Sunday, 30 July 2023

கடல் சீற்றத்தில் சிக்கிதவித்த நாட்கள்

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 9.

            நண்பர்களுக்கு கடந்த முறை சன்னி ஜாய் நாட்குறிப்புகள் எழுதும் போது தினமும் அல்லது மறுநாள் சுடச்சுட நாட்குறிப்புகள் வந்துகொண்டே இருந்தது. அப்போது தினசரி குறிப்புகளை எந்த அலங்காரமும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி சென்றேன்.அந்த தொடரில் கப்பலில் நடந்த பெரும் தீ விபத்து,சோமாலிய கொள்ளையர்களை எதிர்கொண்டது போன்ற பதிவுகளை படித்த நண்பர்கள் சிலர் பதறி விட்டனர்.

இம்முறை எட்டாவது பதிவை படித்த தோழி dr.தாமரை செல்வி “ஷாகுல் பத்திரமா இருங்க”என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.மாமி ஒருவர் “மோனே என்ன வேல மக்களே இது வயித்துக்கு வேண்டி என்ன மெல்லாம் செய்ய வேண்டியிருக்கு” என கேட்டார். 

இப்போது வரும் பதிவுகளை படித்து யாரும் அஞ்சவேண்டாம்.பதிவுகள் ஒரு மாதம் தாமதித்தே வருகிறது.

.



               வளைகுடா நாடுகளில் கோடையில் வெப்பம் மிகக்கடுமையாக இருக்கும்.குவைத்,சிரியாவில் அதிக பட்சமாக ஐம்பத்தி இரண்டு பாகையும்,கத்தார்,துபாயில் நாற்பத்தி ஒன்பது பாகைவரையும்,ஈராக்,சவூதி போன்ற நாடுகளில் நாற்பத்தி ஆறு வரை வெப்பம் இருக்கும்.இங்கே சூரியனுக்கு கீழே பணிசெய்பவர்களுக்கு அதிகாலை ஐந்து மணிமுதல் பதினோரு மணி வரையும்,மாலை நான்கு முதல் ஆறு வரையும் பணிநேரம் மாற்றி விடுவது வழக்கம்.

     வெப்பத்தை நினைத்து உடல்எரிய தொடங்கிய வேளையில் கடலம்மா கொந்தளிக்க தொடங்கினாள்.காற்றின் வேகம் அறுபது மைல்களுக்கு மேல் வீசியது.கடலை ஒன்பது மீட்டர் வரை மேலெழுந்து அச்சுறுத்தியது.பதினாறு நாட்டிக்கல் மைலுக்கும் மேல் சென்றுகொண்டிருந்த கப்பல் ஏழு நாட்டிகல் மைலுக்கு கீழே வந்தது.

தங்கும் அறையில்


 அதிக பட்சமாக முப்பது டிகிரிவரை ரோல்லிங்கும் உயரமான அலையில் கப்பலின் முன் பகுதி உயர்ந்தபோது பிட்சிங்கும் அதனால் எழுந்த ஓசையும் யாரையும் தூங்காமல் தடுத்தது.அறையின் மின் விசிறி,நாற்காலி குளியலறையில் பக்கெட்,மாப்,திரைச்சீலை  அனைத்தையும் கயிறுகளால் இறுக்க கட்டி வைத்திருந்தேன்.

   கடல் கொள்ளையர்கள் தாக்க வாய்ப்புள்ள ஆபத்தான இடத்தை நெருங்குமிடத்திலிருந்து தினமும் காண்வாய்கள் போகிறது. பத்து முதல் பதினைந்து கப்பல்கள் வரை ஒரே சீரான வேகத்தில் செல்கையில் முன்னும்,பின்னும் பீரங்கிகளுடன் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக உடன் வரும்.ஆபத்தான பகுதியை கடந்தபின் கடற்படை கப்பல்கள் விலகி செல்லும்.ஜப்பான்,இந்தியா,சீன நாட்டு கடற்படைகள் இந்த இலவச சேவையை இந்த கடல் பயண தடத்தில் வழங்குகிறது.

  ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தபோதும் காப்டன் காண்வாயில் இணைந்து செல்ல உத்தேசித்திருந்தார்.உரிய நேரத்தில் செல்லும் வகையில் கப்பலின் வேகத்தை கொஞ்சம் குறைத்திருந்தார்.கடலம்மா சீறி எழுந்ததில் காப்டனின் எல்லா கணக்குகளும் குழம்பி கப்பலின் வேகம் 6.5 வேகத்தில் குறைந்ததால் நினைத்துது போல காண்வாயை பிடிக்க முடியவில்லை.

  கடல் சீற்றத்தின் மறுநாளே சமையற்காரர் பணிக்கு வரவில்லை.ரத்த அழுத்தம் கூடி,தலைவலியுடன் அறையில் படுத்திருந்தார்.அறையில் போய் பார்த்தேன் கட்டிலில் அமர முடியாததால் சோபாவில் அமர்ந்து இருபுறமும் இரு தலையணைகளை வைத்து இறுக கட்டி அதன் நடுவில் பிள்ளையாரை போல அமர்ந்திருந்தார்.

 இஞ்சின் பிட்டர் ஹரேசும்,வல்சாடின் தண்டேலும்,மெஸ் மேனுடன் இணைந்து வெள்ளை சாதமும்,பருப்புகுழம்பும்,பீன்ஸ் கூட்டும் செய்திருந்தனர்.மாலையில் மூன்றாம் இஞ்சினியருடன் இணைந்து கோழி குழம்பும் சப்பாத்தியும் சுட்டு தந்தனர்.

  டெக் பணியாளர்களுக்கு குடியிருப்பில் சுத்தம் செய்யும் எளிய பணி வழங்கபட்டிருந்தது. சவூதி செல்வது உறுதியானதால் கம்ப்ரசர்களை இயக்கி சரக்கு தொட்டிகளை குளிர்விக்கும் பணியை தொடங்கியிருந்தோம்.சரக்கு தொட்டியின் சில வால்வுகளை,திறந்தும்,மூடவும் வேண்டி வந்தது.கடும் காற்றில் அலைகள் எழும்போது கப்பலின் முன் பகுதி நீருக்குள் மூழ்கி எழும் அளவு செல்லும்போது,அலைகள் நேராக சரக்கு தொட்டியில் பலமாக அடித்து செல்லும். 

 எழுபது வயதான முதன்மை அதிகாரி,என்னையும்,காஸ் இஞ்சினியரையும் ஒன்றாக இணைந்து சென்று கப்பலின் முன் பகுதியிலிருக்கும் சரக்கு தொட்டியின் வால்வை திறந்து,வேறொன்றை மூட சொன்னார்.அச்சமூட்டும் கடும் காற்று பேரோசையுன் வீசிகொண்டிருந்தது,குடியிருப்பை விட்டு வெளியே செல்வது ஆபத்தானது. தவிர்க்கவே இயலாததால் பிரிட்ஜில் அறிவித்துவிட்டு வெளியே சென்றோம்.

  எங்களுடன் முதன்மை அதிகாரியும் வந்தார்.குழாய்களுக்கு இடையில் புகுந்து ஒவ்வொரு கம்பியாக பிடித்து கவனமாக நடந்து கப்பலின் முன்னால் இருந்த ஒன்றாம் எண் சரக்குதொட்டியின் வால்வுகளை தேவையான அளவு அட்ஜஸ்ட் செய்தோம்.பெரிய அலையொன்று எழும்பி கப்பலுக்குள் வந்தபோது குழாய் ஒன்றை இருக்க கட்டிக்கொண்டு பத்திரமாக எதிர்கொண்டோம்.

  முதன்மை அதிகாரி நங்கூரம் கட்டி வைத்திருப்பதை பார்ப்பதற்காக மேலும் நகர்ந்து முன்னே சென்றார்.நான் ஒன்றாம் எண் சரக்கு தொட்டியை தாண்டி முன்னால் செல்லவே இல்லை.அது மிக ஆபத்தானது அலை அடிக்கும்போது மனிதனால் அதை எதிர்கொள்ள இயலாது.வயதான முதன்மை அதிகாரி முன்னால் செல்வதை கண்டு அவரை பாதுகாக்கும் நோக்கில் காஸ் இஞ்சினியரும் முன்னால் சென்றார்.நல்ல வேளையாக பேரலை எதுவும் எழவில்லை .

  மூவருமாக பத்திரமாக திரும்பி குடியிருப்புக்குள் வந்ததை பிரிட்ஜில் அறிவித்தோம்.இரவு கம்ப்ரசர் அறைக்கு ரௌண்ட்ஸ் க்கு செல்ல வேண்டாம் கட்டுபாட்டு அறையில் இருந்தே கவனித்து கொள்ளுங்கள் என்றார் முதன்மை இஞ்சினியர்.இரண்டாம் நாள் இரவும் துயிலின்றியே விடிந்தது.காலை இயந்திர அறையில் இரண்டாம் இஞ்சினியர் என்ன செய்ய போகிறாய் எனக்கேட்டார்.

 கம்ப்ரசர் அறைக்கு போய் வரவேண்டும்.நேற்றே போகவில்லை என்றேன். மூன்றாம் இஞ்சினியர் “இந்த கண்டிசன்ல எதுக்கு போணும் பொறவு பாத்துக்கோ”என்றார்.

  “ட்ரைன் குழாயின் எண்ணெய் கீழே கொட்டும் முன் அதை எடுத்துவிட வேண்டும்” என்றேன்.காலை கூட்டம் முடிந்ததும் இரண்டாம் இஞ்சினியர் உக்ரைனின் மேக்ஸ் “ஷாகுல் நீ ஜோக் பண்ணுறா என நினச்சேன்,வெளிய போகாத,நாளைக்கு பார்த்துகொள்ளலாம் இட்ஸ் நாட் ஸேப் டுடே” என்றார். 

  மோட்டார் மேன்  மும்பையின் அலெக்ஸ் “நேற்றே என்னால் முடியவில்லை ஓய்வு கொடு எனக்கேட்டேன் இரண்டாம் இஞ்சினியருக்கு அது புரியவே இல்லை” என்றான். வாந்தியும்,தலைவலியும் கூட ரெண்டு நாளா உறக்கம் இல்ல என வேறு சிலரும் சொல்லிகொண்டிருந்தனர்.

 நான் அலெக்சிடம்  “அவராக அப்படி ஓய்வு கொடுக்க முடியாது,முடிஞ்சத செய்,இல்லேன்னா எங்கயாவது ஓரமா போய் படு”என்றேன். காடேட் குமார் லேசான ஆட்டத்திலேயே தள்ளாடி வாந்தி எடுப்பான். கப்பல் பேரலைகளில் சிக்கி பேயாட்டம் போட்டு கொண்டிருந்தது.உண்டதும்,குடித்ததும் வாயுமிழ்ந்து கொண்டிருந்தான்.

