கடிதம் 1
|
ஆஸ்டின் சௌந்தர் |
/* சாமான்யன் சொல்லும் சரித்திரம் */
எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு கட்டுரையில் அல்லது அவரது கேள்வி பதில் பகுதியில் படித்ததாக ஞாபகம். இணையத்தில் படிப்பது அதிகமாகிவிட, புத்தகம் அழிந்துவிடுமா என்ற கேள்விக்கு, அவரது பதில், “மின்சாரம் இல்லாத சமயத்திலும், புத்தகம் இருந்தால்தான் எந்த நேரத்தில் எங்கிருந்தாலும், தேவையான பக்கத்தை புரட்டி தேவையானதை படிக்கலாம்”, என்று சொல்லியிருப்பார். நான் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்பொழுதும், மின்புத்தகத்தை துணைக்கு எடுத்துக்கொள்ள இந்த வாசகம் நினைவில் வந்து போகும். ஒரு வாரத்திற்கு முன், கொலராடோவில் உள்ள டென்வருக்கு செல்கையில், விமானப் பயணத்தில் வாசிப்பதற்காக, சமயம் கிடைக்கும்பொழுது முழுமனதுடன் மீண்டும் படிக்கவேண்டும் என்று சில நண்பர்களின் வலைத்தளங்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். அவற்றில் ஒன்று, எழுத்தாளர் ஜெயமோகனின் சொல்புதிது குழுமத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர் , ஷாகுல் ஹமீது , அவரது வலைத்தளத்தில் எழுதிவந்த "ஈராக் போர்முனை அனுபவங்கள்" என்ற தொடர். செப்டம்பர் 2003-ல் நடந்த ஈராக் போரின்போது , அமெரிக்க ராணுவத்திற்கு உணவு போன்ற அடிப்படைத் தேவைகளை கவனித்து வந்த நிறுவனத்தில், ஒரு சாமான்யனாக வேலை செய்யும்பொழுது தான் பட்டறிந்த சுய அனுபவத்தை செப்டம்பர் 2016 முதல் டிசம்பர் 2016 வரை 29 பதிவுகளாக எழுதியுள்ளார். “சதாமின் அரண்மனையில” என்று ஒரு பதிவை முதலில் அவர் வெளியிட, படித்த நண்பர்கள் கூட்டம் , அதை தொடராக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்க 29 பதிவுகளாக உருவெடுத்தது.
சென்ற டிசம்பரில் சம்பிரதாயமான அறிமுகத்தின் ஊடே, நண்பர் ஷாகுல் அவரது பிளாக் ஸ்பாட்டை குறுஞ்செய்தி அனுப்ப, அவர் எழுதிய சமீபத்திய பயணக் கட்டுரைகளை அவ்வப்பொழுது படித்தேன். சமுதாயத்தின் மீது நியாயமான கோபம் உள்ளவர்கள் செய்யும் நையாண்டியையும் , பயணங்களில் அவர் சாப்பிடும் தோசையை ரசித்து ருசித்து விபரப்பிப்பதையும் வாசிக்க வாசிக்க இவரது பக்கங்கள் புக்மார்க்கில் இருக்கவேண்டியது என்று கவனத்தில் வைத்துக்கொண்டேன். கட்டுரைகளை பாராட்டி சிறு சிறு குறுஞ்செய்திகள் அவருக்கு அனுப்புவேன். அப்படி நாங்கள் இருவரும் அணுக்கமாகி, பாம்பின் கால் பாம்பறிபவர்களாக இனம் காணும் நாட்களில், “சதாமின் அரண்மனையில்” கட்டுரையை அனுப்பியிருந்தார். 'ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவத்துடன் பணியில் இருந்தேன்" என்று கட்டுரையை ஆரம்பித்து சதாமின் அரண்மனை, 29 அரண்மனைகள் கொண்ட பெரிய வளாகம், சதாம் பிறந்த ஊரான திக்ரித்த்தில் பேரிச்சம் மரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் காய்த்து தொங்கி கொண்டிருக்கும் என்பதுபோன்ற வர்ணனைகளுடனும், குண்டு வெடிப்போ , தூசி கலந்த மண் பரப்போ இல்லாமல் மகிழ்ச்சியான நாட்களாக போய்க்கொண்டிருந்தது என்று முதல் பத்தியில் சொல்லிவிட்டு , இரண்டாம் பத்தியில் , “காலையில் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தால் , தங்கும் கூடாரம் தீ பற்றி எரிகிறது”, என வாசகனை சுவாரசியப்படுத்தும் திருப்பங்களும் நிறைந்து இருக்க, நீண்ட கட்டுரையை அலுப்புத் தட்டாமல் வாசிக்க முடிந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இனம் கண்டு, அவரது வலைத்தளத்தில், முன்பக்கம், பின்பக்கம் என்று சென்று மற்ற பதிவுகளையும் படித்தேன். “ஷாகுல், இதை புத்தகமாகப் போடலாம்”, என்று குறுஞ்செய்தி ஒன்றும் அனுப்பினேன். இருபத்தொன்பது பதிவுகள் என்பதல்லாமல், அழகுடனும், ஆழத்துடனும் அவர் விளக்கியிருக்கும் நேரடி அனுபவங்களை அதே அளவில் உள்வாங்கிக்கொள்ள (என்னைப்போன்ற ஆமைவேக வாசிப்பவனுக்கு) கொஞ்சம் அவகாசம் தேவை. அதுவே போன வாரத்தின் பயணத்தின்போது வாசிக்கும் திட்டமானது.
