Wednesday, 30 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 26


                              விடை கொடுத்த சதாமின் அரண்மனை

  திக்ரிதிலிருந்து பாக்தாத் செல்வது தான் கடினம் .சாலை போக்குவரத்து பெரும் சிரமமாக இருந்தது .எனது மானேஜர் ஆலன்குக் என்னை ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சிசெய்கிறேன் என்றார் .அதற்கான கட்டணம் அறுநூறு டாலரை தானே செலுத்துவதாக உறுதியளித்தார் .

  ராணுவத்திற்காக பணிபுரியும் சில கம்பனிகளின் ஹெலிகொப்டர்கள் பாக்தாத்திற்கும் மற்ற இடங்களுக்கும் செல்லும் .அதில் அவர் முயற்சித்தபோது முடியாது என்றே பதில் வந்தது.

   அமெரிக்கர்களுக்கும் ,மற்ற வெளிநாட்டவருக்கும் அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட ஒரு அடையாள அட்டையை வைத்திருந்தனர் .அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என ஆலன் குக் என்னிடம் சொன்னார். (third nation country ) நாங்கள் துணை ஒப்பந்த நிறுவனத்துக்கு கீழ் வேலை செய்வதால் எங்களுக்கு அது வழங்கப்படவில்லை .
 
  அமெரிக்க நிறுவனத்தின் கீழ் வேலை செய்த அனைவருக்கும் அமெரிக்க அரசால் அந்த அடையாள அட்டை வழங்கபட்டிருந்தது .இருந்தாலும் அமெரிக்க நிறுவன அதிகாரி வில்லியம் என்னிடம் நான் ராணுவ தலைமை அதிகாரியுடன்  பேசிப்பார்க்கிறேன் உனது திருமணம் விரைவில் இருப்பதால் நீ கண்டிப்பாக செல்லவேண்டுமென சொல்கிறேன் என சொல்லி சென்றார் .

   ராணுவ ஹெலிகொப்டரிலும் பயணம் செய்ய அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என  கமொண்டோவை சந்தித்துவிட்டு  வருத்ததுடன் என்னிடம் சொன்னார். என்னால் உனக்கு உதவ முடியவில்லை ஐயாம்  சாரி என்றார் .

  ஹெலிகொப்டரில் சென்றுவிட்டால் குறிப்பட்ட தியதியில் இந்தியா சென்றுவிடலாம் என்ற எனது  இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது .ரமலான் முடிந்து இரண்டாம் ஆண்டாக பெருநாளையும்  முகாமிலேயே கொண்டாடினோம் .

  அமெரிக்கர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  நன்றி செலுத்தும் நாளும் (thanksgiving day) அவர்கள் வெகு சிறப்பாக ,வித,விதமான சிறப்பு உணவுகளுடன் கொண்டாடினர்.ஆவியில் வேகவைத்த முழு வான்கோழி இறைச்சி இந்த பண்டிகையின் முக்கிய உணவாக இருந்தது .

  மூத்த நண்பர் கலீல் பாய் தினமும் என்னிடம் குறிப்பிட்ட தியதியில் உனது திருமணம் நடக்கும் என்பார் .நான் எனது பிரார்த்தனைகளில் உனக்காவும் வேண்டிகொள்கிறேன் என்பார் .இப்படி அவர் சொல்வது என்னை சமாதானபடுத்தவே என நினைத்து கொள்வேன் .

   டிசம்பர் 1 ம் தியதி அன்று காலை என்னை சந்தித்த கலீல் பாய் .நீ கண்டிப்பாக ஊர் செல்வாய் நான் இன்று உனக்காக அதிகமாக பிரார்த்தனை செய்தேன்.மீண்டும் உன் குடும்பத்தினர் நிச்சயித்த நாளன்று உன் திருமணம் நடக்கும் என்றார் .நான் சிரித்துவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன் .
 
   அன்று மூன்று கார்கள் முகாமுக்குள் வந்தன .கவச உடையும், துப்பாக்கியும் ஏந்திய காவலர்கள் படைசூழ இருந்தனர் .யாரோ முக்கிய அதிகாரி ஒருவர் வந்ததாக தெரிந்தது .

  அன்று காலை பத்துமணிக்கு  பணியில் இருக்கும் போது அலுவலகத்தில் பணிபுரியும் பிலால் என்னை நோக்கி வேகமாக  வந்துகொண்டிருந்தான். என்னுடன் பணியிலிருந்த முருகன் பாய் பிலால் உன்னை அழைக்கிறான் என்றான் .

  அவசரமாக வந்த பிலால் .திக்ரித் ஐ சுற்றியுள்ள முகாம்களில் ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அதிகாரி வந்துள்ளார் .அவர் அடுத்து செல்வது பாக்தாத் ஆகவே மானேஜர் ஆலன்குக் உனது விஷயத்தை சொல்லி உன்னை பாக்தாத்வரை அழைத்துசெல்ல வேண்டுகிறார்.பாதுகாப்பு கருதியும்,வண்டியில் இடம் இல்லை எனவும் அவர் மறுக்கிறார் .

 நீ உடனே வா நீ நேரில் அவரிடம் பேசினால் அவர்களுடன் நீ செல்ல வாய்ப்பு கிடைக்கலாம் என்றான் .பிலாலுடன் அவசரமாக அலுவலக அறைக்கு சென்றேன் .ஆலன்குக் என்னைபற்றியே அவரிடம் பேசிக்கொண்டிருந்தார் .

  நான் சென்று அலுவலக வாயிலில் நின்றேன் .பிலால் கொஞ்சம் தள்ளி நின்று உள்ளே போ என சைகை செய்தான் .அதே நேரம் என்னை கண்ட ஆலன்குக்  ஷாகுல் கம் இன் என என்னை அழைத்து  அந்த அதிகாரியிடம் என்னை அறிமுகபடுத்தினார் .

  அவர் என்னிடம் இந்தியாவில் எங்கே இருக்கிறாய் ,திருமண தியதி எப்போது என விசாரித்தார் .பின் சில நிமிடங்கள் நாங்கள் மூவரும் இருந்த அந்த அறை மௌனமாக இருந்தது .உனது பயண பைகள் எத்தனை, எவ்வளவு பெரியது என கேட்டார் .என்னிடம் ஒரு அட்டைபெட்டியும் ,ஒரு சிறிய பையும் இருப்பதாக சொன்னேன் .

  பதினைந்து நிமிடத்திற்கு மேல் நான் காத்திருக்க முடியாது .சீக்கிரமாக புறப்பட்டு வா என்றார் .அக்டோபர் 25  ம் தியதி புறப்பட தாயாரான என்னுடைய பயண பை எதையும் நான் திறக்கவே இல்லை .எல்லாம் தாயாரவே இருந்தது .