உணவுக் கூடத்தில் 


    டெக் பணியாளர்கள் யாரும் கவலை கொள்ளும்படி உடல் நலம் பாதிக்கவில்லை.நான்கு நாட்கள் தொடர்ந்து கடும் கடல் சீற்றம் குறைந்து நாற்காலிகளில் அமர முடிந்தபோது.உணவு கூடத்தில் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் பற்றிய வர்ணனைகள்ஓடிக்கொண்டிருந்தது.நான்கு தினங்கள் கப்பலை அலைகள் புரட்டி போட்டுகொண்டிருந்ததால் யாருக்கும் கடல் கொள்ளையர்கள் பற்றிய நினைவே இல்லாமலிருந்தது.கடலம்மா சாந்தமானதும் சிலருக்கு கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நினைவுக்கு வந்தது.

   ஆபத்தான பகுதியை கடக்கும் வரை கடல் சீற்றமும் நீடித்திருக்கலாம் என் காப்டனிடம் சொன்னேன்.சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.கப்பல் செங்கடலில் நுழைந்தபோது கடும் வெப்பமும் தொடங்கியது.கப்பலின் குளிரூட்டி சரியாக வேலை செய்யாமல் அறையின் வெப்பம் இருபத்தி ஏழு டிகிரிக்கு உயர்ந்தது.குளியலறையில் மாலையில் குளிப்பதற்கான நீரை காலையிலேயே நிறைத்து வைக்க தொடங்கினேன்.சூவுதியை துறைமுகப்பை நெருங்கும்போது கப்பல் ஒருநாள் தாமதமாக வந்து சேர்ந்ததால் வேறு கப்பல் ஒன்று டெர்மினல் சென்று சரக்கு நிறைக்க தொடங்கியிருந்தது.எங்களை முப்பது மைல்கல் தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிற்க சொன்னார்கள் யான்பு துறைமுக அதிகாரிகள்.அதிகாலை நங்கூரமிட்டு காத்திருந்தோம்.

நாஞ்சில் ஹமீது.

02 july 2023.

sunitashahul@gmail.com

புத்தரிடம் ...

    


     வியட்னாமின் வாங்க் தாவ்(vung tau) துறைமுகத்தில் சவூதியில் ஏற்றிய சரக்குளை இறக்க சனிக்கிழமை வந்தோம்.

    சனி காலை எட்டுமணிக்கு அறிவிப்பு பலகையில் கரைக்கு செல்பவர்கள் (ashore leave) பெயரை பதிவு செய்ய சொல்லி எழுதப்பட்டிருந்தது.முதல் ஆளாக என் பெயரை எழுதினேன்.

   2019 ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பாவின் நெதர்லாந்து நாட்டின் தனுசன் நகரில் வெளியே சென்றிருந்தேன். அதன் பின் நோய்தொற்று காலம் கப்பல் காரர்களை கப்பலிலிருந்து கீழே இறங்குவதை தடுத்திருந்தது. 2021 ஆகஸ்டில் ஊருக்கு செல்லும்முன் துருக்கியின் அதான நகரிலும்,கடந்த டிசம்பரில் சிங்கப்பூரிலும் ஒருநாள் வீதம் தங்கும் வாய்ப்பு மட்டுமே கிட்டியது.

  இந்த எல்.பி.ஜி கப்பல்களில் நிலத்தில் இறங்கும் வாய்ப்பு மிகக்குறைவு.என்னைபோல காஸ் பிட்டராக பணியில் இணைந்தால் துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போதும் வெளியே செல்வதை நினைத்தே பார்க்க முடியாது.

   சனிக்கிழமை காலை வாங்க் தாவ் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்ற நாங்கள் எட்டுமணிக்கு நங்கூரம் உருவப்பட்டு ஒன்பது மணிக்கு பைலட் ஏறும் போது வாங்க் தாவ் ஊரில் பேருந்துகள் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது.செவ்வண்ணத்தில் மும்பையின் பெஸ்ட் பஸ்ஸை நினைவு படுத்தியது.



   கடல் முடிவில் நூற்றிஎண்பது டிகிரியில் வளைந்த மலை அடி வாரத்தில் ஊர் துவங்குவதை கண்டபோது வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்குமா என மனம் ஏங்கியது.

   காலை எட்டுக்கு தொடங்கிய பணி நீண்டுகொண்டே சென்றது எனக்கு. இரவு எட்டரை மணிக்கு சரக்கு கொடுப்பது தொடங்கி சீராக போக தொடங்கியதும். என்னுடன் பணிபுரியும் இஞ்சினியரை ஓய்வுக்கு போய்விட்டு இரவு இரண்டு மணிக்கு வந்து என்னை விடுவிக்க சொன்னேன்.

  இரண்டாவது கிரேட் பியூட்டேன் திரவம் இரவு ஒன்பதைரை மணிக்கு கொடுக்க தொடங்கினோம்.சரக்கு குழாய்கள் வழியாக ப்ரோப்பேன்,பியூட்டேன் இரண்டும் சீராக செல்வது உறுதியானபின்  கட்டுப்பாட்டு அறைக்குள் வந்தமர்ந்தேன்.

  அதிசயமாக வியட்நாமின் கார்கோ இஞ்சினியர் மிங்க் தெளிவாக ஆங்கிலம் பேசினான். நான்கரை ஆண்டுகள் கெமிக்கல் இஞ்சினியரிங் படித்த இருபத்தி ஏழு வயதான இளைஞன். 

  கட்டுப்பாட்டு அறையில் என்னுடன் அமர்ந்திருந்த டாக்காவின் ரஹீம் உல்லா அவனது தெளிவான ஆங்கிலம் குறித்து கேட்டபோது. கடந்த இருபது ஆண்டுகளாக கல்லூரியில் பயிலும் பட்டதாரிகள் அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள் எனும் தகவலை சொன்னான்.

   ஹனோய் நகரம்,ஹோ சி மின்,வியட்நாம் போர்,இந்தியா,மகாத்மா காந்தி என உரையாடல் நீண்டுகொண்டே சென்றது.இங்கே வெளியே செல்வதற்கான தகவல்களை கேட்டறிந்தேன்.நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் உணவுக்கூடம் சென்றமர்ந்து இரண்டு கோதுமை பிரட்டில்  வெண்ணையும்,தேனும் தடவி கடிக்கும்போது  மிங்க் வந்தார்.தனது மொபைலில் படுத்த நிலையில் இருந்த புத்தரின் சிலையை காட்டிஅருகில் பத்து கிலோமீட்டர் தூரத்தில்,மலை மேல் இருக்கும் புத்த மடாலயம் இது என சொல்லி விட்டு மேலும் சில  படங்களை கட்டினான்.

தங்க நிறத்தில் கன்னத்தில் கைவைத்து தாங்கி படுத்த நிலையில் இருந்த புத்தரின் சிலையை காட்டி “புத்தர் தூங்கவில்லை தியானம் செய்கிறார், உங்களுக்கு தியானம் தெரியுமா” என கேட்டான் மிங்க்.

  எனக்குள் உற்சாகம் தொற்றிகொண்டது புத்தரனை பர்ர்துவிட முடியுமா? உடனே அந்த புத்த மடாலயம் குறித்த விபரங்களை குறித்துக்கொண்டு.வியட்னாமிஸ் மொழியிலும் எழுதி வாங்கிகொண்டேன்.காஸ் இஞ்சினியர் இரண்டு மணிக்கு முன்பாகவே வந்து என்னை விடுவித்தார். பதினேழு மணிநேரம் நீண்ட பணிநாளாக இருந்தது.நீராடி இரண்டரை மணிக்கு தூங்கி ஆறே காலுக்கு விழித்து ஏழு மணிக்கு முன்பாகவே காஸ் இஞ்சினியரை விடுவித்துவிட்டு.மதியம் வெளியே செல்லும் விபரத்தை சொன்னேன்.சனிக்கிழமை மதியமே வெளியே செல்வதற்கான அனுமதி சீட்டு வந்திருந்தது ஆனால் அன்று யாரும் செல்லவில்லை.

   முதன்மை இஞ்சினியர் தலைமையில் ஐவர் குழு ஞாயிறு காலை ஒன்பதரை மணிக்கு வெளியே சென்றது.என் மனம் முழுவதும் அந்த மலையில் ஏறி புத்தரை கண்டுவிடவேண்டும் எனும் எண்ணமே இருந்தது.காஸ் இன்ஜினியர் காலை பதினோரு மணிக்கே வந்து என்னை விடுவித்தார். “லேட் ஆனா பரவாயில்ல மெதுவா வாங்க” என்றார். ‘ஐந்துமணிக்கு வந்துவிடுவேன்” எனச்சொன்னேன்

 சமையல்காரர் என்னுடன் வருவதாக சொன்னார்.உணவுண்டு அவரை அழைத்தபோது டாக்காவின் ரஹீம் உல்லா பணி முடிந்து பன்னிரெண்டரைக்கு எங்களுடன் இணைவதாக கூறினார்..

   அறைக்கு வந்து லுகர் தொழுது காத்திருந்தபோது பெருமழை கொட்ட தொடங்கியது.போசன் குடையை எடுத்துகொள் என்றார்.மழை குறைந்தபின் கப்பலிலிருந்து கீழிறங்கும்போது மணி ஒன்றை தாண்டியிருந்தது. துறைமுக வாயிலில் நாங்கள் அழைத்திருந்த கார் காத்திருந்தது. டைரியை காண்பித்தேன் ‘thi vai’ முதலில் செல்ல வேண்டும் என .

டெர்மினலில், நிலத்தில் பாதம் பதித்த மகிழ்ச்சி 

 சமையற்காரர் ஷாப்பிங் மால்,மற்றும் மசாஜ் செல்ல வேண்டும் என்றார்.ஓட்டுனர் உடனிருந்து அழைத்து செல்கிறேன் ஆளுக்கு இருபது டாலர் வீதம் கேட்டார்.

 பதினைந்துக்கு பேசினேன் மசியவேயில்லை.சமையற்காரர் இருபது டாலர் தருகிறேன் ஆறு மணிநேரம் எங்களுடனிருந்து அழைத்து சென்று திரும்பி வரவேண்டுமென ஒப்புக்கொண்டு காரில் ஏறிகொண்டோம்.சாலையில் கார் நுழைந்ததும் வரிசையாக தொழிற்சாலைகள் இருந்தன. கொரிய நிறுவனங்கள் இங்கே பெருமளவில் முதலீடு செய்துள்ளது.



 பதினைந்து நிமிடங்களில் LINH SON BUU THIEN TU புத்த மடாலயத்தை அடைத்தோம்.தொழிற்சாலைகள் இருந்த இடத்தை தாண்டியபின் ஊர் முழுக்க சிறிதும்,பெரிதுமாக புத்த கோயில்களால் நிரம்பி இருந்தது.





வாயிலில் இறங்கியபின் எவ்வளவு நேரம் என கேட்ட ஓட்டுனரிடம் நாற்பது நிமிடங்கள் என்றேன். 


