Sunday, 3 September 2017

இணையம் இல்லை

நான் தற்போது இருக்கும் கப்பலில் இணைய வேகம் போதுமானதாக இல்லாததால் என்னால் எந்த பதிவையும் வலையேற்ற இயல வில்லை .வலையேற்றம் செய்ய முடியாது என்ற மனநிலையே பெரிதாக எதையும் எழுதவும் இல்லை .
  விரைவில் முன்பு போல் நல்ல கட்டுரைகளுகடன் வருவேன் .
ஷாகுல் ஹமீது
04-sep-2017

Saturday, 8 April 2017

பாஸ்ட் ட்ராக் –ன் சேவை மோசடி

              பாஸ்ட் ட்ராக் –ன்  சேவை மோசடி
      கடந்த 2 ம் தியதி  ஞாயிற்றுகிழமை  உறவினர் திருமணதிற்கு குடும்ப உறுப்பினர்கள் திருவனந்தபுரம் செல்ல வேண்டி இருந்தது.          நாகர்கோயில் பாஸ்ட் ட்ராக் ஐ அழைத்து ஒரு ஏ.ஸி  தவேரா கார் வேண்டுமென கேட்டேன் .

     ஏ.ஸி இல்லாமல் 2310 ரூபாயும் ,ஏ.ஸி காருக்கு 2470 ரூபாயும் என  அங்கு பணியிலிருந்த பெண் கூறினாள்(6 மணிநேரத்திற்கு மட்டும்) .ஏ.ஸி தவேரா காரை அனுப்பிவைக்கும்படி சொன்னேன் .

    குறிப்பிட்ட நேரத்தில் மாலை நான்கு மணிக்கு கார் வந்தது பெண்களும் ,குழந்தைகளும் புறப்பட்டு சென்றனர் .மறுநாள் 3 ம் தியதி திருமணதிற்கு செல்ல வேண்டியிருந்ததால் நான் அன்று செல்லவில்லை .
  
   அனைவரும் இரவு பத்துமணிக்கு திரும்பி வந்தனர் .காரின் ஓட்டுனர் பாஸ்ட் ட்ராக்கில் அழைத்து கேட்டுவிட்டு வாடகை கட்டணம் 2500 ரூபாய் பெற்றுகொண்டார் .

    என் மனைவி  வீட்டிற்கு வந்ததும் வண்டியில் ஏ.ஸி சரியாக வேலை செய்ததா என கேட்டேன் .காரில் ஏசியே இல்லை என்றாள் .

     இங்கிருந்து புறப்பட்டவுடன் ஓட்டுனரிடம் ஏ சியை போடசொன்னதும் காரில் ஏ ஸி இல்லை என சொல்லியுள்ளார் .ஆனால் ஏ ஸி காருக்கான வாடகையை வசூலித்துள்ளார் .

   இரவு பத்தரை மணிக்கு நாகர்கோயில் பாஸ்ட் ட்ராக் ஐ அழைத்துகேட்டேன்  சார் எங்களுக்கு காரில் ஏ ஸி இல்லை என்பதே தெரியாது .ஓட்டுனர் சொல்லுவதை வைத்து தான் நாங்கள் அனுப்பிவைத்தோம் என்றனர்.
    
அவர்கள் அனுப்பிவைக்கும் வாகனம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை பாஸ்ட் ட்ராக் நிறுவனம் அறிந்திருக்கவில்லை.
 என்னிடம் அதிக கட்டணம் வசூலித்தது பற்றி கேட்டபோது எனது தொலைபேசி எண்ணை பெற்றுகொண்டு ,காலையில் பேசுகிறோம் என்றனர் .
   மறுநாள் மாலை நான்கு மணிவரை அழைப்பு வரவில்லை .மாலையில் மீண்டும் நானே அழைத்தேன் .நான் வண்டி பதிவு செய்த பெண் மறுமுனையில் பேசினாள். மேனேஜரிடம் பேசிவிட்டு அழைப்பதாக சொன்னாள்.அழைக்கவே இல்லை .

