Sunday, 9 August 2026

ஹைதராபாத் .

    


இரண்டாம் தேதி மாலை இந்தோனேசியாவின் அருண் துறைமுகப்பிலிருந்து கொரியாவை நோக்கி புறப்பட்டோம். இரண்டே ஆண்டுகளான புதிய இந்த கப்பலின் இஞ்சின் வாட்சில்லா நிறுவன தயாரிப்பு. இரட்டை இஞ்சின் கொண்டது. இது டீசல், ஹெவி பீயுல் ஆயில் மற்றும் கேஸில் ஓடும். 

 கேஸ் மற்றும் டீசல் அல்லது ஹெவி ஆயில் (fuel sharing) சேர்த்தும் ஓடும். அதாவது கேசுக்கான நாசில் மட்டும் தனி. இந்த எல்என்ஜி கப்பலில் திரவ வடிவில் இருக்கும் கார்கோ ஆவியாக மாறும்போது ஏற்டும் சரக்கு தொட்டியின் அழுத்தத்தை குறைக்க அந்த வாயுவை காற்றில் கலக்கவிடாமல் அதை உபயோகித்து கப்பலின் இஞ்சின் மற்றும் ஜெனரேட்டரை இயக்குகிறோம்.

 இந்த இஞ்சின் வாட்சிலாவின் பெயுலிவர் மாடல் என்றார்கள் இஞ்சினியர்கள். காஸ் மோடில் கப்பல் இயங்கும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுகிறது. டீசல் மற்றும் ஹெவி ஆயிலில் இயங்குகையில் எந்த பிரச்னையும் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு இரண்டாயிரம் மணிநேரத்திற்கு பின் பீயுல் வால்வை மாற்ற வேண்டும். ஆனால் இந்த கப்பலில் கேஸில் ஓடும்போது பீயுல் வால்வுகள் சீக்கிரமே பழுதாகிவிடுவதால். கப்பலை அவ்வப்போது நடுக்கடலில் நிறுத்தி பீயுல் வால்வ் மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

 கொரிய கட்டுமானம் ஆன இந்த கப்பலில் சில இயந்திரங்கள் சீக்கரமே பழுதாகிவிட்டன. முக்கிய இயந்திரத்தின் காற்றை குளிர்விக்கும் ஏர் கூலர் குழாய்களில் ஓட்டைகள் விழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி ஏர் கூலரை கழற்றி பிளக் போட்டுள்ளனர்.

 நான் வந்தபின் மீண்டும் இரண்டாவது இஞ்சினின் கூலரிலும் ஓட்டை விழுந்தது ஒரு முழுநாளும் கப்பலை நிறுத்திவைத்து அதையும் பிளக் போட்டோம்.

 இப்போது மீண்டும் முதலாவது இஞ்சினின் கூலரில் ஓட்டை. ஒற்றை இஞ்சினில் கப்பலை நிறுத்தாமல் இயக்கி பழுதான கூலரை சரி செய்தோம். பீயுல் வால்விலும் பிரச்னை இருந்ததால் அதையும் மாற்றினோம். காலை எட்டுமணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை பணிசெய்தோம்.

 மாலை ஆறு மணிக்கு முதன்மை இஞ்சினியர் சொன்னார் கொரியாவிலிருந்து நீ ஊருக்கு போகிறாய் என. கொரியாவிலிருந்து பணியாளர் மாற்றம் இல்லாமலிருந்தது கடந்த வாரம் மெடிக்கல் அன்பிட் ஆகி ஊருக்கு சென்றவர்களுக்கு பதிலாக மூவர் வருகிறார்கள். அவர்களுடன் எனக்கான மாற்று பணியாள் வருகிறார். இம்மாதம் முழுவதும் கப்பலில் இருக்க வேண்டுமென நினைத்தேன். ஆகஸ்ட் மாத முழு சம்பளமும் கையில் கிடைத்தால்தான் ஊருக்கு சென்று இரண்டு மாதமாவது இருக்க முடியும்.


