Saturday, 29 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 18


          முந்தைய  பதிவான 16,17 பெயர் மாற்றியிருக்கிறேன் .தோழி ஒருவரின் வேண்டுதலுக்கிணங்க .
      ஆனால்   அதற்க்கு முந்தைய பதிவுகளிலும் எழுதும் போதே சில பெயர்களை மாற்றித்தான் எழுதியிருந்தேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துகொள்கிறேன் .யாரையும் புண்படுத்துவது நோக்காமல்ல என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் .

  முகாமில் நடந்த விருந்து        
 கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும் .அதிகபட்சம் 46 டிகிரி வரைக்கும் செல்லும் .கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது.மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை .சூரியன் அஸ்தமம் 9 மணிக்குமேல் .மாலை நேர மகஃரிப் தொழுகை அதன் பிறகுதான் .இரவு நேர இஷா தொழுகை இரவு பத்து மணிக்கு மேல் .


       அக்டோபர் மாதம் தட்பவெப்ப நிலை நன்றாக இருக்கும் .டிசம்பரில் -2 டிகிரி வரை செல்லும் நல்ல குளிர்  .ஊரில் அதிக வெயிலை பார்த்ததே இல்லை அதிகபட்சம் 34-37 தான் எங்களூரில் .குளிர் தெரியவே தெரியாது .


   நல்ல குளிரில் ஒருநாள் ராணுவ வீரன் ஒருவர் என்னிடம் கேட்டார் உங்களூரில் இவ்வளவு குளிர் இருக்கிறதா என.குளிரே தெரியாது எங்களுக்கு என்றேன் .நான் இந்தியாவின் தென்கோடியில் வசிப்பவன் அங்கு நிலவுவது ஒரு மித சீதோஷ்ணநிலை .குறைந்தபட்சம் 22 டிகிரியும்  (டிசம்பரில்) அதிகமாக  35 டிகிரியும்  (மே யில் ) இருக்கும் .வட இந்தியாவில் கோடையில் அதிக வெப்பமும் 46 டிகிரியும் குளிர் காலத்தில் 0 டிகிரி வரையும் இருக்கும் என்றபோது .ஆச்சரியத்துடன் நீ வாழும் தென்கோடி முனை ...... கொடுத்து வைத்தவர்கள் என்றான் .


    திக்ரித் ல் குளிர் துவங்கும் முன் நாம் ஒரு பார் பி கியூ(BBQ) பார்ட்டி நடத்தலாம் என்றார் மானேஜர்  ஆலன் குக். எங்களிடம் இருப்பது அனைத்தும் பதபடுத்தபட்ட உணவுவகைகள்  பார்ட்டிக்காக புதிய இறைச்சிகள் சமைக்கலாம் என்ற  யோசனை ஏற்றுகொள்ளபட்டு.எங்கள் முகாமில்  தின கூலிகளாக வேலை செய்கின்ற உள்ளூர்காரன்  ஒருவனிடம் இரண்டு ஆடுகளின் இறைச்சி வேண்டும் உன்னால் கொண்டு தர முடியுமா என கேட்டார் .ஆலன் குக் சொன்னதை எங்களில் ஒருவன் அரபியில் அந்த ஈராக்கிக்கு மொழி பெயர்த்து சொன்னான் .


     மறுநாள் காலையில் அந்த இராக்கி  வரும் போது ம்மே, ம்மே என சப்தத்துடன் கையில் கயிறுகளை பிடித்திருந்தான்  இரண்டு ஆடுகள் அவனுடன் வந்து கொண்டிருந்தது .


   ஆடுகளை முகாமில் உள்ள ஒரு ஆலிவ் மரத்தில் கட்டினான் .ஆடுகளின் சப்தம் கேட்டு ஆலன் குக் வந்துதும் என்ன என கேட்டுவிட்டு வாய்விட்டு சிரித்தார் .

   இரண்டு ஆட்டின் இறைச்சியை கேட்டால் ஆட்டையே கொண்டுவந்திருக்கிறாய் என கேட்டார் .அந்த ஈராக்கி என்னிடம் ஆடு தானே கேட்டீர் அதன் கொண்டுவந்தேன் என்றான் .

