ஈராக் போர்முனை அனுபவங்கள் 6
பக்குபா விமானப்படை முகாமில் .
ஷாகுல் ஹமீது .
தூசி மிகுந்த பக்குபா
முகாமில் இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான் குவைத்திலிருந்து
புறப்பட்டபின் மூன்று நாட்களாக நாங்களனைவரும் குளிப்பதை மறந்திருந்தோம் என்பது
உணர்வுக்கு எட்டியது.
எங்களை பாக்தாத்திலிருந்து
பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர் தென்னாப்பிரிக்காவின் எட்வர்ட் .அவரது
தலைமையில் கூடாரம் அமைக்கும் குழு பத்து நாட்களுக்கு முன்பே பக்குபா வந்திருந்தது
. எட்வர்ட் எங்களிடம் “நமக்கான குளியலறை தயாராவதற்கு தாமதமாகும் அதுவரையில் இங்கே குளிப்பதற்கு ராணுவ வீரர்களுக்கான
குளியல் அறைக்குத்தான் செல்லவேண்டும்.தண்ணீர் இருப்பதை பொறுத்து நம்மை
அனுமதிப்ப்பார்கள்”என்றார்.
அன்று பின்மாலையில்தான்
எங்களுக்கு குளிப்பதற்கான அனுமதியை பெற்றுத்தந்தார் எட்வர்ட். “அனைவரும் ஒன்றாக
செல்ல இயலாது இன்று உங்களில் பத்து பேர் மட்டும் செல்ல அனுமதி” என்றார்.
கார்த்திக் “பிரதர் சீக்கிரம் வாங்க” என்றான்.மாற்றாடை,மற்றும் துடைக்கும்
துண்டுகளுடன் ஐந்து நிமிடம் நடக்கும் தொலைவிலுள்ள குளியலறை கூடாரத்தை நோக்கி
நடந்தோம்.நான் கார்த்திக்கிடம் “நாங்கோ சின்னபுள்ளைல வள்ளியாத்துல குளிக்க
இப்படித்தான் செல்வோம்”என்றேன்.குளியலறையின் உள்ளே சென்றால் முதல் அறையில் துணிகளை
அவிழ்த்து வைத்துவிட்டு பின் உள் அறைகளில் சென்று குளிக்க வேண்டும்.ஆடை மாற்றும்
முதல் அறையில் இரு ஆளுயர கண்ணாடிகள் இருந்தன.உள் அறையில் எதிரெதில் திசைகளில் ஆறு
வீதம் குளிக்கும் அறைகள் இருந்தன.தண்ணீர்
குழாயை திறந்தபின் மறைத்துக்கொள்ள கதவோ ,திரை சீலையோ இல்லை.அருகிலேயே ராணுவ வீராங்கனைகளுக்கான
குளிக்கும் கூடாரமும் இருந்தது.
மூன்றாம் நாள்
காலையில் ஒரு கூட்டம்,அறிமுக உரை .தினமும்
கூட்டம் நடத்தாமல் எந்த வேலையையும் அவர்கள் துவங்குவதில்லை
.தவறுகளும்,புரிந்துகொள்ளாமையும் (miss
understanding ) அதனால் பெரும்பாலும் தவிர்க்கபடுகிறது .
இங்கிலாந்தின் ரஸ்ஸல்
பக்குபா உணவுக்கூடத்தின் தலைமை அதிகாரியாகவும்,அவருடன் நியுசிலாந்து நாட்டு இரு
துணையதிகாரிகளும் வந்தனர் . ரஸ்ஸல் எங்களிடம் “இங்கே உணவு கூடம் மற்றும் அடுமனைக்கான பெரிய கூடாரம் தயாராகும் வரை நாம் கூடாரம்
அமைக்கும் குழுவினருடன் வேலை செய்ய வேண்டும்,கூடாரம் தயாரானதும் நமது பணிகள்
துவங்கும். இங்கு தினமும் ,காலை ,மதியம் ,இரவு என எட்டாயிரம் உணவு வழங்கபட வேண்டியிருக்கும்”
என்றார். பின் அவரே தரையில்
பதிக்கும் முதல் பலகையை எடுத்து வைத்து
அடுமனை மற்றும் உணவுகூடத்திற்கான பணியை துவக்கிவைத்தார்.தரைப்பலகை எடை குறைவான
பக்கவாட்டில் ஒன்றையொன்று கவ்வி நழுவி செல்லும் வடிவில் இருந்தது . ஜூன் மாத இறுதி ஈராக்கின் கோடை
துவங்கியிருந்தது வானேமே கூரையாக சுட்டெரிக்கும் வெயிலில் வேறு வழியின்று
பழக்கமில்லாத வேலைக்கு தள்ளப்பட்டோம் .
