Tuesday, 26 November 2019

முகங்கள்

                                                                       பஞ்சர் பீர் முகமது
                                       
இரண்டாயிரத்தி பத்தாம் ஆண்டு சுசூகி மோட்டார் பைக் ஒன்று வாங்கினேன் .அது 1997 ஆம் ஆண்டு தாயரிக்கபட்டது .அப்போது அதற்கு ஒன்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன் .அதில் பாட்டரி கிடையாது .கப்பலுக்கு போகும் போது  மூடி வைத்துவிட்டு செல்வேன் . நான் கப்பலில் இருக்கும் ஆறு முதல் எட்டு மாத காலம் அப்படியே நின்றிருக்கும் கப்பலிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வருவதற்கு சில தினங்கள் முன்பு நண்பர் மணியிடம்(மெக்கானிக்) சொன்னால் வீட்டிற்கு வந்து பைக்கை கொண்டுபோய் தண்ணீர் அடித்து கழுவி ,புதிதாய் கொண்டுவந்து வீட்டில் நிறுத்தியிருப்பார்,.நான் விடுமுறையில் இருக்கும் மூன்று மாதமும் அதையே உபயோகிப்பேன் .
    
   என்னிடம் எனது மூத்த மகன் ஸாலிம் “வாப்பா மணி மாமா ஒரே அடியில் ஸ்டார்ட் ஆக்கிவிட்டது”என்பான். செலவு ரூ முந்நூறுக்கும் குறைவு. .எப்போதும் தலைகவசம் அணிந்தே வண்டி ஓட்டுவதால் என்னை எங்கும் எப்போதும் போலீசார் நிறுத்தியதே இல்லை .இரண்டாண்டுகளுக்கு முன் மணி என்னிடம் “வண்டியை எப் சி காட்டுவோம்” என சொன்னார். “இந்த வண்டியை வித்தா மூவாயிரம் ரூவா கூட கிடைக்காது ,எப் சி காட்ட ஆறாயிரம் செலவு ஆகும்” என்றார். “பரவாயில்லை” எப் சி காட்டி ,வண்டியயை என் பெயரில் மாற்றினேன் .

   சமீபத்தில் நான் மணியிடம் “மைலேஜ் மிக குறைவாக கிடைப்பதால் வண்டியை மாற்றலாம்” என சொன்னேன். “இந்த வண்டிக்கு நீங்கள் பராமரிப்பு செலவேதும் செய்வதில்லை.அதிக பட்சமாக ஒருமுறை அறுநூறு ரூபாய் மட்டும் ஆகியது .இது மிக நல்ல வண்டிஆனாலும் வாகன சட்டங்கள் மாறிவிட்டதால் இதுபோல் பழைய வணடிகளை சாலையில் ஓட்டமுடியாது” என்றார் .எனது இளைய சகோதரன் “வண்டியை மாற்றுவதாக இருந்தால் விற்கவேண்டாம் என்னிடம் தந்துவிடு,எனது பழைய பொருட்கள் சேகரிப்பில் இது இருக்கட்டும்” என்றான் .

    கடந்த பத்தாண்டுகளில் எனது வண்டி பஞ்சர் ஆனது இருமுறை மட்டுமே .இரண்டாண்டுகளுக்கு முன் பின்பக்க சக்கரம்  பஞ்சர் ஆனபோது பஞ்சர் கடை அருகில் இருந்தது .அவரால் டயரை கழட்டவே இயலவில்லை .வேறொரு கடைக்கு கொண்டு சென்று ஜாக்கி வைத்து கழட்டியதாக சொன்னார். “ஸார் டயர களத்தி நாளாச்சோ?”என கேட்டார் .ஆம் எட்டாண்டுகள் என்றேன் .அதன் பின் நேற்று காலை முன்பக்க சக்கரம் பஞ்சராகிவிட்டது  சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது.வண்டியை நிறுத்திவிட்டு எனது கைபேசியில் ‘நடமாடும் பிஸ்மில்லாஹ் பஞ்சர்’ ஓட்டும் பீர்முகமதுவின் எண் இருக்கிறதா என தேடினேன். அவரை அழைத்து ஸ்டேடியம் சுசுகி எனது பைக் பஞ்சராகி நிற்கிறது என்றேன் . “காக்கா  ஐந்து நிமிடத்தில் வருகிறேன் .குட்டியானை ஆட்டோவில் வருவேன்” என்றார் .பத்து நிமிடங்களுக்குள் ஸ்டேடியம் அருகில் வந்துவிட்டார் .பீர் முகம்மது கருப்பு கண்ணாடி அணிந்து,கையில் செல்போனுடன் இருந்தார் .ஆட்டோவை ஓட்டஒருவர் ,பஞ்சர் பார்க்க ஒருவர் என இரு உதவியாளர்கள் அவருடன் இருந்தனர் .

         எனது வண்டியின் முன் சக்கரத்தை கொஞ்சம் சிரமப்பட்டுதான் கழட்டினார்.டியூப் மாற்ற வேண்டும் என்றார் .அவரிடமே புதிய டியூப் இருந்தது .அதனால் எனக்கு ஒரு அலைச்சல் மிச்சமாகியது.டியூபுக்கு ரூ முன்னூறும் ,சக்கரத்தை கழட்டி மாட்ட ரூ நூறும் பெற்றுக்கொண்டு விடை பெற்றார் .அரை மணிநேரத்தில் நான் நின்ற இடத்திலேயே எனது வாகனம் எந்த சிரமும் இன்றி தயாராகிவிட்டது .அவரை ஒரு படம் எடுத்துகொண்டபின் சலாம் கூறி விடை பெற்றேன் .

      பதினைந்து ஆண்டுகளாக இதே தொழிலை செய்து வருகிறார் .ஆரம்பத்தில் ஒரு இருசக்கர வாகனத்தின் பின்புறம் ,ஒரு காற்றடிக்கும் கம்ப்ரசரும் ,பஞ்சர் ஓட்ட தேவையான தண்ணீர் ,தண்ணீர் தொட்டிகளுடன் நாகர்கோவில் நகர் முழுவதும் எங்கு யார் கூப்பிட்டாலும் சென்று பஞ்சர் ஒட்டி கொடுப்பார் .அவரது கடின உழைப்பும்,நடமாடும் பஞ்சர் என்ற புதிய யோசனையும் அவருக்கு நிறைய வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது .ஒன்றரை ஆண்டுக்கு முன் பைக்கிலிருந்து ஆட்டோவாக மாற்றியிருக்கிறார் .அதனுள் பெரிய கம்ப்ரசர்  வைத்துள்ளார் .இப்போது கார்களுக்கும் பஞ்சர் ஒட்டி கொடுக்கிறார் .
   
       நகரில் பெரும்பாலானவர்களிடம் அவரது எண் இருக்கிறது .வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் பிஸ்மில்லாஹ் நடமாடும் பஞ்சர் பீர் முகமதுவின் எண்ணை (9843758861)வைத்திருப்பது தேவையான ஒன்று .வேறு நகரங்களில் இப்படி நடமாடும் பஞ்சர் இருக்கிறதா என தெரியவில்லை .இந்த தொழில் தெரிந்தவர்கள் அவரை போல வேறு ஊர்களிலும் முயற்சிக்கலாம்.தனது உழைப்பாலும்,காலத்திற்கேற்ப புதிய யோசனையை செயல் படுத்தியதாலும் வெற்றி பெற்ற பீர் முகம்மதுவுக்கு எனது வாழ்த்துக்கள் .
ஷாகுல் ஹமீது ,
26 nov 2019

Sunday, 22 September 2019

சொகுசு பேருந்தில் திருடர்கள்



     கடந்த ஞாயிறன்று சேலம் சென்றிருந்தேன்.நண்பன் ஜானகிராமனின் இளையவள் ஜமுனாவின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக.சனிக்கிழமை இரவு நாகர்கோவில் –கோவை ரயிலில் சென்று ஈரோட்டில் இறங்கி அங்கிருந்து பேருந்தில் காலை ஏழு மணிக்கு சேலம் சென்று சேர்ந்தேன்.உறவினர்  பாபு பேருந்து நிலையம் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
  
   ஞாயிறு இரவு எட்டு ஐம்பது மணிக்கு ஈரோட்டிலிருந்து நாகர்கோயில் செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன் .உறவினர் பாபு “திருமண வரவேற்பு நடக்கும் மண்டபம் இருக்கும் வனவாசி சேலத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவு,ஏழுமணிக்குதான் திருமண வரவேற்பு ஆகவே நீங்கள் இரவு ஈரோட்டிலிருந்து ரயிலை பிடிக்க இயலாது .இவ்வளவு தூரம் வந்துட்டு தலையை காட்டிட்டு போனது போல இருக்கும்”என்றார்.  எனவே ரயில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு இரவு பத்துமணி  பேருந்தில் பயணச்  சீட்டு முன்பதிவு செய்துதருகிறேன் என்றார் .
  
பாபுவுடன் 

பகவத் பவன் 


நண்பர் சரவணன் மற்றும் சகோதரி பிரேமா 







       காலை பத்து மணிக்குமேல் அவரது இருசக்கர வாகனத்தில்  புறப்பட்டு அயோத்தியாபட்டணம் அருகில் இருக்கும் பகவத் பவன் சென்று ,நண்பர்கள் ஜீவமணி ,சரவணன் ஆகியோர் குடும்பத்துடன் அங்கிருந்ததால் அவர்களையும் ,முந்தைய நாள் இரவு சென்னையிலிருந்து வந்திருந்த வாழும் ஞானி ஸ்ரீ பகவத் அவர்களையும் சந்தித்தேன் . மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது பகவத் பவன். அங்கேயே சுவையான மதிய உணவை பரிமாறினர் சகோதரிகள் அன்புக்கரசி ,பிரேமா,கீதா .

      மாலை மூன்று மணிக்கு ஜானகியின் வீட்டிற்கு சென்று சேர்ந்தேன்.ஐந்து மணிக்குமேல் ஜானகியின் குடும்பத்தினர்,உறவினர்கள் ஒன்றாக ஒரு வேனில் புறப்பட்டோம் வனவாசியில் உள்ள திருமண மண்டபத்திற்கு.வனவாசியை நெருங்குகையில் இடி மின்னலுடன் நல்ல மழை ஏழு மணிக்கு சற்று முன் தான் திருமண மண்டபத்தை சென்று சேர்ந்தோம் . மலை சூழ்ந்த பகுதி அது இருட்டிவிட்டதால் வனவாசியின் அழகை காண கிடைக்கவில்லை .இரவு பத்து மணி பேருந்தை பாபு உறுதி செய்திருந்ததால் எட்டு மணிக்கே புறப்பட எத்தனித்தேன்.ஜானகியின் தந்தை இங்கே தங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது நீங்கள் தங்கி செல்வதுபோல் வந்திருக்கலாம் என சொல்லிவிட்டு உணவு கூடத்திற்கு சென்று வந்தவர் சாப்பிட்டு செல்லுமாறு வேண்டினார் .கை நனைத்தல் எனும் சடங்குக்குபின்(வயதில் பெரியர்வர்கள் முதலில் சாப்பிடுவது) தான் சாப்பாடு பரிமாறும் வழக்கம் அங்கிருப்பதால் .என்னை அடுமனைக்கு அழைத்து சென்று உணவு பரிமாறினார் .
                                  