ஹைமா , ஜோஷிகா மெல்போர்ன்(2010)


   கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த நண்பர் ராஜு அழைத்திருந்தார். மகள் ஜோஷிகாவுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் குடும்பத்துடன் கண்டிப்பாக வர வேண்டுமென அழைப்பு விடுத்தார். முயற்சிக்கிறேன் என்றேன். இல்லை கண்டிப்பாக வரவேண்டும். நீ மட்டும்தான் கப்பல் பிரெண்ட் என்றார்.

ஜோஷிகா 


 2010 ஆம் ஆண்டு ராஜுவுடன் மனைவி ஹைமா மற்றும் பத்து வயதான ஜோஷிகாவும் கப்பலில் இருந்தனர். இத்தனை ஆண்டுகளாக அவர்களுடன் தொடர்பிலேயே இருந்தேன். ஹைமா அழைக்கும் போதெல்லாம் ஹைதராபாத் எப்போது வருகிறாய் என கேட்பாள். ஒரு நாள் வருவேன் என்பேன். அந்த ஒருநாள் எப்போது என கேட்டுக்கொண்டே இருப்பாள். மணப்பெண் ஜோஷிகா பள்ளிப்படிப்பை முடித்து கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கிறார்.

 சுனிதாவிடம் சொன்னேன் நான் ஊருக்கு வருகிறேன் ஹைதராபாத் திருமணதிற்கு சேர்ந்து போகலாம் என. அவளும் சம்மதித்துவிட்டாள். கப்பல் பன்னிரெண்டாம் தேதி கொரியா சென்றடையும். பதிமூன்றாம் தேதி கப்பலிலிருந்து இறங்கி பதினான்காம் தேதி விமானம் ஏறி ஊர் செல்லும்போது பதினைந்தாம் தேதி ஆகி விடும். 

 ஆகஸ்ட் பதினாறாம் தேதி மாலை ரிசப்ஷனும் நள்ளிரவு திருமணமும். சுனிதாவிடம் ஹைதராபாத் வந்துவிடு நான் இங்கே ஹைதராபாத்துக்கு டிக்கெட் கேட்டு பார்க்கிறேன் என்றேன்.

  நாகர்கோவிலிருந்து வாரத்தில் ஒரு ரயில் செல்கிறது. முப்பத்தியிரண்டு மணி நேரம். காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு சேரும். வடசேரியிலிருந்து மதியம் இரண்டரைக்கு பஸ் போகிறது பதினெட்டு மணிநேரம். மறுநாள் காலை ஒன்பதுமணிக்கு போய் சேரும். மூன்றாவதாக திருவனந்தபுரத்திருந்து விமானம் இரண்டு மணிநேரம் என சொன்னேன்.

 “உங்க டிக்கெட் வரட்டு முதல்ல” என்றாள்.

 கப்பலில் மூன்றாம் அதிகாரி சபரீசன் வியாழக்கிழமை மாலை அழைத்து. “பைனல் டெஸ்டிநேஷன் சொல்லுங்க” எனக்கேட்டார். “ஹைதராபாத்” என்றேன். நண்பர் ராஜிவிடம் கப்பலிலிருந்து ஹைதராபாத் வருகிறேன் என்றேன் மகிழ்ச்சியடைந்தார்.



  சுனிதாவை அழைத்து எப்படி வருகிறாய் டிக்கெட் போடுகிறேன் என கேட்டபோது. “உங்க டிக்கெட் கைல கிடச்ச பொறவு பாக்குலாம்” என்றாள்.



 வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்ததால் நான்கு மணிக்கே அறைக்கு வந்ததால் எனது பயணப்பையை தயார் செய்தேன். ஆறு மாதமாக நிலத்தில் எங்கும் செல்லாததால் துணிகள், புத்தகங்கள் மட்டுமே லக்கேஜ் அரை மணி நேரத்தில் பாக்கிங் முடிந்தது. புதன்கிழமை வரை உபயோகிக்கும் துணிகள் மற்றும் பொருட்கள் மட்டுமே மீதி. ஆறு மணிக்கு காப்டனின் பிறந்தநாள் கேக் வெட்டியபின் மனமகிழ் அறையில் படம் பார்த்துகொண்டிருந்தோம் காப்டன் வந்தார். “ஷாகுல் உனது சைன் ஆப் கான்சல்” என்றார்.

