Saturday, 15 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 12


  வைனின் அட்டுழியங்கள்
   பாக்தாத்தில்  இரவு தங்கிவிட்டு சிறிய வாகனங்களில் எங்களை மாற்றினர் .பக்குபா செல்பவர்களும் எங்களுடன் வந்திருந்தனர் .மதியத்திற்கு மேல் மீண்டும் திக்ரித் வந்தடைந்தோம் .

    இப்போது எங்கள் குடியிருப்பு கூடாரங்கள் மாற்றப்பட்டு தற்காலிக அறைகள் அமைக்கபட்டிருந்தது .தட்பவெப்ப நிலையை சமாளிக்க .கூடாரம் வெயில் காலங்களில் அதிக வெப்பமாகவும் ,குளிரில் அதிக குளிராகவும் இருக்கும்.குளிர் காலத்தில் இரு கம்பளிகளுடன் கஷ்டப்பட்டு தான் குளிரை சமாளித்தோம் .கூடாரம்  காக்கி நிற தடிமனான துணியால் ஆனது ,அது  ஒரு ரசாயனத்தால் துவைக்கபட்டது வெயில் ,மழையிலிருந்து பாதுகாக்க.

    புதிய தங்கும் அறைகளில் எட்டு கட்டில்களில் பதினாறுபேர் தங்கும் வசதியுடையது.இரவு பணியாளர்களுக்கும்,பகல் பணியாளர்களுக்கும்  தனித்தனி அறைகள் .ஸ்டோர்ஸ் ல் வேலை செய்யும் அனைவரும் (மொத்தம் பத்துபேர் ) ஒரே அறையில் தங்குவோம் என்றான் ஜோக்கிம்.என்னை தவிர மற்றவர்கள்  அனைவரும் ஒரே அறைக்கு சென்றனர் .நான் இரண்டாக பிரிக்கப்பட்ட 3 கட்டில்கள் மட்டுமே உள்ள   ஒரு சிறிய அறையில் ,நண்பன் லோகேஷ் ,அமர்,சங்கர் உடன் பகிர்ந்து கொண்டோம் .பின்பு ,கலீல் பாயும் ,விஜயனும் மீதமிருந்த ஒரு கட்டிலில் வந்தனர் .


   குளிரில் விஜயன் குளிர் சாதன பெட்டியின் வெப்ப காற்றை திருகி வைப்பார் .கலீல் பாய்க்கு வெப்ப காற்று பிடிக்காது .அவர் ஹிந்தியில் அவனை திட்டிக்கொண்டே இருப்பார் .ஸ்டீம் உடம்புக்கு நல்லது இல்ல இந்த பைத்தியத்துக்கு  சொன்னா மண்டைலே ஏறாது என்பார் .விஜயன் தூங்கியதும் அவர் அதை அணைத்து விடுவார் .


     குளிரில் காலையில் குளியலறையில் கூட்டமே இருக்காது .நான் உட்பட நான்கைந்துபேர் தான் இருப்போம் .இரவில்  சுடுநீருக்காக ஒரு போட்டியே நடக்கும் .9 மணிக்கு பணி முடிந்து வருபவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சுடுநீர் கிடைக்காது .முன்னூறு லிட்டர் கொள்ளளவு உள்ள பாய்லர் பத்து பேர் குளித்தால்தீர்ந்துவிடும் .மற்றவர்கள் காத்திருக்க வேண்டும் .

   சிலர் பத்து நிமிடம் முன்னால் வந்து வாளியில் சுடுநீர் நிறைத்து வைத்துவிட்டு செல்வர்.சில தினங்களுக்கு பின் அதையும் சிலர் சமார்த்தியமாக திருடிவிடுவர் .நான் இங்க தண்ணி வெச்சிருந்தேன் காணல என தண்ணீர் பிடித்து வைத்திருந்தவன் தேடுவதும் .திருடியவன் சப்தமே இல்லாமல் குளித்துவிட்டு வெளியே செல்லுவதும் வாடிக்கை .  


      ஸ்டோர்ஸ் இருந்த ஒருவன் நெடு நாட்களாக குளிக்கவே இல்லை குளிரில். மும்பை சென்றபின் குளிப்பதாக சொல்வான் .
   
      முகாமில் ஆரம்பத்தில் பலரும் மொட்டைத்தலையுடன் அலைந்தனர்.சிலர் ஜடை முடியுடன் . தமாதமாகத்தான் தெரிந்தது எங்களுடன் பணிபுரிந்த ஒரிசாவை சேர்ந்தவன் ஒருவனுக்கு முடி வெட்ட தெரியும் என .அவன் மட்டும் தான் ஒரிசாவை சார்ந்தவன் .(அங்குள்ள பூரி கடற்கரை ஆலயத்தை ஒரு முறை பார்க்க வேண்டுமென இருக்கிறேன் )
  

