Thursday, 15 August 2019

விடுமுறை

04 August  2019,
 At sea
கப்பல் காரன் டைரி ,
                               விடுமுறை .

     கப்பல் காரன் பணியில் இணைந்த முதல் நாள் முதல் அவனது பணி ஒப்பந்த நிறைவுநாள் என்று என எப்போதும் அவனது நினைவில் இருக்கும். “உனது காண்ட்ராக் எப்போது முடியும்”என ஒருவர் பிறரிடம் கேட்பதுண்டு. “எனக்கு ஆகஸ்ட், எனக்கும் ஆகஸ்ட், வேறு யாரெல்லாம் ஆகஸ்டில் போகிறார்கள்” என பேசிகொள்வார்கள்.ஐந்தாறு பேராக இருந்தால் நிர்வாகம் உறுதியாக அனுப்பிவிடும்.ஆனால் டாப் ஐந்தில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது ஒற்றையாளாக இருந்தாலும் நிர்வாகம் அனுப்பிவிடும் .நானும் மூன்று முறை ஒற்றை ஆளாக பணியில் சேரவும் ,பணி நிறைவு செய்து விடுமுறைக்கும் சென்றுள்ளேன் .

   கப்பலில் காப்டன்,முதன்மை இஞ்சினியர்,முதன்மை அதிகாரி,இரண்டாம் இஞ்சினியர் ,எலக்ட்ரிகல் அதிகாரி ஆகியோர் டாப் ஐந்தில் வருவார்கள் .அவர்களது பணி ஒப்பந்த காலம் நான்கு மாதங்கள்.இரண்டாம் அதிகாரி ,மூன்றாம் அதிகாரி,பயிற்சி அதிகாரி (காடேட்),மூன்றாம் நிலை இஞ்சினியர் ,நான்காம் நிலை இஞ்சினியர்,பயிற்சி இஞ்சினியர் ஆகியோர் இளைய அதிகாரிகள் வரிசையில் வருவார்கள் அவர்களது பணி ஒப்பந்த காலம் ஆறு மாதங்கள் .பிட்டர்,தலைமை சமையல்காரர் ஆகியோருக்கு எழு மாதங்கள் .இயந்திர அறையில் பணிபுரியும் மோட்டார் மேன் ,அடுமனையில் பணிபுரியும் மெஸ் மேன்,டேக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர் (போசன்)மற்றும் மாலுமிகளுக்கு ஒன்பது மாதம் பணி ஒப்பந்தகாலம் . ஒன்பது மாதம் கொஞ்சம் அதிகம்தான்.அனைவரின் பணி ஒப்பந்தகாலம் ஒரு மாதம் கூடுதல் அல்லது குறைவு என எழுதியிருக்கும்.(உதாரணமாக 7 months +/- 1 )

   கப்பலில் பணியைவிட  உடன் பணிபுரிபவர்களும்,உயர் அதிகாரிகளும் கொஞ்சம் நல்லவர்களாக இருந்தால் .எந்த கடின பணியும்,அசாதரண சூழ்நிலையும் எளிதாக கடந்து செல்லும் .கப்பலில் பணி ஒப்பந்தம் முடிவதற்கு ஒரு மாதம் முன்பே விடுமுறை கடிதம் எழுதிகொடுக்க வேண்டும்.விடுமுறை கடிதம் எழுதி கொடுத்தபின் சில சமயங்களில் பதிலேதும் வராது .கப்பல் தலைவன் காப்டன் பலமுறை நினைவூட்டல் அனுப்பினால் மட்டுமே அலுவலகம் ஆம் அடுத்த துறைமுகத்தில் ஏற்பாடு செய்கிறோம் என தகவல் வரும்.கப்பல் காரனுக்கு ஊருக்கு செல்லும் தேதி வந்தபின் விமானத்தை தவறவிடுதல்,கைப்பையை மறத்தல்,விமானம் தண்ணீரில் இறங்குதல் போன்ற கனவுகள் வரும் .அது தான் ஊருக்கு செல்கிறோம் என்பதன் உறுதி .

