவர்களுக்கு பொருத்தமே இல்லாதது. தீ விபத்துக்குப்பின் நண்பன் கார்த்திக்கின் உடைமைகள் அவன் தங்கியிருந்த அந்தகட்டிடத்திற்குள் இருந்தது. செப்டம்பர் பதிமூன்று அன்று காலைதான் அதை எடுப்பதற்கு சென்றோம் அது பூட்டியிருந்ததால் பின்னர்எடுக்கலாம் என வந்து விட்டோம் அதனால் அவனது ஆவணங்களும் , உடைமைகளும் சாம்பலாவதிலிருந்து தப்பித்தது.
கூடாரம் அமைக்கும் குழு, வேறு முகாமுக்கு செல்லும் போது, மிக அதிக ஊதியம் கொடுப்பதாகச் சொல்லி கார்த்திக்கை அழைத்தது.நானும், லோகேஷும் இங்கு இருந்ததால், கார்த்திக் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டான். தீ விபத்துக்கு பின் வேலைக்குவராதவர்கள் பலர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் பலருக்கு கடவுச்சீட்டு இல்லை. பாக்தாத் இந்திய தூதரகத்தால்வழங்கப்பட்ட அவசரச் சான்றிதழுடன் இந்தியா சென்றனர். அவ்வாறு வழங்கப்படும் அவசரச் சான்றிதழ் ஒருமுறை மட்டுமே பயணம்செய்ய இயலும். இந்தியாவில் இறங்கியதும் விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.
சில நாட்களுக்கு பின் அனைவரையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்தினர். நிர்வாகம் உடமைகளை இழந்த ஒவ்வொருவருக்கும்நூறு டாலர்கள் நஷ்ட ஈடு வழங்க இருப்பதாக சொன்னபோது, என்னுடன் ஸ்டோர்ஸில் பணிபுரிந்த கர்நாடகாவின் ஜோக்கிம்கொதித்து எழுந்தான். “வேண்டாம் எங்களுக்கு, கம்பனிக்கு நான் தருகிறேன் நூறு டாலர்” என்றான். மனிதவளதுறையின் பெண்அதிகாரி “உங்களில் ஒருவன் சிகரெட் பிடித்ததால் தான் கூடாரம் தீ பற்றியது” என குற்றம்சாட்டினாள். முடிவு ஏதும் எட்டபடாமலேயே கூட்டம் முடிந்தது .
பின்னர் சில நாட்களுக்கு பிறகு அறுநூறு டாலர்கள் நஷ்ட ஈடும், ஒவ்வொருவருக்கும் ஒரு பயணப்பை வாங்க நாற்பது டாலரும்,கடவுச்சீட்டிற்கான கட்டணம் நூறு டாலரை கம்பனியே ஏற்றுகொள்ளும் எனவும் தகவல் வந்தது. பாக்தாத்திலிருந்து இந்திய தூதரகஅதிகாரிகள் நேரில் திக்ரித் வந்து விபத்து பகுதிகளை பார்வையிட்டனர். எங்களிடம் இருந்து புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தைபெற்றுக்கொண்டனர்.அன்று புகைப்படம் எடுப்பதற்காக ஒரு செப்பின் கோட்டை வாங்கி அணிந்திருந்தேன். அந்த உடையில் என்னை பார்த்துவிட்டு. “யுஆர் செப்” என்றார் டெர்ரி ஆண்டெர்சன். நான் “இல்லை” என்றேன். பின்பு என்னை அழைத்து “ஷாகுல், இன்று முதல் நீ உதவிசமையல்காரனாக பணிபுரிவாய்” என பதவி உயர்வு அளித்து, அடுமனைக்கு கூட்டிச் சென்று தலைமை சமையற்காரர் கோம்ஸிடம்விஷயத்தைச்சொல்லி பணி கொடுக்கச் சொன்னார். நான் மூன்று நாட்கள் அடுமனையில் பிரெஞ்சு பிரைஸ், பொட்டடோ வெட்ஜ்ஸ்என எண்ணையில் பொரித்தெடுக்கும் பணி செய்தேன். எல்லாம் உருளைக்கிழங்கின் வடிவம் மாறியதால் வந்த பெயர்கள்தான் .
