“A Rose,by any other name would Smell as Sweet”
Shakespeare .
எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா மலர் இனிதாய் மணக்கும்.
பெயரில் என்ன இருக்கிறது.
நாகர்கோவில் மணிமேடையில் இருந்த ஒரு பழைய ஹோட்டலின் பெயர் கற்பகம். பிராமனாள் மெஸ். நகரில் முக்கியமான பழைய அசைவ ஹோட்டல் ஆஸாத்.ஹோட்டல் கெளரி ஷங்கர்,ஹோட்டல் சித்ரா,ஆரியபவன் எல்லாம் சைவம் .
மணிக்கூண்டுக்கு அருகில் இருந்த பிரபல ஆயத்த ஆடையகம் டவர் ரெடிமேட்ஸ். டவர் என ஒரு ஆட்டோவும் உண்டு நார்ப்பத்தியைந்து ஆண்டுகளாக அதே பெயரில் ஆட்டோ வைத்திருப்பதாக சொன்னார்.நான் சிறுவனாக இருக்கும்போது திறந்த துணிக்கடை மிலன்.இப்படியே மகேஷ் எலக்ட்ரிகல்ஸ்,சிறுமலர் எலக்ட்ரிகல்ஸ்,நகேர்கோவில் சைக்கிள் மார்ட்.பாண்டியன் ஸ்டோர்ஸ்.மாதா சவுண்ட்ஸ்,ஜனதா சப்பல்ஸ் தீபா என்பது செருப்புக்கடையின் பெயர்.பீமா பேக்ஸ், ராகவன் ஸ்டோர்ஸ்,யூசப் சாகிப் ஸ்டோர்,குண்டு சாஹிப் பலசரக்கு கடை .
அலி ஜிவேல்லர்ஸ்,கெங்கா ஜிவல்லரி. கிருஷ்ணன் நாயர் அன்ஸ் சன்ஸ். நகரில் பெரிய துணிக்கடை நல்லபெருமாள் டெக்ஸ்டைல்ஸ், பிரில்லியண்ட் டெய்லர்ஸ்,மரைக்கார் ஏஜென்சிஸ்,கவின் ஆட்டோ இப்படித்தான் பெருபாலும் கண்ணில் படும்.
மைமூன் டைம்ஸ் நகரில் பெரிய கடிகாரக்கடை, சுனிதாவின் தந்தை வைத்திருந்த கடை ‘ஸ்டார் வாட்சஸ்’.ஜன்னத் பேன்சி, ஷார்ஜா பேன்சி,இங்கே பயோனியர் கொஞ்சம் பெரிய வணிக குழு. முதன் முதலில் பேருந்து இயக்கியது,பெரிய தங்கும் விடுதி,ஆட்டோமொபைல்ஸ்,பள்ளி என.
எனது மாமா பீர்முகம்மது அவரது தந்தையின் கடையை நவீனமாக்கினார் மலுக்கு ஸ்டோர் என்பதை மாற்றி டீலக்ஸ் புட்வேர்ஸ் எனும் புதுப்பெயர். அவர் இன்னொரு கடை திறந்தபோது கேலக்சி பேக்ஸ் என வைத்தார்.
ஒரு ஆட்டோவின் முன் எழுதியிருந்தது ‘அகம் பிரம்மாஸ்மி’ அதை ஓட்டியவர் நீண்ட கூந்தல் போன்ற தலைமுடியும்,கழுத்தில் உத்திராட்சமும் போட்டிருந்தார்.அவரிடம் சொன்னேன். பெயர் உங்களுக்கும்,ஆட்டோவுக்கும் பொருந்தும் என.ஒளிரும் கண்களால் சிரித்தார்.
வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள பள்ளிவாசல் ஸ்காட் பள்ளி தாண்டி இருக்கும் ஐ ஆர் ஜி டிரஸ்ட். அதனருகில் ஜெர்சிம் என ஒரு ஹோட்டல் இருந்தது. கடந்த மாதம் விடுமுறையில் வந்தபோது அதன் அருகிலேயே ஒரு கடை குண்டான ஒருவருடன் படத்துடன் ‘குண்டன்ஸ் கபே’.
விஷ்ணுபுரம் குளத்துக்கு குளிக்க போகும் வழியில் உள்ள ஒரு கடை ‘வந்து பாருங்க’.தம்பியின் வீட்டருகில் இருக்கும் பாஸ்ட் புட் நம்ம கடை எனும் பெயரில். ‘சகல’ ‘மச்சான்’ ‘கடல்’ ‘சென்ட்ரல் ஜெயில்’ ‘சப்ஜெயில்’ என்பதெல்லாம் நவீன துணிக்கடைகளின் பெயர்கள் தான். யோசித்து பார்த்தேன் கடந்த பத்தாண்டுகளுக்குள் வந்த பெயர்கள்தான். இவையெல்லாம் பல விரைவிலேயே காணாமலும் போய்விடுகின்றன. இங்கே நாகர்கோயிலில் மாதத்தில் ஐந்தாறு அசைவ சாப்பாட்டு கடைகள் திறக்கின்றன. காணாமலும் போகின்றன. ‘டாணா கபே’ எப்போது திறந்தார்கள் என தெரியவில்லை பெரும்பாலும் பூட்டியே இருக்கிறது. இன்று அதிகாலை விளக்குகள் எரியவிட்டு திறந்திருந்தார்கள். நான்கைந்து பேர் டீ குடித்துகொண்டிருந்தார்கள்.
ஓரகத்தி,நாத்தனார் என பெண்களுக்கான கடைகளும் வரலாம். நான் யோசித்துக்கொண்டே இருந்தேன் பெயரில் என்ன இருக்கிறது என. நான் இனியும் ஒரு மரசெக்கு எண்ணை ஆலை திறந்தால் அதன் பெயர் ‘மாயப்பொன்’ என வைப்பேன்.
சுத்தமானது,தரமானது என்பது அதன் அர்த்தமாகும்.
நாஞ்சில் ஹமீது,
15 november 24.
கட்டுரையின் முதல் வரியில் உள்ள ஷேக்ஸ்பியரின் கவிதையை தந்து உதவிய சகோதரி அமுதாவுக்கு நன்றி