      மென்மழைத் தூறிக்கொண்டே இருந்த வேளையில்  .ஜானகி சேலம் பேருத்தில் ஏற்றிவிட்டார்.ஒன்பதரைக்குள் வந்துவிடுவேன் என பாபுவை அழைத்துச் சொன்னேன் .சற்று நேரத்திற்குப்பின் அவர் என்னை மீண்டும் அழைத்து பத்து மணி பேருந்து ஒசூர் அருகே பழுதாகி நின்றுவிட்டது என தகவல் வந்திருப்பதாக சொன்னார் .மதுரை சென்று அங்கிருந்து சென்றுவிடலாம் என முடிவு செய்தேன் .இரவு பாபுவின் வீட்டிற்குச்  சென்று உடல் கழுவி பயணத்திற்கு வசதியாக வேட்டி கட்டிக்கொண்டேன். பெனாசிர் தந்த சூடான  சுலைமானியை குடித்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றேன் .
  
            சேலம் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது அதில் ஏறிக்கொண்டேன் .நானூற்றி இருபத்தியைந்து ரூபாய் கட்டணம் என்றார் நடத்துனர் .வண்டி காலியாக இருந்தபோதும் ஓட்டுனர் பதினைந்துக்கு மேலே அமருங்கள் என்றார் . அக்காளுக்க மாப்ள அந்த முன் இருக்கைகளில் வருவானா இருக்கும் எனநினைத்துக்கொண்டேன். நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு செல்வதை கண்டு இறங்கி ஓடிச்சென்று அதில் ஏறினேன் பேருந்தினுள் சென்றபின் தான் தெரிந்தது ,அது படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டி பொருத்தப்பட்ட பேருந்து.இதுபோல் அரசு சொகுசு பேருந்து இருப்பதை இப்போதுதான் அறிகிறேன் .
                     
         நாகர்கோவிலுக்கு ஆயிரத்தி நாற்பத்தைந்து ரூபாய் கட்டணம்.கட்டணத்திற்கு தகுந்தவாறு அந்த பேருந்தும் இருக்கைகளும் சுத்தமாக இல்லை அதிக கட்டணம் பெற்றும் அரசு பேருந்துகள் மட்டும் ஏன் பராமரிக்க இயலவில்லையோ?  சே அந்த பஸ்ல போயிருந்தால் ஐநூறு ரூவால பெயிருக்கலாம் என ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது .ஓட்டுனரிடம் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டபின் சட்டைப்பையில் இருந்த  ஆயிரத்திஐநூறு ரூபாயை  பயணப்பையில் வைத்து விட்டு ,கைபேசியை தலைக்கு மேல் இருந்த மின் இணைப்பில் பொருத்திவிட்டு ,எனது போர்வையை விரித்து படுத்துக்கொண்டேன்.சொகுசுப்பேருந்து தந்த பாதுகாப்பு உணர்வால்,பயணப்பையை காலருகில் பொருட்கள் வைக்கும் கம்பியில் வைத்துவிட்டு தூங்க தயாரானேன்.பேருந்து காலியாக இருந்தது,என் அருகிலும் யாரும் இல்லை.படுத்த சிறிது நேரத்தில் ஆழ் துயிலுக்குச்  சென்றுவிட்டேன் .சிறுநீர் கழிக்க உந்துதல் வந்தபோதுதான் விழித்து நடத்துனரிடம் சொன்னேன் “இப்பதான் மாட்டுத்தவாணில பத்து நிமிஷம் நிறுத்தியிருந்தேன்” என்றார்.அப்போதுதான் கவனித்தேன் காலருகில் இருந்த  பையை காணவில்லை நான் படுத்திருந்த இருக்கை முழுவதும் தேடிவிட்டு நடத்துனரிடம் சொன்னேன். “பையை பத்திரமா வெக்காண்டாமா,அஞ்சு ஆளு மதுரைல இறங்கிச்சி”  என்றார். பேருந்து சிம்மக்கல் பழ சந்தையை தாண்டி வந்துகொண்டிருந்தது.
நான் படுத்திருந்த படுக்கை 
                      நான்  நடத்துனரிடம் புகார் அளிக்கவேண்டும் எனது ஓட்டுனர் உரிமம்,வாக்களர் அடையாள அட்டை,தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் வங்கி அட்டைகள்  அதில் இருந்தது என்றேன். “நான் என்ன வேணும்னாலும் செய்து தாரேன், கிட்ட வரக்கூடிய ஸ்டேஷன்ல நிறுத்தேன்” என சொல்லிவிட்டு, “நீங்கோ கொஞ்சம் கெவனமா இருக்காண்டாமா? ரூவா நறைய இருந்துதா?” எனவும் கேட்டார் . பெரியார் நிலையம் அருகில் வந்தபோது அவர் ஓட்டுனரிடம்  “டே இங்குன நிறுத்து,போலீஸ் ஸ்டேஷன் இங்க ஒன்னு உண்டு”  என்றார் .நானும் ,நடத்துனரும் வண்டியிலிருந்து இறங்கி சென்றபோது அதிகாலை மூன்றரை மணி அருகிலிருந்த  அனைத்து மகளிர் காவல் நிலையம் பூட்டியிருந்தது எதிரிலிருந்த பஞ்சர் கடையில் விழித்திருந்து மொபலை நோண்டிக்கொண்டிருந்த வாலிபனிடம் கேட்டு சி 2 குற்ற பிரிவு காவல் நிலையம் சென்றோம்.காவலர் ஒருவர் உள்ளே அமர்ந்து கைப்பேசியில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார் கதவு வெளிப்பக்கம் பூட்டியிருந்ததால் “சார் திறக்கலாமா” என அனுமதி கேட்டு உள்ளே சென்றோம். அந்த காவலர் இருக்கையை காட்டி அமரச்சொன்னார்.எங்களிடம் விபரங்களை கேட்டபின் போனில் யாரையோ அழைத்து அவரிடம் விபரங்களை சொல்லிவிட்டு காத்திருக்க சொன்னார் .சிறிது நேரத்தில் அவரது கைப்பேசி ஒலித்ததும் ,பேசிவிட்டு . “இன்ஸ்பெக்டர்,பஸ்சுக்க பக்கத்தில் நிற்கிறார் நீங்கள் அங்கே செல்லுங்கள்” என்றார்.இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரித்துவிட்டு பேருந்துனுள் ஏறி எல்லா இருக்கையிலும் பார்க்கச்சொன்னார்.பயணிகள் இருப்பதால் நான் பார்க்கவில்லை என்றேன் .அவரே தூங்கிகொண்டிருந்த அனைத்து பயணிகளையும் எழுப்பி எனது பை இருக்கிறதா என பார்க்க சொன்னார். பை பேருந்துனுள் இல்லை என்பது உறுதியானதும் கீழே இறங்கி எனது ஊர் பெயர்,முகவரி ஆகியவற்றை கேட்டபின். “அட்ரஸ் ,போன் நம்பர் கொடுத்துவிட்டு போறீங்களா இல்ல  கம்ப்ளைன்ட்  குடுக்கீறீர்களா?” எனக்கேட்டார் .
                    
இதில் தான் பையை வைத்திருந்தேன் 
  
              எனது ஓட்டுனர் உரிமம் அதிலிருந்ததால் புகார் அளித்து,ரசீது பெற விரும்புகிறேன் என்றேன் .அவருடன்  இருந்த காவலருடன் நாங்கள்  காவல் நிலையம் சென்றோம் ,இன்ஸ்பெக்டர் தனது பைக்கில் வந்தார் .அவரது அறைக்கு சென்று இருக்கையில் அமரசொல்லிவிட்டு ,ஒரு வெற்று காகிதத்தில் என்ன எழுதவேண்டும் என சொன்னார். “சார் நான் சொன்னதை கேட்டு கிட்டியளா?” என கேட்டுவிட்டு .நடத்துனரிடம் விசாரணையை தொடங்கினார்.தனது பாணியில் விசாரித்து அவரை குழப்பிவிட்டு ,என்னிடம் “ஸார் பை காணாமல் போனதை நீங்கள் பார்த்தது சிம்மக்கல் அருகில் இந்த புகாரை நான் பெற்றுகொள்ள முடியாது ,நீங்கள் சிம்மக்கல் காவல் நிலையத்தில்தான் புகார் கொடுக்க வேண்டும்” என்றார் .நான் புகார் எழுதுவதை நிறுத்திவிட்டு ,நீங்கள் வாங்கவில்லை என்றால் நான் போய் வருகிறேன் என்றேன். இல்ல ஸார் மேலதிகாரி என்னிடம் கேட்பார் நாங்கள் இங்கு இந்த புகாரை வாங்க கூடாது என்றதும்.எனது பை காணாமல் போன பின் ,நான் கண்ட முதல் ஸ்டேஷன் இது நீங்கள் புகாரை வாங்க மறுத்தால் நான் செல்கிறேன் என்றதும்.இன்ஸ்பெக்டர் வேறொருவருக்கு தொலைபேசியில் அழைத்து பேசிவிட்டு புகாரை பெற்றுகொண்டார் .
நாளை தான் ரசீது கிடைக்கும்,.நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.எனது நண்பன் முத்து தலைமை காவலராக மதுரையிலேயே இருக்கிறார் அவர் வந்து பெற்றுகொள்வார் என சொல்லிவிட்டு பேருந்துக்கு வந்து புறப்படுகையில் மணி ஐந்தை நெருங்கியிருந்தது.போர்வையும்,கைபேசியும் மட்டும் மிச்சம் .நாகர்கோயில் –ஈரோடு ரயிலில் பயணிக்கையில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் பையை தலைக்கு அடியில் வைத்திருந்தேன் .சொகுசுப்பேருந்தில் திருடர்கள் இருப்பார்கள் என நினைக்கவேயில்லை .பேருந்தின் ஓட்டுனர் ஆம்னி பேருந்துகளிலும் திருட்டுகள் நிறையவே நடக்கிறது என்றார் .
நான் எப்போதும் சொல்வதுண்டு “ கள்ளன் பெருசா ,காப்பான் பெருசா” கள்ளன் தான் பெருசு. ஆம்னி பேருந்துகளில் அடிக்கடி பயணம் செய்யும்  நண்பர்கள் சிலர் இப்படியும் நடக்குமா! ,இவ்வளவு நாள் இதில் உள்ள பாதுகாப்பை நம்பித்தான்அதிக கட்டணம் செலுத்தி விலையுர்ந்த பொருட்களுடன் பயணிக்கிறோம்  என்றனர் .