நான்காம் நாள் காலை, எனது மேலாளர் டெர்ரி ஆண்டர்சனிடம் சென்று “என்னால் அடுமனைக்குள் வேலை முடியவில்லை, நான்மீண்டும் ஸ்டோர்ஸிலேயே வேலை செய்கிறேன்” எனகேட்டேன். ஸ்டோர்ஸில் கொஞ்சம் கடின பணிதான். இருந்தாலும்எனக்கு பனிரெண்டு மணிநேரம் பூட்டிய அடுமனைக்குள் , சமையல் பணியில் என் மனம் ஒன்றவில்லை. லோகேஷ் என்னைதிட்டினான். “பலர் உதவி சமையல்காரன் ஆக வேண்டுமென காத்திருக்கிறார்கள். சம்பளமும் ஐயாயிரம் அதிகம். கிடைத்தவாய்ப்பை நழுவ விடாதே” என்றான். மனம் திருப்தியில்லாத, மனம் ஒன்றாத எந்த பணியையும் கோடி ரூபாய் தந்தாலும் செய்யமுடியாது என்று புரிந்துகொண்ட தருணம் அது . மகிழ்ச்சியாக வெளியேறினேன்.கடவுச்சீட்டு கையில் இருந்து ஆறு மாதம் ஆனவர்கள் விடுமுறையில் ஊருக்கு சென்று வந்தனர். கார்த்திக்கும் மூன்று வாரவிடுமுறையில் ஊருக்கு போய் வந்தான். மீண்டும் கொஞ்ச நாட்களில் மனமும் உடலும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. புதிதாகவந்த அனைவரிடமும் கடவுச்சீட்டை கழுத்தில் அணியும் சிறிய பை ஒன்றை வாங்கி அதில் வைத்துகொள்ள அறிவுறுத்தபட்டனர்.
விஜயகுமார் “கடவுச்சீட்டை கழுத்தில் தொங்கவிட்டு அலைவதில் கஷ்டமாக இருக்கிறது” என்றான். “இங்க பாரு, நீ உயிரோடஇருந்து பாஸ்போட் இல்லைனா ரொம்ப கஷ்டம் .நீ முடிவு செய்” என தீ விபத்தில் அனைத்தையும் இழந்த ஒருவன் கோபத்துடன்சொன்னான்.
எனக்கும், லோகேசுக்கும் மற்ற சிலருக்கும் ஜனவரி மாதம் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் புதிய கடவுச்சீட்டு தரப்பட்டது.கடவுச்சீட்டு கிடைத்தவுடன் கையில் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியில் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது என கூவிஅடுமனைக்குள் ஓடி ஒரு வட்டமடித்தேன். விரைவில் விடுமுறையில் ஊர் செல்லும் மகிழ்ச்சி தான். கடவுச்சீட்டு கிடைத்தபின்நாங்கள் விடுமுறைக்கு இந்தியா செல்லும் நாளும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி இருபத்திரெண்டாம் தேதி, திக்ரித்திலிருந்து பாக்தாத்தை நோக்கி புறப்பட்டோம். வேறு உடைகள் இல்லாததால் பணிக்குஅணியும் சீருடையில் ஒரு புதியதை அணிந்துகொண்டோம். நான் புதிதாக ஒரு பயணப்பை வாங்கியிருந்தேன். விஜயகுமார்,துறையூரில் அவனது விலாசத்தில் அனுப்பி வைப்பதற்காக, பனிரெண்டு பனியன்களும் பணமும் தந்தான். வாரம் தோறும்நாற்பத்தைந்து டாலர்கள் கையில் தருவார்கள். போர் முனை என்பதால், இங்கு செலவே கிடையாது. மாதம் பதினைந்து டாலர்கள்தொலைபேசி அட்டைக்கு மட்டும் தேவை. மீதிப் பணத்தை கையில் வைப்பதும், பாதுகாப்பதும் கடினம். எனவே ஊருக்குசெல்பவர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்புவார்கள். பணத்தை அனுப்புகிறவர்களுக்கு அது வீட்டில் போய் கிடைக்கும் வரைநிம்மதியே இல்லாமல் அலைவார்கள். “கொண்டு போறவன் எடுத்து கிட்டா” என்று அல்லாடுவார்கள். அவன் திரும்பி வராமலே கூட போய்விடலாம். என்னை நம்பி சிலர் பணம் தந்தனர். வீட்டில் கொடுக்க, மொத்தம் இரண்டாயிரம் டாலர்கள் என் கழுத்தில்தொங்கிகொண்டிருந்தது .