   பெருங்கூட்டம் இல்லை பெரிய பீடம் ஒன்றில் வெண்ணிற கல்லில் நின்றுகொண்டிருக்கும் புத்தர் சிலை,அதன் கீழே சிறு பீடங்களில் மேலும் இரு சிறு சிலைகள் அதை சுற்றிலும் இன்னும் சிறு பீடமமைத்து அமர்ந்த நிலையிலுள்ள சிறு புத்தர் சிலைகளால் நிறைந்திருந்தது.பெரிய சிலை முன்னால் காலணிகளை கழற்றிவிட்டு வஜ்ராசனத்தில் அமர்ந்து நெற்றியை நிலத்தில் பதித்து ஆண்களும் பெண்களும் வழிபடுகின்றனர்.



      மலையின் படிகள் துவங்குமிடத்தில் வலப்புறமிருந்த கல்பாறைகளில் மேலும் புத்தர் சிலைகள். குளம் போல நீர்நிலை அமைத்து அதன் நடுவில் புத்தர் சிலையும் நீரை சுற்றிலும் தாமரை செடிகள் வைத்திருந்தனர்.ஒரு தாமரை மொட்டு மலர தயாராகி இருந்தது. இடப்புறம் இருந்த முதல் கோயில் பூட்டபட்டிருந்தது. 

       



             படிகளில் ஏறத்தொடங்கியதும் புத்தரின் இருப்பை உணர்ந்தேன்.ஐம்பது படிகளுக்குள்ளாகவே ரஹீம் உல்லாவும்,சமையற்காரரும் “ரொம்ப உசரம் போல இருக்கே”எனசொல்லி நின்றுவிட்டனர். நான் நிற்கவேயில்லை மேலும் ஏற தொடங்கினேன். செங்குத்தான பாறைகளை வெட்டி அதையே படிகளாக்கி சிமெண்ட் குழைத்து பதித்துள்ளனர்.மேலே ஏறுவது சற்று கடினம்தான். வளைந்து,நெளிந்து செங்குத்தாக மேலேறும் படிகளில் கீழே இறங்கி கொண்டிருந்தவர்களில் பெரும்பாலும் இளம் வயதினர். பெண்களே அதிகம் அனைத்து பெண்களும் கணுக்கால்வரை மறைத்து உடையணிந்திருந்தனர்.



 500 படிகள் என எழுதியிருந்த பாறை அருகில் நின்று கீழே பார்த்தேன் என்னுடன் வந்த இருவரையும் காணவில்லை.நான் நிற்காமல் ஏறிக்கொண்டே இருந்தேன். பொன்னிறத்தில் தொப்பையுடன் அதிர்ஷ்ட புத்தர் சிரித்துக்கொண்டே அழைத்தார் பக்கவாட்டில் இருந்த அவரையும் பத்து படிகள் ஏறி பார்த்தேன். இந்த ஊர் செட்டியாரோ என தோன்றியது.படிகளின் இருபுறமும் உயர்ந்த மரங்கள் அடர்ந்து நிற்பதால் ஒரு காட்டினுள் செல்வதை போல இருந்தது.ஆயிரம் படிகளை எட்டியபோது மேலிருந்து கீழே இறங்கிகொண்டிருந்த ஒரு பெண் “ஹலோ” என்றாள். பதில் சொன்னபோது. “முதல் முறையாக வருகிறாயா” எனக்கேட்டாள்.



   “ஆம்,இந்தியாவிலிருந்து வருகிறேன்” என்றேன். வட்ட முகம் பற்கள் தெரிய சிரித்துவிட்டு “நானும் முதல் முறையாக வருகிறேன் என்று சொன்ன அவளிடம்  “இன்னும் எத்தனை படிகள்” எனக்கேட்டேன். “அதிகமில்லை இன்னும்  முன்னூற்றி நாற்பது படிகள் தான்,நீ வந்துவிட்டாய்” என்றாள்.




   மொத்தம் ஆயிரத்தி முன்னூற்றி நாற்பது படிகள் என மேலே ஏறிய பின் தான் தெரிந்தது.வியட்நாம் மொழியில் எழுதிய கல்வெட்டும்,ஆர்ச்சும் வரவேற்கிறது.அருகில் ஒரு பத்தடி உயரமுள்ள பீடம் இருந்தது.வியட்நாமிய குரு ஒருவரின் மூன்றடி உயரத்தில் பதிக்கபட்டிருந்தது.மலர் வைத்து,பத்தி கொளுத்தி வழிபட்டுக்கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர்.மழை பெய்து படிகள் முழுவதும் ஈரமாக இருந்தது.உடல் வியர்த்து சட்டையின் மேற்பகுதி நனைந்திருந்தது எனக்கு.

மேலிருந்து பார்க்கையில் மலை முடிவில் பச்சையாய் காட்சி தரும் மரங்கள் தொடர்ந்து கட்டிடங்கள் என ஊர் அழகாய் காட்சியளிக்கிறது.தொலைவில் கடலும்,துறைமுகமும் தெரிகிறது. என் எஸ் பிரண்டியர் (எனது கப்பல்) கண்ணுக்கு தெரிகிறதா என தேடினேன்.




   மேலும் முப்பது படிகள் ஏறிய போது கோயிலை அடைந்தேன். தரைத்தளமும்,ஒரு மாடியறையும் இருந்தது. ஐம்பது பேருக்குமேல் அமரும் தியான கூடம் மேலே பார்த்தபோது நாற்பத்தி எட்டு மலர்ந்த தாமரை மலர்களை செதுக்கி பதித்திருந்தனர் கூரையின் அடிப்பாகத்தில்.  முன்னால் மின்னும் மஞ்சள் நிறத்தில்  அமர்ந்த நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலையும்,அதன் கீழே அமர்ந்த நிலையில் புத்தரின் வேறு,வேறு முக பாவனையில் ஏழு சிலைகளும்,அதன் பின்னால் நின்றுகொண்டிருக்கும் மூன்று சிலையும் இருந்தது, வெண்கல வேலைபாடுகளுடன் வேறு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் படங்களும் மிகநேர்த்தியாக  செய்து சுவர்களை அலங்கரித்தது.

  அங்கிருந்த உண்டியலில் என்னிடமிருந்த வியட்நாம் டோம் (இங்குள்ள பணம்)ஒன்றை போட்டுவிட்டு ஆலயத்தை சுற்றி வந்தபின்.தரையில் அமர்ந்து தியானித்தேன்.அங்கு ஒலிக்கும் மெல்லிய மணியோசை எண்ணங்களை விலக்கி அமைதியில் உறைய செய்தது.கண்விழித்தபோது அருகில் சமையற்காரர் விழிமூடி அமர்ந்திருந்தார்.

  துறவிகளுக்கான தங்குமிடமும் உணவுகூடமும் இருந்தது.உணவுகூடத்தில் சென்று பேந்த,பேந்த விழித்தபோது அங்கு சேவை செய்யும் பெண் ஒருத்தி நல்ல ஆங்கிலத்தில் வேண்டியதை சாப்பிடுங்கள் என்றார்.தண்ணீர் மட்டும் கேட்டோம்.நாற்காலியில் அமர்ந்து நீரருந்தும் போது ரஹீம் உல்லாவிடம் அந்த பெண்மணி “இது துறவிகளுக்கான மேஜை,வேறு இடத்தில் அமருமாறு பணிவாய்” சொன்னாள்.

   மீண்டும் எங்களிடம் சாப்பிட,நூடுல்ஸ் அரிசி சாதம் தரவா எனக்கேட்டாள்.தரையிலிருந்து படியேறி வரும் அனைவருக்கும் அங்கே சுய சேவை முறையில் உணவுண்ண முடியும் என்பதை கண்டேன். அங்கு சேவை செய்யும் பெண்மணி எங்களை இந்தியர்கள் என அடையாளம் கண்டுகொண்டாள்.இந்தியாவின் புத்த கயா மற்றும் பல்வேறு புத்த மடாலயங்களில் சேவை செய்துள்ளதை சொன்னார். புத்தர் பிறந்த ஊரிலிருந்து வந்தவர்கள் என்பதால் இயல்பாய் கொஞ்சம் அதிக கவனிப்பு எங்களுக்கு எனபது தெரிந்தது. 

   நூறு ஆண்டுகள் பழைமையான இந்த மடாலயம் சீரான கால இடைவெளியில் புதுபிக்கபட்டு,பராமரிக்கபட்டு வந்துள்ளது.இதன் தற்போதைய தோற்றம் நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.

 கடல் மட்டத்திலிருந்து எழுநூறு மீட்டர் உயரத்திலிருக்கும் இதில் ஏறுவதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.மூன்று கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் செங்குத்தாக ஏற வேண்டியிருக்கறது.

  நீரருந்திவிட்டு வெளியே வந்தபோது தியான அறையில் இருந்த சமையற்காரரை காணவில்லை.சிறிது நேரம் தேடினோம்.எங்களை காணாததால் கீழே போயிருப்பார் என ரஹீம் உல்லா சொன்னார்.

  படிகளில் இறங்குவதும் எளிதல்ல கவனமாக இறங்கவேண்டும்.மேலே ஏறும்போதே கவனித்தேன் சிலர் ஒவ்வொரு மூன்று அடிகளுக்கு ஒருமுறை படியில் அமர்ந்து நெற்றியை தரையில் வைத்து வணங்கிவிட்டு மேலேறுகின்றனர்.

 ஒரு பெண் இருகால் மூட்டுகளிலும் கடினமான பஞ்சால் ஆனா பேட்களை கட்டி ஒவ்வொரு படியிலும் அமர்ந்து நெற்றியை தரையில் பதித்து வணங்கிக்கொண்டு மேலேறிக்கொண்டிருந்தவள் ஆயிரம் படிகளை தொட்டிருந்தாள் கணவன் துணையாக பின்னால் சென்றுகொண்டிருந்தான்.அவளை கடக்கையில் என்ன வேண்டுதலோ இறைவா நிறைவேற்றி கொடு என என் மனமும் இயல்பாய் சொல்லிகொண்டது.

   சிறுமி ஒருத்தி என்னிடம் எதோ கேட்டாள். பணம் கேட்கிறாள் என புரிந்துகொண்ட நான் 10000 டோம் நோட்டு ஒன்றை கொடுத்தேன். பாப்பாவின் முகம் மாறிப்போனது.அவள் பணம் கேட்டகவில்லை என்றபோது எனக்கும் சங்கடமாகி போனது. சிறுமியை சைகையை சரியாக புரிந்துகொண்டு தண்ணீர் பாட்டிலை கொடுத்தேன். இல்லை என்றாள்.புத்தரை காண மேலேறிசெல்லும் ஒருவர் ஒருவழியாக எனக்கு புரிய வைத்தார் அவளது கையில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டுமென.