          மீண்டும் படுத்து தூங்கிவிட்டேன் ,நெல்லை வந்தபின் நடத்துனர் ,வாங்க டீ குடிக்கிலாம் என அழைத்தார்  மறுத்தேன் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று டீ வாங்கிகொடுத்தார்.இரண்டு குறுஞ்செய்தி வந்திருந்தது எனது இரண்டு வங்கி அட்டைகளையும் ,தானியங்கி இயந்திரத்தில் போட்டு பணமெடுக்க முயற்சித்துள்ளனர் பையை திருடியவர்கள் .
எட்டரை மணிக்கு வடசேரி பேருந்துநிலையத்தில் இறங்குகையில் பெரியவர் ஒருவர்,பஸ்சுக்கு பைசா வெச்சிருக்கியளா என கேட்டு ரூ நூறை நீட்டினார்,எல் ஐ சி கிட்ட தான் வீடு நடந்து போயிருவேன் நன்றி என சொல்லிவிட்டு .நடக்க ஆரம்பித்தேன் .சுனிதாவை போனில் அழைத்து   இப்பதான் வடசேரியில இறங்குனேன்,ஒரு அபத்தம் பற்றி போச்சி கேட்டியா ,என்னது என கேட்டாள் பேக்க களவாண்டுட்டுவானுவோ என்றேன்.சும்மா சொல்லாதீங்கோ,போனு எப்படி இருக்கு ,அத கள்ளன் எடுக்கல்ல என்றேன் கையில் போர்வையுடன் வீட்டிற்கு வந்ததும் “வேட்டிய உருவாம உட்டானே,வாச்சிய களத்தி பையில வெக்கலையோ அதனால அது தப்பிச்சி” என்றாள்
  
         மாலை மூன்றரை மணிக்கு போனில் ஒருவர் என்னை  அழைத்து ஸார் மணி பர்சு,பாப்பாக்க போட்டோ ,அஞ்சாறு கார்டு எல்லாம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு பக்கத்துல கிடக்குது .இதுல ஏதாவது உங்களுக்கு தேவையா ,தொலைத்து விட்டீர்களா?என கேட்டார் டிரைவிங் லைசன்சு இருக்கா என கேட்டேன் .இருக்கு ஸார் என்றார் .எனது எண் எப்படி கிடைத்தது ,ஒரு கார்டுல நம்பர் இருக்குது .அதனால் தான் அழைத்தேன் என்றார் .அனைத்தையும் தபாலில் அனுப்புமாறு வேண்டினேன். தந்து பெயர் பழனிவேல் ,சொந்த ஊர் விழுப்புரம் ,மதுரை டி வி எஸ் இல் பணி செய்கிறேன் என்றார்.எனது பையில் ஒரு ஜீன்ஸ் பாண்ட்,பெல்ட்,ஷூ ஒரு சட்டை ,பனியன்,ஜட்டி,கைத்துண்டு,பணம் ஆயிரத்திஐநூறு,மணி பர்ஸ் ஆகியவை இருந்தது .உடைகள் இருந்த பையையும் ,பர்சில் இருந்த பணம் ,வங்கி அட்டைகளையும் எடுத்துவிட்டு பர்ஸை மட்டும் வீசி எறிந்துள்ளனர் திருடர்கள்  .அடையாள அட்டை ஒன்றில் கைபேசி எண் இருந்ததால் பழனிவேல் என்னை தொடர்புகொள்ளவும் முடிந்தது .
  
         கடந்த புதன்கிழமை மதியம் எனது அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் பர்ஸ் தபாலில் வந்து சேர்ந்தது .நீண்ட நேரம் மழையில் கிடந்து ஊறி போயிருந்ததால் பர்ஸ் உபயோகிக்க முடியாததாகிவிட்டது .பழனிவேல் போன்றவர்கள்  இருப்பதால்தான் இந்த புவி இன்னும் சுழல்கிறது என நினைத்துகொண்டேன் .முகமறியா அந்த பழனிவேலுக்கு நன்றிகள் .வாழ்க வளமுடன் .
ஷாகுல் ஹமீது ,
21 sep 2019 .

Thursday, 5 September 2019

மழை


                       மழை.
 கடந்த மாதம் பனிரெண்டாம் தியதி ஊருக்கு வந்தபின் இது வரையில் கதிரேழுவதை காணக்கிடைக்கவில்லை .அதிகாலை தொழுகைக்கு கால் நடையாக பள்ளிக்கு சென்று வந்தபின் நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டைமாடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பேன்.காலை பொழுதுகளில் வானம்  முகில் கூட்டங்களால் நிறைந்தே இருந்தது .அவ்வப்போது சிறு மழையும் தூறலும் .கடந்த வெள்ளிக்கிழமை முதல் மழை,நேற்று முன்தினம் முதல் மழை,மழை,மழை ,நேற்று பகலும் இரவும் விட்டு விட்டு வானை பிளந்துகொண்டு கொட்டியது ..இப்போதும் மழை பெய்துகொண்டு இருக்கிறது .மழை பெய்கையில் அதை விழி விரித்து காண்பது அக மகிழ்வு நீரின்றி இருந்த சானல்களில் வெள்ளம் புரண்டு ஓடுகிறது .
    நீரின்றி அமையாது உலகு .மழை பெய்யட்டும் .
ஷாகுல் ஹமீது ,
06-09-2019.

Thursday, 15 August 2019

விடுமுறை

04 August  2019,
 At sea
கப்பல் காரன் டைரி ,
                               விடுமுறை .

     கப்பல் காரன் பணியில் இணைந்த முதல் நாள் முதல் அவனது பணி ஒப்பந்த நிறைவுநாள் என்று என எப்போதும் அவனது நினைவில் இருக்கும். “உனது காண்ட்ராக் எப்போது முடியும்”என ஒருவர் பிறரிடம் கேட்பதுண்டு. “எனக்கு ஆகஸ்ட், எனக்கும் ஆகஸ்ட், வேறு யாரெல்லாம் ஆகஸ்டில் போகிறார்கள்” என பேசிகொள்வார்கள்.ஐந்தாறு பேராக இருந்தால் நிர்வாகம் உறுதியாக அனுப்பிவிடும்.ஆனால் டாப் ஐந்தில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது ஒற்றையாளாக இருந்தாலும் நிர்வாகம் அனுப்பிவிடும் .நானும் மூன்று முறை ஒற்றை ஆளாக பணியில் சேரவும் ,பணி நிறைவு செய்து விடுமுறைக்கும் சென்றுள்ளேன் .

   கப்பலில் காப்டன்,முதன்மை இஞ்சினியர்,முதன்மை அதிகாரி,இரண்டாம் இஞ்சினியர் ,எலக்ட்ரிகல் அதிகாரி ஆகியோர் டாப் ஐந்தில் வருவார்கள் .அவர்களது பணி ஒப்பந்த காலம் நான்கு மாதங்கள்.இரண்டாம் அதிகாரி ,மூன்றாம் அதிகாரி,பயிற்சி அதிகாரி (காடேட்),மூன்றாம் நிலை இஞ்சினியர் ,நான்காம் நிலை இஞ்சினியர்,பயிற்சி இஞ்சினியர் ஆகியோர் இளைய அதிகாரிகள் வரிசையில் வருவார்கள் அவர்களது பணி ஒப்பந்த காலம் ஆறு மாதங்கள் .பிட்டர்,தலைமை சமையல்காரர் ஆகியோருக்கு எழு மாதங்கள் .இயந்திர அறையில் பணிபுரியும் மோட்டார் மேன் ,அடுமனையில் பணிபுரியும் மெஸ் மேன்,டேக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர் (போசன்)மற்றும் மாலுமிகளுக்கு ஒன்பது மாதம் பணி ஒப்பந்தகாலம் . ஒன்பது மாதம் கொஞ்சம் அதிகம்தான்.அனைவரின் பணி ஒப்பந்தகாலம் ஒரு மாதம் கூடுதல் அல்லது குறைவு என எழுதியிருக்கும்.(உதாரணமாக 7 months +/- 1 )

   கப்பலில் பணியைவிட  உடன் பணிபுரிபவர்களும்,உயர் அதிகாரிகளும் கொஞ்சம் நல்லவர்களாக இருந்தால் .எந்த கடின பணியும்,அசாதரண சூழ்நிலையும் எளிதாக கடந்து செல்லும் .கப்பலில் பணி ஒப்பந்தம் முடிவதற்கு ஒரு மாதம் முன்பே விடுமுறை கடிதம் எழுதிகொடுக்க வேண்டும்.விடுமுறை கடிதம் எழுதி கொடுத்தபின் சில சமயங்களில் பதிலேதும் வராது .கப்பல் தலைவன் காப்டன் பலமுறை நினைவூட்டல் அனுப்பினால் மட்டுமே அலுவலகம் ஆம் அடுத்த துறைமுகத்தில் ஏற்பாடு செய்கிறோம் என தகவல் வரும்.கப்பல் காரனுக்கு ஊருக்கு செல்லும் தேதி வந்தபின் விமானத்தை தவறவிடுதல்,கைப்பையை மறத்தல்,விமானம் தண்ணீரில் இறங்குதல் போன்ற கனவுகள் வரும் .அது தான் ஊருக்கு செல்கிறோம் என்பதன் உறுதி .

  டாப் ஐந்தில் உள்ளவர்களுக்கு எப்போதுமே மாற்று ஆள் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.கப்பல் துறையில் நூற்றியைம்பது ஆண்டுகள் பழமையான நார்வேயை தலைமை இடமாக கொண்டு இயங்கும் எனது நிறுவனம் .கோலாலம்பூர் ,சிங்கப்பூர் ,கொரியா,அமெரிக்கா என பல நாடுகளில் கிளை அலுவகங்களை கொண்டு  கப்பல்களை இயக்குகிறது.எனது நிறுவனத்திற்கு சொந்தமாக நூறுக்கு மேற்பட்ட கப்பல்களும், பிற நிறுவன கப்பல்கள் நூற்றி எண்பத்தி ஐந்து என முன்னூறு கப்பல்களை எனது கப்பல் நிறுவனம் இயக்குகிறது .நான் பணிபுரியும் கப்பல் ஜப்பனியாருக்கு சொந்தமானது.இந்த கப்பலை இயக்குவதற்காக குறிப்பட்ட தொகையை அந்த ஜப்பானியர் எனது நிறுவனத்திற்கு அளிப்பார்.கப்பலில் அவரே சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியை செய்வார் அல்லது வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்பையில் கப்பலை வாடைக்கு விட்டு குறிப்பட்ட தொகையை பெற்றுக்கொள்வார் .எனக்கு கப்பலின் சொந்தகாரை தெரியவே செய்யாது .