  டாப் ஐந்தில் உள்ளவர்களுக்கு எப்போதுமே மாற்று ஆள் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.கப்பல் துறையில் நூற்றியைம்பது ஆண்டுகள் பழமையான நார்வேயை தலைமை இடமாக கொண்டு இயங்கும் எனது நிறுவனம் .கோலாலம்பூர் ,சிங்கப்பூர் ,கொரியா,அமெரிக்கா என பல நாடுகளில் கிளை அலுவகங்களை கொண்டு  கப்பல்களை இயக்குகிறது.எனது நிறுவனத்திற்கு சொந்தமாக நூறுக்கு மேற்பட்ட கப்பல்களும், பிற நிறுவன கப்பல்கள் நூற்றி எண்பத்தி ஐந்து என முன்னூறு கப்பல்களை எனது கப்பல் நிறுவனம் இயக்குகிறது .நான் பணிபுரியும் கப்பல் ஜப்பனியாருக்கு சொந்தமானது.இந்த கப்பலை இயக்குவதற்காக குறிப்பட்ட தொகையை அந்த ஜப்பானியர் எனது நிறுவனத்திற்கு அளிப்பார்.கப்பலில் அவரே சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியை செய்வார் அல்லது வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்பையில் கப்பலை வாடைக்கு விட்டு குறிப்பட்ட தொகையை பெற்றுக்கொள்வார் .எனக்கு கப்பலின் சொந்தகாரை தெரியவே செய்யாது .

   நான் இப்போது இருக்கும் கப்பல் இயங்குவது கோலாலம்பூர் அலுவலகம் .கப்பலிலிருந்து ஒருவர் விடுமுறை கடிதம் கொடுத்ததும் கப்பல் தலைவன் அதை கோலாலம்பூர் அலுவலகத்திற்கு அனுப்புவார் .அவர்கள் யார்,யார் விடுமுறையில் உள்ளார்கள் என்பதையும்,அடுத்து பணிக்கு செல்ல தயாராக இருப்பவர்களின் பட்டியலை,மும்பை,மணிலா,கொழும்பு ,ஒடிசா(உக்ரைன்) ரஷ்யா,டாக்கா,பாங்காங் போன்ற அலுவலகங்களில் பெற்று உரிய பணியாளரை தேர்வு செய்வார் .
குறிப்பாக டாப் நான்கில் வருபவரை,கப்பலின் கண்காணிப்பாளர் (vessel manager) தனிப்பட்ட முறையில் தேர்வு செய்வார் .சில உரிமையாளர்கள் டாப் நான்கில் வரும் காப்டன் ,முதன்மை பொறியாளர்,முதன்மை அதிகாரி,இரண்டாம் பொறியாளரை தொலைபேசியில் அல்லது காணொளி மூலம் தேர்வு நடத்தியபின்னரே ஒப்புதல் அளிப்பார்.தனது கப்பலுக்கு திறமையான உயரதிகாரியை நியமிக்கவே அவர் விரும்புவார் .கீழ் நிலையில் உள்ள பணியாளர்களுக்கு அலுவலகம் அளிக்கும் நற்சான்றிதழ் மட்டும் போதும் .எனக்கான மாற்று பணியாளரை மும்பை அலுவலகம் தேர்வு செய்தபின் அவர் வசிக்கும் ஊருக்கு அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் சென்று (மும்பை,சென்னை கொச்சி,கொல்கொத்தா,தில்லி) மருத்துவ பரிசோதனையும்,உரிய சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு,பயணதேதியில் விமான சீட்டை பெற்றுக்கொண்டு கப்பல் நிற்கும் நாட்டிற்கு பயணித்து பணியில் இணைந்து கொள்ளவேண்டும் .