    கீழே வந்தபோது சமையற்காரரை காணவில்லை. நாங்கள் வந்த காரோட்டியும் காரும் அங்கில்லை.ரஹீம் உல்லா படிகளில் இறங்கும்போதே சொன்னார் ஒரே நாளில் இப்படி உடலை வருத்தக்கூடாது காய்ச்சல் வரும் என.இங்கிருந்து விரைவாக சென்றுவிட வேண்டுமென எண்ணினார். நான் அடிக்கடிமலைகளில் ஏறுபவன்.நடை பயிற்சியும்,ஆசனங்களும் உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்வதால் களைப்பே இல்லை எனக்கு.

சிறுமி மீண்டும் என்னை துரத்தி வந்து மொபைலில் என்னுடன் படம் எடுக்க வேண்டுமென்றாள் அமர்ந்து சில படங்களுக்கு போஸ் கொடுத்தேன்.வீட்டில் போய் புத்தரின் அருகில் வைத்து கொள்வளாக இருக்கும். வாயிலின் முன் நாற்காலியில் புத்தரை நோக்கி அமர்ந்திருந்தோம்.பைக்கில் வந்த ஒருவர். “உங்கள் நண்பன் மசாஜ் செய்ய போய்விட்டான் என்னுடன் வாருங்கள் நான் உங்களை அழைத்து செல்கிறேன்” என்றார்.பைக்கில் ஏறி சிறிது தூரம் சென்றதும் எங்கள் கார் வந்தது அதில் ஏறிக்கொண்டோம்.

 மசாஜ் நிலையத்தில் கப்பலிலிருந்து காலையில் வந்த ஐவர் குழு அமர்ந்திருந்தது.சமையர்காரர் மேலே மசாஜ் அறையில் இருப்பதாக சொன்னார். வேறு கப்பலிலிருந்து வந்த சிலர் கண்கள் சிவக்க குடிதிருந்ததை கண்டேன். நிறைய கப்பல்களில் இப்போது ஜீரோ ஆல்ககால் பாலிசி பின்பற்றுகிறார்கள். தரையில் இறக்கியதும் மதுக்கடையை தேடும் கப்பல் காரர்களே அதிகம். சிலருக்கு பெண்.

  ரஹீம் உல்லாவிற்கு சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.பைக் காரர் எங்களை அருகிலிருத்த மாலில் இறக்கிவிட்டார்.அவருக்கு அங்கிருந்த பொருட்கள் ஏதும்  பிடிக்கவில்லை.நான் வெளியே வந்து சாலையில் சிறிது நேரம் நடந்தேன்.தோலுரித்த வாத்துகள் கண்ணாடி பெட்டிகளுக்குள் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.நான் நின்று வேடிக்கை பார்ப்பதை பார்த்து கடைக்கார பெண்மணி சிரித்தார். படம் எடுத்துக்கொண்டேன்.

 சமையற்காரரை காரோட்டி காரில் ழைத்து வந்தார்.அவருக்கு பிரஷர் குக்கர் மற்றும் வேறு சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.காரோட்டியின் உதவியுடன் பாஜாரில் அலைந்து பொருட்கள் வாங்கியபின்.கப்பலுக்கு வந்து காஸ் இஞ்சியரை இரவு ஏழு மணிக்கு விடுவித்தேன்.காரில் திரும்பி வருகையில் மசாஜ் செய்ததால் ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருப்பதாக சொன்னார்.

   மலைமேல் புத்தரின் அருகமர்ந்திருந்த போது அகத்தில்  நான் அடைந்த அமைதியை விளக்கினாலும் புரிந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை.ரஹீம் உல்லா இனி வெளியே செல்ல வாய்ப்பு கிடைத்தால் உன்னுடன் மட்டும் வர மாட்டேன் என்றார். இருவருக்கும் மலையேறியது மிக கடுமையாக இருந்தது.

நாஞ்சில் ஹமீது,

25 july 2023.

sunitashahul@gmail.com






Sunday, 16 July 2023

வீட்டுக்கு அருகில் பயணம்.

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 8


        கப்பல் ஜப்பானிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூரை அடையும் முன்பே கேஸ் பிளாண்ட்டில் பெரிய பணியை திட்டமிட்டு செய்ய தொடங்கினோம். அதாவது வாயுவை,திரவமாக்கும் கூலர்களை(cargo condenser) சுத்தம் செய்வது. 

 நான்கு கம்ப்ரசர் கொண்ட கேஸ் பிளாண்ட் இங்கே இருக்கிறது.ஒவ்வொரு கம்ப்ரசருக்கும் தனித்தனி கூலர்கள். மூன்றை சுத்தம் செய்து முடித்திருந்தோம்.ஜப்பானிய பயிற்சி இன்ஜினியர்கள் எங்களுடன் இருந்தது பேருதவியாக இருந்தது.

      சிங்கப்பூரைவிட்டபின்  நான்காவது கூலரையும் சுத்தம் செய்தோம்.எதற்கு இந்த கூலர்கள்?. கப்பலின் சரக்கு தொட்டிகளில் நிறைத்து வைத்திருக்கும் ப்ரோபேன் மைனஸ் நாற்பது டிகிரியில் திரவநிலையில் இருக்கும்.வெப்பநிலை மாறும்போது போது திரவம் ஆவியாகும். ஆவியாகும்போது சரக்கு தொட்டியின் அழுத்தம் அதிகரிக்கும். இங்கே சரக்கு தொட்டியின் அழுத்தம் 22Kpa (கிலோ பாஸ்கல்)வரை செல்லும் வகையில் அமைத்துள்ளோம்.

  22kpa அழுத்தத்தை தொடும்முன்  கம்ப்ரசர்களை இயக்கி சரக்குதொட்டியின் மேற்பாகத்திலுள்ள வாயுவை எடுத்து அழுத்தி,சுருக்கும் போது எழுபது டிகிரி வரை செல்லும் அவ்வாறு அழுத்திய உயர் வெப்ப நிலையிலுள்ள  வாயு இந்த கூலருக்குள் சென்று வெளிவரும்போது குளிர்சியடைந்து திரவமாக மாறும்.அந்த திரவம் சார்லஸ் விதிப்படி எக்ஸ்பான்சன் வால்வ் வழியாக வெளியேறும் போது மேலும் குளிர்ச்சியடைந்து மைனஸ் 22 பாகை அல்லது அதற்கும் குறைவான வெப்பத்தில் மீண்டும் சரக்கு தொட்டிக்குள் திரவமாக செல்லும் அதனால் சரக்கு தொட்டியின் வெப்பமும்,அழுத்தமும் குறையும்.

Diagram


  தண்ணீரின் வெப்பம் பூஜ்யத்துக்கு செல்லும் போது பனிக்கட்டியாகும். அதே தண்ணீர் நூறு டிகிரியில் ஆவியாக மாறும்.அந்த ஆவியை குளிர வைத்தால் நீர்.கடல் நீர்,ஆவியாகி மேலே சென்று மேகமாக மாறி,மேகம் குளிரும்போது மழையாக பொழிவது போல.

Cargo condenser





  கூலர்களின் இரு பக்கமும் உள்ள கவர்களை திறந்து பதினெட்டு மில்லி மீட்டர் விட்டமும்,மூன்று மீட்டர் நீளமும் உள்ள  நூற்றி அறுபது குழாய்களை  ஒவ்வொன்றாக நீண்ட கம்பியின் முன் பகுதியில் இணைக்கப்பட்ட பிரஸ் மூலம் உள் செலுத்தி வெளியே எடுத்தோம்.இந்த குழாய்களுக்குள் கடல் நீர் ஓடி வெளி வருவதால் அழுக்கும்,சில கடல் சங்குகளும் அடைத்து கொண்டிருந்தது.

  ஒரு கூலரை சுத்தம் செய்ய முழுமையாக ஒரு நாள் ஆனது. கப்பல் சிங்கப்பூரை விட்ட மறுநாள் சரக்கை கையாளும் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் சவூதிஅரேபியாவின் யான்பு துறைமுகத்துக்கு சரக்கு நிறைக்க வேண்டும் என இருந்தது.

  அந்த செய்தியால் கப்பலில் ஒருவித பதற்றம் தொற்றிகொண்டது.யான்பு செல்வதற்கு  ஆபத்தான சோமாலிய கடல்கொள்ளையர்கள் நடமாடும் பகுதியை தாண்ட வேண்டுமென்பதே காரணம். வழக்கமாக இலங்கையின் காலேவில் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியுடன் கப்பலில் ஏறிக்கொள்வார்கள்.பாதுகாப்பு வீரர்கள் வருவது பற்றி எந்த செய்தியும் இல்லாதது பணியாளர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.கப்பலில் மொத்தமுள்ள இருபத்தி ஒன்பது அறைகளில் இரண்டு மட்டுமே காலியாக உள்ளது. 

பயண பாதையின் வெப்பமும் அதிகரிக்க தொடங்கியது வளைகுடாவில் இப்போது கோடையின் உச்சம் அதை நினைத்தும் உடல் எரியதொடங்கியது. இயந்திர அறையின் வெப்பம்  நாற்பதை தாண்டியது.

  டெக்கில் முப்பத்தி ஐந்து டிகிரியை தொட்டது.ப்ரிட்ஜில் சென்று மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லாவை பார்த்து கேட்டேன்.  வீரர்கள் எப்போது வருகிறார்கள் என. “ஷாகுல் பாய், HRA (HIGH RISK AREA)க்கு சற்று முன் இரு இலங்கை வீரர்கள் வருகிறார்கள் என மின்னஞ்சல் வந்துள்ளதை சொன்னார்.கப்பலை சுற்றிலும் முள் வேலி அமைக்கும் பணியை டெக் பணியாளர்கள் காலையில் தொடங்கி மாலைக்குள் முடித்தனர்.

கப்பல் இலங்கை தாண்டி என் வீட்டிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தது. வீட்டிற்கு அழைத்திருந்தேன். “நான் இப்ப கன்னியாமரி கிட்டயாக்கும் பெயிட்டிருக்கேன்”என்றேன் .

“வாப்பா இறங்கி வீட்டுக்கு வந்துட்டு போங்கோ” என்றான் இளைய மகன் சல்மான். சுனிதா “மொதல்லே சொல்லியிருந்தா வந்து ஒரு டா டா காட்டிருப்பமே” என சொல்லிச்சிரித்தாள்.

வீரர்கள் கப்பலுக்குள் 


ஆயுதப்பெட்டி

கப்பல் லட்ச்தீவை நெருங்கியபோது பாதுகாப்பு வீரர்கள் ஆயுதங்களுடன் கப்பலில் ஏறிக்கொண்டனர்.கடலில் அலைகள் எழுந்துகொண்டே இருந்தது.வீரர்கள் வந்த சிறு கப்பல் மிக சிரமப்பட்டு அருகணைந்தது. அலைகளில் சிக்கி தவித்த கப்பலிலிருந்து சாமர்த்தியமாக கயிறு ஏணியில் தாவி,காங்க்வே படிக்கட்டுகள் வழியாக மேலேறி கப்பலில் மேல்தளத்திற்கு வந்தனர்.

