Wednesday 9 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 21


                                                             உண்ணி கிருஷ்ணன் .

     முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம்.சற்று தூரத்தில் இருந்தது தொலைபேசி மையம்  .சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்.

  அது ஒரு பெரிய கட்டிடம். இங்கு கண்ட காட்சி அனைத்து கட்டிடங்களும்  இங்குள்ள மணலின் நிறத்திலேயே இருக்கிறது .பாலை மணலின் அதே நிறம்,வெளிர்மஞ்சள் என சொல்லலாம் .சுவர்களுக்கு வண்ணம் பூசுவதே இல்லையோ என எனக்குள் எப்போதும்  எழும் கேள்வி .குவைத்திலும், எகிப்திலும் கூட கட்டிடங்கள் இப்படிதான் இருக்கிறது .

  மனமகிழ் மன்ற கட்டிடம் கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கும் .அங்கு செல்லும் போதெல்லாம் .சினிமாக்களில் பார்க்கும் பெரிய பங்களாக்களை அது நினைவுபடுத்தும்.கட்டிடத்தின் படிக்கட்டு வரை வாகனம் செல்லும் வசதியும் .வெளியே பேரீச்சம்பழங்கள் காய்த்து தொங்கும் குட்டையான பேரீச்சம் மரங்கள் ,ஒரு சிறு புல் வெளி கூட இருந்ததாக நினைவு.மஞ்சள் நிறத்திலிருக்கும் பாதி பழுத்த பழங்களை பறித்து சில நாட்கள் வைத்திருந்தால் நன்கு பழுத்துவிடும்.நல்ல சுவையுடனும் ,தேன் போல இனிப்பும் உள்ளது .அதுபோல் வேறெப்போதும் நான் பேரீச்சம்பழம் சுவைத்ததே இல்லை .

  திக்ரித் ஈராக்கின் வட பகுதி எல்லை தாண்டினால் துருக்கியும் ,துருக்கியை மிக ஒட்டியே ஐரோப்பாவும் இருப்பதால் இப்பகுதி கொஞ்சம் பசுமையாக இருக்கும் .குவைத் ,சவுதியை ஒட்டிய தென்பகுதி அடர் பாலையும் ,வறண்டும் காணப்படும் .


 மதிய உணவுக்கு பின் உள்ள இடைவேளையில் தொலைபேசி அழைப்புக்கு  போய்விட்டு வருவோம்.ஒவ்வொரு முறைபோகும் போதும் அந்த சிற்றுந்து நிரம்பித்தான் செல்லும் .பெரும்பாலும் நான் தான் ஓட்டி செல்வேன் .

   அப்போது யாரிடமும் கைபேசியோ,இணையமோ இல்லை. வீட்டிற்கும், வேண்டியவர்களுடனும்(நிறையபேருக்கு ஊரில் முன்னாள் ,இந்நாள் காதலிகள் உண்டு ) பேச அந்த தொலைபேசி ஒன்றே வசதி.நீண்ட நாட்களுக்கு பின் தொலைபேசி மையம் எங்கள் குடியிருப்பின் அருகிலும் வைத்திருந்தனர் .

   வரிசையாக எதிர்ரெதிராக பதினைந்துக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் இருக்கும் .ராணுவ வீரர்களும் அங்கு தான் பேச வேண்டும்.அவர்களெல்லாம் மிக மெதுவாக சப்தமில்லாமல் பேசுவார்கள் .பெரும்பாலும் பெண்கள் தொலைபேசியிலோ ,கைபெசியிலோ பேசும்போது சப்தமே இல்லாமல் பேசுவதை கவனித்திருக்கிறேன் .


   நான் தொலைபேசியில் மட்டுமல்ல சாதாரணமாகவே கொஞ்சம் சப்தமாகவே  பேசக்கூடியவன் .பேசிகொண்டிருக்கும்போது தானாகவே சபதம் கூடிவிடும் .ஒருமுறை தொலைபேசியில்  பேசிகொண்டிருக்கும் பின்னாலிருந்து என் தோளை தட்டி கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என கெஞ்சும் பார்வையில் சொன்னான் ராணுவ வீரன் ஒருவன் .

  பதினைந்து டாலர்களுக்கு கிடைக்கும் தொலைபேசி அட்டையில் 43 நிமிடங்கள் இந்தியாவுக்கு பேசமுடியும் .பலர் மாத கணக்கில் யாருக்கும் அழைப்பதே இல்லை .எப்படித்தான் நண்பர்களுடனும் ,உறவினர்களுடனும் பேசாமல் இருக்கிறார்களோ என நினைப்பேன் .