இரு நாட்களுக்கு பின்
எங்களுக்கு பொருட்கள் வைக்க தகர (locker)அலமாரிக்கான பாகங்கள் வந்தன .ரஸ்ஸல்
எங்கள் அனைவரையும் அழைத்து “மொத்தம் நூறு அலமாரிகள் வந்துள்ளன யாருக்காவது இதை
ஒன்றிணைக்க தெரியுமா”என கேட்டார். நான் அத்துடன் இணைந்திருந்த ஒன்றிணைக்கும் படத்தை வாங்கி பார்த்தேன்,எளிதாக
இருந்தது. “நான் செய்கிறேன்” என்றேன். “சரி பீட்டர் ஐ உதவிக்கு வைத்துகொள்”
என்றார் ரஸ்ஸல் .தங்கும் கூடாரத்திற்குள்ளேயே அதை ஒன்றிணைப்பேன் .அதனால் நானும்
பீட்டரும் வெயிலில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவிலிருந்து
தப்பித்தோம் .முதல் நாள் நான்கு அலமாரிகள் மட்டுமே செய்ய முடிந்தது .
இரண்டாம் நாள் இரவில்
கூடாரத்தினுள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம்
கேட்டது .அனைவரும் ஓடி வெளியே வந்தோம் .கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர்
எனப்படும் சுவருக்குள் அனைவரும் சென்று
பதுங்கி கொண்டோம். எங்களில் பலருக்கு அதுதான் முதல் முதலாக மிக அருகில் பெரும்
சத்தத்துடன் பொழிந்த குண்டுமழை.பலருக்கு சில வினாடிகள் மூச்சு நின்றுபோனது .சற்று
நேரத்திற்குப்பின் “ஹெட்
கவுன்ட்”என்றார்கள். “ஒன்,டூ ,த்ரீ” என்றோம்,அனைவரும் இருப்பதை உறுதிசெய்தபின்
“பேக் டு ஸ்லீப்”என்றார்கள் . மீண்டும் கூடாரத்திற்குள் சென்று கண் மூடி
படுத்திருந்தோம்,துயில்களைந்த இரவு அது.விடிந்தபின்னர் முந்தைய இரவின்
குண்டுவெடிப்பைப்பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் .
பக்குபாவில் எங்கள் முகாமை
நோக்கி தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துகொண்டே இருந்தது.பகல் வேளைகளில் குண்டுகள் வெடிக்கும்போது பணியில்
எங்கிருந்தாலும் விரைந்து பங்கர் பாதுகாப்புச் சுவற்றுக்குள் விரைந்துசெல்ல
அனைவரும் பழகிவிட்டிருந்தனர்.இரவில் “பேக் டு ஸ்லீப்”என்றால் பகலில் “பேக் டு
வொர்க்” என்றார்கள் . இப்போதெல்லாம் இரவில் குண்டு வெடிக்கும்போது நண்பன் கார்த்திக் பங்கர் பாதுகாப்பு சுவருக்கு
வருவதே இல்லை .தினமும் மிக அருகிலேயே பெரும் சப்தத்துடன் குண்டுகள் வெடிப்பது
இயல்பாகிவிட்டது.
இங்கு வந்த பத்து
நாட்களுக்குள் பாதிப்பேர் இங்கு வேலை செய்ய முடியாது.உயிருக்கு உத்திரவாதமிலாத
இந்த வேலை எங்களுக்கு தேவையில்லை எங்களை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள் என
முறையிட்டனர்.வேலைக்கு வரவும் மறுத்து விட்டனர். அடுத்த சில நாட்களில் அவர்களை
முகாமிலிருந்து அழைத்து சென்றனர் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக
அழைத்து சென்றனர் .அதற்கும் ஒரு வாரத்திற்கு முன்பே இரண்டு நியூசிலாந்து
அதிகாரிகளும் பணியை விட்டு சென்றிருந்தனர் .
எங்களுக்கு
குளிக்கவும்,மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் முகாமுக்கு வெளியிலிருந்து தண்ணீர்
லாரிகளில் ராணுவம் கொண்டு வருவார்கள்.முகாமிற்கு வெளியே கடும் தாக்குதல்
நடந்துகொண்டிருந்தது ஆகவே பாதுகாப்பு காரணக்களுக்காக ராணுவம் முகாமை விட்டு வெளியே செல்லவே இல்லை
தண்ணீர் எடுத்து வர .பன்னிரெண்டு நாட்கள் நான் என் வாழ்வில் குளிக்காமல்
இருந்ததும் அங்கேதான் .நல்ல வேளையாக குடிநீர் போத்தல்கள் மட்டும் தேவைக்கு அதிமாக
இருந்தது .