   நான் இப்போது இருக்கும் கப்பல் இயங்குவது கோலாலம்பூர் அலுவலகம் .கப்பலிலிருந்து ஒருவர் விடுமுறை கடிதம் கொடுத்ததும் கப்பல் தலைவன் அதை கோலாலம்பூர் அலுவலகத்திற்கு அனுப்புவார் .அவர்கள் யார்,யார் விடுமுறையில் உள்ளார்கள் என்பதையும்,அடுத்து பணிக்கு செல்ல தயாராக இருப்பவர்களின் பட்டியலை,மும்பை,மணிலா,கொழும்பு ,ஒடிசா(உக்ரைன்) ரஷ்யா,டாக்கா,பாங்காங் போன்ற அலுவலகங்களில் பெற்று உரிய பணியாளரை தேர்வு செய்வார் .
குறிப்பாக டாப் நான்கில் வருபவரை,கப்பலின் கண்காணிப்பாளர் (vessel manager) தனிப்பட்ட முறையில் தேர்வு செய்வார் .சில உரிமையாளர்கள் டாப் நான்கில் வரும் காப்டன் ,முதன்மை பொறியாளர்,முதன்மை அதிகாரி,இரண்டாம் பொறியாளரை தொலைபேசியில் அல்லது காணொளி மூலம் தேர்வு நடத்தியபின்னரே ஒப்புதல் அளிப்பார்.தனது கப்பலுக்கு திறமையான உயரதிகாரியை நியமிக்கவே அவர் விரும்புவார் .கீழ் நிலையில் உள்ள பணியாளர்களுக்கு அலுவலகம் அளிக்கும் நற்சான்றிதழ் மட்டும் போதும் .எனக்கான மாற்று பணியாளரை மும்பை அலுவலகம் தேர்வு செய்தபின் அவர் வசிக்கும் ஊருக்கு அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் சென்று (மும்பை,சென்னை கொச்சி,கொல்கொத்தா,தில்லி) மருத்துவ பரிசோதனையும்,உரிய சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு,பயணதேதியில் விமான சீட்டை பெற்றுக்கொண்டு கப்பல் நிற்கும் நாட்டிற்கு பயணித்து பணியில் இணைந்து கொள்ளவேண்டும் .

   கப்பல் காரனின் விடுமுறை தடைபடும் காரணங்கள் சுவராசியமானவை. கப்பல் துறைமுகம் சென்று சேரும் நாளை மிகச்சரியாக காப்டன் கணித்து அலுவலகத்திற்கு தெரியபடுத்தவேண்டும்.பல நேரங்களில் கப்பல் துறைமுகத்தில் கரையணைவதை யாராலும் கணிக்க இயலாது.கடந்த மாதம் இரண்டாம் தேதி போர்ச்சுகல் நாட்டின் சயன்ஸ் துறைமுகம் சென்ற நாங்கள் கரையணைய முடியாமல் பதினைந்து நாட்கள் காத்திருந்தோம்.எங்கள் கப்பல் செல்ல வேண்டிய துறைமுகப்பில் வேறு கப்பல் கட்டப்பட்டு சரக்குகளை இறக்கிக்கொண்டு இருந்தது .அந்த சரக்கு இறக்கும் பணி எப்போது முடியும் என்பதை துறைமுக நிர்வாகம் எங்கள் முகவருக்கு தெரிவிக்கும் .அவர் கப்பலுக்கு தகவல் அளிப்பார்.இன்று,நாளை என சில நேரங்களில் ஒரு மாதங்களுக்கு மேல் கப்பல்கள் கரையணைய காத்திருக்கும்.விடுமுறைக்கு செல்ல இருப்பவர் தினமும் காலை இன்று செல்வோம் ,இன்று செல்வோம் என உள சிக்கலுக்கு ஆளாகிவிடுவார் .

   பணிக்கு செல்ல தேர்வான பணியாளர் மருத்துவப்பரிசோதனையில் தோல்வி அடைந்தால்,வேறு பணியாளரை தேடிப்பிடித்து அவருக்கு  மருத்துவசோதனையும் ,பிற சான்றிதழ்கள்,ஒரு நாட்டில் உள் நுழையும் அனுமதி சீட்டு (visa)என அனைத்தும் தயாராகும் வரை கப்பல் துறைமுகத்தில் நிற்கும் காலஅவசாகம்  இருக்குமெனில் மட்டுமே அவர் கப்பலில் இணைந்து மற்றவரை விடுவிக்க இயலும்.இவை எல்லாம் மிக சரியாக நடந்து கப்பலுக்கு செல்லும் பணியாளர் விமானத்தை தவறவிட்டால் ,கப்பல்காரனின் விடுமுறை தள்ளிபோகும் .விமானத்தை,விமான நிறுவனம் ரத்து செய்தல்,இயற்கை  சீற்றம்,விமானத்தில் ஏற்படும் கோளாறு ,விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாதல் ,விமான நிலையம் செல்லும்போது ஏற்படும் வாகன நெரிசல்,விமான பயணத்திற்கு முன் பயணிப்பவரின் நெருங்கிய உறவில் ஏற்படும் இறப்புகள் போன்றவை காரணிகள்.

 இருநாடுகளுக்கு இடையில்  அரசியல் காரணங்களால் இணக்கமில்லாமல் இருந்தால் .இரு நாட்டவரும் எதிர் நாட்டில் உள் நுழையும் அனுமதி கிடையாது.பங்களாதேசி மாலுமிகள் கப்பலிலிருந்து சிங்கப்பூரில் இறங்கவோ ஏறவோ முடியாது.இலங்கையை சார்ந்தவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவின் டோகோ நாட்டில் அனுமதி இல்லை .  விமான நிலையம் சென்றபின் தான் சில நேரங்களில் சிங்கப்பூர் போன்ற நாடுகளின்  அனுமதி சீட்டை அங்குள்ள முகவர் அனுப்பித்தருவார்.விமானம் கிளம்பும் கடைசிநிமிடம் வரை காத்திருந்து வராமல் வீட்டிற்கு திரும்பி சென்ற நிகழ்வுகள் உண்டு .இரண்டாயிரத்தி ஒன்று செப்டம்பர் பதினொன்றாம் தேதி இரட்டை கோபுரம் தாக்கப்பட்டபோது ,அமெரிக்கா சென்ற அனைத்து கப்பல்களும் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது .யாரும் கப்பலுக்குள் உள் நுழையவும் வெளியே செல்லவும் அனுமதி இல்லாமல் .பணிக்கு சேர அமெரிக்கா வரை பயணித்தவர்கள் தங்கள் தயாகத்திற்கு திரும்பி சென்றனர்.இலங்கையின் காலே ஒரு முக்கியமான  முனை.வளைகுடா நாடுகளுக்கும் ,வளைகுடாவில் இருந்து சிங்கப்பூர்,ஜப்பான் செல்லும் கப்பல்கள் அனைத்தும் இவ்வழியாக செல்வதால் இலங்கையில் அதிகமான மாலுமிகள் பணிநிறைவு செய்து இறங்கவும்,பணிக்கு சேரும் பொருட்டு கப்பலில் ஏறும் செயல் நடைபெற்றுவந்தது .உயிர்தெழுந்த நாள் தாக்குதலுக்கு பின் எங்கள் நிறுவனம் அதை ரத்து செய்துள்ளது .

    வீட்டிலிருந்து புறப்பட்டு இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி வெற்றிகரமாக கப்பலுக்கு சென்று சேர்ந்தபின் தான் ஊருக்கு செல்பவரின் விடுமுறை பயணம் உறுதியாகும். “யப்பாட ரிலிவர் ஆன்போர்ட்”என ஒரு நிம்மதி வரும் .கப்பலுக்கு வந்தவன் கப்பல் பயணத்திற்கான  சான்றிதழ் எதையாவது மறந்துவிட்டு வந்திருந்தால் அவர் ஊருக்கு திரும்பி செல்வார் .விடுமுறைக்கு செல்பவரை விமான நிலையத்திலிருந்து திருப்பி அழைத்து அழைத்து வந்த நிகழ்வுகள் பல.தற்போது எனது நண்பர் பெசில் அவர் பணிபுரியும் கப்பலில் தனது பணிஒப்பந்த காலத்தை சில தினங்களுக்கு முன் நிறைவு செய்துள்ளார் .விடுமுறை விண்ணப்பம் முன்பே கொடுத்துவிட்டார்.அந்த கப்பலில் இருந்து மொத்தம் பதினாறு பேர் விடுமுறைக்கு செல்லவேண்டும் .அப்படி மொத்தமாக அனைவரையும் கப்பலிலிருந்து இறக்குவது கடினம் .கப்பல் இப்போது சீனாவில் கரையணைய இருக்கிறது .பத்துபேருக்கு நாட்டின் உள் நுழைந்து வெளியேறும் அனுமதி விண்ணப்பித்ததில் சிலருக்கு அனுமதிமறுக்கப்பட்டும்,ஒருவர் மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்ததாலும்.ஊருக்கு செல்ல வேண்டிய சிலரின் விடுமுறை ரத்தாகியுள்ளது.சீனாவில் இருந்து கப்பல் சிங்கப்பூர் வழியாக வந்தால் நண்பர் பெசில் உட்பட மீதமுள்ளவர்கள் விடுமுறைக்கு செல்லலாம் .நண்பர் பெசில் சொன்னார் “தலைவரே கப்பல் சிங்கபூருக்கு போவாம நேரே பனாமா நாட்டிற்கு  போச்சுதுன்னா இன்னும் இருபத்தி ஐந்து நாட்கள் கப்பல்ல இருக்கவேண்டும்”என்றார் .

           இம்முறை ஆகஸ்ட் முப்பத்தி ஒன்றாம் தேதி எனது பணி(ஏழு மாதங்கள்) ஒப்பந்தம் நிறைவுபெறுகிறது.பொருளாதரா சிக்கல்களும்,வருட இறுதியில் விஷ்ணுபுர விழாவும்,பண்டிகைகளும் இருப்பதால் இம்முறை இரண்டுமாதம் பணி நீட்டிப்பு கேட்டு ,அக்டோபர் இறுதியில் என்னை விடுவிக்குமாறு கோரியிருந்தேன்.இரு தினங்களுக்கு முன் காப்டன் என்னிடம் “ஷாகுல் உன்னை விடுவிக்க அலுவலகம் தகவல் அனுப்பியுள்ளது”என்றார். “எப்போது” என கேட்டேன். “வரும் எட்டாம் தேதி அமெரிக்காவில் இருந்து”என்றார் .இங்கிருந்து நான்குபேர் செல்கிறார்கள் அவர்களுடன் எனது பெயரும் வந்துள்ளதாக சொன்னார்.எனது பணி ஒப்பந்தப்படி ஆறு மாதம் முடிந்தபின் நிறுவனம் எப்போது வேண்டுமாலும் என்னை விடுவிக்க முடியும். இம்முறை நான் எண்ணியதுபோல்  இருமாதங்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .
  உடன் பணிபுரியும் நண்பர்கள் எல்லாம் நன்மைக்கே.உண்மையில் உனக்கு விடுதலை என்றனர்.இந்த கப்பலில் காப்டன் அரசியல் காய்நகர்த்தலில் (சகுனியின் செயலாளர் )கணிகர் என பெயர் பெற்றவர். யாரும் சந்தோசமாக இருந்தால் அவருக்கு பிடிக்காது .கப்பலின் அனைத்து சிறு விஷயத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.ஞாயிறு மாலைகளில் மட்டைபந்து விளையாடி,அவர் அதில் தோல்வி அடைந்தால் அடுத்த ஞாயிறு வரை அந்த வஞ்சத்தை மனதில் வைத்திருப்பார்.சில தினங்களுக்கு கப்பலின் இணையத்தை அணைத்தும் வைத்திருப்பார். அதனாலேயே எதிரணியில் விளையாடுபவர்கள் வேண்டுமென்றே தோல்வி அடையும் கூத்தும் இங்கு நடக்கும்.வரும் ஏழாம் தேதி கப்பல் கரையணைந்தால்,எட்டாம் தேதி மாலை விமானம் பத்தாம் தேதி அதிகாலை வீடு,பனிரெண்டாம் தேதி பக்ரீத் பண்டிகக்கு குடும்பத்துடன் இருக்கலாம் என இருந்தேன் .
 