   நான் ஒருநாள் என் மாமாவை அழைத்தபோது அவர் உடைந்த குரலில் போதும் நீ அங்கிருந்தது வந்துவிடு என்றார் .தொலைக்காட்சி செய்திகளை கேட்டுவிட்டு என்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும் சொன்னார் .
    அப்போது தாக்குதல்கள் இன்னும் கடுமையாகி இருந்தது .அதற்கடுத்த வாரம் உம்மாவுக்கு அழைத்தபோது .மோனே வந்துரு நீ அங்க வேலை செய்தது போதும் தள்ளைக்கு புள்ளையா சீக்கிரம் ஊரு வந்து சேருப்பா..... .நான் டி வி ல பார்த்தேன் .பனிரெண்டுபேரை கழுத்தை அறுத்து கொல்வதை காட்டுகிறார்கள் என.விரைவில் வருகிறேன் என்றேன் .


   அப்போது எங்கள் நிறுவனம் நேபாளிலிருந்து பணிக்கு ஆட்களை எடுத்து கொண்டிருந்தது .அதில் ஒரு பனிரெண்டுபேரை கடத்தி தீவிரவாதிகள் கொன்றதை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளி பரப்பியாதாக அறிந்தோம் .


  முகாமுக்குள் வேலைக்கு வரும் உள்ளூர் ஈராக்கியர்கள் அவ்வபோது எங்களிடம் சொல்வார்கள் .வெளியே நடக்கும் தாக்குதல்கள் பற்றி .உள்ளூர் ஈராக்கியர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணிக்கும் ,சில கட்டிட பழுதுபார்ப்பு பணியிலும் வேலைசெய்தனர் .


   ராணுவத்தின் சலவை மையத்திலும் ,பொருட்கள் விற்கும் விற்பனை மையத்தில் சில ஈராக்கிய பெண்களும் வேலை செய்தனர்.ஆனால் தினமும் வாயிலில் கடும் சோதனைக்கு பின்னரே அவர்களை உள்ளே அனுமதித்தனர் .பொதுவாக வாயிலில் இருக்கும் காவல் வீரன் முதலில் கேட்கும் கேள்வி ஆங்கிலம் பேசுவாயா என .ஆம் என சொன்னாலே சோதனைகள் கொஞ்சம் குறைவாக இருக்கும் .ஆங்கிலம் பேசதெரிந்தவர்களிடம் அவர்கள் பண்பாக பேசுபவர்கள் .

   உள்ளுரிலிருந்து முகாமுக்கு வேலைக்கு வரும் ஈராக்கியர்கள் சிலர் சாதமை திட்டுவதையும், சிலர் ஆதரிப்பதையும் பார்த்திருக்கிறேன் .


  கேரளாவின் திருச்சூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் உண்ணி கிருஷ்ணன் .அன்று எங்களுடன் தொலைபேசி மையத்துக்கு வந்திருந்தான் .உண்ணி கிருஷ்ணன் அமைதியானவன் தானுண்டு தன் பணி என இருப்பான்  .மலையாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்ப்பான் .ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொல்வான் .இயல்பாகவே அவன் யாரிடமும் அதிகம் பேசமாட்டான் .நான் அவனை பார்க்கும்போதெல்லாம் எந்தா உண்ணி  சொகமாணோ கிருஷ்ணன் எவடயா என கேட்பேன்  .ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு செல்வான் .

    உண்ணி  ஒருமுறை தொலைபேசியில் பேசிவிட்டு வெளியே வந்து அந்த புழுதி நிறைந்த தரையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தான்.அவனது தாயின் மரண செய்திதான் அவனது கதறலுக்கு காரணம் .கருவில் சுமந்தவளுக்கு ,இறுதி சடங்குகள் உடனிருந்து செய்ய இயலாமலும் , முலையூட்டி வளர்த்தவள் முகத்தை இனி எப்போதும் காணேவே முடியாது என்பதாலும் .

   அன்று அவன் ஊருக்கு பேசும்போது தாய் இறந்து சடங்குகள் எல்லாம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது தாமாதமாக செய்தி அறிந்தது அவனை மேலும் வேதனையடைய  வைத்தது .இதுபோல் பலருக்கும் ஊரில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள் தாமதமாகவே தெரிய வந்தது .

