Tuesday 18 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள்14


   தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து .


       ஸ்டோர்ஸ் ல் வேலை பார்த்த அனைவரும் வெளியில் வேலை செய்யும்போதும்,வாகனம் ஓட்டும்போதும் கண்டிப்பாக குண்டு துளைக்காத தலை கவசமும் ,கவச உடையும் அணிந்திருப்பது கட்டயாமாக்கபட்டது.

       வாரத்தில் இருமுறை உணவு கூடத்திற்கு தேவையான தண்ணீர் பாட்டில்களை தூரத்தில் இருக்கும் இராணுவ கான்டீன் சென்றுதான் எடுத்து வரவேண்டும் .நான் பலமுறை போர்க் லிப்ட் ல் போய் கொண்டுவருவேன் .

     கண்டெய்னர் லாரிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும் வரை முகாமிலேயே தான் நிற்கும் .அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸ்லிருந்து ஒருவர் சென்றால் தான் டிசல் நிரப்ப முடியும் .அந்த வாய்ப்பை பயன்படுத்தி நானும் மற்ற சிலரும் பதினாறு மீட்டர் நீளமுள்ள  கண்டெய்னர் லாரிகளை ஓட்ட பழகிகொண்டோம்.

   கண்டெய்னர் லாரியின் ஓட்டுனருக்கு ஏதாவது உணவு பொருட்கள் கொடுத்து நான் பலமுறை அந்த லாரிகளை ஓட்டுவேன்.முன்னால் ஓட்டும்போது அதிக நீளம் காரணமாக திருப்பங்களில் முடிந்தவரை முன்னால் சென்று திருப்பவேண்டும் பெரிய கடினம் இல்லை .

   பின்னால் (ரிவேர்ஸ் )ஓட்டுவது மட்டும் சின்ன நுட்பம் தேவை.சில இந்திய ஓட்டுனர்கள் தைரியம் தந்து எனக்கு பயிற்சி தந்தனர் .இரண்டு பக்கமும் உள்ள  கண்ணாடிகளை பார்த்து கொண்டு வண்டியை வலப்பக்கம் திருப்பவேண்டும் எனில் ஸ்டீரிங்கை இடமாகவும் .இடப்பக்கம் திருப்பவேண்டுமெனில் வலமாகவும் திருப்பும் முறையை கற்று விட்டால் மிக எளிது .அந்த பதினாறு மீட்டர் நீளமுள்ள லாரியை ஆயிரகணக்கான மைல்கள் தாண்டி ,நாடு விட்டு நாடு என ஒரே ஓட்டுனர் தான் ஓட்டி வருவார் .

       எங்களுரில் ஆட்டோக்கே கிளி வைத்து ஓட்டுவதை      பார்த்திருக்கிறேன்.அதே இந்திய ஓட்டுனர்கள் தான் இங்கே திறமையாக தனியாக அந்த வானகங்களை ஓட்டுகிறார்கள் .

     குவைத்திலிருந்து உணவு பொருட்கள் ஏற்றிவரும் கண்டெய்னர் ஓட்டுனர்களுக்கு மிக அதிக சம்பளம் எனவே கார் ஓட்டிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கண்டெய்னர் ஓட்டுனர்களாக இங்குவரை  வந்து விடுவர் .இதில் அரைகுறை ஓட்டுனர்களுக்கு ரிவேர்ஸ் ல் ஓட்ட தெரியவே இல்லை .

        சில கண்டெய்னர் ஓட்டுனர்கள் அவர்களின் வண்டியிலிருந்து சரக்குகளை சில நாட்களுக்கு இறக்க வேண்டாம் என்பார்கள் .குவைத்துக்கு சென்றால் மீண்டும் சரக்கு ஏற்றி ஈராக்குக்கு அனுப்பிவிடுவார் லாரியின் உரிமையாளர் .வண்டி அதிகம் ஓடினால் அதிக பணம்தானே .ஓட்டுனரின் உயிருக்கு  தானே ஆபத்து .