  


        மூன்றாம் அதிகாரி சபரீசன் சொன்னார் “சும்மா இருத்த மனுசன சைன் ஆப்ன்னு சொல்லி, கான்சல் பண்ணிட்டாங்க” என்றார்.

   ஹைதராபாத்தில் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசையில் இரு தினங்கள் மகிழ்ந்திருந்தேன்.

நாஞ்சில் ஹமீது,

09 aug 2026.

sunitashahul@gmail.com

   

  

Monday, 3 August 2026

கப்பல் காரனின் உடல்நல குறைவுகள்.



  
கப்பலில் பணிபுரியும்போது உடல்நல குறைவு, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வது மிக அவசியம். நடுக்கடலில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காது. அளவான சத்தான உணவுவுண்டு, தேவைக்கு உடற்பயிற்சியும் செய்து புகை மது இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மாலுமிதான் நீண்டநாள் கப்பலில் பணிபுரிய முடியும்.

  கப்பல் காரர்கள் பணியில் இணையும்முன் ஒவ்வொரு முறையும் முழுமையான மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற வேண்டும். எக்ஸ் – ரே, ரத்தம், சிறுநீர், ஈசிஜி, கண், காது, ஆசன வாய் என முழுமையான சோதனைகள் அவை. நாற்பது வயதை தாண்டினால் த்ரெட்மில் டெஸ்ட் கட்டாயம்.

 பத்து ஆண்டுகளுக்கு முன் நிறையபேருக்கு சிறுநீரக கல் பிரச்னை வந்ததால் அப்டமன் ஸ்கேன் கட்டாயமானது. தற்போது கப்பலுக்காக விமானம் ஏறும் முதல் நாள் ஆல்ஹகால் டெஸ்ட் அவசியம். அதன்பின்பும் நிறையப்பேர் கப்பலிலிருந்து சிறுநீரக கல் பிரச்சனையால் ஊருக்கு சென்றார்கள்.

  கப்பலில் முடியாமல் ஆனால் என்ன ஆகும். இரண்டாம் அதிகாரிதான் கப்பலில் மருத்துவ அதிகாரி அட்வான்ஸ் மெடிக்கல் கோர்ஸ் முடித்திருப்பார்கள். கப்பலில் இருக்கும் மருத்துவமனை மற்றும் மருந்துகளை அவர் நிர்வகிப்பார். பெரும்பாலும் மருத்துவ அதிகாரியாக இருப்பவர் அடிப்படைகள் கூட தெரியாத கூமுட்டையாக இருப்பார்கள். 
முதன்மை அதிகாரியும், காப்டனும் கூட மருத்துவ அதிகாரியாக இருந்து வந்தவர்கள் ஆதலால் இன்னும் கொஞ்சம் அனுபவம் இருக்கும். மார்பின் போன்ற சில முக்கியமான மருந்துகள் காப்டனிடம் மட்டுமே இருக்கும்.

வயிற்றுவலி, காய்ச்சல், இருமல், தோலில் கொப்புளங்கள், தோல் சிவந்து போதல் ஆகியவை ஏற்பட்டால் உடல் வெப்பம், இரத்தஅழுத்தம் சோதிக்கப்பட்டு ரோம் நகரில் இருக்கும் தன்னார்வலர்களாக தொண்டாற்றும் மருத்துவ குழுவுக்கு படங்களுடன் அனுப்பிவைத்தால் அவர்கள் என்ன செய்கிறது என யூகித்து சில மருந்துகளை கொடுக்க ஆலோசனை வழங்குவார்கள். அந்த மருந்து பெரும்பாலும் கப்பலில் இருக்கும்.

  கப்பலில் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய மருந்துகளை IMO ( international marine orgainsation) வகுத்துள்ளது. எலும்பு முறிவு, தையல் போடும் அளவு காயம் ஏற்பட்டால் கட்டு போட்டு கப்பல் துறைமுகம் செல்வதுவரை காத்திருக்க வேண்டியது தான்.

 மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது. கப்பல் கரையை ஒட்டி பயணித்தால் CPR முதலுதவி கொடுத்து அவசரமாக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் உண்டு. கரையிலிருந்து நானூறு மைல் தள்ளி பயணித்தால் மரணத்தை ஏற்றுகொண்டு கப்பல் பிரீசர் பெட்டியில் கரையணைவதுவரை உடலாக இருக்க வேண்டியதுதான்.
 எந்த அவரச சிகிச்சையும் உடனே கிடைக்க வாய்ப்பேயில்லை. 