  அறையை விட்டு வெளியே வந்ததும் முருகன் என்ன என கேட்டான்.என்னை அழைத்துசெல்ல ஒப்புக்கொண்டதை சொன்னதும் என்னைவிட முருகன் தான் அதிக மகிழ்ச்சியடைந்தான் .புறப்படு பாய்,சீக்கிரம் ஆடை மாற்றிகொள் .தேவையானதை மறக்காமல் எடுத்துகொள் என என்னுடன் வந்தான் .முன்பு தீ விபத்தில் கூடாரம் எரிந்து பலரும் அனைத்தையும் இழந்திருந்ததால் .பெரும்பாலானோரின் கடவுசீட்டு உடலின் ஒரு உறுப்பு போல கழுத்தில் தொங்கிகொண்டிருக்கும் .நானும் அப்படிதான் .கடவுசீட்டு எப்போதும் கழுத்தில் தொங்கிகொண்டிருக்கும் .

  என்னுடைய பைகளை அவனே வண்டியின் அருகில் கொண்டு வைத்தான். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன் .நண்பர்கள் கலீல் பாய் ,விஜயகுமார் ,கிருஷ்ணமூர்த்தி அவசரமாக வந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர் .நான் கிருஷ்ணமூர்த்தியிடம்,திரும்பி வரமாட்டேன் உன் பணத்தை நான் எடுத்துகொண்டால் என்ன செய்வாய் என கேட்டேன் .உன் கல்யாணத்துக்கு செலவு செய்ததாக நினைத்துகொள்வேன் என்று சொல்லி சிரித்தான் .

   துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பையில் என்ன இருக்கிறது என வினவினர்.எனது துணிகள் மட்டுமே என்றேன் .துப்பாக்கி ,குண்டுகள் எதுவும் இல்லையா என்றனர் .சிரிப்பையே பதிலாக சொன்னேன் .

   என்னை வண்டியில் ஏற சொல்லிவிட்டு .சில நிமிடங்களில் துப்பாக்கியும் கவச உடையும் அணிந்த ஒருவர் என்னருகே வந்து என்னை வண்டியிலிருந்து கீழிறங்க சொன்னார் .எனக்கும் ஒரு குண்டு துளைக்காத தலை கவசமும் ,ஒரு கவச உடையும் தந்தார் .அவர் தன்னை அந்த பாதுகாப்பு குழுவின் தலைவர் என அறிமுகபடுத்திகொண்டு .நாங்கள் செல்லவிருக்கும் திக்ரித் –பாக்தாத் பயணம் பற்றி ஒரு விளக்கம் தந்தார் .

  நாம் செல்லவிருக்கும் மொத்த பயணதூரம் 228 கிலோமீட்டர் .இடையில் ஒரு முகாமுக்கு சென்று மேலும் ஒருவரை இறக்கிவிட்டு அங்கிருந்து இருவரை  அழைத்து கொண்டு பாக்தாத் சென்று சேருவோம் .அதிக பட்சம் நான்கு மணிநேரமாகலாம் .நாம் பாதுகாப்பாக பாக்தாத் போய் சேருவோம் .

  உனது வண்டியின் ஓட்டுனர் ராணுவத்துக்கு நிகரான  ஒரு அதிகாரி .நமது மூன்று வண்டிகளிலும் ,செயற்கைக்கோள் தொலைபேசியும் .ரேடியோவும் உள்ளது .நீ நடுவில் உள்ள வண்டியில் இருப்பாய் .முன்பும்,பின்பும் ஒரு வண்டி தொடர்ந்து வரும் .ஏதாவது காரணத்தால் வண்டி நின்றால் கண்டிப்பாக உனது வண்டியிலுள்ள அதிகாரியின் உத்தரவு இல்லாமல் நீ கீழே இறங்க கூடாது .

   அப்படியே இறங்கினாலும் கண்டிப்பாக ஓடக்கூடாது .நான் சொல்வதை புரிந்துகொண்டாயா என கேட்டார் .ஆம் என்றேன்.ஆலன் குக்ம் ,நண்பர்களும் ஹாவ் அ ஸேப் ஜார்னி என கையசைக்க வண்டி புறப்பட்டது.அது பஜெரோ கார் பின் இருக்கையில் இரு துப்பாக்கி ஏந்திய வீரர்கள்,நடு இருக்கையில் நானும் அந்த அதிகாரியும் ,என் அருகிலும் ஒரு காவலர் துப்பாகியுடன் .

 முகாமின் வாயிலில் மூன்றாம் முறையாக வருகிறேன் .வாயிலில் நின்ற அமெரிக்க ராணுவம் எங்களை கீழே இறங்கி சோதனைக்கு பின் ஏறும்படி சொன்னார்கள் . இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு பய உணர்வையே தந்தது எனக்கு .ஊருக்கு போனால் கல்யாணம் .போய் சேருவோமா என உறுதியில்லாத அந்த கடைசி திகில்பயணம் துவங்கியது .

  இனி ஒருமுறை சதாமின் அரண்மனைக்கு வரப்போவதில்லை என கண்ணில் இருந்து மறைவதுவரை அந்த அரண்மனை வாயிலை நோக்கியிருந்தேன் .முழு வேகத்துடன் வண்டி முன் நோக்கி செல்ல துவங்கியது .

ஷாகுல் ஹமீது

27-11-2016

Friday, 25 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 25

                                                      காத்திருந்த நாட்கள் 

     என்னுடன் ஊர் செல்லவேண்டிய  குழுவில் உண்ணி,பிரான்சிஸ்,கில்ராய் உட்பட மொத்தம் ஆறுபேர் .மற்றவர்கள் விடிந்தால் ஊருக்கு செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள் .

   காலை ஒன்பது மணிக்குத்தான் பணிக்கு செல்ல வேண்டும் .வழக்கமாக அதிகாலை தொழுகைக்கு பின் தூங்க செல்வேன் .அன்று தூக்கமே வரவில்லை .

    காலையில் மற்றவர்களுக்கு விபரம் சொன்னேன் .மானேஜர் ஆலன் குக்கிடம் கேட்டோம் .எனக்கு எதுவும் தெரியாது மின்னஞ்சல்களை இன்னும் பார்க்கவில்லை .பார்த்துவிட்டு சொல்கிறேன் என்றார் .

    பின்பு எங்களை சந்தித்து இன்று ஒரு போராட்ட அழைப்பு விடுத்துள்ளனர் ஈராக்கிய கிளர்ச்சியாளர்கள்.அதனால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தபட்டுள்ளது உங்களை அழைத்து செல்லும் காவலர்கள் அடுத்த சில நாட்களில் வருவார்கள் .தியதி இன்னும் உறுதிசெய்யவில்லை .விரைவில் தகவல் வரும் .நான் அவர்களுடன் தொடர்பில் உள்ளேன் உங்களை விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாட்டை நான் செய்வேன் என்றார் .

  அனைவருக்கும் பெரிய ஏமாற்றமாக இருந்தது. சில தினங்களுக்கு பிறகு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் இயல்பாக எங்கள் பணிகளில் ஒன்றிவிட்டோம் .அடுத்த சில  நாட்களுக்கு பிறகு மானேஜர் ஆலன் குக் ஐ மட்டும் அழைத்துசெல்ல ஒரு காரும்,பாதுகாப்பு வீரர்களின் ஒரு காரும் வந்தது .ஈகிள் நெஸ்ட் எனும் வேறு முகாமிலிருந்து ஒரு அலுவலர் வந்த அதே காரில் ஆலன் குக் ம ஏறி சென்றார் .