    பின்பு நாகர்கோயில் பாஸ்ட் ட்ராக் -ன்  இன்சார்ஜ் அருண் என்பவர் வங்கி கணக்கை தாருங்கள் மீதி பணத்தை வங்கியில் செலுத்தி விடுகிறோம் என்றார் . .கடந்த செவ்வாய்க்கிழமை  வங்கிகணக்கை பெற்று கொண்டு இன்று வரை பணத்தை திருப்பி தரவில்லை.
   
     தங்களது ன் நிறுவனத்தை நம்பி பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் பயணம் செய்யும் வாகனம் நிலைமையில் இருக்கிறது ,பயணம் செய்ய உகந்ததா,வாடிக்கையாளரின் பாதுகாப்பு என எதிலும் அக்கறையின்றி பாஸ்ட் ட்ராக் நிறுவனம் செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன் .
ஷாகுல் ஹமீது ,

09-04-2017.

Thursday, 9 February 2017

காபத்துல்லாஹ்

                          காபதுல்லாஹ்


கடந்த ஜனவரி மாதம் இருபதாம் தியதி  சவூதி அரேபியாவின் மெக்கா நகரிலுள்ள புனித காபாவை தரிசிக்கும் வாய்ப்பை அந்த ஏக இறைவன் தந்தான் .
எனது தாயுடன்

எனது தாயும் ,சகோதரியுடனும் மிக சிறப்பாக உம்ரா கடமையாற்றினோம் .
  எனது தாய்க்கு கடந்த 2012 ம் ஆண்டு இடது கால் மற்றும் 2014 ம் ஆண்டு வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது .அனைவரின் பிரார்த்தனைகளினால் ஏக இறைவன் எங்களது பயணத்தையும் உம்ரா ,தவாப் மற்ற அமல்களை எளிதாக்கி வைத்தான் .

 கடந்த இருபதாம் தியதி அதிகாலை இரண்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு  திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து எட்டு மணிக்கு ஓமான் ஏர்லைன்சில் மஸ்கட் வழியாக  நீண்ட விமான பயணம் செய்து ஜெத்தா நகரை அடைந்தோம்.
      மாலை ஆறு மணிக்கு  அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரத்துக்கு மேல் பேருந்தில் பயணம் செய்து மெக்காஹ் நகரை அடைந்தோம் .

  அறைகளுக்கு சென்று பயண பைகளை வைத்துவிட்டு இரவு உணவும் ,இஷா தொழுகையும் முடித்துவிட்டு உம்ரா செய்வதற்காக ஹரம் ஷெரிப் ன் கிங் பகத்(GATE NO 79 KING FAHAD ) வாயில் வழியாக உள்ளே நுழையும்போது நள்ளிரவு மணி 12 ஐ நெருங்கியிருந்தது .
  உம்ரா கடமையை முழுமையாக செய்து முடிக்கையில் அதிகாலை மூன்று மணி.
   பழக்கமே இல்லாத நீண்ட விமான பயணம்.(எங்கள் குழுவில் எங்கள் இருவரை தவிர அனைவருக்கும் முதல் விமான பயணம்) இரு இரவுகள் தூக்கமின்றி மிக களைப்புடன் தான் சென்று சேர்ந்திருந்தோம் .
      காபாவை சுற்றி ஏழு முறை நடந்து தவாபும் ,வாஜிபான இரண்டு ரக்காத் தொழுகையும் ,சிறிது ஸம் ஸம் நீர் அருந்திவிட்டு ,சபா ,மர்வா மலைகளுக்கிடையில் ஏழு முறை நடந்து கடமையை நிறைவேற்ற அந்த இறைவனே சக்தியை தந்தான் .11 நாட்கள் மெக்கா விலும் 4 நாட்கள் மதீனாவின் மஸ்ஜிதுல் நவபியிலும் அமல்கள் செய்துவிட்டு இறையருளால் கடந்த 6 தியதி அனைவரும் நலமுடன் ஊர் வந்து சேர்ந்தோம் .எல்லா புகழும் இறைவனுக்கே .
மஸ்ஜிதுல் அல் நபவி மதீனா 