மும்பையில் கூடிவாழ்ந்து வேலை தேடுபவர்களில் ஒருவராக இருந்து, நண்பரின் சொல்வழி செய்தியில் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்திற்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பெறுகிறார். கண்ணுக்கு எட்டிய தூரம் மணல் தெரியும் அப்தலி பாலைவனத்தில், சமையல் செய்யத் தெரியாத ஷாகுல், பாத்திரங்கள் கழுவ ஆரம்பித்து , செய்யும் தொழில் நேர்த்தியால், துணை சமையல்காரனாக பதிவு உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறார். பாலைவனத்தில் கொப்புளங்கள் வந்து சட்டை அணியாமல் அவதிப்படுகிறார். கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட் விளையாண்டு இனிமையும் காண்கிறார்.
அவரது மட்டும் அல்லாமல், போர்முனையில் இருக்கும் மற்றவர்களின் அனுபவங்களை, வாழ்க்கையை புரிதலுடன் ஏற்றுக்கொண்ட ஒரு நல்ல மனிதனாக அனைத்துக் கட்டுரைகளிலும் தன்னை வெளிப்படுத்துகிறார். வாரத்தில் ஒரு நாள் கணவனும் மனைவியும் சந்தித்துக்கொள்வார்கள். அதுவும் கூட்டத்தோடு கூட்டமாக என்று சொல்லிவிட்டு எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காக என்று ஆதங்கப்படுகிறார். 3 பாட்டில் தண்ணீரில் உள்ளாடை மட்டும் துவைக்க வேண்டிய அவலத்தை சொல்கிறார். “தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துகொண்டிருந்தார்”, போன்ற காட்சிகளின் மூலம் போரின் பாதிப்பை வாசகனின் மண்டைக்குள் செலுத்தி கலங்க அடிக்கிறார்.
நகைச்சுவைக்கும், கிண்டலுக்கும் குறைவு இல்லை. உதாரணத்திற்கு 'சுக்ரியாவை' தேட விடுவது. ஸ்டோர்ஸில் இருந்த ஒருவன் நெடு நாட்களாக குளிக்கவே இல்லை குளிரில். மும்பை சென்றபின் குளிப்பதாக சொல்வான் . ஆங்கிலத்தில் இருந்து அரபிக்கு மொழிபெயர்த்ததில் சிக்கலாகி, இரண்டு ஆடுகளின் இறைச்சியை கொண்டு வரவேண்டியவன் , கயிறு கட்டி இழுத்து இரண்டு ஆடுகளை கொண்டு வருகிறான்.
ஷாகுலுக்கு சமைக்கத் தெரியாமல் இருக்கலாம் (அதாவது போர்முனையில் இருந்த சமயம்). சாப்பாடைப் பற்றி நன்றாகவே விளக்கி வியாக்யானம் செய்கிறார். அமெரிக்க உணவு வகையாகட்டும், வட இந்திய உணவு வகையாகட்டும் எதுவாக இருப்பினும், தமிழ் நாட்டு அப்பளத்தை பற்றிச் சொல்வதை போலவே அவைகளைப் பற்றியும் சரளமாக சொல்லிச் செல்கிறார்.
சதாமை அமெரிக்கா பிடித்தது, உலகுக்கு அறிவித்தது என்று எல்லாம் நாம் பத்திரிகையில் படித்திருக்கிறோம். இந்த சாமான்யன் , அதே நாட்களில், அவர் என்ன பார்த்தார் , என்ன கேட்டார் என்று கட்டுரைகளில் நேரடி உண்மை இருக்கிறது. போரெல்லாம் முடிந்தது. திருமணம் நிச்சியக்கப்பட்டு,, முகூர்த்தத்திற்கு முன், மாப்பிள்ளையாக அவர் திருமணத்திற்கு அவர் சரியாக செல்ல முடிந்ததா. அவரோடு கட்டுரை படிப்பவனையும் காக்க வைக்கிறார்.
தேதி குறித்து , நாட்குறிப்பில் எழுதி வைத்ததை எடுத்து அடுக்கு அடுக்காக நிகழ்வுகளை சொல்லும் நிகழ்வுகளின் கோர்வைகள் அல்ல இந்தக் கட்டுரைகள். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து , பார்த்ததை, அனுபவித்ததை, உணர்ந்தததை, ஒரு சமுதாய நோக்கம் கொண்டவர் உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளதால் அனைத்துக் கட்டுரைகளும்(பதிவுகளும்) படிப்பவரின் அகத்தை தொடும். போரின் முனையில் தானே நின்றதுபோன்ற அனுபவத்தை தரும். அமெரிக்காவில் நிறைய தலைமை நிர்வாக அதிகாரிகள் வாழ்க்கையை, தேர்ந்த எழுத்தாளர்கள் புதினம் போல் திருத்தி எழுத அது நியூ யார்க் பாத்திரிகையின் பெஸ்ட் செல்லரில் இடம் பெற்றுவிடும். அதுவும் அந்த தலைமை நிர்வாக அதிகாரியின் பெயரில். அதுபோல் ஷாகுலின் , 'ஈராக் போர்முனை அனுபவங்களை' , தேர்ந்த தொகுப்பாளர் ஒருவர் எடுத்து, புத்தகத்திற்கு என்று உள்ள சில நேர்த்திகளை செய்து வெளியிட்டால், பெஸ்ட் செல்லர் ஆகுமோ இல்லையோ, நல்லதொரு ஆவணத்தை சேமித்து வைத்தது போல இருக்கும். அல்லது, இணையத்தை தாண்டியிருக்கும் வாசகர்களை சென்றடையும் பிறிதொரு வழியாக இருக்கும்.
- வ.சௌந்தரராஜன் (காற்றின்நிழல்©)
05/24/2018