   நான் ஆலன் குக் ஐ சந்தித்து கேட்டேன் .நாங்கள் செல்வது எப்போது என நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன் .விரைவில் நீங்கள் செல்வீர்கள் என சொல்லிவிட்டு காரிலிருந்து எங்களை பார்த்து கையசைத்துவிட்டு  சென்றார்  விடுமுறைக்கு .

   அவர் செல்வது அவரது தாய்நாடான இங்கிலாந்துக்கு .பிரான்சிஸ் திட்டிக்கொண்டே இருந்தான் .வெள்ளகாரனுக்கு மட்டும் வண்டி சரியான தேதில வருது .நமக்கு மட்டும் வண்டி ஏன் அனுப்பல என ஏமாற்றத்துடன் புலம்பினான்.

   பின்பு எந்த தகவல்களும் இல்லாமலாயிற்று .நானும் பிரான்சிசும் தினமும் சந்திக்கும்போது  செய்தி ஏதாவது இருக்கா என கேட்டுகொள்வோம் .அவனாக ஊகித்து ஒரு தியதியில் நாம் செல்வோம் என சொல்வான் .

  நான் என் குடும்பத்தாரிடம் சொல்லியிருந்தேன்.நான் ஊர் வந்த பின் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும் என .இருந்தாலும் நான் அக்டோபரில் ஊர் செல்வது உறுதியாகியிருந்ததால் .டிசம்பர் ஒன்பதாம் தியதி திருமண நாள் குறிக்கப்பட்டு ,பெண்வீட்டார் மண்டபம் முன்பதிவு செய்திருந்தனர் .

    முகாமில் உள்ள மற்றவர்கள் ஊர் செல்லவேண்டிய எங்களை பார்த்து ஏளனத்துடன் சிரிப்பதும் ,நாளை நீங்கள் செல்லும் வண்டி வரும் என கிண்டலாக பேசுவதும் எங்களுக்கு பழகிபோயிருந்தது .விஜயகுமார் என்னை பார்க்கும்போது எனக்கு கல்யாணம் ,எனக்கு கல்யாணம் என சொல்லி கிண்டலடிப்பான் .

     அடுத்த இரண்டுநாட்களில் நீங்கள் செல்கிறீர்கள் என்பார்கள். செல்வதற்கு முந்தைய நாள் ரத்தாகிவிட்டது என செய்திவரும்.        முன்பெப்போதும் இப்படி ஆனதே இல்லை .குறிப்பிட்ட நாளில் சரியான நேரத்தில் வண்டியும் பாதுகாப்பு வீரர்களும் வருவர் .விடுமுறைக்கு செல்பவர்கள் மகிழ்ச்சியுடன் செல்வர் .

   ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை எங்கள் பயணம் உறுதிசெய்யப்பட்டு பின்பு ரத்தானது .விடுமுறைக்கு சென்ற ஆலன் குக் முகாமுக்கு திரும்பி வந்தார் அவரின் மூன்று வார விடுமுறை முடிந்து .

     எங்களிடம் இப்போது சாலை போக்குவரத்து மிக ஆபத்தாக உள்ளதாகவும் பயணம் செல்வது மிக கடினம் என  சொன்னார்கள் .ஆனால் உயர் அலுவலர்கள் மட்டும் அவர்கள் விடுமுறைக்கு  போவதும் வருவதுமாக இருந்தனர்.

  அப்போது குளிர்காலம் துவங்கியிருந்தது ,ஒரு குளிர்நாள் இரவில் மனமகிழ் மன்றம் சென்றிருந்தோம் .அங்கே ஆலன்குக்,அமெரிக்க அலுவலர் வில்லியம் உடன் வந்திருந்தார் .வில்லியம் என்னை பார்த்து ஷாகுல் ன் முகத்தை பார் மிக சோர்ந்து போய்விட்டான் என ஆலன்குக்யிடம் சொன்னார். நான் ஊருக்கு செல்லும்போது இவர்கள் செல்வதற்குரிய ஏற்பாடுகளை முழுமையாக செய்துவிட்டு சென்றிருந்தேன் .ஆனால் நான் திரும்பி வந்தபிறகும் இவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் என்றார் .
  
   எனக்கு தெரியும் ஷாகுலின் திருமனத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது .அவனது பெற்றோர் அவனை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என .விரைவில் உன்னை மட்டுமாவது அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்றார் ஆலன் குக் .
 
   நாங்கள் ஊர் செல்லும் ஆறுபேரும்  கூடி பேசி வேலைக்கு செல்வதில்லை என முடிவு செய்தோம் .நான் ஆலன் குக் ஐ அவரது அலுவலத்தில் சந்தித்து நாங்கள் வேலைக்கு வரமாட்டோம் என்றேன் .உங்கள் விருப்பம் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் .

    நாங்கள் ஆறுபேரும் பணிக்கு செல்லவில்லை .சாப்பிட மட்டும் உணவு கூடம் செல்வேன் .இரவு ஒன்பது மணிக்குமேல்தான் நண்பர்கள் பணி முடிந்து வருவர் பத்து மணிவரையில் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கலாம்.இரவு பணிக்குசெல்பவர்கள் மாலையில் சந்தித்து சிறிதுநேரம் உரையாடலாம்.பகலில் கொஞ்சம் தூங்கியும் ,தொலைக்காட்சி பார்ப்பதுமாக இரு நாட்கள் கடந்தன .

  இருந்தாலும் ஒரு முழு பகல் வேளையை என்னால் சும்மா இருந்து கழிக்க இயலவில்லை. எந்த வேலையும் இன்றி அடுத்து எத்தனை நாட்கள் இப்படியே  இருக்கவேண்டிவரும் என நினைக்கும்போது அது ஒரு பெரும் அவஸ்தையாக தோன்றியது. இரவில் படுத்திருப்பேன் உடல் களைப்பில்லாததால் தூக்கமின்றியும், அதை தொடர்ந்து வரும் எதிர்மறை எண்ணங்களும் என்னை நிம்மதியிழக்க செய்தன .என் இயல்புக்கு சமந்தமில்லாத எண்ணங்களால் மனம் அமைதியின்றி  ,கொந்தளிப்பாக  இருநாட்கள் கடந்தன.

   எண்ணங்கள் இப்படிதான் துவங்கும் .ஆலன் குக் ன் அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குவது அல்லது உணவு கூடத்தின் வாயில் கதவில் இருக்கும் கண்ணாடியை உடைப்பது இப்படி கட்டுபடுத்த முடியாத தொடரும் எண்ணங்கள் என்னை வதைத்தது .இவை செயலாகும் போது அதன் விளைவுகளை எதிர் கொள்ள என்னால் இயலாது என என் மனதுக்கு தெளிவாக தெரிந்தது .
  
   அதை கடந்து செல்ல என்ன வழி என மனம் போராடியது.இரண்டாம் நாள் இரவு தூக்கமேயின்றி படுத்திருந்தேன் ,நெடுநேரத்திரற்க்குபின் மனம் உறுதியாக ஆணையிட்டது ,வேலைக்கு செல்,வேலைக்கு செல் .அது ஒன்றே வழி இந்த சூழ்நிலையை கடந்து செல்ல முடியும் என .
  