    சரி இன்று இதை கொண்டுபோய்விட்டு நாளை அறுத்து கறியை மட்டும் கொண்டுவா என்றார் .இம்முறை மொழி பெயர்க்க ஆலன் குக் வேறு ஆளை தேடினான் .முந்தையநாள் மொழி பெயர்த்தவனை எங்கும் தென்படவில்லை .

    மறுநாள் பாதியாக வெட்டப்பட்ட பீப்பாயில் (ட்ரம்)  கரியை போட்டு தணலாக்கி,இஞ்சியும் ,பச்சை மிளகாய்,பூண்டும் சேர்த்து அரைத்த கலவையுடன் ,கரம் மசாலா,மிளகு பொடி,    மஞ்சள்,வத்தல்,கொத்தமல்லி,ஜீரகபொடிகளை,ஆலிவ் எண்ணையுடன் உப்புசேர்த்து காலையிலேயே ஊறவைத்திருந்த  புத்தம் புதிய இறைச்சியில் மட்டன் கபாப் ,மட்டன் சுக்கா என ஏதோதோ செய்து ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பியதை சுடச்சுட வேகவைத்தும்  சாப்பிட்டனர் .


  அனலென ஆரஞ்சு சிவப்பில் உள்ள தணலில் கைகளில் உள்ள மயிர்கள் கருகாமல் இறைச்சியை பதமாக வேகவைப்பது சிலருக்கு மட்டுமே இயலும்.நல்ல பொறுமை வேண்டும் அதற்க்கு .தணலின் மேலே இருக்கும் மெல்லிய இரும்பு ஜாலியின் மேல் இறைச்சியை வைத்துவிட்டு விலகிசென்றால் மேற்பகுதி கரிந்துவிடும் .உள்ளே வேகாமல் பச்சையாக இருக்கும் .

    அருகிலேயே  நின்று நீளமான கம்பியால் அல்லது இடுக்கியால் கைகளில் சூடு கொள்ளாதமுறையில் ,புரட்டி ,திருப்பி ,மறித்து வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் .அப்போதுதான் கருகாமலும் ,முறுகாமலும் சாப்பிட பதமான வகையில் வெந்து கிடைக்கும் சுவை நாவை அதற்க்கு அடிமையாக்கிவிடும் .

  இறால் ,மீன் போன்றவற்றை அப்படியே வைத்து வேக வைக்க முடியாது ,சில்வர் பாயிலில் பொதிந்து நீண்ட நேரம் குறைவான வெப்பமுள்ள ஒரு மூலையில் வைத்து எடுத்தால் அதன் சுவையே தனி .தனக்காகவும் ,பிறருக்காகவும் ருசியாக, அன்பு கலந்து சமைப்பது ஒரு தனி திறமை . எனது வாப்பும்மா*,அரிசியை உலை வைக்கும் போதும் ,முறுக்கு சுடும்போதும் ,வாய் பேசாமலும் ,சின்ன குழைந்தைகள் அருகில் இல்லாமலும் பார்த்துகொள்வார்கள்.சமைப்பதை ஒரு தியானம் போல செய்வார்கள் .

   ஒவ்வொரு சமையல் கலைஞனும் தன் திறமையை காட்ட விதவிதமான  உணவுவகைகள் செய்திருந்தனர் , ஆவியில் வேக வைத்து உப்பும் ,மிளகு தூளும் தூவப்பட்ட மீன்,கேரள பாணியில் தேங்காய் வறுத்து அரைத்து செய்த மீன் குழம்பு ,சோழ மாவு தடவிய இறால் பொரித்தது ,இளம் கோழியின் ஒரே அளவிலான தரம்பிரிக்கபட்ட கால் துண்டுகளை மிதமான காரத்துடன் பொரித்தது,கணவாய் மீன்களை துண்டுகளாக வெட்டி அதை சில்வர் பாயிலில் பொதிந்து தணலில் இட்டு வேகவைத்தது என  .

    வடஇந்திய நண்பன் செய்த புலாவும் ,சப்பாத்தியும்,ஆலு பரோட்டாவும், பருப்புகறியும் ,சிறு துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் பழத்துடன்,மெல்லிசாக சீவிய காரட்,உலர் திராட்சை ,மையோனஸ் சேர்த்து செய்த கோல் சிலா எனும் சாலடுடன் அனைவரும் இன்முகத்துடன் சாப்பிட்டனர் .உடன் பணிசெய்த அனைத்து அதிகாரிகளும் ,உணவு கூடத்தில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் ,வீராங்கனைகளும் ஒன்றாய் அமர்ந்து கதைகள் பேசி இரவு பதினோரு மணிவரை நீண்டது  அந்த விருந்து .