   கப்பல் காரனின் விடுமுறை தடைபடும் காரணங்கள் சுவராசியமானவை. கப்பல் துறைமுகம் சென்று சேரும் நாளை மிகச்சரியாக காப்டன் கணித்து அலுவலகத்திற்கு தெரியபடுத்தவேண்டும்.பல நேரங்களில் கப்பல் துறைமுகத்தில் கரையணைவதை யாராலும் கணிக்க இயலாது.கடந்த மாதம் இரண்டாம் தேதி போர்ச்சுகல் நாட்டின் சயன்ஸ் துறைமுகம் சென்ற நாங்கள் கரையணைய முடியாமல் பதினைந்து நாட்கள் காத்திருந்தோம்.எங்கள் கப்பல் செல்ல வேண்டிய துறைமுகப்பில் வேறு கப்பல் கட்டப்பட்டு சரக்குகளை இறக்கிக்கொண்டு இருந்தது .அந்த சரக்கு இறக்கும் பணி எப்போது முடியும் என்பதை துறைமுக நிர்வாகம் எங்கள் முகவருக்கு தெரிவிக்கும் .அவர் கப்பலுக்கு தகவல் அளிப்பார்.இன்று,நாளை என சில நேரங்களில் ஒரு மாதங்களுக்கு மேல் கப்பல்கள் கரையணைய காத்திருக்கும்.விடுமுறைக்கு செல்ல இருப்பவர் தினமும் காலை இன்று செல்வோம் ,இன்று செல்வோம் என உள சிக்கலுக்கு ஆளாகிவிடுவார் .

   பணிக்கு செல்ல தேர்வான பணியாளர் மருத்துவப்பரிசோதனையில் தோல்வி அடைந்தால்,வேறு பணியாளரை தேடிப்பிடித்து அவருக்கு  மருத்துவசோதனையும் ,பிற சான்றிதழ்கள்,ஒரு நாட்டில் உள் நுழையும் அனுமதி சீட்டு (visa)என அனைத்தும் தயாராகும் வரை கப்பல் துறைமுகத்தில் நிற்கும் காலஅவசாகம்  இருக்குமெனில் மட்டுமே அவர் கப்பலில் இணைந்து மற்றவரை விடுவிக்க இயலும்.இவை எல்லாம் மிக சரியாக நடந்து கப்பலுக்கு செல்லும் பணியாளர் விமானத்தை தவறவிட்டால் ,கப்பல்காரனின் விடுமுறை தள்ளிபோகும் .விமானத்தை,விமான நிறுவனம் ரத்து செய்தல்,இயற்கை  சீற்றம்,விமானத்தில் ஏற்படும் கோளாறு ,விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாதல் ,விமான நிலையம் செல்லும்போது ஏற்படும் வாகன நெரிசல்,விமான பயணத்திற்கு முன் பயணிப்பவரின் நெருங்கிய உறவில் ஏற்படும் இறப்புகள் போன்றவை காரணிகள்.

 இருநாடுகளுக்கு இடையில்  அரசியல் காரணங்களால் இணக்கமில்லாமல் இருந்தால் .இரு நாட்டவரும் எதிர் நாட்டில் உள் நுழையும் அனுமதி கிடையாது.பங்களாதேசி மாலுமிகள் கப்பலிலிருந்து சிங்கப்பூரில் இறங்கவோ ஏறவோ முடியாது.இலங்கையை சார்ந்தவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவின் டோகோ நாட்டில் அனுமதி இல்லை .  விமான நிலையம் சென்றபின் தான் சில நேரங்களில் சிங்கப்பூர் போன்ற நாடுகளின்  அனுமதி சீட்டை அங்குள்ள முகவர் அனுப்பித்தருவார்.விமானம் கிளம்பும் கடைசிநிமிடம் வரை காத்திருந்து வராமல் வீட்டிற்கு திரும்பி சென்ற நிகழ்வுகள் உண்டு .இரண்டாயிரத்தி ஒன்று செப்டம்பர் பதினொன்றாம் தேதி இரட்டை கோபுரம் தாக்கப்பட்டபோது ,அமெரிக்கா சென்ற அனைத்து கப்பல்களும் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது .யாரும் கப்பலுக்குள் உள் நுழையவும் வெளியே செல்லவும் அனுமதி இல்லாமல் .பணிக்கு சேர அமெரிக்கா வரை பயணித்தவர்கள் தங்கள் தயாகத்திற்கு திரும்பி சென்றனர்.இலங்கையின் காலே ஒரு முக்கியமான  முனை.வளைகுடா நாடுகளுக்கும் ,வளைகுடாவில் இருந்து சிங்கப்பூர்,ஜப்பான் செல்லும் கப்பல்கள் அனைத்தும் இவ்வழியாக செல்வதால் இலங்கையில் அதிகமான மாலுமிகள் பணிநிறைவு செய்து இறங்கவும்,பணிக்கு சேரும் பொருட்டு கப்பலில் ஏறும் செயல் நடைபெற்றுவந்தது .உயிர்தெழுந்த நாள் தாக்குதலுக்கு பின் எங்கள் நிறுவனம் அதை ரத்து செய்துள்ளது .