  யாரிடமும் கலந்தாலோசிக்காமல் காலையில் குளித்துவிட்டு  எட்டுமணிக்கெல்லாம் ஆலன்குக் ஐ பார்த்து இன்று முதல் நான் பணிக்கு வருகிறேன் என்னால் அறையில் சும்மா இருக்க முடியவில்லை .எனக்கு வரும் கெட்ட எண்ணங்களை அவரிடம் சொன்னேன். ஆம் நானறிவேன் வேலையின்றி சும்மா இருப்பது பெரும் தண்டனையாக இருக்கும் என்றார். இப்போதும் அதே பதிலை சொன்னார் .உன் விருப்பம் நீ தாரளமாக பணிக்கு வரலாம் என்றார்  மிக்க நன்றி என சொல்லிவிட்டு உடனே பணிக்கு சென்றுவிட்டேன் .

   உண்ணி மறுநாள் பணிக்கு வந்தான் ,தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களும் பணிக்கு வந்துவிட்டனர் .பிரான்சிஸ் மட்டும் உறுதியாக பணிக்கு வர மறுத்துவிட்டான் .


   ஊர் செல்லும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தோம்.

  ஷாகுல் ஹமீது ,
   25-11-2016

Tuesday, 22 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 24

தடைபட்ட பயணம் 

நேபாளிகள் பனிரெண்டுபேரின் படுகொலை,இன்னும் சிலரை பிணைய கைதிகளாகவும் பிடித்துவைத்திருந்தனர் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதனால் இந்திய அரசாங்கம் இந்தியர்கள் ஈராக்கில் பணிக்கு செல்ல தடை விதித்தது. அதை எங்கள் முகாமின் அறிவிப்புபலகையில் ஓட்டியிருந்தனர். அதனால் விடுமுறையில் செல்லும் யாரும் திரும்பி வர இயலாது என சொன்னார்கள் .

   ஆனாலும் பல நிறுவனங்கள் துபாய் வழியாகவும் ,ஜோர்டான் வழியாகவும் பணியாளர்களை இராக்கிற்குள் கொண்டு வந்து கொண்டே இருந்தனர் .
   
நான் அங்கிருக்கும்போது  என் குடும்பத்தார் எனக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்தார்கள் .2004 ஆகஸ்ட்ல் , அக்டோபர் மாதம் ரமலான் அதன் பிறகு திருமணம் என முடிவு செய்தார்கள் .
  நான்  அக்டோபர் மாதம் இந்தியா செல்ல வேண்டுமென விண்ணப்பித்தேன்.அப்போது ரமலான் நோன்பு காலம் தொடங்கியிருந்தது. ரமலானில் அதிக தாக்குதல்கள் இருக்காது என்றனர் .ஆனால் வழக்கத்தைவிட அதிக தாக்குதல் நடந்துகொண்டிருந்தது .
   எங்களுடன் இருந்த அதிகாரிகளுக்கு ஏழு வாரம் வேலையும் மூன்று வார விடுமுறையும் .அவர்கள் அடிக்கடி ஊருக்கு போய் வருவதுபோலிருக்கும். எங்களுக்கு ஆறுமாதங்களுக்கு பின் மூன்று வாரம் என இருந்தது .பின்பு வருடத்திற்கு ஒருமுறை என்றாகியது .அப்போது தாக்குதல்கள் அதிகமாக இருந்தபடியால் சிலருக்கு சரியான நேரத்தில் விடுமுறைக்கு செல்ல இயலவில்லை .சிலரை சிறப்பு வாகனத்தில் அழைத்து சென்றார்கள் .
 
   அப்போது பாக்தாத் விமான நிலையம் ஒரு தனியார் நிறுவனத்தால் செயல்படதொடங்கியிருந்தது .பாக்தாத்வரை சாலை பயணம் மிக கடினமாகி விட்ட நாட்கள் அது .
  அக்டோபர் 25 ம் தியதி இந்தியா செல்லும் ஆறு பேர்கொண்ட குழுவில் என் பெயரும் வந்தது .அதன் பின் இருந்த பத்து நாட்கள் மகிழ்ச்சியாக சென்றது. அப்போது ரமலான் நோன்பு காலம் .தினமும் நோன்பு வைக்கும் நண்பர்களை அதிகாலையில் சாப்பிட நான் எழுப்பி விடுவேன் .மூன்று மணிக்கு எழுந்து இருட்டில் அந்த இளங்குளிரில் வேறு வேறு அறைகளில் இருக்கும் நண்பர்களின் படுக்கையை கண்டுபிடித்து எழுப்புவேன் .

 அறையில் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் மற்றவர்களின் துயில் கலையாமல்  அதை செய்யவேண்டும் .கலீல் பாயை லேசாக உடலில் கைபட்டதா  என உணர்வதற்குள் அவர் எழுந்து  சலாம் சொல்வார் .ரோஷன்,அயுப் மற்றும் சிலரை சில வினாடிகள் மெதுவாக தட்டினால் எழுந்துவிடுவர்.ஜின்னா  பாஷா அவனை எழுப்புவது மிக கடினம் உடலில் தட்டியும்,அடித்தும் படுக்கையிலிருந்து தூக்கி அவனை உட்கார வைத்தால் ஆம் இதோ வருகிறேன் என்பான் .
  
   கழிவறை சென்று ,கை கால் கழுவி,ஆடை மாற்றி  உணவு கூடத்திற்கு செல்லும் போது அவனது அறையை பார்த்தால் மீண்டும் தூங்கிகொண்டிருப்பான்.மீண்டும் எழுப்பி நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் வா என நாங்கள் சாப்பிட செல்வோம். இரவு பணியிலிருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை  அரிசி சாதமும் ,பருப்பும் செய்து எங்களுடன் இணைந்து கொள்வர் .

  மாலையில்  நோன்பு திறக்கும் நேரம் நோன்பிருக்கும் சில ராணுவ வீரர்களும் எங்களுடன் இணைந்து கொள்வர் .உள்ளூர் ஈராக்கி அவனுடைய வீட்டு பேரீச்சம் மரத்தில் காய்த்த பேரீச்சம்பழமும் ,துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள்,தர்பூசணிபழம் ,ஆப்பிள் அல்லது மாம்பழ பழசாறும் ஏதாவது ஒரு வகை கேக்கும் வைத்திருப்போம் .
   13,14 மணிநேரம் சொட்டு நீர் கூட அருந்தாமல் இருந்துவிட்டு நோன்பு திறந்ததும் எதுவும் சாப்பிடமுடியாது .ஒரு பேரீச்சை,சில பழதுண்டுகள் ,ஒரு டம்ளர் பழச்சாறு ,அல்லது நீர் அருந்தினால் வயிறு நிரம்பிவிடும் .உடல் மீண்டும் ,மீண்டும் தண்ணீரையே கேட்கும் .மாலை நேர தொழுகைக்குபின் இரவில் எட்டு மணிக்குதான் இரவுணவு சாப்பிடுவோம் .