  துப்பாகிகள்,குண்டுகள்,குண்டு துளைக்காக கவச உடை மற்றும் தொப்பி அடங்கிய பையை முதன்மை அதிகாரி தலைமையில் போசன்,ஓஎஸ்,காடேட்,சென் குப்தா ஆகியோர் கயிறு கட்டி மேலே எடுத்தனர்.இரவில் கப்பலில் ஆட்டம் கூட தொடங்கியது.

    காலையில் எழுந்தபோது லேசான தலைவலி இருந்தது. போசன் யாதவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். “ஞாயிறு இரவுணவில் ஏதோ கோளாறு போல” என.

 “கப்பல் ரோல்லிங் ஆகுது இல்லா அதுனால இருக்கும்” என்றார்.எனக்கு எப்போதும் ரோல்லிங்கினால் தொந்தரவு ஏற்பட்டதே இல்லை.ஆனாலும் இப்போதைய தலைவலிக்கு அது காரணமாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். இரவில் சரியாக தூங்கவில்லை என பலரும் காலையில் சொன்னார்கள்.

  மாலையில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்தது.கொள்ளைக்காரர்கள் கப்பலுக்குள் வந்துவிட்டால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது எனும் பயிற்சியை நடத்தினார்கள்.முன்பே அனைத்து கதவுகளும் உட்புறமாக அடைக்கப்பட்டது. குண்டு துளைக்காத கதவுகளும் உட்புறமிருந்து பூட்டபட்டிருந்தது.

 அவசரகால மணி எழுப்பப்பட்டது உடனே அனைவரும் பாய்ந்தோடி அப்பர் டெக் எனப்படும் குடியிருப்பின் தரைப்பகுதியில் நின்றுகொண்டோம். “ஹெட் கவுண்ட்” என்றார் முதன்மை இஞ்சினியர் “ஒன்,டூ,த்ரீ .........ட்வென்டி போர்” என்றதும். காப்டனுக்கு ரேடியோவில் சொன்னார் “ட்வென்டி போர் பெர்சன்ஸ் மஸ்டர்ட்” என. 

“பைவ் ஆன் பிரிட்ஜ் ஆல் கவுண்டட்” என்றதும் இரண்டாவது அவசரகால மணி ஒலித்தது அனைவரும் ஓடி சிட்டாடெல் அறைக்குள்,புகுந்து கொண்டோம்.பாதுகாப்பு வீரர்கள் மற்றும் காப்டன் உட்பட பிரிட்ஜ் டீம் இறுதியாக சிட்டாடெல் அறைக்குள் வந்ததும் இங்கிருந்த இரு தடிமனான குண்டு துளைக்காத கதவுகளும் உட்புறமிருந்து பூட்டப்பட்டது. சிட்டாடெல் அறையில் தேவையான தண்ணீர் பாட்டில்கள்,பிஸ்கட்டுகள்,போர்வைகள் வைக்கப்பட்டிருந்தது.

  யுக்தி இதுதான் கொள்ளையர்கள் கப்பலுக்குள் ஏறிவிட்டால் காப்டன் ரகசிய மணியை அழுத்திவிட்டு இறுதியாக சிட்டாடெல்லுக்குள் வரவேண்டும். அந்த மணி அருகிலுள்ள கடற்படை மையத்திற்கு தகவல் அனுப்பும் அனைவரும் பாதுகாப்பாக ஒளிந்திருந்தால். ஹெலிகாப்டரில் வரும் கடற்படை கடத்தல்காரர்களிடம் துப்பாக்கியால் சண்டையிட்டு கப்பலை மீட்க ஒரு வாய்ப்பு. 

 இவை எல்லாவற்றையும் மீறி கடத்தல்கார கொள்ளையர்களிடம் நாங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என கப்பல் காரன் டைரியில் (2020 ஆண்டில் )விரிவாக எழுதியுள்ளேன்.

  ஒத்திகை முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் பிரிட்ஜின் வெளியில் நின்று தங்களிடமிருந்து நான்கு துப்பாக்கிகளையும் இயக்கி சோதித்தனர்.குண்டுகள் கடலில் விழுந்து மூழ்கின.

  இரவில் கப்பலின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது.கடுமையான கடல் சீற்றம் இருக்கும் என வானிலை அறிக்கை முன்பே எங்களுக்கு வந்திருந்தது.நாற்காலிகள் மற்றும் கட்டி வைக்காத அனைத்து பொருட்களும் இறுக்கமாக கட்டிவைக்கப்பட்டது. அலைகளில் ரோல்லிங்குடன்,பிச்சிங்கும் சேர்ந்து கட்டிலில் படுக்கவே இயலவில்லை. தூங்காத இரவு நீண்டுகொண்டே சென்று மிக தாமதமாக விடிந்தது.

நாஞ்சில் ஹமீது.

26-june-2023.

sunitashahul@gmail.com

Monday, 10 July 2023

என்னை அழைக்காதீர்கள்

 

     உறவுகளும்,நட்புகளும்  https://nanjilhameed.blogspot.com/2019/03/blog-post_10.htmlஎன ஒரு பதிவு எழுதியபோது அது முடிவுறவில்லை என எனக்கு தோன்றியது. அதன் இரண்டாம் பாகத்தை எழுதுவேன் என அப்போதே கேட்ட நண்பர்கள் பலரிடம் சொன்னேன்.இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

   நண்பர்கள் பலரும் என்னை பார்க்கும்போது வீட்டிற்கு வாங்க என அழைப்பதுண்டு.சிலர் நீங்க வந்தா என் வீட்டிலேயே தங்கிகொள்ளலாம் என அன்பாய் அழைப்பதும் உண்டு. சும்மா பார்மாலிட்டிக்காக என்னை அழைக்காதீர்கள்  அதை உண்மையான அன்பு என நம்பி உங்கள் இல்லங்களில் உண்டு,உறங்கி கதைபேச நான் வந்துவிடுவேன்.

  எந்த தயக்கமும் இல்லாத வெளிப்படையானவன் நான்.சகோதரிகள் சிலர் அழைப்பார்கள் வீட்டுக்கு வாங்க என.உங்கள் கணவன் அல்லது வீட்டில் உள்ளவர்கள் எப்படி என உங்களுக்குத்தான்  நன்றாக தெரியும். நான் அதிகாலையோ,இரவிலோ பையுடன் வீட்டிற்கு வந்து நின்றால் அய்யோ சும்மா ஒரு பேச்சுக்கு வீட்டுக்கு வான்னு கூப்பிட்டேன் அதுக்காக இப்படி வந்துவிடுவதா என உங்களுக்கு சங்கடமான நிலை வேண்டாம்.

    ஆண்,பெண் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் வெளிப்படையாக பேசும் இயல்பால் என்னை அழைப்பவர்களின் இல்லத்திற்கு நான் போய் வந்தபின் கணவன் மனைவி பிரச்னை. போனில் பேசுவதும் அப்படித்தான் எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசிக்கொண்டே இருப்பேன்.ஏண்டா இவன்ட்ட நம்பர கொடுத்தோம் என சங்கடம் வேண்டாம் உங்களுக்கு.

  விஷயம் என்னவென்றால் எனக்கு யார் உண்மையாக அழைக்கிறார்கள்,யார் சும்மா பேச்சுக்காக  அழைக்கிறார்கள் என கண்டுபிடிக்க தெரியவில்லை.அதுதான் பிரச்னை.

  சிலர் அழைத்து அவர்கள் இருக்கும் ஊருக்கு செல்லும் முன் போனில் அழைத்து வருகிறேன் என சொல்லும்போது நான் இப்ப ஊர்ல இல்ல அடுத்தமுறை வாங்க என சொல்வதை நம்பி மறுமுறை அவ்வூருக்கு செல்லும் வாய்ப்புவரும்போது அழைக்கும்போதும் அதே பதில்.

 இம்முறை கப்பல் ஏறும் முன் என்னை அழைக்கும் ஒருவரின் இல்லம் செல்ல நினைத்தேன்.அவரது மனைவி கடந்த ஏழு ஆண்டுகளாக என்னுடன் நல்ல நட்பு. நான் சுனிதா குழந்தைகளுடன் ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர்களின் இல்லம் சென்று விருந்துண்டு வந்தோம்.

  கோவைக்கு அருகில் இருக்கும் ஊரில் வசிக்கும் அவர் வருடம் தோறும் நான் கோவை விஷ்ணுபுரம் விழாவுக்கு செல்வதை அறிந்து “ஷாகுல் ஜி வீட்டுக்கு வந்துட்டு போங்க” என அழைப்பார். விஷ்ணுபுரம் விழாவில் ஒரு ஹாய் சொல்லவே நேரம் இருக்கும் எங்கும் செல்ல இயலாது.

அந்த தோழியின் கணவர் என்னை தொடர்ந்து அழைப்பதால்.கடந்த ஏப்ரில் மாதம் கோவை செல்லும்முன்  அவருக்கு அழைத்தேன். “வரும் வாரம் வியாழன் அல்லது ஞாயிறு உங்கள் இல்லத்திற்கு வரமுடியும்,உங்களுக்கு எது வசதி” என கேட்டேன்.

“ ஷாகுல் ஜி நீங்க என் வீட்டுக்கு வருவது சந்தோஷம் உங்கள் விருப்பம்போல் எப்போது வேண்டுமென்றாலும் வாங்க”என அன்போடு அழைத்தார்.

 அதிகாலை ரயில் நிலையத்தில் காத்திருந்து என்னை அவரது காரில் அழைத்து சென்றார்.குளித்து அவருடன் இருந்து காலை உணவு உண்டதும்.படுத்து ரெஸ்ட் எடுங்க,வெளிய எங்கயாவது போணுமின்னா கார எடுத்துட்டு போங்க என கார் சாவியை தந்துவிட்டு,தன்னிடமிருந்த வேறொரு பெரிய காரில் அலுவலகம் சென்றுவிட்டார்.மாலை திரும்பி வந்து உண்டு கதைபேசி இரவை கழித்து மறுநாள் அதிகாலை நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து சென்று அனுப்பி வைத்தார்.இப்படி பல ஊர்களில் பாசமாய் உபசரிக்கும் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள்.

 கடந்த ஜனவரியில் அமெரிக்க விசாவுக்காக மும்பை செல்ல வேண்டியிருந்தது. 97ஆம் ஆண்டு வேலை தேடி சென்றது முதல் தொடர்ந்து மும்பைக்கு சென்றுகொண்டே இருக்கிறேன்.மும்பையின் சந்து பொந்துகள் அனைத்தையும் நன்கறிவேன்.தங்குமிடமும் எனக்கு உண்டு இப்போதும் மும்பைக்கு வேலை தேடி செல்பவர்களை நான் தங்கியிருந்து வேலை தேடிய அறைக்கு அனுப்பி வைக்கிறேன்.