    வீட்டிலிருந்து புறப்பட்டு இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி வெற்றிகரமாக கப்பலுக்கு சென்று சேர்ந்தபின் தான் ஊருக்கு செல்பவரின் விடுமுறை பயணம் உறுதியாகும். “யப்பாட ரிலிவர் ஆன்போர்ட்”என ஒரு நிம்மதி வரும் .கப்பலுக்கு வந்தவன் கப்பல் பயணத்திற்கான  சான்றிதழ் எதையாவது மறந்துவிட்டு வந்திருந்தால் அவர் ஊருக்கு திரும்பி செல்வார் .விடுமுறைக்கு செல்பவரை விமான நிலையத்திலிருந்து திருப்பி அழைத்து அழைத்து வந்த நிகழ்வுகள் பல.தற்போது எனது நண்பர் பெசில் அவர் பணிபுரியும் கப்பலில் தனது பணிஒப்பந்த காலத்தை சில தினங்களுக்கு முன் நிறைவு செய்துள்ளார் .விடுமுறை விண்ணப்பம் முன்பே கொடுத்துவிட்டார்.அந்த கப்பலில் இருந்து மொத்தம் பதினாறு பேர் விடுமுறைக்கு செல்லவேண்டும் .அப்படி மொத்தமாக அனைவரையும் கப்பலிலிருந்து இறக்குவது கடினம் .கப்பல் இப்போது சீனாவில் கரையணைய இருக்கிறது .பத்துபேருக்கு நாட்டின் உள் நுழைந்து வெளியேறும் அனுமதி விண்ணப்பித்ததில் சிலருக்கு அனுமதிமறுக்கப்பட்டும்,ஒருவர் மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்ததாலும்.ஊருக்கு செல்ல வேண்டிய சிலரின் விடுமுறை ரத்தாகியுள்ளது.சீனாவில் இருந்து கப்பல் சிங்கப்பூர் வழியாக வந்தால் நண்பர் பெசில் உட்பட மீதமுள்ளவர்கள் விடுமுறைக்கு செல்லலாம் .நண்பர் பெசில் சொன்னார் “தலைவரே கப்பல் சிங்கபூருக்கு போவாம நேரே பனாமா நாட்டிற்கு  போச்சுதுன்னா இன்னும் இருபத்தி ஐந்து நாட்கள் கப்பல்ல இருக்கவேண்டும்”என்றார் .