     எங்களால் இயன்ற உதவி நாங்கள் சரக்கு வைக்கும் எங்கள் கண்டெய்னர்களில் இடமில்லை எனில் முடித்தவரை சில லாரிகளை நிறுத்திவைப்போம் .


    குறிப்பாக சில இந்திய ஓட்டுனர்கள் வரும் லாரிகள் சில நாட்கள் நிற்கும். கண்டெய்னர் லாரிகளில்  அனைத்து வசதிகளும்  இருக்கும் .உள்ளே சுகமாக படுத்து கொள்ளலாம் .வெயிலையும் ,குளிரையும் சமாளிக்க ஏர் கண்டீஷ்னர் ,தட்பவெப்ப நிலைகேற்ற உடைகள் (கையுறை,காலுறை ,தொப்பி போன்றவை)


    கண்டெய்னர் லாரிகள் வெகு தூரம் நாடு விட்டு நாடு செல்வதால் ஒரு சிறிய அடுமனையும் குறைந்தது 7 நாட்களுக்கான உணவு பொருட்களும் வைத்திருப்பார்கள் .மலையாளி ஓட்டுனர்கள் சிலர் சுவையாக சமைப்பதில் கில்லாடிகள் .இங்கு வந்தபின் நன்றாக சமைப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டால் அந்த ஓட்டுனரை சில நாட்கள் நிறுத்திவைக்கும் பொருட்டு அவரது வண்டியில் இருந்து பொருட்களை கடைசியாக இறக்குவோம் அதில் அவருக்கும் மகிழ்ச்சி .


    அப்பளம் ,புளி ,சாம்பார் பொடி,தேங்காய்,தேங்காய் பால் ,சமயத்தில் கறி வேப்பிலை ,மிளகாய் வத்தல்  போன்றவை அவர்களிடம் இருக்கும்.எங்களிடம் உள்ள மீன் ,அரிசி மற்றும் தேவையான பொருட்களை அவர்களுக்கு கொடுத்தால் அன்போடு சமைப்பார்கள் , குறைந்தது பதினைந்து பேருக்காவது சமைத்து விடுவார் .  தென்னிந்திய உணவான,ரசம், மோர்,அவியல் அப்பளம் என சில நாட்கள் ருசியாக சாப்பிடுவோம் .


      எங்கள் அடுமனையில் அமெரிக்க உணவுதான் சமைப்பார்கள் .நேரமின்மை காரணமாக  எங்களுக்கு என அரிசி சாதமும் ,கோழி கறி அல்லது ஆட்டிறைச்சி கறி தான் செய்வார்கள்.சில நாட்களில் அதுவும் இருக்காது அமெரிக்கர்களின் உணவைதான் நாங்களும் சாப்பிடுவோம்.அடுமனையில்  உணவு சமைக்க பயன்படுத்தபடும் அனைத்தும் உயர்தர பொருட்கள்தான் இருந்தாலும்  சாம்பார்,ரசம்,அவியல் ,அப்பளம் எல்லாம் நாங்கள் நினைத்தே பார்க்க முடியாதது.அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சுவையாக சாப்பிட்ட நாட்கள் பல .
  
     இஸ்லாமிய அன்பர் ஒருவர்  ரமலானில் தேங்காய் பால் சேர்த்து சமைத்த நோன்பு கஞ்சியின் சுவை இன்னமும் நாவில் ஒட்டியிருக்கிறது .

    தினமும் காலை ,மாலை ,மதியம் ,நடுஇரவு என பத்தாயிரம் உணவுகள் நாங்கள் வழங்கிகொண்டிருந்தோம். ஞாயிறுகளில் காலை உணவு கிடையாது .7 மணிக்கு பதிலாக 9 மணிக்கு உணவுகூடம் துவங்கும் .லஞ்ச் க்கு பதிலாக ப்ரெஞ்ச் என  கொடுப்போம் .9 மணிமுதல் 1 மணிவரை காலை உணவுவகைகளும் ,மதிய உணவு வகைகளும்  சேர்த்து கொடுப்போம்.அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு செல்வர் .