  இரண்டு கால்மூட்டுகளும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை  செய்த எனது தாய் இறை அருளால் இதை சிறப்பாக செய்ய முடிந்தது . எனவே இயலாதவர்கள் என யாருமில்லை .எண்ணத்தை வையுங்கள் இறைவன் அனைவருக்கும் உம்ரா மற்றும் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை தருவான் .
  கபாதுல்லாஹ் உலக முஸ்லீம்களின் சங்கமம் எனும் தலைப்பில் இதை விரிவாக எழுதி எனது வலை பூவில் பதிவேற்றம் செய்யவிருக்கிறேன்.

ஷாகுல் ஹமீது ,

09-02-2017.

Sunday, 15 January 2017

மீனவ நண்பர்களின் பொங்கல் விழா

              

       நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.நேற்று எங்களூரின்  கடற்கரை கிராமமான கேசவன் புத்தன்துறையில் மிக சிறப்பாக நடக்கும்  பொங்கல் விழாவில் கலந்துகொள்ளும் நற்பாக்கியம் எனக்கு கிடைத்தது .குழந்தைகளும்,முதியவரும்,வாலிபர்களும்,பெண்டிரும்  நான்கு நாட்கள் மிக உற்சாகத்துடனும்,மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர் .

       நேற்று  இரவு ஏழரை மணிக்கு கேசவன் புத்தன்துறையிலிருந்து வந்திருந்த நண்பர்களின் காரில் நானும் எழுத்தாளர் மீரான் மைதீன்அவர்களும் சென்றோம் .கார் விழா மேடையை நெருங்கும்போதே ஒலி பெருக்கியில் சிறப்பு விருந்தினர் வந்துவிட்டார்கள் அவர்களை 
வரவேற்கிறோம் என கேட்டது .

தமிழ் தாய் வாழ்த்து 

    விழாகுழுவினர் எங்களை வரவேற்று பங்கு தந்தையின் இல்லத்திற்கு அழைத்து சென்றனர் .பங்குதந்தை முகமன் சொல்லி வரவேற்றார் பங்குதந்தையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு .அங்கேயே இரவுணவுக்கு அழைத்தனர் .பின்னரே இரண்டாம் நாள் நிகழ்சிகள் தொடங்கின.
      
இது இங்கு நடைபெறும் 50 வது பொங்கல் விழா .மிக ஆச்சரியமாக இருந்தது எனக்கு .இந்த விழாவில் என்னை கலந்துகொள்ள அழைத்த மீனவ நண்பர் அன்த்ரியாசுக்கு வயது நாற்பதே இருக்கும் .விழா குழுவின் இளைஞர்கள் பலருக்கும்  இன்னும் நாற்பதை எட்டாதவர்களே .

     இங்கிருக்கும் கிறிஸ்துவ ஆலயம் கட்டி ஐம்பத்து மூன்று  ஆண்டுகள் ஆகிறதாம் .இந்த கிராமத்தின் மூத்தவர்கள் தொடங்கிய பொங்கல் விழாவை இப்போதும் இங்குள்ள இளையவர்கள் சிறப்பாக நடத்துவதால் ஊர் மக்கள் ,பங்குத்தந்தையின் ஆதரவும்,பங்களிப்பும் விழா குழுவுக்கு கிடைத்ததில் எனக்கு வியப்பேதும் இல்லை .
  