           இம்முறை ஆகஸ்ட் முப்பத்தி ஒன்றாம் தேதி எனது பணி(ஏழு மாதங்கள்) ஒப்பந்தம் நிறைவுபெறுகிறது.பொருளாதரா சிக்கல்களும்,வருட இறுதியில் விஷ்ணுபுர விழாவும்,பண்டிகைகளும் இருப்பதால் இம்முறை இரண்டுமாதம் பணி நீட்டிப்பு கேட்டு ,அக்டோபர் இறுதியில் என்னை விடுவிக்குமாறு கோரியிருந்தேன்.இரு தினங்களுக்கு முன் காப்டன் என்னிடம் “ஷாகுல் உன்னை விடுவிக்க அலுவலகம் தகவல் அனுப்பியுள்ளது”என்றார். “எப்போது” என கேட்டேன். “வரும் எட்டாம் தேதி அமெரிக்காவில் இருந்து”என்றார் .இங்கிருந்து நான்குபேர் செல்கிறார்கள் அவர்களுடன் எனது பெயரும் வந்துள்ளதாக சொன்னார்.எனது பணி ஒப்பந்தப்படி ஆறு மாதம் முடிந்தபின் நிறுவனம் எப்போது வேண்டுமாலும் என்னை விடுவிக்க முடியும். இம்முறை நான் எண்ணியதுபோல்  இருமாதங்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .
  உடன் பணிபுரியும் நண்பர்கள் எல்லாம் நன்மைக்கே.உண்மையில் உனக்கு விடுதலை என்றனர்.இந்த கப்பலில் காப்டன் அரசியல் காய்நகர்த்தலில் (சகுனியின் செயலாளர் )கணிகர் என பெயர் பெற்றவர். யாரும் சந்தோசமாக இருந்தால் அவருக்கு பிடிக்காது .கப்பலின் அனைத்து சிறு விஷயத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.ஞாயிறு மாலைகளில் மட்டைபந்து விளையாடி,அவர் அதில் தோல்வி அடைந்தால் அடுத்த ஞாயிறு வரை அந்த வஞ்சத்தை மனதில் வைத்திருப்பார்.சில தினங்களுக்கு கப்பலின் இணையத்தை அணைத்தும் வைத்திருப்பார். அதனாலேயே எதிரணியில் விளையாடுபவர்கள் வேண்டுமென்றே தோல்வி அடையும் கூத்தும் இங்கு நடக்கும்.வரும் ஏழாம் தேதி கப்பல் கரையணைந்தால்,எட்டாம் தேதி மாலை விமானம் பத்தாம் தேதி அதிகாலை வீடு,பனிரெண்டாம் தேதி பக்ரீத் பண்டிகக்கு குடும்பத்துடன் இருக்கலாம் என இருந்தேன் .
 
   இப்போது கப்பலை நிறுத்திவிட்டோம் .கப்பல் கரையணைவது,ஏழு,எட்டாகியது,இன்று ஒன்பதாம் தேதி ஆகிவிட்டது.ஒன்பதாம் தேதி கப்பல் கரையணைந்தால்.பத்தாம் தேதி மாலை நண்பன் யோகேஷ்வரனின் இரண்டாவது சொந்த ஊரான அமெரிக்காவின் பிலே டெல்பியாவிலிருந்து கத்தார் ஏர்வேஸின் விமானத்தில் பயண சீட்டு கிடைத்தால் மட்டுமே பனிரெண்டாம் தேதி அதிகாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்து பக்ரீத் பண்டிகைக்கு குடும்பத்துடன் இருக்க முடியும்.இல்லையெனில் எனது பண்டிகை நாள் விமானத்திலோ அல்லது விமானநிலையத்திலோ இருக்கும். கடந்த ஆறு ஆண்டுகளாகவே பக்ரீத் பண்டிகை நாளில் கப்பலிலேயே இருக்கிறேன்.இம்முறை இறைவன் நாடினால் .(இன்ஷா அல்லாஹ் )

ஷாகுல் ஹமீது .

Saturday, 10 August 2019

விடுமுறை உறுதியாதல்



கப்பல் காரன் டைரி
                             விடுமுறை உறுதியாதல்
கடந்த விடுமுறை பதிவை படித்த நண்பர் சிவமணின்,”உங்களுக்கு லீவ் கிடைப்பது கஷ்டமா?”என கேட்டார் .என்னுடன் முதல் கப்பலில் பணிபுரிந்த எலெக்ட்ரிகல் இஞ்சினியர் சேலம் பாலா. “ஹமீது கப்பலில் இருந்து ஊருக்கு செல்லும் முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சியாயின,இதன் தொடர்ச்சி எப்போது” என கேட்டார்.நானும் கடந்த பதிவை எழுதி முடித்தபின் நினைத்தேன் .இதன் தொடர்ச்சி எழுதவேண்டுமென.