 ரமலானில் ஒரு நாள் பகல் பொழுதில் அமெரிக்க ராணுவ வீராங்கனை லிலானி யை உணவு கூடத்திற்கு வெளியே சந்தித்தேன்.மதிய உணவு முடிந்து வெளியே உள்ள மரநிழலில் உள்ள சிமென்ட் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.கையில் சுவையான கோல்டு கோன் ஐஸ்கிரீம்  இருந்தது. என்னை கண்டதும் ஐஸ்க்ரீம் ஐ மறைத்துவிட்டு ஹாய் என்றாள்.ஹாய் லிலாணி நலமா என கேட்டேன்.மிக்க நலம் ஷாகுல் உங்கள் நோன்பு காலம் தொடங்கிவிட்டது நீ நோன்பிருக்கிறாயா என கேட்டாள்.
ஆம் நீ ஏன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாய் நீ சாப்பிடு என்றேன்.எங்கள் மூத்த அதிகாரிகள் ரமலான் துவங்கிய அன்றே எங்கள் அனைவரிடமும் சொல்லியிருக்கிறார்கள் .இந்த ஒரு மாதம் இசுலாமியர்கள் பகலில் நோன்பிருப்பார்கள் .அதனால் அவர்கள் முன்பு உண்பதையும், பருகுவதையும் நீங்கள் தவிர்க்கவேண்டுமென சொல்லிவிட்டு கையிலிருந்த ஐஸ்க்ரீம் ஐ குப்பைதொட்டியில் போட்டுவிட்டு நான் பின்னர் வேறு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொள்கிறேன் என்றாள்.
  எவ்வளவு உயர்ந்த பண்பு அவர்களுடையது என எண்ணி கொண்டேன். பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள் என ஆட்சியிலும் ,அதிகாரத்திலுமிருப்பவர்கள் கீழ் பதவியிலிருப்பவர்களுக்கு சொல்லி தருகிறார்கள் .நான் பார்த்த பெரும்பான்மையினர் இன,மத,மொழி வேறுபாடின்றி பழகுபவர்கள் .பிறரை தன்னைப்போலவே சமமாக கருதுபவர்கள் .
நீ எப்போது ஊருக்கு போகிறாய் என என்னுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு  நீ திருமணம் செய்யும் பெண்ணுடன் பேசினாயா என கேட்டாள்.
 பின்பு  லிலானி தன் சட்டைப்பையிலிருந்து  பத்து நிமிட மதிப்பு கொண்ட இரு தொலைபேசி அட்டைகளை தந்து உன் பெண்ணிடம் பேசு என அழகிய பற்கள் தெரிய புன்னைகைத்தாள்.உங்கள் ஊர் பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .நீ திருமணதிற்கு முன் பெண்ணை சந்திக்க முடியுமா என கேட்டாள்.ஆம் நான் ஊர் சென்றதும் பார்ப்பேன் என்றேன் .
    லிலானி  நான் முகாமிலிருந்த கடைசி மூன்று மாதங்கள் என்னுடன் நல்ல நட்புடன் பழகியவள் .இந்திய கலாச்சாரத்தையும்,இந்தியா மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தாள் .நம்மை பற்றியும் நம் நாட்டை பற்றியும் நிறைய அவர்கள் படிக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன் .

   லிலானி பதவி உயர்வு கிடைத்து தோள்பட்டையில் நட்சத்திரம் பதிக்கும் (piping ceremony ) விழா மனமகிழ் மன்றத்தில் நடந்தது .என்னை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தாள்.அன்று பணி காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை .
    அக்டோபர் மாதம் 24 ம் தியதி காலையிலேயே முருகன் பாய் இன்னைக்கு கடைசிநாள் .கவனமா வேலைசெய்  என்றான் . மறுநாள்  ஊர் செல்கிறேன் என்ற உற்சாகம் காலையிலேயே தொற்றிகொண்டது .தெரிந்த அனைவரிடமும் விடை பெற்றுகொண்டேன் .
   கலீல் பாயும் ,கிருஷ்ணமூர்த்தியும் வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர் .துறையூர் விஜயகுமார் பணமும் ,மலிவு விலையில் வாங்கிய பனிரெண்டு பனியன்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்க தந்தான் .என்னிடம் நான் உபயோகித்த பொருட்கள் மட்டுமே இருந்தன .அதனால் ஒரு பயண பையும் நண்பர்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்க தந்த பொருட்களை ஒரு அட்டை பெட்டியிலும் கட்டி கொண்டேன் .
    மாலை பணி முடிந்து என்னுடன் ஸ்டோர்ஸ் ல் வேலை செய்த அனைவரிடமும் நன்றி கூறி விடை பெற்றேன் .அடுமனையில் உள்ள ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சந்தித்து போய் வருகிறேன் என்றபோது,அனைவரும் என்னை வாழ்த்திவிட்டு காலையில் வண்டி புறப்படும் முன் சந்திக்கிறோம் என்றனர் .
   வீட்டிற்கும் தொலைபேசியில் அழைத்து சொன்னேன் .நாளை முகாமிலிருந்து புறப்பட்டு பாக்தாத் செல்வோம் .அங்கு சென்றபின்னர் தான் விமான சீட்டு கிடைக்கும் .இந்தியா வந்து சேரும் நேரம் ,நாள் பின்னர் தெரிவிப்பேன் என்றேன் .

  அன்று இரவு உணவுக்குப்பின் நண்பர்களுடன் வெகுநேரம் பேசிகொண்டிருந்துவிட்டு தாமதமாக தூங்க சென்றேன் .அதிகாலை மூன்று மணிக்கு கடிகாரம் அழைப்புமணியை ஒலிக்கும் முன்பே எழுந்து நண்பர்களையும் எழுப்பிவிட்டு நோன்பு வைப்பதற்காக சாப்பிட உணவு கூடத்திற்கு சென்றோம் .பணியிலிருந்த கதிர் பாய் ஆம்பிளேட் போட்டு தரவா என கேட்டான் .இனி நாம் சந்திப்பது முடியுமா என தெரியாது  அதனால் உன்னை சந்தோஷபடுத்த இது எனக்கு கடைசி வாய்ப்பு என்றான்.சிரித்துக்கொண்டே சரி என்றேன் .
 
      உணவை தட்டில் எடுத்து விட்டு உணவு கூடத்திற்கு உள்ளே சென்றமர்ந்தோம் .அப்போது அங்கு இரவு பணியில் இருந்த அமெரிக்க பெண்மணி .இன்று சாலை போக்குவரத்து ,வான்வழி அனைத்தும் நிறுத்த அழைப்பு விடுத்துள்ளனர் .அதனால் இன்று உங்கள் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றாள் .
 அதிகாலையே அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது அன்று .
 ஷாகுல் ஹமீது ,

21-11-2016.

Sunday, 20 November 2016

எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!(கவிதை)

தோழியும் மூத்த சகோதரியுமான லோகமாதேவி அவர்களுடைய ஒரு கவிதை அவர்களின் அனுமதியுடன் வெளியிட்டுள்ளேன் .

எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!

உங்களுக்கு கிடைத்திருக்கிறதா
களைத்துத் திரும்பும் மாலையில் தோட்டத்து வாயிலில் காத்திருக்கும்
ஏதோ பெயர்தெரியாப்பறவை உங்களுக்கெனெ விட்டுவிட்டுப்போன  பூஞ்சிறகொன்று?