   இப்போது கப்பலை நிறுத்திவிட்டோம் .கப்பல் கரையணைவது,ஏழு,எட்டாகியது,இன்று ஒன்பதாம் தேதி ஆகிவிட்டது.ஒன்பதாம் தேதி கப்பல் கரையணைந்தால்.பத்தாம் தேதி மாலை நண்பன் யோகேஷ்வரனின் இரண்டாவது சொந்த ஊரான அமெரிக்காவின் பிலே டெல்பியாவிலிருந்து கத்தார் ஏர்வேஸின் விமானத்தில் பயண சீட்டு கிடைத்தால் மட்டுமே பனிரெண்டாம் தேதி அதிகாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்து பக்ரீத் பண்டிகைக்கு குடும்பத்துடன் இருக்க முடியும்.இல்லையெனில் எனது பண்டிகை நாள் விமானத்திலோ அல்லது விமானநிலையத்திலோ இருக்கும். கடந்த ஆறு ஆண்டுகளாகவே பக்ரீத் பண்டிகை நாளில் கப்பலிலேயே இருக்கிறேன்.இம்முறை இறைவன் நாடினால் .(இன்ஷா அல்லாஹ் )

ஷாகுல் ஹமீது .

Saturday, 10 August 2019

விடுமுறை உறுதியாதல்



கப்பல் காரன் டைரி
                             விடுமுறை உறுதியாதல்
கடந்த விடுமுறை பதிவை படித்த நண்பர் சிவமணின்,”உங்களுக்கு லீவ் கிடைப்பது கஷ்டமா?”என கேட்டார் .என்னுடன் முதல் கப்பலில் பணிபுரிந்த எலெக்ட்ரிகல் இஞ்சினியர் சேலம் பாலா. “ஹமீது கப்பலில் இருந்து ஊருக்கு செல்லும் முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சியாயின,இதன் தொடர்ச்சி எப்போது” என கேட்டார்.நானும் கடந்த பதிவை எழுதி முடித்தபின் நினைத்தேன் .இதன் தொடர்ச்சி எழுதவேண்டுமென.


 என்னை விடுவிக்க பாட்டக் ரவீந்திரன் தில்லியிலிருந்து புறப்பட்டு இன்று மாலை கப்பலுக்கு வந்துசேர்ந்துவிட்டார்.எனது விடுமுறை உறுதியாகிவிட்டது,நான் நினைத்தது போலவே பத்தாம் தேதி இரவு கத்தார் எயர்வேஸ் விமானத்தில் புறப்பட்டு திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்துசேர்வேன் .காலை பெருநாள் தொழுகைக்கு செல்லமுடியும் நீண்ட நாட்களுக்கு பின் குடும்பத்துடன் பண்டிகை .என்னுடன் ஊருக்கு வரும் மூன்றாம் இஞ்சினியருக்கு பதிலாக வருபவர் மதுரை வீரன் ஜீத்து சூர்யா ,மதுரை தபால் தந்தி நகரை சார்ந்தவர் .கொச்சியிலிருந்து ஒன்பதாம் தேதி இரவு விமானம் அவருக்கு.மதுரையிலிருந்து புறப்பட்டு கொச்சி அலுவலகம் சென்று விமான சீட்டு ,சான்றிதழ்கள்,கப்பலில் இருப்பவர்களுக்கு சில பொருள்கள் ,மருத்துகள் அனைத்தையும் பெற்றுகொண்டு அதிகாலை மூன்றரைக்கு புறப்படும் விமானத்தில் ஏறுவதற்கு வானூர்தி நிலையம் சென்றபோது தொடர்மழை காரணமாக கொச்சி விமானநிலையம் மூடப்பட்டிருந்தது.அவசர எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டு விடுதியில் தங்கினார்.

அவரது விமானம் ரத்தானதில் கப்பலிலிருந்து ஊருக்கு செல்லும் அமித் கவலையுடன் இருந்தார்.வெள்ளிகிழமை காலை அலுவலகம் சென்று திருவனத்தபுரம் வழியாக பிலேடெல்பியா செல்லும் எதிகாட் விமான சீட்டை பெற்றுகொண்டு ,காரில் மீண்டும் திருவனத்தபுரம் சென்று விடுதியில் தங்கிவிட்டு அதிகாலை நான்கு மணி விமானத்தில் ஏறிவிட்டார் .கப்பல் ஞாயிறு காலை பதினோரு மணிக்கு புறப்படுவதால் அவர் வந்து கப்பலில் இணைந்து கொள்ள முடியும் .எந்த சிக்கலும் இல்லை .அவர் சனிகிழமை இரவு வந்து சேருவார் .நாங்கள் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு புறப்பட்டு இரவு ஒன்பது மணி விமானத்தில் ஏறுவோம் .கப்பல் துறைமுகத்திலிருந்து முன்னரே புறப்படுவதாக இருந்தால் .மூன்றாம் இஞ்சினியர் அமித்தின் விடுமுறை ரத்தாகி அடுத்த நாற்பது நாட்கள் கப்பலில் தான் இருக்க வேண்டும்.

   கடந்த  சில நாட்களாக கடும் பணி கூடவே கடும் வெப்பமும் .கடல் நீரின் வெப்பம் இருபத்தி ஒன்பது பாகையும்,இயந்திர அறை நாற்பது பாகைக்குமேல்.இப்போது அமெரிக்காவில் கோடைகாலம் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெப்பம் அதிகம் .புதன்கிழமை காலை கப்பலுக்கு வருடாந்திர தணிக்கை செய்ய தணிக்கையாளர் வருகிறார் என  தகவல் வந்தது  வெள்ளிக்கிழமை கப்பல் துறைமுகத்தில் கரையணையும் போது தணிக்கை செய்யும் அதிகாரி கப்பலில் இருப்பார் அதற்காக கப்பலை தயார் செய்யவேண்டும்.எதிர்பாராத சில பணிகள் காரணமாக கப்பலை சுத்தபடுத்தும் பணிகள் தாமதமாகிக்கொண்டே போனது.புதன்கிழமை காலை பத்துமணிக்கு தேநீர் இடைவேளைக்கு முன் ஜெனரேட்டர் ஒன்றின் டர்போ சார்ஜர் ஒன்றுஎண்ணை ஒழுகியதை கோபகுமார் பார்த்துவிட்டார் .சரியான நேரத்தில் கண்டதால் ஒரு தீ விபத்து தவிர்க்கப்பட்டது.உடனே அதை கழற்றி வேறு ஒன்றை மாற்றினோம் ..
  அன்று மாலையே நீராவி குழாய்கள் இரண்டில் ஒழுகல் அதையும் சரி செய்து முடிக்கையில் இரவு ஒன்பது மணி நேற்று வியாழக்கிழமை துறைமுகம் அருகில் நங்கூரமிட்டு கப்பலை நிறுத்தி கப்பலுக்கு எண்ணை நிரப்பினோம்.மாலை மூன்று மணிவரை .பின்னர் மூன்று மணிநேரம் ஓய்வு ,இரவு ஏழுமணி முதல் பத்து மணிவரை மீண்டும் பணி . வெள்ளிக்கிழமை காலை எட்டுமணிக்கு தணிக்கை செய்யும் அதிகாரி வருவதால் அதிகாலை ஆறுமணிக்கே பணிக்கு சென்றோம்.
கடைசி சில தினங்கள் சரியான தூக்கமும்,ஓய்வும் இருக்காது.இரு தினங்களுக்கு முன் காலை மூன்று மணிக்கு கோபகுமார் கடும் வயிற்று வலியால் ஒருமணி நேரம் அவதிப்பட்டுள்ளார் .பின்னர் சிறுநீர் கழிக்கையில் வலியுடன் ரத்தமும் வந்தது .சிறுநீரகத்தில் கல் அது வெளியே வருகையில் ரத்தமும் வந்துள்ளது .மாலையில் மீண்டும் சிறுநீர் கழிக்கையில் சிறு கல் ஒன்று வெளிவந்ததை கழிப்பறையினுள் கையால் எடுத்துவிட்டார்.கடும் பயத்தில் இருக்கிறார் .கப்பல் இங்கிருந்து கொரியா செல்லவிருக்கிறது மொத்தம் ஐம்பது நாள் பயணம் .கப்பலுக்கு வருபவர்களிடம் மருந்து கொடுத்துவிட சொல்லி தனது மனைவியிடம் சொன்னார்.துறைமுகம் சென்றதும் மருத்துவமனை சென்று சோதிப்பதுநன்று என சொன்னேன் .
 அவர் மருத்துவமனை சென்று கற்கள் இருப்பது தெரியவந்தால் அவரை வீட்டிற்கு அனுப்புவதை தவிர வேலு வழியில்லை.அதனால் என்னை அடுத்த துறைமுகம் வரை இருக்க சொல்வார்கள் என கவலை வந்தது .கோபகுமார் இன்று சனிக்கிழமை மருத்துவமனை போய் வந்தார்.மருந்துகள் சில கொடுத்துள்ளனர் .நான் இன்னும் பத்து நிமிடத்தில் கப்பலில் இருந்து இறங்கி பிலே டெல்பியா விமான நிலையம் செல்கிறேன் .இரவு ஒன்பதரைக்கு புறப்பட்டு பதிமூன்று மணிநேர பயணத்திற்கு பின் நாளை மாலை தோஹா .அங்கிருந்து இரவு அடுத்த விமானம் திருவனந்தபுரத்திற்கு .அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருப்பேன் . வழக்கமாக ஊருக்கு செல்லும் முன் இரவுகள் தூக்கமின்றி கழியும் . நீண்ட பயணத்திற்கு பின் ஊருக்கு சென்று சேர்க்கையில் நேர வித்தியாசம் காரணமாக முதுகு வலியும் உடல் சோர்வும் இருக்கும் நன்றாக துயில ஒரு வாரமாகும்.
என் எண்ணத்தை இறைநிலை  நிறைவேற்றிியுள்ளது .விமான பயணத்திலும் ஏக இறைவன் துணை புரிவானாக .
ஷாகுல் ஹமீது ,
10 aug மற்றும்.