   ஒரு மீனவ கிராமத்தில் கிறிஸ்துவ சமுதாய மக்களால் கொண்டாடப்படும் விழாவில் ,அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தது ஒரு இசுலாமியரை .(பிரபல எழுத்தாளர் மீரான் மைதீன் ).
  மீரான் மைதீன் அவர்கள் நாடகம் ,சிறுகதை ,நாவல்கள் ,திரைப்படம் என பல துறைகளில் இயங்கும் ஒரு ஆளுமை .எனக்கு மிக நெருகிய நண்பர் .

 பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள் என்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமானது .

    விழாவில் பேசிய மீரான் மைதீன் அவர்கள் விவசாயிகள் அறுவடைசெய்து,புது பானையில் பொங்கலிடுவர்.மீனவ சமுதயாத்திற்கு கடல்தானே வாழ்வாதாரம் ,மீன்தானே விளைபொருள்.
 இங்கு நடக்கும் இந்த ஐம்பாதவது பொங்கல்விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் .இந்த விழாவை நடத்தும் பலர் இந்த பொங்கல் விழா துவங்கியபோது பிறந்திருக்கவே இல்லை .
  
 
சிறப்பு விருந்தினர் மீரான் மைதீன்
 இந்த கடற்கரை மக்களின் வாழ்வு நாங்கள் அறியாதது இப்போது மீனவ சமுதயாதயத்தை ஜோ டி குருஸ் அவரின் ஆழிசூழ் கடல் நாவல் மூலம் இந்த மக்களின் வாழ்வு நாங்கள் எண்ணியதுபோல இல்லை  எவ்வளவு கடினமாது என அறிந்தோம் . இன்னும் பலரும் இங்கிருந்து எழுத வரவேண்டும் என்றார் .
  
   மேலும் எதற்காக இந்த பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து அகற்றினார்கள் என இப்போதுதான் புரிகிறது.இது போன்ற விழாக்களால் மனித சமுதாயம் ஒற்றுமையாக ,மகிழ்ச்சியாக இருக்கிறது .ஆகவே இது போன்ற விழாக்கள் மனித சமுதாயத்திற்கு தேவை என்றார் .
  
  நான்கு நாட்கள் விழாவில் நாங்கள் கலந்துகொண்டது இரண்டாம்நாள் .காலையில் ஐம்பது பானையில் பொங்கலிட்டு ,கோல போட்டியும் நடந்துள்ளது .இரவில் சிறுவர்களுக்கான மாறுவேட போட்டியும் நடைபெற்றது.மாறுவேட போட்டியில் கலந்துகொண்ட சிறுவர் ,சிறுமியரை விட அவர்களின் பெற்றோரே மிக மகிழ்ச்சியுடன் இருந்ததை கண்டேன் .

   மேலும் நீச்சல் போட்டி ,கட்டுமர போட்டி ,ஜோடி பொருத்தம் என அனைத்து வயதினருக்குமான விளயாட்டு போட்டிகளும் நடைபெறயுள்ளது .
   மேலும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற சிறார்கள் மேடையில் பேசினார்கள்.பாட்டு போட்டியில் வென்ற  சிறுவன் தனது பாடல் திறமையை வெளிபடுத்து இந்த மேடை உதவியது . மாணவிகளின் சிறப்பு நடனமும் நடைபெற்றது .
சிறப்பு நடனம் 

 பெரும்பான்மையான ஊர் மக்கள் ஆலயத்தின் முன்பிருந்த மைதானத்தில் அமைதியாக ,மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்துகொண்டிருன்தனர்.

  மதங்களை கடந்து இது போல நடைபெறும் விழாக்காளால் மனிதநேயமும் ,ஒற்றுமையும் வளர்கிறது .இதற்காக எத்தனை விழாக்கள் வேண்டுமென்றாலும் நடத்தலாம் என அங்கிருந்து புறப்படும் முன் வேண்டிகொண்டேன் .

   தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை .

ஷாகுல் ஹமீது ,15-01-2017.