 புதிதாய் பழகிய நண்பர் ஒருவர் மும்பைக்கு வந்தா என் வீட்டுல தான் தங்கணும் என்றார். சரி என்றேன்.பயண தேதியை சொன்னபோது நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேன் வந்துவிடுங்கள்  என அன்பாய் அழைத்தார்.

 புறப்படும் இரு தினங்களுக்கு முன் அழைத்து குறிப்பிட்ட அந்த தேதியில் நான் வெளியூர் செல்கிறேன்.ஒரு நாள் மட்டும் தங்கிவிட்டு,மீதி நாட்களில் தங்க வேறு இடம் பார்த்துகொள்ளுங்கள் என்றார்.அலுவலக வேலையாக நீங்கள் தானே வெளியூர் செல்கீறீர்கள் வீடு அங்க தானே இருக்கும் சாவியை தந்து விட்டு போங்க என்றேன்.அது முடியாது நான் இல்லாத போது அன்னிய ஆளை வீட்டில் தங்க வைக்க முடியாது என்றார்.அவரது அலுவலகம் அந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கிறது.

  சகோதரா என அன்பாய் அழைத்தவருக்கு இப்போது அந்நியன் ஆகி விட்டேன்.

   இதில் யார் உண்மையாகவே அழைப்பது,யார் போலியாக அழைக்கிறார் என எனக்கு கண்டுபிடிக்க இயலவில்லை.எல்லோரையும் எளிதில் நம்பி விடுகிறேன்.

  அதனால் அன்னியர் உங்கள் வீட்டிற்கு,உங்கள் இடங்களுக்கு வருவதில் பிரச்னை இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் அப்படியிருக்கையில் என்னை போன்றவர்களை வீட்டுக்கு வாங்க என அழைக்காதீர்கள்.இதனால் உண்மையாகவே அழைப்பவர்களையும் அது உண்மையா பொய்யா தெரியாமல் நான் முழிக்க வேண்டியுள்ளது.

  ஆசிரியர் ஜெயமோகனின் வாசகன் ஆன பின் உலகம் முழுவதும் தங்க இடமும்,உண்ண உணவும் தந்து உபசரிக்க உண்மையான அன்பால் அழைக்கும் நண்பர்கள் இப்போது நிறைய இருக்கிறார்கள்.

 அதனால் சும்மா பேச்சுக்காக,பார்க்கும்போது போலியாய் அழைப்பவர்கள் என்னை அழைக்காதீர்கள்.என்னால் போலிகளை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

 சுனிதா சொல்வாள் “யாரு கூப்பிட்டாலும் அந்த வீட்டு அடுக்கள வர பெயிருவாரு” என .

நாஞ்சில் ஹமீது .

10 july 2023.


Sunday, 9 July 2023

சிங்கப்பூரில்

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 7 

  


 


  ஜப்பானிலிருந்து   புறப்பட்டு பத்து நாட்களுக்கு பின் சிங்கப்பூரில் நங்கூரம் பாய்ச்சி நின்றோம்.கிழக்கிலிருந்து மேற்கிக்கிற்கும் ( japan to gulf) கிழக்கிலிருந்து,மேற்கிற்கு செல்ல வேண்டுமானால் சிங்கப்பூரை லேசாக தொட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்.

   உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு புள்ளிமட்டுமே.இந்த புள்ளியை   தாண்டி செல்லும் அனைத்து கப்பல்களுமே இங்கே பன்னிரெண்டு மணிநேரம் முதல் இருபத்தி நான்கு மணிநேரம் கப்பலை நிறுத்தி தேவையான எரி எண்ணெய்,உணவு,உதிரிப்பாகங்கள்,பணியாளர் மாறுதல் இன்னபிற சர்வீசுகளை நிறைவேற்றிவிட்டு கோடிகளில் டாலரை சிங்கபூருக்கு கொடுத்துவிட்டு செல்கின்றன.

  


சிங்கப்பூரின் மிக முக்கிய வருமானமே கப்பல் துறை சார்ந்து நேரடியாகவும்,மறைமுகமாகவும் வருவதுதான்.சுற்றுலாதுறை அல்ல.வளைகுடாவிற்கு செல்லும் நாங்களும் கடந்த ஜூன் மாத பத்தொன்பதாம் தேதி இங்கே கப்பலை நிறுத்தினோம்.

  காலை எட்டு மணிக்கு சிங்கப்பூரில் நங்கூரம் பாய்ச்சும் இடத்திற்கு கொண்டு சென்றதால் பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.சிங்கபூருக்கு கப்பல் வருகிறதென்றாலே கடும் பணிநாளாக இருக்கும்.இரவென்றால் மேலும் கடினம்.அதனால் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் பகல் பொழுதை நாங்கள் விரும்புகிறோம்.

    சிங்கப்பூரில் நங்கூரம் பாய்ச்சும் போது சுற்றிலும் ஆயிரம் கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. எழுநூற்று அறுபது மெட்ரிக்டன் எரி எண்ணையை தரவேண்டிய T.DIGINITY எனும் சிறு எண்ணெய் கப்பல் ஒன்பதுமணிக்கு  ஸ்டார்போர்ட் சைடில் அருகணைந்தது போசன் யாதவ் மற்றும் டெக் பணியாளர்கள் கப்பலின் கயிறை வாங்கி கட்டியபின் குழாய்கள் பொருத்தபட்டு பத்து மணிக்குமுன்பாக எண்ணெய் எங்களின் கப்பலின் தொட்டிகளில் விழுந்துகொண்டிருந்தது.

 நூறு மெட்ரிக் டன் டீசல் தரவேண்டிய கப்பல் மரைன் ரோஸும் பத்து மணிக்கு முன்பாகவே போர்ட் சைடில் அருகணைந்தாள். பயிற்சிக்காக பணியில் இணைந்த ஜப்பானின் இஞ்சினியர்கள் சோஹே புகடாணி(sohei fukatani) ஹிரோடேக் ஷிண்டோ (hirotake shindo) என்ஜின் பிட்டர் ஹரிசிந்திர தண்டேலுடன் இணைந்து ஸ்டார்போர்டில் இருக்க.

 மும்பையின் மோட்டார்மேன் பீட்டருடன் இணைந்து ஆந்திராவின் குண்டல ராவ் கிரேனை இயக்க நான் டீசல் குழாயை மரைன் ரோசிலிருந்து பெற்று எங்கள் குழாயுடன் பொருத்தினேன்.அப்போதே உயவு எண்ணெய் (lub oil)தரும் கப்பல் போர்ட் சைடில் வந்து அருகணைய முடியாமல் பன்னிரண்டு மணிக்குமேல் வருகிறேன் என சொல்லிவிட்டு திரும்பி சென்றாள்.

   காப்டன் முதன்மை இஞ்சினியரிடம் டீசலை வேகமாக நிறைத்து பன்னிரெண்டு மணிக்குள் மரைன் ரோசை அவிழ்த்து விட சொன்னார்.டீசல் நிரப்ப தொடங்கியதும் பீட்டர் டீ குடித்து வருகிறேன் என சொல்லி சென்றான்.அப்போது உணவு மற்றும்,உதிரி பாகங்களுடன் சிறு படகு கப்பலின் பின்புறம் அருகணைந்தது.போசன் தலைமையில் ஒரு குழு கிரேன் மூலம் தூக்கி டெக்கில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.அடுமனை பணியாளர்கள்,இலங்கையின் மோட்டர்மேன் மயூரா,காடட் இணைந்து உணவு பொருட்களை குளிரூட்டியில் நிறைத்தனர்.

    சிங்கப்பூரின் விமான படை விமானங்கள் வானில் தங்கள் பயிற்சியை தொடங்கி செங்குத்தாக மேலெழும்பி,சுழன்று,சரிந்து,பல்டி அடித்துக்கொண்டிருந்தது கண்ணுக்கு அழகிய விருந்தென்றாலும் அவை எழுப்பிய  பெரும் ஓசை காதுகளை அடைத்து எரிச்சலூட்டியது.ஆனாலும் சிறு போர் விமானங்கள் வானில் நடத்திய சாகாசத்தை ரசித்தேன்.

  கடும் வெயில் நாளாக இருந்தது.டீசல் முடிந்து மரைன்  ரோசை அவிழ்த்துவிட்டபின். முதன்மை இஞ்சினியர் “கொஞ்சம் பிரேக் எடுத்துகிடுங்க,சாப்பிட்டுவிட்டு வாங்க” என்றார்.

வெண்டைக்காய்,உருளைக்கிழங்கு சேர்த்த செய்த கூட்டுடன்,பருப்பு குழம்பு சாதம் சேர்த்து சாப்பிட்டேன்.புத்தம் புதிதாய் வந்திருந்த வெள்ளரிக்காய்,லெட்டுஸ்,காரட்,முள்ளங்கியை வெட்டி துண்டுகளாக்கி  சாலடும் செய்திருந்தார் மெஸ் மேன் கலீல்.

  ஒரு மணிக்கு லூப் ஆயில் தரும்  சிறு கப்பல் வந்தது.கப்பலின் பின்புறமுள்ள இயந்திர அறைக்குள் இருக்கும் தொட்டிக்குள் செல்லும் குழாய்களில் லூப் ஆயில் குழாயை பொருத்தினோம்.பின்புறமுள்ள போர்ட் கிரேன் வேலை செய்யாததால் நான்கு அங்குல ரப்பர் குழாயை முப்பதடி கீழேயிருந்து கயிறு மூலம் கட்டி,இரண்டாம் இன்ஜினியர் உக்ரைனின் மாக்ஸிம்,போசன்,பீட்டர்,ஓ எஸ்,காடேட்,பயிற்சி இஞ்சினியர் பிலிப்பைன்சின் க்ரிஸ்,இஞ்சின் பிட்டர் வரிசையாக நின்று இழுத்து மேலே கொண்டு வந்தோம்.

  இருபதாயிரம் லிட்டர் எண்ணையை இரண்டு மணி நேரத்தில் தந்துவிட்டு விடைபெற்று சென்றது.பொருட்கள் அனைத்தும் டெக்கிலிருந்து கப்பலுக்குள் பத்திரமாக வைத்தபின் கதவுகள் அனைத்தும் உட்புறமிருந்து தாளிடபட்டது.இங்கிருந்து புறப்பட்ட சில மணிநேரத்தில் கொள்ளையர்கள் வந்து பொருட்களை திருடி செல்லும்(மலாக்கா) சம்வங்கள் இங்கே நிறைய நடந்துள்ளது.

இரவுக்கு முன்பாகவே கப்பல் புறப்பட்டு மலேசிய கரையை ஒட்டி பயணத்தை தொடங்கியது.கப்பலின் பின்புற விளக்குகள் எரியவிடபட்டு கண்காணிப்பு கேமிரா மூலம் பிரிட்ஜிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் 

    கப்பலின் மனமகிழ் மன்றத்தில் காசு அதிகமாக சேர்ந்திருந்ததால் அனைவருக்கும் ஒரு ஸ்மார்ட் வாட்சும்,ஒரு லிட்டர் அளவுள்ள தெர்மல் பாட்டிலும் சிங்கப்பூரில் வாங்கி தந்தார்கள்.

