இந்த பிரபஞ்சம் காரிருள்.இருளில்தான் வெளிச்சம்புகும் .பூமி நில்லாமல்
சுழன்றுகொண்டே இருப்பதால் கதிரரொளி படும் பூமி பந்தின் ஒருபகுதி வெளிச்சமகாவும் மறுபுறம்
இருளாகவும் இருக்கும் .இருளே நிரந்தரம்,அதுவே மூலம்.கதிரொளி புகுந்து இருள் விலகும் அந்த வைகறை வெளிச்சம் பேரழகு . இயற்கையை
ரசிக்காதவர் யார்தான் இல்லை .குறிப்பாக கதிரெழுவதும்,அணைவதும் அழகின் உச்சம் . .
பள்ளி நாட்கள் முடிந்தபின் நானும்
நண்பன் ராஜாவும் பல மாதங்கள் தொடர்ந்து சின்னவிளை கடற்கரையிலிருக்கும் குருசு பாறையில்
இருந்து கதிரணைவதை பார்ப்போம் .நவம்பர்மாதம் முதல் பிப்ரவரி வரையில் சூரியன் மாலை ஐந்தரைக்கெல்லாம் குங்கும நிறத்தில் மாறி,பின்னர் மெதுவாக கீழிறங்கதொடங்கி கடலுக்குள்
மூழ்குவது வரை அமர்ந்திருப்போம் அதனருகே சில கப்பல்களும் செல்லும் .அப்போது
தெரியாது கப்பலில் இதே பாதையில் பயணிப்பேன் என .ஒரு மாதம் தொடர்ந்து கதிரணைதலை
தொடர்ந்து பார்த்தால்.வித விதமான காட்சிகள் காண கிடைக்கும் .மூடி வைத்த தண்ணீர்
மண் பானை போல .முட்டையின் கூம்பிய மேற்பகுதி உடைந்தது போல,குண்டு பல்பு மாதிரி,கதிரணைந்த
பின்பும் கதிரவனின் செங்கதிர்களை தக்க வைத்திருக்கும் ,முகில்கூட்டங்கள் என .
இரண்டாயிரத்தி பதினான்காம்
ஆண்டு ஜெயமோகன் அவர்களின் தளம் அறிமுகமாகி ,நான் வாசிப்பது இலக்கியம் என உணர தொடங்கியபின்,கற்பனையில்
விரிந்த காட்சிகளை காண்கையில் இத்தனை நாள் நான் இயற்கையை சரியாக பார்க்கவில்லை
என்றே தோன்றிற்று.இலக்கிய வாசிப்புக்கு பின்பு நான் காணும் இயற்கையும், கதிரெழுதல்,கதிரணையும்
காட்சிகளும் பேரழகு .
கதிரெழுதல் அபூர்வ காட்சி |
கப்பலுக்கு தேவையான எரிபொருள்
நிரப்புவதை பங்கர் என்போம்.துறைமுகத்தில் கப்பல் கட்டியிருக்கும் போது அல்லது
நங்கூரம் பாய்ச்சி நிற்கும்போது தான் பங்கர் எடுப்போம்.எண்ணெய் நிறைத்து வரும்
சிறிய கப்பலை எங்கள் கப்பலுடன் இணைத்து
கட்டியபின் சிறிய கப்பலின் குழாயை எங்களின் இரும்பு குழாயில் பொருத்தி பிரமாண்டமான
எரிபொருள் தொட்டிகளில் நிரப்புவோம் .ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் ஏற்றினால்
கார்களை ஏற்றும் கப்பல் ஒரு மாதம் நிற்காமல்
பயணிக்கும் .ஒரு நாளின் எரிபொருள் செலவு
முப்பதிலிருந்து,முப்பத்தைந்து டன்.