 என்னை விடுவிக்க பாட்டக் ரவீந்திரன் தில்லியிலிருந்து புறப்பட்டு இன்று மாலை கப்பலுக்கு வந்துசேர்ந்துவிட்டார்.எனது விடுமுறை உறுதியாகிவிட்டது,நான் நினைத்தது போலவே பத்தாம் தேதி இரவு கத்தார் எயர்வேஸ் விமானத்தில் புறப்பட்டு திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்துசேர்வேன் .காலை பெருநாள் தொழுகைக்கு செல்லமுடியும் நீண்ட நாட்களுக்கு பின் குடும்பத்துடன் பண்டிகை .என்னுடன் ஊருக்கு வரும் மூன்றாம் இஞ்சினியருக்கு பதிலாக வருபவர் மதுரை வீரன் ஜீத்து சூர்யா ,மதுரை தபால் தந்தி நகரை சார்ந்தவர் .கொச்சியிலிருந்து ஒன்பதாம் தேதி இரவு விமானம் அவருக்கு.மதுரையிலிருந்து புறப்பட்டு கொச்சி அலுவலகம் சென்று விமான சீட்டு ,சான்றிதழ்கள்,கப்பலில் இருப்பவர்களுக்கு சில பொருள்கள் ,மருத்துகள் அனைத்தையும் பெற்றுகொண்டு அதிகாலை மூன்றரைக்கு புறப்படும் விமானத்தில் ஏறுவதற்கு வானூர்தி நிலையம் சென்றபோது தொடர்மழை காரணமாக கொச்சி விமானநிலையம் மூடப்பட்டிருந்தது.அவசர எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டு விடுதியில் தங்கினார்.

அவரது விமானம் ரத்தானதில் கப்பலிலிருந்து ஊருக்கு செல்லும் அமித் கவலையுடன் இருந்தார்.வெள்ளிகிழமை காலை அலுவலகம் சென்று திருவனத்தபுரம் வழியாக பிலேடெல்பியா செல்லும் எதிகாட் விமான சீட்டை பெற்றுகொண்டு ,காரில் மீண்டும் திருவனத்தபுரம் சென்று விடுதியில் தங்கிவிட்டு அதிகாலை நான்கு மணி விமானத்தில் ஏறிவிட்டார் .கப்பல் ஞாயிறு காலை பதினோரு மணிக்கு புறப்படுவதால் அவர் வந்து கப்பலில் இணைந்து கொள்ள முடியும் .எந்த சிக்கலும் இல்லை .அவர் சனிகிழமை இரவு வந்து சேருவார் .நாங்கள் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு புறப்பட்டு இரவு ஒன்பது மணி விமானத்தில் ஏறுவோம் .கப்பல் துறைமுகத்திலிருந்து முன்னரே புறப்படுவதாக இருந்தால் .மூன்றாம் இஞ்சினியர் அமித்தின் விடுமுறை ரத்தாகி அடுத்த நாற்பது நாட்கள் கப்பலில் தான் இருக்க வேண்டும்.