    வளைகுடாவில் எங்கு செல்வது என உறுதியாகமலே கப்பல் மாலை ஐந்து மணிக்கு சிங்கப்பூரை விட்டு புறப்பட்டது.

நாஞ்சில் ஹமீது,

19 june 2023.

   

Sunday, 2 July 2023

பிரியாணி இல்லாத பெருநாள்

 


        தாயுடன் ரமலானில் எடுத்த படம்

அதிகாலை 5.15 க்கு அழைப்பான் ஒலிக்கும்  முன்பே விழித்திருந்தேன்.நேற்றிரவுவும் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னே சென்றுவிட்டதால். கப்பலின் கடிகராம் நான்கே கால் என  காட்டியது.அறையின் கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலை விலகியிருந்ததால் அறைக்குள் மென் வெளிச்சம் பரவியிருந்தது.

  எழுந்து அமர்ந்து ஜன்னல் வழியே பார்த்தேன் வெண்நுரையுடன் பொங்கியழுந்த கடலலைகள். இரவில் எப்படி தூங்கினேன் என யோசிக்கும்போதே ஸுபுஹ் தொழுகைக்கு தாமதமாகிவிட்டதோ என அவசரமாக எழுந்து கழிப்பறை சென்றுவிட்டு உளு(தொழுகைக்காக உடலை சுத்தபடுத்துதல்) செய்துவிட்டு தொழுகைய நிறைவேற்றிய பின் மீண்டும் கடலை பார்த்தேன்.

   ஞாயிறு இரவு தொடங்கிய கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை .திங்கள் காலையில் லேசான தலைவலியுடன் தொடங்கியது.மூன்று தினங்களாக பேரலைகளில் இருபது முதல் முப்பது டிகிரி ரோல்லிங்கில் சிக்கி தவிக்கிறோம் . 

   உணவுக்கூடம் சென்று மைக்ரோஓவனில் பாலை சூடாக்கி கருப்பட்டியுடன்,நெஸ்காபியை நன்றாக கலந்து சூடான பாலை ஊற்றி(நடனமாடும் கப்பலில் கீழே சிந்தாமல் பாலை கப்பில் ஊற்றி) கலக்கி காபி கப்பை கையில் எடுத்தபோது மூக்கின் வழியாக மூளைக்குள் புகுந்தது காபியின் மணம்.  

   பிரிட்ஜில் சென்றேன் மதியத்திற்கு மேல் ரோல்லிங் குறையும் என்றார்கள் கைப்பிடியை பிடித்துகொண்டு கால்களை அகலமாக விரித்துவைத்துகொண்டு நின்ற கமலும் ஓம் காரும். அறைக்கு வந்து போனை பார்த்தபோது தியாக திருநாள் வாழ்த்துக்களால் நிரம்பியிருந்தது.

 இப்ராஹீம் நபிக்கு எழுபது வயதாகியும் குழந்தையில்லை.அவர் குழந்தை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அதன் பின் தனது துணைவியார் ஹாஜிரா மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயில் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

  தாலாட்டி சீராட்டி குழந்தை வளர்ந்து சிறுவனான பின் இப்ராகிம் நபிக்கு ஒரு கனவு வரும்,இறைவனுக்காக இஸ்மாயிலை பலியிடவேண்டும் என. தாங்காத துயரத்துடன் இப்ராகிம் நபி மகனிடம் சொல்வார்.மகன் இஸ்மாயில் இறவைனின் கட்டளையை நிறைவேற்றுமாறு தந்தையிடம் சொல்லி தயாராகிவிடுவார்.

 மகனை தந்தையே படுக்க வைத்து கழுத்தில் கத்தியை வைத்து பலியிட தயாராகும்போது வானவர் ஜிப்ரயீல் வந்து தடுத்து இறைவன் உம்மை சோதித்து பார்த்தான்.உமது தியாகத்தை கண்டு இறைவன் மகிழ்ந்தான் எனவே ஒருஆட்டை அறுத்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுமாறு இறைவனின் குரலாய் ஒலித்தார்.(குர்பானி)ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற விலங்குகளை குர்பானி கொடுக்கலாம்.

  எதன் மீதும் கடும் பற்று வைக்காதீர்கள் என்பதை தான் தியாக திருநாள் மறைமுகமாக சொல்கிறது.

  துல்ஹஜ் மாதம் பத்தாம் தேதி பக்ரீத் பண்டிகையாகும்.இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் செய்வது இப்போதுதான்.துல்ஹஜ் மாத ஒன்பதாவது நாள் இரவில் அரபா மைதானத்தில் ஹாஜிகள் தங்கிவிட்டு பத்தாம் நாள் மெக்கா சென்று தவாபும் செய்து தொழுகையை நிறைவேற்றிய பின் குர்பானியும் கொடுப்பர்.

இதுதான் தியாக திருநாளின் வரலாறு.

   சுனிதாவை அழைத்தேன் மகன்கள் பெருநாள் தொழுகைக்கு பள்ளிவாசல் சென்றிருப்பதாக சொன்னாள். சவூதி,ஐக்கிய அமீரகம் இன்னும் சில அரபுநாடுகள் நேற்றே பெருநாள் கொண்டாடிவிட்டனர்.அதை பின்பற்றும் கேரளாவும்,குமரியின் சில ஜமாத்துகளுக்கும் நேற்று பக்ரீத் ஆக இருந்தது.

  சுனிதா ஜும்மா தொழுகைக்கு செல்லும் பள்ளிவாசலிலும்  நேற்று பெருநாளாக இருந்தது. அங்கு சென்று நேற்றே பெருநாள் தொழுகையை  நிறைவேற்றியிருந்தாள் சுனிதா.

   காலையில் “ஈத் முபாரக்” என  வாழ்த்து சொல்லும்போது “பெருநா தொழுகை உண்டா”எனக்கேட்டாள்.

கடந்த முறை நான் இருந்த சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் இந்தோனேசியா,மலேசியாவை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இருந்தனர். காப்டனே இமாமாக நின்று பெருநாள் குத்பாவும்,தொழுகையையும் நிறைவேற்றினார்.பதினேழு வருட கப்பல் வாழ்வில் முதல் முறையாக பெருநாள் குத்பா,தொழுகை நடந்தது கடந்த ஆண்டு மட்டுமே.

 சுனிதாவிடம் சொன்னேன் “போன ட்ரிப் கப்பல்ல நிறைய பேரு முஸ்லீமில்லா,இப்ப வாய்ப்பே கிடையாது,நல்ல சாப்பாடே கிடைக்காது,நேத்தே சீப் குக் தல சுத்தி,வேலக்கி வராம படுத்துட்டான்”. என்றேன்.

  “ட்ரெஸ் என்னமும் கொண்டு போனியளா”

“நீதான் எனக்கு இப்ப சட்டை ஒண்ணும் வாங்கி தாரதில்லியே” என்றேன். “அந்த பருவாடியே இனி கிடையாது” என்றாள்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த பதினைந்து நாட்களுக்குள்  விஷ்ணுபுரம் விழா வரும்.சுனிதா எனக்காக வாங்கி வைத்திருக்கும் தனக்கு பிடித்த புதிய உடைகளை நான் விஷ்ணுபுர விழாவில் உடுத்துவது அவளுக்கு கோபம்.அதனால் இப்போது எனக்காக உடைகள் அவள் வாங்குவதில்லை நானும்.

 “புது ட்ரெஸ் எடுத்து வெச்சா அத எனட்ட போட்டு காட்டாம,கோயம்புத்தூர்ல போய் போட்டு லாத்த்கிட்டு வருவாரு”என 2021 விழா முடிந்து சென்றபோது சொன்னாள். அதன் பின்பு தான் எனக்காக உடை எடுப்பதை நிறுத்திவிட்டாள்.

  காலை குளித்து இருந்ததில் ஒரு நல்ல சட்டையும், துவைத்து,தேய்த்து வைத்திருத்த கைநெசவு நூற்பு வேட்டி ஒன்றும் உடுத்து அத்தர் பூசி இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதபின் தொப்பியுடன் உணவு கூடம் சென்றேன். சமையற்காரர் இன்று வந்திருந்தார். பக்ரீத் வாழ்த்துக்கள் சொன்னபின் இரண்டு முட்டையும், சீரியல்சும் சாப்பிட்டேன்.காப்டன் வந்து கட்டியணைத்து வாழ்த்து சொன்னார்.கலீலும்,யாதவும் சக பணியாளர்களும் வாழ்த்து சொன்னார்கள்.

  காலையில் சரக்கு தொட்டிகளின் அழுத்தம் கூடியிருந்தது.முதன்மை அதிகாரி கடும் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாது டெக்கில் சென்று வாழ்வுகளை அட்ஜஸ்ட் செய்து வந்தார்,காலை கூட்டதிற்குபின் நானும்,காஸ் இஞ்சினியரும் காஸ் பிளாண்டிற்கு சென்றோம்.மீண்டும் வால்வுகளை அட்ஜஸ்ட் செய்தோம்.

 பதினோரு மணிக்கு மீண்டும் முதன்மை அதிகாரியுடன் சென்று வால்வுகளை மூடவும் திறக்கவும் செய்தோம். மதியம் ஜீரக சாதமும்,பருப்பும்,கறுப்பு கொண்டை கடலையும்,பட்டாணியும் என்னவென்றே தெரியாத ஒரு காயும் சேர்த்து ஒரு கூட்டு செய்திருந்தார்.

  மதியத்திற்கு மேல் பணியே இல்லை எனக்கு டெக்கில் வேலையிருந்தது கடல் சீற்றம் காரணமாக வெளியே செல்ல அனுமதியில்லை.நான்கரை மணிக்கு அறைக்கு வந்தேன். வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் பதிலளித்தேன். நீராடி ஆறு மணிக்கு இரவுணவுக்கு சென்றபோது மட்டன் கறியும்,சப்பாத்தியும்,கீரும் செய்திருந்தார்.

இரவில் கடல் சந்தமாகியிருந்தது .எட்டரை மணிக்கு மேல் காஸ் பிளாண்டிற்கு தனியே சென்று வந்தேன்.

நண்பர் சமையல்காரர் டேவிசை நினைத்து கொண்டேன் இன்று.பிரியாணி இல்லாமல் ஒரு பெருநாள் கடந்து சென்றது.

29 june 2023.

sunitashahul@gmail.com


ஜப்பானுக்கு வந்தேன் தொடர்ச்சி

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 6

   

 

   ஹிட்டாச்சியில் எட்டாம் தேதி மதியம் சரக்கு கொடுப்பது நிறைவடைந்தது.ஆய்வாளர் ஏழாம்தேதி மதியம் வந்துவிட்டு இரவு புறப்பட்டு சென்றார். எட்டாம் தேதி மாலை ஐந்துமணிக்கு கப்பல் ஹிட்டாச்சியிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை ஐந்துமணிக்கு நெகுஷி(NEGESHI) சென்றடைந்தோம். 