ஆயிரம் மெட்ரிக் டன்கள் நிறைக்க குறைந்தது எட்டு மணிநேரமாகும்.என் பணி பங்கர் துவங்கியது முதல்
முடிவதுவரை இரு கப்பல்களின் குழாய்கள் இணைக்கபட்டிருக்கும் இடத்தில் நின்று
கண்காணிப்பதும் ,முதன்மை இஞ்சினியருக்கு ரேடியோ மூலம் பதினைந்து நிமிட இடைவெளியில்
தகவல் சொல்வதும் .கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் பிலேடெல்பியா அருகில் உள்ள மார்க்ஸ்ஹூக் துறைமுகத்தில்
நள்ளிரவு கப்பலுக்கு எண்ணை நிரப்பும் பணி தொடங்கியது.வெப்பம் இருபது பாகைக்கும்
குறைவாக இருந்ததால் மென்குளிர் . என்னுடன் இருந்த நீலேஷ் தேநீர் அருந்த
சென்றுவிட்டான். அப்போது கிடைத்த தனிமையில் வானை நோக்க ஆரம்பித்தேன் .கதிரெழும்
நேரம் ஆறுமணிக்கு மேல்.,நான்கரை மணிக்குமேல் கதிரெழும் எதிர்திசையில் வெண்ணிலாவும் ,அதன்
கீழே விடிவெள்ளியும் ,அதிகாலை பஜர் தொழுகைக்கான நேரம் அது. அதன் பின் மெதுவாக ,மிக
மெதுவாக வானின் இருள் விலகத்தொடங்கும் ,செங்கதிர்கள் எழுவதற்கு முந்தையை வெளிச்சம்
அது .
விழிவிரித்து மிக பொறுமையாக
பார்த்துக்கொண்டே இருந்தால் ஒவ்வொரு வினாடியிலும் அதிகாலையின் அழகு மாறிக்கொண்டேயிருக்கும்.செங்கதிர்கள்
எழும்நேரம் நான் பார்த்துகொண்டிருந்த அன்று தூரத்தில் நீண்ட பாலம் ,அதில்
ஊழ்கத்திலென வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன.தலைக்கு மேலே அந்த
பாலத்தை தொட்டுவிடுமோ என விமானங்கள் பத்து நிமிடங்களுக்கு ஒன்று என இறங்கிகொண்டே
இருந்தது .இறங்க எத்தனிக்கும் விமானங்கள் பல வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது
.தினமும் இத்தனை பேர் விமானத்தில் எங்கு தான் பயணிக்கிறார்களோ என ஒரு எண்ணம்
தோன்றி மறைந்தது.செங்கதிர்கள் எழுந்தபின் இருள் முழுமையாக விலகி ,செவ்வானம்
காட்சியாகும் .இப்போது எதிர் திசையில் வெண்முகில் கூட்டங்களில் செங்கதிர்கள் பட்டு
புதிய காட்சியை விரித்திருக்கும் .இருளில் மறைந்திருத மரங்கள் நிழல்கள் என
துலங்கதொடங்கும்,குஞ்சுகளுக்கு இரைதேடிச்செல்லும் பறவைகள் ஒலியை எழுப்பியபடி அன்றைய நாளை துவக்கும் நேரம் ,கதிரவன் இப்போது ,வருவான் ,இப்போது வந்துவிடுவான் என அகம் பொறுமை
இழக்கும் . ஒவ்வொரு வினாடியிலும் காட்சி மாறிக்கொண்டே இருப்பதால் ,முந்தைய
வினாடியின் காட்சி பின்பெப்போதும்
கிடைக்காது .இரையை எதிர்பார்த்து தாயின் வரவை நோக்கி காத்திருக்கும் குஞ்சு
கூட்டிலிருந்து மெதுவாக எட்டிபார்ப்பதுபோல் மிக மெதுவாக கதிரவன் வானில்
எட்டிபார்ப்பான் .கதிரெழும் நேரமது .அப்போது வானம் முழு வெளிச்சம் நிறைந்திருக்கும் கதிரவன் மட்டுமே ஆரஞ்சு
நிறத்தில் காட்சி தருவான்.கதிரெழுவதற்கு முன் செங்கதிர்கள் நிறைந்திருப்பதுவரைதான்
அழகு .
கதிரெழுந்தபின் மிக வேகமாக கதிரவன் வெளியே வந்து முழு வெளிச்சம் பரவியபின் அழகின்மையையே
உணர்ந்தேன்.கப்பல் காரனுக்கு இது நல்ல வாய்ப்பு கடல் மட்டத்திலிருந்து எப்போதும்
இருபது முதல் முப்பது மீட்டர் உயரத்தில் இருந்து காட்சிகளை காணும் வாய்ப்பு .மின்
விளக்குகள் இல்லாத உயரமான இடம்,கடற்கரை
பகுதிகள்,மலையுச்சிகள் கதிரெழுவதை காண உகந்த இடங்கள் .கன்னியாகுமரி அருகில்
பொத்தையடி எனும் ஊரில் உள்ள மருந்துவாழ் மலையிலிருந்து கதிரெழும் காட்சியை
வாய்ப்புள்ள நண்பர்கள் முயற்சிக்கலாம் .
ஷாகுல் ஹமீது ,
25 july 2019 .
sunitashahul@gmail.com