குளிரூட்டி வசதியுடைய
கூடாரத்திற்குள் நான் தகர அலமாரி செய்து
கொண்டிருந்தேன். சட்டை அணிவதே இல்லை இடையை மறைக்கும் அரைக்கால் சட்டை மட்டுமே
அணிந்து வெற்றுடலுடன் பணி செய்தேன். .இப்போது நாள் ஒன்றுக்கு ஆறு முதல் எட்டு
அலமாரிகள் வரை செய்ய பழகி விட்டேன் .
தண்ணீர் இல்லாததால் யாருக்கும் ஆடைகளை துவைக்கவும் இயலவில்லை . “ஜட்டி எல்லாம் அலசாம போடமுடியாது .முணு நாளா
ஒரே ஜட்டி தான் போட்டுருக்கேன் எல்லாம் அழுக்காயாச்சி போய் கேப்போம் வா” என மேற்பார்வையாளர் ரோகனுடன்
சென்றோம் .
உள்ளாடைகளை துவைக்காமல் அணிய
முடியாது என ரஸ்ஸலிடம் கேட்டோம்.அவர் ஆளுக்கு மூன்று வீதம் குடிநீர் போத்தல்கள் தந்தார் உள்ளாடை மட்டும் துவைக்க நான்கரை
லிட்டர் தண்ணீர்.தண்ணீர் போத்தல் வரும் அட்டை பெட்டியில் பாலிதீன் பையை போட்டு
துவைப்பதற்கான வாளியாக மாற்றி அதில் உள்ளாடைகளை துவைத்தோம் .
கழிப்பறையை சுத்தம் செய்யும் வண்டியும் பன்னிரெண்டு தினங்களாக வரவில்லை.உடன் வேலைசெய்த மங்களூர்காரர் “நான்
இன்னைக்கு பாட்டிலால் குத்தி அமுக்கிட்டாக்கும் காலத்த போனது” என்றார். நல்ல
வேளையாக மறுநாள் சுத்தம் செய்யும் வண்டி வந்தது . எல்லோரும் துடைக்கும் மென்தாள்
உபயோகித்ததாலும்,நிரம்பி வழியும் தருவாயில் நிலைமை சரியானாதாலும் தப்பித்தோம்
ராணுவ வீரர்கள்
பயன்படுத்தும் கழிப்பறையை அவர்களே சுத்தம் செய்வார்கள் .வாரத்தில் மூன்று நாட்கள் கழிப்பறையின் மலம் நிரம்பிய பையை வெளியே வைத்து தீயில் எரிப்பதை
பார்த்திருக்கிறேன் .சிலநேரம் அழகிய இளம்பெண்கள் அந்த பணியை செய்வதுண்டு .கடைநிலை
வீரர் அல்லது வீராங்கனை .
ராணுவ வீரர்கள் போர்முனையில்
குளிப்பதற்கு கொஞ்சம் தடிமனான ஈரமான (wet tissue peper ) காற்று புகாத பையில் அடைத்து வைத்திருக்கும் மென்தாள்கள்
வழங்கபடுகிறது.இரண்டு கைக்கும் இரண்டு,கால்களுக்கு இரண்டு, கழுத்து முதல் இடுப்பு
வரை ஒன்று,இடுப்புக்கு கீழ் பகுதிக்கு ஒன்று
அதுதான் அவர்களுக்கு ஒரு நல்ல குளியல் .
ஜூலை நான்காம் தியதி
அமெரிக்க சுதந்திரதினம் அன்று ராணுவ வீரர்களுக்கு ஒரு வேளை இரவுணவு மட்டும் உணவு
வழங்க வேண்டும் என்றனர் .எங்களிடம் பெரிதாக எந்த வசதியும் இல்லை குறைந்தது
இரண்டாயிரம் உணவு தயார் செய்யவேண்டும் .
மூன்று மின்சார அடுப்புகள் மட்டும் ராணுவம்
ஏற்பாடு செய்து தந்தது .பொருட்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளை ,குளிர்சாதன
பெட்டியாக பயன்படுத்தினோம்.சமைக்க தெரிந்த வீரர்களும் ,அழகிய இளம் மங்கைகள்
சிலரும் எங்களுடன் இணைந்துகொண்டனர் அன்றைய உணவு தயாரிப்பிற்கு . மிகுந்த
சிரமத்திற்கு பிறகு ஜூலை நான்காம் தியதி இரண்டாயிரம் பேருக்கு ஒருவேளை உணவு
கொடுத்தோம்.புத்தம் புதிய தங்களின் விருப்ப உணவுகளை உண்ட நிறைவு அவர்களின்
முகங்களில் வெளிப்பட்டது .