Thursday, 25 July 2019

கப்பல் காரன் டைரி ,அதிகாலையின் வெளிச்சம்


  
                    
  இந்த பிரபஞ்சம் காரிருள்.இருளில்தான் வெளிச்சம்புகும் .பூமி நில்லாமல் சுழன்றுகொண்டே இருப்பதால் கதிரரொளி படும் பூமி பந்தின் ஒருபகுதி வெளிச்சமகாவும் மறுபுறம் இருளாகவும் இருக்கும் .இருளே நிரந்தரம்,அதுவே மூலம்.கதிரொளி புகுந்து  இருள் விலகும் அந்த வைகறை வெளிச்சம் பேரழகு . இயற்கையை ரசிக்காதவர் யார்தான் இல்லை .குறிப்பாக கதிரெழுவதும்,அணைவதும் அழகின் உச்சம் . .

   
       பள்ளி நாட்கள் முடிந்தபின் நானும் நண்பன் ராஜாவும் பல மாதங்கள் தொடர்ந்து  சின்னவிளை கடற்கரையிலிருக்கும் குருசு பாறையில் இருந்து கதிரணைவதை பார்ப்போம் .நவம்பர்மாதம் முதல் பிப்ரவரி வரையில் சூரியன் மாலை ஐந்தரைக்கெல்லாம் குங்கும நிறத்தில் மாறி,பின்னர் மெதுவாக கீழிறங்கதொடங்கி கடலுக்குள் மூழ்குவது வரை அமர்ந்திருப்போம் அதனருகே சில கப்பல்களும் செல்லும் .அப்போது தெரியாது கப்பலில் இதே பாதையில் பயணிப்பேன் என .ஒரு மாதம் தொடர்ந்து கதிரணைதலை தொடர்ந்து பார்த்தால்.வித விதமான காட்சிகள் காண கிடைக்கும் .மூடி வைத்த தண்ணீர் மண் பானை போல .முட்டையின் கூம்பிய மேற்பகுதி உடைந்தது போல,குண்டு பல்பு மாதிரி,கதிரணைந்த பின்பும் கதிரவனின் செங்கதிர்களை தக்க வைத்திருக்கும் ,முகில்கூட்டங்கள் என .

   
    இரண்டாயிரத்தி பதினான்காம் ஆண்டு ஜெயமோகன் அவர்களின் தளம் அறிமுகமாகி ,நான்  வாசிப்பது இலக்கியம் என உணர தொடங்கியபின்,கற்பனையில் விரிந்த காட்சிகளை காண்கையில் இத்தனை நாள் நான் இயற்கையை சரியாக பார்க்கவில்லை என்றே தோன்றிற்று.இலக்கிய வாசிப்புக்கு பின்பு நான் காணும் இயற்கையும், கதிரெழுதல்,கதிரணையும் காட்சிகளும் பேரழகு .


கதிரெழுதல் அபூர்வ காட்சி

   
    கப்பலுக்கு தேவையான எரிபொருள் நிரப்புவதை பங்கர் என்போம்.துறைமுகத்தில் கப்பல் கட்டியிருக்கும் போது அல்லது நங்கூரம் பாய்ச்சி நிற்கும்போது தான் பங்கர் எடுப்போம்.எண்ணெய் நிறைத்து வரும் சிறிய கப்பலை  எங்கள் கப்பலுடன் இணைத்து கட்டியபின் சிறிய கப்பலின் குழாயை எங்களின் இரும்பு குழாயில் பொருத்தி பிரமாண்டமான எரிபொருள் தொட்டிகளில் நிரப்புவோம் .ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் ஏற்றினால் கார்களை ஏற்றும் கப்பல் ஒரு மாதம்  நிற்காமல் பயணிக்கும்  .ஒரு நாளின் எரிபொருள் செலவு முப்பதிலிருந்து,முப்பத்தைந்து டன்.
ஆயிரம் மெட்ரிக் டன்கள் நிறைக்க குறைந்தது எட்டு  மணிநேரமாகும்.என் பணி பங்கர் துவங்கியது முதல் முடிவதுவரை இரு கப்பல்களின் குழாய்கள் இணைக்கபட்டிருக்கும் இடத்தில் நின்று கண்காணிப்பதும் ,முதன்மை இஞ்சினியருக்கு ரேடியோ மூலம் பதினைந்து நிமிட இடைவெளியில் தகவல் சொல்வதும் .கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் பிலேடெல்பியா  அருகில் உள்ள மார்க்ஸ்ஹூக் துறைமுகத்தில் நள்ளிரவு கப்பலுக்கு எண்ணை நிரப்பும் பணி தொடங்கியது.வெப்பம் இருபது பாகைக்கும் குறைவாக இருந்ததால் மென்குளிர்  . என்னுடன் இருந்த நீலேஷ் தேநீர் அருந்த சென்றுவிட்டான். அப்போது கிடைத்த தனிமையில் வானை நோக்க ஆரம்பித்தேன் .கதிரெழும் நேரம் ஆறுமணிக்கு மேல்.,நான்கரை மணிக்குமேல் கதிரெழும் எதிர்திசையில் வெண்ணிலாவும் ,அதன் கீழே விடிவெள்ளியும் ,அதிகாலை பஜர் தொழுகைக்கான நேரம் அது. அதன் பின் மெதுவாக ,மிக மெதுவாக வானின் இருள் விலகத்தொடங்கும் ,செங்கதிர்கள் எழுவதற்கு முந்தையை வெளிச்சம் அது .


    விழிவிரித்து மிக பொறுமையாக பார்த்துக்கொண்டே இருந்தால் ஒவ்வொரு வினாடியிலும் அதிகாலையின் அழகு மாறிக்கொண்டேயிருக்கும்.செங்கதிர்கள் எழும்நேரம் நான் பார்த்துகொண்டிருந்த அன்று தூரத்தில் நீண்ட பாலம் ,அதில் ஊழ்கத்திலென வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன.தலைக்கு மேலே அந்த பாலத்தை தொட்டுவிடுமோ என விமானங்கள் பத்து நிமிடங்களுக்கு ஒன்று என இறங்கிகொண்டே இருந்தது .இறங்க எத்தனிக்கும் விமானங்கள் பல வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது .தினமும் இத்தனை பேர் விமானத்தில் எங்கு தான் பயணிக்கிறார்களோ என ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.செங்கதிர்கள் எழுந்தபின் இருள் முழுமையாக விலகி ,செவ்வானம் காட்சியாகும் .இப்போது எதிர் திசையில் வெண்முகில் கூட்டங்களில் செங்கதிர்கள் பட்டு புதிய காட்சியை விரித்திருக்கும் .இருளில் மறைந்திருத மரங்கள் நிழல்கள் என துலங்கதொடங்கும்,குஞ்சுகளுக்கு இரைதேடிச்செல்லும் பறவைகள்  ஒலியை எழுப்பியபடி அன்றைய நாளை துவக்கும் நேரம் ,கதிரவன் இப்போது ,வருவான் ,இப்போது வந்துவிடுவான் என அகம் பொறுமை இழக்கும் . ஒவ்வொரு  வினாடியிலும்  காட்சி மாறிக்கொண்டே இருப்பதால் ,முந்தைய வினாடியின் காட்சி பின்பெப்போதும்  கிடைக்காது .இரையை எதிர்பார்த்து தாயின் வரவை நோக்கி காத்திருக்கும் குஞ்சு கூட்டிலிருந்து மெதுவாக எட்டிபார்ப்பதுபோல் மிக மெதுவாக கதிரவன் வானில் எட்டிபார்ப்பான் .கதிரெழும் நேரமது .அப்போது வானம் முழு வெளிச்சம்  நிறைந்திருக்கும் கதிரவன் மட்டுமே ஆரஞ்சு நிறத்தில் காட்சி தருவான்.கதிரெழுவதற்கு முன் செங்கதிர்கள் நிறைந்திருப்பதுவரைதான் அழகு .
    கதிரெழுந்தபின்  மிக வேகமாக கதிரவன் வெளியே வந்து  முழு வெளிச்சம் பரவியபின் அழகின்மையையே உணர்ந்தேன்.கப்பல் காரனுக்கு இது நல்ல வாய்ப்பு கடல் மட்டத்திலிருந்து எப்போதும் இருபது முதல் முப்பது மீட்டர் உயரத்தில் இருந்து காட்சிகளை காணும் வாய்ப்பு .மின் விளக்குகள் இல்லாத உயரமான இடம்,கடற்கரை  பகுதிகள்,மலையுச்சிகள் கதிரெழுவதை காண உகந்த இடங்கள் .கன்னியாகுமரி அருகில்  பொத்தையடி எனும் ஊரில் உள்ள  மருந்துவாழ் மலையிலிருந்து கதிரெழும் காட்சியை வாய்ப்புள்ள நண்பர்கள் முயற்சிக்கலாம் .
ஷாகுல் ஹமீது ,
25 july 2019 .
sunitashahul@gmail.com

Monday, 8 July 2019

கப்பல் காரன் டைரி, உணவு


கப்பல் காரன் டைரி 
                            உணவு
   கப்பல் காரனுக்கு பசியை உணரும் வாய்ப்பேயில்லை.இந்தியர்கள் அதிகம் இருக்கும் கப்பல்களில் காலையில் பால்,பழச்சாறு,அவித்த முட்டை,ஆம்ப்லட்,புர்ஜி பிரட் ,ஓட்ஸ் ,சீரியல் வகைகள் என நீளும் .மதிய உணவாக பாசுமதி அரிசி சோறு ,பருப்பு ,ஒரு காய் கூட்டு,சாலட்,இறைச்சி அல்லது மீன்,ஒரு பழம்(ஆப்பிள் ,ஆரஞ்சு,தர்பூசனி ,திராட்சை ........)இரவுணவாக  ஒரு சூப் ,சப்பாத்தி ,ஒரு கூட்டு ,ஒரு இறைச்சி வகை ,ஒரு இனிப்பு(desert).காலை மாலை தேநீர் இடைவேளைகளில் பிஸ்கட்டுகளும் கிடைக்கும் .எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் பிரியாணியும் ,மாலையில் அமெரிக்க உணவான பிஸா,பர்கள் பிரெஞ்சு பிரஸ் என இருக்கும் .அவ்வப்போது வார இறுதி சனிக்கிழமைகளில் நடக்கும் பார்ட்டிகளில் சிறப்பு உணவுகளும் (இறால்,ஸ்டேக் )கிடைக்கும்.

  கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி ஸ்பெயினில் இருந்து புறப்பட்டு பனிரெண்டுநாள் பயணத்திற்கு பின் அமெரிக்காவை சென்றடைந்தோம் கடலம்மா சாந்தமாகவும்,பயணம் எளிதாகவும் இருந்தது .கப்பலின் கடிகாரம் ஆறு மணிநேரம் பின்னோக்கி சென்றது.அங்கிருந்து இருபத்தி ஐந்து காலை புறப்பட்டோம் ஐரோப்பாவை நோக்கி.ஒன்பது நாட்கள் பயணத்திற்கு பின் பாதுகாப்பாக இங்கு வந்து சேர்ந்தோம் .மீண்டும் கப்பலின் கடிகாரம் ஆறு மணிநேரம் முன்னோக்கி சென்றுவிட்டது .இருபத்தி ஐந்து நாட்களுக்குள் இருமுறை கடிகாரம் ஆறு மணி வீதம்  முன்னேயும் பின்னேயும் சென்றதால் உடல் கடிகாரம் கொஞ்சம் குழம்பி ,துயில்,உடல் கழிவுகள் வெளியேறுவதில் சமநிலை இழந்து நிற்கிறது .
  
  இங்கு வந்து ஆறு நாட்களாகியும் துறைமுக ஒப்புதல் இல்லாததால் கரையிலிருந்து நூறு கடல் மைல் (ஒரு நாட்டிகல் மைல் = 1.85 மைல்) தொலைவில் கப்பல் மிதந்துகொண்டிருக்கிறது. இரண்டாம் தியதி நள்ளிரவு கப்பலை நிறுத்தியதும் கப்பல் கடுமையாக ஆட தொடங்கியது .அப்போதே நானும்,ஆழ் துயிலில் இருந்த பலரும் துயில் கலைந்துவிட்டதாக சொன்னார்கள் .
   
   கடந்த மாதம் ஸ்பெயினில் இருந்தபோது துறைமுக பாதுகாப்பு காரணங்களால் உணவு,உதிரி பொருட்கள் எதுவும் கப்பலுக்கு கொண்டுவர அனுமதிக்கவில்லை.கப்பலுக்கு தேவையான எண்ணெய் நிரப்பும்போது உணவும் ,மற்ற பொருட்களும் வரும் என்றார்கள் .எண்ணெய் நிரப்ப கப்பலை நிறுத்திய இடத்தில் எங்களுக்கான உணவு மற்றும் உதிரி பாகங்கள் குறைந்த கால அவகாசத்தில் ஒருங்கு செய்ய இயலவில்லை என கை விரித்தது உணவுதரும் நிறுவனம் .ஸ்பெயினில் இருந்து கப்பல் புறப்படுவதற்கு இரு தினங்கள் முன்பு கப்பல் பணியாளர்கள் சிலர் துறைமுகம் அருகிலிருந்த லாப்பி நாதா  எனும் அழகிய நீண்ட கடற்கரை உடைய சிற்றூருக்கு சென்று மிகவும் அத்தியாவசியமான தக்காளி,இஞ்சி ,பச்சைமிளகாய், வெங்காயம்,(சின்ன வெங்காயம் தென்னிந்தியா தவிர வேறெங்கும் சின்ன வெங்காயம் கிடைக்கிறதா என தெரியவில்லை) வெள்ளரிக்காய் மற்றும் கொஞ்சம் ஆரஞ்ச் பழங்கள் என வாங்கி வந்தனர் .பச்சை காய் கறிகள் குளிரூட்டியில் வைத்து பாதுகாக்கபட்டால்,அதிகபட்சம்  பதினைந்து நாட்கள் தாக்குபிடிக்கும் .
      
       அமெரிக்காவில் எங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் கிடைப்பதாக இருந்தது .ஆனால் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி கப்பலுக்கான எரிபொருள் நிரப்பும்போது தான் பொருட்களை வரவழைக்க முடியும்.இம்முறை எரிபொருள் நிரப்ப தேவைப்படவில்லை.நாங்கள் சென்றது தனியார் துறைமுகம் .எரிவாயு நிரப்பும் துறைமுகப்பில் வேறதெற்கும் அனுமதி இல்லாததால்.தலைமை சமையற்காரர் செங்கனூர் ஸ்ரீகுமார், மூன்றாம் அதிகாரி மும்பையின் ஸ்ரயாஸ் ஆப்தே,அவனது மனைவி அம்ருதா,எர்னாகுளம் கோபகுமார்,உக்ரைனின் காடேட் விக்டர் ,பயிற்சி பொறியாளர் பிரதீக்,வல்சாட் ஷ்யாம் தண்டேல் ஆகியோர் பிலேடெல்பியாவிலுள்ள உழவர் சந்தைக்கு சென்று ,பச்சை காய்கறிகள் ,மற்றும் பழங்கள் வாங்கி வந்தனர். இதுவும் தனியாருக்கான துறைமுகம்,அதிக ஆபத்து(LPG AND OILtanker terminal) மிகுந்த சரக்கை கையாள்வதால்,எந்த வாகனமும் உள்ளே வர அனுமதியில்லை அவர்கள் வாங்கி வந்த பொருட்களை வாகனம் நிறுத்தியிருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தோள்களில் தூக்கி கப்பலுக்கு அருகில்  கொண்டுவந்து இருபது மீட்டர் உயரமிருந்த சாய்வு ஏணிபடிகளில் நாங்கள் பத்துபேர் வரிசையாக நின்று கைகளில் மாற்றி ,மாற்றி கப்பலின் மேல்தளத்துக்குள் கொண்டு சேர்த்தபின் கைவண்டியில் (strolly )அடுக்கி கப்பலின்  அடுமனைக்கு கீழ் இருக்கும் குளிர் அறைகளில் அடுக்கிவைத்தோம்

      மீண்டும் அன்று  மாலையில் கப்பல் காப்டன் தனது சகாக்களுடன் சென்று பால் மற்றும் பிஸ்கட்டுகள் வாங்கி வந்தார். இப்போது தக்காளி உட்பட பச்சை காய்கறிகள் அனேகமாக அனைத்தும் தீர்ந்துவிட்டது .வெங்காயமும் இன்னும் சில காய்கள் மட்டுமே உள்ளன .மைனஸ் பதினெட்டு டிகிரியில் பதப்படுத்தப்பட்ட சில காய்களும் உள்ளன.இங்கு வந்ததும் அத்தியாவசியமான  உணவு பொருட்கள் வாங்காலாம் என கப்பல் தலைவன் நினைத்திருந்தார் .ஆனால் நாங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை .கப்பல் துறைமுகம் செல்வதில் தாமதமாகிறது .நேற்று  வரை தகவல் இல்லை எப்போது நாங்கள் துறைமுகம் செல்வோம் என .இங்கிருந்து இரு நாள் பயணத்திற்கு பின் வேறொரு துறைமுகம் சென்றபின்தான் உணவுபொருட்கள் வரும் .நேற்று ஸ்ரீ குமாரிடம் கேட்டேன் “சேட்டா அரிசி இருக்கிறதா”என கேட்டேன்.   கஞ்சி குடித்தாவது நாட்களை நகர்த்தலாம் . அவர் “ இறச்சியும் ,மீனும் உண்டு  அரியும் ,கோதம்பும் குறவா” என்றார் .

      இப்போது கப்பலில் இருபத்தியிரண்டு பணியாளர்களும்,மூன்றாம் அதிகாரியின் மனைவி அம்ருதா ஆப்தே உட்பட இருபத்திமூன்று பேர் இருக்கிறோம் . தினமும் மதிய உணவிற்கு மூன்றரை கிலோ அரிசியும்,இரவுணவிற்கு நான்கு கிலோ கோதுமை மாவும்,கோழி கறி குழம்பு அல்லது ஆட்டிறைச்சி குழம்பு என்றால் ஐந்து  கிலோவீதமும்,அதையே பொரித்தால் ஏழு கிலோவும் ,மீன் என்றார் ஐந்து கிலோ,பருப்பு இரண்டு கிலோ அதற்கு தேவையான மசாலாக்கள் ,எண்ணெய் என நீளுகிறது.பாக்கெட்டுகளில் அடைத்த பால்,பழச்சாறு தினமும் ஏழு முதல் எட்டு லிட்டர் வீதம் வேண்டும் .

         தினமும் கடின பணிக்குபின்னரும் முர்சாபூர் ஆலம் உடற்பயிற்சிக்கு கூடத்திற்கு செல்ல தவறுவதில்லை .அவனுக்கு தினமும் குறைந்தது நான்கைந்து முட்டைகள் வேண்டும் காலையில். “தாதா முட்டை தின்னாமல் எனேர்ஜியே இல்ல”என்றான் இன்று .
  இன்று காலை உணவுகூடத்திற்கு சென்றபோது செப் ஸ்ரீ குமார்  பால்பொடியில் ஒரு ‘மில்க் ஷேக்’ செய்து வைத்திருந்தார்.பணியாளர்கள் பிரட் சாப்பிட்டு கொண்டிருந்தனர் ,விக்டர் பன்னை தண்ணீரில் நனைத்து தின்றுகொண்டிருந்தான்.நேற்று மாலை ஸ்ரீ குமார் கொஞ்சம் பன் செய்திருந்தார் . இன்று இரவுணவாக பூரியும்,பட்டாணி கூட்டும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது சோலங்கி என்னிடம் “எனது கப்பல் வாழ்க்கை முடியபோகிறது முப்பதாண்டுகள் பணியில்  இப்படி ஒரு நிலைமை வந்ததே இல்லை” .என்றார் .
  
       செப் ஸ்ரீகுமார் எப்போதுமே அன்போடு சமைத்து,பிறர் நிறைவாக சாப்பிடுவதை பார்த்து மகிழ்பவர் .கடமைக்காக ஒரு நாள் கூட அவர் பணி செய்வதில்லை என்பதை நான் உண்ணும்போது உணர்வேன்.அவர் “சீக்கிரம் இங்கிருந்த செல்லவேண்டும்” என்றார்.உணவு பொருட்கள் குறைந்துவருவதால் அவர் உளச்சோர்வடைந்துள்ளார்.அன்னமிட்ட கை கவலைகொள்வது இயல்பே என எண்ணிக்கொண்டேன் .ஈராக் போர்முனையில் இருந்தபோது போக்குவரத்து தடைபட்டு நாங்கள் உணவு வழங்க சிரமபட்ட நாட்களை நினைத்துகொண்டேன் .