     ஈராக்கின் சாலைகளில் எப்போதுமே தாக்குதல் நடந்து கொண்டுதான் இருந்தது .சில நேரங்களில் காண்வாயில் பாதுகாப்பு படையுடன் செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் .

     2004 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சாலைகளில் தாக்குதல் மிக அதிகமாகி விட்டது. எங்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றி வரும் வண்டிகள் குறிப்பட்ட நேரத்தில் வந்து சேர முடியவில்லை .சில நாட்கள் பொருட்கள் இல்லாமல் சரியாக உணவுகள் கொடுக்க இயலவில்லை.கோழிகறி,ஆட்டிறைச்சி போன்ற பதபடுத்தபட்ட இறைச்சி வகைகள்  -18 டிகிரியில் இருக்க வேண்டும்.
  
  அவைகளை ஏற்றி வரும் கண்டெய்னர் லாரிகள்  சில நேரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் குளிர்பெட்டி வேலைசெய்யாமல் இங்கு வந்து சேரும் .அப்படி வரும் வண்டிகளை உடனே திறந்து அதிலுள்ள மாமிச வகைகளின் வெப்பநிலையை சோதிப்பார்கள் .குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெப்பம்  அதிகமாக இருக்கும் போது அதிலுள்ள லட்சம் டாலர் மதிப்புள்ள உணவு வகைகள் அனைத்தும் குப்பையில் கொட்டப்படும்.

    உணவு பொருட்கள் குறைவாக இருப்பதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் எங்களுக்கு அது பெரும் ஏமாற்றம்.பாய் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல பாய் என்பான் முருகன் . மிகுந்த சிரமத்தில் பல தாக்குதல்களில் தப்பி இவ்வாறு வந்தாலும் .அந்த பொருட்களை உபயோகமற்று போவது அதிக சோர்வை தரும் எங்களுக்கு .

   தொடர்ந்து வரும் நாட்களில் நாங்கள் உணவில்லாமல் சிரமபடபோகிறோம்  என யாருக்கும் தெரியவில்லை .சாலைகளில் தொடர்ந்து பல பாதுகாப்பு மிகுந்த காண்வாய்கள் தாக்கப்பட்டதால்.சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது .

     உணவு கூடத்திற்கான  உணவு பொருட்கள் ஒரு வாரத்திற்க்கு மேல் வரவில்லை என்றாலே சமாளிப்பது கடினமாகிவிடும் .இப்போது ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது .போக்குவரத்து எப்போது சீராகும் என யாராலும் கணிக்க இயலவில்லை .


   காலை ,மாலை ,இரவில் வழங்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை முதலில் குறைக்கப்பட்டது .பணியாளர்களுக்கு இப்போது தான் மூச்சு விடவும் ,நண்பனிடம் நலம் விசாரிக்கவும் ,கல்லூரி நாட்களின் காதல் கதைகளை பேசவும் முடிந்தது .


      தினமும் பனிரெண்டு மணிநேரம் ஒரே அடுமனையில் வேலை செய்தாலும் யாருக்கும் ஒருவர் முகம் பார்த்து பேச இயலாது வேலை விசயங்களை தவிர .

   சில நாட்களுக்கு பின் காலை உணவு முற்றிலும் நிறுத்தப்பட்டது .காலை உணவாக நாங்கள் வழங்கும் உணவுவகைகள் மிக நீண்டது .எங்களுடன் பணிபுரிந்த ஒருவன் ஒரு ராணுவ வீரனுக்கு காலையில் அவனது தட்டில் பனிரெண்டு அவித்த முட்டைகளை வழங்கியதை நினைவு கூர்ந்தான் .