  2006 ஆம் ஆண்டு நான் பணி செய்த கப்பல் பிலாண்டர். கப்பலேறிய இருபதாம் நாள் எனக்கு ஒவ்வாமையால் கடுமையான தோல் அரிப்பு ஏற்ப்பட்டது. இஸ்ரேலின் இலாத் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டேன். மருந்துகள் தந்தார் டாக்டர். முழுமையாக குணமாகாமல் இரண்டு மாதத்திற்குள்ளாகவே சிங்கபூரிலிருந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.

  2007 ஆம் இருந்த கப்பல் ஸ்டெயிட்ஸ் வென்ஞ்சர். பயிற்சி பிட்டராக இருந்தேன். கப்பல் மலேசியா சென்றடைய ஐந்துமணிநேரம் இருந்தது. ஆக்ஸிஜன் – அசிட்டிலீன் பாட்டில்கள் இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு சென்றேன் மேலாக மழை பெய்து டெக் ஈரமாக இருந்தது. டெக்கில் ராம்ப் போல இருந்த இடத்தில் ட்ராலியை தள்ளும்போது கீழே விழுந்து வலதுகை மோதிர விரல் கிழிந்துவிட்டது. முதன்மை அதிகாரி முதலுதவி செய்தார். கப்பல் கரையணைந்ததும் காப்டன் கெலாங் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அழகான இளம் தமிழ் மருத்துவச்சி “தெக்கணும், மூணு தையல்” என்றார். 

 கப்பலில் எக்ஸ்சாஸ்ட் வால்வ் தூக்கும்போது கைவிரல்கள் நசுங்கிய ஒருவர் ஐந்து தினங்களுக்குப்பின் ஜப்பானில் மருத்துவமனை சென்றார். விரல் நுனிகள் லேசாக வெட்டப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கபட்டார். 

ஜப்பான், தைவான், கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நல்ல மருத்துவம் கிடைப்பது உறுதி. அந்த பகுதிகளில் கப்பல் பயணத்தில் இருந்தால் அது கிட்டும் வாய்ப்பு உண்டு.

  ஜப்பானில் முக்கிய இயந்திரத்தின் பராமரிப்பு பணிசெய்யும்பொது முழங்கைக்கு கீழே கை மட்டும் துண்டாகி இன்ஜினுக்குள் விழுந்துவிட்டது, அழுக்கு எண்ணையில் கிடந்த கையை எடுத்து நீரில்கழுவி பாலிதீன் பையில் ஐஸ்போட்டு கட்டி அனுப்பிவைத்ததை ஜப்பானிய டாக்டர்கள் சில மணிநேரத்தில் ஒட்டி சரி செய்தனர்.

  2015 பணியில் இணையும்போதே எனது வலதுகை பெருவிரல் வீங்கி பழுத்துவிட்டது, நல்ல காய்ச்சலும். அமெரிக்காவின் நீயூயார்க் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் காப்டன். டாக்டர் டிபானி எனது மருத்துவ வரலாறை கேட்டபின். கூரிய கத்தியால் லேசாக கீறி பழுப்பை அகற்றி கட்டுபோட்டு மருந்துகள் தந்தார்.

  இரு ஆண்டுகளுக்கு முன் கேரளாவை சார்ந்த பிராசாந்த் காலையில் பணிக்கு வரவில்லை. அறையில் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார். கப்பலில் பாதையை திருப்பி ஹோனலுலுவில் நிறுத்தி உடலை ஒப்படைத்தனர். லேசான மாரடைப்பால் இறந்ததாக உடற்கூராய்வு பரிசோதனை சொல்லியது. அறையில் தனிமையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த மரணம் தவிர்க்கபட்டிருக்கும்மோ என எனக்கு தோன்றியது.