சில
வீரர்களும்,வீராங்கனைகளும் கட்டியணைத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு சுவையான உணவு
தந்தமைக்கு நன்றி என்றனர் . “மிக குறைவான அடுமனை தளவாடங்களுடன் இத்தனை பேருக்கு
சமைப்பது எளிதல்ல ,உங்கள் கடின உழைப்பை பாராட்டுகிறோம்,விரைவில் அடுமனை பணி
முடிந்து உங்கள் கையால் உணவுண்ண காத்திருக்கிறோம்”என கூறி சென்றனர் .
26-09-2016
Dear Bro... I have no words to appreciate your writing.. Its amazing..Masha allah.Let god strenghthen you by all means...
ReplyDeleteMy brother presented me a cruiser watch after his Iraq visit. A most valuable gift from the survival of the fittest..
ReplyDeleteஷாகுல் இந்த குண்டு வெடிப்பைவிடவா மும்பை வாழ்வு கசப்பானதாக இருந்த்து உங்களுக்கு என்ன மனஉறுதி
ReplyDeleteமுனாவரின் கால் துண்டிக்கப்பட்டதில் உஙகளுடன் நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம். மும்பயில் ஆஸ்பெஸ்டஸ் அறையை விட இந்த போர்க்களம் பரவாயில்லை என தோன்றியது எனக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. லக்ஷ்மணன் பின்பு என்னவானார்/
அவரைப்பற்றி ஏன் எதுவும் இந்த பதிவில் சொல்லவில்லை
பொய்யான நண்பர்களாய் இருந்த அந்த இரண்டு நபர்களின் சண்டையைப்பற்றிய உங்கள் அவதனிப்பு நன்றாக இருந்த்து
செங்கதிர் மேகதில் பட்டு சிதரும் நேரத்தில் இரவு த்ங்க போனீர்கள் என்பதில் என்ன கவித்தொனி நாகர்கோவிலில் இருந்து இன்னும் ஒரு பெரும் எழுத்தாளர் வந்துவிட்டார் என்றே எண்ணிக்கொண்டேன்
தெரிந்தவர்களை முகமூடியின்றி பார்க்கயில் ஏற்படும் அதிர்சியும் அவமானமும் மிக மிக கலங்கடிக்கும் ஷாகுல் நான் அதை பலமுறை உண்ர்ந்திருக்கிறேன். நண்பரல்லாதவர்களின் சுயரூபம் காண்கையில் பெரிதாக கவலைப்பட்டதில்லை எனினும் உடனிருந்து நட்புடன் பழகியவர்களின் சுயரூபம் தெரிய வருகையில் அவமானத்தில் கூசிக்குறுகிப்போயிருக்கிறேன். கைக்கு கி்டைத்ததை அள்ளிச்சென்றவர்களைப்பற்றி படிக்கையில் இதையே நினத்துக்கொண்டேன்
பட்டினியாக வேலை தேடிய நாட்களே அதிகம் எனவே மும்பை திரும்பி போவதில்லை என்பதில் உறுதியானேன் .பெரும்பான்மையானவர்கள் ஊருக்கு செல்லும் முடிவில் உறுதியுடன் இருந்தனர் .நான் மீண்டும் பக்குபா சென்று பணி செய்யவும் தயாராயிருந்தேன் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். துயரத்தில் பிற்ந்த மனஉறுதி உங்களுடையது தம்பி
குண்டு வெடிப்பின் பின் உயிர் தப்பிய மகிழ்சியை விட ஒரு வேளை கூட சரியாக உண்வளிக்க முடியவில்லை என வருத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய மனதுக்கு சொந்தக்காரர் நீங்கள் என்பதையே காட்டுகிறது இது தாய்மை உண்ர்வு உள்ளவர்களாலேயே சொல்லமுடிந்த ஒன்று. பாராட்டுக்கள் தம்பி
நீண்ட நாள்கள் வேலை தேடி கிடைக்கவில்லை .அதனால் கிடைத்த வேலையை விட்டு செல்ல மனம் வரவில்லை
ReplyDeleteஉண்ர்வு உள்ளவர்களாலேயே சொல்லமுடிந்த ஒன்று. பாராட்டுக்கள்
ReplyDelete