    இன்று மாலையில் வரும் வியாழன் அன்று கப்பல் துறைமுகம் செல்லும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளதாக சொன்னார்கள் .எப்போதுமே இரண்டு மாதத்துக்கான உணவை கையிருப்பு வைத்துகொள்ள வேண்டியது காப்டனின் பொறுப்பு .கடந்த மே மாதம் பத்தாம் தேதிக்குப்பின் கப்பலுக்கு பொருட்கள் வருவதற்கான அனைத்து வழிகளும் தடைபட்டதுதான் காரணம் எங்களது தற்போதைய பற்றாக்குறைக்கு.
ஷாகுல் ஹமீது ,
08 july 2019.
sunitashahul@gmail.com


Saturday, 22 June 2019

தாயை இழந்த சோலங்கி

கப்பல் காரன் டைரி
                        தாயை இழந்த சோலங்கி                 
    கடந்த பத்தாம் தியதி இரவு ஒன்பது மணிக்கு மேல் ஸ்பெயினின் தாராகுணாவிலிருந்து புறப்பட்டோம்.கப்பல் கரையிலிருந்து விலகுகையில்  கதிரணைந்து கொண்டிருந்தது வெண்மேகங்களில்
செங்கதிர்கள் பட்டு செந்நிறத்தில்  இருந்தது .பனிரெண்டு நாள்  பயணத்திற்கு பின் இப்போது அமெரிக்காவின் பிலேதெல்பியா அருகிலுள்ள மார்க்ஸ் ஹூக் துறைமுகத்தை நெருங்கிவிட்டோம் .

இம்முறை பயணம்அதிக கடினமில்லை கடைசி இருதினங்கள் மட்டும் கடும் காற்று வீசியது .நேற்று நாற்பது மைல்வேகத்தில் காற்று வீசியதால் டெக் பணியாளர் யாரும் வெளியில் செல்லவில்லை குடியிருப்பு பகுதியில் பணி வழங்கப்பட்டது அவர்களுக்கு .அதிகாலை நான்கு  மணிக்கு உள்ளூர் பைலட் வந்தபின் காலை பத்துமணிக்கு கப்பல் துறைமுகத்தில் கட்டப்படும் என அறிவிப்பு பலகை சொல்லியது. கப்பல் புறப்பட்டபின் முதல் நான்கு நாள் இணையம் இல்லை .பின்னர் இருதினங்கள் இணையம் வந்தது மீண்டும் இருதினங்கள் இல்லாமலாகியது .

    நேற்று முன்தினம் மாலைமுதல் கப்பலில் இணையம் இல்லை .சில நேரம் நெட்வொர்க் இருக்காது.
(பெரும்பாலான காப்டன்கள் கப்பலுக்கான செய்திகளை இணையம் வழியாக அனுப்பும்போது கப்பல் பணியாளர்களுக்கான இணைப்பை துண்டித்துவிடுவர்.அவரது பணி முடிந்தபின் இணைப்பை கொடுக்காமலே சென்றுவிடுவார் .இரவு தூங்க சென்றால் யாரும் அவரை தொந்தரவு செய்யமுடியாது .காலை அவர் எழுந்து கப்பலின் வீல் ஹவுசிலிருக்கும் இளம் அதிகாரியை அழைத்து கப்பலின் வேகம் ,அலையின் உயரம் ,காற்றின் வேகம் ,கப்பல் போகும் திசை , புயல் அறிவிப்பு பற்றிய செய்திகள் அனைத்தையும் கேட்டறிந்துவிட்டு .பல் தேய்த்து ,மெஸ் மேனை அழைத்து ஒரு சாயா குடித்துவிட்டு,கக்கூஸ் போய் ,குண்டி கழுவிவிட்டு பத்துமணிக்கு மேல் அடுமனைக்குள் வந்து சமையல்காரருக்கு சில உத்தரவுகளை கொடுத்துவிட்டு ,தனக்கு வேண்டியதை செய்யசொல்லி வயிறு நிமிர தின்னுவிட்டு .பைய மேல போய் ரேடியோ அறையில் தனக்குள்ள கணினியில் அன்று வந்திருக்கும் செய்திகளை பார்ப்பார் .பின்னரும் மறந்து பணியாளர்களுக்கான இணைய இணைப்பை இணைக்காமலே மதிய உணவுக்கு செல்லும் கப்பல் தலைவன்களும் உண்டு )

  நேற்று  மதிய உணவின் போது  என்னெதிரில் அமர்ந்திருந்த குஜராத் டீயு நகரில் வசிக்கும் ஐமபத்தி எழு வயதான திலிப்குமார் நதொட் சோலங்கியிடம் .”எல்லாம் மிக சரியாக போகிறதா” என கேட்டேன் . “ஆம் எவரிதிங் ஓகே சாகுல்” என்றார் .மதிய உணவு இடைவேளை முடிந்து பணிக்கு செல்லும்போது உடை மாற்றும் அறையில் காலனி அணிந்து கொண்டிருக்கும்போது  டிமெல்லோ என்னிடம்  “ஷாகுல் சோலங்கியின் தாய் இறந்துவிட்டார்” என்றார் . உடனே சோலங்கியை பார்க்க அவரது அறைக்கு சென்றேன் .அப்போதுதான் லூயி அவரிடம் துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்தார் .
சோலங்கி 
 
தொண்ணூற்றியைந்து  வயதான தனது தாய் இந்திய நேரப்படி காலை ஒன்பது மணிக்கே இறந்துவிட்டார் என்றார் .எங்கள் கப்பலின் கடிகாரம் இந்தியாவைவிட எட்டரை மணிநேரம் பின்னால் இருக்கிறது .கப்பலில் இணையம் இல்லாததால் அவருக்கு தாயின் மரண செய்தி வரவில்லை . இதுபோல் அவசர காலங்களில் எங்கள் நிறுவன அலுவலகத்தில் தகவல் தெரிவித்தால் உடனே கப்பலுக்கு தெரியபடுத்துவார்கள்.

 சோலங்கயிடம் கேட்டேன் “உங்கள் மகனிடம் சொல்லி உடனே மும்பை அலுவலகத்துக்கு தெரிவித்திருந்தால் உடனே கப்பலுக்கு மின்னஞ்சல் வந்திருக்குமே” என கேட்டேன் .மகன் பணிபுரியும் அஹமதாபாத் அலுவலகத்தில் உள் நுழையும்போது செல்போன் உட்பட அனைத்து உடமைகளையும் வைத்து பூட்டிவிட்டு பணி சீருடையில் உள் செல்லவேண்டும் ,எனவே எனது தாய் இறந்த செய்தி மாலை ஐந்து மணிக்குத்தான் மகனுக்கும் தெரியவந்தது என்றார்.
சோலங்கி என்னிடம்  தனது தாய் கடைசிவரை கண் கண்ணாடி அணியவில்லை .ஐந்தாண்டுகளுக்கு முன் கண் கொஞ்சம் மங்கலாக இருக்கிறது என்றபோது .கண் பரிசோதனைக்கு அழைத்தேன் ,இன்னும் கொஞ்ச காலம் சமாளித்து கொள்கிறேன் என்றார் .காது நன்றாக கேட்கும் ஒருகுறையும் இல்லை .இரண்டாண்டுகளுக்கு முன் வரை தானே அருகிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்று வருவார் .கடந்த நான்கு நாட்களாக உணவதும் உட்கொள்ளாமல் படுக்கையிலேயே இருந்துள்ளார் .நேற்று காலை அழைப்பு வந்துவிட்டது அவருக்கு .

  நான் வரும்போது சொல்லிவிட்டு வந்தேன் நான் ஊரில் இருக்கும்போதுதான் உனக்கு மரணம் வரும் என,.நான் நினைத்தது போல நடக்கவில்லையென கண் கலங்கினார் .கருவில் சுமந்து ,முலையூட்டிய அன்னையை கடைசியாக ஒருமுறை காணகிடைக்கவில்லை எனும் பெருந்துயர் அது .

 இரவுணவுக்குப்பின்  எட்டு மணிக்கு முன்பாக சோலங்கியின் அறைக்கு நானும் நீலேஷ் தண்டேலும்  சென்றோம் .நீலேஷ் பணியிலிருந்ததால் அவரை சந்திக்கவில்லை.சோலங்கியின் அறை கதவை தட்டும்போது அவர் துயில தொடங்கியிருந்தார் . .”அதிகாலை மூன்று மணிக்கு பைலட் வருவதற்கான ஏணியை தயார் செய்ய செல்லவேண்டும்,நான்கு மணிக்கு பைலட்” என்றார். .சோலங்கி நீலேசுடன்  குஜராத்தியில்
பேசிக்கொண்டிருந்தார்.என்னிடமும் குஜ்ராத்தியிலேயே பேச ஆரம்பித்தார் அந்த சூழ்நிலையை நன்கறிவதால் அவர்கள் பேசியது எனக்கு புரிந்தது .நீலேசும் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பணிக்கு செல்லவேண்டுமென்பதால் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு வநதுவிட்டோம் .

 பத்து மணிக்கு மேல் துயில சென்றேன் .அதிகாலை மூன்றரைக்கே விழித்து விட்டேன் .பல் தேய்த்துவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றேன்..தேய் நிலவு  கீழ் வானில் இருக்க ,நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தது ,காலை பஜர் தொழுகைக்கு இன்னும் அரைமணிநேரம் இருப்பது உறுதியானது .லேசான அலை இருந்ததால் பைலட் வரும் படகு கப்பலுடன் அருகணைய முடியாமல் தத்தளித்துகொண்டிருந்தது .நெடுநேரம் கப்பலுக்கு இணையான வேகத்தில் வந்துகொண்டே இருந்தது .அலையின் வேகம் குறைந்த தருணத்தில் மிக சரியாக படகு அருகணைந்ததும் அமெரிக்க பைலட் கப்பலின் ஏணி வழியாக மேலேறி வந்தார் .
மென் குரிளிரில் வெப்ப ஆடை அணிந்திருந்த சோலங்கியும் ,லூயியும் ஒரு கயிற்றை படகில் வீசி பைலட்டின் உடைமைகளை மேலேற்றினார்.உக்ரைன் நாட்டின் காடேட் விக்டர் பைலட்டை அழைத்து செல்ல ,லூயி அவரது பையுடன் வந்தார் .இருளில் நின்றிருந்த என்னைக்கண்டதும் “நேரத்தே எழிச்சா”என கேட்டார் .

 இன்றும் கப்பலில் இணையம் இல்லை .பத்து மணிக்கு மேல் மார்க்ஸ் ஹூக் துறைமுகத்தை நெருங்கினோம் பனிரெண்டு மணிக்கு முன்பாக கப்பலின் கயிறுகளை கரையில் கொடுத்து அதற்கான  தூண்களில் கரை பணியாளர்கள் இணைத்ததும் கப்பல் அசையாமல் நின்றது .அதிகாலை நான்கு மணிக்கு வந்த பைலட்டை அழைத்து செல்ல படகு அருகணைந்து கொண்டிருந்தது , ஷ்யாம் தண்டேல் அவரது பைகளுடன் சென்று கொண்டிருந்தான் .குஜராத் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள வல்சாட் கடற்கரை நகரில் வசிப்பவர்கள் தண்டேல்கள் .எல்லா கப்பல்களிலும் ஒரு தண்டேலாவது இருப்பான் .டீயு நகரில் இருப்பவர்கள் சோலங்கிகள் ரமேஷ் சோலங்கி ,மோகன் சோலங்கி என .

 22-june -2019,
ஷாகுல் ஹமீது .
sunitashahul@gmail.com