  சமையற்காரர் பாபு ஹுசைன் காலையில் தினமும் தவறாமல் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என வாட்ஸ் அப் அனுப்புவார். கடந்த டிசம்பர் முப்பதாம் தேதிக்கு மேல் அவரது சலாம் கிடைக்கவில்லை. வருட இறுதி, புத்தாண்டு கப்பலில் வேலைப்பளுவாக இருக்குமென எண்ணினேன். ஜனவரி இரண்டாம் தேதி நண்பர் ஒருவர் பாபு ஹுசைன் இறந்துவிட்டதாக சொன்னார். 

  நள்ளிரவு இரண்டு மணிக்கு லேசாக மார்பு வலியும் மூச்சு திணறலும் இருப்பதாக சொல்லியுள்ளார். காப்டன் அவரை கப்பலின் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளார். ஒரு படுக்கையும், ஆக்ஸிஜன் பாட்டிலுமே இருக்கும். முதலுதவி செய்த சில நிமிடங்களுக்கு பின் அவர் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுகொண்டார். 

   அர்ஜெண்டினாவில் அவரது ஜனாஸாவை ஒப்படைத்தார்கள். ஒரு மாதத்துக்குப்பின் ஜனாஸா குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது



     நேற்று இந்தோனேசியாவின் அருண் துறைமுகத்தில் சரக்கு நிறைப்பதற்காக வந்தோம். கடந்தவாரம் மலேசியா அருகில் வந்துகொண்டிருக்கும்போது நல்ல மழை பிரிட்ஜின் வெளியே சென்று வெப்பமானியை பார்த்துவிட்டு உள்ளே வந்த இரண்டாம் அதிகாரி தடுமாறி மிக மோசமான முறையில் கீழே விழுந்தார். இடதுகால் மூட்டு லேசாக திரும்பிவிட்டது. அவரே அதை திருப்பி மீண்டும் பழைய இடத்தில் வைக்கவும் செய்தார்.

 நடப்பதில் சிரமமும் வலியும் இருந்தது. பிரிட்ஜில் நாற்காலியில் அமர்ந்தே பணி செய்தார். உணவு அங்கேயே வழங்கபட்டது. லிப்ட் இருப்பதால் அறைக்கும், பிரிட்ஜுக்கும் சிரமப்பட்டு போய்வந்துகொண்டிருந்தார்.
 
  இரண்டாம் சமையல்காரர் கோலாப்பூரின் பாட்டீலுக்கு மார்பிலிருந்து கழுத்து துவங்கும் இடத்தில் லேசான வீக்கமும், உணவை முழுங்குவதில் சிரமமும் இருந்தது. 
 இந்த துறைமுகத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் காப்டன். 

கப்பல் கரையணையும் முன் இரவில் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது என்றான். கடந்த வாரம் பணியில் இணைந்த இஞ்சின் பிட்டர் வினோத் குப்தா.

 எனவே மூன்றுபேரும் நேற்று மருத்துவமனை சென்றனர். இரண்டாம் அதிகாரிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கால் மூட்டு திரும்பியுள்ளது தெரிந்தது.

 இரண்டாம் சமையற்காரர், இஞ்சின் பிட்டர் இருவரும் சொன்னதை வைத்து சில மருந்துகள் கொடுத்து மூவரையும் unfit for work என முத்திரை பதித்து அனுப்பினார் இந்தோனேசிய மருத்துவர். 
வினோத் என்னிடம் சொன்னான். “பிபி செக் பண்ணி, டெதஸ்கோப் வெச்சி பாத்துட்டு அன் பிட் பண்ணிட்டான்” என. மாலையில் கப்பலுக்கு திரும்பி வந்தவர்கள் இரவில் கப்பல் புறப்படும்முன் இறக்கிவிடப்பட்டனர். இன்று மாலையில் அவர்களுக்கு விமானம் மும்பை செல்ல.

 இரு மாதங்களுக்கு முன் பணியில் இணைந்த இரண்டாம் சமையற்காரரும், கடந்த வாரம் வந்த இஞ்சின் பிட்டரும் மருத்துவமனை சென்று மருந்துகள் வாங்கிவரலாம் என எண்ணினர் ஆனால் ஊருக்கு செல்லவேண்டியதாகிவிட்டது. 

  வினோத்திடம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என சொல்லி அனுப்பினேன்.

நாஞ்சில் ஹமீது,
03-august -2026.
sunitashahul@gmail.com