 உண்ணியை  தேற்றி வண்டியில் அமர வைத்து எங்கள் குடியிருப்புக்கு வந்தோம் .அன்றும் மறுநாளும் அவன் பணிக்கு வரவில்லை .முதல் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தான் .

  மூன்றாம் நாள் பணிக்கு வந்தபின்பும் அன்னையை இழந்த துயர் அவனது முகத்திலிருந்தது.

   என் அறை நண்பன் சங்கர் ஊர் சென்றிருந்தபோது தாய் நோய் வாய்பட்டிருந்தாள்.பின்பு சிகிட்சை பலனில்லாமல் இறந்தபோது இறுதி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு வந்தான் .

 ஓராண்டு சம்பாதிச்ச எல்லா காசையும் செலவழிசேன் ஆத்தாவை காப்பாத்த முடியல .சொன்னாய்ங்க பெரிய ஆசுபத்திரி கொண்டு போகாதே வேண்டாம்னு .

   ஆத்தா பிழச்சிகுவான்னு நினச்சேன் .நேரம் வந்திடிச்சி நமக்கு குடுப்பினை இல்லை என்றான் சங்கர் .தாயின் இறந்தது  பேரிழப்பு என்பான் .

   பெற்ற அன்னைக்கு ஈடு என எது இவ்வுலகில் எதுவுமே இல்லை .

ஷாகுல் ஹமீது ,
10-11-2016

Sha260@yahoo.co.in

7 comments:

  1. நல்லா இருக்குங்க ஷாகுல் .

    ReplyDelete
  2. ஷாகுல், நல்லா இருக்கு தம்பி இந்த பதிவும். உங்களுக்கும் உங்களுடன் பணிபுரிபவர்களுக்கும் ஏற்பட்ட கஷ்டங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள்
    சின்ன சின்ன விஷயங்களயும் மிக கவனமாய் சொல்லிப்போவதுதான் உங்கள் எழுத்தின் சிறப்பு. தொலைபேசப்போகையில் கட்டிடம் எத்தனை தூரம், உயரமான இடத்தில் அது இருப்பது, கட்டிடத்தின் நிறம் புல்வெளி பேரிச்சை மரம் அதன் பழங்களின் சுவை மற்றவர்கள் எப்படி பேசுகிறார்கள் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என ஒன்றைத்தொட்டு இன்னோன்றாய் விரிந்துகொண்டே போகிறது காட்சி விவரணைகள்
    உன்னியின் நிலை கவலையாக இருந்தது இப்படி எத்தனை எத்தனை பேர் இருக்கிறார்கள் இல்லையா? குடும்பத்தின் பொருட்டு பிரிந்திருந்து குடும்பத்தினர் அதுவும் தாய் இறந்ததே அறிந்துகொள்ளாமல் இருப்பது எத்தனை வேதனையான ஒன்று?
    கொச்சி விமான நிலையத்தில் சில சமயம் காத்திருப்பவர்களையும் வழியனுப்ப வந்தவர்களையும் பார்த்துக்கொண்டிருக்கையில் நமக்கு ஏற்படும் உணர்வுகளை விவரிக்கவே முடியாது. வெரும் ஒரு சாண் வயிற்றிற்கா இந்தப்பாடு?
    எல்லா இழப்புக்களுமே ஈடுசெய்ய முடியாதவையே எனினும் அம்மாவின் இழப்பும் அதற்கு அருகிருக்க முடியாத குற்ற உணர்வும் காலத்திற்கும் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்
    மேலும் எழுத வாழ்த்துக்களுடன்
    லோகமாதேவி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    நேரலை வர்ண்ணனை இதற்க்கு மிஞ்சாது...

    உங்கள் வர்ண்ணனைகளை எழுது அஞ்சாது..

    ReplyDelete
  4. நன்று சாகுல் வார்த்தை உபயோகம் பேசும் முறை நன்று

    ReplyDelete
  5. நன்று சாகுல் வார்த்தை உபயோகம் பேசும் முறை நன்று

    ReplyDelete
  6. எல்லா இழப்புக்களுமே ஈடுசெய்ய முடியாதவையே எனினும் அம்மாவின் இழப்பும் அதற்கு அருகிருக்க முடியாத குற்ற உணர்வும் காலத்திற்கும் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்
    எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

    ReplyDelete
  7. முன்னாள் ,இந்நாள் காதலிகள் உண்டு )

    ReplyDelete