உங்களுக்கு வாய்த்திருக்கிறதா
விசிறி வாழைகளின் கொழுத்த இலை மட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பொன்று நீட்டும் பிளவுபட்ட கருநீல நாக்கை காணும் பரவசம்?
உங்களைக்கண்டதும்  காலடியில் நுழைந்து  ஒடியிருக்கிறதா

மரவள்ளிகிழங்குகளை தோண்டித் தின்றுகொண்டிருக்கும்  சாம்பல் வண்ண  முயல்கள்?
நீங்கள் ரசித்திருக்கிறீர்களா

மழை ஓய்ந்த மறுநாள் காலையிலான கழுவித்துடைத்தாற்பொன்|ற துல்லிய நீல வானை?

பசும் இலைகளின் இடையே  பூத்திருக்கும் செம்பருத்தி மலர்களின் குருதிச்சிவப்பை?

குஞ்சுகளுடன்  தோட்டத்து ஈரமண்ணில் புழுக்களைத் கொத்தித்திண்னும் பெண்மயில்களை?

சின்னஞ்சிரு கைகளில் உதிர்ந்த முருங்கைப்பூக்களை ஏந்தியபடி கொறித்துததின்னும் அணில்களை?

     தனித்திருக்கும் முற்பகலில் கேட்டுக்கொண்டேயிருக்கும் ஏதேதோ பறவைகளின் உற்சாகக்கூக்குரல்களை?

கவனித்திருக்கிறீர்களா  தன்னந்தனிமையில்  உங்கள் காலடியில் காலம் நழுவிச்செல்வதை?

பாலெனெப்பொழியும் நிலவில் பனியில் நனைந்தபடி கடந்திருக்கிறீர்களா உறங்காத இரவுகளை?

எனினும் உங்களுக்கு இருக்குமாயிருக்கும்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில்  பின்னிருந்து இறுக்கிக்கொள்ள கணவனோ நண்பனோ!!

ஞாயிற்றுக்கிழமைகளின் பின் மதியத்தில் கட்டிக்கொண்டு உறங்க  ஒன்றிரண்டு குழந்தைகள்

திங்கள்கிழமைகளின் சிடுசிடுப்பை காட்டிக்கொள்ள கணவனோ மனைவியோ!!!

 தீர்ப்பு சொல்லி சமரசம் செய்து வைக்க குழந்தைகளின் சண்டைகளும்
துவைத்து  உலர்த்தி மடித்து வைக்க நிறைய துணிகளும், கண்ணீருக்கெனெ காரணங்களும்,

உங்கள் வருகைக்காய் காத்திருந்து தேனீர் தயாரிக்கும் யாரோவும்
அவரவர்க்கு அவரவர் வாழ்வு

விருப்பங்களும் விழைவுகளும்  நேர்மாறான  நிஜங்களுமாய் !!!
இனிது இனிதா ஏகாந்தம்? அல்லாமல்

இக்கரையின் இச்சைகளின் வழிதெரியும் அக்கரைப்பச்சையா எல்லாம்?-- 

லோகமாதேவி

ஈராக் போர் முனை அனுபவங்கள் 23


                தொடர் போரினால் நலிந்த ஈராக்
 
    திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம்.ஆகவே தாக்குதல்களும் அதிகம். உச்ச கட்ட தாக்குதல் என்றே சொல்லலாம்.அன்று இரவு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான ஒரு தீ பிழம்பு, தொடர்ந்து சில வினாடிகளுக்கு பின் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது .

  தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம்.அன்றைய குண்டு வெடிப்பில் காயமின்றி தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட் ல் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது சற்று தூரத்தில் குண்டு விழும் சப்தம் கேட்டதும் போர்க்லிப்ட் ல் இருந்து குதித்து ஓடி தப்பிவிட்டான் .

  அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம்.அருகருகே வெடித்தால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது.என்றுமில்லாத பேரமைதி அன்று பங்கருக்குள் .கமல் காதை பொத்திகொண்டே  அமர்ந்திருந்தான்.காதுக்குள் அந்த பெரும்சப்தம் கேட்டுகொண்டே இருந்தது, கூடவே காது வலியும்.
  
   ராணுவ மருத்துவகுழு எங்கள் குடியிருப்புக்கு விரைந்து வந்தனர் .ஆம் அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது .ஆனால் அனைத்தும் குடியிருப்புக்கும், உணவு கூடத்திற்க்கும் சில மீட்டர்கள் தள்ளியே விழுந்ததால் யாரும் காயமின்றி தப்பினோம் .

  மருத்துவகுழு  கமலுக்கு சில மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றது. இருந்தாலும் என் மனதில் இருந்த விடை கிடைக்காத கேள்வி .ஈராக்கின் அனைத்து எல்லைகள்,       (குவைத்,சவூதிஅரேபியா,ஈரான்,சிரியா,ஜோர்டான்,துருக்கி) கடல்மார்க்க வழியனைத்தும்(உம்காசர் துறைமுகம் ) அமெரிக்காவின் கட்டுபாட்டுக்குள் இருந்தது. இருந்தும் பெரும் தாக்குதல் நடத்த இராக்கிகளுக்கு எப்படி அதிநவீன ஆயுதங்களும் ,வெடிகுண்டுகளும் கிடைக்கிறது என .

   நண்பர்கள் சிலர் பேசிகொள்வதுண்டு இங்கு  பிரச்னை இல்லை என்றால் அமெரிக்காவுக்கு ஈராக்கில் வேலையில்லை அதனால் அவர்களே குண்டுகளை கொடுத்து வெடிக்க செய்யலாம் .தாக்குதலுக்கான ஆயுதங்களையும் அவர்களே கொடுக்கலாம் எனவும் .ஈராக்கின் பஸ்ரா நகரிலுள்ள எண்ணை கிணறுகளிலிருந்து பெருமளவில் எண்ணையை கப்பல்கள் மூலம் அமெரிக்கா செல்வதாகவும் சொல்லிகொள்வர்.ஈராக்கின் பல எண்ணை கிணறுகளின் ,எண்ணை எடுக்கும் ஒப்பந்தத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு சதாம் ரஷ்ய நிறுவனத்திற்கு அளித்ததும் அமெரிக்காவை சதாம் மீது முன்பே கோபம் கொள்ள செய்தது .

  அப்போது நான் முன்னணி நாளிதழில் படித்த ஒரு தலையங்கம்.எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் தனது தயாரிப்பை பற்றிய ஒரு செயல் முறை விளக்கம் அளிக்கும் .

 ஒரு மோட்டார் கார் தயாரிக்கும் நிறுவனம் தனது காரின் சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளருக்கு விளக்கி காண்பித்ததும் அவர் அதில் ஒரு டெஸ்ட் டிரைவ் போய் வரலாம் அதன் சிறப்பம்சங்களை விளங்கிகொள்ள .அதிகளவில் வெடிகுண்டுகளையும் ,ஆயுதங்களையும் தயாரித்து விற்பனைசெய்யும் அமெரிக்கா .அந்த ஆயுதங்களின் சிறப்பை விளக்கி காண்பிக்க பயன்படுத்திய களம்தான் ஈராக் என்றது அந்த முன்னணி நாளிதழ் .

