Tuesday, 20 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 29

                       விடை தந்த ஈராக் 
  
எட்டாம் தியதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன் .அதிகாலை நல்லகுளிர் .சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கெல்லாம் விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன்.பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது எனக்கு .மதியம் மூன்று மணிக்கு தான் விமானம் பாக்தாத் –அம்மான்-மும்பைக்கு .விமான சீட்டும் ,கடவுசீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்து சென்றனர் .
 

 என்னுடன் செல்வராஜ் உட்பட ஆறு பேர் ஊருக்கு செல்ல தயாரானோம். பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துசெல்ல வந்தனர் .ஒரு காரில் இருவர் மட்டுமே .ஒரு ஓட்டுனரும், ஒரு பாதுகாப்பு வீரர் ஒவ்வொரு காரிலும் பாதுகாப்புக்காக வந்தனர். பாதுகாப்பு வீரர்களும் ,வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து ,அரபிகளை போன்ற உடையணிந்திருந்தனர் .மாறுவேடம் தான் .பாதுகாப்புகாக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது .

  காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர் .முன்பு நான் திக்ரித் –பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே காரில் இருந்து கீழே இறங்க கூடாது  பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி,அவ்வாறு இறங்கவேண்டிய சூழ்நிலையில் கீழே இறங்கிவிட்டால் எக்காரணத்தைக்கொண்டும் ஓட கூடாது .இங்கிருந்து 20-30 நிமிட பயணதூரம் மட்டுமே என்றனர் .

  பயணப்பைகளை காரில் ஏற்றினோம் .நாங்கள் ஆறுபேரும் மூன்று கார்களில் ஏறிகொண்டோம் உடன் பாதுகாப்பு வீரர்களும் .முப்பது நிமிடத்திற்குள் பாக்தாத் விமான நிலையம் வந்தடைந்தோம்.பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் என்ற பதாகை எங்களை வரவேற்றது ஊர்செல்வது உறுதியாகிவிட்ட உற்சாகம் தொற்றிகொண்டது .

  பாக்தாத் விமான நிலையம் உலகின் நவீன வசதிகளுடன்,உயர்தரத்தில் இயங்கிய பன்னாட்டு விமான நிலையமாக  இருந்திருக்க வேண்டும் .விமான நிலைய உள் கட்டமைப்புகள் அதை உறுதி செய்தது.
 விமான நிலைய வாயிலில் இறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் எங்களை விரைவில் விமான நிலையத்திற்குள் கொண்டு விட்டனர் .பயணப்பைகளை அவர்களே கொண்டு வந்து தந்தனர் .எங்களிடம் கைகுலுக்கி ஹாவ் எ ஸேப் ஜெர்னி என விடைபெற்றனர் .

    ஈராக் போர் தொடங்கியதிலிருந்து பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் செயல்படாமல் முடங்கிப்போய் செயலற்று இருந்தது.இப்போது ஒரு தனியார் நிறுவனம் அதை இயக்கிகொண்டிருக்கிறது .தினமும் ஒரு விமானத்தை இயக்குகிறது ஜோர்டானின்  அம்மான் நகருக்கு .
 பயணப்பைகளை அளித்துவிட்டு ,குடியுரிமை பரிசோதனைகளையும் முடித்துவிட்டு காத்திருந்தோம் .உண்மையாகவே இப்போதுதான் பயணம் உறுதியாயிற்று என்றே சொல்லலாம் .
  
  அனைத்து சோதனைகளும் முடிந்தபின் பயணம் செய்யவேண்டிய விமானம் வரை நடந்தே சென்றோம்.அருகில் சென்றதும் எங்கள் பயணபைகள் இருக்கிறதா என  பார்க்க சொன்னார்கள் விமான நிலைய ஊழியர்கள்  பைகளை பார்த்து உறுதிசெய்ததும் விமானத்தில் ஏறிக்கொண்டோம்.அது ஒரு சிறிய விமானம் முப்பதுபேர் மட்டுமே பயணம் செய்யக்கூடியது.ஒரே ஒரு விமான பணிப்பெண் ஒரு சாக்லேட் மட்டும் புன்னகையுடன் தந்தாள்.நாற்பது நிமிட பயணம்  ஜோர்டானின் அம்மான் நகருக்கு .அங்கிருந்து ராயல் ஜோர்டன் விமானத்தில் அபுதாபிக்கு பயணித்தோம் .

   கடந்தமுறை விடுமுறையில் சென்றபோதும் அபுதாபி வழியாக சென்றதால் அபுதாபி விமான நிலையம் இப்போது நல்ல பரிச்சயமாகியிருந்தது.ஆறு மணிநேரம் எளிதாக கடந்துசென்றது .
  அபுதாபியில் ஆறு மணிநேர காத்திருப்புக்கு பின் கல்ப் ஏர் விமானத்தில் மும்பைக்கு காலையில் வந்துசேர்ந்தோம் .இப்போதும் செல்வராஜின் பயணபைகள் வரவில்லை .இந்தியாவிலிருந்து சென்றபோதும் அவனது பைகள் கிடைக்காததாலேயே செல்வராஜ் ஈராக் சென்ற இருபது நாட்களுக்குள்ளாக திரும்பி வருகிறான் .பாக்தாத் விடுதியறையில் இருந்த அவனின் கதையைகேட்டு இந்தியர்கள் சிலர் கொடுத்த பொருட்களும்,பையும் இந்த முறையும் கிடைக்கவில்லை .