 எட்டரை மணிக்கு பைலட் வரும்போது பேய் காற்றுடன் கடும்மழை பெய்துகொண்டிருந்தது.மழை சட்டைகளை அணிந்துகொண்டு பார்வர்ட் மற்றும் ஆப்டில் பணியாளர்கள் சென்றனர். ஹிட்டாச்சியில் புதிய காப்டனும்,காஸ் இஞ்சினியரும் வந்திருந்தனர்.

  கப்பல் கரையை நெருங்கும்போது காற்றும் மழையும் ஓய்ந்திருந்தது. கப்பலின் நடுப்பகுதியில் குழாய் பொருத்தப்படும் இடத்தில் அடையாள கொடியை கட்டிவைத்திருந்தோம்.சரக்கு குழாய் பொருந்தும் இடம் டெர்மினலின் குழாய்க்கு நேராக வந்ததை சச்சின் உறுதி செய்ததும்.முன்பும் பின்பும் எட்டு கயிறுகள் வீதம் கட்டப்பட்டு கப்பல் நிறுத்தபட்டபின் பைலட்இறங்கி சென்றார்.

   ஜப்பானிய கார்கோ மாஸ்டர் கப்பலின் ESD ( EMERGENCGY SHUTDOWN )சிஸ்டத்தை  சோதித்து,வால்வுகள் மூடும் நேரம் 22 to 26 வினாடிகளுக்குள் இருப்பதை உறுதி செய்தபின் டெர்மினலின் குழாய் கப்பலின் குழாயுடன் ஜப்பானிய பணியாளர்களால் பொருத்தப்பட்டது.

   எளிதில் தீ பிடித்துகொள்ளும் திரவ வாயு என்பதால் உச்சகட்ட  பாதுகாப்பு முறைமைகள் பின்பற்றபடுகிறது.அதையும் மீறி தீ பிடித்தால் ESD இயக்கப்ட்டு திரவாயு கப்பலிலிருந்து டெர்மினலுக்கு செல்லும் சரக்கு குழாய்களில் உள்ள வால்வுகள் மூடப்பட்டு.டெர்மினலின் குழாய் கப்பலின் குழாயிலிருந்து தானியங்கி முறையில் விடுவிக்கப்படும். கப்பலின் முன்,பின் பகுதியில் (fire wire) கடலிலிருந்து ஒரு மீட்டர் மேலே இறக்கப்பட்டு தயார் நிலையிலுள்ள இரும்பு வயர் மூலம் கப்பலை கடலுக்குள் இழுத்து செல்லும் அதிக விசையுடன் கூடிய படகு ஒன்றும் கப்பலுக்கருகில் தயாராக நின்றுகொண்டிருக்கும்.


ஜப்பான் நெகுஷி டெர்மினல்


என் எஸ் யுனைடெட் நிறுவனத்திலிருந்து நேற்று கப்பலுக்கு வந்த இருவருடன் மேலும் ஒருவர் இன்றும் வந்தார்.புதிதாக மூன்று ஜப்பானிய பணியாளர்களும் பயிற்சிக்காக பணியில் இணைந்தனர். 

  இங்கு மீதமிருந்த இருபத்தி ஆறாயிரம் டன் ப்ரோப்பேன் குழாய்கள் வழியாக சென்று கொண்டிருந்தது.புதிதாக வந்த காஸ் இஞ்சினியர் கிறிஸ்டோபர் ஸ்ரீரங்கத்தை சார்ந்தவர் அவரும் காலையில் பணிக்கு வந்திருந்தார். “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிருக்கியளா தம்பி” எனக்கேட்டேன். “ஆம்” என்றார்.

 26ஆண்டுகளுக்கு முன்பு பெல் நிறுவனத்தில் பயிற்சியில் இருந்ததை சொல்லி அதனாலேயே  திருச்சிகாரங்க  எனக்கு நெருக்கமானவங்க ஆகி விடுகிறார்கள் என்றேன்.

   இங்கிருந்து அடுத்து செல்லும் துறைமுகம் இன்னும் உறுதியாகவில்லை.நாங்கள் மீண்டும் பனாமா வழியாக அமெரிக்கா செல்வதையே விரும்பினோம். ஒரு மாதம் நீண்ட பயணம்,பயண பாதையில் மெல்லிய குளிரே இருக்கும்,இம்முறை அமெரிக்கா சென்றால் ஆய்வுகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லாததால் கப்பல் காரர்களின் மனம் அதை விரும்ப காரணமாக இருந்தது.

 சவுதி அரேபியாவின் ரஸ்தநூரா மற்றும் யான்பு துறைமுகங்களுக்கு பயண நாட்கள் மற்றும் செலவாகும் எண்ணெய் எவ்வளவு என கேட்டு சரக்கை கையாளும் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியது.

யான்பு செல்வதாக இருந்தால் சோமாலிய கொள்ளையர்கள் நடமாடும் அதிக ஆபத்துள்ள பாதையில் பயணிக்க வேண்டியிருப்பதோடு,வளைகுடாவில் கோடையின் உச்சம் இப்போது ஆளை கொல்லும் வெயில் அங்கே.2020 டிசம்பரில் யான்புவுக்கு செல்லும்போது எங்கள் கப்பலை தாக்கி கடல் கொள்ளையர்கள் ஏற முயற்சித்ததும்,2016 ஜூலையில் கத்தாரில்   அடித்த 49 டிகிரி வெப்பத்தில் இயந்திர 65 டிகிரிக்கு உயர்ந்து மயங்கிவிழுந்த சாங்கும் என் நினைவில் எழுந்ததால்.நானும் கப்பல் மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டுமென்றே விரும்பினேன்.

 பத்தாம் தேதி மாலை சரக்கு தொட்டிகள் முழுவதும் காலியான பின் ஆவணங்கள் பரிமாறப்பட்டபின் ஜப்பானியர்கள் கப்பலுக்குள் வந்து குழாய்களை கழற்றி பாதுகாப்பாக டெர்மினலுக்குள் கொண்டு சென்றனர்.

 ஊருக்கு செல்லும் காப்டன்,காஸ் இஞ்சினியர்,முதன்மை இஞ்சினியர் கப்பல் முகவருடன் விடைபெற்றனர்.புதிதாய் வந்த முதன்மை இஞ்சினியரை இரவுணவின்போது சந்தித்தபோது “வணக்கம்”என்றேன் .

“நீங்களுமா”? 

 “ஆமா கன்னியாமரி ஸார் எனக்கு, உங்க ஊருக்கு நிறைய நேரம் வந்திருக்கேன்,அரபிந்தோ ஆசிரமம்,ஆரோவில் மற்றும் பாண்டிசேரி மாரிடைம் அகடமில கோர்ஸ் க்கு” என்றேன்.

 “பர்ஸ்ட் டைம் காஸ் பிட்டரா” 

“ஆமா”

 “கம்பனிக்கு புதுசா” எனக்கேட்டார்.

“2006 ல் கம்பெனில சேந்தேன் 2016 முதல் காஸ் கப்பலில் இருக்கேன்” என்றேன்.

“ஓ ரொம்ப வருசமா இருக்கீங்க,உங்க பேரே பாத்ததே இல்ல”என சிரித்து கைகுலுக்கினார் பாண்டியின் மஞ்சுநாதன்.

  இரவு எட்டு மணிக்கு பைலட் வந்தார்.போர்ட்சைடின் முன்பும் பின்பும் வந்த இரு விசைமிகுந்த படகுகள் (tug boats)தந்த கயிறுகளை கப்பலில் இணைத்தபின் கரையிலிருந்த கயிறுகள் விடுவிக்கப்பட்டபின் டக் போட்டுகள் கப்பலை இழுத்து திருப்பி கடலை நோக்கி உந்தி தள்ளியபின் தன்னை விடுவித்துகொண்டு சென்றது.

 மூன்று மைல்கல் விலகி பாதுகாப்பாக நங்கூரம் பாய்ச்சியபின் பைலட் ஏணி வழியாக இறங்கி படகில் ஏறிசென்றார்.

   அடுத்து செல்லும் துறைமுகம் உறுதியாகததால் இரவில் கப்பலை இங்கு நிறுத்த சொல்லியிருந்தார்கள்.காலை எட்டு மணிக்கு கப்பலுக்கு எண்ணெய் நிரப்புங்கள் பின்னர் சொல்கிறோம் எனும் தகவல் வந்தது.

  அமெரிக்கா போக வேண்டும் எனும் எண்ணத்திலேயே தூங்கி விழித்தபோது எண்ணெய் நிரப்பிக்கொண்டு சிங்கப்பூரை நோக்கி செல்லுங்கள் எனும் உத்தரவு கிடைத்தது. அறுநூற்றி நாற்பது மெட்ரிக் டன் எரி எண்ணையும் அத்தியாவசிய உணவு பொருட்களும்,கொஞ்சம் உதிரி பாகங்களும் ஏற்றி விட்டு ஜப்பானின் நெகுஷியிலிருந்து  ஞாயிறு பின் மதியம் புறப்பட்டோம்.

  இரு துறைமுகங்கள் மற்றும் ஞாயிறும் அனைவருக்கும் கடும் பணியாக இருந்ததால் திங்கள்கிழமையை ஞாயிறாக கருதி ஓய்வு எடுத்துகொள்ள காப்டன் சொன்னார்.

   போசன் யாதவ் சொன்னார் “ஷாகுல் ஜி சிங்கப்பூர் போகுதுன்னா கல்ப் போறது பக்கா,இடையில் சென் குப்தா “பேன் சூத் கர்மி போகுத் மிலேகா நஹி ஜானா சாஹியே” என்றார். (கெட்டவார்த்தைய சொல்லிப்பின் ரொம்ப சூடு இப்ப,அங்க போகாம இருக்கணும்)

சிங்கப்பூருக்கான பயண பாதையில் தென்சீன கடலை தொட்டபின் முதல் நாள் கடுமையான கடல் சீற்றம் இருந்ததால் கப்பல் ரோல்லிங்கில் ஆடிக்கொண்டே சென்றது.அன்றிரவே கடலம்மா தணிந்தாலும் அவ்வப்போது பேய் மழையும்,இருள் சூழ்ந்து,மேக கூட்டங்கள் கப்பலை சுற்றிக்கொண்டதால் நாங்கள் வந்து கொண்டிருக்கறோம் வழிவிடு,வழிவிடு என ஒலியை காற்று ஒலிப்பானால் ஒலிஎழுப்பிக்கொண்டே பயணித்தோம்.

  பெருமழை சில நாட்கள் தொடர்ந்தது.

நாஞ்சில் ஹமீது.

14 june 2023

sunitashahul@gmail.com