   கடந்த  சில நாட்களாக கடும் பணி கூடவே கடும் வெப்பமும் .கடல் நீரின் வெப்பம் இருபத்தி ஒன்பது பாகையும்,இயந்திர அறை நாற்பது பாகைக்குமேல்.இப்போது அமெரிக்காவில் கோடைகாலம் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெப்பம் அதிகம் .புதன்கிழமை காலை கப்பலுக்கு வருடாந்திர தணிக்கை செய்ய தணிக்கையாளர் வருகிறார் என  தகவல் வந்தது  வெள்ளிக்கிழமை கப்பல் துறைமுகத்தில் கரையணையும் போது தணிக்கை செய்யும் அதிகாரி கப்பலில் இருப்பார் அதற்காக கப்பலை தயார் செய்யவேண்டும்.எதிர்பாராத சில பணிகள் காரணமாக கப்பலை சுத்தபடுத்தும் பணிகள் தாமதமாகிக்கொண்டே போனது.புதன்கிழமை காலை பத்துமணிக்கு தேநீர் இடைவேளைக்கு முன் ஜெனரேட்டர் ஒன்றின் டர்போ சார்ஜர் ஒன்றுஎண்ணை ஒழுகியதை கோபகுமார் பார்த்துவிட்டார் .சரியான நேரத்தில் கண்டதால் ஒரு தீ விபத்து தவிர்க்கப்பட்டது.உடனே அதை கழற்றி வேறு ஒன்றை மாற்றினோம் ..
  அன்று மாலையே நீராவி குழாய்கள் இரண்டில் ஒழுகல் அதையும் சரி செய்து முடிக்கையில் இரவு ஒன்பது மணி நேற்று வியாழக்கிழமை துறைமுகம் அருகில் நங்கூரமிட்டு கப்பலை நிறுத்தி கப்பலுக்கு எண்ணை நிரப்பினோம்.மாலை மூன்று மணிவரை .பின்னர் மூன்று மணிநேரம் ஓய்வு ,இரவு ஏழுமணி முதல் பத்து மணிவரை மீண்டும் பணி . வெள்ளிக்கிழமை காலை எட்டுமணிக்கு தணிக்கை செய்யும் அதிகாரி வருவதால் அதிகாலை ஆறுமணிக்கே பணிக்கு சென்றோம்.
கடைசி சில தினங்கள் சரியான தூக்கமும்,ஓய்வும் இருக்காது.இரு தினங்களுக்கு முன் காலை மூன்று மணிக்கு கோபகுமார் கடும் வயிற்று வலியால் ஒருமணி நேரம் அவதிப்பட்டுள்ளார் .பின்னர் சிறுநீர் கழிக்கையில் வலியுடன் ரத்தமும் வந்தது .சிறுநீரகத்தில் கல் அது வெளியே வருகையில் ரத்தமும் வந்துள்ளது .மாலையில் மீண்டும் சிறுநீர் கழிக்கையில் சிறு கல் ஒன்று வெளிவந்ததை கழிப்பறையினுள் கையால் எடுத்துவிட்டார்.கடும் பயத்தில் இருக்கிறார் .கப்பல் இங்கிருந்து கொரியா செல்லவிருக்கிறது மொத்தம் ஐம்பது நாள் பயணம் .கப்பலுக்கு வருபவர்களிடம் மருந்து கொடுத்துவிட சொல்லி தனது மனைவியிடம் சொன்னார்.துறைமுகம் சென்றதும் மருத்துவமனை சென்று சோதிப்பதுநன்று என சொன்னேன் .
 அவர் மருத்துவமனை சென்று கற்கள் இருப்பது தெரியவந்தால் அவரை வீட்டிற்கு அனுப்புவதை தவிர வேலு வழியில்லை.அதனால் என்னை அடுத்த துறைமுகம் வரை இருக்க சொல்வார்கள் என கவலை வந்தது .கோபகுமார் இன்று சனிக்கிழமை மருத்துவமனை போய் வந்தார்.மருந்துகள் சில கொடுத்துள்ளனர் .நான் இன்னும் பத்து நிமிடத்தில் கப்பலில் இருந்து இறங்கி பிலே டெல்பியா விமான நிலையம் செல்கிறேன் .இரவு ஒன்பதரைக்கு புறப்பட்டு பதிமூன்று மணிநேர பயணத்திற்கு பின் நாளை மாலை தோஹா .அங்கிருந்து இரவு அடுத்த விமானம் திருவனந்தபுரத்திற்கு .அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருப்பேன் . வழக்கமாக ஊருக்கு செல்லும் முன் இரவுகள் தூக்கமின்றி கழியும் . நீண்ட பயணத்திற்கு பின் ஊருக்கு சென்று சேர்க்கையில் நேர வித்தியாசம் காரணமாக முதுகு வலியும் உடல் சோர்வும் இருக்கும் நன்றாக துயில ஒரு வாரமாகும்.
என் எண்ணத்தை இறைநிலை  நிறைவேற்றிியுள்ளது .விமான பயணத்திலும் ஏக இறைவன் துணை புரிவானாக .
ஷாகுல் ஹமீது ,
10 aug மற்றும்.