அவன் இரவு பணியில் இருப்பவன். காலை பணி முடித்து வந்து ஒரு நாளைக்கு 3 பேருக்குதான் முடி வெட்டுவான் .ஒருநாள் முன்னதாகவே சொன்னால்தான் மறுநாள் முடி வெட்டிகொள்ளமுடியும். எங்களது மேலாளர் முடி வெட்டிகொள்பவர்கள் அவனுக்கு 2 டாலர்கள் கொடுக்க சொன்னார்.பணத்தை விட மிக பெரிய சேவை அவனுடையது .
 துவைப்பதற்கு எந்த பிரச்னையும் இல்லை .ஆரம்ப நாட்களில் இராணுவத்தால் உள்ளூர் பணியாளர்களை கொண்டு இயக்கப்பட்ட சலவை மையத்தில்  கொடுப்போம்.அங்கு பணிபுரிந்த உள்ளூர் பெண்கள் அழகிகள் .பாக்தாத் பேரழகிகள் என படித்திருக்கிறேன் .நேரில் கண்டபோது உறுதியாயிற்று .

  
   பின்னர் எங்கள் முகாமிலேயே ரோஷன் பொறுப்பில் சலவை மையம் துவங்கப்பட்டது .ஒவ்வொருவருக்கும் ஒரு சலவை பை இருந்தது அதில் துணிகளை போட்டு சலவை மையத்தில் வைத்து விட்டால் போதும் .சலவை இயந்திரத்தில்,துவைத்து தானியங்கி உலர்த்தும் இயந்திரத்தில் உலர்த்தி, மடித்து பையில் வைத்துவிடுவான் .நமது பையை பார்த்து எடுத்தால் போதும்.


     பொழுதுபோக்கு அம்சங்கள் மெதுவாக விரிவடைந்தன .முதலில் தொலைக்காட்சி பெட்டி ,பின்னர் பன்னாட்டு சேனல்கள் ,மேசை பந்து விளையாட்டு ,வார விடுமுறை நாளன்று கிரிக்கெட் என.அதற்காக மேலாளர்கள் மிகுந்த விருப்பத்துடன் அவர்களாகவே வேண்டியதை செய்து தந்தார்கள் .மேசை பந்து விளையாடுவதற்கான மேஜைகள் எங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்ததால் .பணி முடிந்து இரவு பத்துமணிக்குமேல் வரை சிலர் மகிழ்ச்சியாக விளையாடிகொண்டிருப்பர் .


      எங்களது முகாமில் பராமரிப்பு பிரிவில் பணியாற்றி வந்தவர் தென்னாப்ரிக்காவின் வைன் .குள்ளமான உருவம் .ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான் .

  வந்த புதிதில் எங்களுடன் பணி புரியும் விஜயனுடன் வாய் தகராறு ஏற்பட்டபோது விஜயனை சண்டைக்கு அழைத்தான் வா மோதி பார்க்கலாம் என .


     சில நாட்கள் கழிந்து வேறு ஒருவனுடன் பிரச்னை .குறிப்பாக இந்தியர்களுடன் ஏதாவது பிரச்சனைகளில் அலைந்து கொண்டிருந்தான்.      முதல் முறை விஜயன் மானேஜரிடம் புகார் செய்தபோது அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை .

   கொஞ்ச நாட்களுக்கு பிறகு வைன் ஒரு நாள் உணவு கூடத்தில் பணி புரிந்துகொண்டிருந்தபோது மறதியாக அவனது மார்கர் பேனாவை வேலை செய்த இடத்தில் வைத்து விட்டானாம் காணவில்லை என தேடியலைந்தான்.

    
    உங்கள் இந்தியர்களில் ஒருவன் தான் திருடிவிட்டதாக சொன்னான். நாளைக்குள் எனக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வேறு ஏதாவது செய்ய வேண்டியிருக்கும் என்றான் .

  முதல் நாள் சில உடற் பயிற்சி கருவிகளை எடுத்து சென்றான். உடற்பயிற்சி செய்பவர்கள் அவன் கேட்காத போது அவனை திட்டியும் ,வீர வசனமும் பேசினர் .வைனிடம் சென்று நேரில் கேட்க யாருக்கும் ,தைரியம் வரவில்லை .

  
     முருகன் தான் சொன்னான் பாய் எல்லாம் வெட்டி பசங்க எக்ஸசைஸ்   செய்து உடம்ப தான் வெச்சிருக்கனுவோ ,இங்க நம்மட்ட தான் இவனுவளுக்க வீராப்பு , ஒரு மசிர கூட இவனுகளால புடுங்க முடியாது .இங்கிட்டு நின்னு கத்துறதுக்கு  வைன்ட்ட போய் கேட்குறது  என்றான் .

   மறுநாள் காலை வந்த வைன் தொலைக்காட்சி அறையிலிருந்த ,பன்னாட்டு சானல்கள் வரும் பெட்டியை தூக்கி சென்றான் .நெடு நாட்களாக அதற்குரிய கட்டணஅட்டை பணம் செலுத்தபடாமல் புதுபிக்கபடவில்லை . அனைவரும் டி.வி.டி பிளேயரில் தான் படம் பார்த்து கொண்டிருந்தனர் .அதனால் யாரும் அதைபற்றி கவலை படவில்லை .