      நித்தம் ப்ரேக் பாஸ்ட் கூட ஒரு டசன் அவிச்ச முட்டைய தின்னவ பாடு பெருங் கஷ்டமில்லா இப்போ என சொல்லி சிரித்தான் .
ஷாகுல் ஹமீது ,

18-10-2016

4 comments:

  1. உங்களின் பதிவுகளில் என்னை மிக கவர்ந்த்தது இந்த வாகனம் ஓட்டும் உங்களின் பிரியம். சைக்கிள் கூட ஓட்டதெரியாத எனக்கு 100 கிமீ வேகத்தில் ஒரு அதிகாரியின் காரை நீங்கள் ஓட்டியதும் இப்பொது ஃபோர்க் லிஃப்டும் கன்டய்னர் லாரிகளை ஓட்டுனருக்கு சாப்பிடக்கொடுத்தெல்லாம் ஓட்டிப்பழகுவதும் பெரும் ஆச்சர்யத்தை அளிக்கின்றன.என் வாழ்வில் என் ஆகச்சிறந்த சாதனையாக இருக்கும் நான் ஒரு சைக்கிள் ஓட்டிவிடுவதென்பது.
    நல்ல உணவுகளையும் அவற்றை சிலகாலம் சாப்பிடவும் சமைக்கவும் முடியாததையும், எப்போதும் கவச உடை அணிந்து இருப்பது எல்லாம் எங்களைப்போன்றவர்களுகு என்றும் மறக்கமுடியாத அனுபவங்கள். அதுவும் நீங்கள் அந்த உணவுப்பொருட்களைக்கூட நினைவாக வரிசையாக சொல்லிவிடுகிறீர்கள். எப்படித்தான் நினைவில் இருக்கின்றதோ எல்லாம்??/
    முன்பு உங்களின் பதிவுகளைப்படிக்கதுவங்கிய காலத்தில் உங்களின் இந்த பரந்துபட்ட பார்வையும் மானுடம் மீதான அளவில்லா காதலும் இப்படி கடல் கடந்து கண்டங்களைக்கடந்து செல்லும் பயணங்களால் உங்களுக்கு வாய்த்திருக்கிறது என்று நினைபேன் . ஆனால் இப்போதெல்லம் உங்களின் சமையல் அனுபவங்களைப்பற்றி அறிந்த பின்பு அன்னமிட்டுப்பழகிய உள்ளமே உங்களின் அத்தனை அன்பு அனுபவத்திற்குமே காரணமென்று தோன்றுகிறது. நாளொன்றிற்க்கு பத்தாயிரம் பேருக்கு சமைத்த அனுபவம் ஒரு பெரும் பாக்கியமே தம்பி
    பீமன் சொல்லுவதைபோல அன்னம் சமைப்பதென்பது
    வேள்விக்கு சமமல்லவா?
    பீமன் சொல்வதை இன்று மீண்டும் எடுத்து படித்தேன் உங்கள் பதிவைப்படித்தபின்னர் அது உங்களின் கூற்றாகவே தெரிகிறது
    ’அனல்முன் நிற்கையில் மட்டும்தான் மானுடனாக உணர்கிறேன். என் கையால் அன்னம் பிறந்து வரும்போது என் உடல் சிலிர்க்கிறது,சமைத்து நான் எடுப்பவை சின்னஞ்சிறு மதலைகள். புத்தம்புதியவை. அவை சற்றுநேரத்திலேயே மானுட உடலாகின்றன. மண்ணில் வாழத்தொடங்குகின்றன.”நான் சமையல்பணியில் முழுமையான மெய்யறிவைப்பெற்று அன்னம் வழியாக பிரம்மத்தை அறிந்தேன் என்றால் நான் முழுமைகொண்டவன்”

    "அன்னம் பிரஜாபிஸ்; சாக்ஷாத் அன்னம் விஷ்ணு சிவ'
    இதைதவிர வேறென்ன சொல்ல இருக்கிறது இந்த பதிவு குறித்து?
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. இஸ்லாமிய அன்பர் ஒருவர் ரமலானில் தேங்காய் பால் சேர்த்து சமைத்த நோன்பு கஞ்சியின் சுவை இன்னமும் நாவில் ஒட்டியிருக்கிறது

    ReplyDelete