   9 ம் காலை பத்தரைமணிக்கு ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் மும்பை-திருவனந்தபுரம் பயணித்து மதிய வேளையில் சென்று இறங்கினேன் .விமான நிலையத்தில் எனது தந்தையும் ,இளைய சகோதரனும் ,மணப்பெண்ணின் சகோதரி ,தாய், தந்தை  வந்திருந்தனர் .என்னை பெண்வீட்டார் இப்போது தான் முதல்முறையாக  பார்க்கின்றனர் ,நானும் அவர்களை .

  9 ம் தியதி தான் முன்பு திருமணநாளாக குறித்து பெண்வீட்டார் மண்டபமும் முன்பதிவு செய்துவைத்திருந்தனர் .பின்பு அதே டிசம்பரில் 16 ம் தியதி என வேறு நாள் குறிக்கப்பட்டு சிறப்பாக திருமணம் நடந்தது .கடந்த நான்கு தினங்களுக்கு முன் பனிரெண்டாம் வருட திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம் .
முற்றும் .

கடந்த  நான்கு மாதங்களாக நான் எழுதிவந்த ஈராக் போர்முனை அனுபவங்கள் இந்த பதிவுடன் முடிவடைந்தது .
  
எழுத்தாளர் ஜெயாமோகன் அவர்களின் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் என்னை கடந்த மார்ச் மாதம் சந்தித்தபோது ஈராக் குறித்து எழுதுங்கள் என்றார் .கடந்த ஜூன் மாதம் முதல் கப்பலில் பணியில் இருந்த போது சில பயண அனுபவங்களை எழுதி எனது வலைப்பூவில் பதிவிட்டேன் .தொடர்ந்து சதாமின் அரண்மனையில் எனும் வந்த பதிவை படித்துவிட்டு மூத்தசகோதரியும் ,தாவரவியல் பேராசியையுமான லோகமாதேவி அவர்கள் ஈராக் போர் அனுபவங்களை அறிய ஆவலாய் இருக்கிறேன் ஒரு தொடராக எழுதுங்கள் என்றார் .எழுத ஆரம்பித்த போது பத்து அல்லது பதினைந்து பதிவுகள் வரும் என நினைத்தேன் .
  
  சதாமின் அரண்மனையில் என்ற பதிவையும் சேர்த்து மொத்தம் முப்பது பதிவுகள் வந்துவிட்டன .புதிதாக எழுத தொடங்கிய எனக்கு இது ஒரு நல்ல பயிற்சியாக இருந்தது .
  இதுவரை தொடர்ந்து வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் .மேலும் என்னை ஊக்கபடுத்திய நண்பர்கள் முத்து,தர்மா சகோதரன் பிரபு ,சுஜாதா,சுமதி ,சிஸ்டர் கரோலின் ,சையதலி அண்ணன்,ஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் பின்னூட்டம் எழுதிய சகோதரி லோகமாதேவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் .
   இரண்டாண்டுகளுக்கு முன்பு எங்களூரின் எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்களை சந்தித்தபோது என்னிடம் ஷாகுல் உங்கள் பணியும் பயணமும் யாருக்கும் கிடைக்காதது உங்களின் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்யுங்கள் என்றார் .எனது தோழி தாமரை செல்வியும் என்னை எழுதுமாறு சொன்னார் .அப்போது நினைக்கவேயில்லை என்னால் எழுத முடியும் என .
  தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனின் தொடர்பும் ,நட்பும் கிடைத்தது .நண்பர் மூலமாக அறிந்த ஜெயமோகன் அவர்கள் எனது ஈராக் போர்முனை அனுபவங்கள் என எனது வலைப்பூவின் சுட்டியை அவரது தளத்தில் வெளிட்டார் .அவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் .

  ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் விரைவில் பதிவிடுவேன் .தொடர்ந்து மேலும் ஒரு அனுபவப்பதிவை தொடராக விரைவில் எழுதுகிறேன் .
ஒவ்வொரு பதிவிற்கும் பிழைதிருத்தம் செய்த என் மனைவி சுனிதா மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றிகள் .
  ஈராக்கில்  எடுத்த புகைப்படங்கள் ஸ்கேன் செய்து பின்னர் பதிவேற்றம் செய்கிறேன் .
ஷாகுல் ஹமீது .