  அதை படித்தபோது எனக்கும் அப்படிதான் தோன்றியது .அப்போது ஈராக்கின் மீது அமெரிக்க கூட்டு படைகள் தாக்குவதற்கு சொன்ன காரணம் சதாம் ரசாயன ஆயுதங்களை பதுக்கிவைத்துள்ளார் என .ஆனால் ஐக்கிய நாட்டுசபையின்  குழு ஈராக்கில் சோதனை நடத்த முதலில் சதாம் ஒப்புகொள்ளவில்லை அதுவே ஈராக்கில் ரசாயன ஆயுதம் இருக்கலாம் என உலக நாடுகளை சந்தேகம் கொள்ள செய்தது .
 
  பின்பு ஈராக்கில் சோதனை நடத்திய ஐக்கிய நாட்டு சபையின் குழு அங்கு ரசாயன ஆயுதம் ஏதும் இல்லை என அறிக்கை வெளியிட்டது .அதன் பின்பும் தனது சட்டம்பி தனத்தை காண்பிக்க அமெரிக்காவின் கூட்டு படைகள் ஈராக் மீது தாக்குதல் நடத்தி சின்னாபின்னமாக்கியது .


 உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் இருந்திருக்க வேண்டிய ஒரு நாடு ஈராக்.பல அரபு நாடுகளில் எண்ணைவளம் மட்டுமே இருக்கிறது தண்ணீருக்கு கஷ்டம்தான். நல்ல எண்ணை வளமும்,தைகிரீஸ் ,யூப்ரடீஸ் என வற்றாத இரு ஜீவநதிகள் ஓடும்  நாடு ஈராக். பண்டைய மொஸபட்டோமிய தான் இப்போதைய ஈராக் .ஜோதிட சாஸ்திரத்தை உலகக்கு அளித்தவர்கள் பாபிலோனியர்கள் என்றும் சொல்லபடுகிறது .பல ஆண்டுகள் தொடர்ந்து நட்சத்திரங்களை கவனித்து எழுதினார்களாம் .
 
  சதாம் அண்டைநாடான ஈரானுடன் பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போர், பின்பு குவைத் ஈராக்கின் ஒரு மாநிலம் என சதாம் நள்ளிரவில் தனது படைகளை அனுப்பி குவைத்தை கைபற்ற (1991)அப்போதும் அமெரிக்கா படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி குவைத்தை மீட்டு கொடுத்தது .

  இப்போது இந்த போர். எல்லாம் சதாமின் தவறான காய் நகர்த்தல்கள் இப்போது ஈராக் வறுமையில் இருக்கிறது .தவறான ஆட்சியாளரின் கையில் கிடைத்ததால் அங்குள்ள குடிமக்கள் வறுமை,அமைதியின்மையும் என நிம்மதியற்ற வாழ்க்கையை வாழும் நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டார்கள் .
 
 தொடர் போரினால் எந்த தொழிலும் ,உற்பத்தியும் செய்யமுடியாமல் வசதியானவர்கள் கூட நடுத்தெருவுக்கு வரவேண்டியதாயிற்று உள்நாட்டில்.ஆனால் எங்கோ இந்த போரினால் ஆதாயமடைந்து கோடீஸ்வரர் ஆனவர்களும் இருந்தனர் .அண்டைநாடுகளான குவைத் மற்றும் துருக்கியின் உணவு பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்கள்,லாரிகள் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விடும் இன்னபிற நிறுவனங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம் .
ஷாகுல் ஹமீது,
20-11-2016.

Sha260@yahoo.co.in

Sunday, 13 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 22

                           சதாமின் கைது

     முகாமில்   ராணுவதிற்க்கான ஒரு விற்பனை மையம் இருந்தது .அங்கு தொலைபேசி அட்டைகளும் ,உடைகளும், காமிராக்கள் போன்றவைகளும் சில அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் .பெரும்பாலனவை சீன தயாரிப்புகள்.இப்போதும் சீன பொருட்கள் தான் அதிகமாக அமெரிக்காவின் வால்மார்ட் ஐ நிறைத்திருக்கிறது . சீனாவிற்கு இன்று அமெரிக்கா ஒரு பெரிய சந்தை  .

   சில நேரங்களில் தள்ளுபடி விற்பனை நடக்கும் .குறிப்பாக நன்றி தெரிவிக்கும் நாள், (thanks giving )நவம்பர்  26 என நினைக்கிறேன் ,கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களில் பொருட்கள் மிக மலிவாக கிடைக்கும் .ஒருமுறை அப்படி பனியன்கள் மிக குறைந்த விலையில் விற்பனையானபோது பெரும்பாலானோர் குறைந்தது ஆளுக்கு பத்துக்குமேல் வாங்கி கொண்டனர் .

  நண்பன் கார்த்திக் ஒருநாள் இரவு பணி முடிந்து காலையில் காண்டீன் சென்றிருந்தான் .சில மாதங்களுக்கு முன்பு அவன் எழுபைத்தைந்து டாலர் விலையில் பார்த்த ஒரு ஷு பின்பு முப்பதாக குறைந்து பின்பு பதினைந்தாகி இருந்தது .
 
  அது ஒரு பிரபல முன்னணி நிறுவன தயாரிப்பு ஆச்சரியமான மலிவு விலை அது . அவன் எதுவும் யோசிக்காமல் எனக்கும் ,ஜெசிக்காவுக்கும் சேர்த்து மூன்று ஷுக்களை வாங்கி வந்துவிட்டான் .நான் யாரை கேட்டு வாங்கினாய் இதற்க்கு காசு நான் தர முடியாது என பொய் கோபம் காட்டினேன் .உன்கிட்ட யாரு  பணம் கேட்டா நண்பனுக்கு நான் வாங்கிதந்தது என்றான் .
  அப்போது புதிதாய் வந்திருந்த ஒருவன் நானூறு டலாரில் ஒரு காமிராவை வாங்கியிருந்தான் .வேறொருவன் நூறு டாலரில் ஒரு முதுகில் தொங்கவிடும் பை ஒன்றை வாங்கியிருந்தான் .நான் என்னுடன் வேலை செய்யும் பிலிப்பினோக்களை பார்த்திருக்கிறேன் .தேவையற்ற பலதையும் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் .

   வாரம்தோறும்  நாற்பத்தைந்து டாலர்கள் அனைவருக்கும் கையில் கிடைக்கும் போர்முனையில் பணி செய்வதால்.பாய் இவிங்களுக்கு  கையில் காச கண்டதும் எனத்த வாங்கதுனே தெரியாம மனம் போல செலவழிக்கானுவோ பாரு ,பைசாக்க அருமை தெரியலை என்பான் முருகன்.
  
   பணி முடிந்து தினமும் இரவு டாலரில் சீட்டாடும் ஒரு கும்பல் இருந்தது .அதை ஒரு கடமையாகவே செய்வார்கள் .இந்திய மதிப்பில் பல ஆயிரங்களை இழந்தவர்களுடன் ஒப்பிடும்போது அதிகவிலைக்கு தேவையே இல்லாத பொருட்களை வாங்கியவர்கள் பராவாயில்லை என்றே தோன்றியது.
 
    கல்கத்தாவின் அலெக்ஸ் எனும் சமையற்காரருக்கு இரண்டாயிரம் டாலர்கள் சீட்டாட்டத்தில் கிடைத்ததாக சொல்வார்கள் .அப்படியெனில் மற்றவர்கள் இழந்தது அந்த இரண்டாயிரம் என நினைத்துகொண்டேன் .
 