  அனைவருக்கும் அது ஒரு நிறைவான ஒரு அனுபவத்தை அளித்தது .அந்த அனுவபவம் மனதிலிருந்து விலகும்முன் அடுத்த மாதம் எங்களுடன் இருந்த கலீல் பாய் ,அவரது மகள் சம்ரீனின் பிறந்தநாளை கொண்டாடினார் .முந்தையதைபோலவே அனைவரும் கலந்துகொண்ட விருந்து அது. இம்முறை உணவு வகைகள் உணவு கூடத்தில் செய்திருந்தோம் .
* வாப்பும்மா =தந்தையின் தாய் (பாட்டி ) 

  ஷாகுல் ஹமீது .

30-10-2016

10 comments:

 1. வித விதமாய் உணவு வகைகளை விவரித்து தீபாவளி சமயத்தில் பெரியதோர் விருந்துக்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் ஷாகுல். அதுவும் அந்த கிரில் உணவுகளை செய்யும் விதம்? அருமை வேறென்ன சொல்ல?
  அந்த ”ஆலிவ் மரத்தில் கட்டப்பட்ட இரண்டு ஆடுகள்” வரி எனக்கு மிக மிக பிடித்து விட்டது. விவிலியத்தில் வாசித்த வரிகளைப்போல இருக்கின்றது. இந்த தலைப்பில் நீங்கல் ஒரு புனைவுக்கதையை எழுதலாமே?
  உங்கல் ஆசான்மைப்போலவே உணவை விவரிப்பதில் ஈடு இணையில்லாத எழுத்தாளராகி விட்டீர்கள். அசைவம் சாப்பிடாததாலோ என்னவோ எனக்கு அந்த “கோல் சில்ல சாலட்” சாப்பிடவேண்டும் போலவே ஆகிவிட்டது தம்பி.
  எல்லாம் படித்து விட்டு இதோ எப்போதும் போல ஜென்ம வாசனையே அடிக்கும் இட்லியும் தோசையும் வழமை மாறாமல் இரவுணவுக்கு தயாரிக்க பொறாமையோடும் இயலாமையோடும் போய்க்கொண்டிருக்கின்றேன்பாட்டியின் சமையல் முறை அற்புதம் தம்பி

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. சாகுல்,உங்கள் வாழ்க்கை அனுபவங்களை எழுதினீர்கள்.மகிழ்ச்சி.ஆனால் அரசியல் எதையும் எழுதவில்லையே?இவ்வுலகிற்கு போர் அவசியமா?மனிதனின் பேராசையால் போர் எதற்காக ஏற்படுத்தபடுகிறது?அமெரிக்க படைகளுக்கு சேவை செய்த நீங்கள் எவ்வளவு தந்திரமாக அவர்களுக்கு பயன்படுத்தபட்டிருக்கிறீர்கள்?ஈராக் போர் பற்றி உங்கள் ஆசானின் எண்ணங்கள்,எல்லாவற்றையும் புரிந்து கொண்டு முடிவை முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 4. வாயூரிடுச்சுங்க :) பிரமாதம்

  ReplyDelete
 5. அருமையான படைப்பு

  ReplyDelete
 6. சுல்தான் பாய்,பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களின் வலைத்தளத்தின் மூலம் தங்கள் அறிமுகம் கிட்டியது.தங்களின் "ஈராக் போர்முனை அனுபவங்கள்- 18 அத்தியாயத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்! வியப்பூட்டும் திகிலான அனுபவம்!.நன்றி.

  ReplyDelete
 7. உங்களோடு பயணித்த அனுபவம் சாகுல் தொடர்ந்து பயணிப்போம். நன்றி

  ReplyDelete
 8. உங்களோடு பயணித்த அனுபவம் சாகுல் தொடர்ந்து பயணிப்போம். நன்றி

  ReplyDelete
 9. Read all the episodes. WOW.

  from NJ

  ReplyDelete
 10. நிறைவான ஒரு அனுபவத்தை அளித்தது

  ReplyDelete