20-12-2016

11 comments:

 1. நிறைவாக அழகாக சுபமாக திருமணத்தில் தொடரை முடித்திருக்கிறீர்கள் தம்பி. இருந்தாலும் இந்த தொடர் முடிந்துவிட்டதே என்றும் வருத்தமாக இருக்கிறது. every war should end in peace இல்லையா? தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருக்கவும் முடியாது தொடர்ந்து அந்த அனுபவங்களையே எழுதிக்கொண்டிருக்கவும் முடியாது. இந்த தொடர் மிக மிக வித்தியாசமான களத்திலும் அசாதரணமானபணிச்சூழலிலும் நிகழ்ந்த உங்கள் சொந்த அனுபவங்களின் மீதாக எழுதப்பட்டது என்பதே இதன் வெற்றி. இதன் உண்மைத்தன்மையே இதன் சுவாரஸ்யம்.மிக மிக விரும்பி படித்தேன் முழுத்தொடரையும். என் மகன்களுடனும், மாணவர்களுடனும் இவற்றை பகிர்ந்து கொண்டேன் தொடர்ந்து எழுதுங்கள், உங்களின் கப்பல் பணி, நகரும் பணிச்சூழல் , கப்பல் கட்டுமானம், அதில் சந்தித்த பிரச்சனைகள் அசாதாரண நுகழ்வுகள், வித்தியாசமான மனிதர்கள், கரையில் கால் பதிக்காமல் கடலிலேயே இருக்கும் நாட்களின் கடினங்கள் என்று நாங்கள் அறிந்து கொள்ள இயலா பலவற்றைக்குறித்து எழுதுங்கள்
  அன்புடன்
  லோகமாதேவி
  இந்த தொடரையும் புத்தகமாக பிரசுரிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எனது இந்த ஈராக் தொடர் எழுத காரணமாக இருந்ததோடு எல்லா பதிவிற்கும் பின்னோட்டம் எழுதி என்னை தொடர்ந்து எழுத ஊக்கபடுத்தினிர்கள்.
   உங்கள் ஆதரவுடன் கப்பல் குறித்தும் விரைவில் எழுதுகிறேன் .
   ஷாகுல்

   Delete
 2. உக்கிரமான பல தருணங்களை உள்ளடக்கிய பதிவு இது. இறுதி பயண நிகழ்வுகளில் உங்கள் எழுத்து கூர்மை பெறுவதை உணர முடிகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாதர் .தொடர்ந்து படிப்பவர்களால் எழுத்து கூர்மை பெறுவதை உணர முடிகிறது .எனக்கு தெரியாதை எனக்கு சொன்னீர்கள் .
   ஷாகுல்

   Delete
 3. உங்கள் ஈராக் பணி மற்றும் போர் சூழல் படித்தபோது சில சமயம் நானே அங்கு இருந்தது போல உணர்ந்தேன்.

  நன்றி.

  உங்கள் கடல் பணி தொடர்பான பதிவை படிக்க ஆர்வமாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் மிக்க நன்றி தொடர் முழுவதையும் படித்ததற்கு .
   கப்பல் பணி குறித்து விரைவில் எழுதுகிறேன் .
   ஷாகுல்

   Delete
 4. வணக்கம்.. இராக் போரும் உங்கள் வாழ்வும் இணைந்த அந்த நாட்கள் மிகவும் சூட்சுமமாக தொலைகாட்சி யில் நேரடியாக பார்த்து ரசித்த அனுபவம் எனக்கு....  தண்ணீரும் பெட்ரோளும் ஒன்றிணைந்த நாடாக திகழ்ந்த ஈராக்கை அமேரிக்காவின் குறிவைத்தது அடைந்தார்கள்....

  இனிமேல் நம் நாடுகளில் போர் வராது... போர் சதாம் போல வீரர்களை சார்ந்தது...

  அமேரிக்காவிற்க்கு துணைபோகும் அரசியல் வாதிகளை சார்ந்ததல்ல...

  மும்பை காத்தருப்பு...சமையல்...நட்பு...போர்...திருமணம். அனைத்தும் கலந்த நாவல்..

  மீண்டும் உங்கள் பேனாவின் மை காகிதத்தில் கொட்டட்டும்.....

  பல தேச பயணத்தின்..பாதுகாப்பற்ற இந்த பயணத்தின் பரைசாற்றலை......

  தெய்வ நம்பிக்கை இல்லாதவனுக்கும் தெய்வநம்பிக்கை வரசெய்வது கடல் பயணம்...

  ப்ரார்த்திக்கிறோம் ..உங்கள் நல் வாழ்வுக்காக..

  நன்றி
  தர்மா மற்றும் குடும்பத்தார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தர்மா அவர்களே ,
   உற்சாகம் கொள்ள செய்யும் நீண்ட பின்னூட்டம் எழுதி .என்னை மேலும் எழுத தூண்டியுள்ளீர்கள் .
   மேலும் பல கட்டுரைகள் எழுதும் எண்ணம் வந்துவிட்டது .
   ஷாகுல்

   Delete
 5. Excellent writing. Please keep writing.

  ReplyDelete
 6. Great story! Great writer! Great service to Tamil World!

  ReplyDelete