   பக்குபாவில் இருந்தபோது என் நெருங்கிய நண்பன் இருநூறு டாலர்களை இழந்திருந்தான் .கையில் பணம் இல்லாமல் கடன் வாங்கி சீட்டாடியது .கடன் தந்தவன் ஊர் செல்லும்போது கொடுக்க பணம் இல்லை .இனிமேல் காசு வைத்து சீட்டாடமாட்டேன் என சத்தியம் வாங்கிகொண்டு .வெங்கட்ராமன் எனும் நண்பனிடம் பணம் பெற்று கொடுத்தோம் .
 
   வெளிநாடுகளில் வேலை செய்யும் பலர் வார விடுமுறை நாட்களில் இதுபோல் பெரும்பணத்தை இழப்பதுண்டு .அது ஒரு போதை முதலில் இழந்ததை மீட்கிறேன் என தொடர்ந்து ஆடி மொத்தமாக பெரும்தொகையை இழந்து டீ குடிக்க காசில்லாமல் ஆன பின் ஒரு உறுதி இனிமேல் ஆடமாட்டேன் என .

    அடுத்தவார விடுமுறை நாளில்  உறுதி தளர்ந்து மீண்டும் பணத்தை இழப்பதும் ,மீண்டும் உறுதி கொள்வதும் தொடர்கதைகள் .

    அன்று வழக்கம் போல் வேலை செய்துகொண்டிருந்தோம் .உணவு கூடத்தில் மாலையில் வந்த ராணுவ வீரன் ஒருவன் கார்த்திக்கிற்கு நல்ல நண்பன் .கறுப்பினத்தை சேர்ந்தவன் .நீங்களும் என்னை போல கறுப்பாகவே இருக்கிறீர்கள் என சொல்லி சப்தமாக சிரிப்பான் .அதனால் தான் உங்களுடன் அன்பாக இருக்கிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிரிப்பு .எங்களின் கையை ,அவனது கையுடன் சேர்த்து வைத்து இரண்டும் ஒரே நிறம் நாம் சகோதரர்கள் என சொல்லி சப்தமாக சிரிப்பான் .அந்த ராணுவ வீரனை போல சப்தமாக சிரிப்பதற்கு பலரும் முயற்சிப்பார்கள் .

   கலீல் பாய் ஒருநாள் சொன்னார் .தும்ஹார மதராசி சப் லோக் பாகல் ஓஹையா.உன் ஊர்காரன் எல்லாருக்கும்  பைத்தியம் பிடித்துவிட்டதா ஏன் இப்படி கூடி நின்னு சிரிக்கானுவோ என்பார் .

     அன்று மாலை எங்களிடம் சதாமை பிடித்து விட்டோம் இங்கே அருகில் தான் பதுங்கி இருந்தான் என சாதரணமாக சொன்னான் .இன்று செய்தி வராது லெப்டினன்ட் கமான்டர் நாளைதான் இதை வெளியே சொல்வார். லெப்டினன்ட் கமாண்டர் ஐ ஒரு முறை பார்த்திருக்கிறேன் .

  எங்களுடன் பணி செய்த ஒருவனுக்கு  குண்டுவெடிப்பில் காலில் சிறு காயங்கள் அடைந்தபோது அவனை பாராட்டி ஒரு சிறு பதக்கம் (medal)கொடுத்தார்கள் .அப்போது லெப்டினன்ட் எங்கள் முகாமுக்கு வந்திருந்தார் அவர் தான் பதக்கத்தை அவனுக்கு அளித்தார் .

  அப்போது ஒரு குரல் கேட்டது .மெடல் வாங்கணும்னா குண்டடி படனும் என .

  எங்கள் முகாமின் பின் ஓடும் டைகிரிஸ் ஆற்றங்கரை ஓரமாக ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு பதுங்கு குழியில் சதாமை பிடித்ததாக சொன்னார்கள் .ஆம் அது எங்களுக்கு மிக அருகில் தான் .
.
  அது சதாம் என எங்களுக்கு தெரியாது .பார்த்தாலும் தெரியவில்லை எங்களுக்கு தகவல் சொன்னவன் சொன்னதால் நம்பினோம் .பலநாட்கள் ரகசியமாக கண்காணித்து ஒருவனை மடக்கி பிடித்து விசாரித்து உறுதிசெய்தபின் ,மிக எச்சரிக்கையுடன் அந்த பதுங்கு குழியை சுற்றிவளைத்து சதாமை பிடித்தோம் என்றான் அந்த கறுத்த ராணுவ வீரன்.  
 
  மறுநாள் தொலைகாட்சியில் செய்தி வந்தது .எங்களில் பலர் அதான் எங்களுக்கு நேத்தே தெரியுமே என்ற தொனியில் பார்த்துகொண்டிருந்தனர். முதலில் சதாமை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனைகள் நடந்த காட்சிகளை ஒளிபரப்பினர் .

    ஒரு நாட்டின் சர்வாதிகாரியின் இறுதி நாட்கள் மிக கொடுமையாகி போனது .சதாம் பதுங்கியிருந்த பதுங்குகுழி கற்களால் அடுக்கப்பட்டு ,மின்சாரமோ ,பிற அடிப்படை வசதிகளோ இன்றி இருந்திருக்கிறது .

   ஓராண்டுக்கும் மேலாக அதனுள் இருந்திருக்கவண்டும் .கோடையின் கடும் வெப்பத்தையும் ,குளிர் காலத்தின் குளிரையும் எப்படி தாக்குபிடித்திருப்பார்களோ ,உணவு மட்டும் வெளியே இருந்து சென்றிருக்கவேண்டும் தினமும் .பல ஆண்டுகள் தான் அதிபராக இருந்த நாட்டில்,தான் வைத்தது தான் சட்டம் என ஆட்சி புரிந்த ஒருவர் உயிருக்கு பயந்து ஓராண்டுக்கும் மேலாக பதுங்கி இருந்தது ஒரு சிறிய  புதுங்கு குழியில் .
  
  செய்தி  வந்த அன்று எங்கள் முகாமில் பணிபுரிந்த உள்ளூர் இராக்கிகள் சதாம் கைது என உரக்க கூவி ஆடி ,பாடி மகிழ்ந்தனர் .ஈராக்கின் ஷியா ,மற்றும் குர்திஷ் இனத்தவர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர் .லட்சகணக்கான குர்திஷ் மக்களை சதாம் கொன்று குவித்ததாக குற்றசாட்டு இருந்தது .

    பின்பு அமெரிக்காவின் தந்திரத்தால் ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை என தீர்பளித்து .சதாமை இசுலாமியர்களின் பண்டிகை தினமான தியாக திருநாள் அன்று தூக்கிலிட்டு கொன்றனர் .ஆனால் சதாம் ஒருமுறை நீதிமன்ற விசாரணையின்போது  நான் வீரன் என்னை தூக்கிலிட கூடாது, துப்பாக்கியால் சுட்டு கொல்லுங்கள் என கூறியிருந்தார் .
ஷாகுல் ஹமீது ,
13-11-2016.

Sha260@yahoo.co.in