புத்தாண்டு தினத்தன்று எங்களுக்கு கிடைத்த மிட்டாய்களும் ,கையில் கிடைத்த எதையெல்லாமோ பெட்டியில் போட்டுவைத்திருந்தேன். லோகேசுக்கு எதுவும் இல்லை. கம்பளியின் பிளாஸ்டிக் உறை ஒரு பை போல இருக்கும். அதில் அவனுடையமிட்டாய்களும், சில பொருட்களும் இருந்தன. மும்பையில் தான் அவன் ஒரு சிறு பை வாங்கி கொண்டான். அன்று மாலையேபாக்தாத்தில் ஒரு விடுதியில் போய் சேர்ந்தோம்.
ஐந்து மாதத்திற்குப்பின் முகாமை விட்டு வெளியே வந்தோம். ஈராக்கின் சாலையை ஒட்டியிருந்த இடிபாடுகள் அகற்றப்படாமலேஇருந்தது. நாங்கள் திக்ரித் வரும்போது இருந்த அதே காட்சிகள், ஈராக்கின் பெரும்பகுதி. இப்போது முழுமையாக அமெரிக்கர்களின்கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது.
14-10-2010,
ஷாகுல் ஹமீது
This comment has been removed by the author.
ReplyDeleteSuspense!!!!Its a perfect timing break in the episode!!!வைன் நீ இதோட செத்தடா மவனே....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்லா இருக்கு இந்த பதிவும் தம்பி. கஷ்டங்கள் எல்லம் கொஞ்சம் கொஞ்சமா குறையும்னு நினச்சா வேற மாதிரியான கஷ்டங்கள் வருது இல்லையா? வாழ்க்கயின் போக்கை நாம முன்னாடியே தீர்மனிக்கமுடியாதுங்கற மாதிரிதான் உங்க பதிவுகளில் எல்லாம் புதுசு புதுசா பிரச்சனைகள் சொல்லறீங்க
ReplyDeleteவைன் மாதிரியான ஆட்கள் இருக்கறதுனாலதானெ வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கு? இல்லாட்டி வெறுமையா இருக்குமே?
இப்பொ நல்லா சஸ்பென்ஸ் வச்சு எழுதறீங்க. ஆவலா காத்துகிட்டு இருக்கேன் அடுத்த பதிவுக்காக.11 பதிவுகளில் அழகிகளா வந்தங்க இப்பொ 12ல் பேரழகிகளா? நடக்கட்டும் நடக்கட்டும்
மிக அருமை! தொடரட்டும்!
ReplyDeleteஇவருடைய பதிவை முதலிலிருந்து படித்து வருகிறேன்,இதுதான் பயணக்கட்டுரை.எவ்வளவு எளிமையாக நகைச்சுவையும்,வாழ்வின் சந்திப்புமாக அருமை. வாழ்த்துக்கள் சகோதரா.
ReplyDeleteஇப்போதுதான் எழுத துவங்கியுள்ளேன் .இதுதான் முதல் நீள கட்டுரை சகோதரி .உங்கள் ஆதரவு தொடரும்போது .இன்னும் நிறைய எழுதுவேன் .நன்றி .
ReplyDeleteஷாகுல் ஹமீது
தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன், ஜெமோ லிங்க் ஷேர் பண்ணதுல கெடைச்சது. தலைகீழா படிச்சிட்டு வரேன்.. அதாவது கடைசில இருந்து முன்னோக்கி போய்டு இருக்கேன். :)
ReplyDeleteவைன் ஐ நோக்கி .
ReplyDelete