   மூன்றாம் நாள் காலை பத்து மணிகெல்லாம் குட்டியிருப்பு பகுதிக்கு வந்த வைன் மேஜை பந்து விளையாடும் மேஜையை  பிரிக்க ஆரம்பித்தான் .

    இப்போதெல்லாம் அனகம்பேர் மேஜை பந்து விளையாட ஆரம்பித்திருந்தனர் .விளையாடும் அனைவரும் உற்சாகமாக இருப்பதை காண முடிந்தது .பனிரெண்டு மணிநேர வேலை முடிந்த பின் உடல் சோர்வையும் பொருட்படுத்தாது அந்த குளிரில் ,விளையாடி மகிழ்வர் .ஒருநாள் காலையில் மானேஜர் எங்களிடம் இரவில் பத்தரைக்கு மணிக்கு மேல் விளையாடுபவர்கள் அதிக சப்தமின்றி ,தூங்குகிறவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் விளையாடுமாறு கேட்டுகொண்டார் .

   
  வைன் மேஜை பந்து மேஜைகளை அகற்றுவதை கண்ட ஜோக்கிம் வைனிடம் .இதை ஏன் எடுக்கிறாய் என கேட்டான் .எனது மார்கர் இதுவரை கிடைக்கவில்லை ,கிடைக்கும் வரை விடமாட்டேன் என்றான் வைன் .இந்த மேஜைகளை நீ தொடக்கூடாது  இது நாங்கள் இங்கு விடையாட மேனேஜர் ஆலன் குக் போட்டு தந்தது என்றான் ஜோக்கிம் .அதற்க்கு திமிர் பிடித்த வைன் ஜோக்கிம் ன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் .



   எதிர் பாராமல் முகத்தில் பலத்த அடி விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜோக்கிம் .வாயிலும் ,மூக்கிலும் ரத்தம் சொட்ட ,சொட்ட அடுமனையை நோக்கி ஓடி வந்தான் .அவன் எதுவும் பேசவில்லை சைகையால் கையசைத்தான் தூரத்தில் வைன் நின்று கொண்டிருந்தான் ,ஜோக்கிமிடம் யாரும் எதையும் கேட்டகவில்லை .அவனது அட்டுழியங்கள் அனைவரும் அறிந்ததே .


  அடுமனையிலிருந்தும் ,வெளியிலிருந்தும் வேலை செய்துகொண்டிருந்த  பெருங்கூட்டம்  ஒன்று வேகமாக ஓடியது வைன் ஐ நோக்கி .
14-10-2010,

ஷாகுல் ஹமீது 

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Suspense!!!!Its a perfect timing break in the episode!!!வைன் நீ இதோட செத்தடா மவனே....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு இந்த பதிவும் தம்பி. கஷ்டங்கள் எல்லம் கொஞ்சம் கொஞ்சமா குறையும்னு நினச்சா வேற மாதிரியான கஷ்டங்கள் வருது இல்லையா? வாழ்க்கயின் போக்கை நாம முன்னாடியே தீர்மனிக்கமுடியாதுங்கற மாதிரிதான் உங்க பதிவுகளில் எல்லாம் புதுசு புதுசா பிரச்சனைகள் சொல்லறீங்க
    வைன் மாதிரியான ஆட்கள் இருக்கறதுனாலதானெ வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கு? இல்லாட்டி வெறுமையா இருக்குமே?
    இப்பொ நல்லா சஸ்பென்ஸ் வச்சு எழுதறீங்க. ஆவலா காத்துகிட்டு இருக்கேன் அடுத்த பதிவுக்காக.11 பதிவுகளில் அழகிகளா வந்தங்க இப்பொ 12ல் பேரழகிகளா? நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  5. மிக அருமை! தொடரட்டும்!

    ReplyDelete
  6. இவருடைய பதிவை முதலிலிருந்து படித்து வருகிறேன்,இதுதான் பயணக்கட்டுரை.எவ்வளவு எளிமையாக நகைச்சுவையும்,வாழ்வின் சந்திப்புமாக அருமை. வாழ்த்துக்கள் சகோதரா.

    ReplyDelete
  7. இப்போதுதான் எழுத துவங்கியுள்ளேன் .இதுதான் முதல் நீள கட்டுரை சகோதரி .உங்கள் ஆதரவு தொடரும்போது .இன்னும் நிறைய எழுதுவேன் .நன்றி .
    ஷாகுல் ஹமீது

    ReplyDelete
  8. தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன், ஜெமோ லிங்க் ஷேர் பண்ணதுல கெடைச்சது. தலைகீழா படிச்சிட்டு வரேன்.. அதாவது கடைசில இருந்து முன்னோக்கி போய்டு இருக்கேன். :)

    ReplyDelete
  9. வைன் ஐ நோக்கி .

    ReplyDelete